.

Tuesday, January 31, 2006

'ஆதி'க்கு ஆஸ்க்கர்


ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்புவதும் அதை நூறுகோடியே மிச்சம் மக்கள் எதிர்பார்ப்பதும், ஒலிம்பிக்கில் கிடைக்கும் வெண்கலம்போலேனும் ஒன்றும் கிடைக்காமல் போவதும் வாடிக்கை.

ஆஸ்கர் ஹாலிவுட் படங்களுக்கான விருது என்பதும், வெளிநாட்டுத் திரைப்படங்களுக்காக ஒரு விருது மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் நமக்குத் தெரிந்திருந்தாலும், சினிமா ரசிகர்களாகிய இந்தியர்களுக்கு ஆஸ்கர் மொகம் தீர்ந்தபாடில்லை. நம் தேசிய விருதின்மீது எச்சிவாரி உமிழும் நாம் ஆஸ்கர் கிடைக்காதா என ஜொள்ளுகிறோம். இதையும் பர்மா பஜாரில் கூறுபோட்டு 'திருட்டு ஆஸ்கர்' என விற்றால் ஒன்றிரண்டு வாங்கி வைக்கலாம் என நினப்பவர்களும் இருக்கலாம்.

ஆஸ்கர் விருது எப்படி வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் நமது இந்த தீராத மோகம் கொஞ்சம் தணியலாம் என நினைக்கிறேன்.

Academy of Motion Picture Arts and Science எனும் சங்கம் 1927 ல் ஹாலிவுட்டில் நிறுவப்பட்டுள்ளது. திரைப்படம் சார்ந்த கலை மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கம் இது. இதில் ஹாலிவுட் திரைப்படத் துறையை சார்ந்த நடிப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமே உறுப்பினர்கள், அதுவும் இந்தச் சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே (by Invitation), ஒருவர் இதன் உறுப்பினர் ஆக முடியும்.

இந்தக்குழுவில் உள்ள நடிகர்கள் சக நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்கள் தத்தம் தொழில் நுட்பத்தில் கவனிக்கத்தக்கவர்களையும் விருதுக்குத் தகுந்தவர் பட்டியலிட தெர்ந்தெடுக்கிரார்கள்(Nomination). ஆஸ்கரின், படத்தொகுப்பு, சிறந்த நடிக, இயக்குனர் போன்ற ஒவ்வொரு விருதுக்கும் 5 பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன.

இந்தப் பட்டியலிலிருந்து ச்ங்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பு முடிவின் பேரில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

Feature Films, எனப்படும் ஜனரஞ்சகப் படங்களின் தேர்வுக்கு கீழ்கண்ட விதிகளும் விதிக்கப்படுகின்றன,

1. 40 நிமிடங்களுக்கு மேலானதாயிருக்கவேண்டும்

2. முதலில் திரையரங்கில் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்

3. 35மிமீ அல்லது 70 மிமீ அல்லட்து மென்(digital) வடிவத்தில் திரயிடப்பட்டிருக்கவேண்டும்

4. L.A (லாஸ் ஏஞ்ச்சல்ஸ் county) மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் கட்டனம் வசூலிக்கப்பட்டு குறந்தபட்சம் 7 நாட்களாவது தொடர்ந்து திரயிடப்பட்டிருக்கவேண்டும்.

செய்தி படங்களுக்கும் வெளிநாட்டு படங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தாது. வெளிநாட்டுப்படங்கள் ஆங்கில மொழிமாற்றக் குறிப்புகளுடன் அனுப்பப்படவேண்டும்.

தமது படங்களுக்காக தயாரிப்பாளர்கள் ஆதரவு தேடுவதும் (Lobbying) வழக்கம்.

அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப்பற்றி குறுகிய பார்வையே உள்ளது. (நமக்கும் இவர்களைப்பற்றிய குறுகிய பார்வையே உள்ளதென்பது வேறு பதிவுக்கான வாதம்). நம்மை ஒரு ஏழை நாடாக மட்டுமே இவர்கள் பார்க்கிறார்கள். சலாம் பாம்பே, பார்ன் இன்டு ப்ரொதல்ஸ் (Born into Brothels - சதை உழைப்புக்காக பிறந்தவர்கள்) போன்ற படங்களுக்கு ஆஸ்கர் அங்கீகாரம் இதனாலேயே.

இந்தியா மட்டுமல்ல பொதுவாக எந்த வெளிநாட்டுப்படமும் அந்தந்த நாட்டின் அவலங்களை இவர்களுக்கு கூறவேண்டும், அப்போதுதான் அமெரிக்கா எவ்வளவு நல்ல நாடு என்பது இவர்களுக்கு தெரிந்து, பூரிப்படைந்து விருது வழங்குவார்கள்.

சுட்டுப்போட்டாலும் நம் கலாச்சாரம் இவர்களுக்குப் புரிவதில்லை, அந்தப் புரிதலை இவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. எப்படி கானாவை ரசிக்கும் தன்மையை ஒரு பாகவதரிடமும், சுத்த கர்நாடக இசையை ரசிக்கும் தன்மையை ஒரு கனா பாடகரிடமும் எதிர்பார்க்க முடியாதோ அதே போலத்தான் நம் படங்களை ரசித்து, திறனாய்ந்து விருது வழங்கும் தன்மையை இவர்களிடம் எதிர்பார்க்க கூடாது. கானாவை ரசிக்கும் பாகவதர்களும் சங்கேதம் ரசிக்கும் குப்பத்தானும் நிச்சயம் இருக்கிறார்கள் அவர்கள் எத்தனைபேர் என்பது உங்களுக்கே தெரியும்.

இதையும் மீறி இவர்கள் தரும் விருதுகள் மேற்கத்திய எண்ணங்களை வெளிப்படுத்தும் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தலைப்பில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆதி படத்துக்கு ஆஸ்கர் வேணும்னா என்ன செய்யணும்? 'ஆதி'யில் இதியா எப்படி ஒண்ணுந்தெரியாத நாடா இருந்துச்சு. எப்படி வெள்ளக்காரன் வந்து நமெக்கெல்லாம் பேண்ட் சர்ட் போட்டுவுட்டான்னு படம் எடுக்கணும். இதுல விஜையும் அஸினும் ஆதி மனித கெட்டப்புல ஒரு டான்ஸ் அப்புறம் பேண்ட் சட்ட போட்டுகினு ஒரு டான்ஸ். க்ளமாக்ஸ்ல கப்பலேறிப்போகும் வெள்ளக்காரனுக்கு பேண்ட், சர்ட் போட்ட விஜையும் அஸினும் சோகமா டாட்டா காமிக்கிறாங்க.

வணக்கம் போடுறதுக்குப் பதில் 'அமெரிக்கா வாழ்க'ன்னு போட்டா போதும்.

நம்ம ஊர் தெசிய விருதுக்கு அரசியல் சாயம் பூசியாச்சு, பத்திரிகைகளின் விருதுகளப்பத்தி சொல்லவே வேண்டாம். வலப்பதிவாளர்கள் சேர்ந்து ஒரு ஓட்டெடுப்பு பண்ணலாம். நம்ம ஓட்டு போட்டோம்னு ஒரு நிம்மதியாவது இருக்கும்.

Monday, January 30, 2006

காதல் தெய்வம்

நீ
விட்டுச்சென்ற தலையணைகளில்
பூ வாசம்.

நினைவின் ஆழங்களில்,
உன் கண்ணீர்துளிகளில்
என் முகங்கள்
தெளிகின்றன

கடைசி முனகல்..
தொலைவில் உன்னுருவம்

கடைசி மூச்சு..
அருகில் நீ

காலனும் காதல் தெய்வம்தான்.

Thursday, January 26, 2006

வடுமாங்கா

கெடா - சிறுகதை

"தம்பி, கெடா பீச்சுட்டு கெடக்குல. எங்க உள்ள கெடா".

"டவுண் கெடாண்ணே, பேப்பர் கீப்பர் தின்னுருக்கும்".

"ஏண்டா பத்து ரூவாக்கேண்டி ஏன் டவுனுக்குப்போன. இங்கன சந்தையில வாங்கிருக்கலாமெடா."

"கெடா மட்டுமா, பூச சாமான் எல்லாமே அங்கதான் வாங்கிருக்கு".

"சாமி இன்னும் வரலியே"

"சொல்லி வுட்டுருக்கு. நேத்தே இங்கோடி தள்ளாடித்தான் போனாரு. ஆத்து தோப்புல தேங்காவெட்டாம். இவருக்கு கெடச்சத வித்து குடிச்சுட்டுபொனாரு. நாளைக்கு வருவீரான்னேன், 'எல நான்வராம கெடா தலையாட்டிருமான்னாரு'. அந்தா நம்ம ஒரல்ல தட்டி கீழ உளுந்தாரு. ஆத்தாவே சிரிச்சிச்சு. இவரெல்லாம் என்ன பூச வைக்கப்போராரோ"

"எல..அவன் வெறும் பூசாரியாடா? ஒங்க மாமன்டா."

"கிழவி, ஊருல எல்லாரும் சொந்தக்காரனுவதான். ஒன் சொந்தங்கள சொன்னா பொத்துகிட்டுவருமே."

"எல என்னா? சாமி வந்தாச்சா?"

"இல்ல மாமா. இன்னும் இல்ல"

"ஓன் தங்கச்சிக்கு சொன்னீயளாடே?"

"ஆமா சொல்லியிருக்கு. வருவாளான்னு சந்தேகந்தான்".

"இன்னும் ஒருவருஷம் கழியலயோ? நம்ம சாமிக்கு படையலுக்கெல்லாம் வரலாமே. என்னக்கா நீ ஒண்ணுஞ்சொல்லலியா?"

"....."

"எல்லாஞ்சொல்லியாச்சு அனேகமா வருவான்னுதான் நெனைக்கேன். இத்தன சனம் காத்துட்டுருக்கு இன்னும் இந்த சாமியக் காணோம் பாரு."

"நான் வெண்ணா பெரியவன சைக்கிளெடுத்துட்டு போச்சொல்லவா?"

"செரி சொல்லு. நேரா அங்கப்போச்சொல்லு சைக்கிள் கெடச்சா ஊரச்சுத்தும் அந்தக் கழுத."

"ஏல குமாரூ...."

"குப்பி வாங்கிட்டீயேளா?"

"பூசைக்கி முன்னாலயேவா குடிக்கிறது. கொஞ்சம் பொறும்"

"எல அதுக்கில்லல சாமிக்கு சாரயமில்லாமலா பூச? மறந்து கிறந்து போனியளோன்னுதான்..."

"சிரியப்பாரும்... மாமா நம்ம தோலன்மவன் குடுத்த பிராந்தியிருக்கு. இங்க வச்சி வேணாம். வாரும் வீட்டுக்குள்ள போலாங்."

"குடிகாரப்பயலுவ. கொஞ்சம் பொறுத்தாத்தான் என்னல?"

"ஆத்தா, நீ சும்மா இரு. இப்பகுடிச்சாதான் பூச முடிஞ்சு சாப்புட சரியாயிருக்கும்."

"மாமா நீ வா. கெழவி இப்புடிதான். காதுல பாம்படம் கெடக்குல. அதாம் ஆடுது. இது செத்து கெடக்கும்போதுதான் தெரியும் அந்த பாம்படத்து மகிம. ஏ ஒங்க சித்தப்பாவுக்கு குடிக்கணுமாம். தட்டுல கொஞ்ச ஊறுகா எடுத்துவை... வா மாமா... பெரியவன் சாமியப் பாக்க போனானா?"


"ஆமா. சைக்கிள் பிரேக் அத்து கெடக்குன்னு நடந்துதான் போயிருக்காம்".
.....

"மாமா கடகடன்னு ஊத்தாத. எங்கப்பனமாரிப் போயிரப்போற"

"போடாங்... ஒங்கப்பனுக்கு யார்டா குடிக்க சொல்லித்தந்தது? எத்துன நாள் மச்சான் முக்குவெளைக்குப் போவொமுன்னு வந்து நின்னுருக்காம் தெரியுமா. மொதல்லெல்லாம் பயந்து பயந்துதான் குடிப்பான். அதுக்கப்புரம் என்னையும் மிஞ்சிட்டாம்ல... அவன் ஓவர்டா."

"நீர்தாம் அவர குடிக்கவச்சு கெடுத்ததே... இத வேர பெருமையா சொல்லாதீரும். அவமானம். ..ஒழுங்கா இருந்த மனுசன...."

"எல குடிக்ககூட இல்லண்ணா என்ன இருக்கு. ஒன் தங்கச்சி புருசன்...குடிக்கவேயில்ல... பீடிகூட கெடையாது.. அப்புறம் எதுக்குடா வெட்டுனீங்க"

"மாமா என்ன சொல்லுறீரு. நாங்களா வெட்டுனோம். வாங்குன காச திருப்பித்தரலன்னா நல்லூரான் விட்ருவானா. வெட்டிட்டான், நீரு ஏன் எங்கள இழுக்கீரு?"

"போல..பேப்பயல. ஊருக்கே தெரியும் நீங்க அவன வெட்டுனத. நல்லூரனுக்கு பதினஞ்சிதான் ஒங்களுக்கு எழுபதாம்ல? இப்டி தங்கச்சிபுருஷன்னு பாராம வெட்டிட்டீயளேல்ல"

"அப்பா செத்தப்றம் நாங்க பாட்டுக்கு ஒதுங்கியிருக்கோம். ஊருல ஆயிரம் சொல்வானுவ. எம் மச்சான வெட்டுனா, பைசா ஒடன கெடைக்குமா? என்ன சொல்றீரு? நீருந்தான் காசி மவள கெடுத்து தூக்குல போட்டாதா சொன்னானுவ அப்ப அது உண்மையா?"

"எல.. பாத்து பேசு. எப்பவோ நடந்த கத. ஒங்கப்பனுக்கு நான் செஞ்ச.... வேண்டாங்..நீ சின்னப்பயடா."

"அப்ப என்னத்துக்கு எங்கூட குடிக்கீரு"

"என் தப்புதாண்டே. ஒங்கப்பனப்போல ஈனப்பயதான நீயும். ஊர எம்மாத்தி தின்னுத பயலுவ. எங்கெருந்துடா இத்தன பணம் வந்துச்சு ஒனக்கு?"

"மமா. நாங்களா ஊர ஏமாத்துனோம். கோயில் கணக்குல கைவச்சீர்னு நடந்த பஞ்சாயத்து என்னாச்சு. "

"நீ கள்ளவட்டி வாங்கலியா? இந்த பொழப்புக்கு கூட்டி குடுக்கலாம்டா"

"மாமா..."

"ஏம் சத்தம் போடுத? என்ன அரிவாளத்தூக்குற. எனக்கு முன்னையா நீ அரிவாளெடுத்த. எல.. வால பாப்போம்"

"ஏய் வுடுடீ என்ன. இவன் என்ன சொன்னாங் கேட்டியா. மாமாவால நீயி. எங்கம்மா பொறந்த வயிதிலயா பொறந்த? யாருவீட்டுப் புள்ளகள கூட்டிக் கொடுத்தாங்கன்னு ஊருல போயி கேளும்? இனி ஒரு வார்த்த பேசுனா வெட்டுத்தான்."

"என் தங்கச்சி மவன்னு உடுதேன்... ஒன்ன வெட்ட எவ்வளவு நேரம்டா ஆவும்."

"நீரு என்ன வெட்டவா... நாங்க சும்மா பாத்துட்டயிருப்போம்..."

"வா வந்து வெட்டுடா...வெட்டுடா பாப்...."

"ஐயோ பேசிட்டிருக்கும்போதே வெட்டிடீங்களே.... ஐயா சித்தப்பா... தல தொங்கிடுச்சே..."

"அம்மா..., சாமிய கூட்டிட்டு வந்துட்டேன்..."

"மருமவனே என்ன அருவா. அதுக்குள்ள வெட்டியாச்சா? சம்மதங்கேட்டுத்தானே வெட்டுனிய?........அடப்பாவி கெடாவ வெட்டலியா?"

குஷ்புவும் போலி டோண்டுவும்

பின்னூட்டங்களை முறைப்படுத்துவதுபற்றி தமிழ்மணத்தின் மின்மடல் காலையில் கிடைத்தது.
சில வாரங்களுக்குமுன் அடிபட்டு, மிதிபட்டு, நைந்துபோன 'கருத்து சுதந்திரம்' என்ற தலைப்புதான் ஞாபகம் வந்தது.

போலி டோண்டுவுக்கு கருத்து சுதந்திரமிருக்கா இல்லயா?

புனை பெயர்களுக்குள் மறைந்துகொண்டு என்னவேண்டுமானாலும் சொல்பவர்களுக்குள்ள சுதந்திரம் ஏன் போலி டோண்டுவிற்கில்லை?

கெட்டவார்த்தைகளைத் தவிர்த்தால் போலி டோண்டுவின் கற்பனா சக்தி சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது. MAXIM குஷ்புவை பற்றி எழுதியிருப்பதை நம்மில் பலர் அங்கீகரிக்காவிட்டாலும் எதிர்க்கவில்லை என்பதே நிஜம். அத்தகைய நகைச்சுவையை, அது நம்மை பற்றியே இருந்தாலும், ரசிப்பதே ஆரோக்கியம் என்பது என் கருத்து.


போலிடோண்டு நிஜ டோண்டு அல்ல என்கிறபட்சத்தில் அவர் எழுதுவதை ஏன் கருத்தில் கொள்ளவேண்டும்? பெனாத்தல் என்ற பேரில் வரும் கிண்டல்களையும், இட்லிவடையின் டாப் டென்னையும் ரசிக்கும் நாம், ஏன் போலி டோண்டுவை ரசிக்க முடியவில்லை? இவைகளுக்கும் போலிடோண்டுவுக்கும் கெட்டவார்த்தை மட்டுமே வித்தியாசமாகப் படுகிறது.

போலி டோண்டுவுக்கு ஒரு வேண்டுகோள். கெட்ட வார்த்தையை தவிர்க்கவும். உங்கள் கற்பனை பலமானது, ரசிக்கத்தக்கது. அதை நேர்வழியே பயன்படுத்துங்கள். டோண்டு கெட்டவார்த்தை எழுதாமல் எதிர்பார்க்கும் பின்விளைவுகளைத்தான் நீங்களும் எதிர்பார்கிறீர்கள் என்றால், ஒரு போலி வலைப்பதிவில், இட்லிவடை, மற்றும் பெனாத்தல்போலோ எழுதிவிட்டுப் போங்கள். சும்மா பின்னூட்டங்களிடுவது கோழைத்தனம். இதனால் நீங்கள் யாரைத் தாக்க நினக்கிறீர்களோ அவர்கள் பயனடைகிறார்களே தவிர வேறொன்றுமில்லை.

பின்குறிப்பு: யோவ் போலி டோண்டு, இதப்பாத்துட்டு என்னப்பத்தி எதாவது எழுதுன கீச்சுடுவேன் மவன :)

Wednesday, January 25, 2006

ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

உலகமே அறிந்திராத ஒரு கிராமம். மக்களெல்லாம் அவருண்டு அவர் வேலையுண்டுன்னு சந்தோஷமா வாழ்ந்து வந்தாங்க.

அந்த கிராமத்துல ஒரு பெரியவர்,"இப்பிடி ஒலகமே தெரியாம இருந்தா எப்டி? இந்த ஊரவிட்டு வெளியேறி ஒலகம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாமே" அப்படீன்னு, ஊருல எல்லருட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டார்யா கிளம்பிட்டாரு.

அவரு போயி அஞ்சு வருஷமாச்சு, ஆறுவருஷமாச்சு, எட்டுவருஷமாச்சு. எல்லாருமே அவரப்பத்தி மறந்தே போயிட்டாங்க.

ஒரு நாள் ஊரவிட்டு போன மனுஷன் திரும்பி வந்தாரு. ஊரே கூடி அவர வரவேற்குது. கிட்டத்தட்ட ஊர்த்திருவிழா மாதிரியே, கொண்டாடமும் கும்மாளமும். சிறுசு பொடிசு முதல்கொண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ஒருவாரம் கழிச்சி கொண்டாட்டமெல்லம் முடிஞ்சபின்னால ஊரே பெரியவர் வீட்டுல கூடியாச்சு.

எல்லாரும் அவர்கிட்ட,"பெரியவரே எங்கெல்லாம் போனீரு என்னெல்லாம் பாத்தீரு. நம்மள விட்டா மனுஷங்க இருகாய்ங்களா?"ன்னு ஒரே கேள்வி.

அந்தப்பெரியவருக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அனுபவிச்சிட்டு வந்ததையெல்லாம் எப்படி இவங்களுக்கு சொல்றது. "அதெல்லாம் எப்படி சொல்ல முடியும்.
எதன்னு சொல்றது.
என் அனுபவத்த சொல்ல வார்த்தையே இல்ல."ன்னு சொல்லி நழுவப்பாத்தாரு. மக்கள் விடவேயில்ல.

அவங்க தொந்தரவு தாங்காம, இவரு தன் பயண அனுபவங்கள எழுதி, சில படங்களையும் வரஞ்சி ஒரு பொத்தகமா குடுத்தாரு.

ஒவ்வொரு வாரமும் ஊருக்குப் பொதுவா அந்த புத்தகத்திலேர்ந்து ஒரு பக்கம் அல்லது ஒரு கதை வாசிச்சு எல்லாரும் கேட்டாங்க.

கொஞ்ச நாள்ல அந்த பெரியவர் எறந்து போக. இந்த புத்தகம் வாசிக்கிற பழக்கம் தொடர்ந்தது. பல வருசங்கள் போனபிறகும். இந்தப்பழக்கம் தொடர்ந்தது. இப்போ இந்த புத்தகத்துல பலர் தேர்ந்துட்டாங்க. பலர் மனப்பாடமா வச்சிருந்தாங்க. சிலபேர், இதுல விடுபட்டுபோன இன்னும் பத்து கதைய நாங்க கேட்டிருக்கோம், இந்த புக்குல அத சேக்கணும்னாங்க. இதுல சண்ட வந்து ஊரே ரெண்டுபட்டுபோச்சு.

புதுசா சேத்த பத்து கதைகளோட இன்னொரு புத்தகம் உருவாச்சு.

காலம் கடந்து போகப் போக பெரியவர் அடக்கம் பண்ணுன கல்லறை கோவிலா மாறிச்சு. வெறும் கதைகள் இருந்த புத்தகத்த படிச்சு பல புதிய கருத்துக்கள் உருவாச்சு. இந்த புத்தகத்துல சொல்லியிருக்கது வெறும் கதையில்ல எல்லாம் தீர்க்கதரிசனம்ணு ஆயிடிச்சு. அந்த புத்தகத்த விவரிச்சு பல புத்த்கங்கள் வந்துச்சு, பல வாதங்களும் அடிதடிகளும் பிரிவினைகளும் வந்துடுச்சு.

பல வருஷங்களுக்கப்புறம் ஒருநாள் அந்தப்பெரியவர் ஆவி அந்த ஊர்ல தோணுச்சி. எல்லாரும் பயபக்தியோட அவரப் பாத்து கும்பிட்டுட்டே நின்னாங்க.

அந்த ஆவி அவங்களப் பாத்து கேட்டுச்சி. "மடப்பசங்களா. நான் அனுபவிச்சத படிச்சி நீங்க என்னடாபண்ணுறீங்க? நீங்களா போயி அந்த அனுபவத்த பெறணும்னு ஏன் தொணல ஒங்களுக்கு", அப்பட்டின்னு. எல்லோருக்கும் அப்பத்தான் புரிஞ்சது அவங்க நம்பிக்கிட்டிருகிறதும், அலசிக்கிட்டிருக்கிறதும் யாரோ ஒருவருடைய அனுபவம் என்று.

கடவுளைப் பற்றிய நம் அறிதல் மற்றும் உணர்வுகளை ஏன் யாரோ அனுபவித்த மதக்கோட்பாடுகளிலிருந்து பெறவேண்டும். நீங்கள் கடவுளைத் தனியாக தேடி, அனுபவித்திருக்கிறீர்களா?

மதங்கள் நமக்கு போதிப்பதெல்லாம் யாரோ பெற்றுக்கொண்ட கடவுள் அனுபவத்தின் கதைகளில்லையா?

சமுதாயாயம், கட்டுப்பாடுகள், வரைமுறைகள்னு நம்மை கட்டிப்போடும் பலவும் இந்த மாதிரி யாரோ சொன்ன, அனுபவித்த, கருத்துக்கள்தானே. நமக்கென்று சிந்தனைகளும் நம்பிக்கைகளும் தெவையில்லையா?

உங்கள் நம்பிக்கைகளை சோதித்துப்பாருங்கள். தேடலை துவங்குங்கள், தொடருங்கள். அப்பத்தான் நம் வாழ்க்கை முழுமையாகிறது.

செம ஹெவி ஸ்டஃப்மா... ஐயோ..


பின்குறிப்பு: இந்தக் கதை ஆந்தனி டி மெலோ எழுதிய ஒரு புத்தகத்திலிருக்கிறது. இவரது புத்தகங்கள் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன. கிறித்துவ பாதிரியாராக இருந்தாலும் இவர் தனது நம்பிக்கைகளை கேள்விகேட்கத் தயங்கவில்லை. கத்தோலிக்க திருச்சபை இவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்ன சின்ன கதைகளைத்திரட்டி அதிலிருந்து பெரிய பெரிய தத்துவங்களை விளக்குகிறார்.
'பறவையின் பாடல்' இவரது புத்தகங்களில் ஒன்று.

இப்போதான் www.alibris.com ல் சில புத்தகங்கள் ஆர்டர் பண்ணினேன்.
Key word Anthony De Mello.

Tuesday, January 24, 2006

புனிதராவது எப்படி?

கத்தோலிக்க திருச்சபை, போப் தலைமையில் இயங்கிவருகிறது. இவர்களின் முக்கியமான நம்பிக்கைகளில் 'புனிதர்களின் உறவு' (Communion of Saints) ஒன்று. அதாவது, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து இறந்து போனவர்கள், மோட்சத்தில் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச இயன்றவர்கள், புனிதர்கள், என நம்பப்படுகிறார்கள்.

எப்படி கத்தோலிக்க திருச்சபை ஒருவரை புனிதராக அங்கீகரிக்கிறது?

10ஆம் நூற்றாண்டுவரை பொதுமக்களே, தாங்கள் புனிதராகக்கருதும் ஒருவரை புனிதராக அறிவித்தனர். பொதுவாக, இயேசுவின் பேரில் கொல்லப்பட்டவர்களே (Martyrs) இதில் அடக்கம். அதன்பின் சில வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது ஒழுங்கு படுத்தப்பட்டு பல மாற்றங்களுக்குப் பிறகு, 1983ல் கீழ் விவரிக்கப்படும் முறைக்கு வந்துள்ளது.

புனிதமாக வாழ்ந்தவர் எனக் கருதப்படும் ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளாவது ஆன பிறகுதான் புனிதராக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இந்த விதியை அன்னை தெரசாவிற்காகவும் 2005ல் இறந்த போப் இரண்டாம் அருள் சின்னப்பருக்கும் தளர்த்தியுள்ளனர்.

இதன்பின் அவரின் வாழ்க்கை குறிப்பையும், அவர் புனிதராவதற்கான வாதங்களையும் அவர் வாழ்ந்த பகுதியின் ஆயர்(Bishop) தொகுத்து வத்திக்கானுக்கு அனுப்புகிறார்.

வத்திக்கானில் இறையியல்(Theology) நிபுணர்கள் இதை ஆராய்கிறார்கள். இந்தக்குழுவின் அங்கீகாரமும் புனிதராக்கும் முயற்சிகளை மேற்பார்வையிடும் கர்தினால்களின் குழுவின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அவர் 'வணக்கத்துக்குரியவர்' (Venerable) எனும் பட்டத்தை பெறுகிறார். இது முதல் படி. இந்தக்குழுக்கலில் எதிர்வாதம் செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கும். பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் புனிதராகத் தகுதியில்லாதவர் என இவர்கள் வாதாட வேண்டும் 'சாத்தானின் வழக்குரைஞர்கள்' (Devil's Advocates) என இவர்களை அழைப்பது வழக்கம்.

அடுத்தாக, இவர் ஏதாவது புதுமை செய்கிறாரா என பார்க்கிரார்கள். ஏதாவது ஒரு நபர், புனிதராக கருதப்படுபவரிடம், முறையிட்டு புதுமை நிகழ்த்தப்பட்டால் அது ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்டு, புதுமைதான் என னிலப்படுத்தப்படுகிறது. பொதுவாக தீராத நோய்கள் தீர்ந்து போன புதுமைகள் இதில் அடக்கம்.

இதுபோல, தன் இறப்புக்குப் பிறகு இவர் ஒரு புதுமையாவதுசெய்திருந்தால் அவரை 'அர்சிக்கப்பட்டவர்' (Blessed), என பட்டமளிக்கிறார்கள். பொதுவாக இந்த அறிவிப்பு இந்த நபர் வாழ்ந்த ஊர், நாட்டு மக்களுக்கே வழங்கப்படுகிறது.

அன்னை தெரசா அர்சிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், அதற்காக அறியப்பட்ட புதுமை பற்றிய சுட்டி(ஆங்கிலத்தில்).

இந்த இரு கட்டங்களையும் தாண்டியபின் இன்னுமொரு புதுமை செய்தால் புனிதராக(Saint), அந்த நபர் அறிவிக்கப்படுகிறார்.

'புனித' (St.) எனும் அடைமொழி வைத்து இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புனித அந்தோனியார், புனித சவேரியார், புனித அருளானந்தர்(தமிழகத்தில் இறந்தவர்) போன்றோர் மேற்கோள்.

பாதிரியார், கன்னியர்கள்(Sisters) தவிர பொது மக்கள் பலரும் புனிதர்களாகியிருக்கிறார்கள்.

1969ல் புனிதர்களின் பட்டியல் ஆராயப்பட்டு பல புனிதர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. புத்தரின் கதை மேற்கில், கிறித்துவ புனிதரின் கதையாக திரிக்கப்பட்டு அறியப்பட்டதால் அவர் பெயரும் பட்டியலில் இருந்ததாம். இதுபோல வெறும் வாய்வழி பெயர் பெற்று புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன, இதில் பெயர்போன (nice pun)பயணிகளின் காவலர் கிரிஸ்டோபரும் அடக்கம்.

இப்போதுள்ள முறயின்படி ஒருவரை புனிதரென்று அறிவித்தால் அதை மாற்றமுடியாது. அது போப்பின் 'தவறாத்தன்மை' (Infallibility) படி அறிவிக்கப்படுகிறது.

எல்லா மதங்களிலும் புனிதர்கள் இருக்கிறார்கள், எல்லா மதங்களிலும் புதுமைகளும் அற்புதங்களும் தினம் தினம் நடக்கின்றன என்பது உண்மை. 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியடா' என்கிற கண்ணதாசனின் வரிகளில் நம்பிக்கை கொள்கிறேன்.

மதங்களை விட கடவுள் பெரியவர், மந்திரத்தைவிட நம்பிக்கயே பெரியது.

டூ மச் பிலாசபி..

அன்னை தெரசாவை புனிதரென்று கூற நாம் யாரையும் கேட்கத்தேவையில்லை. அவரிடம் மதத்தைவிட மனிதமே மிஞ்சியிருந்தது என்பது என் கருத்து.

Monday, January 23, 2006

பைபிள் கதைகள்

அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்குப் பிறகு 'பைபிள் கதைகள்' என்ற வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இராஜாஜியின் 'மகாபாரதம்' படித்து மகிழ்ந்திருக்கிறேன், அதுபோல வெறும் கதைகள் மட்டுமே இந்தப் பதிவில் இருக்கும்.

க்ரியேஷன் துவங்கி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதை/வரலாறில் சொல்லச் சுவைமிக்க சிலவற்றை தொகுக்கலாம் என்றிருக்கிறேன்.

இதைப் பற்றிய உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யவும்.

ஆதரவிருந்தால் விரைவில் 'பைபிள் கதைகள்' படிக்கலாம்.

எல்லாம் தெரிகிறது

பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளில் தற்கொலை விகிதம் வளரும் நாடுகளைவிட அதிகமாயிர்க்கிறது என்பது கணக்கெடுக்கப்பட்ட உண்மை. எல்லாவசதிகளும் இருந்தபோதும் ஏன் இப்படி? வேலையில்லாதிருந்தாலோ ஊனமுற்றவரானாலோ, அரசாங்கம் அவர்களை கவனித்துக்கொள்கிறது. பின் ஏன்?

நான் நினைக்கிறேன், இங்கு வாழ்பவர்களுக்கு வாழ்க்கை எந்தவித சவாலையும் அளிப்பதில்லை. எல்லாம் வசதியாக அமைந்து விடுகிறது, சோதனையில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

உங்களை பில் கேட்ஸ் தத்தெடுக்கிறார், ஒரு பெரிய பங்களாவில், எல்லா வசதிகளும் தந்து உங்களை தங்க வைக்கிறார். வெளியுலகோடு உங்களுக்கு குறைந்த தொடர்புகளே கொள்ளமுடிகிறது, உங்களுக்கு யோசித்து சரிசெய்ய எந்த சவால்களுமே இல்லை என வைத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாள் தாக்குப்பிடிப்பீர்கள்? முடிச்சேயில்லாத சினிமாவையோ கதையையோ ரசிக்கமுடிகிறதா?

கரண்ட் கட் ஆவதில்லை, ட்ராபிக் பொதுவாக ஸ்திரமாக உள்ளது, எல்லாமே வகைப்படுத்தப்பட்டுள்ளன, உச்சநிலை கஸ்டமர் சர்வீஸ், சின்னச் சின்ன விஷயங்களையும் முறையாகச் செய்யும் ஒழுக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித சவாலும்(challenge?) இல்லாமல் வாழ்கின்றனர். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் ராக் க்ளைமிங், பஞ்ஜீ ஜம்பிங், ட்ரெக்கிங், பிஷிங் என சவால்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். மற்றவர்கள்?

இம்ப்ரொவ் எவ்ரிவெயர்(improv everywhere) என்னும் ஒரு குழு சார்பில் நேற்று 160 பேர் நீயு யார்க்கின் ரயில்களில் ட்ரவுசர் இல்லாமல், கீழாடைகளோடு மட்டும், பயணம் செய்திருக்கிறார்கள்.
மந்தமாக ஒடும் யந்திர வாழ்க்கையில் ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தி மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுப்பதே இந்தக் குழுவின் நோக்கமாம். இதுபோன்ற நிகழ்வுகள் தனிமயில் மனத்தாழ்வடைந்திருப்போருக்கு அட் லீஸ்ட் ஒரு மாற்று சிந்தனையாகவாவது இருக்கும்.

ஊரில் பைக்கில் போகும்போது குறுக்கேவரும் ஆட்டோக்காரரைத்திட்டுமுன், இந்த சின்ன சின்ன சவால்கள் நம்மை வாழப் பயனுள்ளவர்களாக்கி, நம்மை பக்குவப்படுத்துகின்றன என்பதை நினத்துப்பாருங்கள். நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாததற்கு அவரும் ஒரு காரணம்.

http://www.improveverywhere.com

Friday, January 20, 2006

செத்த பிழைப்பு

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார்.

நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் 'Stiff' என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க.

அவரது கல்லறைக் கல்லில் "இந்த முறை இது நிஜம்"(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம்.

http://deadbodyguy.com/home.aspx

செத்த பிழைப்பு - தமிழில் Oxymoron

மலரில் என் வலைப்பூ

நான் தொடராக எழுதிக்கொண்டிருக்கும் 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' வலைப்பதிவை, 'தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள்' என்ற பகுதியில் 20/01/2006 தினமலர் நாளிதள் வெளியிட்டுள்ளது.

இந்தத்தொடரை துவங்கும்போது யாராவது வாசிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஜோ, மஞ்சூர் ராஜா போன்ற அனுபவமிக்க வலைப்பதிவாளர்கள் அளித்த ஊக்கம் என்னை மேலும் எழுத வைத்தது.

நல்ல வலைப்பதிவுகளுக்கு ஒரு 'Nice' அல்லது வாத்தியார் மாதிரி ஒரு 'V. Good' ஆவது பின்னூட்டமாய் இடுங்கள். இதுவே புதிதாய் பதிப்பவர்களுக்கு உந்துதல்.

தமிழ் வலைப் பக்கங்களுக்கு ஊடகங்களில் மதிப்பிருப்பது விரும்பத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்.

எழுத்தாளர் திரு ஜெயமோகன் 'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' பற்றி எனக்கு எழுதிய மின் மடல் கீழே.


'தமிழ்மணம்' சிறப்பாக செயல்படுகிறது. நமக்கெல்லாம் இப்படி ஒரு தளம் அமைத்து தந்திருக்கிறது. நன்றி.


மதி கந்தசாமியின் திறனாய்வு. நன்றி மதி.
http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302

தொடர்ந்து பதிப்போம்...தொடர்ந்து படிப்போம்

Thursday, January 19, 2006

என்பும் உரியர்..

உங்கள் உடம்பிலிருந்து ஒரு உயிருள்ள எலும்புத்துண்டை எடுத்து அதன் வளர்ச்சியை நிறுத்திவிட்டு அதில் மோதிரமோ, வளையலோ மற்ற ஆபரணங்களோ செய்யும் முறை பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமணமோதிரமாக இதை செய்துதர ஒரு தம்பதி ஆர்டர் செய்துள்ளனர்.

இதுவரை இறந்துபோனவர்களின் எலும்புகளிலிருந்த்துதான் ஆபரணங்கள் செய்யப்பட்டன. இப்போ உயிருள்ள அதுவும் உங்க சொந்த எலும்பில் ஆபரணம்.

இதைத்தான் வள்ளுவர் "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"ன்னு சொன்னார்போல.

உங்க காதலி அப்பா "எலும்ப உருவிடுவேன்னு" சொன்னா, "தங்கம் வாங்க காசில்லையா?" ன்னு கேக்கலாம்.

ஐ மீன்...ஐரமீன்

கொழுப்புள்ள சில மீன்வகைகளை உண்பது மூளைக்கு நல்லது என ஒரு ஆய்வு சொல்கிறது. மீன் எண்ணையில் ஒமேகா-3 என்கிற அமிலம் மூளையின் நரம்பு செல்களை வலுப்படுத்துகின்றன.

இவைதான் ஜப்பானியர்களின் வாழ்நாள் நீட்சிக்கும் காரணம் எனவும் நம்பப்படுகிறது.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் வீக்கங்களை குறைக்கும் தன்மயுடயதால், மூளைவீக்கத்தினால் ஏற்படும் அல்ஸைமர் போன்றநோய்களை, உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதினால் தடுக்கலாம்.

இதனால்தான் அல்ஸைமர் இந்த்தியாவில் மிகக்குறைவாக இருக்கிறதென்கிறது டைமில் வந்த ஒரு கட்டுரை.

பீட்ஸாவிலும், பர்கரிலும் கொஞ்சம் மஞ்சளும் மீன் எண்ணையும் சேர்த்துக்கொள்வது மூளைக்கு ந்ல்லது

Wednesday, January 18, 2006

மீதி 67பேர்??

1,00,00,000 (10 மில்லியன்/ 1 கோடி) பெண் கருக்கலைப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

1000 ஆண்களுக்கு 933 பெண்களே இந்தியாவில் உள்ளனர்.

இந்த வார 'டைம்'ல் வந்துள்ளன மேற்கூறிய தகவல்கள். (Time January 23. 2006)

மீதி 67பேர் எங்க போனாங்கன்னே தெரியல?

படுக்கை அறையில்...


சி. என். என் டாட் காமில் (CNN.COM) சில மாதங்களாக இலவச வீடியோ செய்தித்தொகுப்புகள் வழங்கப் படுகின்றன, அமெரிக்காவில் வசிப்பவரானால் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகும்.

இதில் ஜெனீ மூ (JEANNE MOOS) வழங்கும் சுவையான செய்தித்தொகுப்பு வந்தவுடன் பார்த்துவிடுவேன். சில எளிய செய்திகளை, நகைச்சுவையோடும் சிலசமயம் நக்கலோடும் தொகுத்து அற்புதமாய் வழங்குகிறார்.

இவர் ஒவ்வொரு தொகுப்பையும் முடிக்கும் போது சொல்லும் பஞ் லைன்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

'படுக்கை அறையில் டி. வி பார்ப்பது கலவியைக் குறைக்கிறது' என்பது கடைசியாக பார்த்த வீடியோ. ஒரு இந்தியப் பெண்ணும் இதில் பதில் கூறுகிறார், குஷ்பு அல்ல.


http://www.cnn.com/video/

ஐயா நீர் கவிஞர்


ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பாரதியைக் கண்டுபிடித்தேன்.தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரைத் தேடாதவர்களுக்கும்.

http://www.pondy.com/bharathiar/

'அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித்தத்தும்பும் விழிழ்களும்'


'உயிர்த்
தீயினி லேவளர்சோதியே - என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே..'

காதல் வராதவர்களுக்கு மருந்து இந்த வரிகள்.

'மாதர் தம்மை இழிவு செய்யு
மடமை யைக்கொ ளுத்துவோம்...'

இதக் குஷ்பூ எப்படி எடுத்துக்கொண்டாரோ?அவரை சாடியவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனரோ?

'உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்குதடீ'

ஒரு பெற்றவராய் இதை உணராதவர் யார்?

'சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி - கண்ணம்மா

வானக் கருமைகொல்லோ'

பாரதியைப் படித்து மீண்டுமொருமுறை மெய் மறக்கிறேன்.

"ஐயா நீர் கவிஞர்", தருமி இன்றிருந்தால் இந்தப்பட்டம் பாரதிக்குத்தான்.

Tuesday, January 17, 2006

ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

இளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. 'ஜனனி ஜனனி' என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது.

பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.

கமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.

ஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.

ஷ்ரேயா , "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.

எஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.

இன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.

இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.

தன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், "எங்க காலத்துல,," எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.
ரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.

கச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா? கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.
ஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.

எஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?

பவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.

மொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.

பழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.

சிறில் அலெக்ஸ்