.

Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Thursday, January 25, 2007

ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

"சார். நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, "என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பி. பாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர். நாவிதர்."

"ஓ. இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

".........."

"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

Wednesday, January 24, 2007

வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)

சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.

சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.

சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.

நன்றி: தமிழோவியம், திருமலைக்கொழுந்து.

Thursday, January 18, 2007

நடையிழந்த கால்கள்தன்னில்...

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். 'காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை' என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.

ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து வெற்றிபெறுபவர்கள் தங்கள் பின்புலங்க்களை வெளிப்படுத்துவதே ஒரு புரட்சிகரமான வெளிப்பாடுதான். இதை எல்லோரும் செய்வதன்மூலமே கீழே இருக்கும் யாரும் என்றைக்கும் கீழே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல என்பது எல்லோருக்கும் உறைக்கும்.

முழுக்கால்சட்டை போடுவது கிறீத்துவக் கலாச்சாரமா? சேலை உடுத்துவது இந்து கலாச்சாரமா? (வாட் ய சில்லி கொஸ்டின்) இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் பொங்கல் தமிழர் திருநாளா இல்லையான்னு கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை எடுத்தாழ்வது அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை. இவற்றை விலக்கிவைக்கக் கூட உரிமை இருக்கிறது. இந்துப் பண்டிகையை கிறீத்துவர்கள் கொண்டாடும்போது அதில் இந்துமதக் கூறுகளை அகற்றிவிட்டே அதை கொண்டாடுகிறார்கள். 'கலாச்சார உள்வாங்கல்' எனவே இதை வகைப் படுத்தலாம்.

சாதி அமைப்பை கிறீத்துவர்கள் பின்பற்றுவதும் ஒரு கலாச்சார தாக்கமே. இதை இந்துப் பழக்கம் என உரிமைகொண்டாட யாரும் முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
லாரன்ஸ் இராகவேந்திரா கிறீத்துவரா இந்துவா? (அவரையே கேழுங்க)

இன்னொரு நிகழ்ச்சியில் மதுரைப்புயல் வடிவேலு தன் மாமியார் ஊரை சுறிக்காண்பித்தார். மண்ணின் மணம் வீசிய நிகழ்ச்சி.

வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகளிர் கூட்டத்தோடு தரையில் அமர்ந்து அவர்கள் வைத்திருந்த மீனை சுவைத்தார். அந்தம்மா பசங்க வெளிநாட்ல படிக்குதாம். இட ஒதுக்கீடுக்காக சண்டைபோட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தெளிவான பாடம்.

வெட்டிமன்றம் 'வாழ்க்கைக்கு மிகவும் உதவுவது....' எனும் தொடரில்(Series) இந்தமுறை 'படிப்பறிவா? பட்டறிவா?' என காமெடி செய்தனர். ரசிக்கும்படியாகவே இருந்தது. வழக்கம்போல ராஜா அணி தோல்வியைத் தழுவியது.

நடிகர், நடிகைகளின் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன. ஓவர் டோஸ் என்றே சொல்லவேண்டும்.

சரி நீ பொங்கல் கொண்டாடினியா?

என் மனைவி வைத்த சர்க்கரைப் பொங்கலை நான் சாப்பிடவில்லை. அவரே அதை சாப்பிடல. ஏன்னா அது சரியா வரல. ஆனா வெண்பொங்கலை வயிறு(பாதி கேஸில்) நிரம்ப கொட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கும் தூங்கிக்கொண்டிருந்த என் மகனுக்கும் கேட்காதபடி மெதுவாக 'பொங்கலோ பொங்கல்' சொல்லிவிட்டு என் மனைவி பொங்கிய பொங்கல். கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான். இதில் கொடுமை என்னண்ணா இந்த இழப்பை பலரும் உணர்வதே இல்லை.

என் பக்கத்து வீட்ல கலை கிரிஷ்னு தம்பதிங்க இருக்காங்க. ரெண்டுபேரும் அமெரிக்காவிலேயே பிறந்துவளந்த மாதிரி நடந்துக்கிறாங்க. அவரு ஐயாராம் கலை கொஞ்சம் தாழ்ந்த சாதியாம். ஆனா பாத்தா எந்த வித்தியாசமும் தெரியல. இவங்க அமெரிக்க வாழ்க்கையோட ஐக்கியமாயிட்டதால இங்க கோவில்ல வேலை செய்ய வாய்ப்பிருந்தும் க்ரிஷோட அப்பாவ கூட்டிட்டுவரலியாம். அவங்க அப்பாவுக்கு ஒரு எழுத்தாளர் பால்ய ஸ்னேகிதராம்.

Wednesday, January 03, 2007

வெயில் - நிழலல்ல நிஜம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.

வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் வாழ்வில் ஒருநாள் சுள்ளென சுட்ட வெயில்தான்.
கண்டிப்பான தந்தை, கட் அடித்துவிட்டு சினிமாபோன மகனை அம்மணமாக வெயிலில் கட்டிப்போடுகிறார். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் அவனும், அவன் சுயமரியாதையும் பொசுக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வாழ்க்கை வெறும் ஏமாற்றங்களையே தருகிறது. அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.

பாத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல படம் எடுக்கவேண்டும் என பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார். அவரேகூட சில பொன் மேனி உருகல்களோடுதான் படம் எடுத்திருக்கிறார். வெயில், கிராமத்து வீதிகளில் விதி ஆடும் பம்பர விளையாட்டுக்களை நேரடியாய் பதித்ததுபோல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் பரிமாணங்களை முகபாவத்திலேயும் குறைந்தபட்ச வசனத்திலேயும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். வெறும் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது கிராமத்தின் பல முகங்களையும் கதையில் இணைத்திருப்பதும் சிறப்பு.

பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். 'போட்டுரலாம்' 'தூக்கிரலாம்; எனும் வில்லன்களின் உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால் படம் நம்ம மாமூல் தமிழ் படங்களை துவைத்துப் போட்டிருக்கிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் பல சிறுவர்கள்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.

கோயமுத்தூரில் இருந்த நாட்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கான சிறைச்சாலை ஒன்றை ஞாயிறுதோறும் பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அங்கிருந்த சிறுவர்களில் அதிகம்பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். அவர்களே தங்களை 'சந்தேகக் கேஸ்' 'கிரிமினல் கேஸ்' என பகுத்துக் கொள்வதுண்டு. இப்படி ஓடி வரும் சிறுவர்கள் வாழ்க்கை பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை. இதில் வெற்றி பெறும் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளை வளர்ப்பதற்கு இதுதான் சிறந்த வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரியாக வளர்வதில்லை என்பதும் இதற்குச் சான்று. குழந்தைகளை தண்டிப்பது மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பதை இந்தப் படத்தின் மூலமோ இன்னும் செய்தித் தாள்களில் படிக்கும் பல செய்திகள் மூலமோ இல்லை ஒரு சிறுவர் சிறைச்சாலையை போய் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். சும்மா எடுத்தேன் அடித்தேன் என இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையில் அதீத தண்டனைகள் அதிகமில்லை எனவே நினைக்கிறேன். நான் பட்ட அடி என் பிள்ளைங்க படவேண்டாம் எனும் எண்ணம் இதற்கு காரணமாயிருக்கலாம்.

படம் முடிந்ததும் ஒரு கேள்வி தோன்றியது. ஒருவேளை அன்று வெயில் குறைவாயிருந்திருந்தால்?


கூகிளிய பிற விமர்சனங்கள்
தம்பி
சாரல்
விழியன்
யாழ்

Wednesday, February 08, 2006

ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 'எந்தப்பாடல் வரி?' என்பவர்களுக்கு. 'தில்' படத்துல வருமே... வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.

சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் 'வலியவனை எளியவனால் வெல்லமுடியும்' என்கிற ஒரே கருதான்.

ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony).

ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக நிறுவிவிட்டிருந்த காலகட்டத்தில்(1940), சாப்ளின் 'The Great Dictator' (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார்.

சாப்ளினின் மற்ற குறும்படங்களைப்போலல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது, கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்தப்படம்.

இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.

சிகை அலங்கரிப்பவர் வாழும் (யூத) சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை.

சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.

ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலமாரியைத்திறக்கிறார் அதில் பல விதங்களில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தைபோல சிரித்துக்கொண்டே அறையிலுள்ள திரைச்சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவதுபோல நடனமாடுகிறார். இதில் சாப்ளினின் நடிப்பு அபாரம்.

படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர் ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப்பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார், பின்பு தன் காதலியிடம் சேருகிறார். சுபம்.

ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தைத்தான் 'ஹிட்லர் காலத்தில்..சார்லி சாப்ளின் தில்' என்கிறார் நம் கவிஞர். (ஏதோ சங்க இலக்கியத்துக்கு G. ராகவன் தரும் விளக்கம் போலுள்ளதா?).

அந்தப் படத்தை Flashல் போட்டிருக்காங்க. கொஞசம் இந்தக்காலத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. போய் பாருங்கள்.

Friday, January 20, 2006

செத்த பிழைப்பு

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார்.

நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் 'Stiff' என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க.

அவரது கல்லறைக் கல்லில் "இந்த முறை இது நிஜம்"(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம்.

http://deadbodyguy.com/home.aspx

செத்த பிழைப்பு - தமிழில் Oxymoron

சிறில் அலெக்ஸ்