.

Wednesday, February 01, 2006

ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு

நேற்று இரவு (31/01/06) ஜார்ஜ் புஷின் இந்த ஆண்டுக்கான State of the Union உரை பார்க்க நேர்ந்தது. இதைப் பற்றி யாராவது பதிப்பார்கள் எனப் பார்த்தேன். இன்னுமில்லையாகையால் தமிழில் இவர் பேசியதன் சாரம் பதிக்கிறேன்.

State of the Union ஒவ்வொரு வருடமும், நாட்டின் நிலைப்பாடுகள், கொள்கைகள், மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கும் உரை. நேற்றைய உரையின் சாரம் கீழே.


நேற்று இயற்கை எய்திய மார்டின் லூதர் கிங்கின் மனைவி கொரெற்றா ஸ்காட் கிங்கிற்கு அஞலியுடன் உரை துவங்கியது

* உலகநாடுகளை அரசியலிலும் பொருளாதாரத்திலும் வழிநடத்துவதே அமெரிக்கா தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தியாகும்

* சர்வாதிகாரிகள் தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தயும் ஆதரிக்கிறார்கள், மக்களாட்சி உலகெங்கும் மலருவதே அமெரிக்காவிற்கு பாதுகாப்பு

* அடிப்படைவாத இஸ்லாம் (radical Islam) சுதந்திரத்தை எதிர்க்கும் ஒரு முக்கிய மூலமாக உள்ளது, இந்த உன்னத நம்பிக்கை மரபை (இஸ்லாம்) ஒருசிலர் தீவிரவாத, கொலைபாதக கோட்பாடாக மாற்றிவருகின்றனர்.
(No one can deny the success of freedom, but some men rage and fight against it. And one of the main sources of reaction and opposition is radical Islam -- the perversion by a few of a noble faith into an ideology of terror and death. )

*தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி உலகநாடுகளைத் தாக்க அதைத் புகலிடமாக ஆக்கப் பார்க்கிறார்கள்... அவர்கள் தவறாகக் கணக்கிடுகிரார்கள்; நாம் நம் சுதந்த்திரத்தை நேசிக்கிறோம் அதை தக்கவைத்துக்கொள்ள போரிடுவொம்....பின்வாங்குவதில் அமைதி இல்லை மேன்மையில்லை.

* தீவிரவாதிகள் பயமுறுத்தலை ஆயுதமாகக் கொண்டுள்ளார்கள்....நம் படைவீரர்கள் தியாகங்கள் பல செய்கின்றனர் அவர்களின் கடமை உணர்வு எல்லா பயங்களையும் விட மேலோங்குகிறது

* தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஒரே வழி அரசியல் சுதந்திரம் அளிப்பதுதான்...அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் மலர ஆசைப்படுகிறது.

* பாலஸ்தீன மக்கள் தேர்தலில் வாக்களித்துள்லார்கள், ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரயேலை அங்கீகரித்து ஆயுதங்களை களைந்து, தீவிரத வாதத்தை கைவிட்டு அமைதிக்காக பாடுபடவேண்டும்

* ஈரானில் இப்போது ஒரு சிறிய மதகுருக்களின் குழு மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்குகிறது. பலஸ்தீன் மற்றும் லெபனானில் தீவிரவாதத்தை வளர்க்கின்றது. ஈரான் தனது அணுசக்தி ஆசைகளால் பிற நாடுகளை சோதிக்கிறது... இன்று ஈரான் மக்களிடம் நேரடியாக சொல்லிக்கொள்கிறேன், அமெரிக்க உங்களுக்கு மதிப்பளிக்கிறது உங்கள் சுதந்திரத்தை விரும்புகிறது. ஒருநாள் அமெரிக்கா ஜனநாயக ஈரானின் சிறந்த நண்பனாக மாறும்.

* அமெரிக்க பொருளாதாரம் தலைசிறந்து நிற்கிறது, ஆனால் நாம் இது போதுமென்று இருந்துவிட இயலாது. மாற்றங்கள் நிறைந்த உலக பொருளாதாரத்தில் நாம் சைனா, இந்தியா போன்ற புதிய போட்டிகளை சந்திக்கிறோம்.

இதன் பிறகு பேச்சு அமெரிக்க உள்நாட்டு விவகாரம் பற்றி இருக்கிறது.

* அமெரிக்கா (எரிபொருள்) எண்ணைக்கு அடிமையாகியுள்ளது...புதிய (எரிபொருள்) தொழில்நுட்பங்கள் 2025க்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த்து எண்ணை இறக்குமதியை 75% குறைக்கும்.

* மனித உயிர் கடவுளின் பரிசு...இத்தப் பரிசு ஒருபோதும் தூக்கிஎறியப்படவோ, குறைத்து மதிப்பிடப்படவோ, விலைக்கு விற்கப்படவோ கூடாது.

பேச்சின் முதல் பாதி முழுக்க இவரின் வழக்கமான 'சுதந்திரம்' பற்றிய பேச்சும், அமெரிக்கா உலக போலிஸாக திகழ்வது எப்படி என்பதுபற்றியுமே இருந்தது.

எந்தெந்த அரசு என்னென்ன செய்யலாம் என இவரே சொல்லிவிடுவார். அப்படித்தான் பாலஸ்தீனத்தையும், ஈரானையும் மிரட்டுகிறார். உலகெல்லாம் ஜனநாயகத்தை எற்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமென்கிறார். ஜனநாயகமென்றால் அவரவர் நாட்டுமக்களுக்கான ஆட்சி, ஆனால் அமெரிக்க சொல்படி கேட்கிற ஆட்சி என்று புஷ் நினைக்கிறார்.

உள்நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கு பதில் சொல்லவேயில்லை. கத்ரினாவுக்கு 85பில்லியன் நிவாரணம் கொடுத்ததகச் சொன்னவர் அரசின் நிவாரணப்பணி தோல்விக்கு மன்னிப்புக் கோரவில்லை.

தீவிரவாதிகள் பயத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகக் கூறும் இவர்தான் அடிக்கடி மஞ்சள் சிவப்பு பச்சை என மக்களுக்கு கலர்புல்லா பயம் காட்டிவருகிறார்.

ஒரு இரயில் கவிழ்ந்தால் நம்மூரில் மந்திரி ராஜினாமா செய்கிறார், ஆனால் உலக வர்த்தக மையத் தகற்பின்போது ஜனாதிபதியாக இருந்த இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னடா சனநாயகமிது.

'சின்னச் சின்ன சுதந்திரங்களுக்குப்பதில் வறுமையே இல்லாத வாழ்க்கை கிடடக்குமானால் அந்த்தச் சுதந்திரங்களை தியகம் செய்வது தவறா?' என சுஜாதா ஒர் வளைகுடா நாட்டைப்பற்றி எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது (க. பெ./ஆ. வி).

இந்தியாவை பொருளாதார போட்டியாக அங்கீகரித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது, மற்றபடி எல்லாம் வழக்கமான அமெரிக்க புராணம்தான்.

பி. கு: இந்தப்பதிவுக்கான புகைப்படம் என் முந்திய பதிவிலுள்ளது.

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

சந்திப்பு has left a new comment on your post "ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு":

அலெக்°

மிக முக்கியமான பதிவு. உலக மக்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிற அமெரிக்காவின் ஆசைகளும், யுத்த தந்திரங்களும், பேராசைகளும் என்ன என்பதை மறைமுகமாகவாவது வெளிப்படுத்தும் பதிவு. அந்த அடிப்படையில்தான் இன்று அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது சீனாவும், இந்தியாவும். இதனால்தான் அவர்கள் தொடர்ந்து நம்மை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்.

உங்களின் பதிவு மூலம் இப்படியொரு விஷயத்தை நான் அறிந்து கொண்டதற்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

சந்திப்பு ... பாராட்டிற்கு நன்றி. உங்கள் பின்ன்னூட்டங்கள் மின்னஞ்சலிலிருந்து வெட்டி ஒட்டியுள்ளேன்.

நண்பன் said...

அமெரிக்காவின் பல நிலைபாடுகள் வளரும் நாடுகளின் சுதந்திரத்திற்கு எதிரானது.

முதலில் அமெரிக்கா, தன் நாட்டு மக்களை நியாயமாக நடத்தட்டும் - அவர்களின் படுக்கை அறை வரைக்கும் நுழைந்து வேவு பார்க்காமல்.

நல்ல பதிவு - சிறில் தொடருங்கள் - உங்கள் பணியை இதே வழியில்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நண்பன்.

சிறில் அலெக்ஸ்