வலைப்பதிவுகள் பக்கம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. யாரும் நம்மள மிஸ் பண்ணமாதிரி தெரியல. :)
வேலைப் பழு அதிகமாகிவிட்டதாலும், வீட்டில் புதிதாய் சன் டி.வி இணைப்பு வந்துள்ளதாலும் அலுவலகத்தில் தமிழ்மணத் திரட்டியை ப்ராக்ஸி தடுத்துவிட்டதாலும் ஒரு சிறிய இடைவெளி.
பகுத்தறிவாளன் எனும் நம்ம ஊர்க்காரர் ஒருவர் (இவுங்க நம்ம ஊர்லையும் இருக்காங்களா?) பைபிளிலிருந்து சிலக் கேள்விகளை முன்வைத்துள்ளார். அவருக்குப் பின்னூட்டம் இடும்போது பதிவாகவே போட்டுவிடலாம் என நினத்தேன். இதோ அந்தப் பதிவு.
பகுத்தறிவாளன். உங்கள் வாதங்களை படித்தேன். அவனே இவனே எனத் திட்டாமல் உங்கள் வாதங்களை நேர்மையாய் எடுத்துவைக்கிறீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்.
நீங்க கடவுள் மறுப்பளர் என்பதில் சந்தோஷம். கடவுள் மறுப்பும் ஒருவகை நம்பிக்கைதான். கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை. அது ஒரு நிலைப்பாடு. அதேபோல கடவுளை நம்புகிறவர்கள் கடவுள் இருக்கிறார் எனும் நிலைப்பாட்டில், நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும். அடிப்படையில் நீங்கள் மறுப்புடன் படிக்கிறீர்கள். உங்கள் பார்வை குறைகண்டுபிடிப்பதற்கானது. எந்தவித விளக்கமும் உங்களை சமாதானப்படுத்தப் போவதில்லை எனும் நிலைப்பாடுடனேயே உங்களுக்கு விளக்கம் அளிக்கமுடியும்.
அதேசமயம் ஒரு நம்பிக்கையாளனால் எந்த ஒரு முட்டாள்தனமான வாசகத்துக்கும், கருத்துக்கும் மிகச் சிறந்ததாக(அவன் கருதும்) ஒரு விளக்கம் அளிக்கமுடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்தான் மதம் பற்றிய எந்த விவாதமும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. அதனால் விவாதங்களே கூடாதென்றில்லை.
முதலில் உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. நீங்கள் கேட்டிருக்கும் எந்தக் கேள்வியும் புதிதாய் கேட்கப்பட்டவை அல்ல. கிறீத்துவத்தின் வரலாறு அத்தனைவிதமான எதிர்ப்புகளையும் கடந்து வந்திருக்கிறது, மற்ற எல்லா உலகளாவிய மதங்களையும்போலவே. உங்களின் பழையக் கேள்விகளுக்கு பழைய பதில்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில சிந்தனைகளை முன்வைக்கிறேன்.
இனி உங்கள் கேள்விகளுக்கான பதில்..
கிறித்துவர்கள் ஏன் விருத்தச் சேதனம் (circumcision) செய்துகொள்வதில்லை?
பழைய ஏற்பாட்டில் கடவுள் மக்களோடு பல உடன்படிக்கைகள் செய்துள்ளார் அதற்காக பல அடையாளங்களையும் நிறுவியிருக்கிறார்(என பைபிள் சொல்கிறது என்று படிக்கவும்). நோவாவோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாய் வானவில் நிறுவப்பட்டது. ஆபிரகாமையும் அதன் சந்ததியையும் விருத்தச் சேதனம் செய்யச் சொல்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு வந்து ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அது பழைய உடன்படிக்கைகளுக்கேல்லாம் மேலானதாயிருக்கிறது. எனவே பழைய முறைகள் விடப்பட்டிருக்கின்றன.
முதல் கிறித்துவக் குழுமங்களை வழிகாட்டிய புனித பால் (சின்னப்பர்), பீட்டர் விருத்த சேதனத்தை ஒரு கட்டத்தில் மறுத்துள்ளார்கள். அதற்கான காரணங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. நீங்கள் பைபிளை முழுவதாகப் படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் அதை படித்து தெரிந்து கொள்ளும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
கிறீத்துவம் யூதர்களைவிட யூதரல்லாதவரிடம் எளிதில் விலைபோனது. பல பெரியவர்கள் (குழந்தைகளல்லாதவர்கள்) கிறீத்துவர்களானார்கள். அவர்களுக்கு விருத்த சேதனம் செய்வது கடினமாக இருந்தது போன்ற சில நடைமுரை பிரச்சனைகளை சரிசெய்யவும் இது விலக்கப்பட்டிருக்கலாம்.
ஏற்கனவே ஒருவர் அளித்திருக்கும் பதில் இங்கே.
இதுபோன்ற கேள்விகளை ASK.COM போன்ற தளங்களில் கேட்டால் இன்னும் விரிவாக முழுமையான பதில்கள் கிடைக்கும். இல்லை வலைப்பதிவில்தான் போட்டு கேட்பேன் என அடம் பிடித்தீர்களென்றால் தொடருங்கள். முடிந்தவரைக்கும் பதில் சொல்லலாம்.
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் என்ன சங்கடம் என்றால் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லவில்லையென்றால் அந்தக் கேள்வியில் இருப்பது ஒரு மாபெரும் உண்மையாகப் பார்க்கப்படும். 'ஆகா மடக்கிட்டான் பாருயா'ன்னு சிலர் சொல்லலாம்.
கேள்விகேட்க்க இத்தனை சிரமப்படுகிற நீங்கள் இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எதிரான கேள்விகள் கிடைக்கும் (எளிதாய் பதியலாம்). இன்னும் கொஞ்சம் தேடினால் அதற்கான விடைகளும் கிடைக்கும்(கேள்விகளை பதிக்காமல் போகலாம்).
கேள்விகளை கேட்குமுன் சில கருத்துக்களை மனதில் கொள்ளவும் அல்லது மற்ற கேள்விகளுக்கான குறுகிய பதில்.
கிறுத்துவம் இயேசுவை கடவுளாகப் பார்க்கிறது தூதராக அல்ல. அவர் இறைதூதரோ, பூசாரியோ அல்ல. மெல்கிசதேக் ஒரு பூசாரி(high priest). மிகப்பெரியவர். நீங்க சொன்ன எபிரேயர் அதிகாரத்தை தொடர்ந்து படித்தால் புனித சின்னப்பர் மெல்கிசதேக்குக்கும் கிறீத்துவுக்கும் என்ன வேறுபாடு என்பதை நேரடியாக (உங்கள் கேள்விக்கான பதிலாகவே) எழுதியிருக்கிறார். தொடர்ந்து படியுங்கள்.
'தமத்திருத்துவம்' (The Holy Trinity) கிறீத்துவ கருத்தாக்கங்களில் ஒன்று அதாவது கடவுள் ஒருவரே ஆனால் மூவர். இது எப்டி இருக்கு?
ஒரே கடவுள் பிதா சுதன் தூய ஆவி எனும் மூன்று நிலைகளில் செயல்படும் ஒரே கடவுளை கிறீத்துவர்கள் நம்புகிறார்கள். எனவே சுதனாகிய இயேசு தந்தையாகிய கடவுளை குறிக்கும்போது தன்னையே குறிக்கிறார். தமத்திரித்துவம் என்பது ஒரு பெரிய கருத்தாக்கம். பக்கம் பக்கமாய் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள். (என்பதால் மட்டுமே அதுதான் உண்மை எனச் சொல்லவில்லை) .
மேலோட்டமாக வெறும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு ஆயிரம் கேள்வி கேட்கலாம்.
முன்பு சொன்னபடி, கண்ணதாசனின் வார்த்தையில், "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா".
Thursday, November 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
10 comments:
வாங்க சிறில் வாங்க. உங்களை மீண்டும் வலைப்பூவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். :-)
சிறில்....ஒரு கருத்தைத் தாக்க வேண்டுமென்றால்....ஐயப்பாடு என்ற பெயரில் கிறுக்குத்தனமாக நடக்கும் பல விவாதங்களை விட...நேர்மையாக நடக்கும் நாகரீகமான இது போன்ற பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன.
// பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும்.//
மிகச் சரியான கருத்து.
// உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் என்ன சங்கடம் என்றால் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லவில்லையென்றால் அந்தக் கேள்வியில் இருப்பது ஒரு மாபெரும் உண்மையாகப் பார்க்கப்படும். 'ஆகா மடக்கிட்டான் பாருயா'ன்னு சிலர் சொல்லலாம். //
:-)) உண்மை உண்மை. நிறைய அப்படிப்பட்ட பதிவுகளை எடுத்துக்காட்டலாம்.
// முன்பு சொன்னபடி, கண்ணதாசனின் வார்த்தையில், "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா". //
உண்மை. என்னது இது...எதுக்கெடுத்தாலும் உண்மை சொல்ல வெக்கிறீங்க? :-))))
ராகவன்,
வரவேற்புக்கு நன்றி..
நாம எப்பவுமே உண்மையத் தவிர வேற பேசுறதில்ல.
:)
சிறில் வாங்க, சிகாகோவில் குளிர் எப்படி.
//பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும்//
கூகுளில் ஒரு புனித நூலைப் பற்றி எதிர்மறை கருத்தை தேடினால் அதைப் பற்றி ஆயிரக்கணக்கான தகவல்களை அது கொட்டும்.
அதே நூலைப் பற்றி நல்ல கருத்தை தேடினால் அதைப் பற்றியும் கக்கும்
அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும்.
ஒருவர் ஒரு மதத்தின் வேத நூலை கற்றுணர வெகுகாலம் ஆகும் போது பல மதங்களின் வேதநூற்களை கூகுளில் தேடி கட் அண்ட் பேஸ்ட் செய்வது அபத்ததின் உச்சம்.
சிவா,
குளிர் ரெண்டு மூணு நாளைக்கு பரவாயில்ல. இங்க குளிரவிட காத்துதான் மனுசனக் கொல்லும். தைரியத்த வரவழச்சுட்டுத்தான் வெளியே போகவேண்டியிருக்கு.
//அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும்.//
சரியா சொன்னீங்க. இந்த விடுமுறை நாட்களில் ஒரு நாள் தொலைபேசலாம். நான் அழைக்கிறேன்.
:)
இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எதிரான கேள்விகள் கிடைக்கும் //
அடடே, அந்த விவரங்கள் கொஞ்சம் கொடுங்களேன். நம்மள மாதிரிதான் யோசிக்கிறாங்களான்னு பார்த்துக்கிறேன்.
சத்தியமான வார்த்தைகள் சிறில் அவர்களே. ஆத்திகமும் நாத்திகமும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆத்திகர் நாத்திகர் ஆவது அதே போல் நாத்திகர் ஆத்திகர் ஆவது காலம் காலமாக நடந்து வருவதுதானே.
ராமன் காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப வேண்டுமென பரதன் யாசிக்க, தந்தை சொல்லைக் காப்பாறும் கடமை பற்றி ராமன் பேச, அப்போது வருகிறார் ஜாபாலி முனிவர். "தாய் என்ன, தந்தை என்ன, இறந்தால் தாயாவது தந்தையாவது. கண்முன்னால் இருப்பதுதான் நிஜம். இருப்பதை அனுபவித்துப் போவதே வாழ்க்கை என்றெல்லாம் உபதேசிக்கிறார்.
அதே போல சார்வாகர் என்பவர் பேசிய நாத்திகத்தைப் பார்த்தால் இன்றைய நாத்திகர்களே தயங்குவார்கள், அவ்வாதங்களை எடுத்துக் கொள்ள.
கண்ணதாசன் அவர்கள் பேசாத நாத்திகமா? அவரே பிற்காலத்தில் தன்னைக் கண்ணன் ஆட்கொண்டதை மகிழ்ச்சியுடன் கூறி அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி பல புத்தகங்கள் எழுதினார். பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் பற்றி தான் பார்த்த நிகழ்ச்சிகளிலிருந்தே மேற்கோள் காட்டி எழுதினார்.
ஆகவே சிறில் அவர்களே, இந்த வாத விவாதங்கள் முடிவற்றவை.
விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்பதுதான் நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும். அடிப்படையில் நீங்கள் மறுப்புடன் படிக்கிறீர்கள். உங்கள் பார்வை குறைகண்டுபிடிப்பதற்கானது. எந்தவித விளக்கமும் உங்களை சமாதானப்படுத்தப் போவதில்லை எனும் நிலைப்பாடுடனேயே உங்களுக்கு விளக்கம் அளிக்கமுடியும்.//
சகோ. சிறில், நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. இஸ்லாம் குறித்த விமரிசனங்களை எதிர்கொள்ளும்போது இதே கருத்துக்களைத்தான் முஸ்லிம் வலைப்பதிவர்களும் முன்வைக்கிறார்கள்.
//அவரவர் வேதங்களை படித்து அதை உணர்ந்து எழுதுவதுதான் நேர்மையாக இருக்கும். ஒருவர் ஒரு மதத்தின் வேத நூலை கற்றுணர வெகுகாலம் ஆகும் போது பல மதங்களின் வேதநூற்களை கூகுளில் தேடி கட் அண்ட் பேஸ்ட் செய்வது அபத்ததின் உச்சம். //
சகோ. சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். எந்த மதக் கொள்கையாக இருந்தாலும், அந்த மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களின் அணுகுமுறையும், அதே கொள்கையை விமரிசனக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மாற்று மதத்தவரின் அணுகுமுறையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இதை சரியாக புரிந்து கொண்டோமானால் மதங்கள் குறித்த சர்ச்சைகளை கொஞ்சமாவது தவிர்க்கலாம்.
நன்றி.
தருமி,
'contradictions in the bible' எனத் தேடினால் பல தகவல்கள் கிடைக்கின்றன. இவை பொதுவாக Factual contradictions பற்றியவையாகவே இருக்கும்.
நன்றி டோண்டு சார்.
இப்னு பஷீர். ரெம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நண்பர் சிவாவுக்கு பதிலளித்திருப்பது ரெம்ப சிறப்பாயிருக்குது.
நன்றி.
Post a Comment