.

Showing posts with label தமிழோவியம். Show all posts
Showing posts with label தமிழோவியம். Show all posts

Wednesday, June 20, 2007

செல்வம் - சிறுகதை

ரெம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன். இந்த வார தமிழோவியத்தில் வந்துள்ளது

செல்வம்.
-------------------------------

'மதுரை 20 கி.மீ'. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. 'மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா' யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது.

விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே காணாமல் கரைந்து போய்விடலாம் எனும் நம்பிக்கை வந்தது. 'நீ எனக்குப் பொறந்தவன்னா இப்டி செஞ்சிருப்பியால?' அப்பாவின் கோபக் குரல் வாகன சத்தத்தில் கரைந்து போனது.

"தம்பி கோயம்பேடு வந்துடுச்சு. தனியாவா வந்த?" பக்கத்து சீட்காரர் தலைவாரிக் கொண்டே கேட்டார்.

"இல்ல. அண்ணாச்சி பின்னால இருக்காவ." பொய் சொல்வதே இனி பாதுகாப்பானது.

"இதுக்கு முன்னால சென்னை வந்திருக்கியா?"

"இல்லண்ணாச்சி இதான் மொதோ தடவ."

சாயங்காலம்வரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றினான். 'மனம் மாற்னா ஊருக்கு பஸ் ஏறிரலாம்'.

மனம் மாறுவதாயில்லை. அப்பாவை நினைக்க நினைக்க இன்னும் தூரமாய் ஓடிப்போகத் தோன்றியது.

"தம்பி. என்னடா காலைலேந்தே இங்க சுத்துற." விழித்துப் பார்த்தான். லத்தியால் தட்டியபடி போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.

"சார். இங்கன ஓட்டல்ல வேல பாக்கேன். இன்னைக்க்கு லீவு அதான்."

"திருநெல்வேலியா?"

"நார்கோயில்."

"பஸ்ஸ்டாண்ட்ல சுத்தாத. ரூமுக்கு போய் சேரு."

பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தான். முதலில் வந்த பஸ்ஸில் ஏறினான்.
"பஸ் எங்க போது?"

கண்டக்டர் முறைத்தார். "ஒனக்கு எங்கப் போகணும்?"
"பஸ் ஸ்டாண்ட்"

"எஸ்டேட்டா?"

"ஆமா." அவர் என்ன சொல்லியிருந்தாலும் 'ஆமா' சொல்லியிருப்பான்.

அம்பத்தூர் எஸ்டேட்டை அடையும்போது இருட்டியிருந்தது.

காலையில் பெரிய ஓட்டலில் சாப்பிட்டதில் ஐம்பது ரூபாய் காலியாகியிருந்தது. சின்ன ஹோட்டலில் இரவு சாப்பாடு. 'மதுரை முனியாண்டி விலாஸ்'.

இரவு பயமுறுத்த ஆரம்பித்தது. 'வீடு எத்தனை பாதுகாப்பானது?'

கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஹோட்டல் பக்கம் திரும்பி வந்தான். 'வீட்டுக்குப் போனா இன்னும் பயங்கர அடி கிடைக்கும்.' பீரோல இருந்த காசு 3000த்தை எடுத்து வந்திருந்தான். 'இப்ப போனா 2000த்த திரும்பத் தந்துரலாமோ?'

சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. 'மணி ரெம்ப இருக்குமோ?'

முனியாண்டி விலாஸ் மூடப்பட்டது.
"அண்ணே மணி எத்தன?"

"11:30"

ஹோட்டல் வெளியே இருவர் பாய் விரித்துக்கொண்டிருந்தனர்.
"அண்ணாச்சி. இங்க வேல கெடைக்குமா?"

"எந்த ஊருடா தம்பி?"

"நார்கோயில்."

"இங்க என்ன பண்ற?"

"ம்... எனக்கு அப்பா அம்மா இல்லண்ணாச்சி." தான் தனிமனிதன் என்பதில் ஒரு சுகம் தென்பட்டது. "ஊர்ல ஒரு கடையில வேல பாத்தேன். இங்க வந்துர்லாம்னு வந்துட்டேன்."

பொய் சொல்வதுதான் இனி பாதுகாப்பானது.

"என்ன வேல பாத்த?"

"சிப்ஸ் கட இருக்குல்லா? அங்க பார்சல் கட்றது?" சரளமாக தனக்கு பொய் சொல்லவருகிறது என்பதில் தைரியமடைந்தான்.

"பேரென்ன?"

"செல்வம்."

"ஆங்?"

"செல்வமண்ணாச்சி."

"இங்க எடுபிடி வேலதான் கெடைக்கும்."

"போதும் அண்ணாச்சி."

"காலைல மொதலாளிட்ட சொல்லிட்டு சேந்துக்க."

"சரி. இப்ப இங்கன ஒறங்கவா?"

"இப்டி படுத்துக்க." தலைக்கு சுருட்டி வைத்திருந்த லுங்கியை தரையில் விரித்தார்.

அதற்குப் பிறகான உரையாடல்களில் பொய்களால் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டான். அந்தப் புது பொய்யான செல்வத்தின் அப்பா சிறு வயதிலேயே இறந்திருந்தார். அப்பாவும் நடராஜன் மாமாவப் போல பனை ஏறும் தொழில் செய்தவர். அம்மா செல்வி அத்தையப் போல தீக்குளித்தாள். பள்ளித்தோழன் மகேசப் போல இவனும் தாத்தா வீட்ல கஷ்டப் பட்டு வளர்ந்திருந்தான். வளனைப் போல நாகர்கோவில் கடையில் வேலைபார்த்திருந்தான். இன்னும் ஊரில் உள்ளவர்களின் கதையெல்லாம் தன் கதையாக்கிக்கொண்டான்.

மறுநாள் முதல் ஹோட்டலில் வேலை. வேலை வாங்கித்தந்த சக்தி அண்ணனிடம் மீதமிருந்த பணத்தை கொடுத்து வைத்தான்.
"டேய் அண்ணாச்சின்னாத அண்ணேன்னு சொல்லு. நான் அண்ணாச்சியில்ல."

"எங்கூர்ல பெரியாள அப்டித்தான் அண்ணாச்... அண்ணே கூப்டுவோம்."

"ஒனக்கு மொதல்ல பேசச் சொல்லித்தரணும்போலியே."

காலை ஐந்துமணிக்கு எழுந்து காய்கறி வெட்டிவிட்டு. ஒரு குளியல். 7 மணி முதல் சமையல்கட்டில் உதவி.

"சக்தி, சின்னப் பசங்கள வேலைக்கு சேக்கக்கூடாது. நீ சொல்றேன்னுதான் சேத்தேன். கிச்சன உட்டு வெளிய அவன் தல காட்டாமப் பாத்துக்க." முதலாளி தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மாலை 4 முதல் 5 வரை ஓய்வு. மீண்டும் 5 துவங்கி இரவு 11 வரை சமையல் கட்டில். வாரம் ஒருநாள் விடுமுறை. தினம் 11 மணிக்கு காலைஉணவு 4 மணிக்கு மதிய உணவு 11 மணிக்கு இரவு உணவு. உணவு விடுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை என்பதை புரிந்துகொண்டான்.

வேலை கடினமாக இருந்தாலும் வீட்டுப்பாடம் எழுதுவதைவிட எளிதாய் தோன்றியது செல்வத்துக்கு.

ஒரு வாரத்திலேயே வீட்டை முற்றிலும் மறந்திருந்தான். அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் மறக்கவில்லை. "நீ எனக்குப் பொறந்திருந்தேன்னா.."

இருவாரங்களில் சக்தியிடம் பலமுறை அடி வாங்கியிருந்தான். வாச்மேன் சிவா சொன்னார்,"சக்திட்ட அடிவாங்கிட்டியா? இனி வளந்துடுவ. அவனுக்கு புடிச்சாத்தான் அடிப்பான். புடிகலேன்னா பேசக்கூட மாட்டான்."

மூன்று வாரங்களில் புது வாழ்க்கை இயல்பாகியிருந்தது. பக்கத்து 'அண்ணாச்சி' கடை பழக்கமாகிவிட்டது.
"அவருக்கு ஊரு நாமக்கல்லாம். ஏண்ணே அவ்வாள அண்ணாச்சீங்கிய?"

"இங்க மசாலா சாமான் விக்கிறவங்களையெல்லாம் அண்ணாச்சின்னுதான் சொல்றாங்கடா."

தியேட்டருக்கு தனியே போகப் பழகிக்கொண்டான். இரவுக் காட்சிகளில் முன்வரிசைகள் முழுவதும் இவனைப்போன்றவர்களால் நிரம்பியிருந்தது.
"எங்க கடைக்கு வேலைக்கு வாரியால?" திருநெல்வேலிக்கார அண்ணன் கேட்டான்.

"சக்தி அண்ணன் உடாது." பெருமிதமாய் பதிலளித்தான்.

புதுப்புது நண்பர்களும், அவர்களின் கதைகளும் சுவாரஸ்யம் தந்தன. நாட்கள் கடப்பதையே உணரவில்லை செல்வம்.

அன்று வழக்கம்போல சமையல்கட்டில் நின்றுகொண்டிருந்தான். மதிய சாப்பாடு முடிந்துவிட்டிருந்தது.
"டேய்..." சக்தி அழைப்பது கேட்டது. சமையல் கட்டிலிருந்து தலை வெளியே வரக்கூடாது எனும் சட்டத்துக்குட்பட்டு உள்ளிருந்தே குரல் தந்தான்.
"அண்ணே..."

"கல்லாவுக்கு வாடா." சமையல் கட்டிலிருந்து எட்டிப்பார்த்தான். ஹோட்டலில் ஒரே ஒரு கஸ்டமர் உட்கார்ந்திருந்தார். கல்லாவுக்கு வந்தான்.

ஹோட்டல் கதவருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கசங்கி அழுக்கான சட்டை, உட்காரும் இடத்தில் வட்டமாய் அழுக்கு படிந்த வேட்டி. கையிடுக்கில் வியர்வைபட்டு தோலுரிந்த தோல்பை. கலைந்து, பல நாளாய் வெட்டப்படாத தலைமுடி. பின்னாலிருந்து செல்வத்தால் அவரை முழுதாய் பார்க்க இயலவில்லை.

"அண்ணாச்சி. இவனா பாருங்க?" சக்தி அவரைப் பார்த்துக் கேட்டான். வந்தவர் திரும்பி செல்வத்தை பார்த்தார்.

செல்வம் அவரை பயத்துடன் பார்த்தான்.

தடுமாறி அடியெடுத்து நெருங்கி வந்து செல்வத்தின் தோளில் கையை வைத்தார். இப்போது அவர் கண்களில் நீர் நிரம்பியிருந்தது செல்வத்துக்கு தெளிவாகத் தெரிந்தது. வேகமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். கண்ணீர் வழிந்தோடியது.

"ஆ..ஆ...ஐயோ ஆ"

கையிலிருந்த தோல்பை கீழே விழுந்தது. அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

"ஆ... அம்மா.. ஆ." சத்தமாய் அழுதுகொண்டே மண்தரையென்றும் பாராமல் கீழே அமர்ந்தார், வீழ்ந்தார் என்றே சொல்லலாம்.

செல்வம் அவரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"அண்ணே ..." சக்தி அவரை அழைத்தான்.

"ஐயோ...ஆண்டவா." தொடர்ந்து தலையில் அடித்துக்கொண்டார்.

"டேய் சக்தி என்ன நடக்குது இங்க? ஆள் யாரு?" வெளியே போயிருந்த கடை முதலாளி திரும்பிவந்தார்.

"சார் இவரு.." சக்தி தயங்கினான். "பையன் ஊர்லேந்து ஓடி வந்துட்டானாம். நம்ம செல்வத்தோட பேரச் சொன்னாரு அதான்.. இங்க..."

"சார் எந்திரிங்க. இங்க பெஞ்சல் உக்காருங்க." முதலாளி அவரை எழுப்பி பெஞ்சில் உட்கார வைத்தார்.

செல்வத்தை காட்டி,"நம்ம பையனா சார்?" என்றார்.

வந்தவர் அழுகையை நிறுத்தவில்லை. கைகளில் இயலாமையால் ஏதேதோ செய்கைகள் செய்தார்.
"டேய் இது யாருடா?" செல்வத்தை பார்த்து கேட்டார் முதலாளி.

செல்வம் வந்தவரையே முறைத்துக்கொண்டிருந்தான்.

"டேய் சார் கேக்குறார்ல? சொல்லு." செல்வம் கையை ஓங்கினான்.

"தம்பி அவன அடிக்காதப்பா". புதியவர் அழுகைக்கு மத்தியில் பேசினார்.

செல்வத்தின் கண்கள் பனித்திருந்தன.

"சார் எனக்கு அப்பவே சந்தேகம். இவன் ஓடிதான் வந்திருப்பாண்ணு. சரி எங்கயாவது போய் என்னதும் ஆயிரக்கூடாதேண்ணுதான் இங்க சேத்தேன். சக்தி சொன்னேனேப்பா மாத்து துணியில்லாம வந்திருக்கான் இவன் ஓடிதான் வந்துருக்கான்னு." முதலாளி சக்தியை முறைத்தார்.

"சார். இவன் என் பையன் இல்ல சார்." விசும்பலோடு சொன்னார் புதியவர். எல்லோரும் அமைதியாயினர். "இவனில்ல. எம் பையன் ஒரு மூணு மாசத்துக்கு முன்னால நான் அடிச்சிட்டேன்னு ஓடி வந்துட்டான். ஐயா. எம் புள்ளையத் தேடி நான் போகாத எடமேயில்ல. மெட்ராஸ்ல இருக்க கடையிலெயெல்லாந் தேடிட்டேன்யா. சுத்தி சுத்தி என் உயிரெல்லாம் போச்சு. ஐயோ எம் புள்ள எங்க கடந்து கஷ்டப்படுதோ? எம்புள்ள உசுரோட இருக்கா இல்லியாண்ணே தெரியலியே. ஐயோ." மீண்டும் குரலெடுத்து அழுதார்.

"ஒரு கொறையும் வச்சதில்ல எம் புள்ளைக்கு. ஒருநா பட்னி கெடந்ததில்லையே. அவன் எப்டி சார் தனியா...? ஐயோ அவன் ஆத்தா புள்ளைய பறிகுடுத்துட்டு சாவக் கெடக்கா. அவன் தங்கச்சி ரெண்டும் அழுதுட்டே இருக்குங்க. ஊரே துக்கத்துல கெடக்குது. ஒருநாளும் இல்லாம அண்ணைக்கு அடிச்சுட்டேனே. பாவி.. பாவி." தலையில் அழுந்த அடித்துக்கொண்டார்.

பெரியவர்கள் யாரும் இப்படி அழுது பார்த்ததில்லை செல்வம். ஹோட்டலின் முன்பாய் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. இவர் எதற்காக அழுகிறார் என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. பெருந்துக்கங்கள் சந்தோஷங்களைப் போலவே விரைவில் தொற்றிக்கொள்கின்றன.

"எம் பையம்பேரு செல்வன் தம்பி. இந்தப் புள்ள யார் பெத்த புள்ளையோ?" சக்தியை பார்த்து,"தம்பி நீங்க செல்வம்னு சொன்னதும் எம் பையன் பேரத்தான் தப்பா சொல்றீங்கன்னு நெனச்சேன். சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்குடாதுன்னு சொல்லுவாங்க. ஐயோ என் புள்ளைய எங்க போயி தேடுவேன்"

"சார் அழாதிங்க. ஒண்ணும் ஆகாது. பையன் வந்துருவான்." முதலாளி ஆறுதலாய் சொன்னார். "சக்தி தண்ணி குடுப்பா. சார் இங்க சாப்பிடுங்க. போலீஸ்ட சொல்லியாச்சா?"

அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பியபின்தான் செல்வத்தை தேடினான் சக்தி.

செல்வம் கோயம்பேட்டிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.


நன்றி: தமிழோவியம

Thursday, June 14, 2007

புதிய முயற்சி

சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில, நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதை/பாடல் ஒன்று கீழே.

இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க..

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?

நீ (நீரில்) 'மூழ்குகிறேன்' எனக் கூறினாலும்

நான் என் கரங்களைத் தரப்போவதில்லை.

உன் முகத்தை முன்பே பார்த்திருக்கிறேன் நண்பனே!

ஆனால் உனக்கு நான் யார் எனத் தெரியுமா தெரியவில்லை.

நான் அங்கிருந்தேன்,

நீ என்ன செய்தாய் என்பதை கண்டேன்,

என்னிரு கண்களால் கண்டேன்.

ஆதலால், உன் புன்னகையை துடைத்துவிடு.

நீ எங்கே சென்றிருந்தாய் என நான் அறிவேன்.

எல்லாமே பொய்யின் மூட்டைகள்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

எனக்கு நினைவுள்ளது!

எனக்கு நினைவுள்ளது, கவலைப் படாதே.

எப்படி என்னால் மறக்க இயலும்?

முதன்முதலாய், கடைசியாய் நாம் சந்தித்த கணம்.

ஆனால் உன் புன்னகையின் காரணம் எனக்குத் தெரியும்.

இல்லை.. நீ என்னை ஏமாற்ற இயலாது!

அந்தக் காயம் வெளியில் தெரிவதில்லை ஆனால்

வலி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது

அது உனக்கும் எனக்கும் அன்னியமாயில்லை.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

நன்றி: தமிழோவியம்

Wednesday, March 14, 2007

இயேசுவின் கல்லறை

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.

இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.

டிஸ்கவரி துவக்கத்திலேயே ஒரு பெரிய டிஸ்க்ளெய்மரோடு (Disclaimer ) ஆரம்பிக்கிறது.

ஆவணப் படத்தின் இயக்குனரோடும், இன்னொரு முக்கிய ஆலோசகரோடும், அகழ்வாராய்ச்சி துறையினரும், அறிவியல் வல்லுநர்களும் இன்னும் கிறீத்துவ இறையியலாளர்களும் உரையாடிய ஒரு கலந்துரையாடலைக் காண்பித்தனர். தான் ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிபற்றி நேர், எதிர் கருத்துக்களை விவாதிக்கச் செய்த டிஸ்கவரியை வியக்காமல் இருக்கமுடியாது. இதை வழிநடத்திய அனுபவமிக்க ஊடகவியலாளர் டெட் காப்பல் தன் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

பொதுவாகக் கருதப்படுவதுபோலல்லாமல் இந்தக் குடும்பக் கல்லறையை கண்டு பிடித்து 27 வருடங்கள் ஆகின்றன, இப்போதையக் கண்டுபிடிப்பல்ல. இந்த ஆவணப்படம் எடுக்க ஆன காலகட்டம் 3 வருடங்கள். 24 வருடங்களாக அந்தக் குடும்பக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டிகள் ஜெருசலெம் அருங்காட்சியகத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளை அருங்காட்சியகம் ஆவணப்படுத்துவதிலிருந்தே குழப்பங்கள் துவங்குகின்றன. இவை அவசரமாக ஆவணப்படுத்தப்பட்டு சேமிக்கப் பட்டுள்ளன என்கிறார் இஸ்ரயேல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர். இவையெல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே காலகட்டத்தில் சேர்க்கப்பட்டவையா என உறுதியாக அறிய இயலவில்லை.

இந்தக் கல்லறை இயேசுவின் குடும்பக் கல்லறை எனப் பெட்டிகளின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களை வைத்து சொல்ல முயல்கிரார்கள். இந்தப் பெயர்கள் மிகத் தெளிவாக தெரியவில்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. இவை அரமைக் எனும் இயேசுவின் தாய் மொழியில்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மொத்தம் 10 பெட்டிகளில் 6ல் பெயர்கள் உள்ளன. ஜோசப்பின் மகன் இயேசு எனும் பெயருள்ள ஒரு பெட்டி, மரியா என ஒன்று மரியம்னெ எனப் பெயருள்ள ஒரு பெட்டி யூதா எனும் பெயருள்ள இன்னொரு பெட்டி, இன்னும் பெயருள்ள இரண்டு பெட்டிகள். இந்தப் பெயர்கள் முதலாம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. (Use stats) இதற்குமுன் பல கல்லறைகளில் இயேசு எனும் பெயர்பொறிக்கப்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆவணப்படம் வியாபார நோக்கோடு, பரபரப்பை உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில வல்லுநர்கள். அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் இதை அகழ்வாராய்ச்சியின் ஆபாசத் திரைப்படம்(Archeological pornography) என்கிறார்.

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பொருள்சார்ந்த அறிவியலையும்(Material Scinece), எண்ணிக்கை சர்ந்த அறிவியலையும் கொண்டே முடிவுகளை செய்ய இயல்கிறது. இதில் பொருள்சார்ந்த் ஆதாரங்கள் அதிகமிருப்பின் முடிவுகளின் மேல் அதிக நம்பிக்கை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாய் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.மரபணு சோதனை ஒரு பொருள்சார்ந்த அறிவியல். இந்த ஆவணப்படம் குறைந்த பட்ச மரபணு சோதனையையே செய்துள்ளது. புள்ளியியல்(Statistics) ஒரு அறிவுசார்ந்த அறிவியல் இதை அதிகமாகப் பயன்படுத்தி முடிவுகளைச் சொல்கிறார்கள் ஆவணப் படத்தில்.

புள்ளியியல் அனுமானங்களை ஏற்படுத்தவும், தோராயமான முடிவுகளைப் பெறவுமே பயன்படுகிறது. புள்ளியியல் அடிப்படையில் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் தொகையில் எத்தனைபேருக்கு இயேசு எனப் பெயர் இருந்திருக்கும் எனும் தோராயக் கணக்கில் துவங்கி எத்தனைபேருக்கு மரியாள் , ஜோசப் எனும் தாய் தந்தை இருந்திருப்பர் எனும் அனுமானங்களினூடாகப் பயணிக்கிறது 'ஆய்வு'.

ஆவணப் படம் தொட்டுச்ச் செல்லும் இன்னொரு கருத்து இயேசுவுக்கும் மரிய மதலேனாளுக்கும் திருமணமாயிருந்தது எனும் கூற்று. இதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. டா வின்சி கோடின் பரபரப்பு தொத்திக்கொள்கிறது.

இதில் இருக்கும் பெரிய ஓட்டை என்னவென்றால், மரியம்னே எனும் பெயருள்ள பெட்டியில் இருக்கும் பெண்ணின் மரபணுவுக்கும், இயேசு எனப் பெயரிட்ட பெட்டியிலுள்ள் மரபணுவுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என சோதனை தெரிவிக்கிறது. இரத்த சம்பந்தம் இல்லையென்பதாலேயே இருவரும் மணமானவர்கள் எனும் முடிவுக்கு வருகின்றார்கள். எல்லா பெட்டிகளில் உள்ள மரபணுக்களும் சோதிக்கப்பட்டிருக்கின்றனவா எனும் விவரம் இல்லை. பெயரில்லாத மீதம் 4 பெட்டிகளில் உள்ளவர்களுக்கும் மரிமனெவுக்கும் தொடர்பிருக்கிறதா? தெரியவில்லை. ஆவணப் படம் தரும் வாதப் படி பார்த்தால் மரியம்னெவுக்கும் அந்தக் கல்லறையிலிருக்கும் யாருக்கும் வேண்டுமானாலும் திருமணம் நடந்திருக்கலாம், பெண்களைத் தவிர்த்து. So much for science.

மரிய மதலேனாளுக்கும் இயேசுவுக்குமான மரபுவழிக் கதைகளைக் கொண்ட டாவின்சி கோடின் அனுமானங்களைக் கொண்டு, சாதகமான அறிவியல் சோதனைகளோடு முடிவுகள் சொல்லப்படுகின்றன.

'மரியம்னெ' எனும் பெயர் இன்னும் முக்கியத்துவம் பெறக் காரணம் என்னவென்றால் பிலிப்பின் நற்செய்தி(Gospel of Philip) மரியம்னெ எனும் பெயரில் மரிய மதலேனாளை குறிக்கிறது. ஆனால் பிலிப்பின் நற்செய்தி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது மரிய மதலேனாள் வாழ்ந்ததோ முதலாம் நூற்றாண்டு. முதலாம் நூற்றாண்டில் மரியம்னெ எனும் பெயர் பரவலானதாக இல்லை. இதை ஆவணப் படக் குழுவும் விவாதத்தின்போது ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவணப் படத்தில் தங்கள் வாதத்தை பலவீனம் செய்யும் கருத்துக்களை குறைவாகவே சொல்கிறார்கள்.

400 ஆண்டுகள் கழிந்தபின் மரிய மதலேனாளுக்கு கிடைத்த மரியம்னெ எனும் பெயர் அவர் இறந்து ஒருவருடத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட சவப் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறதென்பது, தமிழ் திரைப்படங்களில் பாம்பு தட்டச்சு செய்து எச்சி போட்டு கடிதம் ஒட்டி அஞ்சல் செய்கிற கற்பனையின் ஓட்டையை விட பெரியதாயுள்ளது.
வாதங்களுக்குப் பின் வாதங்களாகத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பினும், ஒவ்வொரு வாதங்களும் பெரும் சந்தேகங்களுடன் கூடிய அனுமானங்களோடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதால் தொடர்புள்ள வாதங்களின் தனிப் பகுதிகள் வலுவிழந்து போகின்றன, எனவே மொத்த வாதமும் வலுவிழக்கிறது.

ஆவணப்படம் சொல்லவரும் விஷயங்களையும் ஒழுங்கற்ற சம்பாஷணைகளின் மூலமே பொதுவாகச் சொல்கிறது. முக்கியமான கட்டங்கள் வாதங்களாகவே (உரையாடல்) செல்கின்றன. டீக் கடை பெஞ்சில் சதாம் உசைனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் என்ன சந்ம்பந்தம் என்பதுபோன்ற உரையாடல்கள்.ஆவணப் படத்தில் பங்குபெற்ற 'அறிவியல்' வல்லுனர்கள் பலரும் தங்கள் முடிவுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக 'டிஸ்கவரிக்கு' தெரியப்படுத்தியுள்ளனர். புள்ளியியல் முடிவுகளைச் சொன்ன டொராண்டோ பல்கலையின் பேராசிரியர் ஆண்ட்ரே, அகழ்வாராய்ச்சித் துறையிலோ, பைபிள், கிறீத்துவ வரலாற்றின் ஆராய்ச்சியிலோ எள்ளவும் அனுபவமில்லாதவர். அவரின் முடிவின்படி இந்தக் கல்லறையில் உள்ள பெயர்கள் இயேசுவின் குடும்பமாக இருக்க அறுநூற்றில் ஒரு சாத்தியம் இருக்கிறது. (1 in 600 probability). இந்த சாத்தியமும் மரியம்னெ எனும் பெயர் மரிய மதலேனாளின் பெயர் என்பது உண்மை என எடுத்துக்கொள்வதால் வருவது. அந்த வாதம் பொய்த்துப் போவதால் 600ல் ஒன்று எனும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.

இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன. டாவின்சி கோட் நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அலையில் சறுக்கி விளையாடும் அவசரம் தெரிகிறது.
டைம் இதை 'அவசர, விளையாட்டுத் தனமான அறிவியல்' என்கிறது. இதுபோன்ற அவசர அறிவியல்கள் சொன்ன பல கருத்துக்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே தவிர வேறொன்றுமில்லை.

கடவுளை நம்ப அறிவியல் தேவயில்லை. கடவுள் நம்பிக்கைக்கு அறிவியல் மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கும் வரையில் இதுபோன்ற வெற்றுத் தகவல்கள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம். அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)

நன்றி: தமிழோவியம்

அண்ணாச்சி ஒலகம் என்னாச்சி?

இந்த வார தமிழோவியத்தில்...


பெர்னாண்டஸ் - வாஜ்பாய் தமாஷ் செய்வது யார் ?
தமாஷு தமாஷு
ரஜினி கணபதி - இவர் வழியும் தனி வழிதான்
5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி?"
இயேசுவின் கல்லறை
இந்தியா வெல்லுமா ?
அட்மிஷன் அவலங்கள்
யாரோ !
மடப்பள்ளி
காங்கிரஸ் - கோஷ்டி பூசல்
தீபாவளி

Tuesday, March 06, 2007

மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்...

தமிழோவியத்தில் இந்த வாரம்...

: பந்த் பயன் தருமா? [மீனா]
நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை
எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது
ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை.

: மேதா பட்கர் பேட்டி - வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து]
நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்
செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?


: உறுதிகொள் தமிழா!! [கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்]

நீ வளர்ந்த மொழியை நீ வளர்க்க
மறுத்தல் நியாயமோ? சொல் தமிழா!

: எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல் [திருமலை கோளுந்து]
புத்தகங்களை நண்பர்களா ஆக்கிக் கொண்ட இந்த 17 வருடங்களில்
புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்திக்கும் மனிதர்களும் என்று இன்றைய வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. தினமும் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்

: முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு [மணிகண்டன் அழகப்பன்]
எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த
அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள்.

: தாமிரபரணி [மீனா]
ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறு
பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
: மனசாட்சி சொன்னது [குகன்]
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து,
அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

: காதலே, என் கணவனே! [சுரேஷ், சென்னை]

துப்பட்டாவின் வீழ்ச்சியும் சேலையின் விலகலும் கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!

: ஜீன்ஸ் [சிறில் அலெக்ஸ்]
"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல
நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."
"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."

: அத்தை பெண்கள் என்னும் அழகிகள் [கார்த்திக் பிரபு]

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியில் எடுக்க பட்ட
புகைப் படங்களிலும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

Tuesday, February 06, 2007

இயேசு சொன்ன கதைகள் - 4

கேளுங்கள் தரப்படும்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார்.

மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.
இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். சோதனையில் எம்மை விழ விடாதெயும். தீமையினின்று எங்களை விடுவித்தருளும். ஏனெனில் அரசு வல்லமையும் மாட்சிமையும் என்றென்றும் உமதே.'

மிகவும் எளிமையான அதெவேளை இறைவனைத் தந்தையென உரிமையோடு அழைத்து வேண்டும் செபம் இது.

செபங்கள் கேட்கப்படுகின்றனவா? இதை நிருபித்தால் கடவுளையும் நிருபிக்கலாமே? எனும் கேள்விகள் எழுகின்றன. அதிசயங்கள் பலவும் எல்லா காலகட்டங்களிலும், எல்லா மதங்களிலும், வேண்டுதல்களின் பலனாக விளைவதாகச் சொல்லப்படுகின்றன. கடவுள் எப்படி நம்பிக்கைக்குட்பட்டவரோ அதேபோல அற்புதங்களும் அறியப்படுகின்றன.

கடவுள் உதவுவார் எனும் நம்பிக்கை தன்நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். சோதனைக் காலங்களில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேண்டுதல்களளே துணை. நம்பிக்கையே கைத்தடி.

வேண்டுதலின் உளவியல் கூறுகளை ஆராய்ந்தால் அதன் மனித பலன்கள் பலவாக இருக்கும். சோதனை மிகும் வேளையில் அது எப்படியாவது விலகும் எனும் நம்பிக்கை ஊக்கம்தருமே தவிற வேறென்ன?

மீண்டும் மீண்டும் செபிக்கும்போது ஒரு கவலைகுறித்தான (கவலை தவிர்த்த) மாற்றுச் சிந்தனை நம்மில் பிறக்கிறது.

ஒரு ஊரில் ஒரு நீதிபதி இருந்தான். கடவுளை அஞ்சாதவன்; மனிதரை மதிக்காதவன். அந்த ஊரில் இருந்த ஒரு விதவை நீதி கேட்டு அவளிடம் வருவது வழக்கம். பலமுறை வந்தும் அந்த நீதிபதி மனம் கசியவில்லை. இறுதியாய் அந்த நீதிபதி 'நான் கடவுளுக்கு அஞ்சாதவனாயும் மனிதரைப் பற்றி கவலையற்றவனாயும் இருந்தபோதும் இவள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வதால் இவளுக்கு நீதி வழங்குவேன்.' என்றான்.

'அந்தப் பண்பற்ற நீதிபதியைப் பாருங்கள். இவனைவிட விரைவாக இரவு பகலாய் தன்னை வேண்டும் மக்களின் வேண்டுதலைக் கடவுள் தரமாட்டாரா?' என்றார் இயேசு.

நன்றி: தமிழோவியம்

Monday, January 29, 2007

ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.

ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.

எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன.

சின்னஞ்சிறு கிளியே - எஸ். பி. பாலசுப்ரமணியம்
காக்கைச் சிறகினிலே - சுஜாதா
மோகத்தை கொன்றுவிடு - ராஜா கோவிந்தராஜா (குரல் எஸ்.பி.பியின் குரலை ஒத்துள்ளது)
நல்லதோர் வீணை செய்தே - ஸ்ரீனிவாசஸ்
தீராத விளையாட்டுப்பிள்ளை - எஸ். பி. பி
வாழ்க தமிழ் - ஹரீஷ் ராகவேந்த்ரா

பாடல்களை இங்கே கேட்கலாம். பதிவிறக்கலாம், இலவசமாக.

ஸ்ரீகாந்த் இசையில் H1bees எனும் தொகுப்பு பிரபலமானது.
தற்போது "பாடல்" எனும் குறுந்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
"பாடல்" வாங்க, முன்னோட்டமிட க்ளிக்குங்கள்.

ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம்.

இயேசு சொன்ன கதைகள் - 3

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல." இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது."பாவிகளை மீட்கவே வந்தேன்." என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு.

பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?

"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"

இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.

மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.

ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.

சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.

மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.


நன்றி: தமிழோவியம்

Thursday, January 25, 2007

ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

"சார். நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, "என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பி. பாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர். நாவிதர்."

"ஓ. இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

".........."

"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

Wednesday, January 24, 2007

வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)

சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.

சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.

சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.

நன்றி: தமிழோவியம், திருமலைக்கொழுந்து.

Tuesday, January 16, 2007

இயேசு சொன்ன கதைகள் - 2

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.

நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான். இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.

"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று. ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது. தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.

ஒருநாள் ஒரு சட்ட வல்லுனர் இயேசுவிடம் கேட்டார்,"அயலானை அன்புசெய் என்கிறீரே யார் என் அயலான்?(Who is my neighbour?)"

இயேசு ஒரு கதையைச் சொன்னார்.
"ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு பயணித்தான். அவனை கள்வர் சூழ்ந்தனர். அடித்து, குற்றுயிராய் அவனை விட்டுச் சென்றனர்.

தற்செயலாய் ஒரு சாமியார் அங்கே வந்தார், இவனைக் கண்டார், ஒதுங்கிச் சென்றார்.
மத குரு ஒருவர் வந்தார் அவரும் இவனைக் கண்டு ஒதுங்கி சென்றார்.
சமாரியன் ஒருவன் வந்தான். இவன்மேல் பரிவு கொண்டான். அவனது காயங்களுக்கு கட்டுப்போட்டு மருந்திட்டான். தன் கழுதையின் மேல் காயம்பட்டவனை ஏற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்து கவனித்தான். மறுநாள் விடுதிக் காப்பாளனிடம் கொஞ்சம் காசைத் தந்து 'இவனை கவனித்துக்கொள்; நீ அதிகமாய் இவன்பொருட்டு என்ன செலவளித்தாலும் நான் மீண்டும் வரும்போது திருப்பித் தருவேன்' என்றான்.

இந்த மூவரில் யார் கழ்வரால் தாக்கப்பட்டவனுக்கு நல்ல அயலானாய் செயல் பட்டார்?" எனக் கேட்டார் இயேசு.

நல்ல சமாரியன் கதை(The Good Samritan) என புகழ்பெற்ற இந்தக் கதை சொல்லும் உண்மையை விளக்கத்தேவையில்லை.

'பலனை எதிர்பாராதே' என கீதை சொல்வதும் இதைத்தானோ ?

நன்றி: தமிழோவியம்

Friday, January 12, 2007

இயேசு சொன்ன கதைகள் - 1

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்

இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு.

தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில காந்திகள் மலர்ந்திருப்பார்களோ என்னவோ?

இந்த தொடரின் மூலம் இயேசு சொன்ன சில உவமைகளை, உவமைக்கதைகளை சுவைக்கத் தருவதில் மகிழ்ச்சி.

ஒரு கருத்தை பக்கம் பக்கமாய் எழுதிவைப்பதைவிட, பலமணி நேரங்கள் விவாதிப்பதைவிட ஒரு சின்னக் கதையின் மூலம் எளிதாய் சொல்லிவிட முடியும். ஜென் கதைகளானாலும், பஞ்சதந்திரக் கதைகளானாலும், முல்லாவின் குறும்புக்கதைகளாயினும், தெனாலிராமனின் புத்திக் கதைகளாயினும் சில வரிகளுக்குள்ளேயே மாபெரும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எளிய மனத்தோருக்கு வலிய கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற சாதனங்கள் கதைகள்.

இறை வார்த்தையை அல்லது நல்ல கருத்துக்களை கேட்பதுபற்றி இயேசு ஒரு கதை சொல்கிறார்.

விதைப்பவன் ஒருவன் விதைக்கச் செல்கிறான். அவன் விதைக்கும் விதைகளில் சில பாதையோரம் வீழ்ந்தன பறவைகள் அவற்றை தின்றுவிட்டன. சில பாறைகள் நிறைந்த நிலத்தின்மேல் விழுந்தன, அங்கே மண் அதிகம் இல்லாததால் அவை எளிதில் முளைவிட்டன ஆயினும் சூரியன் வந்ததும் வேரூன்றியில்லாததால் அவை சுட்டெரிக்கப்பட்டு உதிர்ந்தன. சில முட்புதர்களின் நடுவே வீழ்ந்தன. அவை வளர்ந்ததும் முட் புதர்களால் நெரிக்கப்பட்டு அழிந்தன. இன்னும் சில நல்ல நிலத்தில் விழுந்தன, பயிர்களாகி நூறு, அறுபது அல்லது முப்பது மடங்கு பலனளித்தன1.

இந்தக் கதையை சொல்லிவிட்டு இயேசு "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

மிகவும் எளிமையான ஒரு கதை. இதை இயேசுவே விளக்குகிறார்.

விதைப்பவன் விதைத்த விதைகள் இறைவார்த்தைகள். பாதையோரம் விழுந்த விதைகளை பறவைகள் வந்து தின்றதைப்போல சிலர் மனதில் விழும் வார்த்தைகளை சாத்தான் வந்து அள்ளிப்போகிறது. பாறை நிலத்தில் விழுந்தவையோ இறைவார்த்தைகளைக் கேட்டு தற்காலிகமாக மனமகிழ்ந்து செல்பவரைப்போல, அங்கே அந்த விதைகள் சொற்ப காலமே வாழ்கின்றன. முட்புதர்களில் வீழ்ந்த விதைகளைப்போல சிலர் மனதில் இறைவார்த்தைகள் முளைவிட்டு செடியாகின்றன ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பணம், சுகம் என உலகத் தேடல்கள் செடிகளை நெரிப்பதால் அவை பயிராவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ கடவுளின் வார்த்தையை கேட்டு மனதில் சுமப்பவர்களைப்போல. பயிராகி பலனளிப்பவர்கள் இவர்களே.

கேட்பது அல்லது கற்பது பற்றிய எனக்குப் பிடித்த ஜென் கதை.

ஒரு குருவிடம் ஒருவன் போய் "எனக்கு உலகில் எல்லாம் தெரியும் உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்கு கற்றுத் தாருங்கள்", என்றான். குருவோ, "முதலில் தேனீர் அருந்துவோம் என்றார்". தேனீர் வந்ததும் கோப்பைகளை நிரப்ப ஆரம்பித்தார் குரு. கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார். வந்தவன் குழம்பினான். இன்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார் குரு. வந்தவன்,"என்ன செய்கிறீர் அந்தக் கோப்பை நிறைந்திருக்கிறது இனியும் ஊற்றினால் கீழே கொட்டும் என்பது உமக்குத் தெரியாதா?" என்றான். குருவோ,"போய் உன்னை காலி செய்து கொண்டு வா. பிறகே என்னால் உன்னில் ஊற்ற இயலும்." என்றார்.

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".

நன்றி:
தமிழோவியம்

Thursday, December 28, 2006

(மூள) நட்சத்திரம்

இந்த வாரம் பாபா(Boston Balaji) விடுமுறையில் இருக்கிறதால வழக்கமா அவர் போடுறத நான் போடவேண்டியதாயிடுச்சு.

ஆமாங்க. நான்தாங்க இந்த வார தமிழோவிய சிறப்பாசிரியர். நட்சத்திர வாரம், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்னு எழுதி எழுதி மூளைல சரக்கு தீந்து போச்சு. (அப்பாடா தலைப்ப ஜஸ்டிபை பண்ணியாச்சு).

இந்தவாரம் எல்லாத்தையும் நானே எழுதி போர் அடிக்காம நம்ம பதிவுலக நண்பர்கள் சிலரை எழுதக் கேட்டிருந்தேன்.

வெடி - பிரபு ராஜதுரை


எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரே
ஆரம்பித்து விடும். அம்மா அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்னரே கொடுக்கப்படும் போனஸ் மட்டும் காரணமில்லை. தீபாவளிக்கு கோ-ஆப்டெக்சில் துணி வாங்குவதற்காக அலுவலகத்தில் கிடைக்கும் வட்டியில்லாக் கடனும் ஒரு காரணம

கிறிஸ்மஸ் - வரலாரற்றுப் பார்வை - நிர்மல



கிருத்துவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்மஸ் பண்டிகை
இல்லாதிருந்தது. பைபிளில் இயேசுவின் பிறந்த தினம் பற்றிய துல்லிய குறிப்புகள்
எதுவும் இல்லை. கி.பி நான்காம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன.
பெற்றால்தான் அன்னையா? - கோ. இராகவன் (மயிலாரேதான்)


தொழுதால் வருவாய் விழுதாய்த் தொடர்வாய் - துயராம் பழுதைத் துடைப்பாய் உணர்வாய்,
உயிராய், எமதாய், நிறைவாய்

இயற்கை நின்று கொல்லும் - மதுமிதா


நெருப்புக் குஞ்சுநம் வசமிருந்தால் அணைத்துவிடலாம் இல்லையேல் நம்மை
அணைத்துவிடும் நெருப்பு


இலக்கிய விளக்கு - ஷைலஜா



கலைப்படைப்புகள் காலம் கடந்து நிற்கத் தக்க வகையில் உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற நல்ல சமுதாயச் சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு நாட்டில் விளைந்து வருகிற, உலவிவருகிற, ரசிக்கப்பட்டுவருகிற பெரும்பான்மையான புத்தகங்களைவைத்தே ஒரு சமுதாயத்தின் நாடியைபிடித்துப் பார்த்துவிட முடியும்.

விழாக்கால நல் வாழ்த்துக்கள் - சிறில் அலெக்ஸ்


நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று.

இயேசு பிறந்த கதை - சிறில் அலெக்ஸ்

தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன்
தோன்றினான்."அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன் தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்." என்றார்.


இன்னும் சில சிறப்பான படைப்புக்களோடும் டாக்டர் ஐயாவின் சிறப்பு பேட்டியோடும் இந்த வார தமிழோவியம். காணத் தவறாதீர்கள்.

Wednesday, June 28, 2006

... கூத்தாட்டுவானாகி...

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை (தமிழோவியத்தில் சிறப்பாசிரியராக முன்னுரைத்தது)

அலைகள் பாறைகள் மணல் மேடுகள். என் முதல் பதிவுத் தொகுப்பை படித்தவர்களுக்குத் தெரியும் நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன்.

பாரதி ராஜா தன் 'இனிய தமிழ் மக்களுக்கு' அறிமுகப் படுத்திவைத்த முட்டத்தின் ஒரு சிறுபகுதிதான் 'சிவந்தமண்'. 16 கி.மி தொலைவிலுள்ள நாகர்கோவில் போய்வருவதே எங்களுக்கு ஒர் செல்லச் சிற்றுலா. பஸ் ஏறி பயணிப்பது ஒரு பரவச அனுபவம். சைக்கிள் வைத்திருப்பது பெரிய விஷயம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் நடந்தே சென்று நல்ல நீரில் குளிப்பதும், துணிதுவைப்பதும். சிவந்தமண்ணில் ஒரு கடைகூட அப்போது இருக்கவில்லை. கால் சிவக்க, செம்மண் காட்டு வழி நடந்தே உலகை எட்டுவோம். செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு குட்டித்தீவு அந்த 'சிவந்தமண்'.

நாகர்கோவிலில் 'நல்ல' பள்ளிக்கூடங்கள் இருந்தன. கார்மல் ஒரு பேர்போன பள்ளிக்கூடம். குறிப்பிடத் தகும்படி நான் படித்த முதல் பள்ளிக்கூடம். 6 முதல் 9பது வரை. கிராமங்களைவிட்டு வெளியே செல்லச்செல்ல நம்மிடமிருக்கும் கிராமத்தான் நம்மை வீடு மெதுவாக வெளியேறுவான். நம் பார்வை பரவலாகிறது. மாதாகோயில் கெழக்காலே மணல்மேடு மேக்காலே என இருக்கும் நம் ஊரைவிடவும் 'உலகம்' பெருசு எனப் புரிகிறது. நம்ம சிலுவை, சின்னப்பன், லூர்து, லூக்காசை தவிர்த்து ராம், ரஹீம் எல்லாம் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

10ஆம் வகுப்பு முடித்ததும் வாழ்க்கையில் பெரிய திருப்பம். 'சாமியார்' (பாதிரியார்)ஆகவேண்டும் எனச் சொல்லி வட ஆர்காட்டில் திருப்பத்தூரரிலிருக்கும் 'டான் போஸ்கோ' நிறுவனங்களை நிறுவி கண்காணிக்கும் சலேசிய சபை குருத்துவப் பள்ளியில் சேர்ந்தேன். இளைஞர்களை தங்கள் சேவையின் மையமாய் வைத்து செயல்படுகிறார்கள் சலேசியர்கள். சென்னையில் சில 'அன்பில்லங்களில்' குப்பைக் காகிதம் சேர்த்து பிழைக்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும், மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் எக்மோர் டான் போஸ்கோவை நிர்வகிப்பவர்களும் இவர்கள் தான்.

டான் போஸ்கோவில் என்னிடம் மீதி ஒட்டிக்கொண்டிருந்த கிராமத்தானையும் கழட்டிவிட்டேன். கவிதை, கதை, காமெடி, நடிப்பு என இரண்டு வருடங்களில் புதுமையான அனுபவமாயிருந்தது பள்ளிப்படிப்பு. 'தன்னம்பிக்கை' எனும் மந்திரம் கற்றேன். 10ஆம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு 11, 12 ஆங்கில வழிப்பாடம். அதிலும் ஜெயித்தேன். பள்ளியில் மூன்றாவதாக தேர்ந்தேன். குறுகிய காலத்தில் செம்மையாக ஆங்கிலம் படிக்க, அந்த 30 நாட்கல் புத்தகம் தவிர, ஒரு வழி கண்டுபிடித்தேன். நாம் தமிழில் நன்றாக அறிந்த விஷயம் ஏதாவது ஆங்கிலத்தில் இருக்கிறதா எனத் தேடினேன். பைபிள் கிடைத்தது. இப்படித்தான் ஆங்கிலம் கற்றேன். 10ஆம் வகுப்பில் டீச்சர் தந்த ஆங்கில இலக்கணப் பாடங்கள் உதவின.

+2 முடித்து இரண்டு வருடம் தொடர்ந்து பாதிரியார் படிப்பு. திடீரென மனமாற்றம். செமினேரி விட்டு வெளியேறினேன். இது என் வாழ்க்கையில் சுகமான ஒரு தோல்வியாக அமைந்தது.

1993 சென்னை வந்து என் மைத்துனரின் மிலிட்டரி ஹோட்டலில் தங்கி பில் போட்டுக் கொண்டே கணிணி படிப்பும். சர்ச் பார்க்குக்கு நேர் எதிராய் மாடியில் இருந்தது அந்த ஹோட்டல். கிராமம், செமினரி என சிறு குட்டையிலிருந்த மீனைத்தூக்கி காவிரி(கூவம் என்றும் சொல்லலாம்) ஆற்றில் விட்டதுபோல வாழ்க்கை ஓடியது. இந்த நாட்கள் அதிகம் தனிமையில் கழிந்தன. இதுபோல ஹோட்டல்களில், புகையும் அழுக்கும் படிந்த அறைகளில் தங்கிக்கொண்டு, கூரையில்லாத கழிவறையில் கழித்து, குளித்துக்கொண்டு வாழும் அனுபவம் எல்லொருக்கும் வாய்க்கவேண்டுமென நினைக்கிறேன்..வாழ்த்துகிறேன். எங்கேயும், எதையும் சாதிக்கமுடியும் எனும் நம்பிக்கையைத் தந்தன இந்த நாட்கள்.

1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல் பிரிவில் இடம் கிடைத்தது. இங்கும் ஒளிர வாய்ப்புக் கிடைக்குமா என ஒன்றரை வருடம் காத்திருப்பு. பின்னர் 'லொயோல டைம்ஸ்' எனும் ஆங்கில வாரப் பத்திரிகை கல்லூரியில் துவங்கப்பட்டது அதன் தலமை எடிட்டாராகும் வாய்ப்பு வந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் எங்கள் குழுவை வைத்து கலந்தாலாய்வு நடத்தி படத்தோடு கட்டுரை வந்தபோது அந்த முட்டத்து கிராமவாசி என்னைவிட்டு வெகுதூரம் போயிருந்தான்.

மூன்றாம் வருடம் ஐக்கஃப்(AICUF) எனும் ஒரு மாணவர் இயக்கத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு தலமை பொறுப்பு. அதில் பெரிதாய் ஒன்றும் சாதிக்கவில்லை என்றாலும் முதன்முறை ஒரு பெரிய உலகளவிலான அரசியல் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. திபெத் மாணவர்கள் சங்கமும் ஐக்கஃபும் சேர்ந்து திபெத் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம். மேடையில் பல ஜாம்பவான்களோடு சேர்த்து எனக்கும் மரியாதை கிடைத்தது. சாயுங்கால செய்தித்தாளின் என் பெயரை கடித்துக் குதறி ஒரு செய்திக் குறிப்பும் வந்திருந்தது.

லொயோலா போன்ற கல்லூரியில் மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று தெளிவாக மாணவர்களை அடையாளம் காணமுடியும். நம்ம எல்லாருக்கும் பொதுத்தட்டு.

இன்னும் இரண்டு வருடம் லிபாவில்(LIBA) மெலாண்மை. முதல் முதலாய் பெண்களோடு படித்த அனுபவம். இனிய தோழிகளின் பழக்கம் இன்னும் தொடர்கிறது. தோழர்கள்? சொல்லவே வேண்டாம். ஒரு தோழியின் வீட்டுக்கு வாராவாராம் 'விடாது கறுப்பு' பார்க்கப் போவோம். இன்னொருத்தியின் கைனட்டிக் ஹோண்டாவில் சம்மர் ப்ராஜெக்ட். தோழியின் டால்ஃபின் காரை எடுத்து முதன் முதலில் இரண்டாம் கீயரிலேயே ஓட்டிக் கொண்டிருந்தது, முப்பதுபேராய் 'While you were Sleeping' எனும் மெல்லிய காதல் படத்துக்குப் போயிருந்து கத்தி கலாட்டா செய்து அங்கிருந்த தீவிர 'பீட்டர்களை' எரிச்சலூட்டியது, தி. நகர் அருணாவில் கூடியது, நள்ளிரவில் அடையார் பீச்சில் போலீஸ் துரத்த,"மச்சான் ஏ.சீடா"(Asst. Commissioner)எனக் கத்திக்கொண்டே ஆளுக்கொரு திசைநோக்கி ஓடியது என நினைவுகள் பல. இவற்றிற்கு மத்தியில் படிப்பும்.

கல்லூரி முடித்ததும் மென்பொருள் வித்தகர் வேலை கிடைக்குமா எனத் தேடினேன், மென்பொருள் விற்பனர் வேலைதான் கிடைத்தது. பல்லைக் கடித்துக்கொண்டு கிடைத்த வேலையை செய்யவேண்டியதாயிற்று. சில வருடங்கள் விற்பனராய் வேலை. கடினமான வருடங்கள் அவை. ஞாயிறு எப்போது வரும் எனும் ஏக்கத்திலேயே வார நாட்கள் கழிந்தன. விருப்பமில்லாத ஒரு வேலையை செய்வது எத்தனை கடினமான சுமை?

ஒருபோதும் வெளிநாடு போய் பணம் சேர்க்க வேண்டுமென்றோ பெரிய பணக்காரனாகவேண்டுமென்றோ நான் நினைத்ததில்லை. நானும் என் நண்பனும் சொல்லிக்கொள்வோம், '12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்' என்று. வாழ்க்கையில் விதி விளையாடியது, நண்பர்கள், உறவினர், தாய், தந்தை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தேன். மென்பொருள் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினேன். சிறிது நாட்களிலேயே அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டேன்.

சின்ன வயதில் சிவந்தமண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் திருவனந்தபுரம் நோக்கிப் பறக்கும் விமானங்களை," ஐ ஏரோப்ளேன்" என, அரைக்கால்சட்டை நழுவுவதயும் மறந்து துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறோம். முதன் முதலில் விமானத்தில் ஏறிய போது ஏனோ ஜீன்சை மேலே இழுத்து விட்டுக்கொள்ளத் தோன்றியது.

சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி நேர பயணத்தில் புரிந்தது.

நாட்கள் ஏனோ நமக்காய் காத்திருப்பதில்லை. ஒருநாள் இந்தப் பெண் பிடித்திருக்கிறதா எனும் மின்னஞல் புகைப்படத்தோடு வந்தது. சிக்காகோவில் இருந்துகொண்டே சென்னையில் பெண் பார்க்கும், திருமணத்துக்கு கூட நேரமில்லாத பல மென்பொருள் வித்தகர்களில் நானும் ஒருவன். திருமணம் இனிய அனுபவம். தந்தையானது அதனினும் இனிய அனுபவம்.

மனைவி பிள்ளை என மீண்டும் சிக்காகோ பிரவேசம்.

என் மனைவியின் உந்துததால்தான் எழுத ஆரம்பித்தேன். அவர்தான் என் முதல் ரசிகை. என் முதல் விமர்சகி.

தொலைந்துபோன அந்த முட்டத்து மீனவ கிராமத்தானை தேடிக் கண்டுபிடித்து, அலைகள் பாறைகள் மணல்மேடுகள் எழுதினேன். திரு. செயமோகனின் பாராட்டும், தினமலரின் குட்டிக் கட்டத்தில் அங்கீகாரமும் கிடைத்தன.

இன்று ஒரு சிறப்பு ஆசிரியராய் தமிழோவியத்தில் எழுதும்போது எங்க ஊரு பாட்டுத்தான் நியாபகம்வருது.'தாஸ் தாஸ், சின்னப்ப தாஸ் தாஸ்... பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்'.

நன்றி!!! என் மனைவி ஷோபனாவுக்கு, தேன்கூட்டுத் தோழர்களுக்கு, தமிழோவிய நண்பர்களுக்கு, வலைப்பதிவர் வட்டத்திற்கு, வாசக அன்பர்களுக்கு.

காட்டில் பூத்த மலர்களை காட்டாறு எங்கெல்லாமோ அடித்துச் செல்வதைப்போல வாழ்க்கை நம்மை நடத்திச் செல்கிறது. ஓஷோ சொல்வதைப்போல 'நீந்தத் தேவையில்லை, மிதந்தாலே போதும்'.

Tuesday, June 27, 2006

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்

(போனவார தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் எழுதியது)

"காது அடைச்சிருக்கு, நீங்க பேசினதே கேட்கல மாமி." அந்துமதி பக்கத்து சீட்டிலிருந்த லென்ஸ்மாமியிடம் சொல்ல, "இல்ல இன்னும் இருபது நிமிஷத்துல சிக்காகோ போயிரலாம்னு சொன்னேன்" .

"ஆமா. ஒஹேர் இன்டர்னேஷனல். அமெரிக்காவிலேயே பிசியான ஏர்போர்ட். தெரியுமோ? அட்லாண்டாவுக்கும் இதுக்கும் வருஷா வருஷம் போட்டி."

" 'ஒஹேர்' என்ன பேர் அது? ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்ல?"

"'எல்லாத்தையும் விட மேலானது'ன்னு அர்த்தம். ஐரிஷ்"

"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல."

"தொழில் இரகசியங்களை இந்த மாதிரி பொது இடத்துல சத்தமா சொல்லாதீங்க மாமி."

"ஆமா இந்த சிப்பந்தி கேட்டுட்டு ஒனக்கு போஸ்ட்கார்ட்ல கேள்வி அனுப்பாமப் போகப்போறாங்களாக்கும்?"

"சரி. கேமரா எல்லாம் ரெடியா?"

"ம். டிஜட்டல் காமெராதானே. பாட்டரி ஃபுல்லி சார்ஜ்ட்". அந்துமதி சப்தமாய் சிரித்தாள்.

"என்ன சிரிப்பு?"

"இல்ல இந்த டிஜிட்டல் காமெராவை நான் வாங்கித் தந்ததும் இதுல பிலிம் போட முயற்சி செய்தீங்களே ..."

"பிறக்கும்போதே எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா என்ன. சரி... நான் கொஞ்சம் மக்குத்தான் ஒத்துக்கிறேன்". சிப்பந்திப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டிருப்பதை உறுதி செய்துவிட்டுச் சென்றாள்.

"ஏண்டீ மதி இந்த உலக்கைப்பிள்ளை ஏர்போர்ட்டில நிப்பார்ல? எங்கிருந்து பிடிச்ச இவர?"

"இணையத்துலதான். ஒரு வலைப்பதிவாளர். என் ரசிகர்."

"ஓ இன்னுமொரு ஜொள்ளுப்பார்ட்டி. எப்படி பதிவெல்லாம் கலக்குவாரா?"

"எவளுக்குத் தெரியும் அதெல்லாம் படிக்கறதேயில்ல."

"சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கையில் அந்துமதியின் கார்ட்டூன் முகத்தை கணிணி பதிவெடுத்து ஒட்டிய அட்டையோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
"Mr. உலக்கைப்பிள்ளை?"

"ஓ. அந்துமதி. நேரிலே உங்களை பார்க்க சந்தோஷம். This is Lensmaami i guess."

"ஆமா. உங்களை பார்த்ததிலே மகிழ்ச்சி"

"Welcome to Chicago"

"உலக்கைப்பிள்ளை, உங்களை உலக்கைன்னு கூப்பிடலாம்ல?" உ. பி தலையசைத்தார்."லென்ஸ்மாமிக்கு நம்மாட்கள் ஆங்கிலம் பேசினா அலர்ஜி".

"சாரி சாரி ஐ மீன் மன்னிக்கவும் மாமி. உங்களையெல்லாம் நேரில பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல. சாரு மெயில் பண்ணினதும் சந்தோஷமாயிட்டேன். பயணம் எப்படி போச்சு?"

"பரவாயில்ல. கொஞ்சம் குளிச்சு ரெஸ்ட் எடுத்தா தேவலாம்."

"இங்கிருந்து வீடு அரைமணி நேரம் வாங்க, கார்ல பேசிக்கலாமே."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டொயொட்டா கேம்ரி அமெரிக்காவில் 'தேசி' என செல்லமாக அழைக்கப்படும் இந்தியர்களின் பிரதான வாகனங்களில் ஒன்று கேம்ரி, சரி மத்த பிராதான வாகனங்கள் என்னண்றீங்களா அதுவும் கேம்ரிதான் வேற வேற வருஷ மாடல்கள். கூடவே கரோலா, சிவிக் எல்லம் சேத்துக்கலாம்.

உலக்கைப்பிள்ளை காரை ஹைவேயில் செலுத்தினார். "இவ்வளவு ஸ்பீடா போறீங்களே ஆபத்தில்ல?" லென்ஸ்மாமி கேள்விகளைதொடுக்க ஆரம்பித்தாள்.

"55மைல் இது கம்மி வேகம்தான். 75 முதல் 95, 100 வரைக்கும் ஓட்டூவாங்க. பொதுவா எல்லோரும் ரூல்ஸ்படி ஓட்டுறதால பிரச்சனையில்ல. ரோடும், காரும் ஸ்பீடுக்காக வடிவமச்சிருக்காங்க."

"இதென்ன தலைக்கு மேல ஹைவேக்கு குறுக்க கட்டிவச்சுருக்கான்?"


"அது ஒயாசிஸ் மாமி."

"என்ன கத வுட்றீங்க. ஒயாசிஸ் பாலைவனச் சோலையில்ல?"

"ஆமா. தூரப் பயணங்கள்ள ஹைவேலிருந்து வெளியேறிப் போய் பொருட்கள் வாங்கமுடியாதுல்ல அதான் இப்படி ஹைவேக்கு மேலயே கட்டி வச்சுருக்காங்க."

"நம்ம ஊரு பரோட்டா கடை மாதிரின்னு சொல்லுங்க"

"அதேதான் அது ரோட்டுக்கு சைடுல இருக்கும் இது தலைக்கு மேல பாலம் மாதிரி. வெறும் சாப்பாடு மட்டுமில்லாம மற்ற சில பொருட்களும் கிடைக்கும்."

"ஸ்டார் பக்ஸ்ல ஒரு காப்பச்சீனோ வாங்கிட்டுப் போலாமே?" மதுமிதா கேட்டாள்.

"ஏண்டி இப்படி மாறிட்ட. ஊருல காப்பி டீயே குடிக்க மாட்ட. பித்தமுன்னு யுத்தம் செய்வ, ஸ்டார் பக்ஸ்னா பித்தமெல்லாம் சுத்தமாச்சா? போயி அவனுக்கு கொஞ்சம் 'BUCKS' அளந்துட்டு வரலாம் வாங்க"

எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வண்டி ஒயாசிஸ் நோக்கி நகர்ந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேப்பர்வில், அமெரிக்காவில் முதன்மையான சில பள்ளிக்கூடங்களை கொண்ட இடம். சிக்காகோவிலிருந்து சுமார் 30மைல் மேற்கே. இந்தியர்கள் பலர் வசிக்குமிடம். அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு மூன்றாவது சிறந்த இடமாம். உலக்கைப்பிள்ளை அங்கேதான் தங்கியிருந்தார்.

வீடு வந்ததும் ஷவரில் குளியல் போட்டுவிட்டு எல்லோரும் வெளியே போக ரெடி.
"உலக்கை. இப்போ எங்கப் போறோம்?"

"இங்க அரோரால வெங்கடேஸ்வரா கோவில் ஒன்னு இருக்கு. ரெம்ப அழகான கோயில்."

"ம்..www.balaji.org பாத்துருக்கேன். ஏதாவது கிளப்புக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நெனச்சேன். இங்கேயும் கோவிலா? லென்ஸ்மாமி ஏதாச்சும் சொன்னாளா?"

"இல்ல அந்துமதி, கோவிலுக்கு போயிட்டு பக்கத்திலேயே ஹாலிவுட்டுன்னு ஒரு காசினோ இருக்கு. அங்கே போய் சூதாடிட்டு வரலாம்"

"இப்பத்தான் நம்ம வழிக்கு வர்றீங்க"

"ஸ்வாமி நாராயணா கோயில்?" லென்ஸ்மாமி கேட்டாள்.

"போலாமே. மதி அந்தக் கோவில் நீங்க கட்டாயம் பாக்கணும். இங்க அரோராரலதான் இருக்கு. ரெம்ப அழகான கோவில். அலுவலக கட்டிடம் கேரளா ஸ்டைல் மர வேலைப்பாடோடையும், கோவில் முழுதும் க்ரானைட்ல அழகான வேலைப்பாட்டொட கட்டியிருக்காங்க."

"'ஸ்வாமி நாராயணா' கேள்விப் பட்டமாதிரி இருக்கே."

"BAPSன்னு ஒரு அமைப்பு. ரெம்ப நல்ல சமூக சேவையெல்லாம் செய்றாங்க.http://www.swaminarayan.org/ இவங்க லண்டன் கோவில் ரெம்ப பிரசித்தம்"

"சரி அப்ப அதையும் பாத்திரலாமே".

"லெமாண்ட்ல ஒரே இடத்துல ரெண்டு கோயில்கள் இருக்கு."

"இஸ்க்கான்?" மதி கேட்டாள்.

"ஆமா இஸ்கான் கோவில் ஒண்ணு டவ்ண் டவுன் பக்கம் இருக்கு."

"மொத்ததுல சிக்காகோவ்ல 'தேசிகள்' நிறைய."

"ஆமா. இங்க திவான் தெருவில முழுதும் இந்திய அல்லது பாக்கிஸ்த்தானிய கடைகள்தான் இருக்கும். அங்கபோனா நம்ம பாண்டிபஜார் நியாபகம் வரும். கிட்டத்தட்ட இந்தியாவில் கிடைக்கும் எல்லா பொருட்களுமே இங்க கிடைக்கும். அதுவும் மத்த லோக்கல் இந்தியக் கடைகளை விட கொஞ்சம் சீப்பா."

"சுதந்திர தின கொண்டாட்டம் இங்க நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்"

"ஆமா இந்தியர்களும் பாக்கிஸ்தானிகளும் போட்டி போட்டு கொண்டாடுவாங்க. காந்தி, ஜின்னா பேருல கடைங்களும் தெருக்களும் இங்க இருக்கு."

"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப் போகலாம்.".
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவில்களில் பூஜைய விட போட்டோ பிடிப்பதில் லென்ஸ்மாமி பிசி. அந்துமதி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அமைதியை ரசித்தாள். உலக்கைப்பிள்ளை இரண்டு அமெரிக்கர்களுக்கு கோவிலை விளக்கிக்கொண்டிருந்தான். பாலாஜி கோவிலில் சாப்பிட்டுவிட்டு (ஆமா அருமையான இட்லி சாம்பார், புளியோதரை வடை தயிர்சாதமெல்லாம் கிடைக்கும்).

காசினோ போய் மாமி ஸ்லாட்மஷினில் தஞ்சமடைந்தாள். மதியும் உலக்கையும் ரூலேயில் நியூமெராலஜியை பரிட்சித்துக்கொண்டிருந்தனர்.

"அந்துமதி மணி என்ன பாத்தீங்களா?"

"11:30"

"இல்ல அதிகாலை ஒரு மணி. நீங்க வாட்ச்ச அட்ஜஸ்ட் செய்யல. ஜெட் லாக்னால உங்களுக்கு தூக்கமும் வரல. அதிகாலை ஒருமணி. நாளைக்கு சிக்காகோ டவுண்டவுன் போகணும்ல"

"நாளைக்கில்ல, இண்ணைக்கு"

லென்ஸ்மாமியை கண்டுபிடிப்பது அவளை இழுத்துவருவதைவிட எளிதாய் இருந்தது. வீடு வந்து சாப்பிட்டுவிட்டு (மாமிக்கு இந்திய நேரப்படி பசித்தது) தூங்கும்போது மணி அதிகாலை 4.00
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதினொரு மணிக்கு எழுந்து. குளித்து சீரியல் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 12:30 ஆகியிருந்தது.

"இந்தமாதிரி Suburb", மாமியப் பார்த்து,"புறநகர்லருந்து சிக்காகோ Downtown போகணும்னா லோக்கல் ரயில்ல போறது நல்லது. முக்கியமா ரெண்டு மூணுபேர் போகும்போது அப்படி செய்யலாம். கூட்டமா போகும்போது கார்ல போய் பார்க்கிங் செய்யுறது நல்லது. டவுண்டவ்ன் ஏரியாக்கள்ள பார்க்கிங் அநியாய விலை.

எப்பவுமே புதுசா ஒரு சிட்டி பார்க்கப் போகும்போது மொதல்ல ஒரு பஸ் டூர் அடிக்கிறது நல்லது. அதனால நமக்கு என்ன பாக்கலாம் என்ன வேண்டாம்னு ஒரு ஐடியா கிடைக்கும் மட்டுமல்லாம எல்லத்தையும் ஒரு லுக் விட்டமாதிரியும் இருக்கும்." உலக்கைப்பிள்ளை விளக்க ஆரம்பித்தார்.

"ம் நல்ல ஐடியா. ஆனா உங்களுக்கு புதுசில்லையே?" மதி பாராட்டினாள்.

"ஏய் அந்தா தூரத்துல பெரிய பிள்டிங்கெல்லாம் தெரியுதே..",லென்ஸ்மாமி.

"அதான் டவ்ன்டவுன். அந்த கறுப்பா உயரமான பிள்டிங்தான்...", உலக்கைப்பிள்ளை

"சியர்ஸ் டவர். உலகத்திலேயே மூணாவது உயரமான கட்டிடம். அமெரிக்காவிலேயே முதல்" அந்துமதி அறிவித்தாள்

மாமி சிரித்துக்கொண்டே, "ம்ம்ம் நடமாடும் என்சைக்ளோப்பீடியா",

"முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)
போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க"

டிக்கட் வாங்கி உள்ளே போனா சிக்காகோ பத்தி குறும்படம் ஒன்னு, பாத்துட்டு லிஃட்ல படுவேகமா ஸ்கை டெக்குக்குப் போய் மேலிருந்து கீழே பொம்மைகள் போல இயங்கும் உலகத்தப் பார்த்துட்டு இறங்கியாச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடந்துகொண்டே...
"அடுத்தது 'மில்லேனியம் பார்க்' . மூணு உலகப் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் திறமைய காமிச்சுருக்காங்க. இங்கிருந்து நடந்தே போகலாம்."

"அதுல அனிஷ் கப்பூர்னு ஒரு இந்தியரும் சரியா?"

"ஆமா மதி. அவரு ஒரு உலோக முட்டைய வடிவமச்சிருக்காரு. அந்த உலோக முட்டையில சிக்காகோவின் உயர்ந்த கோபுரங்களின் பிம்பம் ஓவியமா தெரியும். இந்த பார்க்கோட வடிவமைப்பே ரெம்ப மார்டனா தெரியும். கொஞ்ச தூரம்தான் நடந்தே போகலாம்".

"மதி அங்க பாரேன் எவ்ளோ பெரிய முட்ட?" பின்னால் கொஞ்சம் தள்ளி வந்துகொண்டிருந்த லென்ஸ்மாமி குரல் கொடுத்தாள்.

"அதோ இங்கிருந்தே தெரியுதே."

வேகமாக நடந்து மில்லேனியம் பார்க் சென்றனர்.

"பசிக்குதே." லென்ஸ் மாமி முகம் சுளித்தாள்.

உலக்கைப் பிள்ளை மணி பார்த்தார் 3மணி. "சரி...வாங்க போய் கொட்டிக்கலாம். ஒரு விஷயம். ஒரு இடத்த சுத்தி பார்க்க போகும்போது டைம் ரெம்ப முக்கியம். அதனால அதிகமா டைம் எடுக்கிற ரெஸ்டரண்டுக்குப் போய் காத்திருக்காம. ஃபாஸ்ட் ஃபுட் போறதே நல்லது.

"ம்ம் அதுவும் சரிதான். மெக் டானல்ட்ஸ்லேயே சாப்பிடலாம்." மதி ஆமோதித்தாள்.

"சரி வெஜொட்டேரியன்?" மாமி கேட்க,"கிடைக்கும். வாங்க" என்றார் உலக்கை.
சாப்பிட்டதும் 'நேவி பியர்' போக ஒரு டாக்சி பிடித்து வந்து சேர்ந்தனர்.

"என்னப்பா இது? ஏறினதும் இறக்கிவிட்டிட்டு 9 டாலர் வாங்கிட்டுப் போறான்?. நம்ம ஊருல 405 ரூபாய்க்கு சென்னை டு கன்னியாகுமரி போயிடலாமே."

"மதி பாத்தீங்களா இங்க வந்ததுமே லென்ஸ்மாமிக்கு 45ஆம் வாய்ப்பாடு ஈசியா தெரிஞ்சுடுச்சு." மதி சிரிக்க மாமி முறைத்தாள்.

"நேவி பியர் சிக்காகோவில இன்னொரு பெயர்போன இடம்."

"ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா எதுவும் தெரியாதா?"

மாமியின் கடியை ரசித்துக்கொண்டே தொடர்ந்தார் உலக்கைப்பிள்ளை.

"இங்கே ஐ-மேக்ஸ் தியேட்டர் இருக்கு, ஜயண்ட் வீல், விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ எல்லாம் இருக்கு. இங்கிருந்து சின்ன சொகுசு கப்பல்ல கொஞ்சதூரம் லேக் மிச்சிகன்ல க்ரூஸ் போயிட்டு சிக்காவோவின் இரவழக தண்ணிலிருந்தே ரசிக்கலாம். அதுக்கும் டிக்கட் வாங்கிருக்கேன். அதுல இன்னுமொரு சஸ்பன்ஸ் இருக்கு அத அப்புறமா சொல்றேன்"

நேவி பியர் நுழைவு வாயிலருகே வந்தனர்.

"இது எங்கேயோ பாத்திருக்கேனே?" அங்கே பெஞ்சில் பெட்டியோடு அமர்ந்திருந்த ஆளைக் காட்டி மதி கேட்டாள்.

"ஓ...இது ஃபாரஸ்ட் கம்ப் ஹீரோ போல செட் அப். இந்த உணவகத்துக்கு அந்த படத்துல வரக்கூடிய Bubba Gump ரெஸ்டாரண்டுன்னு பேரு. பொதுவா சம்மர் டைம்ல இந்த ஃபாரஸ்ட் கம்ப் இங்க உக்கார்ந்திருப்பார்"

"வாங்க அந்த ஜையண்ட் வீல் போயிட்டு உள்ளே ஐ-மேக்ஸ்ல படம் பாக்கலாம்." அந்துமதி அழைத்தாள்.

ஐ-மேக்ஸின் 60x80 அடி திரையில் முப்பரிமாணப் படம் பார்க்கும்போது லென்ஸ்மாமிக்கு மெய் சிலிர்த்தது.

"டிவிக்கு ரெம்ப பக்கத்துல போய் நின்னு பாத்தா ஐமாக்ஸ் மாதிரி இருக்காது?"

"அப்படி ஐ-மேக்ஸ் பாத்தா ஐ-லாஸ் ஆயிரும். ஏற்கனவே சோடாப் புட்டி"

வெளியே வந்ததும் பாப்கார்ன் வாங்கி விட்டு அங்கே நடக்கும் கோமாளிகளின் வித்தைகளை கண்டு களித்தனர்.

லென்ஸ்மாமி பஞ்சுமிட்டாய் வேண்டுமென அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள்.

"இது குழந்தைகளுக்கான இலவச க்ளவுன் ஷோ. இதில்லாம பெரிய சர்க்கஸ்கூட நடக்கும். நம்ம கப்பலுக்கு நேரமாச்சு போலாமா?"

பியர் நோக்கி நடந்தனர். லென்ஸ்மாமி வழிநெடுக சின்ன சின்ன கடைகள் இருப்பதை நோட்டமிட்டுக்கொண்டே நடந்தாள்.

மதியும் உலக்கையும் கப்பலில் ஏறும் இடத்துக்கு வந்தனர். லென்ஸ் மாமியக் காணோம்.
"எங்க போனாங்க இந்த மாமி." மதிக்கு எரிச்சல்,"போட்டோ எடுக்கிறேன் பேர்வளின்னு வாய் பாத்துட்டே கோட்டைய விடுறதுதான் இவங்க வேலை".

"ஐயையோ இன்னும் 2 நிமிஷத்துல கப்பல் கிளம்பிடும். என்ன செய்யலாம்?" டிக்கட்டை காற்றில் ஆட்டிய படியே கைப்பிள்ளை கவலையுடன் கேட்டான். 120 டாலரின் மதிப்பு... 45ஆம் வாய்ப்பாடு மனதுக்குள் ஓடியது.

"வாங்க நாம போகலாம். மாமி இங்கயே இருக்கட்டும்."

உலக்கைப்பில்ளை தயங்கினார்."வாங்க போகலாம்." கையை பிடித்து இழுத்தாள்.

இரண்டுபேரும் கடைசி பயணிகளாக கப்பல் ஏறினர். ஒரு குலுக்கோடு கப்பல் பயணித்தது.
கொஞ்சம் தொலைவிலிருந்து அதுவும் குட்டிக் கடல் போல விரிந்து கிடக்கும் ஏரிமேல் பயணித்துக்கொண்டு சிக்காகோவின் ஸ்கை லைனை ரசிப்பது தனி அனுபவம்.

"மதி. பாவம் மாமி. எங்க இருப்பாங்க?"

"அவங்ககிட்ட இண்டர்நேஷனல் க்ரெடிட் கார்ட் இருக்கு. இந்த மதிரி தனியா போன அனுபவம் நிரைய இருக்கு உங்க கைபேசி நம்பர் இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்?"
சொல்லி முடிக்கவும் உலக்கைப் பிள்ளையின் MP3 கைபேசியில் வசீகராவின் துவக்க புல்லாங்குழலிசை ஒலித்தது.

"மாமி?"

"ஆமா சாமி. நைசா கழட்டி உட்டுட்டு ஜோடியா கப்பல்ல பயணமா?"

"அப்படியில்லீங்க.."

"ம்ம் வழியாதீங்க...பரவாயில்ல நான் இங்க உங்களுக்கு வெயிட் பண்றேன்."
உலக்கைப் பிள்ளை நிம்மதியானார்.

தமிழ்நாடு, இலக்கியம், வலைப்பதிவு, திராவிடம், ஆரியம், அடுக்குமாடி, நீர், நையகரா, வயகரா, கட்டடவியல், சர்தார்ஜோக் என உரையாடி முடியும்போது இருண்டுவிட்டிருந்தது.

"கப்பல் கரைக்கு வந்துடுச்சா?" மதி கேட்டாள்.

"இல்ல கரைக்குப் பக்கத்துல நிக்குது. இப்பத்தான் நான் சொன்ன சர்ப்ரைஸ் மேட்டர் வரப்போகுது."

"என்ன.." மதி கேட்குமுன் வானை நோக்கி ஒரு ஒளிக்கீற்று பறந்து வெடித்து ஒளிக் கோலமிட்டது. "ஓ வாணவேடிக்கை. இந்த இரவுக்கு அருமையான ஒரு முடிவு இதுதான்."
பல வண்னங்களில் வானில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன வாணங்கள்.

"ஒண்ணு கவனிச்சீங்களா?"

"என்ன."

"வாணங்கள் வெடிப்பதும் ஒளிர்வதும் இசையோட ஒருங்கிணைக்கப் பட்டிருக்கு."

"ஆமா கவனிச்சேன். ஒரு ஒளி நாடியம் போல இருக்கு. நல்ல அனுபவம் உலக்கைப்பிள்ள. ரெம்ப தாங்ஸ்."

கப்பல் கரைக்கு வந்ததும் மாமியைத் தேடினர்.

"அந்த ரெஸ்டாரண்ட்ல ஒரு இந்திய பெண்..?"

"ஆமா.. மாமியேதான்"

காரில் ஏறி $20 பார்க்கிங் கட்டிவிட்டு ஹைவேயை எட்டும்போது மணி இரவு 10 ஆகியிருந்தது.

"மாமி. நாங்க கப்பல்ல இருந்தப்ப என்ன செஞ்சீங்க?"

"இங்க ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ ஒண்ணு இருக்கு. ராக்கட்ல சிக்காகோவ சுத்தி வர்ற மாதிரி அமைச்சிருக்காங்க. இடையே மழைத்தூறல், ராக்கட் வெடிக்கிற மாதிரியெல்லாம் இருந்துச்சு. என்ன முயற்சி செய்தாலும் அது செயற்கைன்ற எண்ணம் சீக்கிரம் மறந்துபோகுது. உண்மையிலேயே பறக்குற மாதிரி அனுபவம்."

"அப்புறம்."

"அப்புறம் நடந்ததச் சொன்னா நீ பொறாமப் படமாட்டியே?"

"ம் அப்படி என்னது?"

"ஒரு வெள்ளக்காரன் என்னைப் பார்த்து சைட் அடிச்சிட்டிருந்தான். Would you like a drink?னு கேட்டான் 'Dinner?' அப்படீன்னேன் விளையாட்டா. ஓக்கே சொல்லிட்டான்."

"ஜப்பான்ல அந்த சுமோ வீரர்கூடப் போயி நூடல்னு நெனச்சி பாம்பத்தின்ன மாதிரி இங்க ஒண்ணுமில்லையே?" மாமி செல்லமாய் முறைத்தாள்.

"ஒரு வழியா டவ்ன் டவுன் பாத்தாச்சு. ஒரு குட்டி டேட்டிங்கும் ஆயாச்சு." மாமி சலித்துக்கொண்டாள்.

"இல்ல இன்னும் நிறைய இருக்கு பாக்க. இங்க உள்ள உலகப் புகழ் ஃபீல்ட் மியூசியம் , ஷெட் அக்குயேரியம் , ஹான்காக் கோளரங்கம் இதெல்லாம் கட்டாயம் பார்க்கவேணாமா?" உலக்கைப்பிள்ளை கேட்டார்.

"நாளைக்கு தமிழ் சங்க மீட்டிங் இருக்குதே." அந்துமதி சொன்னாள், "அடுத்தநாள் கிளம்பி எல்.ஏ"

"ஆமா மறந்தே போயிட்டேன்."

"திரும்ப வரும்போது ஒருநாள் கிடைக்குதே அப்ப பார்க்கலாம். சரி இங்க ஒரு நாள் ட்ரிப் வரும்போது என்ன பார்க்கலாம்?"

"கட்டாயம் சியர்ஸ் டவர்ஸ். கூட்டம் அதிகமாயிருந்தா அவாய்ட் பண்றது நல்லது. நேரே ஒரு குட்டி நடை போட்டு மில்லேனியம் பார்க். அங்கிருந்து கார்ல அல்லது டாக்சில நேவி பியர். நேவி பியர்லிருந்து சிக்காகோ ரிவர்ல ஒரு குட்டி போட் டூர். சிக்காகோவின் கட்டிடக்கலை பற்றி விளக்கும் டூர். பட்ஜட் அதிகமாயிருந்தா மதியும் நானும் போன க்ருயிஸ் போயிட்டு ஃபயர்வொர்க்ஸோட முடிக்கலாம். இல்ல ஐ-மேக்ஸ், ஜயண்ட் வீல்னு சிம்பிளா முடிக்கலாம்."

"அப்ப மியூசியமெல்லாம்?"

"அது இன்னொரு பக்கம் இருக்கு. ஒவ்வொண்ணும் குறைந்தபட்சம் அரை நாளாவது எடுக்கும். அதுக்கேத்தாப்ல ப்ளான் பண்ணணும். சிட்டி பாஸ் வாங்கிகிட்டு இங்க யார் வீட்டுலயாவது டேரா போட்டுட்டு நிதானமாவும் சிக்காகோவ பாக்கலாம்."

"பாத்தியா போற போக்குல நம்மளத் தாக்கிட்டாரு. உலக்கை.", மாமி சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"ஆனா எப்ப வந்தாலும் ஒரு அரை மணிநேரம் இன்டர்நெட்டில் மேஞ்சு ஃபயர்நொர்க்ஸ் இருக்கா, சர்க்கஸ் ஏதாவது ஓடுதா, ஐ-மாக்ஸ்ல என்ன படங்களிருக்குன்ற மாதிரி விபரங்கள் எடுத்துக்கிறது நல்லது. எந்த இடத்துக்குப் போனாலும் இது உதவும்."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
நேப்பர்வில் வந்து இண்டியன் ஹார்வஸ்ட் உணவகத்தில் சாப்பாடு.

"ஆமா அதென்ன பேரு உலக்கைப்பிள்ளைன்னு?"அந்துமதி கேட்டாள்

"நான் சொல்றேன்", மாமி முந்தினாள்,"உங்கபேரு கைப்புள்ள உங்கப்பா பேரு உலகநாதன்.. 'உல' இனிஷியல். சரியா?"

"ஐயோ மாமி கடிக்காதீங்க. 'உலக்கைப்பிள்ளை' என் புனை பெயர். இணையத்துல புனை பெயர்ல எழுதுனா என்ன வேணா எழுதலாமே? உங்க கார்ட்டூன் மூஞ்சி மாதிரிதான் இதுவும்."

"அப்ப உங்க உண்மையான பேரு?"

"சிறில் அலெக்ஸ்".




சிறில் அலெக்ஸ்