.

Thursday, November 30, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.

மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் இங்கே ஏன் வருகிறீர்கள் என எண்ணியோ என்னவோ நானும் என் நண்பரும் குடும்பங்களுடன் போய் சேரும்போது பூங்காவை மூடியிருந்தார்கள்.

சிவபாலன் வீட்டுக்கு வழிசொல்ல நானும் என் மனைவி, மகனும் போய் சேர்ந்தோம்.

இரண்டு முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே சிவபாலன் உதயக்குமாரோடு பயங்கர விவாதத்தில் இருந்திருப்பார் போல.

'அண்டக்கா கசம் அபுக்கா குசம்..' சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது.

சிவபாலன். எளிமை இனிமை. அவர் எழுத்தைப் போலவே பட படவென இருக்கிறார் மனிதர். அருமையாய் உபசரித்தார். (பதிவுகள் போலவே) சமூக, அரசியல் விவாதங்களையே விரும்பிச் செய்தார். உண்மையில் அவர் சொல்வதற்கும் அவரின் கொள்கைகளுக்கும் தொடர்புள்ளது என்கிற நேர்மையைப் புரிந்துகொண்டேன்.

உதயக்குமார் எனும் விளையாட்டுப்பிள்ளை வந்திருந்தார். பீர் மணம் மாறாத முகம். (ரெம்ப இளையவர்னு சொல்ல வர்றேங்க) மத்தபடி அவர் சவுண்ட் பார்டின்னு தெரியும் தண்ணி பார்ட்டியான்னு தெரியல. வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர். நேரிலும்.

மூவரும் ஏதோ சின்ன வயசுலேர்ந்தே பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள் போல பேசிக் கொண்டோம். வலைப் பதிவுகளில் அப்படி ஒரு அறிமுகம் கிடைக்கிறது. ஒருவரைப் பற்றிய முன் அனுமானங்களை அவரின் எழுத்திலிருந்தே செய்துகொள்ள முடிகிறது(ஓரளவுக்கு சரியாகவே) . சின்னச் சின்ன விவாதங்களே புரிந்தோம். கலந்துரையாடல். சீரியசாக எதையும் விவாதிக்கவில்லை எனச் சொல்லலாம்.

சிவபாலன் மனைவி மசால் வடை பரிமாற சந்திப்பு சூடு பிடித்தது. அடுத்து டீ இன்னும் இனிப்புடன் உபசரிப்பு தொடர்ந்தது. மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது. (வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இருக்கவேண்டும் எனும் விதிமுறைக்கேற்ப.)

நண்பர்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி. வரும் கோடையில் மெகா சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம்.

வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்களின் சந்திப்பு எனச் சொல்லலாம். நிறைவான சந்திப்பு இனிவரும் சந்திப்புக்களுக்கு முத்தாய்ப்பு.

விடை பெறும்போது உதயக் குமார் நண்பர்களோடு கசினோ ராயேல் பார்க்கப் போவதாகச் சொன்னார்.

கூடவே வந்துகொண்டிருந்தார். ஹைவேயில் காரை விட்டபோது காணாமல் போயிருந்தார்.

இன்னும் சந்திப்போம். மகிழ்வோம். (போண்டா) பகிர்வோம்.

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.

இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.

நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.

பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

Monday, November 27, 2006

நன்றி

நவம்பர் தேன்கூடு போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் போட்டி நடத்திய தமிழோவியம் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றி.

தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது 'சொர்க்கம் இலவசம்' கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).

மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.


கூடவே ஒரு சின்ன போட்டி.

அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி என தேன்கூடு அறிவித்திருப்பதால் சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

தலைப்பு போட்டிக்குப் பரிசு பாராட்டு மட்டுமே. :)

Saturday, November 25, 2006

போக்கர் ஆடுவது எப்படி?

கசினோ ராயேல் பார்த்துவந்த பாதிப்பில் எழுதும் பதிவு இது. படம் அசத்தலாக உள்ளது. தீவிர பாண்ட் ரசிகர்களை படம் ஏமாற்றலாம்(?) ஆனால் பொதுவாக நல்ல சண்டை படங்களை விரும்புவர்களுக்கு விருந்துதான்.

எப்போதும் சாதுவாய், ரீஜண்ட்டாய் நடந்துகொள்ளும் பாண்ட் இந்தப்படத்தில் பேட்டை தாதாவாட்டம் குமுறுகிறார். லேசர் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் சகிதம் உள்ளடக்கிய கார்களில்லை, உலகை ஆட்கொள்ள விரும்பும் வில்லனில்லை. உரையாடல்களில்கூட பழைய பாண்ட்தனம் இல்லை. பாண்ட் பற்றிய உங்கள் முன் அபிப்பிராயங்களையெல்லாம் தகர்த்தெறியும் படம் 'காசினோ ராயேல்'.

'ரௌடி பாண்ட்' என்கிறது டைம். ஒப்புக்கொள்கிறேன். ரசிக்கத்தகும் ராஸ்க்கல் இந்த புதிய பாண்ட்.

போக்கர் எனும் சீட்டாட்டம் (பொதுவாக சூதாட பயன்படுத்தப்படுகிறது) இந்தப் படத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. வில்லனை, வில்லன்களில் ஒருவரை (படத்தில் சில வில்லன்கள்) போக்கர் ஆட்டத்தில் தோர்க்கடித்து சில மில்லியன்களை தீவிரவாதிகளின் கையில் சேர்வதிலிருந்து காப்பாற்றுகிறார் பாண்ட்.

போக்கர் ஆட்டத்தின் விதிமுறைகளை தெரிந்திருப்பது இந்தப் படத்தை மேலும் ரசிக்க உதவும் என்னும் நம்பிக்கையில்..

ஒரு சீட்டுக் கட்டில் 52 சீட்டுக்கள் உள்ளன. ஏஸ்(Ace), ராஜா, ராணி, ஜாக்(Jack அல்லது குலான்), 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 மற்றும் 1 என இவை பெரிதிலிருந்து சிறிதாக வரிசைப்படுத்தப் படுகின்றன. ஆட்டீன் அல்லது ஆர்டீன்(Hearts), ஸ்பேட்(Spade), கிளாவர் அல்லது க்ளப்ஸ், டைமண்ட் என நாலு வகை(பூக்கள்-suites) சீட்டுக்கள்.

போக்கரில் இந்த வகைகளில் பெரியது சிறியது என இல்லை. (நம்ம ஊர் மூணு சீட்டில் இந்த வகைப்படி பெரியது சிறியது உண்டு).

போக்கரில் ஐந்து சீட்டுக்களின் மதிப்பை வைத்து ஒருவரின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. 'டெக்ஸாஸ் ஹோல்ட் தெம்' (Texas Hold em) போக்கரில் ஒருவருக்கு முதலில் இரண்டு சீட்டுக்கள் மறைவாக டீல் செய்யப்படுகின்றன. இந்தச் சீட்டுக்களை 'hole cards' என அழைக்கின்றனர்.

இதற்குப் பின் பெட்டிங் துவங்குகிறது. ஒரு சுற்று பெட்டிங் முடிந்தபிறகு டீலர் கையில் மீதியிருக்கும் சீட்டுக்கட்டின் மேல் சீட்டை நிராகரித்துவிடுவார். இதற்கு burning the card எனப் பெயர்.

மேல் சீட்டை களைந்தபின்னர் அடுத்த மூன்று சீட்டுக்களையும் எல்லோருக்கும் தெரியும்படி டேபிளில் போடுவார். இதற்குப் பெயர் Flop. இன்னொரு ரவுண்ட் பெட்டிங் நடைபெறும்.

அடுத்து இன்னுமொரு மேலுள்ள சீட்டு 'எரிக்கப்படும்' (burning the card).

அடுத்து இன்னொரு சீட்டு திருப்பப்படுகிறது. இதற்குப் பெயர் Turn அல்லது Forth Street. இப்போது டேபிளில் நான்கு சீட்டுகள் எல்லோருக்கும் தெரியும்படி இருக்கின்றன. விளையாடுபவர்கள் கையில் இரண்டு சீட்டுக்கள் அவர்கலுக்கு மட்டுமே தேரியும்படி உள்ளன.

இப்போது பெட்டிங் மீண்டும் நடைபெறும். இன்னும் ஒரு சீட்டை ஒதுக்கிவிட்டு ஐந்தாவது சீட்டு திறக்கப் படும் இதற்குப் பெயர் rivar அல்லது fifth street.

இத்தனை சீட்டுக்கள்தான் டீல் செய்யப்படுகின்றன. இப்போது விளையாடுபவர் கையிலிருக்கும் இரண்டு சீட்டுக்களையும் மேசையில் இருக்கும் ஐந்து சீட்டுக்களில் மூன்றையும் சேர்த்து ஐந்து சீட்டுக்களை வைத்து கீழ்கண்ட விதிகளின்படி யாருக்கு வெற்றி என முடிவு செய்யப்படும்.

1. ராயல் ப்ளஷ். (Royal Flush).
இதுதான் எல்லாவற்றிற்கும் முதன்மையான கை. ஏஸ், கிங், குயின், ஜாக், 10 சீட்டுகள் ஒரே suiteல் உள்ளதாய் வந்தால் அதுவே ராயல் ப்ளஷ். ஆர்ட்டின் ஏஸ் ஆர்ட்டின் 10 உங்களிடம் இருக்கும் இரண்டு சீட்டுக்கள் என வைத்துக்கொள்வோம். மேசையில் ஆர்ட்டின் குயின் ராஜா ஜாக்கோடு வேறு சில சீட்டுக்கள் இருந்தால் வெற்றி உங்களுக்கே. மற்ற இரண்டு சீட்டுக்களையும் கணக்கில் சேர்க்கமுடியாது.


என்பது இதுபோல ஒரு வரிசைப்படி வரக்கூடிய சீட்டுக்களூக்கு Straight எனப்பெயர். 2,3,4,5,6 என்பது ஒரு Straight.

Straightஎன்பது ஏஸில் துவங்கி ஏஸில் முடிவடையும் சாத்தியமான ஐந்து சீட்டு வரிசைகள். அதாவது A, 2, 3, 4, 5 என்பது சரியான வரிசை. 10, J, K, Q, A என்பதும் சரியானது ஆனால் 4, 3, 2, A, K என்பது சரியான வரிசை அல்ல.

Flush என்பது ஒரே suiteல் அந்து சீட்டுக்கள் வருவது.

2. ஸ்ட்ரெய்ட் ப்ளஷ்(Straight Flush).
ராயல் ப்ளஷ் இல்லாமல் ஒரே suiteல் வரும் வேறெந்த Flushம் ஸ்ட்ரெயிட் ப்ளஷ் எனப்படுகிறது. பாண்ட் ஒரி Straight Flush வைத்துதான் வில்லனை வீழ்த்துகிறார்.

3. நாலும் ஓன்றானது(4 of a kind).
நான்கு A அல்லது நான்கு 5 என நான்கு suiteகளிலும் உள்ள சீட்டுக்களும் வருவது.

4. புள் ஹவுஸ்(Full House).
9, 9, 9 மற்றும் 5, 5 என ஒரு சீட்டில் இரண்டும் இன்னொன்றில் மூன்றுமாய் வருவது.

5. ப்ளஷ்(Flush)
ஐந்து டைமண்ட் சீட்டுக்கள் (எந்த வரிசையிலுமில்லாமல்) போல ஐந்தௌ சீட்டுக்கள் ஒரே வகையில் வருவது.

6. நேர்வரிசை(Straight)
வரிசையில் ஐந்து சீட்டுக்கள் வெவ்வேறு suiteகளில் வருவது.

7. மூன்று ஒன்றாய்(Three of a kind)
8, 8, 8 என மூன்று சீட்டுக்கள் ஒரே என்ணில் வருவது.

8. இரண்டு ஜோடிகள்(Two pairs)
8,8 மற்றும் 4, 4 என வருவது.

9. ஜோடி(Pair)
இரண்டு ஒரே எண்சீட்டுக்களை பெறுவது 7, 7 போல.

10. வரிசையில் பெருசு(High card)
மேலுள்ள எந்த சாத்தியமும் ஒருவரிடம் இல்லாமல் போனால் அவரிடம் இருக்கும் சீட்டில் உள்ளதில் மிகப் பெரிய எண்ணை வைத்து வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது பல பெட்டிங் விதிகளும் உள்ளன.

போக்கரில் தன் கையின் பலத்தைவிட மேசையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்களைக் கொண்டு மற்றவர்களால் என்ன சாத்தியங்களை உருவாக்கமுடியும் என்பதை கணக்கிடத் தெரியவேண்டும். அதுபோல பெட்டிங்கில் யார் உண்மையாக நல்ல கையுடன் பெட்டிங் செய்கிறார் யார் ஏமாஅற்றுகிறறர் எனத் தெரிந்துகொள்வதே சாமர்த்தியம்.

அடுத்தவர் நம்மிடம் இருக்கும் சீட்டுக்களின் பலத்தையும் பலவீனத்தையும் உணர முடியாதபடி நடந்துகொள்ளவேண்டும் இதனால்தான் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துக்கு Poker Face எனும் பதத்தை பயன்படுத்துகிறார்கள்.

பாண்ட் படம் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க.

The name is Bond. James Bond.
எம்பேரு Alex. Cyril Alex. ஹி ஹி.

Friday, November 24, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு

நன்றி அறிவித்தல் விடுமுறையை ஒட்டி சிக்காகோவில் சில பதிவர்கள் சந்திக்கலாம் என இருக்கிறோம். நாளை(11/25/2006) மாலை 4 மணிக்கு சிக்ககோ தாவரவியல் பூங்காவில் சந்திப்பு நடக்க இருக்கிறது. கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தனி (cvalex at yahoo)மடலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பின்னூட்டங்கள் இடவும்.

குறைந்த அவகாசமே தரமுடிந்ததற்கு வருந்துகிறோம்.

Thursday, November 23, 2006

வான்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

நன்றிஅறிவித்தலை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்ககவில். இதுக்காக குளிர்காலத்தில், வெளியே போகமுடியாதபடியான தட்பவெட்பத்தில் நான்குநாள் லீவ் வேற விட்டுட்டாங்க. Thanksgiving பொங்கலைப் போன்றதொரு திருவிழாவாக உருவெடுத்து இன்று எல்லாத் துறையினரும் குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறியிருக்கிறது. நவம்பரின் நாலாவது வியாழன் தாங்க்ஸ்கிவிங். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறுசில நாடுகளிலும் thanksgiving கொண்டாடப்படுகிறது.

பொங்கலில் பொங்கல் வைப்பதுபோலவே தாங்ஸ்கிவிங் ஸ்பெஷல் என்னண்ணா வான்கோழி (Turkey) ஒண்ண முழுசா ரோஸ்ட் செய்து குடும்பமா உக்காந்து சாப்புடுறதுதான். டர்க்கி ரோஸ்ட் பண்ணும்போது 'டர்க்கியோ டர்க்கி..டர்க்கியோ டர்க்கி..'ன்னு யாரும் கத்தமாட்டாங்க.

வான்கோழி மேல பட்டரத்தடவி, உள்ளார வேண்டிய மூலிக சாமான்கள புகுத்தி நல்ல மணம் வரும்படியா, பேக்கிங் அவன்ல வச்சு ரோஸ்ட் பண்ணவேண்டியதுதான். அட இவ்வளவுதானான்னு கேக்காதீங்க.

இங்கே போய் பாருங்க.

பி.கு: எல்லாரும் அது எப்படி செய்வது இது எப்படி செய்வதுன்னு போடுறாங்களேன்னு நெனச்சதுல வந்தது இந்தப் பதிவு.

பகுத்தறிவாளனுக்கான பதிவு

வலைப்பதிவுகள் பக்கம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. யாரும் நம்மள மிஸ் பண்ணமாதிரி தெரியல. :)

வேலைப் பழு அதிகமாகிவிட்டதாலும், வீட்டில் புதிதாய் சன் டி.வி இணைப்பு வந்துள்ளதாலும் அலுவலகத்தில் தமிழ்மணத் திரட்டியை ப்ராக்ஸி தடுத்துவிட்டதாலும் ஒரு சிறிய இடைவெளி.
பகுத்தறிவாளன் எனும் நம்ம ஊர்க்காரர் ஒருவர் (இவுங்க நம்ம ஊர்லையும் இருக்காங்களா?) பைபிளிலிருந்து சிலக் கேள்விகளை முன்வைத்துள்ளார். அவருக்குப் பின்னூட்டம் இடும்போது பதிவாகவே போட்டுவிடலாம் என நினத்தேன். இதோ அந்தப் பதிவு.

பகுத்தறிவாளன். உங்கள் வாதங்களை படித்தேன். அவனே இவனே எனத் திட்டாமல் உங்கள் வாதங்களை நேர்மையாய் எடுத்துவைக்கிறீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்.

நீங்க கடவுள் மறுப்பளர் என்பதில் சந்தோஷம். கடவுள் மறுப்பும் ஒருவகை நம்பிக்கைதான். கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை. அது ஒரு நிலைப்பாடு. அதேபோல கடவுளை நம்புகிறவர்கள் கடவுள் இருக்கிறார் எனும் நிலைப்பாட்டில், நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும். அடிப்படையில் நீங்கள் மறுப்புடன் படிக்கிறீர்கள். உங்கள் பார்வை குறைகண்டுபிடிப்பதற்கானது. எந்தவித விளக்கமும் உங்களை சமாதானப்படுத்தப் போவதில்லை எனும் நிலைப்பாடுடனேயே உங்களுக்கு விளக்கம் அளிக்கமுடியும்.

அதேசமயம் ஒரு நம்பிக்கையாளனால் எந்த ஒரு முட்டாள்தனமான வாசகத்துக்கும், கருத்துக்கும் மிகச் சிறந்ததாக(அவன் கருதும்) ஒரு விளக்கம் அளிக்கமுடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்தான் மதம் பற்றிய எந்த விவாதமும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. அதனால் விவாதங்களே கூடாதென்றில்லை.

முதலில் உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. நீங்கள் கேட்டிருக்கும் எந்தக் கேள்வியும் புதிதாய் கேட்கப்பட்டவை அல்ல. கிறீத்துவத்தின் வரலாறு அத்தனைவிதமான எதிர்ப்புகளையும் கடந்து வந்திருக்கிறது, மற்ற எல்லா உலகளாவிய மதங்களையும்போலவே. உங்களின் பழையக் கேள்விகளுக்கு பழைய பதில்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

இனி உங்கள் கேள்விகளுக்கான பதில்..

கிறித்துவர்கள் ஏன் விருத்தச் சேதனம் (circumcision) செய்துகொள்வதில்லை?
பழைய ஏற்பாட்டில் கடவுள் மக்களோடு பல உடன்படிக்கைகள் செய்துள்ளார் அதற்காக பல அடையாளங்களையும் நிறுவியிருக்கிறார்(என பைபிள் சொல்கிறது என்று படிக்கவும்). நோவாவோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாய் வானவில் நிறுவப்பட்டது. ஆபிரகாமையும் அதன் சந்ததியையும் விருத்தச் சேதனம் செய்யச் சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு வந்து ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அது பழைய உடன்படிக்கைகளுக்கேல்லாம் மேலானதாயிருக்கிறது. எனவே பழைய முறைகள் விடப்பட்டிருக்கின்றன.

முதல் கிறித்துவக் குழுமங்களை வழிகாட்டிய புனித பால் (சின்னப்பர்), பீட்டர் விருத்த சேதனத்தை ஒரு கட்டத்தில் மறுத்துள்ளார்கள். அதற்கான காரணங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. நீங்கள் பைபிளை முழுவதாகப் படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் அதை படித்து தெரிந்து கொள்ளும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

கிறீத்துவம் யூதர்களைவிட யூதரல்லாதவரிடம் எளிதில் விலைபோனது. பல பெரியவர்கள் (குழந்தைகளல்லாதவர்கள்) கிறீத்துவர்களானார்கள். அவர்களுக்கு விருத்த சேதனம் செய்வது கடினமாக இருந்தது போன்ற சில நடைமுரை பிரச்சனைகளை சரிசெய்யவும் இது விலக்கப்பட்டிருக்கலாம்.

ஏற்கனவே ஒருவர் அளித்திருக்கும் பதில் இங்கே.

இதுபோன்ற கேள்விகளை ASK.COM போன்ற தளங்களில் கேட்டால் இன்னும் விரிவாக முழுமையான பதில்கள் கிடைக்கும். இல்லை வலைப்பதிவில்தான் போட்டு கேட்பேன் என அடம் பிடித்தீர்களென்றால் தொடருங்கள். முடிந்தவரைக்கும் பதில் சொல்லலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் என்ன சங்கடம் என்றால் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லவில்லையென்றால் அந்தக் கேள்வியில் இருப்பது ஒரு மாபெரும் உண்மையாகப் பார்க்கப்படும். 'ஆகா மடக்கிட்டான் பாருயா'ன்னு சிலர் சொல்லலாம்.

கேள்விகேட்க்க இத்தனை சிரமப்படுகிற நீங்கள் இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எதிரான கேள்விகள் கிடைக்கும் (எளிதாய் பதியலாம்). இன்னும் கொஞ்சம் தேடினால் அதற்கான விடைகளும் கிடைக்கும்(கேள்விகளை பதிக்காமல் போகலாம்).

கேள்விகளை கேட்குமுன் சில கருத்துக்களை மனதில் கொள்ளவும் அல்லது மற்ற கேள்விகளுக்கான குறுகிய பதில்.

கிறுத்துவம் இயேசுவை கடவுளாகப் பார்க்கிறது தூதராக அல்ல. அவர் இறைதூதரோ, பூசாரியோ அல்ல. மெல்கிசதேக் ஒரு பூசாரி(high priest). மிகப்பெரியவர். நீங்க சொன்ன எபிரேயர் அதிகாரத்தை தொடர்ந்து படித்தால் புனித சின்னப்பர் மெல்கிசதேக்குக்கும் கிறீத்துவுக்கும் என்ன வேறுபாடு என்பதை நேரடியாக (உங்கள் கேள்விக்கான பதிலாகவே) எழுதியிருக்கிறார். தொடர்ந்து படியுங்கள்.

'தமத்திருத்துவம்' (The Holy Trinity) கிறீத்துவ கருத்தாக்கங்களில் ஒன்று அதாவது கடவுள் ஒருவரே ஆனால் மூவர். இது எப்டி இருக்கு?

ஒரே கடவுள் பிதா சுதன் தூய ஆவி எனும் மூன்று நிலைகளில் செயல்படும் ஒரே கடவுளை கிறீத்துவர்கள் நம்புகிறார்கள். எனவே சுதனாகிய இயேசு தந்தையாகிய கடவுளை குறிக்கும்போது தன்னையே குறிக்கிறார். தமத்திரித்துவம் என்பது ஒரு பெரிய கருத்தாக்கம். பக்கம் பக்கமாய் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள். (என்பதால் மட்டுமே அதுதான் உண்மை எனச் சொல்லவில்லை) .

மேலோட்டமாக வெறும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு ஆயிரம் கேள்வி கேட்கலாம்.

முன்பு சொன்னபடி, கண்ணதாசனின் வார்த்தையில், "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா".

Friday, November 10, 2006

புதிதாய் என்ன வாங்குவது.COM

ஏதாவது வெட்டியா வாங்கி ரெம்ப நாளாச்ச? ஜில்லின்னு சில வலைத்தளங்கள் பாருங்க.

ஒம்பாடு எம்பாடு இதுதாண்டா ஐப்பாடு
iPod nano - ஒண்ணு வாங்கினா 10 டாலர் ஆஃப்ரிக்காவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கு அளிக்கப் படுகிறது. போனோவுக்கு நன்றி.
apple.com joinred.com

iKraoke - ஐப்பாடோட சேர்ந்து பாட எத்தன நாள்தான் காதல்கொண்டேன் தனுஷ் மாதிரி வெறும் தலைய ஆட்டிக்கிட்டு இருக்கிறது? சேர்ந்து பாடலாமே
griffintechnology.com

iFlip - ஐப்படில் சேமித்து வைத்திருக்கும் படங்கள பெரிய திரையில் காண. பெரிய திரைன்னா ஐப்பாடோட கம்பேர் பண்ணும்போது. திருட்டு விசிடிக்கான எந்த இண்டர்ஃபேசும் இல்லீங்க.
memcorpinc.com

lightCast - ஐப்பாடில் வரும் பாடலுக்கேற்ற விளக்கொளி நாட்டியம். 'ஒனக்கெல்லாம் ஐப்பாடே பெரிய விஷய்ம்னா' எப்படி?
farmfreshstuff.com

iNike - ஐப்பாடுக்கும் நைக்கி ஷூவுக்கும் என்ன someபந்தம். என்னது? ஐப்பாட கீழப் போட்டு மிதிக்க உதவுமா?
apple.com/ipod/nike

எனக்கு ஏதாவது கிஃப்ட் அனுப்ப நினைக்கிறீங்களா?
காரில் புத்தகம் கேட்க
store.playawaydigital.com
வீட்டை அழகுசெய்ய chiasso.com
சின்னச் சின்ன பரிசுகள் momastore.org
புதிதாய் அப்பா அம்மா ஆனவர்களுக்கு sparkability.com
விலங்கு நண்பர்களுக்கு (உள்குத்தெல்லாம் இல்லீங்க) petgadgets.com - kattbank.com
வீட்டு வேலைகளுக்கு
garrettwade.com
என் ஆஃபீஸ் மேஜைக்கு
Quincyshop.com
பறவை பிரியருக்கு
uncommongoods.com - chroniclebooks.com

சிறுவர்களுக்கான பெரிய பொருட்கள்
இன்றைய ஸ்பை நாளைய சிபிஐ. துப்பறிய உதவும் கார்- shop.wildplanet.com
நாளைய இசையமைப்பாளர்களுக்கு
Zebrahall.com
பொம்மைகளைவிடவும் மேலாக Toys and More
பூனை நடை பயிலவைக்க Quincy's
குட்டிகளுக்கான ஃபர்னிச்சர்
Moderntots.com
என்றென்றும் குழந்தையாயிருப்பவர்களுக்கு
Perpetual Kid

நல்மனம்படத்தவர் பேறுபெற்றோர்
Global Exchange உலகளவில நியாயமான தொழில்முறையில் பெறப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு
TenThousandVillages.com இதுவும் மேலுள்ளதப் போலத்தான்
Eco-Artware.com kenanausa.com கென்யாவில் சுற்றுச் சூழல் மேம்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்கள்
Novica.com நேரடியாக கலைஞர்களிடமிருந்து பெறப்பட்டு உலகளவில் விற்கப்படும் பொருட்கள்

இந்த தளங்களின் இன்னும் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. கொஞ்சம் தேடினால் நான் சொல்லியிருக்கும் விஷயங்களை கண்டுபிடிக்கலாம்.

நன்றி: டைம்

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

நம்ம தமிழ் சங்கத்துல நடந்த கவிதைப்போட்டியில நம்ம கவிதைக்கு முதல் (சர்)ப்ரைஸ் குடுத்துருக்காங்க.

நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில உண்மைகள் சிலருக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என விட்டுவிட்டேன். Ignorance is bliss. அறியாமை ஆனந்தமானது. உண்மை, உண்மை.


அந்த உரையாடலின் ஆதாரத்தில் பிறந்த இந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

நம்ம வ. வா தமிழ் சங்கத்தாருக்கும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.


'இன்னும் இருக்கிறது ஆகாயம்'

'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

Tuesday, November 07, 2006

2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

இந்த வார டைம் 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்களை பட்டியலிட்டுள்ளது. காற்றிலிருந்து குடிநீர் பெறுவது முதல் காணாமல் போனவற்றை கண்டுபிடிப்பது வரை பல புதிய கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாயன்பபட்டுக்கு உதவும் பொருட்களையே இதில் பட்டியலிட்டுள்ளார்கள். என்னை கவர்ந்த சில கீழே.

1. குடும்ப இஸ்திரி
சூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் வைத்துவிட்டு கையை எடுத்துவிட்டீர்களென்றால் இதற்கு கால்கள் முளைத்துவிடும்.

மேல் விவரம்: oliso.com விலை: $90
நன்மை: குடும்ப இஸ்திரிகளுக்கு இனி கொண்டாட்டம்தான்.
தீமை:மாமியார்கள் சண்டைபிடிக்க வேறு காரணத்தை தேட வேண்டியுள்ளது.
பிடி வரி (அதாங்க catch phrase) : 'சொந்தக் காலில் நிற்கும் ஸ்திரிகளுக்கு சொந்தக்காலில் நிற்கும் இஸ்திரி'.


2. உன்னைத் தேடி
பொருட்கள் காணாமல் வீட்டில் நடக்கும் சண்டைகளின் விளைவாக ஊர்க் கலவரங்கள் துவங்கி சர்வாதிகாரிகள் உருவாவதுவரை பல கதைகள் இருக்கின்றன (இருக்கலாம்!). இனிமேல் அந்தக் கவலை வேண்டாம். ரேடியோ அலைகளை வெளியிடும் ஸ்டிக்கர்களை முக்கியமான பொருட்களில் ஒட்டிவைத்து அடையாளப் படுத்திக் கொண்டால் இந்தக் கருவிமூலம் அவை காணாமல் போனால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்தக் கருவியே காணாமப் போனா?

மேலும் விவரம்:
loc8tor.com விலை: $190
நன்மை: பொருட்களத் தேடுற நேரத்துக்கு கூகிள்ல நாலு தேடல் போட்டு ஒரு பதிவப் போடலாம்.
தீமை: சில பொருட்கள தேடும்போது தொடர்பில்லாத முக்கியமான பல பொருட்கள் கிடைக்கும். இனி அது கிடையாது.
பிடி வரி : 'தேடாமலேயே கிடைக்கும்' (as against தேடினாலும் கிடைக்ககது).

3. குடைக்காலம்
சென்னையில் மழைக்காலம். மழைக்காலமெல்லம் குடைக்காலம். மழையில் நனைந்த குடையை மடக்கி வச்சா வீடெல்லாம் தண்ணியாகுதா? இந்தக் குடையில் தண்ணி ஒட்டுறதில்லை. தாமரை இலையப் பாத்துவந்த இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரு இதக் கண்டு பிடிச்சவர். அடுத்த வீட்டு தாமரையப் பார்த்து இன்ஸ்பிரேஷன்ல கவிதையா எழுதினவுங்களுக்கு அஞ்சலி.

மேலும் விவரம்: proidee.co.uk விலை: $95 (அடேங்கப்பா)
நன்மை: குடைக்குள் மழை இனி இருக்காது.
தீமை: ஏற்கனவெ வெள்ளப் பெருக்குல தெருத்தண்ணி வீட்டுல வந்துடுச்சே.
பிடி வரி: குடைய மட்டும் வீட்டுக்குள்ள கொண்டுபோங்க. மழை வெளியே பெய்யட்டும்.

4. அச்சூசூசூ இல்ல மியாவ்
பூனைகள்னா சிலருக்கு அலர்ஜி. கறுப்பு பூன குறுக்கவந்தா விலகி ஒட்டுறது மட்டுமில்லங்க நிஜமான உடல் ரீதியான அலர்ஜி. இப்போ புதிதாய் அலர்ஜி கொடுக்காத பூனைகள் விற்பனைக்கு வந்திருக்குதுங்க. ஜெனட்டிக் மாற்றமில்லாம இனக்கலப்பு மூலமா இத செய்யுறாங்க. என்ன இப்பவே டிமாண்ட் அதிகமாகி 15 மாசம் வெயிட்டிங் லிஸ்ட் வந்துடுச்சு.

மேலும் விவரம்: allerca.com விலை: $3,950
நன்மை: தும்மல் போட்டு சகுனத்தையெல்லாம் அபசகுனப் படுத்துறது குறையும்.
தீமை: இந்த விலைக்கு இந்தியாவுல பூனை என்ன ஒரு அரசியல்வாதியையே பெட்டா வச்சுக்கலாம். (என்னது? அரசியல்வாதின்னா அலர்ஜியா?)
பிடி வரி: பூனை வளர்ப்பீர் பயன்பெறுவீர்.

5. வாயுவிலிருந்து திரவம்
வெறும் காத்துல என்ன செய்யமுடியும்? குடிநீர் எடுக்க முடியும்னு நிருபிச்சிருக்காங்க. அட மூலிகப் பெட்ரோல் மாதிரியில்லீங்க. நிஜமாவே. காற்றில் இருக்கும் ஈரப்பதத்த குடிநீரா மாத்துற தொழில்நுட்பம். போர்களங்களிலோ பேரழிவு நிகழ்ந்த இடங்களிலோ பயன்படுத்தலாம். என்ன மெஷின் கொஞ்சம் பெருசு, குட்டி ரூம் அளவுக்கு.

மேலும் விவரம்: aquasciences.com விலை: $300,000
நன்மை: காசு இருந்தா தண்ணி கிடைக்குண்றது போயி இப்ப காத்து இருந்தா தண்ணி கிடைக்கும்
தீமை: கோலா கம்பெனிங்க தாமிரபரணில தண்ணி எடுத்ததே பிரச்சனையில கெடக்குதே?
பிடி வரி: சுவாசத்துக்கும் தாகத்துக்கும் பயன்படுத்துவீர் காத்து...காத்து .. காத்து.

6. மரம் வெட்டி
மரம் வெட்டும்போது கைய வெட்டிக்கிறது ரெம்ப சகஜம். இந்த எந்திரம் ச்தையப் போல எது தொட்டாலும் நேனோ நொடிகளுக்குள்ளால நின்று போகுமாம். இது மாதிரி நகம் (மட்டும்) வெட்ட ஏதாவது இருக்குதா?

மேலும் விவரம்: sawstop.com விலை: $2,799
நன்மை: கை இருந்தா இன்னும் நாலு மரம் வெட்டலாம்
தீமை: கை வெட்ட இந்த மெஷின பயன்படுத்த முடியாது
பிடி வரி: உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே

7. ரோபோ வீரன்
போர்க்களத்தில் காயப்பட்டுக் கிடக்கும் வீரர்களை தூக்கிவர இந்த ரோபோ உதவுகிறது. தொலை கட்டுப்பாடில் இயங்குகிறது. சுமார் 200 கிலோவுக்கு மேல் தூக்கும் திறன் உள்ளது. சட்டசபைக்கு 'குடித்துவிட்டு' வருபவர்களை தூக்கிச்செல்ல உதவுமா?

மேலும் விவரம்: vecna.com/robotics விலை: தரப்படவில்லை
நன்மை: காயப் பட்டவர தூக்கப்போயி இன்னும் காயப்படவேண்டாம்
தீமை: இந்த ரோபோவே சண்ட போடுற மாதிரி செஞ்சா யாரும் காயப் படவேண்டாமே?
பிடி வரி: தெருச்சண்டையா? சாதிக்கலவரமா? குண்டுவெடிப்பா? ஆமாய்யா ஆமா...

8. கட்டிபுடி வைத்தியம்
டெலிபோன்ல முத்தம் குடுக்கலாம் கட்டிப்புடிக்க முடியுமா? இந்த சட்டைய போட்டுக்கிட்டு தொலைபேசில குறிப்பிட்ட குறியீட்டத் தந்தா அலைபேசி அத ப்ளூ டூத் வழியா சட்டைக்கு சொல்லிடுது. சட்டையும் அப்படியே ஒருத்தர் கட்டிப்புடிச்சா எப்படி இருக்குமோ அந்த உணர்வத் தருது.

மேலும் விவரம்: cutecircuit.com விலை: தரப்படவில்லை
நன்மை: அனானிமஸா யாரவேண்ணா கட்டிபுடிக்கலாம். 'சாரி ராங் நம்பர்'-னு சொன்னா போதும்.
தீமை: அனானிமஸா யார்வேண்ணா கட்டிபுடிக்கலாம். 'சாரி ராங் நம்ப்பர்'-னு சொல்லிடுவாங்க.
பிடி வரி: கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா காணாமலே கட்டிபுடிடா.

Thursday, November 02, 2006

சொர்க்கம் இலவசம்

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். 'சித்ரகுப்தன் காலிங்' கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். 'காலையிலேயா?' பீட்டர் முணுமுணுத்தார்.

நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.

பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.

கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.

பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.

இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.

அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.

"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.

"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"

"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"

"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."

"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"

"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."

"எம்.டியா?"

"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."

"சரி என்ன மீட்டிங்?"

"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."

"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."

"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."

"ஐயையோ அப்படி இல்லீங்க.."

"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"

"ஏழுமைலையான்கூடவா?"

"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."

"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"

"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."

"இங்க மட்டும் என்ன வாழுது?"

"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "

"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"

"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "

"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"

"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."

"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."

"என்ன ஜோக்கா?"

"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"

"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."

"இந்த ஐடியா நல்லாயிருக்கே."

"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."

"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."

"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."

"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."

"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"

"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."


"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."

பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.

"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."

"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."

"சரி யோசிச்சு சொல்லுங்க."

"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."

"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"

"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."

"சொல்லுங்க பீட்டர்..."

........

சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.

"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."

சிறில் அலெக்ஸ்