Thursday, June 21, 2007
பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் - 9
சிந்தாநதி'யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2
CVR'ன் ஞாபகம் 3
ஜி'யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8
முன்கதை சுருக்கம்
ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.
பார்த்த நியாபகம் இல்லையோ பாகம் - 9
கார் வயல்வெளிச் சாலையத் தாண்டி பிரதான சாலைக்கு வந்தது. குளிரூட்டியை இயக்கினான் வினோத். காருக்குள் மின் விசிறியின் மெல்லிய சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எண்ணற்ற கேள்விகள் நிறைந்த மௌன இடைவெளியில் வினோத்தும் பொன்னுசாமியும் வெகுதொலைவில் பிரிந்திருந்தனர்.
"மாமா." மௌன இடைவெளியின்் மோனக் கூக்குரலாய் அவன் விளிப்பு ஒலித்தது. சின்னசாமி அதற்குள் உறங்கிவிட்டிருந்தார். 'இரவு தூங்கியிருக்க் மாட்டார்' வினோத் நினைத்தான். நினைவுகள், தன் வாழ்வை மாற்றிப்போட்ட அந்த நாளை நோக்கித் திரும்பின.
"வினோத் என் ஃப்ரெண்ட் காவேரிகிட்ட வசந்த் ப்ரொப்போஸ் பண்ணப் போறான்."
"நிஜமாவா? வாவ்."
"என்ன நல்ல பொருத்தம் தெரியுமா. நம்ம விட அவங்கதான் ஐடியல்."
"அது எனக்கு அப்பவே தெரியுமே." சிரித்தான்.
"டேய். இப்ப நல்ல மூட்ல இருக்கேன் சண்டைய கெளப்பாத. நாளைக்கு ஒரு காதல் உருவாகப் போகுது. வசந்தப் பாத்தாவது ரொமாண்டிக்கா இருக்கிறது எப்டீன்னு கத்துக்க."
"ரொமான்ஸ் ஃபார் இடியட்ஸ் புக் எழுதியிருக்காரா அவரு?"
"இடியட்டுன்னு ஒத்துகிட்டியே."
"இல்லண்ணா ஒன்ன கா.... ஏ கிள்ளாத? நாம நாலு வரி பேசுனா அஞ்சாவது வரி சண்டதான்."
"நாளைக்கு ஈவினிங் ஷோ. சத்யம் காம்ப்ளெக்ஸ். காதலன். மறக்காம வா."
"ரெண்டுபேர் அசடு வழியுறதப் பாக்க கட்டாயம் வருவேன்."
அடுத்த நாள்.
"டேய் மச்சான் நான் லெட்டுடா ஏற்கனவே. உமாவப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. ப்ளீஸ் மச்சான் வண்டி வேணும்டா."
"டேய் பக்கத்துலதான் இருக்கேன் வந்துருவேண்டா?"
'என் பைக்க கேக்குறதுக்கே கெஞ்ச வேண்டியிருக்குது!'. இரவல் வாங்கிப்போன பைக் வந்து கிளம்புவதற்குள் லேட் ஆகியிருந்தது. உமா சொன்ன இடத்திற்கு வரும்போது அங்கே...அது... 'இவளா! இந்தக் காவேரியா உமா சொன்ன காவேரி?'
உமா காவேரி புராணம் பாடும்போதெல்லாம்... அவள் கவிதைகளை வாசித்தபோதெல்லாம் எப்படி புரியாமல் போனது என நொந்துகொண்டான் வினோத். தன் தோழியை மீண்டும் கண்டுகோண்டதில் மகிழ்ந்தான். 'உமாவுக்கு செம சர்ப்ரைஸ் இண்ணைக்கு.'
வசந்த் தந்த பூவைக் கையில் ஏந்தியபடி வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் காவேரி. வினோத்தா வசந்தா யாரிடம் முதலில் பேசுவது?
"வினோத்... ஏ வினோத்...எப்டி இருக்க ஆளே மாறிட்ட."
எதிரே வரும் வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கையிலிருந்த பூ ரோட்டில் விழுந்தது. எடுக்க கீழே குனிந்தவள் செருப்பு தடுக்கி ரோட்டில் விழுந்தாள். "காவேரீ..." வசந்த, உமா, வினோத்தின் கூக்குரலின் மத்தியில் தண்ணி லாறி காவேரியை இடித்து தூக்கிப் போட்டது.
ஐ.சி.யுவில் ஒரு வாரம் கழிந்தது. காவேரி சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.
டாக்டர் வசந்த், உமா, வினோத்தை அழைத்திருந்தார். அறையில் இரு டாக்டர்களும் நண்பர்கள் மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
"உங்கள்ல யாராவது காவேரியோட ரிலேட்டிவா?" டாக்டர் கேட்டார்.
"இல்ல. நான் ரூம் மேட். க்ளோஸ் ப்ரண்ட். வினோத் அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட். வசந்த் அவளோட பாய் ஃப்ரண்ட்." உமா சொன்னாள்.
"ம். பைத வே. இவர் டாக்டர் மாயன். சைக்கியாட்ரிஸ்ட். பொதுவா தலையில அடி பட்டவங்களுக்கு சைகியாட்ரிக டெஸ்ட் செய்வோம்."
"எனிதிங் ராங்்்? அவ நார்மலாத் தெரியுறாளே?" வசந்த் சொன்னான்.
"ஆமா. உடல் ரீதியா ஷீ லுக்ஸ் நார்மல்."
"அப்டீன்னா?"
"ஷீ ஹாஸ் பார்ஷியல்் அம்னீஷியா."
மூவரும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
"பழசு பலதும் அவங்களுக்கு நியாபகமில்ல. அவங்க அப்பா பேரக் கூட ஒரு சில நேரந்தான் நியாபகம் வச்சிருக்காங்க. கொஞ்சம் டிபிக்கல்ட் கேஸ்தான்."
"கடவுளே." உமா கண்கள் நிறைந்திருந்தன.
"அவ நினைவுல இருக்கிற ஒரே ஆள் வினோத்தான்."
"வினோத்தா?" வசந்த் அதிர்ந்துபோனான்.
"யெஸ். பள்ளித் தோழன் வினோத். சின்ன வயசுல அவளோட அப்பாவுக்கடுத்ததா நெருங்கிப் பழகிய முதல் ஆண் வினோத். அது அவளுக்குள்ளால ஆழமான பாதிப்ப ஏற்படுத்தியிருக்கு. வினோத்தோட காதல ஏத்துக்காமப் போனதப் பத்தி ரெம்ப பீல் பண்ணியிருக்கா. அவளோட கவிதகள்ல அவ ஏங்கி அழக்கூடிய நட்பு வினோத்துடையதுதான்." டாக்டர். மாயன் தொடர்ந்தார்்.
"ஆனா பிரச்சன வினோத்த பிரிஞ்சதோ அவனோட நினைவுகளோ இல்ல? இப்ப அவ வினோத்தான் தன் காதனண்ணு நம்பிகிட்டிருக்கா. சொல்லப்போனா வினோத்த பிரிஞ்சதுலேர்ந்தே அவனோட ஒரு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப அந்த கற்கனைகள் நிஜமாயிடுச்சு. வினோத் இஸ் ஹெர் பாய் ஃப்ரெண்ட். இத அழமா நம்புறா."
"வசந்தோட நல்லா பழகினாளே டாக்டர்." உமா குழப்பத்துடன் கேட்டாள்.
"ம். அது வினோத்துடைய குணங்கள் வசந்த்கிட்ட இருந்ததால இருக்கலாம். அல்லது வசந்த வினோத்தா அவ கற்பனை செய்திருக்கலாம். ஷி இஸ் எ க்ரியேட்டிவ் பெர்சன். சிலருக்கு கற்பனைசக்தி தங்களோட தினசரி பிரச்சனைகளை சமாளிக்கவும், மனத ஸ்திரமா வச்சிருக்கவும் உதவுது."
"உங்க மூணுபேரப் பத்தியும் ஓரளவு எனக்கு தெரிஞ்சதால டாக்டர் மாயன வச்சி பேசலாம்ணு முடிவு செஞ்சேன்."
"இதுக்கு ட்ரீட்மெண்ட்."
"லாங் டெர்ம். ரெம்ப நாள் ஆகலாம். ஆனா அதுவரைக்கும் காவேரியோட கற்பனை உலகத்த கலைக்கக் கூடாது. உண்மைகள அவளால ஜீரணிக்க முடியாமப் போயிடுச்சுண்ணா. இட் மைட் பி ஃபேட்டல். உயிரே கூடப் போகலாம்".
"அப்ப..?"
"அவள வினோத்தால.. வினோத்துடைய காதலால மட்டுந்தான் காப்பாற்ற முடியும். காவேரிக்கு இப்ப இருக்கிற முழுமையான நினைவு அல்லது கனவுண்ணும் சொல்லலாம், வினோத்த பத்தினதுதான்."
உமா வினோத்தின் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். வினோத் அவளை மெலிதாய் அணைத்திருந்தான். வசந்த் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்திருந்தது.
==================================================>>>>>>>>
நண்பர்களே
இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.
இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.
இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.
ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.
அடுத்ததாக பத்தாவது பகுதியை எழுத சேவியரை அழைக்கிறேன்.
அன்புடன்,
சிறில் அலெக்ஸ்
Sunday, March 11, 2007
6 வார்த்தை கதைகள்...
நிலவை அடைந்தோம். திரும்பிப் பார்த்தேன். உலகம் உருண்டைதான்.
எட்டுப்பட்டி கிராமம். ஆலமரத்தடி கூட்டம். தூக்கில் நாட்டாமை.
.E.D.E.N. விண்கலம் தரையிறங்கியது. ஆதாம் ஏவாள் வெளிவந்தனர்.
'டேய் விடுடா விடுடா'
'இருடீ'
'துரோகி விடுடா'
கால எந்திரம். தவறான கட்டளை. 'நாளையை சென்றடை'.
'அம்மா'
'மகனே!'
'போரில் தோற்றுவிட்டேனம்மா'
'என்ன?'
'அம்மா...!'
போரில் மரணம். நெஞ்சில் தோட்டா. அம்மா அழுகிறாள்.
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. சிவப்பாய் என்னது?
இன்னொரு வெர்ஷன்
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. செந்நீர் பாய்ந்தது.
Tuesday, February 06, 2007
இயேசு சொன்ன கதைகள் - 4
கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார்.
மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.
இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். சோதனையில் எம்மை விழ விடாதெயும். தீமையினின்று எங்களை விடுவித்தருளும். ஏனெனில் அரசு வல்லமையும் மாட்சிமையும் என்றென்றும் உமதே.'
மிகவும் எளிமையான அதெவேளை இறைவனைத் தந்தையென உரிமையோடு அழைத்து வேண்டும் செபம் இது.
செபங்கள் கேட்கப்படுகின்றனவா? இதை நிருபித்தால் கடவுளையும் நிருபிக்கலாமே? எனும் கேள்விகள் எழுகின்றன. அதிசயங்கள் பலவும் எல்லா காலகட்டங்களிலும், எல்லா மதங்களிலும், வேண்டுதல்களின் பலனாக விளைவதாகச் சொல்லப்படுகின்றன. கடவுள் எப்படி நம்பிக்கைக்குட்பட்டவரோ அதேபோல அற்புதங்களும் அறியப்படுகின்றன.
கடவுள் உதவுவார் எனும் நம்பிக்கை தன்நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். சோதனைக் காலங்களில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேண்டுதல்களளே துணை. நம்பிக்கையே கைத்தடி.
வேண்டுதலின் உளவியல் கூறுகளை ஆராய்ந்தால் அதன் மனித பலன்கள் பலவாக இருக்கும். சோதனை மிகும் வேளையில் அது எப்படியாவது விலகும் எனும் நம்பிக்கை ஊக்கம்தருமே தவிற வேறென்ன?
மீண்டும் மீண்டும் செபிக்கும்போது ஒரு கவலைகுறித்தான (கவலை தவிர்த்த) மாற்றுச் சிந்தனை நம்மில் பிறக்கிறது.
ஒரு ஊரில் ஒரு நீதிபதி இருந்தான். கடவுளை அஞ்சாதவன்; மனிதரை மதிக்காதவன். அந்த ஊரில் இருந்த ஒரு விதவை நீதி கேட்டு அவளிடம் வருவது வழக்கம். பலமுறை வந்தும் அந்த நீதிபதி மனம் கசியவில்லை. இறுதியாய் அந்த நீதிபதி 'நான் கடவுளுக்கு அஞ்சாதவனாயும் மனிதரைப் பற்றி கவலையற்றவனாயும் இருந்தபோதும் இவள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வதால் இவளுக்கு நீதி வழங்குவேன்.' என்றான்.
'அந்தப் பண்பற்ற நீதிபதியைப் பாருங்கள். இவனைவிட விரைவாக இரவு பகலாய் தன்னை வேண்டும் மக்களின் வேண்டுதலைக் கடவுள் தரமாட்டாரா?' என்றார் இயேசு.
நன்றி: தமிழோவியம்
Monday, January 29, 2007
இயேசு சொன்ன கதைகள் - 3
பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?
"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"
இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.
மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.
ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.
சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.
மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.
நன்றி: தமிழோவியம்
Tuesday, January 16, 2007
இயேசு சொன்ன கதைகள் - 2
நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான். இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.
"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று. ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது. தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.
ஒருநாள் ஒரு சட்ட வல்லுனர் இயேசுவிடம் கேட்டார்,"அயலானை அன்புசெய் என்கிறீரே யார் என் அயலான்?(Who is my neighbour?)"
இயேசு ஒரு கதையைச் சொன்னார்.
"ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு பயணித்தான். அவனை கள்வர் சூழ்ந்தனர். அடித்து, குற்றுயிராய் அவனை விட்டுச் சென்றனர்.
தற்செயலாய் ஒரு சாமியார் அங்கே வந்தார், இவனைக் கண்டார், ஒதுங்கிச் சென்றார்.
மத குரு ஒருவர் வந்தார் அவரும் இவனைக் கண்டு ஒதுங்கி சென்றார்.
சமாரியன் ஒருவன் வந்தான். இவன்மேல் பரிவு கொண்டான். அவனது காயங்களுக்கு கட்டுப்போட்டு மருந்திட்டான். தன் கழுதையின் மேல் காயம்பட்டவனை ஏற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்து கவனித்தான். மறுநாள் விடுதிக் காப்பாளனிடம் கொஞ்சம் காசைத் தந்து 'இவனை கவனித்துக்கொள்; நீ அதிகமாய் இவன்பொருட்டு என்ன செலவளித்தாலும் நான் மீண்டும் வரும்போது திருப்பித் தருவேன்' என்றான்.
இந்த மூவரில் யார் கழ்வரால் தாக்கப்பட்டவனுக்கு நல்ல அயலானாய் செயல் பட்டார்?" எனக் கேட்டார் இயேசு.
நல்ல சமாரியன் கதை(The Good Samritan) என புகழ்பெற்ற இந்தக் கதை சொல்லும் உண்மையை விளக்கத்தேவையில்லை.
'பலனை எதிர்பாராதே' என கீதை சொல்வதும் இதைத்தானோ ?
நன்றி: தமிழோவியம்
Friday, January 12, 2007
இயேசு சொன்ன கதைகள் - 1
இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு.
தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில காந்திகள் மலர்ந்திருப்பார்களோ என்னவோ?
இந்த தொடரின் மூலம் இயேசு சொன்ன சில உவமைகளை, உவமைக்கதைகளை சுவைக்கத் தருவதில் மகிழ்ச்சி.
ஒரு கருத்தை பக்கம் பக்கமாய் எழுதிவைப்பதைவிட, பலமணி நேரங்கள் விவாதிப்பதைவிட ஒரு சின்னக் கதையின் மூலம் எளிதாய் சொல்லிவிட முடியும். ஜென் கதைகளானாலும், பஞ்சதந்திரக் கதைகளானாலும், முல்லாவின் குறும்புக்கதைகளாயினும், தெனாலிராமனின் புத்திக் கதைகளாயினும் சில வரிகளுக்குள்ளேயே மாபெரும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எளிய மனத்தோருக்கு வலிய கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற சாதனங்கள் கதைகள்.
இறை வார்த்தையை அல்லது நல்ல கருத்துக்களை கேட்பதுபற்றி இயேசு ஒரு கதை சொல்கிறார்.
விதைப்பவன் ஒருவன் விதைக்கச் செல்கிறான். அவன் விதைக்கும் விதைகளில் சில பாதையோரம் வீழ்ந்தன பறவைகள் அவற்றை தின்றுவிட்டன. சில பாறைகள் நிறைந்த நிலத்தின்மேல் விழுந்தன, அங்கே மண் அதிகம் இல்லாததால் அவை எளிதில் முளைவிட்டன ஆயினும் சூரியன் வந்ததும் வேரூன்றியில்லாததால் அவை சுட்டெரிக்கப்பட்டு உதிர்ந்தன. சில முட்புதர்களின் நடுவே வீழ்ந்தன. அவை வளர்ந்ததும் முட் புதர்களால் நெரிக்கப்பட்டு அழிந்தன. இன்னும் சில நல்ல நிலத்தில் விழுந்தன, பயிர்களாகி நூறு, அறுபது அல்லது முப்பது மடங்கு பலனளித்தன1.
இந்தக் கதையை சொல்லிவிட்டு இயேசு "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
மிகவும் எளிமையான ஒரு கதை. இதை இயேசுவே விளக்குகிறார்.
விதைப்பவன் விதைத்த விதைகள் இறைவார்த்தைகள். பாதையோரம் விழுந்த விதைகளை பறவைகள் வந்து தின்றதைப்போல சிலர் மனதில் விழும் வார்த்தைகளை சாத்தான் வந்து அள்ளிப்போகிறது. பாறை நிலத்தில் விழுந்தவையோ இறைவார்த்தைகளைக் கேட்டு தற்காலிகமாக மனமகிழ்ந்து செல்பவரைப்போல, அங்கே அந்த விதைகள் சொற்ப காலமே வாழ்கின்றன. முட்புதர்களில் வீழ்ந்த விதைகளைப்போல சிலர் மனதில் இறைவார்த்தைகள் முளைவிட்டு செடியாகின்றன ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பணம், சுகம் என உலகத் தேடல்கள் செடிகளை நெரிப்பதால் அவை பயிராவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ கடவுளின் வார்த்தையை கேட்டு மனதில் சுமப்பவர்களைப்போல. பயிராகி பலனளிப்பவர்கள் இவர்களே.
கேட்பது அல்லது கற்பது பற்றிய எனக்குப் பிடித்த ஜென் கதை.
ஒரு குருவிடம் ஒருவன் போய் "எனக்கு உலகில் எல்லாம் தெரியும் உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்கு கற்றுத் தாருங்கள்", என்றான். குருவோ, "முதலில் தேனீர் அருந்துவோம் என்றார்". தேனீர் வந்ததும் கோப்பைகளை நிரப்ப ஆரம்பித்தார் குரு. கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார். வந்தவன் குழம்பினான். இன்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார் குரு. வந்தவன்,"என்ன செய்கிறீர் அந்தக் கோப்பை நிறைந்திருக்கிறது இனியும் ஊற்றினால் கீழே கொட்டும் என்பது உமக்குத் தெரியாதா?" என்றான். குருவோ,"போய் உன்னை காலி செய்து கொண்டு வா. பிறகே என்னால் உன்னில் ஊற்ற இயலும்." என்றார்.
"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".
நன்றி: தமிழோவியம்
Thursday, December 28, 2006
நாவல் எழுதுறேங்க....
ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.
இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.
நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )
அத்தியாயம் ஒன்று : விடியல்
கடலும், வானமும் இரவின் கருநீலம் களையத் துவங்கின. கலங்கரை விளக்கொளி மங்கலாகத் துவங்கியிருந்தது. சேவல்கள் ஏற்கனவே விழித்துவிட்ட ஊரை எழுப்பக்கூவின. பாறை மீது சில கடல் பறவைகள் தங்கள் நாட்குறிப்பை சரிபார்த்துக்கொண்டன. கிழக்கே வானம் மெல்ல சிவந்திருந்தது. தூக்கம் கலைந்தெழுந்தன கடல் அலைகள், விடியலில் தினமும் பாடும் பாடல்களைப் பாடிக் கொண்டும், கடற்கரையில் தவமிருக்கும் பாறைகளை விழிக்கச்சொல்லியும். நண்டுகள் சில கடலலை மூடிவிட்டிருந்த குழிகளின் கதவுகளைத் திறந்துகொண்டிருந்தன. கடல்மேல், தூரத்தில், மின்மினி விளக்கொளிகள் மீனவர்கள் விடியலுக்கு முன்னமே கடலுக்குப் போனதைக் காட்டின. இரவின் குளிர்தென்றல் கடைசியாய் ஊரை வலம் வந்துகொண்டிருந்தது. ஆண்களை கடலுக்கு அனுப்பிய பெண்கள் விடியலென்றும் பாராமல் சத்தமாய் பேசிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கையில் செபமாலையுடன் சில கிழவிகள் கோவில் நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.
கோவிலில் இரண்டாம் மணி அடித்தது. கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த விக்டர் விழித்துக்கொண்டான்.
'வீட்டுக்குப் போணுமா?' குழப்பமாயிருந்தது விக்டருக்கு.
"எல..பத்தாங்க்ளாஸ் வரைக்கும் படி. பெறவு கடலுக்குப் போ." அம்மா சொன்னது நியாபகம் வந்தது.
"எம்மா எனக்கு படிக்க இஸ்டமில்ல. ஸ்க்கூல்ல வாத்தியார் அடிக்காரு தெரியுமா?"
"நீ பாடம் எழுதாம போனியோ? வாத்தியார்ட்ட நான் சொல்லுதேம்புள்ள ஸ்கூலுக்குப் போல ராசா."
"நான் அண்ணங்கூட வலைக்குப் போறேன்."
"அண்ணன் கேட்டா அடிப்பான்ல. ஒழுங்கா பள்ளியூடத்துக்கு போ."
அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் அண்ணன் பையிலிருந்து 30 ரூபாய் எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று இரண்டு திரைப்படங்கள் பார்த்துவிட்டு பரோட்டா சகிதமாய் ஊருக்கு வரும்போது இரவு 10:30.
பஸ் ஸ்டாப்பில் விக்டரின் அண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
"எல இங்க வா. அம்மாட்ட ஸ்க்கூல் போவ மாட்டென்னியாம்? இங்க வால எல." அண்ணன் அடிப்பான் எனத் தெரிந்ததும் ஓட்டம்பிடித்தான் விக்டர்.
மெத்தைகளை விட மென்மையான மணல் பரப்பை சமன் செய்து படுத்துக்கொண்டான். 'கடலுக்குப் போணும், காசு சேத்து தங்க வாட்ச் முழுக்கை சட்ட எல்லாம் போடணும். நெனச்ச நேரம் நார்கோலுக்குப் போயி படம் பாக்கணும். ஃபாரின் போயிட்டு மச்சி வீடு கட்டணும். அண்ணனையும் ஃபாரினுக்கு கூட்டிட்டுப் போணும்.' பல எண்ணங்களோடு கடல் காற்றின் மெல்லிய வருடலில் தூங்கிப் போனவன் காலையில் கோவில் மணி அடிக்க எழுந்துகொண்டான். இன்னும் முழுதுமாய் விடிந்திருக்கவில்லை. மெல்லிய இருள் சூழ்ந்த விடியல் சமையம் அது.
கடல் அலை நனைத்துச் சென்ற மணல் கொஞ்சம் எடுத்து பல்துலக்கி உப்புத் தண்ணீரிலேயே கழுவினான். பாறை மறைவில் காலைக் கடன் கழித்துவிட்டு கடலில் கழுவிக்கொண்டிருக்கும்போது ஈரமாய் ஒரு கை அவன் பின்பக்கம் தொட்டது. திடுக்கிட்டு எழுந்தான். கால் சட்டையை மாட்டிக்கொண்டு இரண்டு எட்டு ஒடிச் சென்று திரும்பிப் பார்த்தான். கடலினுள்ளே திரும்பிச் சென்ற அலை மட்டுமே தெரிந்தது. பயத்தில் பார்வை உறைந்துபோனது. மீண்டும் அலை கரை திரும்பியது. அப்போது அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது திரும்பிவந்த அலையில் கிடந்த பிணம்.
அலை உடலை மீண்டும் உள்ளிழுத்தது. விக்டர் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அலை கரைக்குத் திரும்பியது. சாப்பாட்டு இலையில் வேண்டாத பதார்த்தத்தை விலக்கி வைக்கும் ஒரு சிறிய செயல்போல, கடல், பிணத்தை விக்டரின் காலடியில் விட்டுச் சென்றது.
அத்தியாயம் 2 - ஜூலை 7 1974
'ஆலையத்தில் நாம் நுழைகையிலே
புது நினவுகள் நுழைகின்றன..'
பாடற்குழுவின் வருகைப்பாடலோடு ஞாயிற்றுக்கிழமையின் முதல் பூசை ஆரம்பித்தது. பாதிரியார் செல்வராஜ் பூசைக்கு உதவி செய்யும் சீசர் பிள்ளைகள் முன் நடக்க பலி பீடம் வந்து வணங்கி பாடலில் சங்கமித்தார். முதல் பூசைக்கு வழக்கமாக வரும் கூட்டம். காலையில் ஆறுமணிக்கே எழுந்து பூசைக்கு வருவதென்பது பலருக்கும் பாவ பரிகாரமாய் பட்டது. சிலரே அந்தப் பரிகாரம் செய்துகொண்டனர்.
"பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயரால்." பாடி ஆரம்பித்தார் செல்வராஜ்.
"ஆஆஆஆ மென்" மக்களும் பாட்டில் பதிலளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பூசை ஃபாதர் செல்வராஜுக்கு பிடிக்கும். திருவிழாக்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலுமே பாடல் பூசை நடத்தப் படுமென்பதால். இசையில் ஆர்வமுள்ளவர். சில பாடல்களை இயற்றி, இசையமைத்து கோவிலில் பாடவும் வைத்திருக்கிறார்.
"இயேசுவில் அன்பானவர்களே, இன்று இறைவன் நம்மை அவரின் சாட்சிகளாக வாழ அழைக்கிறார். இன்றைய சுவிசேஷ வாக்கியங்கள், இயேசுவை உலகுக்கு பறைசாற்ற நம்மை அழைக்கிறது. 'இறை அழைத்தல்' சாமியார்களுக்கும் திருக்கன்னியர்களுக்கும் மடுமல்ல பொதுமக்களுக்கும் உரித்தானது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த இறை அழைத்தலை மறுதலித்து நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோமாக." பூசைக்கான அறிமுகவரிகளை பேசி பாவத்திற்காக மனம் வருந்த மக்களை அழைத்தார். கூட்டம் அமைதியாய், கைகூப்பி தலை தாழ்த்தி நின்றது, சிலர் பாவங்களை நினைத்து மனம் வருந்தியும் சிலர் வழமையாகவும்.
கோவிலின் வெவ்வேறு கதவுகள் வழியாக எப்போதும் சிலர் உள்ளே வந்துகொண்டேயிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடந்திருநாட்கள் என குறிக்கப்பட்ட சில நாட்களிலும் முழுப் பூசையில் பங்கெடுக்கவேண்டும் என்பது திருச்சபையின் சட்டங்களில் ஒன்று. 'பூசையில் சுவிசேஷ வாசகத்துக்கு முன்னால போனா முழுப் பூச பாத்த மாதிரி.' என்கிற நினைப்பு பலவிசுவாசிகளுக்கும் இருந்தது.
பெண்கள் சேலையால் தலையை மூடியிருந்தனர். ஆண்கள் வேட்டி சட்டையிலும் சில வயதானவர்கள் சட்டையில்லாமல் வெறும் தோள் துண்டோடும் அமர்ந்திருந்தனர். முன் வரிசையில் சில சிறுவர்கள் ஏற்கனவே தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். பாடகர் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் சிஸ்டர் ஆரோக்கியம் ஆர்மோனியத்தை, தனக்கு மட்டுமே கேட்கும்படி முனகவைத்து ராகம் பழகிக்கொண்டிருந்தார்.
"சகோதர சகோதரிகளே நம் பாவங்களின் பொருட்டு இறைவனிடமும் நம் சகோதரிடமும் மன்னிப்பை வேண்டுவோமாக. எல்லாம் வல்ல இறைவனிடமும்..." பாவமன்னிப்பு ஜெபத்தை ஆரம்பித்துவைத்தார் செல்வராஜ்.
"சகோதரே உங்களிடமும்," மக்கள் தொடர்ந்தனர்,"நான் பாவி என்பதை ஏர்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமைகள் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என் பெரும்பாவமே!..."நெஞ்சில் மூன்றுமுறை தொட்டுக்கொண்டனர். செபம் தொடர்ந்தது. 'ஆண்டவரே இரக்கமாயிரும்' மற்றும் 'உன்னதங்களிலே இறைவனுக்கு' பாடல்களுக்குப் பின் மக்கள் அமர்ந்திருக்க, முதல் வாசகம் வாசிக்க வந்தார் உபதேசியார்.
"முதல் வாசகம். இசையாஸ் எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். அதிகாரம் 66 வசனங்கள் பத்திலிருந்து பதிநான்கு வரை. எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளோடேகூட மகிழ்ந்து, அவளைக் குறித்து களிகூறுங்கள்; அவள் நிமித்தம் துக்கத்திலிருந்த நீங்கள் எல்லோரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்."
பெண்கள்பகுதியில் இரண்டாம் கதவின் அருகே அமர்ந்திருந்த 'மூக்கி' எனப்படும் தெரசம்மாவிற்கு கீழே அமர்ந்திருப்பது அசௌகரியமாயிருந்தது.
"நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு நிறைவடைந்து, நீங்கள் சூப்பிக் குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்", உபதேசியார் வாசகத்தை தொடர்ந்தார். "கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்:..."
மூக்கிக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்தது.
"இதோ நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், இனங்களின் மகிமையை கரைபுரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் ஓடச்செய்வேன்."
மூக்கி முகத்தை சுளித்துக்கொண்டு முனகலோடு வலியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். எழுந்து நிற்கவும் இயலவில்லை அவளால்.
"பால்குடிக்கும் மகவைப் போல நீங்கள் அவளின் கரங்களில் சுமக்கப்படுவீர்கள்; அவளின் தொடைகளில் தாலாட்டப் படுவீர்கள்"
பெண்கள் பகுதியில் மூக்கி இருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"ஒரு தாய் தன் மகனை தேற்றுவது போல.." உபதேசியார் தொடர்ந்தார்."நான் உன்னை தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்".
"எம்மா..." நிறைமாதக் கர்ப்பிணி மூக்கி அலறினாள். சப்தம் கேட்டதும் ஃபாதர் செல்வராஜ் எழுந்தார் உபதேசியாரை வாசகத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு.
"என்னாச்சு?" என்றார்.
பெண்கள் சிலர் மூக்கியை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
உபதேசியாரின் மனைவி முன்வந்தார்,"நம்ம பரட்டையார் மவளுக்கு ப்ரசவ வலி. இப்ப வெளிய கொண்டுபோகமுடியாது. இங்கயே பாக்கணும். ஆம்பிளைகள வெளிய போச்சொல்லிருங்க."
"ஏன் இவங்க கோயிலுக்கு வந்தாங்க? கூட யாராவது வந்திருக்காங்களா? "
"அவ ஆத்தா இருக்கு."
"பரட்டையார் மகன்னா செபாஸ்டின் தங்கச்சியா?"
"ஆமா ஃபாதர்."
"டேய் நீ போய் செபாஸ்டின் சார்கிட்ட சொல்லிடு." சீசர் பிள்ளை ஒருவனை ஏவினார் ஃபாதர்.அங்கே வியப்பாய் கூடியிருந்த மக்களைப்பார்த்து,"எல்லாம் கொஞ்சம் வெளியப் போங்க ரெண்டாம்பூசைக்கு வாங்க." எனச் அறிவித்தார். சிஸ்டர் ஆரோக்கியத்திடம் போய்,"சிஸ்டர் என்னானு பாருங்க. நான் பின்னால இருக்கேன் அவசரம்னா சொல்லுங்க." எனச் சொல்லிவிட்டு சக்ரீசுக்குள் நுழைந்தார்.
மூக்கி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். கீழே படுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவள் கையை பிடித்திருக்க பிரசவிக்கத் தயாரானாள். உபதேசியாரின் மனைவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியே போகச் சொல்லிவிட்டு கோயிலின் கதவுகளை மூடிக்கொண்டிருந்தாள்.
மூக்கியின் போராட்டம் தொடர்ந்தது. ஆளுக்காள் ஏதேதோ பேசிக்கொண்டும் அவளை முயற்சி செய்யச் சொல்லிக்கொண்டுமிருந்தனர்.
"எக்கி, தல தெரியுது இன்னும் கொஞ்சம் முக்கு." செவிலியாய் செயல்பட்டுக்கொண்டிருந்த பெண் கூறினாள். கவலையும் எதிர்பார்ப்பும் படர்ந்த முகத்துடன் மூக்கியின் ஆத்தா பார்த்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு பொம்மையைக் கையாழுவதுபோல இரத்தமும் இன்னும் திரவங்களும் சொட்டிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கினாள் செவிலிப் பெண். குழந்தையின் அழுகுரல் கோவிலுக்குள் எதிரொலித்தது. சன்னல்களில் கூடுவைத்திருந்த சில சிட்டுக்குருவிகள் குரலெடுத்துப் பாடின.
"மூக்கி, பொட்ட புள்ள பொறந்துருக்குடீ." செவிலி சொன்னாள்.
"சம்மனசு பொறந்திருக்கு தெரசம்மா." சிஸ்டர் ஆரோக்கியம் சொன்னார்.
"கோயிலுக்குள்ள பொறந்தபுள்ள. ஏஞ்சல்னு பேர் வைங்க."
கோவிலின் வெளியே செவத்தியான் என அழைக்கப்பட்ட செபஸ்டியான் வாத்தியார் தங்கையின் குழந்தையைப் பார்க்க ஆவலோடு நின்றுகொண்டிருந்தார். செவத்தியான் மகன் இனியனும் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு குழந்தையைப் பார்க்கும் ஆவலில் நின்றுகொண்டிருந்தான். கோவில் கதவு திறந்தது. செவத்தியானின் அம்மா வெளிவந்தார்.
"ஆத்தா என்னாச்சு?"
"திடீர்னு வலி வந்து படுத்துட்டா. கோயில்லையே கொழந்த பொறந்திடுச்சு." செவத்தியானின் அம்மா சொன்னார். பேரனைப் பார்த்து,"ஏல, இனியா, ஒன் பொண்டாட்டி பொறந்துருக்கால."
இனியன், கண்கள் பிரகாசிக்க வெட்கத்தோடு சிரித்தான்.
அத்தியாயம் 3: கடலும் கடல் சார்ந்த இடமும்
முட்டம் ஒரு சராசரி மீனவக் கிராமம். நாகர்கோவிலிலிருந்து 16 அல்லது 17 கி,மீ தென் மேற்கில் அமைந்துள்ளது. 'சேரியா முட்டம்' எனவும் 'லைட் ஹவுஸ் முட்டம்' எனவும் வழங்கப்படுகிறது. முட்டத்தின் சிறப்பு அதன் நிலப்பரப்பு எனலாம். கடலுக்குள் முட்டி நிற்கும் நிலம். கடலைத் தடுத்து நிற்கும் குன்றின்மேல் ஊர். வீடுகள் குன்றின்மேல் கட்டப் பட்டிருப்பதை அங்கு வாழ்பவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உற்றுநோக்கியே அதை உணர முடிந்தது.
முட்டத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது அதன் கரையில் வீழ்ந்து கிடக்கும் பாறைகள். காலம் செதுக்கிய சிலைகளாக, என்றோ சிலர் பூஜித்துவிட்டு விட்டுப் போன கோவில்கள் போல அவை நின்றுகொண்டிருக்கின்றன.
மேலமுட்டம், நடுமுட்டம், கீழமுட்டம் மற்றும் ஏப்பு முட்டம் என ஊர் பிரிக்கப் பட்டிருந்தது. எழுபதுகளில் மேற்கே இருந்த செம்மண்காட்டை சமன் செய்து 'சிவந்தமண்' என்ற ஊர் உருவாக்கப்பட்டது. இன்று 'ஜேம்ஸ் நகர்' எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கை எழுப்பிய செம்மண் அகழிகள் நிறைந்த இடம் சிவந்தமண்.
சிறிய ஓட்டு வீடுகளுக்கும் மத்தியில் எழுந்து நிற்கும் பழமையான கோவில். கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்டிருக்கும் வெகுசில அழகிய கோவில்களில் ஒன்று. கடவுள்கள் பக்தர்களைக் காட்டிலும் பணக்காரர்கள் என்பதை உணர்த்தும் கோவில். கோவில் தவிர்த்து ஒவ்வொரு தெருவிலும் ஒரு புனிதரின்பெயரில் அமைந்திருக்கும் சில குருசடிகள்.
படகுகளை கரையில் நிறுத்திக்கொள்ளவும், பிடித்துவந்த மீன்களை விற்கவும் உள்ள கடற்கரை தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகமில்லாத கோட்டாமடை எனும் கடற்கரைப் பகுதி மேற்கில் உள்ளது. இங்கே எப்போதாவது வரும் சில சுற்றுலா பயணிகள் தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதில்லை. இரவில் அலைகள் மட்டுமே இங்கே சஞ்சரித்தன.
விக்டர் அங்கேதான் அலைகள் இவன் பொறுப்பில் விட்டுச் சென்ற பிணத்தின் முன் நின்றுகொண்டிருந்தான். ஊருக்குள் கடற்கரையில் உறங்க பலரும் வருவதுண்டு என்பதால் விக்டர் தனித்துறங்க கோட்டாமடையே நல்ல இடமாயிருந்தது.
ஊருக்குள் குளிப்பாட்டி சிலுவை எழுதப்பட்ட கறுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சில வயதானவர்களின் உடல்களைத் தவிர வேறு உயிரற்ற மனித உடல்களை பார்த்திருக்கவில்லை விக்டர். பயத்தில் தன் கால்சட்டை ஈரமாயிருப்பாதை உணர்ந்தான்.
பிணத்தின் நீலச் சட்டை கிழிந்துபோயிருந்தது. இடுப்புக்குக் கீழே சிவப்பு நிற உள்ளாடை மட்டுமே இருந்தது. மண்ணுக்குள் செல்ல விளைந்தோ என்னவோ, கவிழ்ந்தே கிடந்தது. அழுகிப் போயிருக்கவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள். சில பெரிய காயங்களில் வெள்ளையாய் சதை தெரிந்தது. உற்றுக் கவனித்ததில் கால்கள் முறிந்ததுபோல வளைந்திருந்ததைப் பார்த்தான் விக்டர். கையில் தங்க வாட்ச் உள்ளே தண்ணீர் ஏறி பனித்திருந்தது.
கொஞ்சம் சுதாகரித்து பக்கவாட்டில் நடந்து முகம் தெரிகிறதா எனப் பார்த்தான். கவிழ்ந்திருந்த முகத்தை திருப்பிப்போட காதைப் பிடித்து தூக்கினான். விறைத்துப்போயிருந்தது காது. வேண்டாத ஒன்றை நுனிவிரல்களில் பிடித்து தூக்குவதைப் போல தூக்கி முகத்தை திருப்பினான்.
பிணத்தின் முகம் சிதைந்திருந்தது. முன்தலை பாறையில் அடிபட்டு நைந்து அடையாளம் தெரியாமல் கோரமாயிருந்தது முகம். பற்கள் கோரமாய் கிழிந்து தொங்கின. கடல்மணல் ஒட்டியிருந்தும் கோரம் தெளிவாய் தெரிந்தது.
கழுத்தில் சிலுவை டாலருடன் தங்கச் சங்கிலி.
இன்னொருமுறை முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான் விக்டர்.
அத்தியாயம் 4: 1979 ஒரு பள்ளி நாள்.
பள்ளிக்கூட மணி அடித்து குழந்தைகள் கூட்டமாய் வகுப்புகளிலிருந்து வெளியே ஒடினர். பள்ளிக்கு வெளியே பெட்டியில் வறுத்த காணம், தேங்காய் புண்ணாக்கு, புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய், தெங்கா முட்டாய் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் சேர்ந்தது. குச்சி ஐஸ் பால் ஐஸ் விற்பவர் உலோகத்தால் செய்யப்பட்டைருந்த ஒலிஎழுப்பியை இயக்க ஆரம்பித்தார். பள்ளிக்கூட மணியின் தொடர்ச்சியாய் அது ஒலித்தது.
வகுப்பறைக்கு வெளியே இனியன் முழங்காலில் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அந்த நீண்ட திண்ணையின் கடைசித் தூணின் பின்னால் மறைந்து நின்று சிறுமி ஏஞ்சல் இவனை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வகுப்பிலிருந்து செபஸ்டியான் வாத்தியார் வெளியேவந்தார்.
"டேய். எழும்பு. இனிமே இப்படி பண்ணுன. அடி பின்னிருவேன். வீட்டுக்குப்போ. வீட்ல வந்து இருக்கு ஒனக்கு. போ..போ."
தந்தையை இறுகிய முகத்துடன் பார்த்தான். முறைப்பிற்கும் அவன் பார்வைக்கும் சற்றே வித்தியாசம் இருந்தது.
கணக்கு வாத்தியார் வந்தார்.
"என்ன சார், பையன் என்ன செஞ்சாங்?"
"இவனா நம்ம செலின் டீச்சர பட்டப்பேர் சொல்லி கூப்டிருக்கான் சார். அதுவும் பஸ்டாண்ட்ல எல்லார் முன்னாலயும் வச்சு கோழீன்னுட்டு ஓடியிருக்கான்"
"இவனா?"
"ம்."
இனியன் இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தான். கணக்குவாத்தியாரும் செபஸ்டியானும் ஆசிரியர் அறையை நோக்கி நடந்தனர்.
"அவுங்க பேரு கோழியா?"
"மெதுவா சார். பாவம் எங்கிட்ட சொல்லும்போ அழுதுட்டாங்க. அவங்க கொண்ட போடுறதப்பாத்து .."
"ஓகோ. இவனுக்கு செலின் பாடம் எடுக்கமாட்டாங்களே சார்."
"என் தங்கச்சி பொண்ணு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கிறாளே, அவள அடிச்சுட்டாங்கன்னு இந்தக் கோவம்." சிரித்தபடியே சொன்னார் செவத்தியான்.
"ஓகோ. சின்னப்பசங்க. சார் ஒங்ககிட்ட வாங்குன அந்த ஃபைவ் ஹண்ரட் இந்தாங்க. ரெம்ப தேங்க்ஸ்."
"பையனுக்கு அட்மிஷன் கெடச்சுதா சார்?"
"ஆமா சார். அடுத்தவாரம் மெட்ராஸ் போறோம்."
பள்ளிக்கு வெளியே ஏஞ்சலுக்கு ஐஸ் வாங்கித் தந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் இனியன்.
"இனியா, மாமா ஏன் ஒன்ன மொழங்கால்ல நிக்கவச்சாவு?" ஏஞ்சல் கேட்டாள்.
"குச்சி ஐஸ் நல்லா இருக்காடி?" இனியன் பதிலை தவிர்த்தான்.
"நாளைக்கு சேமியா ஐஸ் வாங்கித் தருவியா?"
"சரி." இனியன் தலையாட்டினான்.
ஏஞ்சலின் புத்தகப் பையையும் சேர்த்து தோளில் ஏற்றிக்கொண்டிருந்தான் இனியன் அவன் வலக்கை ஏஞ்சலின் வலக்கையை பற்றியிருந்தது.
"இனியா எங்கம்மா கலர்குச்சி வாங்கி தந்துச்சே?" சிறு துள்ளலோடு சொன்னாள் ஏஞ்சல். இனியனின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்த பென்சில் பெட்டியை திறந்து காண்பித்தாள்.
"கலர் குச்சி."
"எங்கிட்ட சாக்கட்டி இருக்குதே?" பைகளை கீழே இறக்கி வைத்து தன் பென்சில் பெட்டியிலிருந்த வெள்ளை சாக்பீசை எடுத்துக் காட்டினான் இனியன்.
"ஐ. எனக்கு?"
சாக்பீசை உடைத்துப் பகிர்ந்தான். வகுப்புத் தலைவன் என்பதால் சாக்பீஸ் எடுத்துவரும் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவ்வப்போது ஒரு சாக் பீசை பாக்கெட்டில் போட்டுவைப்பது வழக்கம். வாத்தியார் பையன் என்பதில் பல சௌகவுரியங்கள் இருக்கவே செய்தன. சாக் பீஸ் வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
ஏஞ்சல் வீடு வந்தது. பக்கத்து வீட்டில் பொனிப்பாஸ் கிழவர் இவர்கள் கைகோர்த்து வருவதைப் பார்த்து சிரித்தார்.
"ஏல. ஒங்களுக்கு எப்பம் கல்யாணமாச்சு? எப்பப் பாத்தாலும் கையப் புடிச்சுட்டு சேந்தே நடக்கிய? ஒரு சோடியாத்தான் போவுது."
"போம் வோய். போய் வேலையப் பாரும்."
"ஏஞ்சல் புள்ள. இந்தப் பயகூட சேராத. எம் பேரனக் கட்டிக்க என்னா?" எதிர் வீட்டு திண்ணையிலிருந்தவர்கள் தெருக்குழாயில் தண்ணி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க. வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினர் இருவரும். ஏஞ்சலின் அம்மா, மூக்கி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.
"மக்கா, இனியன் வந்துருக்கானா?"
"ஓமும்."
"அவன நிக்கச்சொல்லு. சேர்ல பணியாரம் இருக்கு ரெண்டுபேரும் தின்னுங்க." வேலையிம் கையுமாயிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தாள் மூக்கி.
"சரி."
மூக்கியின் மாமியார் தன்ணி குடத்தோடு உள்ளே வந்தார்.
"ஏ கேட்டியா? இவங்க ரெண்டுபேரும் சேந்து வந்தா தெருவே சிரிக்கு. பொனிப்பாசு இவங்களுக்கு கல்யாணமாயாச்சான்னு கேக்காரு. பைப்ல இருந்தவ எல்லாம் சிரிச்சு.." சிரித்துக்கொண்டே சொன்னார்.
"எல அப்டியா?" கொஞ்சம் பெருமையோடே கேட்டாள் மூக்கி.
இனியன், ஏஞ்சல் இருவர் முகத்தில் வெட்கம்.
"மக்கா. எவ்வளவு பெருசானாலும் இந்த பாவப்பட்ட மாமிய மறந்துராத என்னல?" பாசம் பொங்க கேட்டாள் மூக்கி. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் இனியன்.
அலமாறியின் உள்ளிருந்து செய்தித் தாள் துண்டில் பொதியப் பட்டிருந்த சிறு பொதியலை எடுத்து இனியனின் பையில் வைத்தாள் மூக்கி.
"மக்கா, இதுல பைசா இருக்கு அம்மாட்ட குடு என்ன? அப்பாட்ட சொல்லாத, என்ன மக்கா?."
"சரி அப்பா வர நேரமாவும் அதுக்குள்ளால கொடுக்கேன். வரட்டா?" கதவுவரைப் போனவன் திரும்பி,"மாமி ஏஞ்சலக் வெளையாட கூட்டிட்டு போட்டா?" என அத்தையைக் கேட்டான்.
"போறியாடீ?"
ஏஞ்சல் தலையாட்டினாள்.
"போயி அரங்கூட்ல துணிமாத்திட்டு போ. மக்கா நீயே கொண்டுவந்து வுடு என்னா?"
"சரி" சம்மதித்தான் இனியன்.
"எடி நாக்குல நீலமாயிருக்கு. ஐஸ் வாங்கித் தின்னியோ."
"இனியந்தா வாங்கித்தந்தாங்...."
இனியனினும் ஏஞ்சலும் மீண்டும் கைகோர்த்துக் கொண்டே இனியனின் வீடு நோக்கி நடந்தனர்.
அத்தியாயம் 5: சேதி
விக்டர் வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. விக்டரின் அம்மா ஊரெல்லாம் விக்டரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவன் அண்ணன் கடலுக்குப் போயிருந்தான். அரங்கு வீட்டில் நுழைந்தான். கடற்கரையில் கண்ட பிணத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாதவனாய், பயம் மேற்கொள்ள அரங்கிலிருந்த கட்டிலின் கீழ் படுத்துக் கொண்டான்.
ஊரின் வடக்கு எல்லையிலிருந்து ஊருக்குள் ஒரு நீல நிற அம்பாசடர் கார் நுழைந்தது. உள்ளே புதிதாய் மணமான தம்பதியர் இருவரும் கல்யாண வீடியோ எடுப்பவரும் அவரின் உதவியாளரும் ஒரு சின்னப் பெண்ணும் இருந்தனர். திருமண வீடியோக்களில் முட்டத்தில் கடல் மணல் பாறைகள் பின்னணியில் தம்பதிகள் நிற்பதுபோன்ற காட்சிகளை சேர்த்துக்கொள்வது வழக்கமாயிருந்தது.
காரை கடற்கரைக்கு அருகில் நிறுத்திவிட்டு ட்ரைவர் சிகரட் பத்தவைத்துக்கொண்டார். புதுமணத் தம்பதிகள் பாறைகளின் மேல் நின்று காமெராவுக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். "சார் கையப் புடிங்க. மேடம் கொஞ்சம் நெருங்கி நில்லுங்க." எனும் கட்டளைகளுக்கு தம்பதிகள் கட்டுப்பட்டனர்.
காரின் ட்ரைவர் பாலு காரின் டேப் ரெக்கார்டரில் சிக்கிக்கொண்ட ஒலிநாடாவை வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். "சார், ஸ்டாண்ட்ல எல்லா கார்லயும் சி.டி இருக்கு. நம்மளும் போட்ரலாம். லாங்ல போம்போது மக்கள் ஆசப் படுதாங்கல்லா?" பலமுறை முதலாளியிடம் சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காததால் ஒலிநாடா சிக்கும்போதெல்லாம் அவருக்கு வசவு கிட்டிக்கொண்டிருந்தது.
பாலு டிரைவர் ஆனது பெரிய கதை. சுருங்கச் சொன்னால். வீட்டில் கஷ்டப் பட்டு படிக்கவைத்தார்கள். பாளையங்கோட்டையில் கல்லூரி போகும்வரை நல்லபிள்ளையாகத்தான் இருந்தான். ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் வெளியே தங்கியிருந்தான். ஒரேவருடத்தில் அத்தனை 'நல்ல' பழக்கங்களையும் கற்றுக்கொண்டான். படிப்பு பாழானது. வீட்டில் அவனை நல்லவன் என நம்பிக்கொண்டிருதனர். மூன்றுவருடம் முடிந்ததும் வீட்டில் பி.காம் படிப்புக்கேத்த(?) வேலை தேட ஆரம்பித்தனர். பாலுவின் அப்பா பக்கத்துவீட்டு வாத்தியாரிடம் சொல்லியிருந்தார்.
"நம்ம பைக் டீலர் இருக்கான்லா அவன் கேசியர் வேணும்னான் போறியாடே. ஆயிறத்து ஐநூறு தருவான். பெறவு அப்பப்ப ஏதாது கெடைக்கும்." வாத்தியார் கேட்டார்.
'படிப்புக்கேத்த வேலை இல்லை' என மகன் மறுப்பான் என நினைத்தார் பாலுவின் அப்பா. எதிர்பார்த்ததற்கு மாறாய் ஒத்துக்கொண்டான். மூன்றுமாதத்திற்குப் பிறகு ரிசப்சனிஸ்ட் ப்ரியாவுடன் பழக ஆரம்பித்தான். காதல் முத்திப்போனது. ப்ரியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பாலுவின் அப்பா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு பாத்துக்கலாமென்றார். ப்ரியாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டைக்கு ஓடிப் போய் நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்துகொண்டனர். கல்லூரி நாட்களிலேயே இதுபற்றிய ஒப்பந்தம் ஒன்றை விளையாட்டாகச் செய்திருந்தனர். "எல, யாராவது பொண்ணக் கூட்டிட்டு ஓடி வந்தா அடுத்தவங்க பாத்துக்கணும் என்னா?" இதுதான் அந்த ஒப்பந்தம்.
பாளையங்கோட்டைக்கும் நாகர்கோவிலிக்கும் அதிக தூரமில்லையே. ப்ரியாவின் மாமா இவர்களை கண்டுபித்தார். வீட்டிற்கு கூட்டிவந்து பேச்சு நடந்தது. இரண்டுபேர் வீட்டிலும் சமாதானம் செய்துவைக்கப் பட்டது. ஓடிப் போனதில் பைக் டீலரிடம் வேலையும் போயிருந்தது. ப்ரியாவின் அப்பா 'வேலை வாங்கித் தருகிறேன் டிக்ரி சர்ட்டிபிக்கேட்டத் தாங்க' எனக் கேட்டார். பூகம்பம் வெடித்தது. பாலு டிக்ரி முடிக்கவே இல்லை. தீவிர விசாரிப்பில் அவன் மூன்றாமாண்டு கல்லூரிக்கே போகவில்லை எனவும் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்ததாகவும் தெரிய வந்தது. பாலுவின் அம்மா மண்ணை வாரித் தூற்றினார். ப்ரியாவின் அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அவள் மாமா இவைனை ஆள்வைத்து அடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்,"பச்ச புள்ளைய ஏமாத்திட்டியேல." என சீறினார். பாலுவின் அப்பா,"என் மொகத்துல முழிக்காதல"எனச் சொல்லிவிட்டுப் போனார். ப்ரியா ரெம்ப ஏமாந்தவளாய் அழுதுகொண்டேயிருந்தானள். பாலு மட்டும் தவறே செய்யாதவனைப் போல மாப்பிள்ளை மிடுக்கில் சுற்றிக்கொண்டிருந்தான். "என்ன செய்ய சொல்லுதிய? நான் மட்டும் சினிமால பெரியாளா ஆயிருந்தா இப்டி சொல்லுவேளா?" ஏதோ மற்றவர்கள் மேல்தான் தவறு என்பதுபோல நடந்துகொண்டான்.
நிலமை சமனாக நாள் பிடித்தது. ட்ரைவிங் தெரிந்திருந்ததால் ஸ்டாண்டில் தன் பள்ளித் தோழனிடம் சொல்லி ட்ரைவரானான். ப்ரியாவைக் கூட்டிவந்து தனிக்குடித்தனம் வைத்தான். இதுதான் பாலு டிரைவர் ஆன கதை. இன்னும் எப்போதும் ஏதாவது சென்னைக் கதைகளை சக ட்ரைவர்களோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வான்
காரின் வெளியே வந்து இன்னுமொரு சிகரட் பத்தவைத்தான். அப்போதுதான் அதைப் பார்த்தான். கடற்கரையில் கிடந்த பிணம். ஆர்வம் தூண்ட அருகில் சென்றான். காரில் வந்தவர்களைத் தேடினான். தூரத்தில் ஒரு பாறைமேல் புதுப்பெண் பரதநாட்டிய அபிநயம்பிடிக்க அருகில் பத்மினியுடன் சிவாஜிபோல மாப்பிள்ளை நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
மேட்டிலேறி ஊரை நோக்கி நடந்தான். . போஸ்ட் ஆபீஸ் பக்கம் 'லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்' இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருக்கும் சிலரும், வெட்டியாய் பேசிக்கொண்டு சிலரும் இருந்தனர்.
"அங்க கடக்கரையில பொணம் ஒதுங்கி கெடக்கு." கூட்டமாய் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சொன்னான்.
"ஆம்பிள்ள பொணம். சின்ன வயசுதான். பாத்தா தெக்க உள்ள ஆள்மாறிதான் தெரியுது."
பெரியவர்கள் எழுந்தனர்.
"எங்கைய்யா? கோட்டாமடையிலையா?"
"ஆமா."
"நீ எப்ப பாத்த?"
"இப்பத்தான். பார்டி ஒண்ண கூட்டிட்டு வந்தேன். நார்கோவில் வேப்பமூடு ஸ்டாண்ட்ல கார் ட்ரைவர்."
கோட்டாமடை நோக்கி சின்னக் கூட்டம் நகர்ந்தது. போஸ்ட்மேன் செல்வம் போஸ்ட் ஆஃபீசில் செய்தியை பரப்பினான்.
---
பிணத்தைச் சுற்றி சற்றே பெரிய கூட்டமொன்று கூட ஆரம்பித்தது. சிறுவர்களை சிலர் விரட்டிக்கொண்டிருந்தனர்.
"நம்மூரு ஆளில்ல." பெரிய்யவர் ஒருவர் சொன்னார்.
"ஒமக்கு எப்டித் தெரியும். மூஞ்சியே தெரிலியே?" இளைஞர் மறுத்தார்.
"எல நம்ம ஊர்ல இந்தமாரி சட்டையும் ஜட்டியும் எவன்ல போடுதான்?" பெரியவர் அறிவுபூர்வமாக பதிலளித்துவிட்டோம் என்பதைவிட இளஞனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதத்தில் சொன்னார்.
"இப்ப எல்லாரும் போடுதாவு. வேணும்னா பாக்கீரா?" இளைஞன் லுங்கியை பாதி உயர்த்தியபடி பதிலளித்தான்.
"ஒங்க ஆத்தாட்ட போய் காட்டுல தேவ்டியாமோன." பெரியவர் கோபத்தில் சொல்ல. இளைஞனும் அவன் நண்பர்களும் கேலியாய் சிரித்தனர்.
"இது இங்கன கெடந்தா சரியாவாது." இன்னொரு பெரியவர் ஆலோசனை சொன்னார்,"தொளவைய எடுத்து கடலுக்குள்ள தள்ளிவுட்லாம். என்னா?"
"ஆமாடே நல்ல யோசனதான். போயி பழய தொளவ ஒண்ண கொண்டாங்க."
"தொளவ எதுக்கு? அப்டியே காலப் புடுச்சி இழுத்துப் போட்ருவோம்." இளஞர் ஒருவர் முன்வந்தார்.
"எல கொலக் கேசா இருக்கப்போவுது. போலீஸ் மோப்ப நாய் வந்தா ஒங்க வீட்டுக்குத்தான் வரும் பெறவு போய் களி திங்கணுமால?"
"இவனுவளுக்குத்தான் எல்லாந் தெரியுண்ணு வந்துட்டானுவ. போங்கல அங்க. பெரியாளு சொன்னா கேக்கணும்." முதலில் கடுப்பேத்தப்பட்ட பெரியவர் பழிதீர்த்துக்கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் தொளவை எனப்பட்ட கடலில் கட்டுமரங்களை தொடுக்க பயன்படுத்தப்படும் துடுப்பு எடுத்துவரப் பட்டது. ஐந்து முதல் ஆறடியில் இரண்டாய் பிளக்கப்பட்டிருந்த மூங்கிலின் தடித்த அடிப்பாகத்தில் ஒரு பாகம் இந்தத் துடுப்பு.
பிணத்தின் அடியில் துளவை சொருகப்பட்டது. இரண்டு நடுவயது ஆண்கள் ஒரு புரட்டு புரட்டிப் போட்டனர்.
பாலு காரில் வந்த புதுமணப்பெண் காருக்கருகில் நின்றுகொண்டே பிணத்தருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கணவனை அழைத்துக்கொண்டிருந்தாள். "ஏய் இங்க வாங்க. வாங்க போலாம்." .
ட்ரைவர் பாலு, "வாங்க சார். இது சரியாப் படல. அங்க மேடம் கூப்ட்றாவல்லா? போவோம். இவனுக போலீஸுக்கெல்லாம் போறமாறி தெரியல." எனச்சொல்லி புது மாப்பிள்ளையை கிளப்பினான்.
"அவ்ளவுதாம்புள்ள. இன்னும் ரெண்டு பொரட்டு போடுங்க அந்தால போட்டும்." பெரியவர் சொல்ல துளவை பிணத்துக்கடியில் சொருகப்பட்டது.
"என்னங்க இவைங்க போலிசுக்குப் போறதில்லியா?" புது மாப்பிள்ளை பரிதாபமாகக் கேட்டார்.
"சார் இது மதுர சிட்டியில்ல. முட்டம் கடற்கர. இங்க கடற்கரையில ஒரு போலீஸ் ஸ்டேசன்கூடக் கெடையாது தெரியுமா? மணவாளக்குறிச்சி போணும். இங்கேர்ந்து நாலு கிலோமீட்டர். சிட்டியிலயே தெருவுல நடக்கத கண்டுக்கமாட்டென்றானுவ."
மதுரக்கார மாப்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் பாலு.
பாலுவின் கார் சற்று வேகமாகவே முட்டத்தை விட்டுக் கிளம்பியது.
Saturday, September 30, 2006
விடுதலை
ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். 'இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.' னு சொன்னான். 'நீ சொன்ன மாதிரி போட்டி நடத்துறதுல ஒரு சின்ன ஓட்டை இருக்குது அத யூஸ் பண்ணலாம். போட்டி விதிப்படி பாத்தா நாம செய்றது தப்பேயில்ல.' அவன் சொல்லச் சொல்ல எனக்கும் அது தப்பேயில்லன்னு தோணுச்சு.
சின்னவயசிலேர்ந்தே எதுலயாவது ஜெயிக்கணும்னு ரெம்ப ஆசை. நோஞ்சானாயிருந்தேன். ஸ்போர்ட்ஸ்லயெல்லாம் ஈடுபாடே கிடையாது. படிப்புல எப்பவுமே 3, 4 அல்லது ஐந்து ராங்குகளுக்குள்ளால வந்தேன். வீட்டுல திட்டு கிடைக்காட்டியும் பெரிய பாராட்டெல்லாம் கிடச்சதில்ல.
அம்மாதான் சும்மா சொல்லுவா நான் குழந்தையா இருக்கும்போது அழகிய குழந்தைன்ன்னு பரிசு வாங்கியிருக்கிறதா. அது என்ன சமாதானப் படுத்தத்தான் சொல்லுறான்னு எனக்கும் என் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் ஆமோதிப்போம்.
இந்த ஜேம்ஸ்கூட சாப்பாட்டு போட்டி வெற்றிக் கோப்பை வீட்டுல வச்சுருக்கான். ஸ்கூல்ல மூணுதடவை அவந்தான் சாம்பியன். ஒருதடவை மிளகாய கடிச்சு கண்ணீரோட அவன் பரிசு வாங்கினது நியாபகம் இருக்கு.
இப்ப ஒரு வழியா வெற்றி கெடச்சாலும் சந்தோசமே இல்ல. என்னதான் விதிகள் படி நடந்துகிட்டாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதானே. மத்தவங்களும் இதச் செஞ்சிருந்தா அது சமமான போட்டியா இருந்திருக்கும். ஒருவேள அப்டி செஞ்சிருப்பாங்கன்னு சமாதானப் படவும் முடியல.
"ஜேம்ஸ் மனச ஒண்ணு உறுத்திகிட்டே இருந்துச்சுன்னா என்ன செய்வ?"
"நண்பர்கள் அல்லது வீட்ல சொல்லுவேன்."
"தெரிஞ்சவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியலண்ணா?"
"எங்க சர்ச்சுல பாவசங்கீர்த்தனம்ணு ஒண்ணு இருக்கு. சினிமாலகூட கொல செய்றதுக்கு முன்னால ஹீரோ போயி ஃபாதர்ட்ட சொல்றமாதிரியெல்லாம் காண்பிச்சிருக்காங்க. நாம பாவசங்கீர்தனத்துல சொல்றத சாமியார் யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சட்டம் இருக்கு."
'கோவில் போகும் பழக்கமில்லையே. இல்லண்ணா சாமிகிட்ட சொல்லலாம்.' மனதில் சஞ்சலம் அதிகரித்து பாரமானது.
டெலிஃபோன் டைரக்டரியைத் திறந்து எண்ணை சுழற்றினேன்.
"ஹலோ. யார் வேணுங்க?"
"நான் அலுவலகத்துல நடந்த போட்டில குறுக்கு வழியில பரிசு வாங்கிட்டேன்."
"ஹலோ யாருங்க. என்னது?"
"இதச் சொல்லத்தான் ஃபோண் பண்னினேன்"
"ஹலோ யாருங்க இது டிம்ப்பர் டிப்போ. ராங் நம்பருங்க"
'ராங் நம்பர்னு தெரியுங்க.' மனதில் நினைத்தபடியே தொடர்பை துண்டித்தேன்.
மனம் கொஞ்சம் இலகுவானது.
Thursday, September 07, 2006
த'சாவு'தாரம்
'பட்டை' பிரம்மச்சாரி கமல். வயதாகிவிட்டது, (இந்தியன் தாத்தா வேஷம்). தன் வாரிசு இந்த உலகத்தில் பிறக்கவேண்டும் என நினைக்கிறார். ஒரு விந்து வங்கியில் சென்று தன் விந்துவை தானம் செய்கிறார் இதற்கு நடக்கும் போராட்டத்தில் தாத்தா இறந்து போகிறார்.
இந்த விந்துவை வைத்து ஆராய்ச்சி செய்யும் சைண்டிஸ்ட் இன்னும் வயதானவர். அவருக்கு அல்ஸ்தைமர் இருப்பதால் கை ஆடும். இந்தக் கை ஆட்டத்தில் கமல் தாத்தாவின் வித்தை தவறாக விதைத்துவிட பல கமல்கள் உருவாகிறார்கள்.
படத்தில் மொத்தம் 9பது கமல்கள்தான். அப்போ தசவதாரம்? ஒன்பதில் ஒருவருக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. 'கடவுள் பாதி மிருகம் பாதி' மாதிரி. இதை நுட்பமாக காண்பிக்க அவரின் வலைப் பதிவில் அவரே வாசகராய் பின்னூட்டம் போடுவதுபோல காட்சியமைப்பு. நிலமை முத்திப்போய் ஒரு கட்டத்தில் அவரே தனக்குப் போலியாய் ஒரு வலைப்பதிவாளரர உருவாக்குகிறார். போலிக்கும் நிஜ கமலுக்கும் நடக்கும் போராட்டம் க்ரைம் த்ரில்லராய், ஆளவந்தான்போல.
இன்னொரு கமல் ஹிட்லரின் நாஜி தத்துவங்களால் ஈர்க்கப்படுகிறார். மீசை வளராத நோய் இவருக்கு இருப்பதால் கஷ்ட்டப்பட்டு ஹிட்லர் மீசையை மூக்குக்கு கீழ் பச்சை குத்துகிறார். க்ளைமாக்சில் இவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு தாடியை பச்சைக் குத்திக்கொண்டு வரும் காட்சி நெஞ்சை உருக்கும்.
எல்லா கமலும் ஒன்றாய் வரும் காட்சி கம்ப்யூட்டர் க்ராபிக்சில் 'கட் அண்ட் பேஸ்ட்' எனும் புதிய யுக்தி கொண்டு செய்யப்பட்டுள்ளது.
எல்லா பாத்திரங்களும் தங்களின் தந்தை யார் எனத் தேடுவதே கதை. கடைசியில் அந்த டெஸ்ட் ட்யூபை கண்டுபிடித்தார்களா என்பதே கதையின் முடிச்சு.
ஹே ராம் கெட் அப்பில் வரும் கமல், காந்தி தேசப் 'பிதா' என்பதைக் கேள்விப்பட்டு தனக்கும் அவர்தான் தந்தை என வாதாடப் போகிறார். காந்தி கோபத்தில் இவரை ஆள்வைத்து சுடச் சொல்கிறார். அப்படிச் சுடும்போது குறிதவறி குண்டு காந்திமேல் பாய்ந்து...(மீதியை வரலாறு புத்தகத்தில் படிக்கவும்) இதன் மூலம் பல வரலாற்று குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை நிலைநாட்டச் செய்வது கமலின் ஐடியாவாம்.
'பத்து பத்தா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ' எனும் பாடல் ரஜினியின் 'எட்டு எட்டா' என்பது தப்புக்கணக்கு என நிரூபிக்குமாம்.
தஸவதாரத்தில் புஷ் அவதாரமும் உண்டாம். இவர் தன் வீட்டு தண்னித் தொட்டி உடடந்து வீட்டு மக்கள் அவதிப் படுவதைப் பார்க்காமல் பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டிலிருந்து எண்ணை எப்படி திருடலாம் என யோசித்துக்கொண்டிருப்பாராம்.
எல்லா தகவல்களையும் தந்துவிட்டால் படம் பார்க்கும்போது போர் அடிக்குமே...அதனால வுடு ஜூட்டு.
pinகுறிப்பு: ஆபீசில் ரெம்ப போர் அடிக்குதுங்கோ.
Friday, September 01, 2006
லிஃப்ட்
'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.
முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.
"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.
எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.
"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'
"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.
வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.
'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா
'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி
'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா
கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.
வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.
அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.
அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.
அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.
"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.
"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.
'நல்லவந்தான்'.
"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."
"வாங்க."
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.
"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.
"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"
"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."
"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."
"தேவியா?"
"ஆமா."
உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.
'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.
புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.
பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.
"ரெம்ப நன்றிப்பா?"
"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.
வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'
பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.
சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.
Thursday, August 31, 2006
நிலவில் நாளை..
முந்தின நாள் சாயுங்காலம் அப்பா அனுமதிச் சீட்டு வாங்கிவந்ததுமே உற்சாகம் துவங்கிவிட்டது.
"நாளைக்கு குரங்கு பாக்கலாமே.."
"சிங்கம்?"
"ம்ம்ம் சிங்கம், புலி, மான், யான.."
"எலி?"
"மிமி.. எலி பாக்குறதுக்கு ஏன் அங்க போகணும்?"
விலங்குகள் பற்றிய புத்தக வாசிப்போடு உறங்கிப்போனார்கள் குழந்தைகள்.
காலையில் பூங்கா நோக்கிப் பயணம் துவங்கியது.
"பூமியிலிருந்து அழிந்துபோன விலங்கினங்களை மையமா வச்சு ஒரு கண்காட்சி இருக்குது" அப்பா சொல்ல மித்தி கேட்டான்.
"பூமியிலிருந்து விலங்கினங்கள் அழிஞ்சு போனதாப்பா?"
"ஆமா. பல இனங்கள் அழிஞ்சும் புதிதாய் சில புதிதாய் உருவாகியும்... பரிணாம தத்துவப்படி.."
"எப்படி ஒரு விலங்கினம் அழியும்ப்பா?"
"பல காரணங்கள் இருக்கு.."
"எப்படி.."
"தட்ப வெட்பநிலை சரியில்லைன்னா, அதிகமா வேட்டையாடப்பட்டா, உணவு ஆதாரங்கள் அழிக்கப்படும்போது.இப்படி இன்னும் பல காரணங்கள். சில நேரங்கள்ள ஒரே நேரத்துல, ஒண்ண ஒண்ணு சார்ந்திருந்த இரு இனங்கள் அழியிறதும் உண்டு."
"இண்டரெஸ்ட்டிங்." அம்மா சொன்னாள்.
விலங்கியல் பூங்கா வந்ததும் மிமி குஷியானாள். கூட்டம் அதிகமாயில்லாதது வசதியாய்ப் போனது. விலங்கின் பெயர்களை எழுத்துக்கூட்டி படித்துக்கிண்டிருந்தாள்.
"த..வ..ளை..அம்மா தவளை."
"ஆமா சிமி. ஆப்ரிக்கத் தவளை. ஆண் தவளைகளே இல்லைன்னா இந்த இனத்துல பெண்ணே ஆணா மாறிடுமாம்."
"அப்ப இந்த இனம் எளிதில அழியாதுலா." மித்தி கேட்டான்.
"ஆமா."
"'வல்லவன் வாழ்வான்' இதுதான் இயற்கையின் விதி. வெறும் உடல் வலிமையச் சொல்றதில்ல."
"ஒ..ட்..ட.."
"ஏய் சிமி இங்கப் பாரேன்."
"இருடா.. க..ம். ஒட்டகம்."
விலங்குகளைப் பார்த்து முடித்ததும் அழிந்துபோன விலங்கினங்களைப் பற்றிய கண்காட்சிக்கு வந்தனர்.
"வாவ் டைனசோர்." மித்தி
"ஸ்..டெ..கோ..சா..ர..ஸ்"
"டைனோசர்ஸ் இனம் அழிந்ததுபற்றி நிறைய கருத்துக்கள் இருக்கு. அதிகம் நம்பப்படுவது பூமிமீது மோதிய விண்கல்லால அழிஞ்சிருக்கலாண்றது."
"ஔ..ரோ..க். ஔரோக் அம்மா மாடு மாதிரி இருக்குதுமா." மிமி வாசித்துக்கொண்டிருந்தாள்.
"இதோ இந்த இனம் அழிஞ்சதுபோல வேறெந்த இனமும் அழிஞ்சதில்ல." அப்பா ஒரு கண்ணாடிக் கூண்டைக் காட்டிச் சொன்னார், "தன்னைத்தானே அழிச்சுகிச்சு இந்த இனம். அணுஆயுதம்."
"ம..னி..த......"
Wednesday, August 23, 2006
கற்கோவில்கள்
"ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல."
முனகிக்கொண்டே சேவியர் விழித்தான்.
"அப்பாக்கு காச்சலடிக்கு, நீ மச்சான்கூடப் போ."
சன்னலில் இருந்த பல்பொடியிலிருந்து கையில் கொஞ்சம் தட்டிக்கொண்டு கஞ்சியும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தான் சேவியர்.
தெருவிளக்குகள் இல்லாத இடுக்குகளில் கலங்கரை விளக்கின் சுழற்சியில் அவ்வப்போது ஒளிபரவி அதிகாலை இருளை விலக்கிப் பாதை காட்டியது.
கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. "அன்னா வாரான் சேவியரு." சேவியரின் அக்காவின் கணவர் சைமன் கை அசைத்தார்.
"நேத்துமா படத்துக்குப் போன? ரெண்டுவாரத்துல வெளிநாட்டுக்குப் போறவனமாரியா இருக்க. இவ்ளோ நேரமா இங்க காத்துக் கெடக்காவு." அக்கா திட்டுவதையும் பொருட்படுத்தாமல். வலையை படகில் ஏற்றிக்கொண்டிருந்த மச்சானுக்கு உதவிசெய்தான் சேவியர்.
"அப்பாவுக்கு காச்சலாம்?" அக்கா கேட்டாள்
"ஓமு."
சேவியர் மச்சானுடன் கடலுக்குப் போகத் தயங்குவான். அவர் இவனைப் போலவே முன்கோபி. மச்சான் திட்டினால் எதிர்த்துப் பேசமுடியாது. அப்பா அப்படியல்ல. மொட்டையன் சாதுவானவர், கோயில் கமிட்டியில் அவர் இல்லாத சமயங்களிலும் அவரிடம் ஊர் பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டன. மீனவர் என்றாலும் படித்தவர்களே மதிப்புக் கொள்ளுமளவுக்கு ஞானி. பங்கு சாமியார்கள் ஊரில் முதலில் சந்திக்கும் பெரியவர் மொட்டையன் என அழைக்கப்படும் குருசு.
சேவியர் படகின் இயந்திரத்தை இயக்கினான். மிதமாக எழுந்த அலைகளின்மேல் பயணித்தது படகு.
"யாரெல்லாம் படத்துக்குப் போனியல?"
"நானு எதிர்வீட்டுக் குமாரு பெறவு நொண்டி."
மச்சான் தம்பிகூடப் போனதைச் சொன்னா அவனுக்கு வீட்டில அடிவிழும்.
"நேத்து நொண்டி எங்கூடப் பெரையில சிட்டு வெளையாடிட்டிருந்தான்? பொய், என்னா? ஏண்டே படிக்க பயலுவள கெடுக்குதிய?"
சேவியர் மெளமானான். 'இவர்கூடப் பேசுனா சண்டதான் வரும்'.
படகு உள்ளே செல்லச் செல்ல நிலம் மறைந்தது. கடல், நீரால் நிரம்பிய ஒரு பாலைவனம் போலக் காட்சிதந்தது. கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் நீலம். வழக்கமாய் மீன்பிடிக்கும் இடத்தை நெருங்கும்போது சைமன் பதட்டமானார்.
"எல சேவியரு அங்கபாரு அந்த போட்டுங்க நம்ம ஊர் போட்டுகமாரி தெரில?"
"நம்ம ஊர் போட்டிகயில்ல. இதோட நாலாது நாளு. இங்க வராதியன்னு அப்பா அன்னைக்குத்தான் சொன்னாவு, பெறவும் இங்கதா வாரானுவ."
வெளியூர் ஆட்களுக்கு அந்த இடத்தில் மீன் பிடிக்கத்தடை இருந்தது.
"லேய்.. யாருல அது? இங்க வரக்கூடாதுன்னு தெரியாதாக்கும்?" சைமன் சத்தம் போடத்துவங்கினார். இரண்டு வெளியூர் படகுகள் நின்றுகொண்டிருந்தன.
சேவியருக்கு எரிச்சல் வந்தது. மொட்டையன் மகன், அவருக்கு நேர் எதிர். நண்பர்களுக்காகப் பலமுறை சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறான். போலீஸ், கேசென்று ஒரு முறை நிலமை கைமீறிப்போனது. மொட்டையன் பங்குத் தந்தையிடம் சொல்லி பிஷப் கடிதத்துடன் போய் சேவியரை அழைத்துவந்தார்.
"ஐயா உங்களப் பத்தி கேள்விப் பட்ருக்கேன். இவன் உங்க பிள்ளையா? கோவம் ஜாஸ்த்தி இவனுக்கு. சொல்லி வைங்க. போலீசையே கை நீட்டுறான்." இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார்.
"எல எங்க மாமன் சொல்லியும் கேக்காண்டியளால. நாங்க ஒங்க ஊர்ப் பக்கம் வந்தா உடுவியளா?"
சைமன் வெளியூர் படகுகளிலிருந்தவர்களிடம் சப்தமாய் விவாதித்துக்கொண்டிருந்தார்.
வெளியூர் படகிலிருந்த பெரியவர் பேசினார்.
"மொட்டையன் மருமவனா நீயீ? இரப்பா, வல எறக்கியாச்சு இன்னக்கி ஒருநா இங்கன போட்டும்."
"நாலு நாள இங்கனதான் மடி எறக்குறீயளாம்? எங்க மாமன் சொல்லியும் கேக்கலேன்னா ..?"
"எல ஒங்க மாமன் என்ன கலெக்டரா?" வெளியூர் படகிலிருந்து இளைஞர் கோவத்துடன் கேட்டார்.
"மைக்கிளு, பெரியவங்க பேசிட்டிருக்கும்போது நீ ஏண்டே குறுக்க. சும்மா இரு."
"நீரு பெரியவரு. அவன் பெரியவனா?" சைமனைக் காட்டி மைக்கிள் பேசினான்.
"கலெக்டர் சொன்னாத்தான் கேப்பியளா? இங்க வரக்குடாதுன்னு சொல்லியும் திரியத் திரிய வந்துட்டு... மரியாதையா வலைய இழுத்துட்டு போங்க."
"மக்கா கொஞ்சம் பொறுங்கடே. இன்னைக்கு வலை எறக்கியாச்சு..." பெரியவர் கெஞ்சாத குறை.
"மச்சான் அந்த மைக்கிள்தான் கபடி ஆட்டத்துக்குப் போன நம்ம பயவள அடிச்சது. இன்னைக்கு நாயம் பேசுதான்." சேவியர் மச்சானுக்குத் தகவல் சொன்னான்.
"ஒங்கூருக்கும் எங்கூருக்கும் சும்மாவே சரிவராது, இதுல மடி போடுற எடத்துல வந்து சண்டைக்கு வராதிய." சைமன் கடைசியாய் எச்சரித்தார்.
"வலை எறக்கியாச்சுன்னு சொல்லுதேன்..ஒக்காளி." பெரியவர் முகத்தில் எரிச்சல்.
சேவியர் கடலில் குதித்தான். கடலுக்குள் மூழ்கி சில நிமிடங்களுக்குப் பின் மேல் வந்தான்.
"ஓ பெரியாளு. வலைய அறுத்துட்டாச்சு..இப்பவாவது போங்க."
பெரியவர் வலையைஇழுத்தார். வலை வெட்டப்பட்டிருந்தது.
"எல சின்னப்பயலுவளா.. புத்திய காட்டிட்டீலுவள்ள? " பெரியவர் சத்தம்போட்டார்.
வாய்த்தகறாரு துவங்கியது. கெட்டவார்த்தைகள் மிகுந்த ஒரு சப்தமான சண்டைக்கு நடுவில் மைக்கிளின் அலறல் கேட்டது. கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்தம் வழிந்தோட படகில் கீழே விழுந்தான் மைக்கிள்.
சேவியர் கத்தியை கடலில் வீசினான்.
மைக்கிள் படகிலிருந்தவர்கள் பெரியவர் படகுக்கு மைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாவினர். பெரியவர் படகை வேகமாகச் செலுத்த அந்த இடத்திலிருந்து மறைந்தது வெளியூர்ப் படகு. சைமன் இன்னும் கோபம் தீராமல் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். படகிலிருந்த பெட்ரோலை ஊற்றி ஆளில்லாம நின்றுகொண்டிருந்த வெளியூர்ப் படகை கொழுத்தினான்.
சேவியர் எதுவும் நடக்காததுபோல, உடலில் தெறித்திருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், வலையை கடலுக்குள் இறக்கினான்.
....
ஞாயிற்றுக்கிழமை பூசையில் பங்குச் சாமியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்."பகைவனையும் அன்பு செய்யச் சொல்லி இயேசு சொன்னதைப் போல மனித வரலாற்றில் வேறு எவருமே சொல்லியிருக்கமுடியாது. லூக்காஸ், அதிகாரம் ஆறு, வசனங்கள் இருபத்தேழு துவங்கி முப்பத்தாறு முடிய. 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களை வெறுப்போருக்கு ...."
கோவிலின் வெளியே படிக்கட்டுகளில், சேவியர் தன் கழுத்தில் கிடந்த சிலுவையில் காய்ந்திருந்த இரத்தக் கறையை ஈர்க்குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்தான்.
நன்றி: திண்ணை
அன்னியர்கள்
"ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?"
"மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா?
எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்."
"ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?"
"எங்க ஊர்ப் பக்கமெல்லாம்... வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க... இவன் க்ரௌவுண்டுக்குப் போகணும்னு சொன்னான், கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்."
"நல்லது செய்யக்கூட நாலுபேர் என்ன சொல்வான்னு பார்த்துச் செய்யவேண்டி இருக்கு. நீங்க செய்யலைன்னாலும் சரி எங்கிட்ட காசிருக்கு. மொய்யா எழுதினா சம்பந்தி வேண்டாம்னு சொல்லமுடியாதே. டேய் வாடாப் போலாம்."
பேரனோடு விளையாட்டு மைதானத்துக்குக் கிளம்பினார். பணிஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் மாரியப்பன். நண்பர் கூட்டம் அமரும் இடத்தில் யாருமில்லை. அரட்டைக் கச்சேரி இன்றைக்கு கொஞ்சம் தாமதம்.
'ஃபிசிக்ஸ் போலவே வாழ்க்கையிலும் விதிகள் இருந்துட்டா? இந்த மாதிரி விதிகள வச்சுக்கிட்டு எல்லாத்தையும் எளிதாய் மதிப்பிடலாம், செஞ்சிடலாம். கீழே விழும்னா விழணுமே, அதுதானே இயற்பியல். சமுதாய விதிகள எப்படின்னாலும் வளைக்கலாம். இத இவர் இப்படித்தான் செய்யணும்னு எதுவுமே..'
"என்ன வாத்தியாரே. பயங்கர யோசன போலிருக்கு?"
"வாங்க ஏட்டு சார். பங்சனெல்லாம் எப்டி போச்சு?"
"ம்.. ட்ராவல் ஜாஸ்தி. மூட்டு வலி திரும்பவும் வந்துடுச்சு. ஃபங்சன் பரவால்லாம போச்சு."
"ரெண்டுவாரமாச்சா?...இன்னிக்குத் தேதி என்ன?"
"மார்ச் 12. ஏன் கேக்குறீங்க?"
"ஃபிபொனாசி எண்தொடர் தெரியுமா?"
"ஒங்க ஃபிசிக்செல்லாம் போலீஸ்காரங்களுக்குத் தெரியுமா? இ.பி.கோ மாதிரி எதாவது கேட்டீங்கன்னா சொல்லலாம்.."
"இயற்பியல் இல்ல மாத்ஸ்தான். ஃபிபொனாசி எண் தொடர்ல உள்ள எண்கள் அதுக்கு முன்னால வர்ற இரண்டு எண்களோட கூட்டுத்தொகையா இருக்கும்."
"ஓகோ. இண்டரெஸ்ட்டிங்"
"இப்ப 0, 1, 1, 2, 3, 5, 8 ன்னு போட்டீங்கன்ன ஃபிபொனாசி தொடர் வரும்.."
"ஆமா..."
"இன்னைக்குத் தேதி 12-03-05 அட் ஒன் ஓ க்ளாக் சரியா ஃபிபனாசித் தொடரின் துவக்க எண்கள் வரும்."
"ம்ம்ம்... ஆமால்ல.. 01:00 12-03-05 வெறும் நம்பர் மட்டும் கணெக்கெடுத்தா.."
"ஆமா. இதுல இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கு. முந்தின நம்பர அடுத்த நம்பரால வகுக்கும்போது 1.6 பக்கத்துல விகிதம் வரும். இந்த ஃபிபனாசித் தொடர இந்தியாவுலத்தான் முதல்ல கண்டுபிடிச்சாங்கன்றதுதான் சுவையான தகவல்."
"இதையும் நம்மாளுங்கத்தான் கண்டு பிடிச்சாங்களா?", சிரிப்புடன் கேட்டார் ஏட்டு.
"'மாத்ராமெரு'. சமஸ்கிருத இலக்கண வித்தகர் பிங்கலா 'சந்த சாஸ்த்திரத்துல' சொல்லியிருக்கார்."
"மாதிரைன்னா ஏதோ பாட்டுல வர்ற ரிதம் மாதிரியா?"
"அதுமாதிரிதான் ஆனா பேச்சுல வர்ற மாத்திரைகள கணக்குப் போடுறது. தமிழ்ல அசைகள்னு சொல்லுறோம்னு நெனைக்கறேன். இந்த ஃபிபனாசி இத்தாலியர். நம்ம கோட்பாட்ட இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சி ப்ரபலமாக்கிட்டார்."
"நம்ம பயக கம்ப்யூட்டர்ல வெளுத்துக் கட்றானுங்கன்னா இது மாதிரி விஷயமெல்லாம் நம்ம மூளையில பதிஞ்சிருக்கு வாத்தியாரே."
"இருக்கலாம். இந்த 'மாத்ராமெரு' எண்கள் இயற்கையில நெறைஞ்ச்சிருக்குன்னா நம்பமுடியுமா?"
"எப்டி அது."
"ஒரு அன்னாசிப் பழத்துல ரெண்டு வளயமா செதில்கள் இருக்கு. ஒண்ணுல 8ம் இன்னொண்ணுல 13ம். ரெண்டுமே ஃபிபொனாசி எண்கள். இதுபோல பூக்களோட இதழ்களிலான ரேஷியோ, சில பழங்களோட விதைகள் எண்ணிக்கை எல்லாம் இந்த எண்கள்படி வருது.."
"சரிதான். இன்னைக்கு ரெம்ப விசேசமான நாள்தான். அதான் சாப்பிட்டிட்டு ஒடனே இங்க வந்துட்டீங்களா?"
"ஒரு மணி ஆறதுக்கு எட்டு நிமிசந்தான் இருக்கு."
"இந்த வெயில்ல பசங்களுக்கு க்ரிக்கட் ஆடணுமா?"
"நம்ம மட்டும் கொஞ்ச நிழல் கெடச்சா ஒக்காந்து பேச ஆரம்பிச்சிடறோமே?". நண்பர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே எழுந்தார் மாரியப்பன்.
"கொஞ்சம் இருங்க, வீட்ல செல்ல வச்சுட்டு வந்துட்டேன். இப்ப வந்திர்றேன்."
திடீரென மின்னல்போல ஒளிக்கீற்று அவரைத் தாக்கியது. நிலைதடுமாற்றத்திலிருந்து மீண்டபோது அதீத ஒளியில் சுற்றியுள்ள எல்லாமே மறைந்து போயிருந்தன.
எரியும் விளக்குக்குள் நின்றுகொண்டிப்பதுபோல, வெள்ளை வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார் மாரியப்பன்.
"சார்... ஏட்டு சார். இருக்கீங்களா?".
பதில் வரவில்லை.
'மிதந்து கொண்டிருக்கிறோமோ?' என நினைத்தார்.
கை கால் அசைக்க முடியாமல், இறகுகளை அசைக்காமல் பறவைகள் காற்றில் மிதப்பதுபோல மிதப்பதை உணர்ந்தார்.
ஒளி நீங்கியது.
அன்னியக் கிரகவாசி ஒருவன் அவரை விண்கலத்துள் வரவேற்றான். ஓடிப்போய்விடத் தோன்றியது மாரியப்பனுக்கு.
வேற்றுக்கிரக வாசிகள், அன்னியர்கள். இவர்கள் இருக்கிறார்களா? ஏதோ கனவுதானா? எங்கே ஓடிப்போவது? விண்வெளியில் பறந்து கோண்டிருக்கிறோமா? ஏலியன்களால் கடத்தப் பட்டவர்களைப் பற்றி படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.
மந்திரம் ஓதுவதைப்போல அன்னியர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
'சமஸ்க்கிருதமா? அதை ஒத்த ஒரு மொழியாக இருக்கலாம்'.
தலை வலித்துக்கொண்டிருந்தது. 'திடீரென வந்த அதிக வெளிச்சத்தால் இருக்கலாம்'.
அங்கே சில மனிதர்களும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்தது.
"என்ன நடக்குது இங்க? எங்க இருக்கேன் நான்?" பயந்தபடியே அந்த அன்னியனிடம் பேசினார்.
அவன் அன்னிய மொழியில் ஏதோ சொன்னான். புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.
அன்னியன் தன் பெரிய கண்களை மூடினான்.
'தியானிக்கிறானா?' தலை இன்னும் வலித்தது. வசியம் செய்யப்படுவது போல உணர்ந்தார்.
"நாங்கள் சியமாவாசிகள். இன்னொரு கோள் தொகுப்பிலுள்ளது. ரவி என்னும் நட்சத்திரத்தைச் சுற்றும் கோள் சியமா."
அந்த அன்னியன் சொன்னதெல்லாம் மாரியப்பனுக்குப் புரிந்தது.
'இவனால் நம் மூளையை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. நொடிப்பொழுதில் அவன் மொழியை மூளைக்குள் பதித்துவிட்டான்.' மிரட்சி ஆட்கொண்டது மாரியப்பனை.
"ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் பூமிக்கும் இன்னும் உயிரினங்கள் வசிக்கும் கோள்களுக்கும் சென்று விபரங்கள் சேகரிப்பதுண்டு. எங்கள் வருகையின் தடையங்கள் உலகில் பல இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன."
"க்ராப் சர்க்கிள். விளை நிலங்களில் நீங்க விட்டுப்போகும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள்."
"அது மட்டுமல்ல கற்களினாலான வடிவமைப்புக்கள் கூட."
"ஸ்டோன் ஸர்க்கிள்ஸ், ப்ரிட்டனைச் சுற்றியுள்ளத் தீவுகளில் பிரபலம்." மாரியப்பன் தான் படித்தவற்றையெல்லம் திரும்பக் கற்றுக்கொண்டிருந்தார்.
"ஆமா. ஆமெஸ்பரி ஸ்டோன்ஹெஞ்ச் வழியா எங்க கோள்தொகுப்ப பார்க்க முடியும்."
"நம்பவே முடியல. ஆதி மனுசன் செஞ்சு வச்சதுன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கோம்."
மாரியப்பன் திடீரெனெத் தானும் அந்த அன்னியனின் மொழியில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
"ஏன் நீங்க மனிதர்களத் நேரடியா தொடர்புகொள்றதில்ல?" மாரியப்பன் அன்னியனைக் கேட்டார்.
"தொடர்பு இருக்குது. தேவையான அளவுக்கே வச்சிருக்கொம். எல்லாமே ரகசியமாய் இருக்குது. சில தனி ஆட்களோடும் தொடர்பிருக்குது. இனிமே உங்களோடும் இருக்கும்."
வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்தார் மாரியப்பன்.
"நீங்க மின்னணுயியல்ல முன்னேறியிருப்பீங்கன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கிறோம் ஆனா இங்க எந்திரங்களெல்லாம் அதிகமாயில்லையே?"
"நாங்க உயிரியல் மற்றும் நுண்ணியிரியலில் வளர்ந்திருக்கோம். மூளையின் முழு சக்திய யாருமே பயன் படுத்துறதில்ல. நாங்க இந்தத் துறையில் வெற்றி அடஞ்சிருக்கோம். எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் - மேம்படுத்தப்பட்ட உணரும் தன்மை- எங்களுக்கு கைவந்த கலை."
"கை வந்த அறிவியல்.", கொஞ்சம் இலகுவாகப் பேச ஆரம்பித்தார்.
"எங்க கலம் வெளியைத் தாண்டி வர பாக்டீரியா போன்ற ஒரு உயிரியே காரணம். எங்க கலத்தின் வெளிப்பூச்சில் இந்த நுண்ணியிரிகள் கணிசமா வளரும். எந்த சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் தன்மை இருக்கிறதால எங்கள் கலங்களுக்கு எதுவுமே ஆகிறதில்ல. சில ஒட்டுண்ணிகள் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருதே அதுபோல. 'வெளி'யில் பயணிக்கும்போது இந்த உயிரிகள் சூட்டினால மடியிறதில்ல மாறாக அதன் வீரியம் அதிகமாகுது."
"கடலுக்குள்ள சுடு நீர் ஊற்றுக்கள் பக்கத்தில வாழமுடியாத சூழலிலேயும் வாழும் உயிரிகளைப்போல."
மாரியப்பன் சோர்வடைந்து உட்கார்ந்தார். இன்னும் தலை வலித்துக்கொண்டேயிருந்தது.
"நீங்க இப்பப் போகலாம். உங்களிடமிருந்து தேவையான தகவல்கள் ஏற்கனவே எடுத்தாச்சு. உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்."
"கொஞ்சம்..." மாரியப்பன் பேச நினைக்கும்போதே அவன் மறைந்துபோனான். மீண்டும் ஒளி சூழ்ந்தது.
"வாத்தியாரே... சார், மாரியப்பன் சார்." ஏட்டுவின் குரல் கேட்டது. "சார் எந்திரிங்க."
மெதுவாகக் கண் திறந்தார்.
"ஒங்க தலையில க்ரிக்கெட்பால் பட்டு விழுந்திட்டீங்க. கார் கூப்பிடப் போயிருக்காங்க."
'இவங்க யாருக்குமே அன்னியர்கள் வந்து போனது தெரியல. அவங்க நினைவுகளை அழிச்சிருப்பாங்க.'
"ஏட்டு சார் எனக்கொண்ணுமில்ல லேசா தலைவலிதான். கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்க."
ஏட்டு புரியாதது போல விழித்தார்.
"என்ன சொன்னீங்க?"
"கொஞ்சம் தண்ணி கொடுங்க போதும்."
ஏட்டு மாரியப்பனின் பேரனைப்பார்த்துக் கேட்டார்.
"டேய்.. ஒங்க தாத்தாவுக்கு சமஸ்க்கிரதம் தெரியுமாடா?"
நன்றி: தமிழோவியம்
Tuesday, August 22, 2006
மான்ஸ்டர் - சிறுகதை
தூங்கும்போது மட்டுமே கதை கேட்பாள் பேத்தி அனு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை. 'பெட் டைம்' கதைகள் கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம். துளசி பாட்டி ஊரிலிருந்து வரும்போதெல்லாம் அவர்தான் கதை சொல்லவேண்டும்.
"மம்மி, நீ எப்பவும் ஸ்னோ ஒயிட் கதையே சொல்லுற, பாட்டிதான் வேற வேற கதையா சொல்வாங்க." என அன்னையை ஒதுக்கிவிடுவாள்.
துளசி முடிந்தவரை தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லித் தருவார்.
'குழந்தைங்களுக்கு நம்ம தெய்வங்களப் பத்தி நாம சொல்லிக்கொடுக்கணும். வெறுமனே கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப்போயி வந்தா மட்டும் போதுமா? குழந்தைங்களும் எளிதா தெரிஞ்சுக்கணுங்றதாலத்தான் கதையா சொல்றாங்க.' துளசி மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுவார்,
'முன்னால நாங்க திருநாள் பெருநாள்னா கோவிலுக்குப்போயி கதாகாலாட்சேபமோ, கூத்தோ, டிராமாவோ பாத்து தெரிஞ்சுகிட்டோம். இப்ப டி.வி முன்னாலேயே காலம் போயிடுது. இந்தியாவிலயே இப்படீன்னா இங்க எப்படி குழந்தைங்களுக்கு நம்ம மதம் பத்தி தெரியும்?'
'அம்மா, இங்க குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தராங்களோ அதத்தான் நாங்களும் சொல்லித் தர்றோம். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. முதல்ல எங்க தலைமுறைங்களுக்கே இந்தக் கதைங்க நெறையா தெரியாது.' ஏதவது சொல்லி மழுப்புவான் மகன்.
"பத்து தலையா பாட்டி? டென் ஹெட்ஸ். அதெப்படி ஒரு ஆளுக்கு டென் ஹெட்ஸ் இருக்கும்?"
"அவர் வில்லன்மா அதுனால அப்டி சொல்லியிருக்காங்க. பத்து தலண்ண எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?"
"பாட்டி ஒனக்கு சிண்டரெல்லா கத தெரியுமா?"
"தெரியாதும்மா..."
"அந்த பொம்ம பொய்சொன்னா மூக்கு நீளுமே அந்தக் கத?"
"தெரியாதே. சரி இப்ப நான் சொல்ற கதையக் கேளு."
"ம்."
"இராவணன் லங்கையில அரசனாயிருக்கும் போது."
"லன்கையின்னா?"
"ஸ்ரீலங்காம்மா..அது ஒரு. நாடு இந்தியாவுக்குக் கீழ குட்டியா இருக்குமே."
"ஸ்ரீலங்காவா? என் ஃப்ரெண்ட் சிமிக்கும் அந்த ஊர்தான்."
"அப்போ அனுமான் சீதையத் தேடி லங்கைக்குப் போனாரு."
"மங்கி மாதிரி இருப்பாரே அந்த அனுமாரா?"
"ஆமா."
"ம்."
"இராவணன் அவையில அனுமாருக்கு ஒக்கார எடமே குடுக்கல."
"ம்."
"ஒடனே அனுமார் என்ன செய்தார் தெரியுமா? அவரோட வால நீஈஈஈஈளமாக்கி வட்டமா சுத்தி இராவணன விடவும் ஒசரமான இடத்துல ஒக்காந்தாரு."
"ம். எதுக்கு?"
"இராவணன் சீதைய அடச்சு வச்சிருந்தான்ல.. அவள விடுவிக்கணும்னு அட்வைஸ் சொல்றதுக்கு."
"எப்படி பாட்டி? மங்கி பேசுமா?"
"அனுமார அப்படிச் சொல்லக்கூடாதும்மா. அவர் சாமி."
"ம்."
"அனுமார் பேசுவார். அவரப் போல இருக்குற வானரங்கள் எல்லாமே அந்தக் காலத்துல பேசும்."
"வானரம்னா?"
"ம்ம்ம்ம்....மங்கீஸ்."
"ம்."
"அனுமார் ஒயரமான எடத்துல இருந்ததால இராவணனுக்கு கோவம் வந்து வால்ல நெருப்பு வச்சுட்டாங்க."
"ம்."
"அனுமார் வால்ல எரியுற தீய வச்சி லங்கையில பெரிய அழிவயே உண்டாக்கிட்டாரு."
"ம்..அப்போ வால்ல தீ எரிஞ்சா அனுமாருக்கு பெயின் இருக்காதா?"
"ம்.. அவர் தெய்வம்மா ரெம்ப ஸ்ட்ராங்கானவர் அனுமார். ஒரு மலையத் தூக்கிட்டே பறக்க முடியும் அவரால."
"பாட்டி நீ எப்பவுமே இப்டிக் கததான் சொல்லுற. நம்பவே முடியல. நான் தூங்கப் போறேன்."
கண்களை மூடித் தூங்க ஆரம்பித்த அனுவை கொஞ்சம் கோபத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார் துளசி.
'எப்படி இவங்க நம்ம நாட்டப் பத்தியும் நம் பாரம்பரியம், மதம், தெய்வங்களப் பத்தியும்
தெரிஞ்சுக்கப் போறாங்க?' யோசனையுடன் ஹாலிலிருந்த ஃப்யூட்டானில் படுத்து தூங்கிப்போனார்.
நள்ளிரவில் தன் அருகே யாரோ நின்று தன்னை தட்டுவதை உணர்ந்தார்.
"அனு... என்னம்மா தூக்கம் வரலையா?"
"பாட்டி என் கூட வந்து படுத்துக்கிறியா?"
"ஏம்மா?"
"என் ரூம் க்ளாசட்ல மான்ஸ்டர் இருக்குது."
Monday, August 07, 2006
உறவுகள்
"அங்க என்னடி வேடிக்க? ஓ நீங்களா.. தமிழ், நீ போயி அக்காவப் பாரு. ஒன்னக் காணோமேன்னு தேடுனா. நீ இதெல்லாம் பாக்கவேண்டாமின்னு சொன்னேனே கேட்டியா?
ஹலோ.. நீங்க இருக்குறத மறந்துட்டேன். என் பேரு சங்கீதா. கல்யாணப் பொண்ணோட அம்மா. இன்னைக்கு அவள் மனசுக்குப் பிடிச்சபடி, காதலிச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கப் போறா. எவ்வளவு சந்தோஷம். என் பொண்ணு ஒருத்திக்கு கல்யாணம்.
இந்தக் குடும்ப விவகாரதுல அவர் தலையிடுறதில்ல. அவர் வியாபாரத்தப் பாக்கவே நேரமில்லன்னு நொந்துக்குவார். இவ கல்யாணத்தப் பத்திக் கூட எல்லாம் முடிவு பண்ணப்புறந்தான் அவருக்குச் சொன்னேன். முடிவு பண்ண என்ன இருக்குது? ரெண்டுபேரும் ஒண்ணா வேல பாக்குறாங்க. ஒரே ப்ராஜெக்ட்ல. இவ லீடர். இந்தக் காதல் விவகாரத்தையெல்லாம் அவகிட்டையே கேளுங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. கல்யாணவீட்டுல வேலைக்காப் பஞ்சம். ஏய் இளவரசி, இவங்களுக்கு ஒன்னோட காதல் கதைய கொஞ்சம் சொல்லேன்."
"அதுவா? நான் லீட் பண்ணுற ப்ராஜெக்ட்ல இவர அசைன் பண்ணாங்க. ஐ.டிக்கு இவர் புதுசு. அதனால அடிக்கடி சந்தேகம் கேட்பாரு. பல நேரம் திட்டு வாங்குவாரு. கிராமத்துலேர்ந்து வந்தவர்னால இங்லீஷ் அவ்வளவா வராது. இத வச்சி எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவருக்குத் தனி அட்டென்ஷன் தர ஆரம்பிச்சேன். அப்புறம் ப்ராஜெக்ட்ல புரளி கிளம்பிடிச்சு. எங்க ரெண்டுபேரையும் சேத்துவச்சு ஈ மெயிலெல்லாம் ஓடுச்சு. நான் எதையுமே கண்டுக்கல ஆனா இவர் என்கிட்ட பேச ஹெசிட்டேட் பண்ணினாரு. அவரோட வெகுளித்தனமும், கத்துக்கணும் முன்னேறணுங்க்ற ஆர்வமும் என்ன அட்ராக்ட் பண்ணிடுச்சு. அப்புறம் என்ன, புரளியெல்லாம் உண்மையாயிடுச்சு. வீட்டுல, கிராமமாச்சேன்னு யோசிச்சாங்க. நாங்க ஐ.டி ல வேலபாக்குறோம் கிராமத்துக்கு எங்கே போய் செட்டிலாகப்போறோம்னு அம்மாகிட்ட சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிட்டேன். அதோ வர்றாறே கிச்சு மாமா அவர்தான் எனக்கு பர்ஸ்ட்லேர்ந்தே சப்போர்ட்."
"என்னடி கல்யாணப் பொண்ணு இவாகிட்ட நம்மளப்பத்தி என்ன கத விடறே?"
"இந்த கல்யாணம் உங்களாலத்தான் நடக்குதுன்னு சொன்னேன்."
"நமஸ்க்காரம். நான் கிச்சு. கிச்சுன்னா கிருஷ்ணமூர்த்தி. பொண்ணுக்கு மாமா மொற வேணும். செத்த ஒக்காந்து பேசலாமா? இவ பீட்டர் அம்பிய விரும்புறாங்கிறத யார்கிட்டயுமே சொல்லல்லை. நாங்களும் பொண்ணுக்கு வயசாயிடுத்தேன்னு வரன் தேட ஆரம்பிச்சுட்டோம். ஒரு வரன் ரெம்ப பக்கத்துல வந்துட்டா. இத முடிச்சுரலாம்னு நானும் சங்கீதாவும் முடிவு பண்னிட்டு திரும்பும்போது இவா ரெண்டுபேரும் பைக்குல போயிட்டுருந்ததப் பாத்துட்டோம். யார் அந்த அம்பின்னு காசுவலாத்தான் விசாரிச்சா . அப்புறம்தான் இவ உண்மையச் சொன்னா. சங்கீதாவுக்கு கோபம் வந்துடுத்து.' ஏண்டி, இவ்வளவு நாளா நாங்க வரன் பார்த்துக்கிட்டிருக்கச்சே நந்திமாதிரி இருந்துண்டு இப்போ இப்படி சொல்றயேன்னு சத்தம் போட்டா'. நாந்தான் அவள சமாதானப் படுத்துனேன், மட்டுமில்ல பையன் ஆத்துக்குப் போயி நானும் பொண்ணோட இன்னொரு மாமாவும் சம்மந்தப் பேசிட்டு வந்தோம். பொண்ணுக்கு மாமாமட்டுமில்லாம புரோகிதராவும் இந்தக் கல்யாணத்த நடத்திண்டிருக்கேன். அந்தா இருக்கார் பாருங்கோ காதர் பாய் அவர்தான் நான் சொன்ன இன்னொரு மாமா. அவர்கிட்ட கேளுங்க மீதி கதைய."
"வாங்க... காதர், பொதுவா பாய்னுதான் எல்லாரும் கூப்புடுவாங்க. பொண்ணுக்கு மாமா. எல்லா கதையுமே சொல்லியிருப்பங்களே. நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்துப் பெண்ண ஒரு கிறித்தவனுக்கு கட்டிவைக்கிறோமேன்னு யோசிச்சாங்க. அட நம்ம குடும்பத்தில எதுக்கு சாதி மதமெல்லாம் பாத்துகிட்டுன்னு நானும் ஐயரும் எல்லார் வாயையும் மூடிட்டோம். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.
நாங்க பாத்து வளந்த பொண்ணு. அவ சந்தோஷந்தான் எங்க சந்தோசமும். அல்லா அவளுக்கு ஒரு கொறையும் வைக்கமாட்டார். இங்க பொண்ணுக்கு தாத்தா, பாட்டி அத்த மாம, சித்தி சித்தப்பான்னு எல்லா மதத்துலேந்தும் இருக்காங்க எங்க குடும்பம் அப்படி. காலம் மாறிகிட்டே வருது பிறக்கும்போது ஒரு குழந்தையா, ஆடைகூட இல்லாத மனுசனாத்தானே பெறக்குறோம். மதமெல்லாம் நம்மள கட்டுப்படுத்த வந்த ஒரு வேலி. யாருக்கு எப்படி வேணுமோ அப்படி போட்டுக்கலாம் அந்த வேலிய. ரெம்ப பேசிட்டேனோ. வாங்க தாலி கட்டு நடக்கப் போகுது மிஸ் பண்ணிடப் போறோம்."
"ஹெலோ அகெய்ன். நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு இதோ எங்க வீட்ட விட்டு கிளம்பப்போறேன். சின்ன வயசுலேர்ந்தே இங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பல உறவுகளோட வாழ்ந்துட்டு அவங்களப் பிரிஞ்சு போறது எவ்வளவு கஷ்ட்டம். இந்த அத்தனை உறவுகளுக்கும் சேர்த்து அன்பு செய்ய என் கணவரால முடியுமா. தெரியல?
கல்யாணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவிதான். எப்படி ஒரு வீட்டுல திடீர்னு ஒரு நாள் போயி அந்த வீட்டு மனுஷியா வாழமுடியும்? பல சந்தேகங்கள மனசுல சுமந்துட்டுத்தான் இதோ கார்ல கிளம்பிட்டேன்.
அங்க பாருங்க என் சொந்தக்காரங்க எல்லார் கண்ணுலையும் கண்ணீர். காதர் மாமா கூட கலங்குவார்னு நான் எதிர்பாக்கல.
கார் கிளம்பிடிச்சு. சோகமான கையசைவுகளோட என் புதுப் பயணம் துவங்குது. 'ஜீவன் ஆதரவற்றோர் இல்லம்' போர்டு தொங்குது பாருங்க, ஊருக்குப் பொனதும் அம்மாவுக்குப் போன் பண்ணி அந்த ஆதரவற்றோர்ங்கிற வார்த்தைய அழிச்சுட்டு வெறும் 'ஜீவன் இல்லம்னு' வைக்கச்சொல்லணும். என்ன சொல்றீங்க?"
Friday, June 30, 2006
நட்சத்திரங்கள்
இதப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்,"ஏம்மா, எல்லா மீன்களையும் உன்னால காப்பத்த முடியுமா? உன் முயற்சி வீண்தானே?" என்றார்.
அதற்கு அந்தப் பெண். "எல்லா மீன்களையும் பார்க்கும்போது என் முயற்சி வீண்தான். ஆனா இதோ இந்த மீனப் பொறுத்தவரைக்கும்...அது முழுவெற்றி. இல்லையா?" என்றாள்.
(The old man said," You cannot save them all. Does it
matter?", the girl replied,"To this fish it does." )
- From the movie "The Holy Man"
பெரிதாய் சிந்திப்போம். சிறிதாய் செயல்படுவோம். எடுத்தவுடன் உலகை மாத்தமுடியுமா?
Wednesday, June 28, 2006
ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ...
கொஞ்ச நாளாய் பாடாய் படுத்தி எடுத்துவிட்ட சளியில் ஒரு கையில் நாப்கின் வைத்துக்கொண்டு இன்னொரு கையில் தட்டச்சியதில் வலதுகை நடுவிரலில் இரண்டு ரேகைகள் அழிந்துள்ளன. இதனால் என் தலையெழுத்து மாறியிருக்குமா என ஜோசியருக்கு ஈ மெயில் அனுப்புமுன் அவர் 'உங்களுக்கு இந்த சமயத்தில் 'சளி' முத்திப்போக வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னது நியாபகம் வந்தது.
இதெல்லாம் weather.com பாத்து சரியா சொல்கிற ஆள் ஜோசியத்தில் 'கோட்டை' விட்டுறார். அந்தக் கட்டம் கட்டமா போடுவாங்களே அந்தக் 'கோட்டைத்' தான் விட்டுட்டார்.
போன் போட்டு விஷயத்தச் சொல்லி, "சளிக்கு என்ன பரிகாரம்?", கேட்டதும் அவங்க அப்பாகிட்ட குடுத்துட்டார்.
'ஜோ' திலகம். முன்னால சோதிடத்திலகம்னு பேரு இப்ப சந்திரமுகி பாத்ததுலேந்து 'ஜோதிடம்' சுருங்கி 'ஜோ' ஆயிடுச்சு. "அது வந்து தம்பி என் பேரு கணே'சன்'." வேண்டுமென்றே 'சன்'னை அழுத்திச் சொல்வார்,"சன்... சூரியன். சூரியன்...சூர்யா. பேர் கூடப் பொருந்திடிருக்கு பாத்தியா?" இளமைத் துடிப்போட சொல்வார். இவரரிடம் நல்ல நேரம் பார்த்து என்னெல்லாமோ செஞ்சிருக்கேன். தெருமுனையில் திரும்பினதும் தலையில் அடித்துக்கொள்வேன்.
"ஜோ மாமா சவுக்கியமா?"
"சவுக்கியம்டா."
"இப்ப எழரை நாளா.."
"தெரியும்டா. ஏழரைன்னு எனக்கே சொல்றியா. அன்னைக்கே உங்கப்பங்கிட்ட அடிச்சு சொன்னேன் நீ எங்கயோ போயிருவன்னு. இன்னைக்கு அமெரிக்காவுல குப்ப கொட்டுற. சனிக்கு என்ன பெரிய பரிகாரம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் போய் சனிபகவானுக்கு நல்லெண்ணண தீபம் ஏத்த வேண்டியதுதான்".
"ஐயோ ஜோ மாமா சனி இல்ல சளி." எப்போதும் வரும் தும்மல் இப்ப வந்தா இவரு ஈசியா புரிஞ்சுக்கூவாரோ? கஷ்ட்டப்பட்டு தும்மிப் பார்த்தேன், பலனில்லை. "அச்சு", செயற்கையா ஒன்னு எதுக்கும் இருக்கட்டுமேன்னு போட்டு வைத்தேன்.
"சளியா அது நம்ம உள்துறை விவகாரம். ஏண்டீ...",ஐயையோ ஒரு சாதாரண சளிக்கு இத்தனை பாடா. "எப்ப பாத்தாலும் சீரியல். இங்கவாயேன் இந்த..இவனுக்கு சளியாம். அந்தக் கஷாயத்துக்கு பக்குவம் சொல்லு ஓடிவா."
மாமி டி விய போன் பக்கமா திருப்பி வச்சிருப்பாங்கபோல,"காய்ச்சலா?தலைவலியா? மூக்கடைப்பா?" டிவில கேட்டதுக்கு இயல்பாகவே,"ஆமாய்யா ஆமா." சொல்லிவைத்தேன்.
"என்ன பிராப்ளம்பா உனக்கு..", ஜோசியர் அம்மா.
"பயங்கர சளி. ", கஷாயத்துக்கு பக்குவம் சொல்லித் தந்தாங்க, குறிச்சு வச்சுகிட்டேன்.
"டேய். உன் வீட்டுல சன் டி வி இருக்குதே, செல்வி பாக்குறியா?"
"ஆமா பாப்பேன்"
"நேத்து எப்பிசோட்ல..."
"வேண்டாம்...", சினிமாவுல ஸ்லோ மோஷன்ல 'நோ...............'ன்னு கத்துறமாதிரி சொன்னேன்.
"உங்களுக்கு நேத்து வந்தது எனக்கு இன்னைக்குத்தான் வரும். கதைய சொல்லிராதிங்க."
"ம்ம் சரிடா பொழச்சுப் போ. உடம்ப பாத்துக்க. இந்தா உன் கிளாஸ் மேட்கிட்ட குடுக்கிறேன்." சந்திரன், ஜோ மாமாவின் மூன்றாவது பையன். என்கூட எல் கே ஜி லேர்ந்து படிச்சான். 'என் பையன் சாதகப் படி எங்கயோ போயிருவான்னாரு ஜோ மாமா. சொன்னதுபோல எட்டு படிக்கும்போது வீட்டவிட்டு ஓடிப் போய் ஒரு வருஷம் தேடி 'எங்கேயோ போயி' கண்டுபிடிச்சாங்க. இப்ப மெடிக்கல் காலேஜ்ல மாமா க்ளையண்ட் ரெக்கமண்டேசன்ல படிக்கிறான்.
"சொல்லுடா. என்ன ஏதாவது விஷேஷமா?"
"இல்லடா கொஞ்ச நாளா சளி. ஆபீஸ் போகாம வீட்டுல இருந்தது போர் அடிச்சுது. சரி உங்க வீட்டுக்கு சும்மா ஒரு கால் போட்டேன்".
"சளியா?" அட இவனுக்கும் ஏதாவது தோணிடுச்சா? மெதுவாகச் சொன்னான்,"ஒரு சின்ன பெக் பிராண்டிய லேசா சூடான தண்ணியில ஊத்தி அடிச்சுட்டு தூங்கினா போதும்." டாஸ்மார்க் கடைக்கு ப்ரிஸ்க்க்ரிப்சன் எழுதித் தரும் ஒரே டாக்டர் இவனாத்தான் இருக்கணும். இப்பத் தெரியுது ஏன் டாக்டர் கையெழுத்து ஏன் மோசமா இருக்குன்னு.
"ரெம்ப தாங்ஸ்டா. ட்ரை பண்ணுறேன்." கொஞ்சம் பேசிவிட்டு போனை வைத்ததும்,'இனி சனியே வந்தாலும் இந்த நம்பருக்கு போன்போடக்கூடாதுன்னு நினை...ச்ச்ச்சு... அப்படா இன்னுமொரு வானவில் தும்மல்.
பி.கு. நாலு நாளா வீட்டுல நிஜமாவே சளியோட படுத்துட்டேன். நாளைக்கு கட்டாயம் அபீஸ் போகணும். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்...ஒரு கையில இவ்வளவுதான் அடிக்க முடிஞ்சுது. இராகவனை கிண்டல் செஞ்சது எனக்கே வந்து முடிஞ்சுடுச்சு.
Friday, June 09, 2006
நிர்வாணா
ஒருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.
புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாடமுடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது.
'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்' எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.
சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார்,'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.
Friday, May 12, 2006
2060 தேர்தல்
அவனே என்னை அழைத்தான்,"வணக்கம் செந்தமிழ், நலமா?".
அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் 'இன்டர்ப்ரெட்டர்-VII'.
"நலம் லாங்டன், நீ எப்படி?".
"பெரிதாய் ஒன்றுமில்லை." சலித்துக்கொண்டான்.
"2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?"
"நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்."
"ஓ... ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?"
"ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா 'ஜஸ்டிஸ்' குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்."
"மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?".
"சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்."
"ஆமாம்."
"எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?"
"அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.", சிரித்தான்,"எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்."
"அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்."
இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.
"லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு."
"போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?"
காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல 'செந்தமிழாய்' ஒலித்தது.
"இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.
ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.
அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்."
"செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்."
"ஓ...தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்."
"நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை."
"லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே."
"ம்..."
"தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்."
"என்ன...ஏய் என்ன சொல்ற."
"கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்"
லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.
"பீப்...பீப்"
சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.
"வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்"
கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.
சிறில் அலெக்ஸ்
சுசிலாவைக் கேளுங்கள்...