Thursday, November 30, 2006
டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.
இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.
நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.
பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.
போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.
Monday, November 27, 2006
நன்றி
தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது 'சொர்க்கம் இலவசம்' கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).
மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.
கூடவே ஒரு சின்ன போட்டி.
அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி என தேன்கூடு அறிவித்திருப்பதால் சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
தலைப்பு போட்டிக்குப் பரிசு பாராட்டு மட்டுமே. :)
Thursday, November 02, 2006
சொர்க்கம் இலவசம்
நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.
பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.
பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.
இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.
அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.
"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.
"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"
"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"
"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."
"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"
"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."
"எம்.டியா?"
"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."
"சரி என்ன மீட்டிங்?"
"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."
"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."
"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."
"ஐயையோ அப்படி இல்லீங்க.."
"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"
"ஏழுமைலையான்கூடவா?"
"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."
"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"
"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."
"இங்க மட்டும் என்ன வாழுது?"
"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "
"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"
"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "
"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"
"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."
"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."
"என்ன ஜோக்கா?"
"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"
"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."
"இந்த ஐடியா நல்லாயிருக்கே."
"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."
"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."
"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."
"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."
"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"
"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."
"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."
பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.
"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."
"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."
"சரி யோசிச்சு சொல்லுங்க."
"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."
"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"
"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."
"சொல்லுங்க பீட்டர்..."
........
சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.
"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."
Wednesday, October 18, 2006
தேன்கூடு பெட்டகம்
டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. தேன்கூடு குழுமம் 'பெட்டகம்' எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).
இதன் அடிப்படை பயன் என்ன?
Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.
இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் தளங்கள் இருக்கின்றனவே? முக்கிய வித்தியாசம் சுட்டிகளுக்கு குறிச்சொற்களை வழங்க முடிகிறது. மேலும் சில குறிப்புக்களோடும் சுட்டிகளை சேர்க்கலாம்.
குறிச்சொற்கள்னா?
Tags என அழைக்கப்படுகின்றன. ஒரு சுட்டி சொல்லும் சேதிக்கேற்ப, அதை பல சொற்களால் வகைப்படுத்தமுடிகிறது. உதாரணமாக 'தேன்' எனும் இந்தப் பதிவகத்துக்கு சிறில்அலெக்ஸ் தேன் வலைப்பதிவு சிறுகதை கவிதை சமூகம் கட்டுரை என குறிச் சொற்களை சேர்க்கலாம். இப்படி பல தொடர்புள்ள பதிவுகளை குறிச் சொர்களின்கீழ் வகைப்படுத்தலாம்.
பெரிய சுட்டிக்குவியலில் சிறுகதைகளைத் தேடவேண்டுமானால் சிறுகதை எனும் குறிச் சொல்லை சுட்டினால் போதுமானது. அதன் கீழிருக்கும் எல்லா சுட்டிகளும் பட்டியலிடப்படும்.
பெட்டகத்தில் என்ன சிறப்பு?
பெட்டகத்தில் நீங்கள் சேகரிக்கும் சுட்டிகளை உங்களுக்கென தனிப்பட்டதாகவும்(Private) பொதுவானதாகவும்(Public) அல்லது உங்களை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் (People watching your list) மட்டும் பார்க்க இயன்றதாகவும் வகைப்படுத்தலாம். இந்த சேவை புதியதாக உள்ளது. (Compared to Delicious).
'தனி' சுட்டிகள் சிவப்புக் கோட்டால் குறியிடப் படுகின்றன. ஆரஞ்சு நிறத்தில் 'கவனிப்பவர்களுக்காக' என வகைப்படுத்தப்பட்டவை குறியிடப்படுகின்றன. 'பொது' சுட்டிகள் குறியிடப் படவில்லை.
எப்படி பயன் படுத்துவது?
தேன்கூட்டில் அல்லது பெட்டகத்தில் பயனாளராக பதிவுசெய்துகொள்ளுங்கள். பெட்டகத்தில் நுழையுங்கள். பார்வையாளராய், அங்கே ஏற்கனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் சுட்டிகளைக் காணலாம். குறிச்சொல் தொகுப்பை பயன்படுத்தலாம்.
'குறியத்தை சேர்க்க' எனும் பகுதிக்குச் சென்று உங்கள் சுட்டிகளை சேர்க்க ஆரம்பிக்கலாம்.
உங்கள் சொந்த சுட்டித் தொகுப்பைக் காண 'தேடுக' எனும் பகுதியில் 'என் குறியம்' என்பதை தேர்ந்தெடுத்து 'தேடுக' எனவும்.

பெட்டகத்தின் உள் நுழையாமல் சுட்டிகளை சேகரிப்பதெப்படி?
'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் 'Post To பெட்டகம்' எனும் சுட்டியை உங்கள் உலவியின் favorites-ல் சேர்த்துக்கொண்டு(right click and add to favourites), பெட்டகத்தில் சேர்க்கவேண்டிய வலைப்பக்கத்திலிருந்து இந்த favorites சுட்டியை சுட்டி எளிதில் பெட்டகத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே del.icio.us பயனாளராயிருப்பவர்களுக்கு...
டெலிஷியஸில் சேகரிக்கப்பட்டிருக்கும் சுட்டித் தொகுப்பை எளிதில் பெட்டகத்தின் உளேற்றமுடிகிறது. 'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் கீழே, 'Import bookmarks from del.icio.us' எனும் சுட்டியை சுட்டினால் இதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.
என் உலவியின் Favorits-ஐ சேர்க்கமுடியுமா?
முடியும். 'குறியத்தை சேர்க்க' என்மு பகுதியில் கீழே இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. கவனிக்க: இப்படி செய்யும்போது Private ஆகச் சேர்ப்பது நல்லது. நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் சுட்டிகளை பின்னர் பெட்டகத்தினுள் நுழைந்து Public-ஆக மாற்றிக் கொள்ளலாம்.
ஏற்கனவே நான் சேர்த்த சுட்டியை திருத்தவோ வேறு குறிச்சொற்களை சேர்க்கவோ வாய்ப்புண்டா?
நீங்கள் சேகரித்த சுட்டிகளை திருத்த அல்லது நீக்க வசதி உண்டு. ஒவ்வொரு சுட்டிக்கும் கீழே சுட்டிகள் தரப்பட்டுள்ளன.
அடுத்தவர் சேர்த்திருக்கும் சுட்டியை எனதாக்க முடியுமா?
ஆம். Copy எனும் சுட்டியை சுட்டி உங்களுக்குத் தேவையான குறிச் சொற்களோடு சேகரிக்கலாம்.
பிற பயனர்களை 'கவனிப்பது' எப்படி?
முகப்பிலுள்ள சுட்டித் தொகுப்பில் பயனாளர் பெயரை சுட்டி அவரது 'பொது' தொகுப்புக்களை பார்க்கலாம். அங்கே வலப்பக்கத்தில் 'கவனிப்பில் சேர்க்க' என்பதைச் சுட்டினால் அந்தப் பயனரின் 'பொது' சுட்டிகளும் 'கவனிப்பில் இருப்பவர்களுக்கு மட்டும்' என வகைப்படுத்தப்பட்ட சுட்டிகளையும் காண முடியும்.
முடிந்தவரை பெட்டகத்தை பயன்படுத்த தேவையானவற்றை சொல்லிவிட்டேன்.
இதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். கவனத்தில் கொள்ளவேண்டியவை சில.
பெட்டகம் தந்துள்ள தேன்கூட்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சில கருவிகளையும் மேம்பட்ட பயன்களையும் அவர்கள் தருவார்கள் என நம்புகிறேன். தேன்கூட்டின் புதிய வடிவம் பாராட்டும்படியுள்ளது.குறிச்சொற்களை சேர்க்கும்போது முடிந்தவரை ஏற்கனவே இருக்கும்
குறிச் சொற்களை பயன்படுத்துவது நல்லது.குறிச் சொற்கள் Space (ஒற்றை இடைவெளி) கொண்டு தனிப்படுத்தப்
படுகின்றன. 'சிறில் அலெக்ஸ்' என்பது சிறில் எனும் ஒரு குறிச் சொல்லாகவும் அலெக்ஸ் எனும் ஒரு குறிச்சொல்லாகவும் சேர்க்கப்படும். இவற்றை 'சிறில்அலெக்ஸ்' எனவோ அல்லது சிறில்_அலெக்ஸ் என்பது போலவோ சேர்ப்பதுதான் சரியாகும்.பொதுவானவை என சேகரிக்கப்படும் சுட்டிகளை கவனத்துடன் சேர்க்கவும்.
குறிச் சொற்களை சரியாக தேந்தெடுப்பது அவசியம்.
உருப்படியானவற்றை மட்டுமே பொதுவில் வைக்க வேண்டுகிறேன். பெட்டகத்தின் சேவையை சிறப்படையச் செய்வது பயனீட்டாளர்கள் கையில்தான் இருக்கிறது.
நல்ல சுட்டிகளை 'பொதுவில்' செகரிப்பதன்மூலம் இதை கிட்டத்தட்ட 'பூங்கா' போன்ற ஒரு இதழாகவே இதை பயன்படுத்த முடியும்.நண்பர்களை கவனிப்பில் வைப்பதன்மூலம் அவர்களின் சுட்டிகளைப் பார்க்க இயலும் (அவர் உண்மையிலேயே நண்பரா பகைவரா எனவும் கண்டுகொள்ளலாம் :)
வலைப்பதிவுகளுக்கேயான சேவையல்ல இது என்பதை நினைவில் கொள்க.
எந்தவித சுட்டியையும் இதில் சேகரிக்கலாம். ஆங்கிலத் தளங்களுக்கான சுட்டிகளை தமிழ் குறிச் சொற்களோடு சேர்த்துவைக்கலாம்.
என்ன, பெட்டகத்தை நிரப்பத் தயாரா?
தொடர்புள்ள சுட்டிகள்
Saturday, September 30, 2006
விடுதலை
ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். 'இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.' னு சொன்னான். 'நீ சொன்ன மாதிரி போட்டி நடத்துறதுல ஒரு சின்ன ஓட்டை இருக்குது அத யூஸ் பண்ணலாம். போட்டி விதிப்படி பாத்தா நாம செய்றது தப்பேயில்ல.' அவன் சொல்லச் சொல்ல எனக்கும் அது தப்பேயில்லன்னு தோணுச்சு.
சின்னவயசிலேர்ந்தே எதுலயாவது ஜெயிக்கணும்னு ரெம்ப ஆசை. நோஞ்சானாயிருந்தேன். ஸ்போர்ட்ஸ்லயெல்லாம் ஈடுபாடே கிடையாது. படிப்புல எப்பவுமே 3, 4 அல்லது ஐந்து ராங்குகளுக்குள்ளால வந்தேன். வீட்டுல திட்டு கிடைக்காட்டியும் பெரிய பாராட்டெல்லாம் கிடச்சதில்ல.
அம்மாதான் சும்மா சொல்லுவா நான் குழந்தையா இருக்கும்போது அழகிய குழந்தைன்ன்னு பரிசு வாங்கியிருக்கிறதா. அது என்ன சமாதானப் படுத்தத்தான் சொல்லுறான்னு எனக்கும் என் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் ஆமோதிப்போம்.
இந்த ஜேம்ஸ்கூட சாப்பாட்டு போட்டி வெற்றிக் கோப்பை வீட்டுல வச்சுருக்கான். ஸ்கூல்ல மூணுதடவை அவந்தான் சாம்பியன். ஒருதடவை மிளகாய கடிச்சு கண்ணீரோட அவன் பரிசு வாங்கினது நியாபகம் இருக்கு.
இப்ப ஒரு வழியா வெற்றி கெடச்சாலும் சந்தோசமே இல்ல. என்னதான் விதிகள் படி நடந்துகிட்டாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதானே. மத்தவங்களும் இதச் செஞ்சிருந்தா அது சமமான போட்டியா இருந்திருக்கும். ஒருவேள அப்டி செஞ்சிருப்பாங்கன்னு சமாதானப் படவும் முடியல.
"ஜேம்ஸ் மனச ஒண்ணு உறுத்திகிட்டே இருந்துச்சுன்னா என்ன செய்வ?"
"நண்பர்கள் அல்லது வீட்ல சொல்லுவேன்."
"தெரிஞ்சவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியலண்ணா?"
"எங்க சர்ச்சுல பாவசங்கீர்த்தனம்ணு ஒண்ணு இருக்கு. சினிமாலகூட கொல செய்றதுக்கு முன்னால ஹீரோ போயி ஃபாதர்ட்ட சொல்றமாதிரியெல்லாம் காண்பிச்சிருக்காங்க. நாம பாவசங்கீர்தனத்துல சொல்றத சாமியார் யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சட்டம் இருக்கு."
'கோவில் போகும் பழக்கமில்லையே. இல்லண்ணா சாமிகிட்ட சொல்லலாம்.' மனதில் சஞ்சலம் அதிகரித்து பாரமானது.
டெலிஃபோன் டைரக்டரியைத் திறந்து எண்ணை சுழற்றினேன்.
"ஹலோ. யார் வேணுங்க?"
"நான் அலுவலகத்துல நடந்த போட்டில குறுக்கு வழியில பரிசு வாங்கிட்டேன்."
"ஹலோ யாருங்க. என்னது?"
"இதச் சொல்லத்தான் ஃபோண் பண்னினேன்"
"ஹலோ யாருங்க இது டிம்ப்பர் டிப்போ. ராங் நம்பருங்க"
'ராங் நம்பர்னு தெரியுங்க.' மனதில் நினைத்தபடியே தொடர்பை துண்டித்தேன்.
மனம் கொஞ்சம் இலகுவானது.
Friday, September 01, 2006
லிஃப்ட்
'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.
முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.
"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.
எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.
"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'
"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.
வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.
'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா
'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி
'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா
கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.
வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.
அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.
அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.
அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.
"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.
"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.
'நல்லவந்தான்'.
"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."
"வாங்க."
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.
"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.
"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"
"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."
"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."
"தேவியா?"
"ஆமா."
உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.
'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.
புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.
பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.
"ரெம்ப நன்றிப்பா?"
"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.
வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'
பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.
சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.
Thursday, August 10, 2006
தேன்கூடு போட்டி டாப் 10 - சீரியசா
இதுவரை அவர் மொத்தம் 4க்கு அளித்துள்ள மதிப்பெண்கள் வரிசைப்படி.
ராசபார்வை... : என்ன உறவு ? - ------------------------'கொங்கு' ராசா-------சொந்தக்கதை---3.25
பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ்-----------------சிறுகதை---------3.25
உறவுகள் - ----------------------------------------------------ராசுக்குட்டி-----------புதுக்கவிதை--- -3.25
அஞ்சல் நெஞ்சுல - ----------------------------------அபுல் கலாம் ஆசாத்--ஒலிக்கவிதை----3
உறவும் பிரிவும் -------------------------------------------ராசுக்குட்டி -----------சிறுகதை--------3
சாயல் --------------------------------------------------------ஜெயந்தி சங்கர்------சிறுகதை---------3
எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா---------------சிறுகதை--------3
பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் --------------சிமுலேஷன்------சிறுகதை--------2.5
எண்ணம்: உறவுகளே! --------------------------- அபுல் கலாம் ஆசாத்------மரபுக்கவிதை---2.5
தேன்: உறவுகள் -------------------------------------------- சிறில் அலெக்ஸ்---சிறுகதை--------2.5
பொன்னியின் செல்லம்மா ...! ---------------------------- கோவி.கண்ணன்---சிறுகதை-----2.5
எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு... ----------அபுல் கலாம் ஆசாத்---புதுக்கவிதை--2
உறவுகள் ஒடிந்த பறவைகள் !!! ------------------------- --demigod ------------சிறுகதை----- 2
உறவுகளும் ஒற்றுமைகளும் -----------------------------சிவமுருகன்-----புதுக்கவிதை----2
அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - ------மானு ---yezhisai-----சொந்தக்கதை----1.5
நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் ---வள்ளி---yezhisai-----சொந்தக்கதை----1.5
என்ன உறவில் நான்... -----------------------------------மதுமிதா------------புதுக்கவிதை------1.5
சிந்திக்கலாமா?: பயணம் ---------------------------- எண்ணம் எனது------அறிபுனை----------1.5
உயிர் ------------இயக்குனர் - சுவாமிநாதன்------------ ராசுக்குட்டி-----விமர்சனம்---------1.5
உறவு..! ------------------------------------------- இரா.ஜெகன் மோகன்--------புதுக்கவிதை-----1.5
ஸ்மைல் பக்கம்: "உறவுகள்" - லிவிங் ஸ்மைல் வித்யா------------புதுக்கவிதை---------1.5
அப்பா.. --------------------------------தொட்டராய ஸ்வாமி-------------------புதுக்கவிதை------ 1.5
உறவில்லாத உறவு ---------------------------------- ஜெஸிலா------------புதுக்கவிதை--------1.5
சுகம் ------------------------------------------------------------- nirmal------------புதுக்கவிதை-------1.5
பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள் - மானு -----yezhisai----சிறுகதை-----------1
மழை: தாய் - உறவுகள் ----------------------------------- பிரதீப்------------புதுக்கவிதை--------1
உறவுகள் - ----------------------------------------SK------------------------வசன கவிதை------------1
------------அல்லது------------ மானங்கெட்ட உறவுகள்!!!! - luckylook-------சிறுகதை---------1
உறவுகள் -----------------------------------------------------------vaik------------சிறுகதை------------1
செம்புலப் பெயல் நீர் ----------------------- குமரன் எண்ணம்------------புதுக்கவிதை------1
இன்றும் --------------------------------------------------------------- கப்பி பய-------சிறுகதை----- 1
பேசலாம்: செக்ஸ் இல்லாத கதை ----------வா மணிகண்டன்------------சிறுகதை------1
பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! --------------- லக்கிலுக்------------சொந்தக்கதை-----1
சென்னைக் கச்சேரி: தீவுகள் ------------------------ தேவ்------------புதுக்கவிதை------------0.5
உறவுகள் ---------------------------------------------------- நிர்மல்------------சிறுகதை------------0.5
நிகழ்வுகள்: உறவு என்பதால் ------------ சிவமுருகன் நீலமேகம்------புதுக்கவிதை----0.5
தாய்மடி வாசம்-------------------------தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை---------0.5
தன்னலதாயின் உறவுகளில்.... ---தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை------------0
எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை------------கட்டுரை--------------0
கீழுள்ளவைக்கு மதிப்பெண்கள் தரவில்லை '?' போட்டுவிட்டார். என். சுரேஷ் உங்கள் பதிவில் சைட் பாரில் 'ஜோக்கர்' எனும் தலைப்புக்குக் கீழ் பாஸ்ட்டன் பாலாவின் பேயரைப் போடலாம் (நன்றி: விடாது கருப்பு). இதுதான் இப்போ ட்ரென்ட். அல்லது பாபா மதிப்பேண் வழங்கும்வரையில் தொடர்ந்து கவிதைகள் எழுதி பட்டியலை நிரப்பலாம்.
ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை
அவரகளும் நம் உறவினர்களே... என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை
Wednesday, August 09, 2006
தேன்கூடு போட்டி டாப் 10
1. உறவுகள் SK
2. உறவுகள் நிர்மல்
3. பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) கோவி.கண்ணன்4. நவீன விக்ரமாதித்தனும், வைரஸ் வேதாளமும்! luckylook
5. உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத்
6. உறவுகளின் வேர்! K. Selvaperumal
7. URAVUGAL N Suresh, Chennai
8. நிலைத்து இருக்கும் உறவுகள் yezhisai
9. உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக சிவமுருகன்
10 அவரகளும் நம் உறவினர்களே... N Suresh, Chennai
தங்கள் படைப்புக்கள் இடம் பெறவில்லையே என வருந்தும் தோழ/தோழிகளுக்கு வருத்தம் வேண்டாம். இது ஆய்வுப்படி வரிசைப்படுத்தப் பட்டதல்ல. முதல் பத்து சேர்க்கைகளைத் தந்துள்ளேன். அவ்ளோதான். :)
Friday, May 12, 2006
2060 தேர்தல்
அவனே என்னை அழைத்தான்,"வணக்கம் செந்தமிழ், நலமா?".
அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் 'இன்டர்ப்ரெட்டர்-VII'.
"நலம் லாங்டன், நீ எப்படி?".
"பெரிதாய் ஒன்றுமில்லை." சலித்துக்கொண்டான்.
"2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?"
"நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்."
"ஓ... ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?"
"ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா 'ஜஸ்டிஸ்' குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்."
"மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?".
"சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்."
"ஆமாம்."
"எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?"
"அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.", சிரித்தான்,"எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்."
"அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்."
இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.
"லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு."
"போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?"
காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல 'செந்தமிழாய்' ஒலித்தது.
"இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.
ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.
அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்."
"செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்."
"ஓ...தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்."
"நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை."
"லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே."
"ம்..."
"தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்."
"என்ன...ஏய் என்ன சொல்ற."
"கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்"
லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.
"பீப்...பீப்"
சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.
"வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்"
கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.
சிறில் அலெக்ஸ்
சுசிலாவைக் கேளுங்கள்...