'விளிம்பு மனிதர்களை' படம்பிடிப்பதில் செல்வராகவன் திறமைசாலி. ஒன்று சமுதாயத்தின் விளிம்பில் அல்லது உணர்ச்சிகளின் விளிம்பில் இவரது படைப்புக்கள் திரை உலா வரும். புதுப்பேட்டையும் அப்படி ஒரு முயற்சியே.
சேரியிலிருந்து பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் கொக்கி குமாரின் வாழ்க்கை ஏதோ சாக்கடையில் சிறுவர்கள் விட்ட காகிதக் கப்பல் போல பயணிக்கிறது. அவன் எண்ணிப்பார்த்திராத பரிமாணங்களில் ஒவ்வொரு நாளும் புலருகிறது. பிச்சைக்காரனாகி, அடியாளாகி, தாதாவாகி, கணவனாகி, தந்தையாகி ... என பல திருப்பங்கள். சாக்கடையில் சில அழுகாத பழங்களும், சற்றுமுன் வீசப்பட்ட பூக்களும் இருக்குமென்றாலும், நாற்றமே அதிகம்.
தமிழ் திரையுலகின் தொழில்நுட்பத்திறனுக்கு மற்றுமொரு உதாரணம் இந்தப்படம். இயற்கையான சூழலில் ஒவ்வொரு காட்சியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அலறிக்கொண்டு வரும் பாடல்கள் விதிவிலக்கு.
ஸ்னேகாவின் பாத்திரம் கனமான 'விலைமாது' பாத்திரம். அழகாய் செய்திருக்கிறார். சோனியா அகர்வால் வழக்கம்போல முகத்தசைகளுக்கு அதிகம் வேலையில்லாமல் செய்திருக்கிறார். இரு நாயகிகளும் நாயகனை எதிரெதிர் வழியில் நடத்துகிறார்கள். ஒருத்தி நாயகனுள்ளிருக்கும் நல்லவனை நாட, இன்னொருத்தி கெட்டவனை உசுப்புகிறாள்.
தனுஷின் நடிப்பில் புதிதாய் எதுவுமே தெரியவில்லை. நீளமான படம் என்பதால் சில நேரங்களில் இவரின் மாற்றமில்லாத (Monotonous) உச்சரிப்பு எரிச்சலூட்டுகிறது. இன்னும் சில ஒத்த கததபாத்திரங்களின் உச்சரிப்பும் ஒரேபோலிருப்பாதால் தவறு செல்வராகவனுடையது எனத் தெரிகிறது.
கொடூரமான காட்சிகள் சில தவிர்க்கமுடியாமல் சேர்க்கப்பட்டுள்ளன. சில உண்மைகள் பொதுவாய் கசக்கத்தான்செய்கின்றன.
குடும்பத்தோடு...? கொஞ்சம் கடினம்தான். நிச்சயமாக செல்வராகவனின் நோக்கம் குடும்பப்படமல்ல.
கமல் பாடியிருக்கும் பாடல் பிரமாதம். யுவன் இசை முத்துக்குமார் வரிகள் இதம் சேர்க்கின்றன. காமெரா மேனை படத்தில் காணவில்லை அத்தனை இயல்பான ஒளிப்பதிவு.
ரவுடி, ரவுடிகள், அரசியல், அரசியல்வாதிகள் என குறுகிய வட்டதில் படம் சுழல்வதாலும் கொஞ்சம் நீளமானதாலும் சில நேரம் அயற்சியடைய வைக்கிறது.
'சென்னையில் இதுபோல மனிதர்களுண்டா?' என பலரையும் வியக்கவைக்கும். இதுவே இந்தப்படத்தின் சாதனையும், சவாலும்.
Monday, June 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
1 comment:
நன்றி சிவராமன்.
//புதுப்பேட்டை நிறைய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி இருந்ததால் அதன் குறைகள் மிக பெரிதாக தெரிகின்றனவோ என்று எனக்கு தோன்றுகிறது.//
திறமைசாலிகளிடம் அதிகம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். இல்லையா?
//இந்த பதிவுக்கென மிகுந்த சிரத்தை எடுத்து சிறிய வார்த்தைகளுக்கும் சுட்டி கொடுத்து உங்கள் உழைப்புக்கு வந்தனம்.//
இனி இப்படித்தான் எழுத வேண்டுமென் முடிவு செய்துள்ளேன். வலையில் எழுதும்போது இப்படித் தருவது எளிது மட்டுமல்ல, பல தகவல்களை ஒரே இடத்தில் தரமுடிகிறதே.
//சோனியா அகர்வாலுக்கு - free acting lessons - link கொடுத்த உங்கள் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தேன். //
:))
Post a Comment