.

Thursday, February 16, 2006

நீங்கள் கேட்டவை

எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் சில கிறித்துவ பக்திப் பாடல்களை விரும்பிக்கேட்டிருந்தனர். சில பாடல்களுக்கான சுட்டிகள் கீழே.

புனித அந்தோனியார் படப் பாடல்கள்

அன்னை வேளாங்கண்ணி படப் பாடல்கள்

திரையில் வந்த பக்தி பாடல்கள்

குழந்தை யேசு படப் பாடல்கள்

தேடுங்கள் தரப்படும்

நடக்கச்சொல்லி தாரும்

உம் திரு யாழில் என் இறைவா (பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல்)

உன் புகழை பாடுவது (பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல்)


http://www.manavai.com/n_songs_fp.php - பெரிய கிறித்துவப் பாடல் தொகுப்பு சில பாடல்கள் Real Player வகை சில Media Player வகை.

Tuesday, February 14, 2006

குளிர்கால ஒலிம்பிக்ஸ் - கண்ணோட்டம்

2006-குளிர்கால ஒலிம்பிக்ஸ்(Winter Olympics) இத்தாலியில் டொரினோ நகரில் நடைபெற்று வருகின்றன. உறைந்த பனியில் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக்ஸ். இதில் சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உட்படி சில நாடுகளே பங்கேற்கின்றன.

குளிர்கால ஒலிம்பிக்ஸில் விளையாடப்படும் சில விளையாட்டுக்கள்பற்றிய விவரம் கீழே.

பையாத்லான்(Biathlon)

பனியில் ஸ்கீ(Ski - கால்களில் பட்டைகளை மாட்டிக்கொண்டு சறுக்குவது ) செய்தபடியே குறிப்பிட்ட இலக்குகளை(Target) துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது. வடக்கு ஐரோப்பிய போர் முறைகளிலிருந்து உருவான விளையாட்டு. பெண்கள் 7.5 கிலோ மீட்டரும் ஆன்கள் 10 கி. மீட்டரும் கடக்கவேண்டும். ஐந்து இலக்குகளையும் ஐந்து தோட்டாக்களில் சுட வேண்டும்.



பாப்ஸ்லெய்(Bobsleigh)
படகு(Sleigh) போன்ற ஒன்றை பனிப்பாதையில் தள்ளிவிட்டு அதன் மேல் ஏறிக்கொண்டு வேகமாய் சறுக்கிச்செல்லும் விளையாட்டு. குழுவாகவும் தனியாகவும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தனி ஆள் விளையாடும் விளையாட்டு ஸ்கெலெடன்(Skeleton) என அழைக்கப்படுகிறது. இவரின் படகு எலும்புக்கூடு போல வெறும் கம்பிகளால் ஆனது.




கர்லிங்(Curling)
16ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாண்டில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்
டு. ஒரு வட்ட உருளைக்கல்லை, ஐஸ் தளத்தின்மேல் வரையப்பட்டிருக்கும் வட்டங்களில் உள்வட்டத்திற்குப் பக்கத்தில் தள்ளிவிடுவது. ஐஸ் தளத்தில் இந்தக் கல்லை சரியான இலக்கு நோக்கி தள்ளி விடுவது (ஒரே உந்தில்) நேர்த்தியாகச் செய்யவேண்டிய ஒன்று. பார்ப்பதற்கு எளிமையாகவும் வினோதமாகவும் இருக்கும் இந்த விளையாட்டு.



ஐஸ் ஹாக்கி(Ice Hockey)
ஐஸ் தளத்தில் விளையாடப்படும் ஹாக்கி விளையாட்டு. வீரர்கள் காலில்
சறுக்கும் கத்திகளை அணிந்துகொண்டு விளையாடுவர். பந்துக்குப் பதில் பனியில் வழுக்கிச்செல்லும் தட்டையான 'பக்' (Puck) கொண்டு விளையாடப்படுகிறது. கனடாவின் தேசிய விளையாட்டு. இதற்கு பயன்படுத்தப்படும் குச்சி(Stick) சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. 1924ல் குளிர்கால ஒலிம்பிக்ஸில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஹாக்கி என்பதற்கு ஃப்ரெஞ் மொழியில் 'குச்சி' என்று பொருள்.



லூஜ்(Luge)

ஒரு பலகையின்மேல் மல்லாக்க படுத்துக்கொண்டு பனியில் அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய அரைக் குழல் பாதையில் அதிவேகமாக சறுக்கிச் செல்வது. மணித்துளிகளே நிலைக்கும் இந்த்தப் பயணத்தை காமிராக்கள் பல கோணங்களில் படம்பிடிப்பது பார்க்க இனிமை.




ஸ்கெட்டிங்(Skating)
கால்களில் ஐஸில் சறுக்கிச்செல்லும் கத்திகளை அணிந்து கொ
ண்டு நடனமிடுவது ஒருவகை விரைந்தோடுவது இன்னொருவகை. இசைக்கேற்ப நடனமிடும் ஸ்கேட்டிங் பார்க்க அற்புதமான அனுபவம். உள்விளையாட்டரங்கங்களில் இந்தப்போட்டிகள் நடைபெறுமின்றன.







ஸ்கீயிங்(Skiing)
மலைச் சரிவில் வீழ்ந்துகிடக்கும் பனி மீது நீள பட்டைகளை
காலில் கட்டிக்கொண்டு இரண்டு குச்சிகளைக் கொண்டு உந்திச் செல்லும் விளையாட்டு. அல்பைன்(Alpine) , க்ராஸ் கண்ட்ரி(Cross Country), ஃப்ரீ ஸ்டைல்(Free Style), நார்டிக் கம்பைண்ட்(Nordic Combined), ஸ்கி ஜம்பிங்(Ski Jumping), ஸ்னோபோர்ட்(Snowboard) என ஸ்கீயிங்கில் பல வகைகளுள்ளன.

காதலர் தினம்

முத்தம்
==================================

காதல் அங்கீகார முத்திரை

வெட்கம் பலி கொடுக்கப்படும்
ஒரு வேள்வி

'இச்' எனும்
ஒரு மந்திரம்

ஹார்மோன் கச்சேரியின்
முதல் பாடல்

இதழ்களின் காதல்
வெளியீடு

காதலின் இதழ்
வெளியீடு

அந்த அம்புக் காயத்திற்கு
கைமருந்து

வார்த்தைகளுக்கு
முற்றுப்புள்ளி

தோல்வியே இல்லாத
விளையாட்டு

பல கவிதைகளுக்கு
ஆதாரம்

என் கன்னத்தில் நீ செய்யும்
மின் கெஞ்சல்

நீண்டதொரு பயணத்தின்
முதல் அடி

என் அத்தனை கேள்விகளுக்கும்
ஒரே பதில்

Friday, February 10, 2006

எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்



ஒரு புகைவண்டி பயணத்தில் பார்வையில்லாத ஒருவர் பாடியபடியே நன்கொடை கேட்டுக்கொண்டு வந்தார்.

"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்"

டி. எம். எஸ் குரலில் அருமையான ஒரு பாடல். பாடலின் இறுதியில் "கந்தனே உனை மறவேன்.. கந்தனே உனை மறவேன்.." என தூக்கிப்பாடுவார். மிக இனிமையான அர்த்தம் மிகுந்த பாடல். கந்தனே என்பதை நீக்கி கடவுளே எனப் பாடினால் எல்லா கடவுளர்களுக்கும் பொருந்திவிடும் இந்த வரிகள்.

இதே தொகுப்பில் "அழகென்ற சொல்லுக்கு முருகா", "ஓராறு முகமும்", "சொல்லாத நாளில்லை", "உள்ளம் உருகுதையா உன்னைக் காண்கையிலே" அற்புதமான பாடல்கள். மெய்மறந்து ரசித்திருக்கிறேன்.

யாராவது இந்தப் பாடல்களை வார்த்தைகளோடு பதிவிட்டால் மீண்டும் கேட்கலாம்.

இளைய ராஜா பாடிய 'ஜனனி ஜனனி', தாய் மூகம்பிகை படத்திலிருந்து. இந்தப் பாடலை கேட்கும்போதெல்லம் கண்ணோரம் ஈரம் கசியும், அத்தனை பக்தி மயமான ஒரு பாடல். அருமையான வரிகள். யார் எழுதிய பாடலென்று தெரியவில்லை. குழுவினர் பாடும்போது தீபன் சக்ரவர்த்தியை தனியாகக் கண்டுகொள்ளலாம்.

எம். எஸ். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் பாடல்களென்று நினைக்கிறேன், ஒன்பது கிருஷ்ணன் பாடல்கள். அத்தனையும் ரத்தினங்கள்.

டி. எம் எஸ் பாடிய, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே', எஸ். பி. பி பாடிய 'ஆயர்பாடி மாளிகையில்', ஜானகியின் 'கோகுலத்து பசுக்களெல்லாம்' , எல். ஆர். ஈஸ்வரி பாடிய, 'கோபியரே கோபியரே', எம். எஸ். வீ யே பாடிய ஒரு அருமையான பாடல் 'அமர ஜீவிதம் சுவாமி...' என நினைக்கிறேன், எல்ல பாடல்களும் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் நகருவேன்.

எம். எஸ். வி இதேபோல வேளங்கண்ணி மாதா பாடல்களும் இசையமைத்துள்ளார் அவையும் இனிமையான பாடல்கள்.

எல். ஆர். ஈஸ்வரியின் 'தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி', அவர் குரலுக்கேற்ற இசையமைப்பு. 'கற்பூர நாயகியே கனகவல்லி', 'செல்லாத்தா எங்க மாரியாத்தா, 'வேற்காட்டில் வீற்றிருக்கும்', இவர் குரலில் மற்ற இனிமையான பாடல்கள்.

சீர்காழி பாடிய 'வினாயகனே வினை தீர்ப்பவனே'. சின்ன வயதில் இவர் கச்சேரியில் பாட நேரடியாக கேட்டிருக்கிறேன்.

இன்னும் 'மருத மலை மாமணியே முருகையா', 'திருச்சந்தூரில் கடலோரத்தில்'' எல்லாம் மறக்க முடியாத பாடல்கள்.

பாடல்களை பதிக்கும் வலைப்பதிவாளர்கள் யாரவது இவற்றை தொகுக்கலாம். பரிசாக 10 பின்னூட்டங்கள். எவ்வளவு பாடல்கள் இல்லையோ அதற்கேற்றாற்போல் பின்னூட்டங்கள் குறைத்துக்கொளளப்படும்

குழந்தே



ஆயிரம் சேட்டைகள்
அடிக்கடி அழுகை

சாப்பாடு வேண்டாம்
கார்ட்டூன்தான் வேண்டும்

எப்போதும் கேட்க
'கொக்கு பற பற'

லாப் டாப்பின் மேலேறி
'ர்ர்ரண்டக்க ரண்டக்க ரண்டக்க'

"செய்யாதே" என்பதை மட்டுமே செய்யும் குழந்தே
நீ சிரிக்கும்போதும்
தூங்கும்போதும்
அத்தனை அழகு.

உள்ளாடைகளும் கருத்துச் சுதந்திரமும்


Thursday, February 09, 2006

உங்கள் தீர்ப்பு என்ன

இரவில் குடித்துவிட்டு தன் உயிர் நண்பனோடு காரில் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர். கவனம் சிதறி வண்டி தாறுமாறாக ஓடியதில் நண்பர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு, கார் அவர் மேல் ஏறியதில் இறந்து போகிறார். ஓட்டியவருக்கு 12 ஆண்டு கடுங்காவல் அளிக்கப்படுகிறது.

இவர் மனைவிக்கு வயது 39 ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது. இன்னுமொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.

இவர் கணவன் விடுதலையாகும்வரை காத்திருக்க முடியாததால் செயற்கைமுறையில் கணவனின் விந்தைக் கொண்டு கருத்தரிக்க அனுமதி தேடுகிறார்.

அமெரிக்காவில் கான்சஸ் மாநிலத்தில் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. "என் கணவந்தானே குற்றவாளி. என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்" என்பது இவரின் வாதம்.

நீங்கோ இன்னா நெனைக்கிறீங்கோ?

Wednesday, February 08, 2006

ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 'எந்தப்பாடல் வரி?' என்பவர்களுக்கு. 'தில்' படத்துல வருமே... வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.

சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் 'வலியவனை எளியவனால் வெல்லமுடியும்' என்கிற ஒரே கருதான்.

ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony).

ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக நிறுவிவிட்டிருந்த காலகட்டத்தில்(1940), சாப்ளின் 'The Great Dictator' (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார்.

சாப்ளினின் மற்ற குறும்படங்களைப்போலல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது, கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்தப்படம்.

இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.

சிகை அலங்கரிப்பவர் வாழும் (யூத) சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை.

சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.

ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலமாரியைத்திறக்கிறார் அதில் பல விதங்களில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தைபோல சிரித்துக்கொண்டே அறையிலுள்ள திரைச்சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவதுபோல நடனமாடுகிறார். இதில் சாப்ளினின் நடிப்பு அபாரம்.

படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர் ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப்பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார், பின்பு தன் காதலியிடம் சேருகிறார். சுபம்.

ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தைத்தான் 'ஹிட்லர் காலத்தில்..சார்லி சாப்ளின் தில்' என்கிறார் நம் கவிஞர். (ஏதோ சங்க இலக்கியத்துக்கு G. ராகவன் தரும் விளக்கம் போலுள்ளதா?).

அந்தப் படத்தை Flashல் போட்டிருக்காங்க. கொஞசம் இந்தக்காலத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. போய் பாருங்கள்.

படம் பார்த்து கதை சொல் - கார்ட்டூன் விவகாரம்





Tuesday, February 07, 2006

ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்

அமெரிக்கா உலகை ஜனநாயகப் படுத்தும் அரிய(?) பணியை மேற்கொண்டுள்ளது. எல்லா நாடுகளும் ஜனநாயக நாடாகிவிட்டால் இவர்களை எதிர்க்க ஆளிருக்காது என எண்ணிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இன்றைய ஜனநாயகங்களில் ஒருசில நாடுகளைத்தவிர மற்றவை அமெரிக்காவின் கைப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதை ஜனநாயகத்தை உருவாக்கும் போராகமாற்றியமைத்துள்ளது அமெரிக்கா.


ஜனநாயகம் மட்டுமே தனிமனித, சமுக விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது இவர்களின் பிரச்சாரம். சோரம்போன, ஜனநாயகத்தின்பேரில் மக்களை வெறும் ஓட்டுப் போடும் பொருட்களாக உபயோகித்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஜால்ராபோடும் சில இராணுவ ஆட்சிகள் ஜனநாயகமாக இவர்கள் கண்களுக்குத் தெரிகிறது.

ஜனநாயகம் என்பது வெறும் ஓட்டுப்போடும் உரிமைபெற்ற மக்கள் கூட்டம் என்பதுதான் அமெரிக்காவின் நிலையாகப்படுகிறது. ஈராக்கில் ஒவ்வொரு ஓட்டெடுப்பின் போதும் அமெரிக்க ஊடகங்களில் வெற்றி ஆரவாரம் கேட்கமுடிகிறது, ஆனாலும் ஈராக்கில் யுத்தம் ஓய்ந்தபாடில்லை.

அமெரிக்காவில் சில காலங்களுக்கு முன்னிருந்த தனிமனித சுதந்திரங்கள் இபோது பறிக்கப்பட்டுள்ளன. மூன்றம் தர முறைகளை தன் மக்கள் மீதே பயன் படுத்துகிறது அமெரிக்கா. மக்களின் தொலைத்தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. தன் சொந்த மக்களை பயம் காட்டி, அவர்களின் உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக உயர்த்திக்காட்டுவது வேடிக்கை.

உலகப் போலீசாகத் தன்னை அறிமுகப்படுத்தும் அமெரிக்காவின் தகுதிகள் என்னென்ன? மனித வரலாற்றில் இந்த நாட்டின் பங்குதான் என்ன? எல்லா இயற்கை வளங்களும் நிரந்த ஒரு பூமிப் பரப்பை செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அவர்களின் மரபுகளையும் ஏன் வம்சத்தையுமே அழித்து ஆட்கொண்டனர். ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்று கறுப்பின மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாடி அடிமையாக்கிக் கொண்டனர். தனி நாடாகவேண்டி தம் சொந்த சகோதரர்களான ஆங்கிலேயருடன் போரிட்டனர், போரில் வெற்றிபெற சில கீழ்த்தரமான யுக்திகளை கையாண்டனர். ஜப்பானென்ற ஒரு குட்டி நாட்டை எதிர்க்கத் துணிவில்லாமல் அணுஆயுதம் கொண்டு தரைமட்டமாக்கினர். தாங்கள் விரும்பாத அரசங்கங்களை அழிக்க இவர்கள் வங்கிக்கொடுத்த துப்பாக்கிகளும் சொல்லிக்கொடுத்த யுக்திகளும்தான் இன்று இவர்களைக் குறிபார்க்கின்றன.

அமெரிக்கா தன்னை சிறந்த வழிகாட்டியாக நடத்திக்கொண்ட நேரங்கள் இருந்தது ஆனால் அவற்றிலெல்லாம் செற்றை வாரி இறைக்கின்ற காலம் இது. மக்களின் ஓட்டை பெற்றுவிட்ட ஒரு அடக்குமுறை அரசாங்கமே இங்கு செயல்படுகிறது.

கட்சிக்கு காசளிக்கும் கம்பெனிகள் பெறும் சலுகைகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. இயற்கையின் சீற்றங்களின்போது மக்களை அரசு புறக்கணிக்கிறது. எங்கோ உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் மறைந்துபோகும் ஒர் ஆப்ரிக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களை இந்த அரசு சாதாரணமாகச் செய்துவருகிறது என்பதே உண்மை.

உலகெல்லாம் ஜனநாயகத்தை உருவாக்க இவர்கள் செய்த அடக்குமுறை பிரச்சாரத்தால் தீவிரவாத அமைப்பான ஹமாஸ் பாலஸ்தீனத்தில் மக்களின் அங்கீகாரத்தோடு ஆட்சிக்கு வந்துளளது. இவர்கள் தந்த மருந்து இவர்களுக்கே விஷமாகிப் போனது. இப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமெரிக்காவின் சொல்படி நடக்கவேண்டுமென ஆசைப்படிகிறது. உங்கள் ஓட்டு செல்லாது என பாலஸ்தீனியர்களுக்குச் சொல்லாதவரை நல்லது என நினைக்கிறேன்.

மக்களால் ஓட்டுப் போட முடிந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நினைக்கிரார் புஷ். இந்தியர்களான நமக்குத்தெரியும் ஓட்டுப் போடுவதற்கும் உண்மையில் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்புள்ளதென்பது.

'சுதந்திரம்' என்கிற பேரில் இவர்கள் துவங்கிய போர் இவர்களுக்கே எமனாக முடிந்திருக்கிறது. சர்வ வல்லமையும், இன்றைய தொழில் நுட்பங்களும் கொண்டியங்கும் ஒரு ராணுவத்தை நேற்று துப்பாக்கி ஏந்திப் பழகிய சில தீவிரவாதிகள் அடக்கிப்போடுகிறார்கள் என்பது நம்பத்தகுந்ததாயில்லை. 'அமெரிக்காவின் வலிமை இவ்வளவுதானா?' எனும் கேலிதான் எழுகிறது. போரை நீட்டுவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன் பிரசன்னத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் எடுத்திருக்கும் ராணுவ முயற்சி.

மாபெரும் பொருளிழப்பையும் உயிரிழப்பையும் ஏர்படுத்தியிருக்கிற ஈராக் போர் தவறான தகவல்களின் பேரில் துவங்கப்பட்டது என்பதை அமெரிக்க அரசே மிகச் சாதாரணமாக ஒத்துக்கொள்கிறதான் மாபெரும் விந்தை. ஒர் சில ஆண்டுகளுக்கு ஒருமுரை போர் செய்தால்தான் அமெரிக்க பொருளாதாரம் நிலைப்படும் எனும் நம்பிக்கையும் பலரிடமுள்ளது.

இந்தப் போரை எதிர்க்கும் அமெரிக்கர்களே அதிகம். இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மக்களிடம் 30% போலவே அங்கீகாரம் உள்ளதாக பல தகவல்கள் சொல்கின்றன. ஆட்சிக்கு வரும் முன் அண்டை நாடான கனடா வரையிலும்கூடப் போயிராத ஒருவர்தான் தன்னை பன்னாட்டுக் காவலராக உயர்த்திக்காட்டுகிற புஷ்.

ஜனநாயகம் என்ற பேரில் இந்தியாவைப்பிரித்த வடு என்றும் ஆறாத புண்ணாய் மாறியுள்ளது, இதே நிலைதான் இன்று ஈராக்கிலும் காணப்படுகிறது. கையில் நீல மை போடும் ஒரு சம்பவத்திற்காக ஈரக் மக்கள் தங்கள் சொந்தச் சகோதரர்களோடு சண்டை போட தூண்டப்பட்டுள்ளனர். யுத்தகளத்தில் தொலைந்துபோன எறும்புகள்போல இவர்கள் நசுக்கப்படுகிரார்களென்பதே உண்மை.

(டைமில் வந்திருந்த ஒரு தலையங்கத்தின் பாதிப்பில் எழுதியுள்ளேன்)

நான் இந்தப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டுப் போய் பார்த்தால் Boston Bala ஒரு பதிவை போட்டுவைத்துள்ளார்(சுட்டி கீழே). விரைவில் இருவரும் ஊர் வந்து சேரும் நிலை வந்தாலும் வரலாம் :)
http://etamil.blogspot.com/2006/02/blog-post_07.html

விடுதலை

கீதாஞ்சலி - தாகூரின் எழுத்துக்களில் உன்னதமானது. இறைவனுக்கும் இவருக்குமான உரையாடல்தான் கீதாஞ்சலி. கீதாஞ்சலியின் பாடல்கள் தத்துவக் களஞ்சியங்கள்.

கீதாஞ்சலியில் எனக்குப் பிடித்த ஒரு பாடலை தமிழாக்கியிருக்கிறேன். தாகூர் எந்தவிதமான விடுதலையை விரும்பினார் என்பதற்கு இஃது (Q தான் ஆயுத எழுத்தா?- டைப் டெஸ்டிங்) எடுத்துக்காட்டு.

"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ, தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ,
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*,
எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு
வழிதவறவில்லையோ,
எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ...

அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்"

(*இலவசமாயுள்ளதோ எனவும் பொருள் கொள்ளலாம்)
(**இறைவா - என் தந்தையே)

ஆங்கிலத்தில் கிழே...

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason
has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake

Monday, February 06, 2006

கிருஷ்ணரின் காதல் கவிதை

அமர்நாத் கோவிந்தராஜனின் இந்தப் பதிவில் கீழேயுள்ள ஆங்கிலக் கவிதை பதித்துள்ளார்.. அதை மொழிபெயர்த்துள்ளேன்.

For heaven's sake, listen, listen, O my darling:
Do not dart your cruel, angry glances at me,
For I swear by the lovely pitchers of your breasts,
And by your golden, glittering, snake-like necklace:
If ever on earth I dare touch anyone except you,
Let your necklace turn into a real snake, and bite me;
And if ever my promise and words prove false,
Chastise me, O darling, in the way you want to.
But, now, don't hesitate to take me in your arms,
Bind, bind my thirsty body with yours; bruise me
With your thighs, and bite, bite me with your teeth.
Let your fingernails dig deep, deep into my skin!
Strangle me, for heaven's sake, with your breasts,
And lock me in the prison of your body forever!

சுவர்கத்தின் பொருட்டு செவிகொடு, செவிகொடு என் அன்பே:
உன் கோபப் பார்வைக் கணைகளை என்மேல் தொடுக்காதே,
நான் உன் அழகிய கொங்கைகள்மேலும்
ஜொலிக்கும் உன் தங்க அரவம் போன்ற உன் கழுத்தணி மேலும் சத்தியமிடுகிறேன்,
உலகில் உன்னைத்தவிர வேறெவளையும் நான் தொடத்துணிவேனாகில்
உன் கழுத்தணி விஷப்பாம்பாகி என்னைத் தீண்டுவதாக.
இந்த சத்தியமும் என் வார்த்தைகளும் பொய்யாகிப் போனால்
அன்பே, உனக்கு வேண்டும் வழிகளில் என்னைத் தண்டிப்பாயாக!

ஆனால் இப்போது, உன் கரங்களில் என்னைத் தாங்கத் தயங்காதே,
தாகம்கொண்ட என் உடலை உன் உடல்கொண்டு கட்டிப்போடு
உன் தொடைகளால் என்னைக் காயப்படுத்து
உன் பற்கலால் என்னைக் கடி
என் தோலில் உன் விரல்நஹங்களை ஆழப்பதி,
உன் மார்பில் என்னை நெரித்துப்போடு, சுவர்கத்தின் பொருட்டு.
உன் உடலென்னும் சிறைக்குள் நிரந்தரமாய் என்னை அடைத்துப்போடு.

இதுபோன்ற கவிதைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் 'சாலமனின் பாடல்' (Song of Solomon)
என்ற புத்தகத்தில் காணக்கிடைக்கின்றன.

Friday, February 03, 2006

வெட்டுடா...தூக்குடா



ஏதோ நம்மூரு ஜாதிச்சண்டை பற்றிய பதிவுன்னு நினச்சீங்கன்னா தப்பு. கோலிவுட்ல கதைக்குப்பஞ்சமாகி ஹாலிவுட்லேர்ந்து சுட்ட சிலப் படங்களப் பற்றிய பதிவு. கதை எழுதிப் பேர்வாங்கும் இயக்குநர்களுமுண்டு, காப்பியடித்தே பேர்வாங்கும் இயக்குநர்களுமுண்டு...இதில் யார் யார் என்ன கட்சி என நீங்களே முடிவு செய்யுங்கள்.

காப்பி அடிப்பதில் பலவிதம். அப்படியே, பிறமொழிப் படத்தை தமிழிலில் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டுச் சொல்வது, சில காட்சிகளை மட்டும் உபயோகிப்பது , படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றும் புதிதாகத் திரைக்கதை அமைப்பது, கதையின் வகையையே மாற்றி காமெடிப்படத்தை சீரியஸாகவும் ஆக்சன் படத்தை காமெடியாகவும் கொடுப்பது, இன்னும் எத்தனையோ வகைகள்.

கமல்ஹாசன் திரைப்படங்கள் பல ஆங்கிலப் படத்தின் வகையை(Genre) மாற்றி எடுக்கப்பட்டுள்ளன.

Planes Trains & Automibiles - ஒரு காமெடிப்படம். நியு யார்க்கிலிருந்து சிக்காகோ செல்லக் கிளம்பும் இரு பயணிகள். ஒருவர் படித்தவர், அலுவலகத்தில் வேலைபார்ப்பவர், நடுத்தட்டு மதிப்பீடுகளில் ஊறிப்போனவர். இன்னொருவர் சரியான வாயாடி, எதையுமே விளையாட்டாகப் பார்ப்பவர், எல்லோரும் அமைதியாக இருக்கும் ப்ளேனில்கூட சத்தம்போட்டுப் பேசக்கூடியவர். இந்த இரு எதிரெதிர் பாத்திரங்களும் எப்படி பல கஷ்டங்களுக்கு நடுவே பிரிந்தும், சேர்ந்தும் ஊர்போய்ச் சேர்கிறார்கள் என்பதே இதன் கதை. 'அன்பே சிவத்தின்' கரு இதுதான். ஒரு காமெடி படத்தை சீரியஸாகப் பண்ணும்போது கிட்டத்தட்ட புதுக் கதையாகவே மாறிவிடுகிறது.

Mrs. Doubtfire - இது பலருக்கும் தெரிந்திருக்கும். 'அவ்வை ஷண்முகியின்' கதை இதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்தில் பிரிந்துபோன தன் குடும்பத்தை ஒன்றுசேர்க்க கணவனே பணிப்பெண்ணாக மனைவி வீட்டுக்கு வருவது. ச்ஹாலிவுட்டில் கொஞம் சீரியஸ் படம். அவ்வை ஷண்முகிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதபடி இருக்கும். அப்படி கதைக்கு காமெடி கலந்த புது ரத்தம் ஊட்டியிருப்பார்கள் தமிழில். இதிலேயும் படத்தின் வகை மாற்றப்பட்டிருக்கிறது. பல காட்சிகளை Mrs. Doubtfireலிருந்து அப்படியே தமிழாக்கம் செய்துள்ளனர்.

An innocent Man - இந்தப் படத்தில் ஒரு அப்பாவியை குற்றவாளியாக ஒப்பனை செய்து ஜெயிலில் போட்டுவிடுகிறார்கள், இவர் ஜெயிலில் கஷ்டப்படுவதும் பின் வெளிவந்து பழிவாங்குவதும்தான் கதை. 'மகாநதியில்' சில காட்சிகள் இந்தப் படக்காட்சிகளோடு ஒத்துப்போகும். இரண்டு படங்களின் கரு ஒத்துப்போகும். ஆங்கிலத்தில் க்ரைம்/ஆக்சன் படம் தமிழில் சீரியஸ் டிராமா.

What about Bob - பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டர, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கவந்த்த பைத்தியக்காரர், நிஜ பைத்தியமாகவே ஆக்கிவிடும் கதை. புரியலியா? நம்ம 'தெனாலி' கதையேதான். இரண்டு படங்களிலும் ஒத்த கட்ட்சிகளும் நிறைய.

Amoros Peros - மூன்று மனிதர்களின் வாழ்க்கை ஒரு விபத்திலிருந்து மாறுகிறது. மெக்சிக்கோவில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் படம். மணிரத்தினத்தின் ஆய்த எழுத்துக்கு மூலம். காதல் ஒரு பொட்ட நாய் (Life is a bitch) என்பது Amoros Perosக்கு அர்த்தம். இந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மூவரின் நாய்களுக்கும் கதையில் முக்கியத்துவமிருக்கிறது.

God Father - எனக்கு மிகப்பிடித்த ஆங்கிலப்படம்(ங்கள் I & II). 'நாயகனுக்கு' இன்ஸ்பிரேஷன்.

Memento - 'கஜினி'. அதே கதை... அதே காட்சியமைப்பு.
(ரா. சு வின் பதிவைப் பார்க்கவும். சுட்டியை கண்டுபிடிக்கமுடியவில்லை).

Sliding Doors - '12B' பார்த்து இப்படி ஒரு திரைக்கதையா என வியந்தவர்களில் நானும் ஒருவன். பின்பு Sliding Doorsஐ உல்டாகூடப் பண்ணாமல் தந்திருப்பது வேதனையளித்தது.

Serendipity - 'உனக்கு 18 எனக்கு 20' மற்றும் 'ஜே. ஜே' படங்களின் கதை இதிலிருந்து எடுக்கப்பட்டுல்லது. ஜே. ஜேயில் பல காட்சிகளும் ஒத்துப்போகின்றன 18/20 நான் பார்த்தில்லை.


Bourne Identity - சுய நினைவை இழந்த ஒரு ஒற்றனின் கதை. அவர் யார் என்பதை எப்படி அறிந்து கொள்கிறார் என்பது படம். தமிழில் 'வெற்றி விழா'. 1988ல் டி.வி படமாகவும் அதற்குமுன் நாவலாகவும் வந்தது. 2002வில் பெரிய திரக்குப் படமாக்கப்பட்டது.

Dial M for Murder - 'சாவி' என்கிற திர்ல்லர் ஞாபகமிருக்கிறதா? சத்யராஜ் முதன்முதலில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த படம். Dial M for Murder ஒரு ஹிச்காக்(Hitchcock) படம்.

சங்கரின் பாய்சில் வரும் பல காட்சிகள் அப்படியே ஒரு ஆங்கிலப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெயர் ஞாபகமில்லை.

பழைய படங்கள் பலவும் பழைய கறுப்பு வெள்ளை ஆங்கிலப் படங்களிலிருந்து சுடப்பட்டுள்ளன. Prince and Pauper நாடோடி மன்னனானது தெரிந்திருக்கும். The Parent Trap (1961) தமிழில் 'குழந்தையும் தெய்வமும்'.

இப்படி வெட்டி, தூக்கி படம் பண்ணுவது தப்பென்று சொல்ல இயலவில்லை. சில நேரங்களில் ஒரு பழைய கதை புதிய பரிமாணத்தில் சொல்லப்படுவது சுவாரஸ்யம்தான். ஆனால் இவர்கள் பலர் ஏதோ மூளைய பிளிஞ்சு கத செய்த மாதிரி சொல்லிக்கிறாங்க.

ஏன் காப்பி அடிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ? சட்ட சிக்கல்களால்கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத்தெரிந்த சில காப்பி படங்களை சொன்னால் தொகுக்கலாம். பின்னூட்டமிடலாம், இல்லை cvalex@யாஹூ.காமிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Thursday, February 02, 2006

"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."

சன் டி.வியின் சிறப்புப்பார்வையில் 'கணிணியில் விளையாடுவது குழந்தை, சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு' போன்றதொரு தொகுப்பைப் பார்த்தேன்.

ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.

ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார்.

தொகுப்பாளர், 'இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்' என ஏதோ 'அப்படியே சாப்பிடலாம்' தொனியில் பேசினார்.

மாறனின் மலிவு விலை கணிணி திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கணிணிவிளையாட்டுக்கள் மூளை/அறிவு வளர்ச்சிக்கு சிறந்ததா? பெரிய கேள்வி.

இந்த சுட்டியில் இது பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை ஆங்கிலத்தில் பார்க்கலாம். இதற்குப் பதிலடியும் அதிலேயே இடுக்கிறது

என்ன சொல்கிறது ஆராய்ச்சி - அதீத கணிணி விளையாட்டுப் பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று.

எனக்குத்தெரிந்த சில தகவல்கள் கீழே,

கணிணி விளையாட்டுப் பழக்கமுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை, இரவு தூங்க நேரம் எடுத்துக்கொள்கிரார்கள், இவை உடல் நலனை பாதிக்கிரது.

பெற்றோருக்கும் குழந்தைகளூக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.

பொதுநல எண்ணங்கள் போய் தான் தனது என்ற மனநிலை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு.

உலகைப்பற்றிய அறிவை வெறும் ஒளிப்புள்ளிகளை(Pixel?) பார்த்தே தெரிந்துகொல்கிறார்கள். சிங்கத்தை பார்த்து லயன் கிங் என்கிறான், கொரில்லாவை கிங் காங் என்கிறார்கள். ஒரு மாய உலகத்தையே மென் விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன.

குறைந்த பட்ச நண்பர்களையே கொண்டுள்ளனர்.

வெளியே, ஊருக்கோ, சுர்றிப்பார்க்கவோ போக மறுக்கிறார்கள். இதை சில பெற்றோர்கள் நல்லதுதான், நாம தனியா என்ஜாய் பண்னலாம் என நினைக்கிரார்கள். என் ஜாய் மட்டுமே முக்கியம் ஒன் ஜாய்க்கு கம்புயூட்டர் இருக்குதே என்பது தான் இவர்களின் போக்கு.

கம்பூட்டர் கேம்ஸ் - நம் வாழ்க்கைகளை ஊடுறுவப்போவது உறுதிதான். ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். எல்லா விளையாட்டுக்களும் எல்லாருக்கும் உகந்தல்ல. இதற்கென வார இறுதிகளில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு போன்ற ஈடுபாடாவது தேவை. அவர்கள் விளையாடும்போது அந்த அறையிலிருந்தபடி நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருக்கல்லாம்.

அறிவு வளர்ச்சிக்கான, கணிதம் மற்றும் மொழி பாடங்களின் அடிப்படையில் சில மென் விளையாட்டுக்களுளன இவை அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் உதவலாம். ஆனால் படிப்பறிவு மட்டும் ஒரு முழுமனிதனை உருவாக்க முடியாதே.

சன் டி.வி எதற்கு திடீரென இப்படி ஒரு தொகுப்பைத் தரவேண்டுமென்பதற்கு உள் அர்த்தமிருக்கலாம். இப்பெல்லாம் இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தமிருக்கிறது. இதே தொகுப்பில் கணிணி விளையாட்டுக்களால் வரும் தீங்கையும் அதை சரிசெய்யும் முறைகளையும், கவனமாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருந்தால் தொகுப்பு முழுமையானதாயிருக்கும்.

பிள்ளைகள் விளையாட இடமில்லாதபடி ஊரமைப்பும், பள்ளிகளும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவந்து கம்பூட்டர் கேம்ஸ் ஆடிக்கொண்டிருகின்றனர் பிள்ளைகள். குழந்தைகள் பலர் ஊரிலிருந்துவரும் நம் சொந்தக்காரர்கள்கூடப் பழகவே தயங்குகிறார்கள்.

முன்பெல்லாம்,"அம்மா சுப்ரமணியன் என்ன கிள்ளிட்டான் என அழுது வரும் பிள்ளைகள் இனி,"அம்மா, சூப்பர்மேன் என்ன சுட்டுட்டான்னு" வந்து நிக்குமோ என்னவோ?

More Links on CGs
http://www.timesonline.co.uk/article/0,,2-1976339,00.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3485918.stm
http://news.bbc.co.uk/2/hi/health/4594376.stm

மிச்சத்தத கூகிளில் தெடுங்களேன்...:)

Wednesday, February 01, 2006

ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு

நேற்று இரவு (31/01/06) ஜார்ஜ் புஷின் இந்த ஆண்டுக்கான State of the Union உரை பார்க்க நேர்ந்தது. இதைப் பற்றி யாராவது பதிப்பார்கள் எனப் பார்த்தேன். இன்னுமில்லையாகையால் தமிழில் இவர் பேசியதன் சாரம் பதிக்கிறேன்.

State of the Union ஒவ்வொரு வருடமும், நாட்டின் நிலைப்பாடுகள், கொள்கைகள், மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கும் உரை. நேற்றைய உரையின் சாரம் கீழே.


நேற்று இயற்கை எய்திய மார்டின் லூதர் கிங்கின் மனைவி கொரெற்றா ஸ்காட் கிங்கிற்கு அஞலியுடன் உரை துவங்கியது

* உலகநாடுகளை அரசியலிலும் பொருளாதாரத்திலும் வழிநடத்துவதே அமெரிக்கா தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தியாகும்

* சர்வாதிகாரிகள் தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தயும் ஆதரிக்கிறார்கள், மக்களாட்சி உலகெங்கும் மலருவதே அமெரிக்காவிற்கு பாதுகாப்பு

* அடிப்படைவாத இஸ்லாம் (radical Islam) சுதந்திரத்தை எதிர்க்கும் ஒரு முக்கிய மூலமாக உள்ளது, இந்த உன்னத நம்பிக்கை மரபை (இஸ்லாம்) ஒருசிலர் தீவிரவாத, கொலைபாதக கோட்பாடாக மாற்றிவருகின்றனர்.
(No one can deny the success of freedom, but some men rage and fight against it. And one of the main sources of reaction and opposition is radical Islam -- the perversion by a few of a noble faith into an ideology of terror and death. )

*தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி உலகநாடுகளைத் தாக்க அதைத் புகலிடமாக ஆக்கப் பார்க்கிறார்கள்... அவர்கள் தவறாகக் கணக்கிடுகிரார்கள்; நாம் நம் சுதந்த்திரத்தை நேசிக்கிறோம் அதை தக்கவைத்துக்கொள்ள போரிடுவொம்....பின்வாங்குவதில் அமைதி இல்லை மேன்மையில்லை.

* தீவிரவாதிகள் பயமுறுத்தலை ஆயுதமாகக் கொண்டுள்ளார்கள்....நம் படைவீரர்கள் தியாகங்கள் பல செய்கின்றனர் அவர்களின் கடமை உணர்வு எல்லா பயங்களையும் விட மேலோங்குகிறது

* தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஒரே வழி அரசியல் சுதந்திரம் அளிப்பதுதான்...அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் மலர ஆசைப்படுகிறது.

* பாலஸ்தீன மக்கள் தேர்தலில் வாக்களித்துள்லார்கள், ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரயேலை அங்கீகரித்து ஆயுதங்களை களைந்து, தீவிரத வாதத்தை கைவிட்டு அமைதிக்காக பாடுபடவேண்டும்

* ஈரானில் இப்போது ஒரு சிறிய மதகுருக்களின் குழு மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்குகிறது. பலஸ்தீன் மற்றும் லெபனானில் தீவிரவாதத்தை வளர்க்கின்றது. ஈரான் தனது அணுசக்தி ஆசைகளால் பிற நாடுகளை சோதிக்கிறது... இன்று ஈரான் மக்களிடம் நேரடியாக சொல்லிக்கொள்கிறேன், அமெரிக்க உங்களுக்கு மதிப்பளிக்கிறது உங்கள் சுதந்திரத்தை விரும்புகிறது. ஒருநாள் அமெரிக்கா ஜனநாயக ஈரானின் சிறந்த நண்பனாக மாறும்.

* அமெரிக்க பொருளாதாரம் தலைசிறந்து நிற்கிறது, ஆனால் நாம் இது போதுமென்று இருந்துவிட இயலாது. மாற்றங்கள் நிறைந்த உலக பொருளாதாரத்தில் நாம் சைனா, இந்தியா போன்ற புதிய போட்டிகளை சந்திக்கிறோம்.

இதன் பிறகு பேச்சு அமெரிக்க உள்நாட்டு விவகாரம் பற்றி இருக்கிறது.

* அமெரிக்கா (எரிபொருள்) எண்ணைக்கு அடிமையாகியுள்ளது...புதிய (எரிபொருள்) தொழில்நுட்பங்கள் 2025க்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த்து எண்ணை இறக்குமதியை 75% குறைக்கும்.

* மனித உயிர் கடவுளின் பரிசு...இத்தப் பரிசு ஒருபோதும் தூக்கிஎறியப்படவோ, குறைத்து மதிப்பிடப்படவோ, விலைக்கு விற்கப்படவோ கூடாது.

பேச்சின் முதல் பாதி முழுக்க இவரின் வழக்கமான 'சுதந்திரம்' பற்றிய பேச்சும், அமெரிக்கா உலக போலிஸாக திகழ்வது எப்படி என்பதுபற்றியுமே இருந்தது.

எந்தெந்த அரசு என்னென்ன செய்யலாம் என இவரே சொல்லிவிடுவார். அப்படித்தான் பாலஸ்தீனத்தையும், ஈரானையும் மிரட்டுகிறார். உலகெல்லாம் ஜனநாயகத்தை எற்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமென்கிறார். ஜனநாயகமென்றால் அவரவர் நாட்டுமக்களுக்கான ஆட்சி, ஆனால் அமெரிக்க சொல்படி கேட்கிற ஆட்சி என்று புஷ் நினைக்கிறார்.

உள்நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கு பதில் சொல்லவேயில்லை. கத்ரினாவுக்கு 85பில்லியன் நிவாரணம் கொடுத்ததகச் சொன்னவர் அரசின் நிவாரணப்பணி தோல்விக்கு மன்னிப்புக் கோரவில்லை.

தீவிரவாதிகள் பயத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகக் கூறும் இவர்தான் அடிக்கடி மஞ்சள் சிவப்பு பச்சை என மக்களுக்கு கலர்புல்லா பயம் காட்டிவருகிறார்.

ஒரு இரயில் கவிழ்ந்தால் நம்மூரில் மந்திரி ராஜினாமா செய்கிறார், ஆனால் உலக வர்த்தக மையத் தகற்பின்போது ஜனாதிபதியாக இருந்த இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னடா சனநாயகமிது.

'சின்னச் சின்ன சுதந்திரங்களுக்குப்பதில் வறுமையே இல்லாத வாழ்க்கை கிடடக்குமானால் அந்த்தச் சுதந்திரங்களை தியகம் செய்வது தவறா?' என சுஜாதா ஒர் வளைகுடா நாட்டைப்பற்றி எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது (க. பெ./ஆ. வி).

இந்தியாவை பொருளாதார போட்டியாக அங்கீகரித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது, மற்றபடி எல்லாம் வழக்கமான அமெரிக்க புராணம்தான்.

பி. கு: இந்தப்பதிவுக்கான புகைப்படம் என் முந்திய பதிவிலுள்ளது.

சிறில் அலெக்ஸ்