.

Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Saturday, August 11, 2007

Rush Hour 3 - No rush

அமெரிக்கத் திரையரங்கில் சிவாஜிக்கு அடுத்தபடியாக வரிசையில் நின்று பார்த்தபடம் ரஷ் ஹவ்ர் 3. படத்தில் கதை எனப் பெரிதாய் ஒன்றுமில்லை. எதிர்பாராத திருப்பங்களுமில்லை. வழக்கமாக ஜாக்கிசான் படங்களுக்கு் ரூம் போட்டு கதை எழுதும் பழக்கமில்லை எனத் தெரியுமென்பதால் இதில் பிரச்சனையில்லை. ஆனா் படத்தில் பழைய ஜாக்கிசான் இல்லவே இல்லை. பழசான ஜாக்கிதான் இருக்கிறார்.

சண்டைக்காட்சிகள் மிகவும் சாதாரணமானதாயுள்ளன. அவ்வப்போது வெடிக்கிறது க்ரிஸ்டக்கரின் காமெடி. சிவாஜிக்கும் ரஷ் அவர் 3க்கும் சிவாஜிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை(வரிசையில் நிற்பதை் தவிர்த்து).

வயதான ஹீரோக்கள். பழக்கப்பட்ட கதை. காமெடியனின் அதீத ஆதிக்கம். ஹீரோவே காமெடியனாவது. அங்கவை சங்கவைபோல இனம்சார்ந்த கிண்டல்கள். இன்னும் பல.

இனம்சார்ந்த கிண்டல்களுக்கு அமெரிகாவில் எதிர்வினைகள் அதிகம் இருப்பதில்லை. இங்கே ஈர்க்குச்சி விளக்குமாறு இல்லாததால்கூட இருக்கலாம்.

படம் காமெடி கலாட்டா. ஏனோ, ஜாக்கியின் பழைய படங்களை பார்க்கவேண்டும் என்கிற ஏக்கத்தை தவிற வேறெதுவும் தாக்கமில்லை.

பழைய ஜாக்கி சான் படத்தொகுப்பு

Thursday, March 15, 2007

300

வீரவரலாறுகளுக்கு உலக கலாச்சாரங்களில் பஞ்சமேயில்லை. அதிலும் பலமிழந்தவன் பலசாலியை வீழ்த்தும் கதைகள். ஹாலிவுட்டிற்கு பிடித்தமான கதைவகைகளில் முதன்மையானது இதுதான்.

2,50,000 பேர் கொண்ட பெர்ஷியர்களின்(இந்தக்கால ஈரான் பகுதி) படையை வெறும் 300பேர் மூன்று நாட்கள் தடுத்து நிறுத்தி பின்னடையச் செய்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா?

இது கிரேக்க வரலாறு. கிரேக்க புராணக்கதையல்ல.

ஸ்பார்ட்டா கிரேக்க நாட்டின் தெற்கிலுள்ள ஒரு நகரம். இங்கு பிறக்கும் ஆண்மகவின் உடல் போருக்குகந்ததா என பிறந்த சூட்டோடேயே பார்க்கப்படுகிறது. குழந்தையின் உடற்கூறு ஒவ்வாததாயிருப்பின் கீழே எலும்புக் கூடுகளோடு எலும்புக்கூடாய்ப்போக வீசி எறியப்படும்.

இப்படி ஒரு காட்சியோடு துவங்குகிறது 300 திரைப்படம். ஸ்பார்டன்களின் தீவிர இராணுவப் பயிற்சியை, ஒருபோதும் தளராமல், உயிர்போகும்வரை போராடும் குணத்தை உருவாக்கும் விதத்தை ஒரு அழகுள்ள ஆவணப் பாடமாய் காண்பிக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து ஸ்பார்ட்டாவின் அரசனாகிறான்.

லியோனிடா. ஹெர்குலிசின் சந்ததி என நம்பப்படுகிறவன். வீரமும் ஈரமும் கொண்ட ராஜன். கடிந்துகொள்ளவும், காதலிக்கவும் தெரிந்தவன். கட்டிலிலும் ஆடைகளின்றி காதலே செய்கிறான், காமமல்ல.

வல்லமைபொருந்திய எதிரியை தடுக்க வெறும் 300 பேரோடு செல்கிறான். அடிமைகளைக் கொண்ட பெரும்படையை வீழ்த்த உணர்வுள்ள 300பேர் போதுமே?

தலைகள் உருள்கின்றன, யானைகள் மலை உச்சிகளிலிருந்து கடல்நோக்கி விழுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட நடனமாய் ஸ்பார்டன்களின் போர்த்திறம் அழகுற கண்முன் விரிகிறது. வானம் இருண்டிட வரும் அம்புக்குவியல்கள், 10 அடிக்கும் மேல் உயரமான அசுரர்கள். உயிர் பயமில்லாத எதிரிகளை வெட்டிச் சாய்க்கிறது ஸ்பார்ட்டன்களின் குறும்படை.

நடனம் தொடர்கிறது. இரத்தம், திட்டமிடப்பட்டு தெளிக்கப்படும் ஓவிய வண்ணமாய் திரையெங்கும் தெரிகிறது. வரப்புகளில் துள்ளிவரும் அழகிகளைவிடவும் மெதுவாய் ஆனால் அதே அழகோடு வெட்டப்பட்ட தலை தரையில் விழுகிறது, பின்தொடர்ந்து பாடலுடன் ஓடிவரும் நாயகனைப்போல உடல் சரிகிறது. நடனம் தொடர்கிறது.

ஏனோ வீரனைச் சரிக்க வீரன் வருவதில்லை காப்பியங்களில். துரோகமே பெரும் ஆயுதமாகிப் போகிறது. சாதித்துவிட்ட திருப்தியோடு 300பேரும் உயிரைவிடுகின்றனர். இவர்களின் கதையை கேள்விப்பட்டபின் ஸ்பார்ட்டா கொதித்தெழுக்றது. பெர்ஷியாவின் படை விரட்டியடிக்கப்படுகிறது.

பொதுவாகப் போர்களில் அரசர்களே வெற்றி பெறுகின்றனர். அவர்களைத் தெய்வங்களெனப் பாடலில் வைப்பார்கள். ஆனால் மாண்டுபோகும் வீரனின் உயிருக்கு மதிப்பிருக்காது.

300 படம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் க்ராஃபிக்சில் எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களைத் தவிர்த்து மற்றவை எல்லாம் (எல்லாம்) கணினியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது, அந்தக் காட்சியில் குதிரைகள் வருவதால்.

ஒரு காட்சியில் ஒரு பெண் காற்றில் ஆடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நிஜத்தில் அந்தப்பெண் நீர்த்தொட்டி ஒன்றில் ஆடியதை படம் பிடித்து அப்படிச் செய்திருக்கிறார்கள். 60 நாள் படப் பிடிப்பு ஒரு வருட தயாரிப்பு.

கால்கள் துண்டிக்கப்பட்டு காற்றில் பறப்பதாயிருக்கட்டும், பிணங்களைக் கலவையாக்கி கட்டப்பட்ட சுவராயிருக்கட்டும், கட்டிலில் முலை தெரியப் பகிரும் அன்பாயிருக்கட்டும், காட்சிகள் அழகுற விரிகின்றன.

இரத்தம் ஆறாய் ஓட, தலைகளும் தசைகளும் சிதற, ஓலங்களும் கூச்சல்களும் எங்கும் நிறைய, காற்றும் நிலமும் சிவப்பாக, நுனிகளில் இரத்தமும் சதையும்தோய்ந்த ஆயுதங்கள் பழக, தூரத்தில் நரிகளும் வானத்தில் வல்லூறுகளும் நாக்கைச் சப்பிக்கொண்டிருக்க, உறுப்பிழந்த உடல்களும் உடலிழந்த உறுப்புக்களும் துடிதுடிக்க கிடக்கின்ற போர்க்காட்சியொன்றை இவ்வளவு அழகாகக் காண்பிக்கத்தான் வேண்டுமா?

Sunday, March 04, 2007

'வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்'

'மொழி'. வாவ்.

தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம் 'மொழி'.

பின்னிரவில் தூங்கிய அசதியோடு, இப்படி ஒரு 'சோகமான' படத்துக்குப் போகிறோமே என சலித்துக்கொண்டேன். படம் துவங்கியதிலிருந்து வீடு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்வரை ஏதோ மூளையை சலவை செய்து வைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி. படம் சோகமா? இருக்கலாம் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல நாம் மகிழ்ச்சியா இருக்கிறோமா என எண்ணினால் நிச்சயம் சோகம் வரலாம்.

அழுத்தமான ஒரு கதைக்கு எதார்த்தமான, கதையோடு இழையோடும் இரசிக்கத்தக்க நகைச்சுவையோடு கூடிய காட்சியமைப்பை செய்வித்து பாத்திரங்களை வாழவிட்டிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.

அமெரிக்காவில் USA என ஒரு தொலைக்காட்சி சேனல் உண்டு . அவங்களோட விளம்பரக் குறிப்பா 'Characters Welcome' எனச் சொல்வாங்க. '(வித்தியாசமான)கதாபாத்திரங்களை வரவேர்க்கிறோம்' எனப் பொருள் கொள்ளலாம். அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள்பல வித்தியாசமான பாத்திரங்களை முன்வைத்திருக்கும்.

'மொழி', 'Characters Welcome'.

தமிழ் சினிமாக்களில் எளிதில் பார்த்துவிட இயலாத பாத்திரங்களை படைத்திருக்கிறார்கள்.

உலகையே அன்பொழுகப் பார்க்கும் ஹீரோ. முன்னாலெல்லாம் Angry young man ஹீரோக்கள பாக்கலாம். இப்போ well balanced young man தான் ஹீரோ(நான் போக்கிரி இன்னும் பாக்கல :). இந்தப் படத்து ஹீரோவும் அப்படித்தான்.

ஹீரோவ விடுங்க அவரவிட அவரது நண்பர் ரெம்ப சூப்பர். எப்போதும் சிரித்துக்கொண்டே, சிரிப்பூட்டிக்கொண்டே. பொதுவாக பலரும் சீரியசா எடுத்துக்கிற விஷயங்கள கொஞ்சம் சிரிப்பு கலந்த பார்வையில் எடுத்துக்கிறதுல கெட்டிக்காரர்.

காது கேளாத, வாய் பேச இயலாத ஹீரோயின். ஆனா இவரது இயலாமை இதுவல்ல. உடலின் இயலாமையை அவர் வென்றுவிட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எல்லா உடற்திறனும் கொண்டவர்கள் சாதித்திராததையெல்லாம் இவள் சாதித்திருக்கிறாள். ஆனால் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு அனுபவம் இவள் மனதை ஊனமாக்கிவிடுகிறது.

ஹீரோயினின் நண்பி. இவரின் பாத்திரம் ரெம்ப இயல்பா படைக்கப்பட்டிருக்குது. இவரின் வாழ்வில் ஏற்படும் ஒரு திருப்பம் கதாநாயகிக்கு மனமாற்றத்துக்கு வழிவகுக்குது.

இந்த நாலுபேரும் முக்கிய பாத்திரங்கள். இன்னும், கடுகடுப்பான காலனி செக்ரட்டரி, அவர் மகன் சாப்பாட்டு பிரியன், ஹீரோவை ஒருதலையா காதலிக்கும் காலணிப் பெண், 1984லேயே மனது உறைந்துபோன ஒரு மன நோயாளி பேராசிரியர்(டி.வி புகழ் பாஸ்கர்), ஹீரோவிடம் பூ விற்க வரும் வாய்பேச இயலாத, காது கேளாத சிறுமி இன்னும் பல பாத்திரங்கள் திரையில் மிளிர்கின்றன. Characters Welcome.

அன்னியர்களோடு நாம் கொள்ளும் உறவுகளில் அதிகபட்ச ஆழமானது என்ன? காதல்? திருமணம்? ஒரு மாற்று சிந்தனையாக சோதித்துப் பாருங்கள், நம் உறவுகள் அனைவருமே அன்னியர்கள்தான். இப்போதில்லை என்றாலும் ஒரு காலத்தில நமக்கு அன்னியர்களாய்த்தானிருந்திருக்கிறார்கள், நம் பெற்றோர்கள் உட்பட. ஆக நம் உறவுகள் எல்லாமே அன்னியர்கள், இதே பார்வையை கொஞ்சம் திருப்பினால் அன்னியர்கள் எல்லாருமே நம் உறவினர்களாயிருவாங்க. இதுபோன்ற சிந்தனையில் பின்னப்பட்டிருக்கும் உறவு வலைகளில் பாத்திரங்கள் பரிமளிக்கின்றன. அன்னியர்கள் என்பதைவிட, நாம் இன்னும் நண்பர்களாகாதவர்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும்.

நிச்சயம் பார்க்கவேண்டிய படம் 'மொழி'. சோகமான படமல்ல இது. காட்சிக்கு காட்சி இயக்குனரின் brilliance தெரிகிறது. கடைசியில் வரும் பாடல் கொஞ்சம் சோர்வையளித்தாலும் படத்தின் மற்ற நல்ல அம்சங்களுக்காக இதை மன்னிக்கலாம்.

குறிப்பிடத்தக்கவகையில் வசனம் எழுதியவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. அருமையான வசனங்கள். பின்னணி இசையிலும், சில பாடல்களிலும் முத்திரை பதிக்கிறார் வித்யாசாகர். திடீரென கவனித்தேன் பின்னணியில் அழகிய ஜாஸ் இசை அளித்திருந்தார். வைரமுத்துவின் வரிகளில் 'காற்றின் மொழி' பாடல் மிகவும் அருமை.

இதுவரை நீங்கள் தமிழ் படமே பாத்திருந்ததில்லையென்றாலும் இந்தப் படத்த பார்க்காம இருக்காதீங்க. I highly recommend it. இந்தப் படத்த தவறா விளம்பரம் செய்யுறாங்கன்னு படுது. விளம்பரத்த பார்த்துட்டு சோகமான படம்னு நினச்சுட்டேன்.

சிகாகோவில் ரஜினி படத்துக்கு அடுத்ததாக அரங்கு நிறைந்து, அடுத்த காட்சிக்காக காத்திருந்து படம் பார்த்த மக்கள் கூட்டத்தை முதன் முதலில் பார்க்கிறேன்.

படம் முடிந்ததும் கைதட்டினேன், எல்லோரும் தொடர்ந்தனர்.

'வார்த்தயில்லாமலே பாஷை உண்டாகலாம்'. இது இசைக்கும் காதலுக்கும் மிகவும் பொருந்தும். மொழியில் இந்த இரண்டுமே அழகாக கையாளப்பட்டிருக்கின்றன.

இயக்குனருக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இப்படி ஒரு படத்தை தயாரித்து மிகவும் வித்தியாசமான நடிப்பில் ஒளிர்ந்திருக்கும் ப்ரகாஷ் ராஜுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். ஜோ, இத்தனை வருடம் நடித்ததின் பலன் மொத்தமும் இந்தப்படத்தில் தெரிகிறது.

'மொழி', பேசாம போய் பாருங்க (pun intended).

.

Wednesday, January 03, 2007

வெயில் - நிழலல்ல நிஜம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.

வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் வாழ்வில் ஒருநாள் சுள்ளென சுட்ட வெயில்தான்.
கண்டிப்பான தந்தை, கட் அடித்துவிட்டு சினிமாபோன மகனை அம்மணமாக வெயிலில் கட்டிப்போடுகிறார். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் அவனும், அவன் சுயமரியாதையும் பொசுக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வாழ்க்கை வெறும் ஏமாற்றங்களையே தருகிறது. அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.

பாத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல படம் எடுக்கவேண்டும் என பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார். அவரேகூட சில பொன் மேனி உருகல்களோடுதான் படம் எடுத்திருக்கிறார். வெயில், கிராமத்து வீதிகளில் விதி ஆடும் பம்பர விளையாட்டுக்களை நேரடியாய் பதித்ததுபோல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் பரிமாணங்களை முகபாவத்திலேயும் குறைந்தபட்ச வசனத்திலேயும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். வெறும் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது கிராமத்தின் பல முகங்களையும் கதையில் இணைத்திருப்பதும் சிறப்பு.

பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். 'போட்டுரலாம்' 'தூக்கிரலாம்; எனும் வில்லன்களின் உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால் படம் நம்ம மாமூல் தமிழ் படங்களை துவைத்துப் போட்டிருக்கிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் பல சிறுவர்கள்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.

கோயமுத்தூரில் இருந்த நாட்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கான சிறைச்சாலை ஒன்றை ஞாயிறுதோறும் பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அங்கிருந்த சிறுவர்களில் அதிகம்பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். அவர்களே தங்களை 'சந்தேகக் கேஸ்' 'கிரிமினல் கேஸ்' என பகுத்துக் கொள்வதுண்டு. இப்படி ஓடி வரும் சிறுவர்கள் வாழ்க்கை பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை. இதில் வெற்றி பெறும் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளை வளர்ப்பதற்கு இதுதான் சிறந்த வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரியாக வளர்வதில்லை என்பதும் இதற்குச் சான்று. குழந்தைகளை தண்டிப்பது மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பதை இந்தப் படத்தின் மூலமோ இன்னும் செய்தித் தாள்களில் படிக்கும் பல செய்திகள் மூலமோ இல்லை ஒரு சிறுவர் சிறைச்சாலையை போய் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். சும்மா எடுத்தேன் அடித்தேன் என இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையில் அதீத தண்டனைகள் அதிகமில்லை எனவே நினைக்கிறேன். நான் பட்ட அடி என் பிள்ளைங்க படவேண்டாம் எனும் எண்ணம் இதற்கு காரணமாயிருக்கலாம்.

படம் முடிந்ததும் ஒரு கேள்வி தோன்றியது. ஒருவேளை அன்று வெயில் குறைவாயிருந்திருந்தால்?


கூகிளிய பிற விமர்சனங்கள்
தம்பி
சாரல்
விழியன்
யாழ்

Monday, June 26, 2006

புதுப்பேட்டை

'விளிம்பு மனிதர்களை' படம்பிடிப்பதில் செல்வராகவன் திறமைசாலி. ஒன்று சமுதாயத்தின் விளிம்பில் அல்லது உணர்ச்சிகளின் விளிம்பில் இவரது படைப்புக்கள் திரை உலா வரும். புதுப்பேட்டையும் அப்படி ஒரு முயற்சியே.

சேரியிலிருந்து பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் கொக்கி குமாரின் வாழ்க்கை ஏதோ சாக்கடையில் சிறுவர்கள் விட்ட காகிதக் கப்பல் போல பயணிக்கிறது. அவன் எண்ணிப்பார்த்திராத பரிமாணங்களில் ஒவ்வொரு நாளும் புலருகிறது. பிச்சைக்காரனாகி, அடியாளாகி, தாதாவாகி, கணவனாகி, தந்தையாகி ... என பல திருப்பங்கள். சாக்கடையில் சில அழுகாத பழங்களும், சற்றுமுன் வீசப்பட்ட பூக்களும் இருக்குமென்றாலும், நாற்றமே அதிகம்.

தமிழ் திரையுலகின் தொழில்நுட்பத்திறனுக்கு மற்றுமொரு உதாரணம் இந்தப்படம். இயற்கையான சூழலில் ஒவ்வொரு காட்சியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அலறிக்கொண்டு வரும் பாடல்கள் விதிவிலக்கு.

ஸ்னேகாவின் பாத்திரம் கனமான 'விலைமாது' பாத்திரம். அழகாய் செய்திருக்கிறார். சோனியா அகர்வால் வழக்கம்போல முகத்தசைகளுக்கு அதிகம் வேலையில்லாமல் செய்திருக்கிறார். இரு நாயகிகளும் நாயகனை எதிரெதிர் வழியில் நடத்துகிறார்கள். ஒருத்தி நாயகனுள்ளிருக்கும் நல்லவனை நாட, இன்னொருத்தி கெட்டவனை உசுப்புகிறாள்.

தனுஷின் நடிப்பில் புதிதாய் எதுவுமே தெரியவில்லை. நீளமான படம் என்பதால் சில நேரங்களில் இவரின் மாற்றமில்லாத (Monotonous) உச்சரிப்பு எரிச்சலூட்டுகிறது. இன்னும் சில ஒத்த கததபாத்திரங்களின் உச்சரிப்பும் ஒரேபோலிருப்பாதால் தவறு செல்வராகவனுடையது எனத் தெரிகிறது.

கொடூரமான காட்சிகள் சில தவிர்க்கமுடியாமல் சேர்க்கப்பட்டுள்ளன. சில உண்மைகள் பொதுவாய் கசக்கத்தான்செய்கின்றன.

குடும்பத்தோடு...? கொஞ்சம் கடினம்தான். நிச்சயமாக செல்வராகவனின் நோக்கம் குடும்பப்படமல்ல.

கமல் பாடியிருக்கும் பாடல் பிரமாதம். யுவன் இசை முத்துக்குமார் வரிகள் இதம் சேர்க்கின்றன. காமெரா மேனை படத்தில் காணவில்லை அத்தனை இயல்பான ஒளிப்பதிவு.

ரவுடி, ரவுடிகள், அரசியல், அரசியல்வாதிகள் என குறுகிய வட்டதில் படம் சுழல்வதாலும் கொஞ்சம் நீளமானதாலும் சில நேரம் அயற்சியடைய வைக்கிறது.

'சென்னையில் இதுபோல மனிதர்களுண்டா?' என பலரையும் வியக்கவைக்கும். இதுவே இந்தப்படத்தின் சாதனையும், சவாலும்.

Thursday, June 01, 2006

கொக்கி

கரண் ஹீரோவாய் நடித்து வந்திருக்கும் படம் கொக்கி. எந்தக் கரண்? "செக் மேட்டுன்னு சொன்னேன் சார்" என வி.பி கமலை மிரட்டுனாரே அந்தக் கரண்.
ஆன்டி ஹீரோ கேள்விபட்டிருக்கோம் இவர் ஆர்டினரி ஹீரோ. படத்தில் 'பக்கி'மாதிரி காட்சியளிக்கிறார்.

கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு பிழைக்க வரும் ஒரு சாதாரண இளைஞன் வாழ்க்கை பட்டணத்தில் சின்னாபின்னமாக்கப்படும் கதை. இப்பத்தானே இப்படி ஒரு படம் பார்த்தோம் என்பவர்களுக்கு குறிச்சொல் 'ட்ரீட்மெண்ட்'. கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் படத்தை வித்தியாசப்படுத்துகின்றன.

யதார்த்தமாய் காட்சியமைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. மாடியிலிருந்து நூறு படிகளில் இறங்கிவரும் வில்லன், எந்திரத்துப்பாக்கியில் சுட்டுத்தள்ளும் ஹீரோ, சாவுப்படுக்கையில் சத்தியம் வாங்கும் அம்மா எல்லாம் இல்லாமல் படம் கிட்டத்தட்ட கலைப் படம் போலவே ஓடுகிறது.

ஆரம்பத்திலேயே ஒரு குழந்தையை பலி கொடுக்கும் பூஜை, சோதிடத்தால் ஏமாந்தவர்களின் கதை பற்றிய செய்தித் தாள் தொகுப்பு என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

சோதிடர் சொல்வதை கேட்டு காலம் சமயம் பார்த்தே எதையும் செய்யும் வில்லன் காலையில் சவரம் செய்யவரும் ஹீரோ முகத்தில் முழிக்க, அன்று எல்லாமே வெற்றி. இவனை தினமும் பார்த்தால் ஜெயம் என சோதிடர் சொல்ல, ஹீரோவை வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து தன்னோடு இருக்கச்சொல்கிறார். வேலை செய்துதான் சம்பாதிப்பேன் என்கிறார் ஹீரோ. 'சனி' துவங்குகிறது கொக்கி எனப்படும் கொக்கிச்சாமிக்கு.

கடுமையாக முயற்சி செய்து காட்சிகளை எளிமையாய் அமைத்துள்ளார் டைரக்டர். யதார்த்தமான நடிப்பில் எல்லோரும் மின்னுகிறார்கள் வில்லன் தவிர. சாமியில் நடித்தமாதிரியே இன்னும் நடிக்கிறார். 'ரேஷன் கார்டு கிழிஞ்சிடுச்சி'ன்னு பஞ்டையலாக் வேற.

மலேசியா வாசுதேவன் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் அருமையாய் நடித்துள்ளார். சோதிடராய் வரும் மாணிக்க விநாயகம் கலக்கல்.

கரண் நடிக்கவேயில்லை அப்படியே அந்த இறுக்கமான கிராமத்தானாகவே மாறியிருக்கிறார்.

தினாவின் ரீசைக்கிள்ட் பாடல்கள் கதையின் வேகத்தை குறைக்கிறது. பாடல்கள் இல்லையென்றால் கலைப்படம்போலாகியிருக்கலாம்.

அதிகம் பேசாமலே இருக்கும் ஹீரோ கடைசியில் பேசும் வசனம் மனதில் நிற்கிறது.

ஜீவனின் ஒளிப்பதிவு ஜீவன் சேர்க்கிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் கொக்கி உங்களை கவர்ந்திழுக்கலாம்.

Tuesday, March 21, 2006

பட்டியல்

மீண்டும் ஒரு ரவுடிக் கதை என்று சொல்ல முடியாத படம். காட்சியமைப்புக்கள் உண்மைக்கருகிலுள்ளன. இசை, படத்தொகுப்பு, கலை என எல்லாமே முழுமையாய் ஒன்றிணைந்திருக்கின்றன.

கதை ரெம்ப புதுசு என்றில்லை. காசுக்கு கொலை செய்யும் இரண்டு அடியாள் நண்பர்கள், அவர்களின் காதலிகள், இவர்களுக்கு 'வேலை' வாங்கித்தரும் 'கொலை'த்தரகர் மற்றும் இவர்களால் கொல்லப்படுகிற சிலர் என சிறிய வட்டத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.

வெறும் திரைக்கதையையும் காட்சியமைப்பையும் நம்பி எடுக்கப்பட்ட படம். கடைசிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி இல்லமல் ஓடுகிறது, இறுதியில் வைக்கப்படும் ஒரு சிறு முடிச்சு தவிர.

எல்லொரின் நடிப்பும் அபாரம். ஆர்யா பத்மப் பிரியா காதல் வல்லினம், பரத் பூஜா காதல் மெல்லினம்.

பரத், ஆர்யாவின் வீடு துவங்கி எக்ஸ்போர்ட் கம்பனிவரை எதார்த்தமான சூழலில் படமாக்கம் நன்றாயிருக்கிறது. தொழில் நுட்ப நேர்த்தி அசரவைக்கிறது.

ஹனிபாவிற்கு தமிழில் மீண்டும் ஒரு அருமையான பாத்திரம், அழகாய் செய்திருக்கிறார். அவரிடம் அடிக்கடி வேலை கேட்கும் பையன் நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்பிரியா கலக்கியிருக்கிறார், 'தவமாய் தவமிருந்து' பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமளிக்கக்கூடும். பரத் ஊமை+செவிடாய். ஆர்யா பரத்திற்கும் சேர்த்து பேசித் தீர்க்கிறார். இருவர் நடிப்பும் அருமை.

இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கு பாராட்டுக்கள். நிச்சயமாய் இது ஒரு இயக்குநரின் படம். படத்தின் முடிவை மிகவும் ரசித்தேன். ராம் கோபால் வர்மாவை ஏனோ நினைவூட்டுகிறது இந்தப் படம்.

சிறில் அலெக்ஸ்