'கவி தந்த விதை' என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
அவள்.
சங்கத் தமிழ்முன் ஓர்
அங்கமானோமே
எதற்கு?
அவன்.
கன்னித்தமிழாயிருக்கும் உன்னை
அன்னைத்தமிழாக்கத்தான்.
அவள்.
இனிய தமிழில்
என்ன பிடிக்கும் உனக்கு?
அவன்.
'முத்த'மிழ்.
தரவா?
அவள்.
தீந்தமிழ்போல்
தீண்டலில் இன்பமுண்டா?
அவன்.
செந்தமிழாய்ச் சிவக்கும் உன்
கன்னத்தைக் கேளேன்?
அவள்.
பால்?
அவன்.
இன்பத்துப் பாலே
இந்த
இரவுக்குப் போதும்.
அவள்.
'இதில்' நீர்
மூத்த தமிழோ?
அவன்.
இல்லை நான்
பிள்ளைத் தமிழ்
சொல்லித்தா உன்
கிள்ளைத்தமிழ்.
அவள்.
மரபுக்கவிதை ஒன்றை
புதுக்கவிதையாக்கப் பார்க்கிறாய்.
அவன்.
இலக்கணம் கற்கும் இரவா இது?
இலக்கியம் படைப்போம் வா.
இன்பத்தமிழ் பருகவே இந்த இரவு
தாய்த் தமிழ் சொன்னதில்லையா உனக்கு?
அவள்.
பேச்சுத் தமிழ் குறைத்துவிட்டு
நாடகத் தமிழ் பழகச் சொல்கிறாய்.
இசைத் தமிழாய்
அவள் இசைந்தாள்
வன் தமிழாய்
அவன் இசைத்தான்.
வீரத் தமிழ் வீழ்ந்து கிடந்தது
விழிப் பார்வையிலே
மறத்தமிழ் மறந்துபோனது
காதல் மயக்கத்திலே.
சந்தத்தமிழாய் இதயங்கள் துடித்தன
முந்தைத் தமிழ் கவிதைகள் புரிந்தன.
இனித் தமிழ்
இனிதமிழ்.
==============
விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்
24 comments:
ஆகா!பிற்காலத்துல உங்க நண்பன் என்னை மறந்துடாதீங்க !
நானும் ஏதாவது விதைப் பாட்டு எடுத்துத் தரவா? (அது மட்டும் தான் தெரியும் :(()
சிறில்...
உங்களின் இந்தக் கவிதையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் பின்னூட்டமும் வந்தது ;-)
திரைப் பாடலில் இருந்து கவிதை வளர்ப்பது அருமையான யோசனை...
தமிழில் துவக்கியிருக்கிறீர்கள்... மேலும் இதே போல இனிதாய் வளர வாழ்த்துக்கள்...
தொடர்ந்து வாசிக்கிறேன்...
ஜோ,
உங்களை மறக்கவா...அவ்வளவுதூரம் போயிடமாட்டேன். கவலப்படாதீங்க.
:))
//நானும் ஏதாவது விதைப் பாட்டு எடுத்துத் தரவா? (அது மட்டும் தான் தெரியும் :(() //
நிச்சயமா..அனுப்புங்க.
அருட்பெருங்கோ,
கவிதைபற்றி ??
:)
எனக்கு பிடித்த வாலியின் வரிகள்..
நண்பனிடம்..
உயிர் கூட உனக்காய் தரக்கூடுமே!
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
பார்ட்னர் நல்ல முயற்சி.. தொடருங்கள்.. என் ஆதரவு நிச்சயம் உண்டு காதலர் தின் வாழ்த்துக்கள் பார்ட்னர்.
சிறில் மிகவும் புதிய முயற்சி !!
கட்டிலில் கன்னித்தமிழை
தாய்த்தமிழாக்கவா
எனக் கேட்டுத் தொடங்கிய
தாலாட்டு பின்
முத்தமிழாய்
தீந்தமிழாய்
செந்தமிழாய்
பிள்ளைத்தமிழாய்
கிள்ளைத்தமிழாய்
இசைத்தமிழாய்
வன் தமிழாய்
சந்ததமிழாய்
ஆஹா மிக அழகாக விளையாடுகிறது உங்கள் கவிவண்ணத்தில் கட்டிலிலும் கவிதையாகவும் தீந்தமிழ் சிறில் !!
//வீரத் தமிழ் வீழ்ந்து கிடந்தது
விழிப் பார்வையிலே
சந்தத்தமிழாய் இதயங்கள் துடித்தன
முந்தைத் தமிழ் கவிதைகள் புரிந்தன.//
மிக மிக ரசித்தேன் சிறில் !! மேலும் தொடருங்கள் ! ஆவலுடன் காத்திருக்கிறேன் !! :)))
மிக்க நன்றி பார்ட்னர்.
தொடர்ந்து ஆதரவி தாங்கோ தாங்கோ தாங்கோ.
கவிதை பற்றி ...
சொல்லிவிட்டேனே.... தமிழும், நீங்களும் விளையாடுகிறீர்கள்.... உங்கள் விளையாட்டை காதல்குழந்தை ரசித்துப் பார்க்கிறது....
இதென்ன வாரமொருமுறை தொடரா?
நவீன் நன்றி நன்றி.
ஏதாவது சரி செய்யவேண்டுமென்றாலும் சொல்லவும்.
:)
அருட்பெருங்கோ நன்றி..
வாரம் ஒரு முறை நல்ல ஐடியா.. ஆனா எனக்கு அத்தன பொறுமை கிடையாது அதனால எழுதி முடிச்சதும் போட்டிடுவேன்.
காதல் சீசன்ல.. வுட்றக்கூடாது.
அருமையான கவிதைகள் சிறில்...
//இலக்கணம் கற்கும் இரவா இது?
இலக்கியம் படைப்போம் வா.//
இலக்கணம் இல்லாத இலக்கியமா?
புதுசா இருக்குதே :)))))
நன்றி ஜி,
//இலக்கணம் இல்லாத இலக்கியமா?
புதுசா இருக்குதே :))))) //
இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ?
பழசுதான்.
:)
கவுஜ சூப்பர்.
நன்றி கவுஜை அரசன்.
:)
சிறில்,
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் விதைப்புகள்.
கவிமடத்தில் சந்தாதாரர் ஆக விருப்பமா?
உடனே அணுகுங்கள் - பினாத்தல்கள் அல்லது சாத்தான்குளம்.
//கவிமடத்தில் சந்தாதாரர் ஆக விருப்பமா?
உடனே அணுகுங்கள் - பினாத்தல்கள் அல்லது சாத்தான்குளம்.//
தனிமடல் அனுப்பியுள்ளேன்.. பெனாத்தல் ஐ.டி.
அடடா... சிரில்.. கவிதைல கலக்கறீங்க ! வைரமுத்து கவிதையை நீட்டி, வைரமுத்துவே அசருமளவுக்கு அசத்திட்டீங்க !!
//இனிய தமிழில்
என்ன பிடிக்கும் உனக்கு?
அவன்.
'முத்த'மிழ்.
தரவா?//
ஆரம்பம் முதல் கடைசி வரை வியக்க வைத்து விட்டீர்கள் !
வாழ்த்ட்துக்கள்
நன்றி மணிகண்டன்
//ஆரம்பம் முதல் கடைசி வரை வியக்க வைத்து விட்டீர்கள் !//
ரெம்ப நன்றி சேவியர்.
வலையுலக வன்கவிகள் எல்லாம் சொல்லிட்டீங்க அதனால முயற்சி தொடரப்படும்..
:))
தமிழ் தமிழ் என ஒரு மென் கவி தாண்டவம்.
அருமையான முயற்சி சிறில் தொடருங்கள்.
நானும் என் பங்குக்கு ஒரு விதை தரட்டுமா??
//தமிழ் தமிழ் என ஒரு மென் கவி தாண்டவம்.
அருமையான முயற்சி சிறில் தொடருங்கள்.//
மிக்க நன்றி ப்ரியன்
//நானும் என் பங்குக்கு ஒரு விதை தரட்டுமா??//
கட்டாயமா தாங்க முயன்று பார்க்கிறேன்.
Post a Comment