.

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, January 29, 2007

ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.

ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.

எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன.

சின்னஞ்சிறு கிளியே - எஸ். பி. பாலசுப்ரமணியம்
காக்கைச் சிறகினிலே - சுஜாதா
மோகத்தை கொன்றுவிடு - ராஜா கோவிந்தராஜா (குரல் எஸ்.பி.பியின் குரலை ஒத்துள்ளது)
நல்லதோர் வீணை செய்தே - ஸ்ரீனிவாசஸ்
தீராத விளையாட்டுப்பிள்ளை - எஸ். பி. பி
வாழ்க தமிழ் - ஹரீஷ் ராகவேந்த்ரா

பாடல்களை இங்கே கேட்கலாம். பதிவிறக்கலாம், இலவசமாக.

ஸ்ரீகாந்த் இசையில் H1bees எனும் தொகுப்பு பிரபலமானது.
தற்போது "பாடல்" எனும் குறுந்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
"பாடல்" வாங்க, முன்னோட்டமிட க்ளிக்குங்கள்.

ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம்.

Saturday, December 30, 2006

e-த்திச் சூடி

e-த்திச் சூடி

மேசானில் ஆர்டர் செய்
ர்க்கூட்டில் பழகு
ணைப்பை கைவிடேல்
பேயில் விற்றுவிடு
ரல்களை சேமி
ரெல்லாம் நண்பர்கொள்
ண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
யம் தீர்க்கும் விக்கிப்பீடியா
ரே மெயில் ஐடி கொள்ளேல்
சியிலேயே ப்ரவுசிங் செய்

வ் ஆர் யூவில் துவங்கு(How are you?)
தே e-நயம்.

சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?)

Sunday, October 29, 2006

பசி-சுப்பையா சார் கவிதை

பசி---------------SP.VR. சுப்பையா
பணம்
உள்ளவனுக்குத்
தெரிந்த 'பசி'
நிதியமைச்சர்
ப.சி!

கன்னிமாராவிற்குள்
காலடி வைப்பவனுக்கு
அங்கிருக்கும் நூல்களால்
ஏற்படுவது
அறிவுப் பசி!

கலங்கவைக்கும் நிகழ்வுகளை
எழுதியவுடன்அடங்குவது
கவிஞனின்
உள்ளத்துப் பசி!

கட்சிவிட்டு
கட்சிதாவச் செய்வது
அரசியல்வாதியின்
அகோரப்பசி
பதவிப் பசி!

நான்கு லார்ஜிற்குப் பின்
வரும் பசி
பாருக்குப்
போகிறவனுக்குப்
பழகிவிட்ட பசி!

உறவு பேதமின்றி
எந்தப் பெண்ணுமே
அழகாகத் தெரிவது
நெறிகெட்ட மனிதனின்
நிலையில்லாதகாமப் பசி

பதிவைப்
போட்டுவிட்டுக்
காத்திருப்பவனுக்கு
ஏற்படுவது
பின்னூட்டப் பசி!

என்னய்யா
பெரிய பின்னூட்டம்
என்றிருப்பவனுக்கு
என்றுமே வராது
ஏக்கப் பசி!

பாதி உணவோடு
இலையை மடக்குபவனுக்கு
ஏற்படுவது
என்றும் அவனோடுள்ள
அஜீரணப் பசி!

ஒரு வேளை
உணவிற்குத்
தவமிருப்பவனுக்கு
ஏற்படுவது
உண்மையான பசி!

Monday, October 16, 2006

கோமாளி-கவிதை-SK

கோமாளி தலைப்பில் எஸ்.கே பின்னூட்டமாய் எழுதிய கவிதை..


கோமாளிக்கும் ஏமாளிக்கும்
மயிரிழைதான் வேறுபாடு

கோமாளி தான் செய்வது
இன்னதெனச் செய்கிறான்

மற்றவரை ஏமாற்றி
அவன் அடிபடுவதில்லை

ஏமாளியோ தன்னையும் வருத்தி
மற்றவரையும் வருத்துவான்

ஏமாளிக்கு
கோமாளியே மேல்
என்னமோ போங்க!

ஆடுகள் மோதுவது
கொம்பெனும் திமிரால்

அவரவர்க்கு ஓர் கொம்புண்டு
அதுவும் புரியும் அவர்க்கே

கொம்பைச்
சீவிவிட்டு
மோதவிடும் கூட்டம்

இருபக்கமும் உண்டு
இதுதானே உண்மை
இங்கு

தனக்கா வலிக்கிறது
அடிபடுவது ஆடுதானே

இதில் இதென்ன
உசத்தி
அதென்ன தாழ்த்தி

அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே

உன்னையும் தாண்டி
என்னையும் தாண்டி

புரிதல் எனும் அந்தப்
பெருமையை உணர்ந்தால்

யாரும் இங்கு கோமாளியல்ல
யாரும் இங்கு
ஏமாளியல்ல

புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!

அவரவர்
உறவே
அவரவர்க்கு சத்தியம்

எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு

உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு!

Thursday, August 03, 2006

நட்பு வாரம் - இளக்கியப் பதிவு

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி.

ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் 'இணைய நட்பு' பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம்.

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


(தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல
வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி?

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

அறிவுசீவி பதிவர்களின் நட்பு வளர் பிறை; மற்றவர்களின் நட்பு தேய்பிறை.

783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பதிவுகளைப் படிக்கப் படிக்க வெறுப்பு வளர்வது போல பின்னூட்டம் இட இட நட்பு சுகம்
தரும்.

784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

எப்பவுமே 'சூப்பர் சார்', 'கலக்கல் பதிவு', 'பின்னிட்டீங்க' மற்றும் :) போடாம
அப்பப்ப 'என்னடா பதிக்கிற', 'சோம்பேறி', 'கஸ்மாலம்' :( போன்ற பின்னூட்டங்களும்
இடுவதே நல்ல நட்பு.

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

வலைப்பதிவர் சந்திப்பு, ஜிகர்தண்டட பகிர்வு, எல்லாம் தேவையில்ல சும்மா இணையத்திலே
பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டாலே பொதும் நட்பு தானா வளரும்.

786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

சும்மா :) - ஸ்மைலி- போட்டுக்கிட்டு அலையிறது நட்பில்ல உள்ளத்துல இருக்குறத
வார்த்தையில எழுதுவதே நட்பு. (கவனிக்கவும் - பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி
செய்துள்ளார்)

787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

சகிக்க முடியாம பதிவு போட்டுக்கொண்டு பின்னூட்டமே பெறாத ஒரு பதிவரை நல்ல பதிவு
போடுவதற்கு 784ல் சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டு வழிநடத்துவதே நட்பு

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பின்னூடமெனும் ஆடையிழந்த பதிவருக்கு கைகொடுத்து பின்னூட்டமிடுவதே நல்ல நட்பாகும்.

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்சத்திரமாய் மின்னும்போது மட்டுமில்லாமல் தேன்கூடு போட்டியில் தோற்று
வருந்தும்போதும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் போடுவதே நட்பு.

790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர் என் குழு, அவர் என் ஊர் எனப் பேசினனலும், பல பட்டங்கள் கட்டினாலும்,
எப்போதும் தங்கள் நட்பப பற்றியே பேருமமயாகப் பேசிக்கொண்டாலும், அந்த நட்பு இழிவாகவே
கருதப்படும். (இனையர் = இணையர்; இணையம் + அவர்)

இந்தப் பாவம் போக்க ஐயன் சிலையை ஐம்பது முறை வலம்
வருவதுதான் பரிகாரம் என தீட்சிதர்கள் எனக்குத் தனிமடல் (தமிழில்தான்)
அனுப்பியுள்ளனர்ர்

Friday, July 28, 2006

யரலவழல

கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.

தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம்.

குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.

இலவச அரசியலில், பண்ணையார்களுக்கு கடன் தள்ளுபடியும், தண்ணீர் விற்பனைக்கு இலவச மின்சாரமும் தந்துதவ யாரிடம் வசூலிக்கப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் நடத்தும் வியாபரங்களிலுருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் பங்குகளை விற்றும் பண உதவி செய்வார்களோ என்னவோ.

தமிழில் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் கெசட்டில் அறிவிக்க கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது (440லிருந்து ரூ. 50 ஆக). தன் சொந்தப் பெயரை தமிழில் ஒருவர் மாற்றிவைத்துக் கொள்வாரானால் அவருக்கு அரசு ரூ. 50 வழங்கவேண்டும். அதுதான் தமிழ் வளர்க்கும் வழியாயிருக்கும். (நான்கூட என் பெயரை கலைஞர் தாசன் என மாற்றிக்கொள்வேன்.... இல்லை ரூ.50க்காக பெயரை மாற்ற முடியாது).

திரைப் படங்களுக்குச் சலுகை வழங்குவதைப் போலவே
வியாபாரக்கூடங்களுக்கும் வழங்கலாமே. 'நாடார் அண்ட் சன்ஸ்' மாற்றி 'நாடாரும் மகன்களும்' என வைக்கவும் 'நாயுடு ஹால்' 'நாயுடு (தமிழா?) அரங்கமாகவும்' மாறும். இதன் மூலம் சன் டி.வி கூட பெரிய பலனை அடையும்.

தமிழில் சினிமா பெயர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன 1652 தாய்மொழிகள் இருக்கின்றன எதை வளர்ப்பது எதை விடுப்பது. 'தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள எல்லா மொழிகளும் அதன் இலக்கியங்களும் பாதுகாக்கப்படும்', என்பதுதான் சனநாயகம்.

தமிழை வைத்து அரசியல் செய்துகொண்டு தமிழைக் காக்கிறோம் எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிரூக்கிறோமோ எனத் தோன்றுகிறது.

அடுத்தது என்ன மம்மி டாடி எனச் சொல்லாமல் அம்மா அப்பா எனக் கூறும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் இலவசமா?

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரீம் ஸ்டார்கள் எனப்படும் நடிகர்களுக்குத் தடை வந்தாலும் வரும்.

தலைப்பு? அடுத்து வரப்போகும் படத்தின் பெயர்தான்.

<<<<<<<<<<<உள்ளலின் பதிவு.>>>>>>>>

Monday, March 20, 2006

டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்

'Twinkle twinkle little star' தமிழில் பாடிப்பாருங்கள்

மின்மினி மின்மினி நட்சத்திரம்
வானில் தெரிகிற ஆச்சர்யம்
உலகத்தின் மேலே வானத்திலே
வைரம் போல ஜொலிக்கிறதே (அல்லது - சிரிக்கிறதே)

சிம்பு பற்றிய பதிவோ என நினைத்தவர்கள் மன்னிக்கவும்.

Wednesday, January 18, 2006

ஐயா நீர் கவிஞர்


ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பாரதியைக் கண்டுபிடித்தேன்.தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரைத் தேடாதவர்களுக்கும்.

http://www.pondy.com/bharathiar/

'அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித்தத்தும்பும் விழிழ்களும்'


'உயிர்த்
தீயினி லேவளர்சோதியே - என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே..'

காதல் வராதவர்களுக்கு மருந்து இந்த வரிகள்.

'மாதர் தம்மை இழிவு செய்யு
மடமை யைக்கொ ளுத்துவோம்...'

இதக் குஷ்பூ எப்படி எடுத்துக்கொண்டாரோ?அவரை சாடியவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனரோ?

'உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்குதடீ'

ஒரு பெற்றவராய் இதை உணராதவர் யார்?

'சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி - கண்ணம்மா

வானக் கருமைகொல்லோ'

பாரதியைப் படித்து மீண்டுமொருமுறை மெய் மறக்கிறேன்.

"ஐயா நீர் கவிஞர்", தருமி இன்றிருந்தால் இந்தப்பட்டம் பாரதிக்குத்தான்.

சிறில் அலெக்ஸ்