.

Wednesday, March 14, 2007

இயேசுவின் கல்லறை

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.

இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.

டிஸ்கவரி துவக்கத்திலேயே ஒரு பெரிய டிஸ்க்ளெய்மரோடு (Disclaimer ) ஆரம்பிக்கிறது.

ஆவணப் படத்தின் இயக்குனரோடும், இன்னொரு முக்கிய ஆலோசகரோடும், அகழ்வாராய்ச்சி துறையினரும், அறிவியல் வல்லுநர்களும் இன்னும் கிறீத்துவ இறையியலாளர்களும் உரையாடிய ஒரு கலந்துரையாடலைக் காண்பித்தனர். தான் ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிபற்றி நேர், எதிர் கருத்துக்களை விவாதிக்கச் செய்த டிஸ்கவரியை வியக்காமல் இருக்கமுடியாது. இதை வழிநடத்திய அனுபவமிக்க ஊடகவியலாளர் டெட் காப்பல் தன் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

பொதுவாகக் கருதப்படுவதுபோலல்லாமல் இந்தக் குடும்பக் கல்லறையை கண்டு பிடித்து 27 வருடங்கள் ஆகின்றன, இப்போதையக் கண்டுபிடிப்பல்ல. இந்த ஆவணப்படம் எடுக்க ஆன காலகட்டம் 3 வருடங்கள். 24 வருடங்களாக அந்தக் குடும்பக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டிகள் ஜெருசலெம் அருங்காட்சியகத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளை அருங்காட்சியகம் ஆவணப்படுத்துவதிலிருந்தே குழப்பங்கள் துவங்குகின்றன. இவை அவசரமாக ஆவணப்படுத்தப்பட்டு சேமிக்கப் பட்டுள்ளன என்கிறார் இஸ்ரயேல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர். இவையெல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே காலகட்டத்தில் சேர்க்கப்பட்டவையா என உறுதியாக அறிய இயலவில்லை.

இந்தக் கல்லறை இயேசுவின் குடும்பக் கல்லறை எனப் பெட்டிகளின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களை வைத்து சொல்ல முயல்கிரார்கள். இந்தப் பெயர்கள் மிகத் தெளிவாக தெரியவில்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. இவை அரமைக் எனும் இயேசுவின் தாய் மொழியில்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மொத்தம் 10 பெட்டிகளில் 6ல் பெயர்கள் உள்ளன. ஜோசப்பின் மகன் இயேசு எனும் பெயருள்ள ஒரு பெட்டி, மரியா என ஒன்று மரியம்னெ எனப் பெயருள்ள ஒரு பெட்டி யூதா எனும் பெயருள்ள இன்னொரு பெட்டி, இன்னும் பெயருள்ள இரண்டு பெட்டிகள். இந்தப் பெயர்கள் முதலாம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. (Use stats) இதற்குமுன் பல கல்லறைகளில் இயேசு எனும் பெயர்பொறிக்கப்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆவணப்படம் வியாபார நோக்கோடு, பரபரப்பை உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில வல்லுநர்கள். அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் இதை அகழ்வாராய்ச்சியின் ஆபாசத் திரைப்படம்(Archeological pornography) என்கிறார்.

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பொருள்சார்ந்த அறிவியலையும்(Material Scinece), எண்ணிக்கை சர்ந்த அறிவியலையும் கொண்டே முடிவுகளை செய்ய இயல்கிறது. இதில் பொருள்சார்ந்த் ஆதாரங்கள் அதிகமிருப்பின் முடிவுகளின் மேல் அதிக நம்பிக்கை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாய் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.மரபணு சோதனை ஒரு பொருள்சார்ந்த அறிவியல். இந்த ஆவணப்படம் குறைந்த பட்ச மரபணு சோதனையையே செய்துள்ளது. புள்ளியியல்(Statistics) ஒரு அறிவுசார்ந்த அறிவியல் இதை அதிகமாகப் பயன்படுத்தி முடிவுகளைச் சொல்கிறார்கள் ஆவணப் படத்தில்.

புள்ளியியல் அனுமானங்களை ஏற்படுத்தவும், தோராயமான முடிவுகளைப் பெறவுமே பயன்படுகிறது. புள்ளியியல் அடிப்படையில் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் தொகையில் எத்தனைபேருக்கு இயேசு எனப் பெயர் இருந்திருக்கும் எனும் தோராயக் கணக்கில் துவங்கி எத்தனைபேருக்கு மரியாள் , ஜோசப் எனும் தாய் தந்தை இருந்திருப்பர் எனும் அனுமானங்களினூடாகப் பயணிக்கிறது 'ஆய்வு'.

ஆவணப் படம் தொட்டுச்ச் செல்லும் இன்னொரு கருத்து இயேசுவுக்கும் மரிய மதலேனாளுக்கும் திருமணமாயிருந்தது எனும் கூற்று. இதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. டா வின்சி கோடின் பரபரப்பு தொத்திக்கொள்கிறது.

இதில் இருக்கும் பெரிய ஓட்டை என்னவென்றால், மரியம்னே எனும் பெயருள்ள பெட்டியில் இருக்கும் பெண்ணின் மரபணுவுக்கும், இயேசு எனப் பெயரிட்ட பெட்டியிலுள்ள் மரபணுவுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என சோதனை தெரிவிக்கிறது. இரத்த சம்பந்தம் இல்லையென்பதாலேயே இருவரும் மணமானவர்கள் எனும் முடிவுக்கு வருகின்றார்கள். எல்லா பெட்டிகளில் உள்ள மரபணுக்களும் சோதிக்கப்பட்டிருக்கின்றனவா எனும் விவரம் இல்லை. பெயரில்லாத மீதம் 4 பெட்டிகளில் உள்ளவர்களுக்கும் மரிமனெவுக்கும் தொடர்பிருக்கிறதா? தெரியவில்லை. ஆவணப் படம் தரும் வாதப் படி பார்த்தால் மரியம்னெவுக்கும் அந்தக் கல்லறையிலிருக்கும் யாருக்கும் வேண்டுமானாலும் திருமணம் நடந்திருக்கலாம், பெண்களைத் தவிர்த்து. So much for science.

மரிய மதலேனாளுக்கும் இயேசுவுக்குமான மரபுவழிக் கதைகளைக் கொண்ட டாவின்சி கோடின் அனுமானங்களைக் கொண்டு, சாதகமான அறிவியல் சோதனைகளோடு முடிவுகள் சொல்லப்படுகின்றன.

'மரியம்னெ' எனும் பெயர் இன்னும் முக்கியத்துவம் பெறக் காரணம் என்னவென்றால் பிலிப்பின் நற்செய்தி(Gospel of Philip) மரியம்னெ எனும் பெயரில் மரிய மதலேனாளை குறிக்கிறது. ஆனால் பிலிப்பின் நற்செய்தி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது மரிய மதலேனாள் வாழ்ந்ததோ முதலாம் நூற்றாண்டு. முதலாம் நூற்றாண்டில் மரியம்னெ எனும் பெயர் பரவலானதாக இல்லை. இதை ஆவணப் படக் குழுவும் விவாதத்தின்போது ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவணப் படத்தில் தங்கள் வாதத்தை பலவீனம் செய்யும் கருத்துக்களை குறைவாகவே சொல்கிறார்கள்.

400 ஆண்டுகள் கழிந்தபின் மரிய மதலேனாளுக்கு கிடைத்த மரியம்னெ எனும் பெயர் அவர் இறந்து ஒருவருடத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட சவப் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறதென்பது, தமிழ் திரைப்படங்களில் பாம்பு தட்டச்சு செய்து எச்சி போட்டு கடிதம் ஒட்டி அஞ்சல் செய்கிற கற்பனையின் ஓட்டையை விட பெரியதாயுள்ளது.
வாதங்களுக்குப் பின் வாதங்களாகத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பினும், ஒவ்வொரு வாதங்களும் பெரும் சந்தேகங்களுடன் கூடிய அனுமானங்களோடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதால் தொடர்புள்ள வாதங்களின் தனிப் பகுதிகள் வலுவிழந்து போகின்றன, எனவே மொத்த வாதமும் வலுவிழக்கிறது.

ஆவணப்படம் சொல்லவரும் விஷயங்களையும் ஒழுங்கற்ற சம்பாஷணைகளின் மூலமே பொதுவாகச் சொல்கிறது. முக்கியமான கட்டங்கள் வாதங்களாகவே (உரையாடல்) செல்கின்றன. டீக் கடை பெஞ்சில் சதாம் உசைனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் என்ன சந்ம்பந்தம் என்பதுபோன்ற உரையாடல்கள்.ஆவணப் படத்தில் பங்குபெற்ற 'அறிவியல்' வல்லுனர்கள் பலரும் தங்கள் முடிவுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக 'டிஸ்கவரிக்கு' தெரியப்படுத்தியுள்ளனர். புள்ளியியல் முடிவுகளைச் சொன்ன டொராண்டோ பல்கலையின் பேராசிரியர் ஆண்ட்ரே, அகழ்வாராய்ச்சித் துறையிலோ, பைபிள், கிறீத்துவ வரலாற்றின் ஆராய்ச்சியிலோ எள்ளவும் அனுபவமில்லாதவர். அவரின் முடிவின்படி இந்தக் கல்லறையில் உள்ள பெயர்கள் இயேசுவின் குடும்பமாக இருக்க அறுநூற்றில் ஒரு சாத்தியம் இருக்கிறது. (1 in 600 probability). இந்த சாத்தியமும் மரியம்னெ எனும் பெயர் மரிய மதலேனாளின் பெயர் என்பது உண்மை என எடுத்துக்கொள்வதால் வருவது. அந்த வாதம் பொய்த்துப் போவதால் 600ல் ஒன்று எனும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.

இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன. டாவின்சி கோட் நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அலையில் சறுக்கி விளையாடும் அவசரம் தெரிகிறது.
டைம் இதை 'அவசர, விளையாட்டுத் தனமான அறிவியல்' என்கிறது. இதுபோன்ற அவசர அறிவியல்கள் சொன்ன பல கருத்துக்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே தவிர வேறொன்றுமில்லை.

கடவுளை நம்ப அறிவியல் தேவயில்லை. கடவுள் நம்பிக்கைக்கு அறிவியல் மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கும் வரையில் இதுபோன்ற வெற்றுத் தகவல்கள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம். அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)

நன்றி: தமிழோவியம்

9 comments:

சிவபாலன் said...

சிறில்,

// கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம்.//

நிச்சயம் வரவேண்டும்..

நல்ல கட்டுரை..

நன்றி

கோவி.கண்ணன் said...

//அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)//

"நச்" !

அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த நிமிசம் வரை ஏசு குறித்த அகழ்வாராய்ச்சி ஆதாரம் ஏதுமில்லை என்பது முக்கியமான ஒரு விசயம்.

G.Ragavan said...

இது தொடர்பாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். பரபரப்பான தகவல்தான். ஆனால் முழுமையாக நிரூபிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

அதுவுமில்லாமல் இறைநம்பிக்கை என்பதற்கு மாற்றாக எதையும் கொண்டு வர முடியாது என்ற நிலையில் இது போன்ற கண்டுபிடிப்புகள் உண்மையான ஆதாரங்களோடு வந்தால் ஒழிய மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.

G.Ragavan said...

இது தொடர்பாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். பரபரப்பான தகவல்தான். ஆனால் முழுமையாக நிரூபிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

அதுவுமில்லாமல் இறைநம்பிக்கை என்பதற்கு மாற்றாக எதையும் கொண்டு வர முடியாது என்ற நிலையில் இது போன்ற கண்டுபிடிப்புகள் உண்மையான ஆதாரங்களோடு வந்தால் ஒழிய மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவபாலன்

சிறில் அலெக்ஸ் said...

நன்றி கண்ணன்.

ஜிரா. சரீயா ச் சொன்னீங்க. இதே கருத்த அரவிந்தும் சொல்றாரு ஆனா வேற கோணத்துல.

//இந்த நிமிசம் வரை ஏசு குறித்த அகழ்வாராய்ச்சி ஆதாரம் ஏதுமில்லை என்பது முக்கியமான ஒரு விசயம். //

ம்.. ஆதாரம் அகழ்வாராய்ச்சி எல்லாம் நாம் அம்பும்வரைக்கும்தான் உண்மையில்லையா?

suvanappiriyan said...

//இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.//- Syril Alex

உங்களின் நம்பிக்கையை குர்ஆன் மெய்ப்படுத்துகிறது. இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'ஏசுவின் எதிரிகள் சுழ்ச்சி செய்தனர். இறைவனும் சுழ்ச்சி செய்தான். இறைவன் சிறப்பாக சுழ்ச்சி செய்பவன்.'
-குர்ஆன் 3 : 54

'ஏசுவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும் என்னை மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை என்னை மறுப்போரை விட இறுதி நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன்.பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது.'
-குர்ஆன் 3 : 55

//இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன.//

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

உண்மை அடியான் said...

\\மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.\\

இதில் கவலைப்பட ஒன்றுமில்லை அலேக்ஸ் இது இயேசுகிறிஸ்துவை பற்றி பரப்பபடும் முதல் கட்டுகதையாக இருந்தால் தானே கவலைப்படுவதற்கு.

1,முதலில் யூதர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பிறகு அதை நம்பாமல் அவரின் உடலை சீடர்கள் எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்துவிட்டு பொய் சொல்லுகிறார்கள் என்றனர்.

2,கிபி 6ஆம் நூற்றாண்டில் முகமது நபி வந்த பொழுது எனக்கு அல்லா வஹி அனுப்பினார்.இயேசுவை யாரும் அடிக்கவும் இல்லை கொல்லவும் இல்லை அவர் உயிரோடு என்னிடத்தில் உயர்த்திவிட்டேன்.கடைசி காலத்தில் உலகின் நீயாதிபதியாக அவர் வருவார் அப்படின்னு அல்லா சொல்றார் என்று சொன்னார்.

3,சென்ற நூற்றாண்டுகளில் பல நாஸ்திகர்கள் எழும்பி இயேசு பிறக்கவில்லை என்று கூறினார்.

4,பாகிஸ்தானில் பிறந்த மிர்சா குலாம் அகமது என்றவர் இதையெல்லாம் மீறி இயேசு காஷ்மீர்வந்து கல்லியாணம் செய்து குடும்பம் நடத்தினார்.அங்கேயே அவர் மரித்தார்.அதனால் அவர் திரும்ப வரமாட்டார்.அல்லா சொன்ன நபி நான் தான்.முகமதுவுக்கு பின் என்னை அல்லா அனுப்பி உள்ளார் என்று கூறினான்.

தற்பொழுது டாவின்சிகோட்,இயேசுவின் கல்லறை போன்ற புருடாக்கள் விடுகிறார்கள்.இதுக்கெல்லாம் கவலைப்பட்ட கிறிஸ்தவர்கள் சந்தோஷ்ப்பட நேரமேஇருக்காது.

இந்த புருடாக்களையேல்லாம் எந்த உண்மை கிறிஸ்தவனும் ஒரு போதும் நம்பமாட்டான்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி
சிரில் அலேக்ஸ்

சிறில் அலெக்ஸ்