(அப்படா ஒருவழியா நட்சத்திரம்னு தலைப்பில்லாத பதிவு)
ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.
இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.
நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )
அத்தியாயம் ஒன்று : விடியல்
கடலும், வானமும் இரவின் கருநீலம் களையத் துவங்கின. கலங்கரை விளக்கொளி மங்கலாகத் துவங்கியிருந்தது. சேவல்கள் ஏற்கனவே விழித்துவிட்ட ஊரை எழுப்பக்கூவின. பாறை மீது சில கடல் பறவைகள் தங்கள் நாட்குறிப்பை சரிபார்த்துக்கொண்டன. கிழக்கே வானம் மெல்ல சிவந்திருந்தது. தூக்கம் கலைந்தெழுந்தன கடல் அலைகள், விடியலில் தினமும் பாடும் பாடல்களைப் பாடிக் கொண்டும், கடற்கரையில் தவமிருக்கும் பாறைகளை விழிக்கச்சொல்லியும். நண்டுகள் சில கடலலை மூடிவிட்டிருந்த குழிகளின் கதவுகளைத் திறந்துகொண்டிருந்தன. கடல்மேல், தூரத்தில், மின்மினி விளக்கொளிகள் மீனவர்கள் விடியலுக்கு முன்னமே கடலுக்குப் போனதைக் காட்டின. இரவின் குளிர்தென்றல் கடைசியாய் ஊரை வலம் வந்துகொண்டிருந்தது. ஆண்களை கடலுக்கு அனுப்பிய பெண்கள் விடியலென்றும் பாராமல் சத்தமாய் பேசிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கையில் செபமாலையுடன் சில கிழவிகள் கோவில் நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.
கோவிலில் இரண்டாம் மணி அடித்தது. கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த விக்டர் விழித்துக்கொண்டான்.
'வீட்டுக்குப் போணுமா?' குழப்பமாயிருந்தது விக்டருக்கு.
"எல..பத்தாங்க்ளாஸ் வரைக்கும் படி. பெறவு கடலுக்குப் போ." அம்மா சொன்னது நியாபகம் வந்தது.
"எம்மா எனக்கு படிக்க இஸ்டமில்ல. ஸ்க்கூல்ல வாத்தியார் அடிக்காரு தெரியுமா?"
"நீ பாடம் எழுதாம போனியோ? வாத்தியார்ட்ட நான் சொல்லுதேம்புள்ள ஸ்கூலுக்குப் போல ராசா."
"நான் அண்ணங்கூட வலைக்குப் போறேன்."
"அண்ணன் கேட்டா அடிப்பான்ல. ஒழுங்கா பள்ளியூடத்துக்கு போ."
அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் அண்ணன் பையிலிருந்து 30 ரூபாய் எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று இரண்டு திரைப்படங்கள் பார்த்துவிட்டு பரோட்டா சகிதமாய் ஊருக்கு வரும்போது இரவு 10:30.
பஸ் ஸ்டாப்பில் விக்டரின் அண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
"எல இங்க வா. அம்மாட்ட ஸ்க்கூல் போவ மாட்டென்னியாம்? இங்க வால எல." அண்ணன் அடிப்பான் எனத் தெரிந்ததும் ஓட்டம்பிடித்தான் விக்டர்.
மெத்தைகளை விட மென்மையான மணல் பரப்பை சமன் செய்து படுத்துக்கொண்டான். 'கடலுக்குப் போணும், காசு சேத்து தங்க வாட்ச் முழுக்கை சட்ட எல்லாம் போடணும். நெனச்ச நேரம் நார்கோலுக்குப் போயி படம் பாக்கணும். ஃபாரின் போயிட்டு மச்சி வீடு கட்டணும். அண்ணனையும் ஃபாரினுக்கு கூட்டிட்டுப் போணும்.' பல எண்ணங்களோடு கடல் காற்றின் மெல்லிய வருடலில் தூங்கிப் போனவன் காலையில் கோவில் மணி அடிக்க எழுந்துகொண்டான். இன்னும் முழுதுமாய் விடிந்திருக்கவில்லை. மெல்லிய இருள் சூழ்ந்த விடியல் சமையம் அது.
கடல் அலை நனைத்துச் சென்ற மணல் கொஞ்சம் எடுத்து பல்துலக்கி உப்புத் தண்ணீரிலேயே கழுவினான். பாறை மறைவில் காலைக் கடன் கழித்துவிட்டு கடலில் கழுவிக்கொண்டிருக்கும்போது ஈரமாய் ஒரு கை அவன் பின்பக்கம் தொட்டது. திடுக்கிட்டு எழுந்தான். கால் சட்டையை மாட்டிக்கொண்டு இரண்டு எட்டு ஒடிச் சென்று திரும்பிப் பார்த்தான். கடலினுள்ளே திரும்பிச் சென்ற அலை மட்டுமே தெரிந்தது. பயத்தில் பார்வை உறைந்துபோனது. மீண்டும் அலை கரை திரும்பியது. அப்போது அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது திரும்பிவந்த அலையில் கிடந்த பிணம்.
அலை உடலை மீண்டும் உள்ளிழுத்தது. விக்டர் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அலை கரைக்குத் திரும்பியது. சாப்பாட்டு இலையில் வேண்டாத பதார்த்தத்தை விலக்கி வைக்கும் ஒரு சிறிய செயல்போல, கடல், பிணத்தை விக்டரின் காலடியில் விட்டுச் சென்றது.
அத்தியாயம் 2 - ஜூலை 7 1974
'ஆலையத்தில் நாம் நுழைகையிலே
புது நினவுகள் நுழைகின்றன..'
பாடற்குழுவின் வருகைப்பாடலோடு ஞாயிற்றுக்கிழமையின் முதல் பூசை ஆரம்பித்தது. பாதிரியார் செல்வராஜ் பூசைக்கு உதவி செய்யும் சீசர் பிள்ளைகள் முன் நடக்க பலி பீடம் வந்து வணங்கி பாடலில் சங்கமித்தார். முதல் பூசைக்கு வழக்கமாக வரும் கூட்டம். காலையில் ஆறுமணிக்கே எழுந்து பூசைக்கு வருவதென்பது பலருக்கும் பாவ பரிகாரமாய் பட்டது. சிலரே அந்தப் பரிகாரம் செய்துகொண்டனர்.
"பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயரால்." பாடி ஆரம்பித்தார் செல்வராஜ்.
"ஆஆஆஆ மென்" மக்களும் பாட்டில் பதிலளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பூசை ஃபாதர் செல்வராஜுக்கு பிடிக்கும். திருவிழாக்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலுமே பாடல் பூசை நடத்தப் படுமென்பதால். இசையில் ஆர்வமுள்ளவர். சில பாடல்களை இயற்றி, இசையமைத்து கோவிலில் பாடவும் வைத்திருக்கிறார்.
"இயேசுவில் அன்பானவர்களே, இன்று இறைவன் நம்மை அவரின் சாட்சிகளாக வாழ அழைக்கிறார். இன்றைய சுவிசேஷ வாக்கியங்கள், இயேசுவை உலகுக்கு பறைசாற்ற நம்மை அழைக்கிறது. 'இறை அழைத்தல்' சாமியார்களுக்கும் திருக்கன்னியர்களுக்கும் மடுமல்ல பொதுமக்களுக்கும் உரித்தானது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த இறை அழைத்தலை மறுதலித்து நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோமாக." பூசைக்கான அறிமுகவரிகளை பேசி பாவத்திற்காக மனம் வருந்த மக்களை அழைத்தார். கூட்டம் அமைதியாய், கைகூப்பி தலை தாழ்த்தி நின்றது, சிலர் பாவங்களை நினைத்து மனம் வருந்தியும் சிலர் வழமையாகவும்.
கோவிலின் வெவ்வேறு கதவுகள் வழியாக எப்போதும் சிலர் உள்ளே வந்துகொண்டேயிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடந்திருநாட்கள் என குறிக்கப்பட்ட சில நாட்களிலும் முழுப் பூசையில் பங்கெடுக்கவேண்டும் என்பது திருச்சபையின் சட்டங்களில் ஒன்று. 'பூசையில் சுவிசேஷ வாசகத்துக்கு முன்னால போனா முழுப் பூச பாத்த மாதிரி.' என்கிற நினைப்பு பலவிசுவாசிகளுக்கும் இருந்தது.
பெண்கள் சேலையால் தலையை மூடியிருந்தனர். ஆண்கள் வேட்டி சட்டையிலும் சில வயதானவர்கள் சட்டையில்லாமல் வெறும் தோள் துண்டோடும் அமர்ந்திருந்தனர். முன் வரிசையில் சில சிறுவர்கள் ஏற்கனவே தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். பாடகர் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் சிஸ்டர் ஆரோக்கியம் ஆர்மோனியத்தை, தனக்கு மட்டுமே கேட்கும்படி முனகவைத்து ராகம் பழகிக்கொண்டிருந்தார்.
"சகோதர சகோதரிகளே நம் பாவங்களின் பொருட்டு இறைவனிடமும் நம் சகோதரிடமும் மன்னிப்பை வேண்டுவோமாக. எல்லாம் வல்ல இறைவனிடமும்..." பாவமன்னிப்பு ஜெபத்தை ஆரம்பித்துவைத்தார் செல்வராஜ்.
"சகோதரே உங்களிடமும்," மக்கள் தொடர்ந்தனர்,"நான் பாவி என்பதை ஏர்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமைகள் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என் பெரும்பாவமே!..."நெஞ்சில் மூன்றுமுறை தொட்டுக்கொண்டனர். செபம் தொடர்ந்தது. 'ஆண்டவரே இரக்கமாயிரும்' மற்றும் 'உன்னதங்களிலே இறைவனுக்கு' பாடல்களுக்குப் பின் மக்கள் அமர்ந்திருக்க, முதல் வாசகம் வாசிக்க வந்தார் உபதேசியார்.
"முதல் வாசகம். இசையாஸ் எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். அதிகாரம் 66 வசனங்கள் பத்திலிருந்து பதிநான்கு வரை. எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளோடேகூட மகிழ்ந்து, அவளைக் குறித்து களிகூறுங்கள்; அவள் நிமித்தம் துக்கத்திலிருந்த நீங்கள் எல்லோரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்."
பெண்கள்பகுதியில் இரண்டாம் கதவின் அருகே அமர்ந்திருந்த 'மூக்கி' எனப்படும் தெரசம்மாவிற்கு கீழே அமர்ந்திருப்பது அசௌகரியமாயிருந்தது.
"நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு நிறைவடைந்து, நீங்கள் சூப்பிக் குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்", உபதேசியார் வாசகத்தை தொடர்ந்தார். "கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்:..."
மூக்கிக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்தது.
"இதோ நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், இனங்களின் மகிமையை கரைபுரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் ஓடச்செய்வேன்."
மூக்கி முகத்தை சுளித்துக்கொண்டு முனகலோடு வலியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். எழுந்து நிற்கவும் இயலவில்லை அவளால்.
"பால்குடிக்கும் மகவைப் போல நீங்கள் அவளின் கரங்களில் சுமக்கப்படுவீர்கள்; அவளின் தொடைகளில் தாலாட்டப் படுவீர்கள்"
பெண்கள் பகுதியில் மூக்கி இருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"ஒரு தாய் தன் மகனை தேற்றுவது போல.." உபதேசியார் தொடர்ந்தார்."நான் உன்னை தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்".
"எம்மா..." நிறைமாதக் கர்ப்பிணி மூக்கி அலறினாள். சப்தம் கேட்டதும் ஃபாதர் செல்வராஜ் எழுந்தார் உபதேசியாரை வாசகத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு.
"என்னாச்சு?" என்றார்.
பெண்கள் சிலர் மூக்கியை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
உபதேசியாரின் மனைவி முன்வந்தார்,"நம்ம பரட்டையார் மவளுக்கு ப்ரசவ வலி. இப்ப வெளிய கொண்டுபோகமுடியாது. இங்கயே பாக்கணும். ஆம்பிளைகள வெளிய போச்சொல்லிருங்க."
"ஏன் இவங்க கோயிலுக்கு வந்தாங்க? கூட யாராவது வந்திருக்காங்களா? "
"அவ ஆத்தா இருக்கு."
"பரட்டையார் மகன்னா செபாஸ்டின் தங்கச்சியா?"
"ஆமா ஃபாதர்."
"டேய் நீ போய் செபாஸ்டின் சார்கிட்ட சொல்லிடு." சீசர் பிள்ளை ஒருவனை ஏவினார் ஃபாதர்.அங்கே வியப்பாய் கூடியிருந்த மக்களைப்பார்த்து,"எல்லாம் கொஞ்சம் வெளியப் போங்க ரெண்டாம்பூசைக்கு வாங்க." எனச் அறிவித்தார். சிஸ்டர் ஆரோக்கியத்திடம் போய்,"சிஸ்டர் என்னானு பாருங்க. நான் பின்னால இருக்கேன் அவசரம்னா சொல்லுங்க." எனச் சொல்லிவிட்டு சக்ரீசுக்குள் நுழைந்தார்.
மூக்கி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். கீழே படுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவள் கையை பிடித்திருக்க பிரசவிக்கத் தயாரானாள். உபதேசியாரின் மனைவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியே போகச் சொல்லிவிட்டு கோயிலின் கதவுகளை மூடிக்கொண்டிருந்தாள்.
மூக்கியின் போராட்டம் தொடர்ந்தது. ஆளுக்காள் ஏதேதோ பேசிக்கொண்டும் அவளை முயற்சி செய்யச் சொல்லிக்கொண்டுமிருந்தனர்.
"எக்கி, தல தெரியுது இன்னும் கொஞ்சம் முக்கு." செவிலியாய் செயல்பட்டுக்கொண்டிருந்த பெண் கூறினாள். கவலையும் எதிர்பார்ப்பும் படர்ந்த முகத்துடன் மூக்கியின் ஆத்தா பார்த்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு பொம்மையைக் கையாழுவதுபோல இரத்தமும் இன்னும் திரவங்களும் சொட்டிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கினாள் செவிலிப் பெண். குழந்தையின் அழுகுரல் கோவிலுக்குள் எதிரொலித்தது. சன்னல்களில் கூடுவைத்திருந்த சில சிட்டுக்குருவிகள் குரலெடுத்துப் பாடின.
"மூக்கி, பொட்ட புள்ள பொறந்துருக்குடீ." செவிலி சொன்னாள்.
"சம்மனசு பொறந்திருக்கு தெரசம்மா." சிஸ்டர் ஆரோக்கியம் சொன்னார்.
"கோயிலுக்குள்ள பொறந்தபுள்ள. ஏஞ்சல்னு பேர் வைங்க."
கோவிலின் வெளியே செவத்தியான் என அழைக்கப்பட்ட செபஸ்டியான் வாத்தியார் தங்கையின் குழந்தையைப் பார்க்க ஆவலோடு நின்றுகொண்டிருந்தார். செவத்தியான் மகன் இனியனும் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு குழந்தையைப் பார்க்கும் ஆவலில் நின்றுகொண்டிருந்தான். கோவில் கதவு திறந்தது. செவத்தியானின் அம்மா வெளிவந்தார்.
"ஆத்தா என்னாச்சு?"
"திடீர்னு வலி வந்து படுத்துட்டா. கோயில்லையே கொழந்த பொறந்திடுச்சு." செவத்தியானின் அம்மா சொன்னார். பேரனைப் பார்த்து,"ஏல, இனியா, ஒன் பொண்டாட்டி பொறந்துருக்கால."
இனியன், கண்கள் பிரகாசிக்க வெட்கத்தோடு சிரித்தான்.
அத்தியாயம் 3: கடலும் கடல் சார்ந்த இடமும்
முட்டம் ஒரு சராசரி மீனவக் கிராமம். நாகர்கோவிலிலிருந்து 16 அல்லது 17 கி,மீ தென் மேற்கில் அமைந்துள்ளது. 'சேரியா முட்டம்' எனவும் 'லைட் ஹவுஸ் முட்டம்' எனவும் வழங்கப்படுகிறது. முட்டத்தின் சிறப்பு அதன் நிலப்பரப்பு எனலாம். கடலுக்குள் முட்டி நிற்கும் நிலம். கடலைத் தடுத்து நிற்கும் குன்றின்மேல் ஊர். வீடுகள் குன்றின்மேல் கட்டப் பட்டிருப்பதை அங்கு வாழ்பவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உற்றுநோக்கியே அதை உணர முடிந்தது.
முட்டத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது அதன் கரையில் வீழ்ந்து கிடக்கும் பாறைகள். காலம் செதுக்கிய சிலைகளாக, என்றோ சிலர் பூஜித்துவிட்டு விட்டுப் போன கோவில்கள் போல அவை நின்றுகொண்டிருக்கின்றன.
மேலமுட்டம், நடுமுட்டம், கீழமுட்டம் மற்றும் ஏப்பு முட்டம் என ஊர் பிரிக்கப் பட்டிருந்தது. எழுபதுகளில் மேற்கே இருந்த செம்மண்காட்டை சமன் செய்து 'சிவந்தமண்' என்ற ஊர் உருவாக்கப்பட்டது. இன்று 'ஜேம்ஸ் நகர்' எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கை எழுப்பிய செம்மண் அகழிகள் நிறைந்த இடம் சிவந்தமண்.
சிறிய ஓட்டு வீடுகளுக்கும் மத்தியில் எழுந்து நிற்கும் பழமையான கோவில். கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்டிருக்கும் வெகுசில அழகிய கோவில்களில் ஒன்று. கடவுள்கள் பக்தர்களைக் காட்டிலும் பணக்காரர்கள் என்பதை உணர்த்தும் கோவில். கோவில் தவிர்த்து ஒவ்வொரு தெருவிலும் ஒரு புனிதரின்பெயரில் அமைந்திருக்கும் சில குருசடிகள்.
படகுகளை கரையில் நிறுத்திக்கொள்ளவும், பிடித்துவந்த மீன்களை விற்கவும் உள்ள கடற்கரை தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகமில்லாத கோட்டாமடை எனும் கடற்கரைப் பகுதி மேற்கில் உள்ளது. இங்கே எப்போதாவது வரும் சில சுற்றுலா பயணிகள் தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதில்லை. இரவில் அலைகள் மட்டுமே இங்கே சஞ்சரித்தன.
விக்டர் அங்கேதான் அலைகள் இவன் பொறுப்பில் விட்டுச் சென்ற பிணத்தின் முன் நின்றுகொண்டிருந்தான். ஊருக்குள் கடற்கரையில் உறங்க பலரும் வருவதுண்டு என்பதால் விக்டர் தனித்துறங்க கோட்டாமடையே நல்ல இடமாயிருந்தது.
ஊருக்குள் குளிப்பாட்டி சிலுவை எழுதப்பட்ட கறுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சில வயதானவர்களின் உடல்களைத் தவிர வேறு உயிரற்ற மனித உடல்களை பார்த்திருக்கவில்லை விக்டர். பயத்தில் தன் கால்சட்டை ஈரமாயிருப்பாதை உணர்ந்தான்.
பிணத்தின் நீலச் சட்டை கிழிந்துபோயிருந்தது. இடுப்புக்குக் கீழே சிவப்பு நிற உள்ளாடை மட்டுமே இருந்தது. மண்ணுக்குள் செல்ல விளைந்தோ என்னவோ, கவிழ்ந்தே கிடந்தது. அழுகிப் போயிருக்கவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள். சில பெரிய காயங்களில் வெள்ளையாய் சதை தெரிந்தது. உற்றுக் கவனித்ததில் கால்கள் முறிந்ததுபோல வளைந்திருந்ததைப் பார்த்தான் விக்டர். கையில் தங்க வாட்ச் உள்ளே தண்ணீர் ஏறி பனித்திருந்தது.
கொஞ்சம் சுதாகரித்து பக்கவாட்டில் நடந்து முகம் தெரிகிறதா எனப் பார்த்தான். கவிழ்ந்திருந்த முகத்தை திருப்பிப்போட காதைப் பிடித்து தூக்கினான். விறைத்துப்போயிருந்தது காது. வேண்டாத ஒன்றை நுனிவிரல்களில் பிடித்து தூக்குவதைப் போல தூக்கி முகத்தை திருப்பினான்.
பிணத்தின் முகம் சிதைந்திருந்தது. முன்தலை பாறையில் அடிபட்டு நைந்து அடையாளம் தெரியாமல் கோரமாயிருந்தது முகம். பற்கள் கோரமாய் கிழிந்து தொங்கின. கடல்மணல் ஒட்டியிருந்தும் கோரம் தெளிவாய் தெரிந்தது.
கழுத்தில் சிலுவை டாலருடன் தங்கச் சங்கிலி.
இன்னொருமுறை முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான் விக்டர்.
அத்தியாயம் 4: 1979 ஒரு பள்ளி நாள்.
பள்ளிக்கூட மணி அடித்து குழந்தைகள் கூட்டமாய் வகுப்புகளிலிருந்து வெளியே ஒடினர். பள்ளிக்கு வெளியே பெட்டியில் வறுத்த காணம், தேங்காய் புண்ணாக்கு, புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய், தெங்கா முட்டாய் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் சேர்ந்தது. குச்சி ஐஸ் பால் ஐஸ் விற்பவர் உலோகத்தால் செய்யப்பட்டைருந்த ஒலிஎழுப்பியை இயக்க ஆரம்பித்தார். பள்ளிக்கூட மணியின் தொடர்ச்சியாய் அது ஒலித்தது.
வகுப்பறைக்கு வெளியே இனியன் முழங்காலில் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அந்த நீண்ட திண்ணையின் கடைசித் தூணின் பின்னால் மறைந்து நின்று சிறுமி ஏஞ்சல் இவனை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வகுப்பிலிருந்து செபஸ்டியான் வாத்தியார் வெளியேவந்தார்.
"டேய். எழும்பு. இனிமே இப்படி பண்ணுன. அடி பின்னிருவேன். வீட்டுக்குப்போ. வீட்ல வந்து இருக்கு ஒனக்கு. போ..போ."
தந்தையை இறுகிய முகத்துடன் பார்த்தான். முறைப்பிற்கும் அவன் பார்வைக்கும் சற்றே வித்தியாசம் இருந்தது.
கணக்கு வாத்தியார் வந்தார்.
"என்ன சார், பையன் என்ன செஞ்சாங்?"
"இவனா நம்ம செலின் டீச்சர பட்டப்பேர் சொல்லி கூப்டிருக்கான் சார். அதுவும் பஸ்டாண்ட்ல எல்லார் முன்னாலயும் வச்சு கோழீன்னுட்டு ஓடியிருக்கான்"
"இவனா?"
"ம்."
இனியன் இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தான். கணக்குவாத்தியாரும் செபஸ்டியானும் ஆசிரியர் அறையை நோக்கி நடந்தனர்.
"அவுங்க பேரு கோழியா?"
"மெதுவா சார். பாவம் எங்கிட்ட சொல்லும்போ அழுதுட்டாங்க. அவங்க கொண்ட போடுறதப்பாத்து .."
"ஓகோ. இவனுக்கு செலின் பாடம் எடுக்கமாட்டாங்களே சார்."
"என் தங்கச்சி பொண்ணு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கிறாளே, அவள அடிச்சுட்டாங்கன்னு இந்தக் கோவம்." சிரித்தபடியே சொன்னார் செவத்தியான்.
"ஓகோ. சின்னப்பசங்க. சார் ஒங்ககிட்ட வாங்குன அந்த ஃபைவ் ஹண்ரட் இந்தாங்க. ரெம்ப தேங்க்ஸ்."
"பையனுக்கு அட்மிஷன் கெடச்சுதா சார்?"
"ஆமா சார். அடுத்தவாரம் மெட்ராஸ் போறோம்."
பள்ளிக்கு வெளியே ஏஞ்சலுக்கு ஐஸ் வாங்கித் தந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் இனியன்.
"இனியா, மாமா ஏன் ஒன்ன மொழங்கால்ல நிக்கவச்சாவு?" ஏஞ்சல் கேட்டாள்.
"குச்சி ஐஸ் நல்லா இருக்காடி?" இனியன் பதிலை தவிர்த்தான்.
"நாளைக்கு சேமியா ஐஸ் வாங்கித் தருவியா?"
"சரி." இனியன் தலையாட்டினான்.
ஏஞ்சலின் புத்தகப் பையையும் சேர்த்து தோளில் ஏற்றிக்கொண்டிருந்தான் இனியன் அவன் வலக்கை ஏஞ்சலின் வலக்கையை பற்றியிருந்தது.
"இனியா எங்கம்மா கலர்குச்சி வாங்கி தந்துச்சே?" சிறு துள்ளலோடு சொன்னாள் ஏஞ்சல். இனியனின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்த பென்சில் பெட்டியை திறந்து காண்பித்தாள்.
"கலர் குச்சி."
"எங்கிட்ட சாக்கட்டி இருக்குதே?" பைகளை கீழே இறக்கி வைத்து தன் பென்சில் பெட்டியிலிருந்த வெள்ளை சாக்பீசை எடுத்துக் காட்டினான் இனியன்.
"ஐ. எனக்கு?"
சாக்பீசை உடைத்துப் பகிர்ந்தான். வகுப்புத் தலைவன் என்பதால் சாக்பீஸ் எடுத்துவரும் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவ்வப்போது ஒரு சாக் பீசை பாக்கெட்டில் போட்டுவைப்பது வழக்கம். வாத்தியார் பையன் என்பதில் பல சௌகவுரியங்கள் இருக்கவே செய்தன. சாக் பீஸ் வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
ஏஞ்சல் வீடு வந்தது. பக்கத்து வீட்டில் பொனிப்பாஸ் கிழவர் இவர்கள் கைகோர்த்து வருவதைப் பார்த்து சிரித்தார்.
"ஏல. ஒங்களுக்கு எப்பம் கல்யாணமாச்சு? எப்பப் பாத்தாலும் கையப் புடிச்சுட்டு சேந்தே நடக்கிய? ஒரு சோடியாத்தான் போவுது."
"போம் வோய். போய் வேலையப் பாரும்."
"ஏஞ்சல் புள்ள. இந்தப் பயகூட சேராத. எம் பேரனக் கட்டிக்க என்னா?" எதிர் வீட்டு திண்ணையிலிருந்தவர்கள் தெருக்குழாயில் தண்ணி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க. வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினர் இருவரும். ஏஞ்சலின் அம்மா, மூக்கி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.
"மக்கா, இனியன் வந்துருக்கானா?"
"ஓமும்."
"அவன நிக்கச்சொல்லு. சேர்ல பணியாரம் இருக்கு ரெண்டுபேரும் தின்னுங்க." வேலையிம் கையுமாயிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தாள் மூக்கி.
"சரி."
மூக்கியின் மாமியார் தன்ணி குடத்தோடு உள்ளே வந்தார்.
"ஏ கேட்டியா? இவங்க ரெண்டுபேரும் சேந்து வந்தா தெருவே சிரிக்கு. பொனிப்பாசு இவங்களுக்கு கல்யாணமாயாச்சான்னு கேக்காரு. பைப்ல இருந்தவ எல்லாம் சிரிச்சு.." சிரித்துக்கொண்டே சொன்னார்.
"எல அப்டியா?" கொஞ்சம் பெருமையோடே கேட்டாள் மூக்கி.
இனியன், ஏஞ்சல் இருவர் முகத்தில் வெட்கம்.
"மக்கா. எவ்வளவு பெருசானாலும் இந்த பாவப்பட்ட மாமிய மறந்துராத என்னல?" பாசம் பொங்க கேட்டாள் மூக்கி. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் இனியன்.
அலமாறியின் உள்ளிருந்து செய்தித் தாள் துண்டில் பொதியப் பட்டிருந்த சிறு பொதியலை எடுத்து இனியனின் பையில் வைத்தாள் மூக்கி.
"மக்கா, இதுல பைசா இருக்கு அம்மாட்ட குடு என்ன? அப்பாட்ட சொல்லாத, என்ன மக்கா?."
"சரி அப்பா வர நேரமாவும் அதுக்குள்ளால கொடுக்கேன். வரட்டா?" கதவுவரைப் போனவன் திரும்பி,"மாமி ஏஞ்சலக் வெளையாட கூட்டிட்டு போட்டா?" என அத்தையைக் கேட்டான்.
"போறியாடீ?"
ஏஞ்சல் தலையாட்டினாள்.
"போயி அரங்கூட்ல துணிமாத்திட்டு போ. மக்கா நீயே கொண்டுவந்து வுடு என்னா?"
"சரி" சம்மதித்தான் இனியன்.
"எடி நாக்குல நீலமாயிருக்கு. ஐஸ் வாங்கித் தின்னியோ."
"இனியந்தா வாங்கித்தந்தாங்...."
இனியனினும் ஏஞ்சலும் மீண்டும் கைகோர்த்துக் கொண்டே இனியனின் வீடு நோக்கி நடந்தனர்.
அத்தியாயம் 5: சேதி
விக்டர் வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. விக்டரின் அம்மா ஊரெல்லாம் விக்டரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவன் அண்ணன் கடலுக்குப் போயிருந்தான். அரங்கு வீட்டில் நுழைந்தான். கடற்கரையில் கண்ட பிணத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாதவனாய், பயம் மேற்கொள்ள அரங்கிலிருந்த கட்டிலின் கீழ் படுத்துக் கொண்டான்.
ஊரின் வடக்கு எல்லையிலிருந்து ஊருக்குள் ஒரு நீல நிற அம்பாசடர் கார் நுழைந்தது. உள்ளே புதிதாய் மணமான தம்பதியர் இருவரும் கல்யாண வீடியோ எடுப்பவரும் அவரின் உதவியாளரும் ஒரு சின்னப் பெண்ணும் இருந்தனர். திருமண வீடியோக்களில் முட்டத்தில் கடல் மணல் பாறைகள் பின்னணியில் தம்பதிகள் நிற்பதுபோன்ற காட்சிகளை சேர்த்துக்கொள்வது வழக்கமாயிருந்தது.
காரை கடற்கரைக்கு அருகில் நிறுத்திவிட்டு ட்ரைவர் சிகரட் பத்தவைத்துக்கொண்டார். புதுமணத் தம்பதிகள் பாறைகளின் மேல் நின்று காமெராவுக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். "சார் கையப் புடிங்க. மேடம் கொஞ்சம் நெருங்கி நில்லுங்க." எனும் கட்டளைகளுக்கு தம்பதிகள் கட்டுப்பட்டனர்.
காரின் ட்ரைவர் பாலு காரின் டேப் ரெக்கார்டரில் சிக்கிக்கொண்ட ஒலிநாடாவை வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். "சார், ஸ்டாண்ட்ல எல்லா கார்லயும் சி.டி இருக்கு. நம்மளும் போட்ரலாம். லாங்ல போம்போது மக்கள் ஆசப் படுதாங்கல்லா?" பலமுறை முதலாளியிடம் சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காததால் ஒலிநாடா சிக்கும்போதெல்லாம் அவருக்கு வசவு கிட்டிக்கொண்டிருந்தது.
பாலு டிரைவர் ஆனது பெரிய கதை. சுருங்கச் சொன்னால். வீட்டில் கஷ்டப் பட்டு படிக்கவைத்தார்கள். பாளையங்கோட்டையில் கல்லூரி போகும்வரை நல்லபிள்ளையாகத்தான் இருந்தான். ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் வெளியே தங்கியிருந்தான். ஒரேவருடத்தில் அத்தனை 'நல்ல' பழக்கங்களையும் கற்றுக்கொண்டான். படிப்பு பாழானது. வீட்டில் அவனை நல்லவன் என நம்பிக்கொண்டிருதனர். மூன்றுவருடம் முடிந்ததும் வீட்டில் பி.காம் படிப்புக்கேத்த(?) வேலை தேட ஆரம்பித்தனர். பாலுவின் அப்பா பக்கத்துவீட்டு வாத்தியாரிடம் சொல்லியிருந்தார்.
"நம்ம பைக் டீலர் இருக்கான்லா அவன் கேசியர் வேணும்னான் போறியாடே. ஆயிறத்து ஐநூறு தருவான். பெறவு அப்பப்ப ஏதாது கெடைக்கும்." வாத்தியார் கேட்டார்.
'படிப்புக்கேத்த வேலை இல்லை' என மகன் மறுப்பான் என நினைத்தார் பாலுவின் அப்பா. எதிர்பார்த்ததற்கு மாறாய் ஒத்துக்கொண்டான். மூன்றுமாதத்திற்குப் பிறகு ரிசப்சனிஸ்ட் ப்ரியாவுடன் பழக ஆரம்பித்தான். காதல் முத்திப்போனது. ப்ரியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பாலுவின் அப்பா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு பாத்துக்கலாமென்றார். ப்ரியாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டைக்கு ஓடிப் போய் நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்துகொண்டனர். கல்லூரி நாட்களிலேயே இதுபற்றிய ஒப்பந்தம் ஒன்றை விளையாட்டாகச் செய்திருந்தனர். "எல, யாராவது பொண்ணக் கூட்டிட்டு ஓடி வந்தா அடுத்தவங்க பாத்துக்கணும் என்னா?" இதுதான் அந்த ஒப்பந்தம்.
பாளையங்கோட்டைக்கும் நாகர்கோவிலிக்கும் அதிக தூரமில்லையே. ப்ரியாவின் மாமா இவர்களை கண்டுபித்தார். வீட்டிற்கு கூட்டிவந்து பேச்சு நடந்தது. இரண்டுபேர் வீட்டிலும் சமாதானம் செய்துவைக்கப் பட்டது. ஓடிப் போனதில் பைக் டீலரிடம் வேலையும் போயிருந்தது. ப்ரியாவின் அப்பா 'வேலை வாங்கித் தருகிறேன் டிக்ரி சர்ட்டிபிக்கேட்டத் தாங்க' எனக் கேட்டார். பூகம்பம் வெடித்தது. பாலு டிக்ரி முடிக்கவே இல்லை. தீவிர விசாரிப்பில் அவன் மூன்றாமாண்டு கல்லூரிக்கே போகவில்லை எனவும் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்ததாகவும் தெரிய வந்தது. பாலுவின் அம்மா மண்ணை வாரித் தூற்றினார். ப்ரியாவின் அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அவள் மாமா இவைனை ஆள்வைத்து அடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்,"பச்ச புள்ளைய ஏமாத்திட்டியேல." என சீறினார். பாலுவின் அப்பா,"என் மொகத்துல முழிக்காதல"எனச் சொல்லிவிட்டுப் போனார். ப்ரியா ரெம்ப ஏமாந்தவளாய் அழுதுகொண்டேயிருந்தானள். பாலு மட்டும் தவறே செய்யாதவனைப் போல மாப்பிள்ளை மிடுக்கில் சுற்றிக்கொண்டிருந்தான். "என்ன செய்ய சொல்லுதிய? நான் மட்டும் சினிமால பெரியாளா ஆயிருந்தா இப்டி சொல்லுவேளா?" ஏதோ மற்றவர்கள் மேல்தான் தவறு என்பதுபோல நடந்துகொண்டான்.
நிலமை சமனாக நாள் பிடித்தது. ட்ரைவிங் தெரிந்திருந்ததால் ஸ்டாண்டில் தன் பள்ளித் தோழனிடம் சொல்லி ட்ரைவரானான். ப்ரியாவைக் கூட்டிவந்து தனிக்குடித்தனம் வைத்தான். இதுதான் பாலு டிரைவர் ஆன கதை. இன்னும் எப்போதும் ஏதாவது சென்னைக் கதைகளை சக ட்ரைவர்களோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வான்
காரின் வெளியே வந்து இன்னுமொரு சிகரட் பத்தவைத்தான். அப்போதுதான் அதைப் பார்த்தான். கடற்கரையில் கிடந்த பிணம். ஆர்வம் தூண்ட அருகில் சென்றான். காரில் வந்தவர்களைத் தேடினான். தூரத்தில் ஒரு பாறைமேல் புதுப்பெண் பரதநாட்டிய அபிநயம்பிடிக்க அருகில் பத்மினியுடன் சிவாஜிபோல மாப்பிள்ளை நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
மேட்டிலேறி ஊரை நோக்கி நடந்தான். . போஸ்ட் ஆபீஸ் பக்கம் 'லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்' இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருக்கும் சிலரும், வெட்டியாய் பேசிக்கொண்டு சிலரும் இருந்தனர்.
"அங்க கடக்கரையில பொணம் ஒதுங்கி கெடக்கு." கூட்டமாய் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சொன்னான்.
"ஆம்பிள்ள பொணம். சின்ன வயசுதான். பாத்தா தெக்க உள்ள ஆள்மாறிதான் தெரியுது."
பெரியவர்கள் எழுந்தனர்.
"எங்கைய்யா? கோட்டாமடையிலையா?"
"ஆமா."
"நீ எப்ப பாத்த?"
"இப்பத்தான். பார்டி ஒண்ண கூட்டிட்டு வந்தேன். நார்கோவில் வேப்பமூடு ஸ்டாண்ட்ல கார் ட்ரைவர்."
கோட்டாமடை நோக்கி சின்னக் கூட்டம் நகர்ந்தது. போஸ்ட்மேன் செல்வம் போஸ்ட் ஆஃபீசில் செய்தியை பரப்பினான்.
---
பிணத்தைச் சுற்றி சற்றே பெரிய கூட்டமொன்று கூட ஆரம்பித்தது. சிறுவர்களை சிலர் விரட்டிக்கொண்டிருந்தனர்.
"நம்மூரு ஆளில்ல." பெரிய்யவர் ஒருவர் சொன்னார்.
"ஒமக்கு எப்டித் தெரியும். மூஞ்சியே தெரிலியே?" இளைஞர் மறுத்தார்.
"எல நம்ம ஊர்ல இந்தமாரி சட்டையும் ஜட்டியும் எவன்ல போடுதான்?" பெரியவர் அறிவுபூர்வமாக பதிலளித்துவிட்டோம் என்பதைவிட இளஞனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதத்தில் சொன்னார்.
"இப்ப எல்லாரும் போடுதாவு. வேணும்னா பாக்கீரா?" இளைஞன் லுங்கியை பாதி உயர்த்தியபடி பதிலளித்தான்.
"ஒங்க ஆத்தாட்ட போய் காட்டுல தேவ்டியாமோன." பெரியவர் கோபத்தில் சொல்ல. இளைஞனும் அவன் நண்பர்களும் கேலியாய் சிரித்தனர்.
"இது இங்கன கெடந்தா சரியாவாது." இன்னொரு பெரியவர் ஆலோசனை சொன்னார்,"தொளவைய எடுத்து கடலுக்குள்ள தள்ளிவுட்லாம். என்னா?"
"ஆமாடே நல்ல யோசனதான். போயி பழய தொளவ ஒண்ண கொண்டாங்க."
"தொளவ எதுக்கு? அப்டியே காலப் புடுச்சி இழுத்துப் போட்ருவோம்." இளஞர் ஒருவர் முன்வந்தார்.
"எல கொலக் கேசா இருக்கப்போவுது. போலீஸ் மோப்ப நாய் வந்தா ஒங்க வீட்டுக்குத்தான் வரும் பெறவு போய் களி திங்கணுமால?"
"இவனுவளுக்குத்தான் எல்லாந் தெரியுண்ணு வந்துட்டானுவ. போங்கல அங்க. பெரியாளு சொன்னா கேக்கணும்." முதலில் கடுப்பேத்தப்பட்ட பெரியவர் பழிதீர்த்துக்கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் தொளவை எனப்பட்ட கடலில் கட்டுமரங்களை தொடுக்க பயன்படுத்தப்படும் துடுப்பு எடுத்துவரப் பட்டது. ஐந்து முதல் ஆறடியில் இரண்டாய் பிளக்கப்பட்டிருந்த மூங்கிலின் தடித்த அடிப்பாகத்தில் ஒரு பாகம் இந்தத் துடுப்பு.
பிணத்தின் அடியில் துளவை சொருகப்பட்டது. இரண்டு நடுவயது ஆண்கள் ஒரு புரட்டு புரட்டிப் போட்டனர்.
பாலு காரில் வந்த புதுமணப்பெண் காருக்கருகில் நின்றுகொண்டே பிணத்தருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கணவனை அழைத்துக்கொண்டிருந்தாள். "ஏய் இங்க வாங்க. வாங்க போலாம்." .
ட்ரைவர் பாலு, "வாங்க சார். இது சரியாப் படல. அங்க மேடம் கூப்ட்றாவல்லா? போவோம். இவனுக போலீஸுக்கெல்லாம் போறமாறி தெரியல." எனச்சொல்லி புது மாப்பிள்ளையை கிளப்பினான்.
"அவ்ளவுதாம்புள்ள. இன்னும் ரெண்டு பொரட்டு போடுங்க அந்தால போட்டும்." பெரியவர் சொல்ல துளவை பிணத்துக்கடியில் சொருகப்பட்டது.
"என்னங்க இவைங்க போலிசுக்குப் போறதில்லியா?" புது மாப்பிள்ளை பரிதாபமாகக் கேட்டார்.
"சார் இது மதுர சிட்டியில்ல. முட்டம் கடற்கர. இங்க கடற்கரையில ஒரு போலீஸ் ஸ்டேசன்கூடக் கெடையாது தெரியுமா? மணவாளக்குறிச்சி போணும். இங்கேர்ந்து நாலு கிலோமீட்டர். சிட்டியிலயே தெருவுல நடக்கத கண்டுக்கமாட்டென்றானுவ."
மதுரக்கார மாப்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் பாலு.
பாலுவின் கார் சற்று வேகமாகவே முட்டத்தை விட்டுக் கிளம்பியது.
Thursday, December 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
8 comments:
ம்... நாவல் நல்லாப் போகுது அலெக்ஸ்
மூன்றாவது அத்தியாயத்தின் துவக்கம் (முட்டம் பற்றிய விவரணை) மட்டும் நாவலுக்குரிய விவரணைக்குள் வரவில்லை. அது இன்னும் கட்டுரை நடையில் இருக்கிறது. அதை மட்டும் சிறிது மாற்றிக் கொள்ளுங்கள்.
மற்றபடி அருமையாக வந்திருக்கிறது.
//சாப்பாட்டு இலையில் வேண்டாத பதார்த்தத்தை விலக்கி வைக்கும் ஒரு சிறிய செயல்போல, கடல், பிணத்தை விக்டரின் காலடியில் விட்டுச் சென்றது.//
நல்ல உவமை
முழுதும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
சிந்தாநதி அருமையான பாயிண்ட் சொன்னீங்க.
பாராட்டுக்கு நன்றி. இன்னும் நிறைய வேல இருக்கு. :)
இன்பா... வாங்க வாங்க.. முழுசா படிச்சிட்டு வாங்க.
சிறில் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள். உங்களுக்கு உதவும் என்று இங்கு. இது பல பெரிய ஆட்களும் பின்பற்றுவதுதான்.
முழு நாவல் எழுதி முடித்ததும் ஒரு ஆளைப்பிடியுங்கள். ஆஹா, சூப்பர் என்று படித்து/ படிக்காமல் நற்சான்றிதழ் வழங்குபவர்களை
அல்ல :-) படித்துவிட்டு தோய்த்து, அலசி, அடிச்சி, காயப்போடுகிற ஆசாமியா இருக்கணும். நமக்கு அத்தகைய நட்பு வட்டங்கள்
உண்டு. அவங்கக்கிட்ட அனுப்புங்க. சின்ன சின்ன தவறுகள், தப்புகளில் இருந்து பெரிய குளறுபடிகளில் இருந்து பெயர் மாறாட்டம் வரை கண்டுப்பிடித்துத் தருவார்கள். என்னுடைய நாவல் பரிசு பெற்றதற்க்கு அப்படி ஒருத்தருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் அதே சமயம் சாருநிவேதிதா மேட்டரும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் :-)
உஷா,
உங்க அறிவுரைக்கு ரெம்ப நன்றி. நிச்சயம் பின்பற்றுவேன். அப்படி சில நண்பர்களை பிடித்து வைத்திருக்கேன்..
உங்களையும் லிஸ்ட்டில் சேத்துக்கலாமா?
சிறீல், விடுமுறை சமயம் என்பதால் விருந்தினர் வருகை, உடனே பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். நாவல் முழுவதும் எழுதி முடித்ததும் அனுப்பி வைக்கவும். இப்பொழுது இங்கு நீங்கள் போட்ட அரை குறை கதையைப் படிக்கவில்லை.
விமர்சனமும், சொற்குற்றமும், பொருட்குற்றமும், காராசாரா விமர்சனமும் எழுதி அனுப்புகிறேன். ஆனால் இலக்கண பிழைக்கு வேறு ஆளைப் பார்க்கவும் :-))))))
உஷா..
ரெம்ப நன்றி. நாவல் முடிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். முடித்ததும் அனுப்புகிறேன்.
:)
Post a Comment