தேன்200 என்று தொடராய் பதிவர்கள் இந்த தேன் பதிவுபற்றி எழுதியிருந்தார்கள். நம்ம ஜி. ராகவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கார். படியுங்க.
தேன் சிந்துதே வானம்
தேன் சிந்துதே வானம்னு கவியரசரு சொன்னாரே அது உண்மையாகுமான்னு யோசிச்சுப் பாத்தா ஆகும்னு ஒருத்தர் நிரூபிச்சிருக்காரு. ஆமாங்க. சிறில் அலெக்ஸ்தான். ஒருதுளி இருதுளின்னு கூடிக் கூடிச் சிறுதுளி பெருவெள்ளமாகி எரநூறு பதிவுகள் போட்டிருக்காரு. அந்தப் பெருவெள்ளத்துல ஒரு டம்ளர் மோந்து குடிக்கலாமா?
சிறில் இருக்குற நாடு அமெரிக்கா. ஊரு ஷிகாகோ. அதாங்க சிக்காகோன்னு சொல்லுவோமே. அந்த ஊருதான். அந்த ஊருல இருந்துக்கிட்டு குளிருல நடுங்கிக்கிட்டு (ரஷ்ய நாட்டு மருந்து வேலையா இருக்குமோ?) தேன் வலைப்பதிவுல 200 பதிவுகள் போட்டிருக்காரு. பைபிள் கதைகள்ல ஒரு 32. முட்டத்துல 21. இப்பத் தமிழ்ச்சங்கத்துல ஒன்னு. இப்படிப் பதிவுகளை வாரி வாரி வழங்கும் வள்ளல் சிறில்.
எல்லாருக்கும் ரொம்ப நாள் கழிச்சுதான் விருது குடுப்பாங்க. ஆனா சிறில் வரும் போதே ஆஸ்காரோடதான் வந்தாரு. ஆஸ்காரோட வந்து? கெடா வெட்டுனாருங்க. கெடான்ன கெடா பெருங்கெடா. இன்னைக்குக் கெடாக் கெடா. சொவைச்சுப் பாருங்க. நல்லாயிருக்கும்.
கெடா வெட்டுன கையோட போலிக்கு ஒரு வேண்டுகோள் வெச்சாரு. அது நியாயமான வேண்டுகோள்தான். போலியப் பத்திப் பேசுனா புனிதத்தைப் பத்தியும் பேசியாகனும்ல. அதான் ஒருவர் புனிதராவது எப்படீன்னும் பதிவு போட்டாரு.
தூத்துக்குடி கன்யாகுமரி நாகர்கோயில்காரங்களுக்குப் பழக்கமான சில பக்திப்பாட்டுகள் உண்டு. ஆமா. கிருத்துவ பக்திப் பாட்டுக. கேளுங்கள் தரப்படும்ல தொடங்கி, மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்னு தொடரும். நீலக்கடலின் ஓரத்தில் பாட்டுக் கேக்கும் போது அப்படியே சிலுத்துக்கும் பாருங்க. அடடா! தேவராஜன் மாஸ்டர் இசையில கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியது. எனக்குப் பிடிச்சக் கிருத்துவப் பாட்டுகள்ள அதுக்குத்தான் முதலிடம். இப்படிப்பட்ட பாட்டுகள அடுக்கி அவரு ஒரு பதிவு போட்டாரு. அதுலதான் ஏவாளை ஏமாற்றுவேன்னு எல்.ஆர்.ஈஸ்வரி மெல்லிசை மன்னர் இசையில பாடிய பாட்டு கிடைச்சது. அடடா! அது பாட்டு.
ஆனா பாருங்க....நம்ம எப்படி கிருத்துவப் பாட்டுகளையும் கேட்டு ரசிக்கிறோமோ..அதே போல சிறில் நல்ல இந்துப்பாட்டுகள ரசிச்சிருக்காரு. இன்னமும் ரசிக்கிறாரு. அதுக்குச் சாட்சிதான் இந்தப் பதிவு. தமிழ்ப் பாட்டுன்னா முருகன் பாட்டு இல்லாமலா? கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பாடலுக்கு மயங்காதார் யார்? சிறிலையும் சேத்துத்தான். இந்தப் பாட்டு வாலி எழுதி டி.எம்.எஸ் இசையமைச்சுப் பாடியது. திரைப்படத்துல பிரபலமாகும் முன்னாடி வாலி எழுதி ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சி டி.எம்.எஸ் கிட்ட குடுத்தாராம். அவரும் பக்தியா வாங்கி இசையமைச்சிப் பாடியிருக்காரு. இப்படித்தான் வாலி கொஞ்சம் கொஞ்சமா புகழடைஞ்சது. ஆனா பாருங்க...வாலி முருக பக்தராம். ஆனா ஆனந்த விகடன்ல ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புதுக்கவிதைல எழுதுனாரே....கந்தன் கருணைய மறந்துட்டாரே! வாலி இது ரொம்ப மோசம். :-(
நம்ம சினிமாக்காரங்க திருட மாட்டாங்க. திருடுனாலும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனாலும் சிறில் அந்த மாதிரி திருடப்பட்ட படங்களப் பட்டியல் போடுறாரு. படிச்சுப் பாருங்க. அதே நேரத்துல ஒரேடியா சினிமாவுக்குள்ளயும் போயிராம தான் சார்ந்திருக்கும் மதத்தில் சாதீய நிலையைப் பற்றி நேர்மையா ஒரு அலசல் செஞ்சிருக்கார் சிறில். Good show Cyril.
நடுவுல மதுமிதா திடீர்னு வலைப்பூக்கள வெச்சி ஒரு சர்வே எடுத்தாங்களே. அதுக்கு சிறில் தன்னுடைய விவரங்கள இந்தப் பதிவுல குடுத்திருக்காரு. அதுல நம்மளையும் அவர் நண்பர் கூட்டத்துல சேர்த்திருக்காரு. நன்றி சிறில். அடடா! நண்பருக்கு நன்றி சொல்லக் கூடாதோ! :-)
ஒரு படத்தப் பாத்துட்டு அதப்பத்தி விமர்சனம் பண்றது ரொம்பக் கஷ்டம். ஆனா தான் பாத்த புதுப்பேட்டை படத்தை இப்படி விமர்சனம் செஞ்சிருக்காரு சிறில். இந்த விமர்சனத்தப் படிச்சாலே படம் பாக்குற ஆச வருதுல்ல?
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறுன்னு பாடிக்கிட்டே சிவாஜி ஆறுபடை வீட்டுக்கும் போயிட்டு வருவாரு. அதுமாதிரி நம்ம வலைப்பூ நண்பர்கள் எல்லாருமே ஆறிப் போகுமுன்னே ஆறு பதிவு போட்டாங்கள்ள. அதுல சிறிலோட வேலை இதுதான். அதுல பாருங்க...அதுக்குத் தலைப்பு 6..6..6ன்னு வெச்சதுலதான் அவருடைய குறும்பு தெரியுது.
டாவின்சி கோடு. யார் மறக்க முடியும் அந்தப் புத்தகத்தை. மிகவும் விறுவிறுப்பான மசாலா புத்தகம். அது புத்தகமாக வந்ததை விட திரைப்படமாக வந்த பொழுது எழுந்த எதிர்ப்புகள் இருக்கிறதே...அடடா! அதுவும் இந்தியாவில்! அந்த எதிர்ப்பில் சிறில் தன்னுடைய கருத்தையும் எடுத்து வைத்தார். அவருடைய கருத்தோடு நான் ஒத்துப் போகவில்லை என்றாலும் அவரோடு அந்தப் பதிவில் கலந்துரையாடினேன். அந்தப் படத்தை தடை செய்வது என்பது கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதாகும் என்பது என் நிலை. வாட்டர் படத்திற்கு நடந்தது அதுதானே. படத்தில் சொல்லப்பட்டிருப்பது பொய்யென்று கருதினால் அது நிச்சயம் நிலைக்காது என்பதே என் கருத்து.
நடிப்புக் கலையின் நிலையைச் சிலையில் சொல்ல விரும்பினால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை தமிழகம் முழுவதும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதுதான் என்பது சிறிலின் கருத்து. என்னுடைய கருத்தும் கூட.
அறிவியல் புனைவுக் கதைகள் எழுதுவது எளிதன்று. ஆனால் மிகவும் எளிமையாகச் சரியாகச் சுவையாக ஒரு கதை. முடிவில் ஒரு முடிச்சு போடுகிறார் பாருங்கள். அடடா! சிறில்....எங்கயோ போயிட்டீங்க. ஞானசம்பந்தரப் பாத்து அப்பர் நெனச்சதுதான் எனக்கு இப்பத் தோணுது. :-)
சுதந்திரதின வாழ்த்து எப்படிச் சொல்வோம். வாழ்த்துகள்னு சொல்லித்தான. ஆனா சிறில் தாகூரின் ஒரு கவிதையை எடுத்து மொழி பெயர்த்து அது வழியா வாழ்த்துச் சொல்லீருக்காரு. ரொபீந்ர ஷொங்கீத் கேப்பீங்களா சிறில்?
பொற்கிளின்னா என்ன? பொன்னால் செய்யப்பட்ட கிளின்னு சொல்லொரு சொல் பதிவு எழுத மாட்டேன். பயப்படாதீங்க. துணிய டர்ருன்னு கிழிச்சு அதுல பொன்ன வெச்சுக் கொடுத்தா அதுதான் பொற்கிளி. அந்தப் பொற்கிளிய இலவசக் கொத்தனார் எப்படி தள்ளிக்கிட்டுப் போனாருன்னு தெரியுமா? இந்தப் பதிவப் படிச்சுப் பாருங்க. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மாதிரி...ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய சிறில்னு ஒங்களுக்குத் தெரியும்.
கோவி.கண்ணனுடைய புகழ் நாளிதழ்களில் வந்ததை யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. அப்பொழுது பதிலளிப்பாரா கோவி என்று துணிச்சலோடு பதிவிட்டதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தத் துணிச்சலோடுதான் இன்னொரு பதிவும் போட்டார். போப் அவர்கள் இஸ்லாம் பற்றிச் சொன்னதாக ஒரு பிரச்சனை எழுந்ததே நினைவிருக்கிறதா? அது பற்றி வந்த கார்டூன் படங்களையெல்லாம் தொகுத்து ஒரு பதிவு போட்டார். அவர் சார்ந்துள்ள மதத்தையும் அவரது நம்பிக்கையையும் தாண்டி அவர் போட்ட பதிவு இது. கடவுள் நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் சரியாகப் புரிந்து வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்.
மரண தண்டனை. மரணமே அனைவருக்கும் அச்சத்தைத் தருவது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த மரணமே ஒருவருக்குத் தண்டனை என்றால்? தமிழ்மணமே பற்றி எரிந்த பதிவுகளைத் தொகுத்து ஒரு பதிவு. படித்துப் பாருங்கள். அப்படியே கொஞ்சம் மேலே வந்தால்....இலவசத்துக்கான கதை. படிக்கப் படிக்கச் சிரிப்புதான். இந்த வரிகளைப் படியுங்கள். உங்களுக்கே விளங்கும். "நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா?".
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இருநூறு பதிவுகளையும் தாண்டி இன்னமும் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய அத்தனை பதிவுகளையும் பற்றிச் சொல்வதென்றால் நேரம் பத்தாது. அதிலும் நான் அவரது சமீபத்திய பதிவுகளை விடுத்துப் பழைய பதிவுகளை அறிமுகப் படுத்தியுள்ளேன். தமிழில் படிக்கக் கிடைக்கும் வலைப்பூக்களில் சிறில் அலெக்சின் தேன்....பலபடித்தேன் என்பதால் அவரது பதிவுகள் பல படித்தேன். வாழ்க. வளர்க.
அன்புடன்,
கோ.இராகவன்
========================================
அன்பு நண்பருக்கு நன்றிகள்.
என்னடா இவன் அடுத்தவங்கள கேட்டு இப்படி பதிவாப் போடுறானேன்னு யோசிக்கிறீங்களா. உண்மையச் சொல்லப்போன என்னுடைய படைப்புக்கள் மீது எனக்கு நம்பிக்கை மிகக் குறைவு. யாராவது நல்லா இருக்குன்னு சொன்னாதான் நம்புவேன். நம் பதிவு ஏதாவது தாக்கத்த உருவாக்கியிருக்குதா, இல்ல மக்கள் தேனில் படித்த எதையாவது நினைவில் வைத்திருக்கிறார்களா என அறியும் முயற்சிதான் இது. கூடவே ஒரு விளம்பரமும். :))
தேன்200ல் தங்கள் மேலான கருத்துக்களை முன்வைத்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.
Tuesday, February 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
1 comment:
ராகவன்,
உங்க மேலான கருத்துக்களுக்கு நன்றி (அப்படியே ஒரு கயமை :))
Post a Comment