.

Wednesday, February 28, 2007

Monday, February 26, 2007

நிருபர் ஆகலாம் வாங்க

உங்கள் ஊரில் சுற்றும் நடக்கும் நிகழ்ச்சிகளை, உருவாகும் செய்திகளை உலகுக்கு எடுத்துச் சொல்ல ஒரு புதிய சேவை இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை செய்திருப்பது நம் நண்பர் ஒருவர். Desizip.com எனும் தளம் உங்களை உங்கள் பகுதிக்கு நிருபராக செயல்பட வசதி செய்கிறது. இந்தியர்களை Desi(தேசி) என்பது வழக்கம் அதுபோல பின்(Pin) கோட் ஜிப்(Zip) எனப் படுகிறது.

தளம் இயங்கும் முறை இதுதான். உங்கள் பின்கோட்டைத் தந்து உங்கள் ஏரியாவினை உங்களுக்கென பதிவு செய்துகொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்கள் ஏரியாவுக்கு நீங்கதான் ரிப்போர்ட்டர். So simple. (மேலும் விபரங்களுக்கு இங்க க்ளிக் செய்யுங்க.)

உங்கள் ஏரியாவில் வரிவிளம்பரங்களை (Classifieds)சேகரித்து இணையத்தில் சேர்க்கவும் வசதிகள் உள்ளன. இதன்மூலம் வரும் வருமானத்தை உங்களோடு DesiZip.com பங்கிட்டுக்கொள்ளும்.

உங்கள் ஊரில் நடக்கவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் பற்றிய அறிவுப்புக்கள் என பலவித செய்திகளையும் முறைப்படுத்தி பதிக்க இயலும்.

இதுபோன்ற முயற்சிகள் கிழக்கு ஆசிய நாடுகளில் பலத்த வெற்றி பெற்றுள்ளன. சாமான்யர்கள் நிருபர்களாய் செயல்பபடும்போது பல கோணங்களில் சிறு சிறு செய்திகளும் உடனுக்குடன் உலகைப்போய் சேர்கிறது.

So, ரெடியா?

போய் உங்க பின் கோடுக்கு ஒரு துண்டப் போட்டுவையுங்க.

மேலும் விபரங்களுக்கு இங்க க்ளிக் செய்யுங்க.

கவி தந்த விதை -4: காதல் மாய உலகம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்


வரம்கொடுக்கும் தேவதைகள்
உலாவரும் காடு,
காதலெனும் மாய உலகம்.
அங்குள்ள குரங்குகளும்
அழகானவை.

சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று
எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும்.

அங்கே,
பெண்மயில்கள் தோகை விரிக்கும்
கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும்
வானங்கள் பூமியில் இயங்கும்
நட்சத்திரங்களைப் பறிக்க இயலும்.
மான்கள் வேட்டையாட
ஆண்கள் மாட்டிக்கொள்வர்.

புத்தகங்களுக்குள் இறகிருக்காது
பறவையே இருக்கும்.
ஓடுமீன் எல்லாமே
உறுமீன்கள் இங்கே.

நிலவுகள் தேய்வதில்லை!
ஆம், காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள்.
வருடங்கள் இல்லை
வயதும் இல்லை.

பால்யவயதுப் படுக்கைநேரக் கதைகளைப்
பாடமென நம்பச் செய்யும் காதல்.
செருப்பில்லாமலே
சிண்ரெல்லாக்களை
கண்டுகொள்ளலாம் அங்கே.

அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்.

கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி.

உதடுகள் ஓய்வெடுக்க
இதயங்கள் பேசிக்கொள்ளும்.

இங்கே மரங்கள் பூக்கின்றன,
காய்ப்பதில்லை
பசிக்குத்தானே பழங்கள் தேவை.
தேனை ஊற்றி வளர்க்கிறார்கள்
சொலைகளை.

அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.

முடிவில்லாப் பாதைகளும்
சப்தமில்லா அருவிகளும்
அன்னியரில்லாப் பூங்காக்களும்
அழகானப் பேய்களும்,
அலையில்லாக் கடல்களும்
பேச்சில்லா பாஷைகளும்
இருளில்லா இரவுகளும்
விடியாத நாட்களும்
வேண்டும்போது மழையும்
வேண்டாமலே வரமும்
எப்போதும் தென்றலும்
எத்திக்கும் இன்பமும் நிறைந்திருக்கும் காதல்
மாய உலகம்.

விதைத்தவர்: நா. முத்துக்குமார்
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


'கவி தந்த விதை' தொடரில் வந்தவை...
...

Tuesday, February 20, 2007

Yahoo! வை தோற்கடிக்கும் சற்றுமுன்...

'சற்றுமுன்...' தளம் துவங்கி சில நாட்களிலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. யாஹூ செய்தித்தளம் 1 வருடத்துக்கு முந்தைய செய்தியை இன்னும் தந்துகொண்டிருக்கிறது. சற்றுமுன் எவ்ளவோ பரவாயில்ல இல்லியா? (கீழேயுள்ள படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)



:))
சற்றுமுன் குழுவில் சேர விரும்புபவர்கள் satrumun@gmail.com ற்கு மெயில் செய்யவும். சற்றுமுன்னில் பதிவிட குறைந்த பட்ச நேரமே தேவைப்படுகிறது என்பது சிறப்பான விஷயம்.
'சற்றுமுன்...' மற்றும் 'மாற்று' பற்றிய தகவல்கள்

Monday, February 19, 2007

கவி தந்த விதை -3: வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்.

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்.

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்.

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்.

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்.

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்.

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்.

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்.

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்.

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்.

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்.

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்.

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி.

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி.


விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


இந்தப் பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்றிருந்தது. சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையிழந்த நண்பர் ஒருவரிடம் பேசும்போது உங்களுக்குப் பிடித்த பாடல் வரிகள் என்ன எனக் கேட்டேன். அவர் சொன்ன வரிகள் இவை. வைரமுத்துவின் வைர வரிகள். பாடலில் தொடர்ந்து வரும் எனக்குப் பிடித்த வரிகள்.

நீ
மல்லிப்பூவை
சூடிக்கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.

நீ
பட்டுப்புடவை
கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள்
மோட்சம் பெறும்

Hats off தல.

மீண்டும் ஒருமுறை அரவிந்தன் நீலகண்டனுக்கு

நீலகண்டன் இப்போது ஒரு கிறீத்துவ தேவலையத்தின் படம் ஒன்றைத் தந்திருக்கிறார். அதில் நாஜி அடையாளங்களும் ஹிட்லரின் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவர் சொல்லாமல் விட்டிருக்கும் விஷயம் என்னவென்றால் முந்தையக் கட்டுரையில் இவர் சாடியிருக்கும் கத்தோலிக்க கோவில் அல்ல இது.

இது ஒரு ப்ராடஸ்டாண்ட் கோவில். சர்ச் ஆஃப் சைதாப் பேட்டைபோல ஒரு சர்ச். யார் வேண்ணா எப்படி வேண்ணாலும் கும்மி அடிக்கலாம். ஒரு சாமியார் செய்கிறத் தப்புக்கெல்லாம் எல்லா சாமியாரையும் குறை சொல்லமுடியுமா? அப்படிப்பாத்தா...

சரி விடுங்க. இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் எள்ளல் தவிர்த்து எழுதினால் இன்னும் நல்லா இருக்கும். குறிப்பா கடைசியில் அந்த பாட்டு.

நண்பர் தூங்கப் போயிருப்பர் என்பதாலும் அவர் பதிவில் என் பின்னூட்டம் வெளிவர நேரமாகும் என்பதாலும் இந்தப் பதிவு.

Sunday, February 18, 2007

Gas chambers அல்லது அரவிந்தன் நீலகண்டனுக்கான பின்னூட்டம்

கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும்.

இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் என்னால் சிலுவைப்பாதைகளை விரும்பாமல் இருக்க இயலவில்லை

பொதுவாக சிலுவைப்பாதைகள் எழுதி வாசிக்கப்படுகின்றன. கிறீத்துவ புத்தகக் கடைகளில் நிச்சயம் கிடைக்கும் அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு சிலுவைப் பாதைகள் நடக்கும்போது கிறீத்துவர்கள் என்ன தியானிக்கிறார்கள் என்பது புலப்படும்.

சிறிய உதாரணம். முதல் நிலையில் (ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது இது) இயேசு தீர்ப்பிடப் படுகிறார். இயேசு, தான் இறைமகன் என்கிறார், யூதர்கள் தேடிக்கொண்டிருந்த மீட்பர் நான் என்கிறார். இதனால் யூதர்களின் ஆதிக்க சக்திகளும் அவர்கள் பின்னிருந்த மக்களும் இயேசுவை சிலுவையில் அறையும்படி கையளிக்கின்றனர். ரோம ஆளுனன் போஞ்சியஸ் பைலட் (பிலாத்து) இவரிடம் நான் எந்தக் குறையையும் காணவில்லை என்கிறான்.

பிலாத்து ஆளுனன். நீதிவழங்குபவன். அரசின் சட்டங்கள் எதையும் இயேசு மீறாதபோது தாண்டனை வழங்கத் தயங்கினான்.

யூதர்கள் இவன் இரத்தப் பழி எங்கல் மேல் விழட்டும் எனச் சொல்கிறார்கள். பின்பு பிலாத்து இயேசுவை சிலுவைமரணத்துக்கு தீர்ப்பிடுகிறார்.

இந்த நிலை சிலுவைப்பதையில் எப்படி இருக்கும்.

'இயேசு நாதர் பாடுபட்ட முதலாம் ஸ்தலம்: இயேசுவை தீர்ப்பிடுகிறார்கள்' என்பார் நடத்துனர். மக்கள் எல்லோரும் 'திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றிஅறிந்த தோத்திரம் செய்கீறோம். ஏனெனில் அந்த பாரமான சிலுவையைக் கொண்டு உலகை மீட்டு ரட்சித்தீர்.' என பதிலளிப்பார்கள்.

அப்புறமா ஒரு சின்ன தியானம். தியானிக்க ஒரு கருத்து சொல்லப்படும் இது 100க்கு 99 முறை 'இந்த முதலாம் நிலையில் நாம் யாரையெல்லாம் தீர்ப்பிட்டிருக்கிறோம், அநியாயமாய் குற்றம் சாட்டியிருக்கிறோம் என எண்ணிப்பார்த்து வருந்துவோம்' என்பதுபோலத்ததன் இருக்கும். மீதம் ஒரு முறை ஒரு மாற்றுச் சிந்தனையாக இதுபோன்ற சிந்தனை ஏதாவது சொல்லப்படும்.

இதுபோல 14 தலங்களும் சுயபரிசோதனைக்கான உந்துதல்களே தவிர அரவிந்தன் நீலகண்டன் சொல்வதைப்போல வெறுப்பை விதைக்க அல்ல.

சரி சிலுவைப்பதை பற்றிய பெரிய புரிதலை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தொடர்புள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

மெல்கிப்சன் எடுத்த இயேசுவின் பாடுகள் (Passion of Christ) என்கிற படம் யூதர்களுக்கு எதிரான படம் என்கிறார். இதை க்ரஃபிக்ஸ் கலக்கல் எனவும் சொல்லிவிடுகிறார். இந்தப்படம் இயேசுவின் கடைசிப்பயணமான சிலுவைப் பயணத்தை விவரிக்கிறது.

சிலுவை மரணம் என்பது அப்போது மிகக் கொடிய தண்டனை. இயேசுவை கட்டிவைத்து சாட்டையால் அடிக்கின்றனர் பின்னர் தோளில் சிலுவையை சுமக்கச்சொல்லி கொல்கத்தா எனும் மலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சிலுவையில் அறைகின்றனர். இயேசு மரிக்கிறார்.

மேல்சொன்ன இந்த வரிகளைப் படிக்கும்போது உள்ளுக்குள் ஒரு காட்சிபோல (Visualization) தோன்றியிருக்கும். நானும் இயேசு சிலுவையில் தொங்குவதாக வடிக்கப்பட்டிருக்கும் சிருபங்கள் பலதையும் பார்த்திருக்கிறேன். அத்தனை கோரமானதாக அவை இருப்பதில்லை. பொதுவாக பார்த்தால் ஓரளவு பரிதாபம் வரும். இப்படி இயேசு தொங்கும் சிலுவைகள் ஒரு அடையாளமாகத்தான் அப்படி வைக்கப்படுகின்றனவே தவிர அவையே தத்ரூப மறுவடிப்புக்கள் அல்ல.

உண்மையில் சிலுவைப்பயணம் எப்படி இருந்திருக்கும்? தசைகள் கிழிய சாட்டையடிபட்டு, தெருத்தெருவாக விழுந்து எழுந்து, ஒரு ஆளைத் தாங்கும் பலம் கொண்ட மரங்கள் இரண்டினால் செய்யப்பட்ட சிலுவையை அடிபட்டத் தோளில் தசைகள் நையச் சுமந்து, தலையில் முள்ளினால் ஆக்கப்பட்டு இறுக்க பிணைக்கப்பட்ட முடியை, முகமெங்கும் இரத்தம் வழியத் தாங்கிக்கொண்டு, முள்குத்தினாலே இரத்தம் வழிந்தோடும் கைகளிலும் காலிலும் உலோக ஆணியால் துளைக்கப்பட்டு இறந்துபோன ஒருவரின் உடல் நம் கோவில் சிலுவையில் தொங்கும் உடல்போலவா இருக்கும்?

அது வேலிமீது விழுந்த துணிபோலக் கிழிந்திருக்கும். தசைகள் கிழிந்து தொங்கியிருக்கும், இரத்தம் வழிந்தோடும் புண்களும், ஆடையையும் தோலையும் இரத்தப் பிசினால் ஒன்றாக ஒட்டிவைக்கும் புண்களுமாய் இருந்திருக்கும். எச்சில் துப்பல்களும் ஏளனப் பேச்சுக்களும் நிறைந்த பயணமாயிருந்திருக்கும். உருக்குலைந்து போயிருக்கும் அந்த உடல்.

மெல் கிப்சனின் திரைப்படம் இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கிறது.

என் அப்பா படத்தை பார்க்க இயலாமல் பாதியிலே வந்துவிட்டார். ஏன் எனக் கேட்டேன். 'இப்படியெல்லாம் நடந்திருக்குமா?' எனச் சொன்னார். நான் சொன்னேன்,"அப்புறம்? சிலுவை மரணம்னா சும்மாவா." இன்றைக்கு ஒரு திருடனை ஊரில் பிடித்துவைத்தால் என்ன செய்கிறோம்? எல்லாருமா செர்ந்து இரத்தம் வரும்வரைக்கும் அடிக்கிறோம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர். சமத்துவம், சகோதரத்துவம், மக்களாட்சி, நீதிமன்ரம் எனும் இன்றைய நிலமைகள் எல்லாம் துவக்கநிலைகளில் இருந்த காலங்களில் ஒருவனுக்கு சிலுவை மரணம் தருகிறார்கள் என்றால் சும்மா அழைத்துச் சென்று. வாங்க, இந்த சிலுவையில் படுங்க உங்களை அறைகிறோம் எனவா சொல்வார்கள்?

பைபிளில் சொல்லப்படாத எதுவும் 'இயேசுவின் பாடுகளில்' சொல்லப்படவில்லை என்பது நானறிந்தவரையில் உண்மை. அதுபோல யூதர்களுக்கு எதிராக பைபிளில் இல்லாத எதையும் மெல் கிப்சன் படத்தில் சொல்லவில்லை.

அப்ப பைபிள் யூதர்களுக்கு எதிரானதா? இயெசுவின் போதனைகள் மதத்தின் பெயரால் சட்டதிட்டங்கலைப் போட்டுக்கொண்டு தங்களைத் தாமே உயர்த்திக்கொண்டும், சடங்குகளின் பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டுமிருந்த மதக்குருக்களின் இருப்பை கேள்வி கேட்டது. அவர் இவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' எனத் திட்டினார். ஒரு கட்டத்தில் கோவிலில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களை கயிறால் கட்டிய சாட்டையால் 'என் தந்தையின் இல்லத்தை வியாபாரக்கூடாரமாக்காதீர்கள்' எனக் கூறி விரட்டியடிக்கிறார்.

வெறும் சட்ங்குகளை வலியுறுத்தவில்லை இயேசு. புதிய மனித மனித உறவு மனித இறை உறவுக்கான போதனைகளை, படிப்பினைகளை உருவாக்கினார் இயேசு. பத்துக் கட்டளைகளையும் 'எல்லாவற்றிற்கும் மேலாக இறறவனன நேசி. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசி' எனும் இரண்டு கட்டலலகளுக்குள் அடக்கினார் இயேசு. இதுதான் இயேசுவின் போதனையின சாரம்.

நோன்பிருக்கிறேன் என முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டு வெளி அடையாளமாக கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும் திரிபவர்களை வெளிவேடக்காரர்கள் என்றார். நோன்பிருக்கும்போது அறையில் தனித்திருந்து இறைவனை வேண்டுதல் போதுமானது என்றார் இயேசு. வெளி அடையாளம் எதுவுமே தேவையில்லை என்றவர். இதெல்லாம் யூத 'ஆச்சார்யார்களுக்கு' ஆட்டத்தைத் தந்தது. இதுபோன்ற ஆட்டம்கண்டு அழிக்கத் துணிபவர்களை எல்லா கலாச்சாரங்களிலும் காண முடிகிறது. இப்படி யூத மதத்தின் அதிகார வர்கத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த யூத 'ஆச்சாரியார்களை'க் கேள்விகேட்டார் இயேசு அவர்களின் தூண்டுதலாலும் முழுமுயற்சியாலும் கொல்லப்பட்டார் இயேசு.

அரவிந்தன் ஒரு பைபிள் வாசகத்தை கையாளுகிறார்.

//நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும்.//

அரவிந்தன் இதை யூதர்கள் மீது விழுந்த இரத்த சாபம் என்கிறார். மீண்டும் வசனத்தை படியுங்கள். இது சாபமா? யார் பேசுவதுபோல அமைந்துள்ளது இது. இயேசுவோ அவரது சீடர்களோ சொல்வதைப்போலவா இல்லை யூதர்கள் சொல்வதுபோலவா?

தாங்களே தங்களை சபித்துக்கொண்டார்கள் என்கிறாரா அரவிந்தன்?

பைபிளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இயேசு மரணத்தின் முன்பு சிலுவையிலிருந்த 'இவர்கள் செய்வதென்ன என்பதை உணராமல் செய்கிரார்கள் இவர்களை மன்னியும்' என வேண்டிக்கொள்வதாகச் சொல்கிறது பைபிள். இதன் உள் அர்த்தத்தத உணர்ந்து நடப்பவந்தான் உண்மையான கிறீத்துவன், மனிதன். இதை செய்யாத எவனுமே பாவி எனவும் நீங்கள் குற்றம் சாட்டியிருக்கும் அதே கத்தோலிக்க கிறீத்துவ சபை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

மிச'நரி'கள் என நீங்கள் எல்லாம் சதா திட்டிக்கொண்டிருக்கும் கிறீத்துவ சாமியார்களைப்பற்றி என்ன குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என சுயசோதனை செய்யுங்கள் நண்பரே.

ஹிட்லர் காலத்தில் நடந்தது என்ன?

போப்தான் ஹிட்லரைத் தூண்டி விட்டார் என்பதுபோல அரவிந்தன் பேசுகிறார். ஆனால் அவரின் முந்தையக் கட்டுரை ஒன்றில் (ரெம்ப முந்தையது அல்ல 2 கட்டுரைக்கு முன்னால்) இவர் ஹிட்லரைப் பற்றிய குஜராத் பாடபுத்தகத்தில் இருப்பதைச் சொல்லும்போது ஹிட்லர் தன் மக்களின் பொருளாதார பலகீனத்தை பயன்படுத்திக் கொண்டார் என்பதை அவரே மேற்கோள் காட்டுகிறார். உண்மையும் அதுவே. யூதர்கள் தங்களுக்கே உரிய (நல்ல) குணமான வியாபாரத் திறமையைக் கொண்டு செல்வச் செழிப்பில் வாழ்ந்துவந்தனர். இதுகுறித்து எழுந்த 'அரசியல் சிந்தனையில் உதித்ததுதான் நாஜியிசம். இது கட்டுரையில் எங்கும் காணப்படவில்லை. நாஜியின் அடையாளமாக ஹிட்லர் தேர்ந்தெடுத்தது சிலுவையா அல்லது வேறெதுவுமா என்பது அரவிந்தன் நீலகண்டனுக்குத் தெரியாமலில்லை.

ஹிட்லர்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது திருச்சபை. தப்பே செய்யலேன்னா எதுக்கு மன்னிப்பு? கத்தோலிக்க திருச்சபை செய்த தவறு என எல்லோரும் குறிப்பிடுவது திருச்சபை ஹிட்லரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததைத்தான். திருச்சபை யூதர்களுக்கெதிராக ஹிட்லரைத் தூண்டிவிட்டது என்பது யூதர்கள்கூட சொல்லாத கதை. ஹிட்லரின் உண்மை முகம் தெரிய வந்ததும் அவனை விட்டு விலகி நின்றது கத்தோலிக்கம். கத்தோலிக்கம் ஹிட்லர் காலத்து செயல்களுக்காக (சயலின்மைக்காக) மன்னிப்பபக் கோரவில்லை மாறாக தன் பெயரில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தவறுகளுக்ககவும்.

"It is appropriate that, as the Second Millennium of Christianity draws to a close, the Church should become more fully conscious of the sinfulness of her children, recalling all those times in history when they departed from the spirit of Christ and his Gospel and, instead of offering to the world the witness of a life inspired by the values of faith, indulged in ways of thinking and acting which were truly forms of counter-witness and scandal".

இதைப்போல ஒரு மன்னிப்பை. பகிரங்கமாகத் தன் தவறை ஒப்புக்கொண்டு வரலாற்றில் தன் பெயரில் நடந்த கொடுமமகளை நினைந்து கணக்கெடுத்து வெளிக்கொண்டுவரும் மற்றொரு மதத்தை அரவிந்தன் நீலகண்டன் சொல்வாரா?

பின்சாஸ் லபைட் எனப்படும் யூத மதகுரு தனது புத்தகத்தில் கத்தோலிக்க திருச்சபை போப் 12ஆம் பயஸ்'ன் கீழ் கிட்டத்தட்ட 8,60,000 யூதர்களின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எழுதியிருக்கிறார்.

//The Israeli consul, Pinchas E. Lapide, in his book, Three Popes and the Jews (New York: Hawthorn Books, Inc., 1967) critically examines Pope Pius XII. According to his research, the Catholic Church under Pius XII was instrumental in saving 860,000 Jews from Nazi death camps (p. 214).//

பயஸ் குரல் விடுத்திருந்தால் மேலும் பலரை காப்பாற்றியிருக்க இயலுமா? மேல்கூறிய யூதர் கூறுகிறார் ஹிட்லரின் concentration campல் இருந்த மக்கள்கூட போப் ஹிட்லருக்கு எதிராகப் பேசுவதை விரும்பவில்லை என்று. ஏன்? அது மேலும் பல கிறீத்துவர்களையும் கிறீத்துவ குருக்களையும் ஹிட்லர் கொல்ல வழிவகுத்திருக்கும்?

அப்ப ஹிட்லர் கிறீத்தவர்களையே கொன்றிருக்கிறானா? ஆமாங்க ஆமா. அரவிந்தனுக்குத் தெரிந்தும் இதை மறைத்திருப்பர் அல்லது எப்படி சிலர் ஹோலொகஸ்ட் என்பதே இல்லை என மறுப்பார்களோ அதுபோல மறுக்கலாம்(அவ்வளவு தூரம் சிந்திக்கத் தெரியாதவரல்ல என் நண்பர்). யூதர்களுக்கு உதவிய லட்சக்கணக்கான கிறீத்துவர்களை சிறையில் அடைத்தான் ஹிட்லர். அவர்களில் பலர் இறக்கவும் செய்தனர். இப்படி ஹிட்லரை எதிர்த்து உயிர்விட்டவர்களை புனிதர்கள் என அறிவித்திருக்கிறது திருச்சபை. ஹிட்லரை அல்ல.

டிசம்பர் 23, 1940 டைம் பத்திரிகை ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் கருத்தத வெளியிட்டது,
Being a lover of freedom, when the revolution came in Germany, I looked to the universities to defend it, knowing that they had always boasted of their devotion to the cause of truth; but, no, the universities immediately were silenced. Then I looked to the great editors of the newspapers whose flaming editorials in days gone by had proclaimed their love of freedom; but they, like the universities, were silenced in a few short weeks...

Only the Church stood squarely across the path of Hitler's campaign for suppressing truth. I never had any special interest in the Church before, but now I feel a great affection and admiration because the Church alone has had the courage and persistence to stand for intellectual truth and moral freedom. I am forced thus to confess that what I once despised I now praise unreservedly.

இதைச் சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அதனாலென்ன? இவர் நீங்க நினைப்பதுபோல கிறீத்துவர் அல்லர். இவர் ஒரு யூத வம்சாவளியில் வந்த ஜெர்மெனிக்காரர்.

Dec, 23 1940 Time மற்றுமொருமுறை கத்தோலிக்க ப்ராட்டஸ்டாண்ட் 200,000 கிறீத்துவர்கள் எப்படி யூதர்களுக்கு உதவியதால் ஹிட்லரால் சிறையிலடைக்கப் பட்டார்கள் எனச் சொல்கிறது. அதே பதிப்பில் பக்கம் 40ல் மூனிக்(Munich) ஆர்ச் பிஷப் பூசையின்போது ஜெர்மனிய கிரீத்துவ மக்களுக்குச் சொன்ன போதனையை குறிப்பிடுகிறது.

"Let us not forget that we were saved not by German blood but by the blood of Christ!" நாம் நாஜி ரத்தத்தால் அல்ல இயேசுவின் ரத்தத்தாலேயே மீட்கப்பட்டோம் எனப் பொருள். பின்னர் இவரைக் கொல்ல நாஜிகள் செய்த முயற்சியிலிருந்து தப்பினார்.

போப் பயஸ் முழுவதுமாக அமைதிகாக்கவில்லை.

According to The New York Times editorial on December 25, 1941 (Late Day edition, p. 24):

The voice of Pius XII is a lonely voice in the silence and darkness enveloping Europe this Christmas... he is about the only ruler left on the Continent of Europe who dares to raise his voice at all... the Pope put himself squarely against Hitlerism... he left no doubt that the Nazi aims are also irreconcilable with his own conception of a Christian peace.

Also The New York Times editorial on December 25, 1942 (Late Day edition, p. 16) states:This Christmas more than ever he is a lonely voice crying out of the silence of a continent... Pope Pius expresses as passionately as any leader on our side the war aims of the struggle for freedom when he says that those who aim at building a new world must fight for free choice of government and religious order. They must refuse that the state should make of individuals a herd of whom the state disposes as if they were lifeless things.

கத்தோலிக்க திருச்சபை தன் நடுநிலமையை தக்கவைத்துக்கொண்டு யூதர்களுக்கு எத்தனை உதவிகளை மறைமுகமாகச் செய்ய இயலுமோ அதைச் செய்துகொண்டிருந்தது என்பதே உண்மை.

போப் பயசின் முயற்சிகளையும், இரண்டாம் உலகப் போரின்போது செய்த தொண்டுகளையும் முன்வைத்து ரோமின் ராபை 1944 கத்தோலிக்கராக மதம் மாறியதாகச் சொல்கிறது வரலாறு.

முடிவாக...

நண்பர் திரு அவர்கள் கீதையைக் குறைவாக எழுதிய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் "மத புத்தகங்களைப் படித்து நல்லகாரியங்களைச் செய்பவனும் இருக்கிறான் கெட்டதைப் பிடித்துக்கொண்டு அல்லாடுகிறவனும் இருக்கிறான்" எனச் சொன்னேன். இது பைபிளுக்கும் பொருந்தும்.

பைபிளின் பெயரால் கிறீத்துவின் பெயரால் பல கொடுமைகள் நடந்துள்ளன. அன்று இயேசு எதை எதிர்த்தாரோ அதாகவே கிறீத்துவம் பல கட்டங்களில் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இவற்றை ஒரு முழு வரலாற்றுப் பார்வையில் கத்தோலிக்க கிறீத்துவம் இந்த தவறுகளை நிகழ்த்திய காலங்களையும் அப்போது இருந்த நியாயங்களளயும் சீர்தூக்கிப் பபர்த்தோமானால் இராமன் பின்னாலிருந்து அம்பு எய்ததன் தர்மம் எப்படி தர்மமோ அதுபோலவே இதுவும் எனப் புரியும். சில கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

கத்தோலிக்கம் ஒரு காலகட்டத்தில் உலகின் பல வலுவாய்ந்த அரசர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தது. பல அரசியல் முடிவுகளையும் எடுத்துவந்த ஒரு அமைப்பாக இருந்தது. இந்த கால கட்டங்களில் பல அரசியல் தவறுகளையும் செய்துள்ளது.

வரலாற்றைக்கொண்டே நம் எதிர்காலத்தை முடிவு செய்வோமென்றால் நாமெல்லாம் ஆடையின்றித் திரியவேண்டியதுதான் போலும்.

திருச்சபை தன்னை திருத்திக்கொள்ள தன் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகளையும் தேடிப்பிடித்து ஆராய்ந்து தவறுகளை தவிர்க்க தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது. இதுபோன்றதொரு முயற்சி எத்தனை மதங்களில் சாத்தியம்?

இந்து மதம் கிறீத்துவத்தால் அழிக்கப்பட்டுவிடுமோ எனும் அரவிந்தனின் போன்றோரின் பயம் ஓரளவுக்கு நியாயமானது. ஆனால் இதை எதிர்கொள்ள இவர்கள் எடுத்துக்கொள்ளும் முயர்சிகள் மிசனரிகளின் முயற்சிகளைவிட வருந்தத்தக்கதாகவே தெரிகிறது.

கிறீத்துவத்தையும் இஸ்லாமையும் குறைசொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் சமபங்கு முயற்சியையாவது தன் மக்களை ஒன்றுபடுத்துவதிலும், இந்துமதத்தின் தத்துவக் கூறுகளை விளக்குவதிலும் தூக்கி நிறுத்துவதிலும் செயல் படுத்தலாம். நடராஜரின் Cosmic dance போன்ற கருத்துக்களள இந்துமதம் உண்மையில் எப்படிச் சொல்லியுள்ளது என்பதுபோன்ற கட்டுரைகளை வரையலாம். சாதியை ஒழிக்கவேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லும் (தீவிர) இந்து நீங்கள். சாதியை தூக்கிப்பிடித்தவரைச் சாடினீர்கள். இதை எப்படிச் செய்யப்போகிறோம் எனச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் உங்கள் பிரச்சாரங்களைச் செய்யலாம். கிறீத்துவம் போர்களாலும் ஏமாற்று வேலைகளாலும் வளர்க்கப்பட்டிருந்தாலும் அது அழியாமல் நிலைத்திருப்பதற்கான ஒரே காரணம் அதன் அடிப்படியில் அமமந்திருக்கும் கிறீத்துவின் போதனைகள், மற்றும் இந்தப் போதனைகளை தொடர்ந்து போதிக்கும் கட்டுக்கோப்பு. இந்தக் கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்.

நூற்றுக்கணக்கான வருடங்களாயிருந்த இஸ்லாமியரின் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இல்லாத மதவாதா தேசியம் இன்றைக்கு மக்களாட்சியில் தென்படுகிறதென்பது வருந்தத்தக்கதே.

தன் மதத்தை பலரும் குறை சொல்லும்போது அடுத்தமதமும் இப்படிக் குறைகளள செய்திருக்கிறது என்ச் சொல்வதன்மூலம் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா?

'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்..' எனும் திருவாசகப் பாடல் ஈசனை நம்பாதவர்களை மூடர்கள் எனப் பழிக்கிறது. இந்தத் திருவாசகம் இசையை கத்தோலிக்க திருச்சபை வெளியிடுகிறது. (தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது). எதற்காக? நல்லிணக்கம் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில்லையா இவை?.

அந்தப் பாடலில் ஈசனைப் புகழ அன்றி மற்றவரை இகழ அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள எத்தனை புத்தகங்கள் நாம் படிக்கவேண்டும்? 'முருகா உன்னையல்லால் வேறு தெய்வமில்லை...' எனப்பாடினால் அவர் தெய்வ நிந்தனையாளரா?

நீங்கள் இந்து மதம் பற்றி எழுதும் கட்டுரைகளை தவறாது படித்து பயன்பெறும் வாசகன். இரசிகன் எனவே சொல்லுவேன். ஆனால் வரலாற்றை ஒருபக்கமாகப் பார்த்து பதிவிடுவதற்குப்பதிலாய், அதுவும் சில கடுமையான வார்த்தைகளோடு, இந்துமதத்தைப் பற்றிய புதைந்துகிடக்கும் உண்மைகளை, அவை எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூடத் தெரியாமல் இருக்கிற இந்துக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பிரிந்துகிடக்க ஏராளம் காரணங்கள் இருக்கின்றன ஆனால் சேர்ந்திருக்க நாம் மனிதர்கள் எனும் ஒரே காரணம்தான் இருக்கின்றது.

இனியும் இதுபோல எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லை(கைவலிக்குது :) ). இதுபோன்ற விஷயங்களை எழுதுவதில் எனக்கு அதிகம் விருப்பமில்லை. கடவுள், ஒரு தனிமனித அனுபவமாயிருக்க வேண்டும். மதங்கள் வழிகாட்டிகளே தவிர அவையே நம் பயணத்தின் இலக்கு அல்ல. எல்லா மதங்களின் வரலாறுகளும் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உங்களைப்போலவே நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் வீணாவதற்கு?

இது நம் மத அடையாளங்களுக்கும் பொருந்தும். என்னை வழிநடத்தும் தத்துவங்களில் இதுவும் ஒன்று. (Thanks to De Melo: you know what I mean).

(அவசரமாய் எழுதியது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்; யார் மனதையும் புண்படுத்த அல்ல சில சிந்தனைகளைத் தூண்டவே இந்தப் பதிவு. நானும் அரவிந்த நீலகண்டனும் சண்டைக்காரர்கள் என நினைத்து நண்பரை கேலிசெய்தோ தனிப்பட்டமுறையில் தாக்கி எதையும் எழுதினால் அதை வெளியிடப் போவதில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் முன்வைக்கவும். முன்வைக்கலன்னாலும் பரவாயில்ல.)

தன் நண்பருக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவுமில்லை - இயேசு

Friday, February 16, 2007

இது புதுசுங்க

இரு புதிய முயற்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வலைப்பதிவுகளில் பலவிதமான எழுத்துக்களையும் இன்று காண முடிகிறது. நாம் தமிழில் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'சற்றுமுன்...'
'சற்றுமுன்...' என்னும் குழு உடைபடும் செய்திகளை (Breaking news)உடனுக்குடன் தெரிவிக்க ஏற்படுத்தப்படவுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஓடும் 'சற்றுமுன் வந்த செய்திகள்' போல. கிழக்கே ஆஸ்த்ரேலியா துவங்கி மேற்கே அமெரிக்கா வரை இருக்கும் பதிவர்களை உள்ளடக்கிய குழு பதிவு 'சற்றுமுன்...' இதன்மூலம் ஒரு 24 மணிநேர செய்தித் தளமாக உருவாகும்.

தமிழகம், இந்தியா துவங்கி உலகச் செய்திகள் வரைக்கும் முக்கியமான செய்திகளை தரவிருக்கிறது 'சற்றுமுன்...' உங்கள் பங்குக்கு செய்திகளைத் தர விரும்பினால் பின்னூட்டங்கள் வாயிலாகவோ satrumun @ gmail . com ற்கு மெயில் செய்வதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். செய்திகளுக்கு தொடர்புள்ள சுட்டிகளைத் தருவது செய்தியின் நம்பகத்திற்கு வகைசேர்க்கும்.

வலைப்பதிவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகளையும் தர இருக்கிறோம். குழுவில் சேர மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சலுங்கள். 'சற்றுமுன்...'

'மாற்று'

இரண்டாவது முயற்சி ஒரு 'மாற்று' முயற்சி. தேனில் ப(பி)டித்தது எனும் பகுதியை வலப்பக்கம் பார்த்திருப்பீர்கள். நான் படிக்கும் பதிவுகளில் பிடித்த சில பதிவுகளை நீங்களும் படிக்கத் தருகிறேன். இந்த முயற்சியை சில பதிவர்கள் சேர்ந்து செய்யப் போகிறார்கள். மாற்று எனும் தளம் இதற்காக செயல்பட ஆரம்பித்துள்ளது.

தரமான பதிவுகளை, சார்புநிலை கருத்துகளையோ தனி மனித தாக்குதல்களையோ கொள்ளாத பதிவுகளை, வெட்டி ஒட்டாமல் தன் முயற்சியில் எழுதப்பட்ட பதிவுகளை தெரிந்து தர இருக்கிறார்கள் 'மாற்று' குழுவினர்.

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல நேரங்களில் பதிவுகளை தரம்பிரித்து படிப்பது கடினமானது. மாற்று போன்ற சேவை இந்தக் குறையை தவிர்க்கிறது.

சிறப்பான முயற்சி. நானும் இணைந்துள்ளேன் மாற்று குழுவில்.

படித்து பயன்பெறுங்கள்.

மேலுள்ள சேவைகள் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்ல தவறாதீர்கள்.

மாற்று குழுவில் சேர.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பெரும் பின்னடைவு

ஈராக்கிற்கு மேலதிகம் படைகளை அனுப்பும் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஹுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இது அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

CNN
Reuters

இனி இதுபோன்ற சற்றுமுன் வந்த செய்திகளை 'சற்றுமுன்...' எனும் வலைப்பதிவில் பதிக்க இருக்கிறோம். மேலதிக விபரங்கள் மாலைப் பதிவில்.

Thursday, February 15, 2007

கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.

உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.

எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.

பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.

தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.

தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.

உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.

கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே காதல்.

வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்

தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.

காதல்,
நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.

நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.

எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.

நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறுவது
கொடுக்கல் வாங்கலா?

பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.

இது நீ தந்ததா?
நான் ஆனது.

நாம் ஆனது.

தந்தாலே காதல் காதலில்லை.

விதைத்தவர்: வாலி
விதை எடுத்துக் கொடுத்தவர்: கடற்புறத்தான் ஜோ
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

முந்தைய கவி தந்த விதை.

இந்த வாரம்...

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினியர் கணேசனுடன் பேட்டி - திருமலை கொழுந்து
சாகரன் (எ) கல்யாண் - சிறில் அலெக்ஸ்

போக்கிரி - மீனா

சிங்கவாய் கல் ! - காவேரி பிரச்சனை - பாபுடி

கையேந்தும் எம்.எஸ்.சி. பி.ஹாச்.டி - திருமலை கொழுந்து

'கோழிகளின் குமுறல்' !! - கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

இன்னும்....

தமிழோவியம்!!! தமிழோவியம்!!! தமிழோவியம்!!!

Wednesday, February 14, 2007

கொசுபுடுங்கி கவிதை

கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).

காதல் பரிசாய்
உறிஞ்சிக் கொடுத்தேன்
ஒரு துளி இரத்தம்

தியேட்டர் போகலாம் என்றாள்.

மூட்டை பூச்சிகளோடு
மோத வேண்டாம்என்றேன்.

பீச்சுக்கு? என்றாள்
ஈக்கள் இருப்பது போதாதா அங்கே

பார்க்?

காதலர்கள் அங்கே கூடினால்
காவல்துறை நசுக்கிவிடும்

அவள் சொன்னாள்
come on darling B+.


+ = (Positive)
============

மணிகண்டன் கேள்விகளுக்கு என் பதில்

மணிகண்டன் கிரிக்கட் கேள்விகளக் கேட்டு ஒரு பதிவு போட்டிருக்கார்...பின்னூட்டமாய் நான் அளித்த பதில்கள்.

எல்லாமே சரியான விடைகள்.

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?
அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது
அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?
ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?
ஓப்பனிங் பௌலர்

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?தொடர்ந்து நல்லா ஆடியவர்

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?
டெஸ்ட் போட்டி அதிகமா ஆடறவங்க 'வீரர்' இல்ல

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?
அட இந்தியராத்தான் இருக்கணும்

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?
சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?
ஓடத் தெரியாதவர்

10. 'Obstructing the Field' என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?
தடி மாடு

எப்டி நம்ம க்ரிக்கட் அறிவு?

Tuesday, February 13, 2007

கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)

'கவி தந்த விதை' என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு


கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

அவள்.
சங்கத் தமிழ்முன் ஓர்
அங்கமானோமே
எதற்கு?

அவன்.
கன்னித்தமிழாயிருக்கும் உன்னை
அன்னைத்தமிழாக்கத்தான்.

அவள்.
இனிய தமிழில்
என்ன பிடிக்கும் உனக்கு?

அவன்.
'முத்த'மிழ்.
தரவா?

அவள்.
தீந்தமிழ்போல்
தீண்டலில் இன்பமுண்டா?

அவன்.
செந்தமிழாய்ச் சிவக்கும் உன்
கன்னத்தைக் கேளேன்?

அவள்.
பால்?

அவன்.
இன்பத்துப் பாலே
இந்த
இரவுக்குப் போதும்.

அவள்.
'இதில்' நீர்
மூத்த தமிழோ?

அவன்.
இல்லை நான்
பிள்ளைத் தமிழ்
சொல்லித்தா உன்
கிள்ளைத்தமிழ்.

அவள்.
மரபுக்கவிதை ஒன்றை
புதுக்கவிதையாக்கப் பார்க்கிறாய்.

அவன்.
இலக்கணம் கற்கும் இரவா இது?
இலக்கியம் படைப்போம் வா.
இன்பத்தமிழ் பருகவே இந்த இரவு
தாய்த் தமிழ் சொன்னதில்லையா உனக்கு?

அவள்.
பேச்சுத் தமிழ் குறைத்துவிட்டு
நாடகத் தமிழ் பழகச் சொல்கிறாய்.

இசைத் தமிழாய்
அவள் இசைந்தாள்
வன் தமிழாய்

அவன் இசைத்தான்.

வீரத் தமிழ் வீழ்ந்து கிடந்தது
விழிப் பார்வையிலே

மறத்தமிழ் மறந்துபோனது
காதல் மயக்கத்திலே.

சந்தத்தமிழாய் இதயங்கள் துடித்தன
முந்தைத் தமிழ் கவிதைகள் புரிந்தன.

இனித் தமிழ்
இனிதமிழ்.



==============
விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்

பதிவர்களின் கவிதைகளைக் கொண்ட காதலர்தின சிறப்பு நிகழ்ச்சி இப்போது ஒலிFM இணைய வானொலியில் ஒலிக்கப் போகிறது. நேரம் 7:30 EST 13th feb.
7:00 AM14thFeb Indian time.

முந்தைய அறிவிப்பில் நேரங்கள் தவறாக குறிக்கப்பட்டிருந்தன.

http://www.olifm.com/liveradio.php

கவிதை கேளுங்கள்

கவிதை எழுதுறதுன்னாலே எனக்கு பயம். கவிதைக்குரிய வார்த்தைகள் பலவும் எனக்கு பரிட்சயமில்லை. ஆனாலும் புதுக்கவிதைகள் சில படிக்கும்போது அடடா நாமும் எழுதலாம்போல என நினைப்பேன்.

அப்படி எழுதிய கவிதை ஒன்றை இன்று ஒலிFM இணைய வானொலியில் காதலர் தினத்தன்று கேட்டுமகிழலாம். சக பதிவாளரும் அனுபவம் மிகும் எழுத்தாளருமான ஷைலஜா, எனது உட்பட்ட சில காதல் (நிஜமாங்க) கவிதைகளை தொகுத்து வழங்குகிறார்.

அமெரிக்க நேரம்: 13th Feb 7:30 PM EST
இந்திய நேரம் : 14th Feb 7:00 AM IST

http://olifm.com/

நிகழ்ச்சி 2 மணி நேரம் கடைசில (முத்தாய்ப்பா?) என் கவிதையும் வரும்.

மறு ஒலிபரப்பு 13th: 12AM 14th: 6AM, 12 PM and 6AM EST.

சக பதிவாளர்கள் அண்ணாகண்ணன், ப்ரியன், மதுமிதா, மு. கார்த்திக்கேயன், உதயக்குமார், ஆசாத், ஷைலஜா ஆகியோரின் படைப்புக்களும் இடம்பெற இருக்கின்றன. வாய்ப்பளித்த ஒலிக்கும், ஷைலஜா அவர்களுக்கும் நன்றி.

காதல் கவிதைகள் எழுதவேண்டிய வயசில் கர்வம் பிடித்தலைந்தேன். அதனால் காதல் வாய்க்கவில்லை கவிதையும் வாய்க்கவில்லை(இத பிரிச்சுபோட்டா கவிதையாயிரும்ல?) அதனால இந்த காதலர் தினத்துக்கு ஒரு குட்டி தொடர் ஒண்ணு துவங்கப் போறேன். ரெம்ப குட்டித் தொடர். முழுவதும் காதல் கவிதைகள். படிக்க மறக்காதீர்கள்.

இன்று பதிந்த மற்ற பதிவுகள்.

தேன்200: ஜி. ராகவன்
சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்
செய்திகள் வாசிப்பது ... - 2

தேன்200: ஜி. ராகவன்

தேன்200 என்று தொடராய் பதிவர்கள் இந்த தேன் பதிவுபற்றி எழுதியிருந்தார்கள். நம்ம ஜி. ராகவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கார். படியுங்க.

தேன் சிந்துதே வானம்

தேன் சிந்துதே வானம்னு கவியரசரு சொன்னாரே அது உண்மையாகுமான்னு யோசிச்சுப் பாத்தா ஆகும்னு ஒருத்தர் நிரூபிச்சிருக்காரு. ஆமாங்க. சிறில் அலெக்ஸ்தான். ஒருதுளி இருதுளின்னு கூடிக் கூடிச் சிறுதுளி பெருவெள்ளமாகி எரநூறு பதிவுகள் போட்டிருக்காரு. அந்தப் பெருவெள்ளத்துல ஒரு டம்ளர் மோந்து குடிக்கலாமா?

சிறில் இருக்குற நாடு அமெரிக்கா. ஊரு ஷிகாகோ. அதாங்க சிக்காகோன்னு சொல்லுவோமே. அந்த ஊருதான். அந்த ஊருல இருந்துக்கிட்டு குளிருல நடுங்கிக்கிட்டு (ரஷ்ய நாட்டு மருந்து வேலையா இருக்குமோ?) தேன் வலைப்பதிவுல 200 பதிவுகள் போட்டிருக்காரு. பைபிள் கதைகள்ல ஒரு 32. முட்டத்துல 21. இப்பத் தமிழ்ச்சங்கத்துல ஒன்னு. இப்படிப் பதிவுகளை வாரி வாரி வழங்கும் வள்ளல் சிறில்.

எல்லாருக்கும் ரொம்ப நாள் கழிச்சுதான் விருது குடுப்பாங்க. ஆனா சிறில் வரும் போதே ஆஸ்காரோடதான் வந்தாரு. ஆஸ்காரோட வந்து? கெடா வெட்டுனாருங்க. கெடான்ன கெடா பெருங்கெடா. இன்னைக்குக் கெடாக் கெடா. சொவைச்சுப் பாருங்க. நல்லாயிருக்கும்.
கெடா வெட்டுன கையோட போலிக்கு ஒரு வேண்டுகோள் வெச்சாரு. அது நியாயமான வேண்டுகோள்தான். போலியப் பத்திப் பேசுனா புனிதத்தைப் பத்தியும் பேசியாகனும்ல. அதான் ஒருவர் புனிதராவது எப்படீன்னும் பதிவு போட்டாரு.


தூத்துக்குடி கன்யாகுமரி நாகர்கோயில்காரங்களுக்குப் பழக்கமான சில பக்திப்பாட்டுகள் உண்டு. ஆமா. கிருத்துவ பக்திப் பாட்டுக. கேளுங்கள் தரப்படும்ல தொடங்கி, மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்னு தொடரும். நீலக்கடலின் ஓரத்தில் பாட்டுக் கேக்கும் போது அப்படியே சிலுத்துக்கும் பாருங்க. அடடா! தேவராஜன் மாஸ்டர் இசையில கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியது. எனக்குப் பிடிச்சக் கிருத்துவப் பாட்டுகள்ள அதுக்குத்தான் முதலிடம். இப்படிப்பட்ட பாட்டுகள அடுக்கி அவரு ஒரு பதிவு போட்டாரு. அதுலதான் ஏவாளை ஏமாற்றுவேன்னு எல்.ஆர்.ஈஸ்வரி மெல்லிசை மன்னர் இசையில பாடிய பாட்டு கிடைச்சது. அடடா! அது பாட்டு.

ஆனா பாருங்க....நம்ம எப்படி கிருத்துவப் பாட்டுகளையும் கேட்டு ரசிக்கிறோமோ..அதே போல சிறில் நல்ல இந்துப்பாட்டுகள ரசிச்சிருக்காரு. இன்னமும் ரசிக்கிறாரு. அதுக்குச் சாட்சிதான் இந்தப் பதிவு. தமிழ்ப் பாட்டுன்னா முருகன் பாட்டு இல்லாமலா? கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பாடலுக்கு மயங்காதார் யார்? சிறிலையும் சேத்துத்தான். இந்தப் பாட்டு வாலி எழுதி டி.எம்.எஸ் இசையமைச்சுப் பாடியது. திரைப்படத்துல பிரபலமாகும் முன்னாடி வாலி எழுதி ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சி டி.எம்.எஸ் கிட்ட குடுத்தாராம். அவரும் பக்தியா வாங்கி இசையமைச்சிப் பாடியிருக்காரு. இப்படித்தான் வாலி கொஞ்சம் கொஞ்சமா புகழடைஞ்சது. ஆனா பாருங்க...வாலி முருக பக்தராம். ஆனா ஆனந்த விகடன்ல ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புதுக்கவிதைல எழுதுனாரே....கந்தன் கருணைய மறந்துட்டாரே! வாலி இது ரொம்ப மோசம். :-(

நம்ம சினிமாக்காரங்க திருட மாட்டாங்க. திருடுனாலும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனாலும் சிறில் அந்த மாதிரி திருடப்பட்ட படங்களப் பட்டியல் போடுறாரு. படிச்சுப் பாருங்க. அதே நேரத்துல ஒரேடியா சினிமாவுக்குள்ளயும் போயிராம தான் சார்ந்திருக்கும் மதத்தில் சாதீய நிலையைப் பற்றி நேர்மையா ஒரு அலசல் செஞ்சிருக்கார் சிறில். Good show Cyril.

நடுவுல மதுமிதா திடீர்னு வலைப்பூக்கள வெச்சி ஒரு சர்வே எடுத்தாங்களே. அதுக்கு சிறில் தன்னுடைய விவரங்கள இந்தப் பதிவுல குடுத்திருக்காரு. அதுல நம்மளையும் அவர் நண்பர் கூட்டத்துல சேர்த்திருக்காரு. நன்றி சிறில். அடடா! நண்பருக்கு நன்றி சொல்லக் கூடாதோ! :-)

ஒரு படத்தப் பாத்துட்டு அதப்பத்தி விமர்சனம் பண்றது ரொம்பக் கஷ்டம். ஆனா தான் பாத்த புதுப்பேட்டை படத்தை இப்படி விமர்சனம் செஞ்சிருக்காரு சிறில். இந்த விமர்சனத்தப் படிச்சாலே படம் பாக்குற ஆச வருதுல்ல?

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறுன்னு பாடிக்கிட்டே சிவாஜி ஆறுபடை வீட்டுக்கும் போயிட்டு வருவாரு. அதுமாதிரி நம்ம வலைப்பூ நண்பர்கள் எல்லாருமே ஆறிப் போகுமுன்னே ஆறு பதிவு போட்டாங்கள்ள. அதுல சிறிலோட வேலை இதுதான். அதுல பாருங்க...அதுக்குத் தலைப்பு 6..6..6ன்னு வெச்சதுலதான் அவருடைய குறும்பு தெரியுது.
டாவின்சி கோடு. யார் மறக்க முடியும் அந்தப் புத்தகத்தை. மிகவும் விறுவிறுப்பான மசாலா புத்தகம். அது புத்தகமாக வந்ததை விட திரைப்படமாக வந்த பொழுது எழுந்த எதிர்ப்புகள் இருக்கிறதே...அடடா! அதுவும் இந்தியாவில்! அந்த எதிர்ப்பில் சிறில் தன்னுடைய கருத்தையும் எடுத்து வைத்தார். அவருடைய கருத்தோடு நான் ஒத்துப் போகவில்லை என்றாலும் அவரோடு அந்தப் பதிவில் கலந்துரையாடினேன். அந்தப் படத்தை தடை செய்வது என்பது கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதாகும் என்பது என் நிலை. வாட்டர் படத்திற்கு நடந்தது அதுதானே. படத்தில் சொல்லப்பட்டிருப்பது பொய்யென்று கருதினால் அது நிச்சயம் நிலைக்காது என்பதே என் கருத்து.

நடிப்புக் கலையின் நிலையைச் சிலையில் சொல்ல விரும்பினால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை தமிழகம் முழுவதும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதுதான் என்பது சிறிலின் கருத்து. என்னுடைய கருத்தும் கூட.
அறிவியல் புனைவுக் கதைகள் எழுதுவது எளிதன்று. ஆனால் மிகவும் எளிமையாகச் சரியாகச் சுவையாக ஒரு கதை. முடிவில் ஒரு முடிச்சு போடுகிறார் பாருங்கள். அடடா! சிறில்....எங்கயோ போயிட்டீங்க. ஞானசம்பந்தரப் பாத்து அப்பர் நெனச்சதுதான் எனக்கு இப்பத் தோணுது. :-)

சுதந்திரதின வாழ்த்து எப்படிச் சொல்வோம். வாழ்த்துகள்னு சொல்லித்தான. ஆனா சிறில் தாகூரின் ஒரு கவிதையை எடுத்து மொழி பெயர்த்து அது வழியா வாழ்த்துச் சொல்லீருக்காரு. ரொபீந்ர ஷொங்கீத் கேப்பீங்களா சிறில்?

பொற்கிளின்னா என்ன? பொன்னால் செய்யப்பட்ட கிளின்னு சொல்லொரு சொல் பதிவு எழுத மாட்டேன். பயப்படாதீங்க. துணிய டர்ருன்னு கிழிச்சு அதுல பொன்ன வெச்சுக் கொடுத்தா அதுதான் பொற்கிளி. அந்தப் பொற்கிளிய இலவசக் கொத்தனார் எப்படி தள்ளிக்கிட்டுப் போனாருன்னு தெரியுமா? இந்தப் பதிவப் படிச்சுப் பாருங்க. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மாதிரி...ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய சிறில்னு ஒங்களுக்குத் தெரியும்.

கோவி.கண்ணனுடைய புகழ் நாளிதழ்களில் வந்ததை யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. அப்பொழுது பதிலளிப்பாரா கோவி என்று துணிச்சலோடு பதிவிட்டதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தத் துணிச்சலோடுதான் இன்னொரு பதிவும் போட்டார். போப் அவர்கள் இஸ்லாம் பற்றிச் சொன்னதாக ஒரு பிரச்சனை எழுந்ததே நினைவிருக்கிறதா? அது பற்றி வந்த கார்டூன் படங்களையெல்லாம் தொகுத்து ஒரு பதிவு போட்டார். அவர் சார்ந்துள்ள மதத்தையும் அவரது நம்பிக்கையையும் தாண்டி அவர் போட்ட பதிவு இது. கடவுள் நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் சரியாகப் புரிந்து வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்.

மரண தண்டனை. மரணமே அனைவருக்கும் அச்சத்தைத் தருவது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த மரணமே ஒருவருக்குத் தண்டனை என்றால்? தமிழ்மணமே பற்றி எரிந்த பதிவுகளைத் தொகுத்து ஒரு பதிவு. படித்துப் பாருங்கள். அப்படியே கொஞ்சம் மேலே வந்தால்....இலவசத்துக்கான கதை. படிக்கப் படிக்கச் சிரிப்புதான். இந்த வரிகளைப் படியுங்கள். உங்களுக்கே விளங்கும். "நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா?".

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இருநூறு பதிவுகளையும் தாண்டி இன்னமும் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய அத்தனை பதிவுகளையும் பற்றிச் சொல்வதென்றால் நேரம் பத்தாது. அதிலும் நான் அவரது சமீபத்திய பதிவுகளை விடுத்துப் பழைய பதிவுகளை அறிமுகப் படுத்தியுள்ளேன். தமிழில் படிக்கக் கிடைக்கும் வலைப்பூக்களில் சிறில் அலெக்சின் தேன்....பலபடித்தேன் என்பதால் அவரது பதிவுகள் பல படித்தேன். வாழ்க. வளர்க.

அன்புடன்,
கோ.இராகவன்

========================================
அன்பு நண்பருக்கு நன்றிகள்.

என்னடா இவன் அடுத்தவங்கள கேட்டு இப்படி பதிவாப் போடுறானேன்னு யோசிக்கிறீங்களா. உண்மையச் சொல்லப்போன என்னுடைய படைப்புக்கள் மீது எனக்கு நம்பிக்கை மிகக் குறைவு. யாராவது நல்லா இருக்குன்னு சொன்னாதான் நம்புவேன். நம் பதிவு ஏதாவது தாக்கத்த உருவாக்கியிருக்குதா, இல்ல மக்கள் தேனில் படித்த எதையாவது நினைவில் வைத்திருக்கிறார்களா என அறியும் முயற்சிதான் இது. கூடவே ஒரு விளம்பரமும். :))

தேன்200ல் தங்கள் மேலான கருத்துக்களை முன்வைத்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.

சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்

முகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா?

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

இறுதிச் சடங்கு பற்றிய அறிவிப்பு.

உங்கள் வலைத்தளங்களிலும் இந்த மின்னஞ்சல் முகவரியை அறிவியுங்கள் என வேண்டுகிறேன்.




Monday, February 12, 2007

செய்திகள் வாசிப்பது ... - 2

முந்தைய குரற்பதிவு

அலசலில் இன்று...

1. தேன்கூடு கல்யாண் - ஒன்றுபடுவோம், செயல்படுவோம்

2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது

3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது

4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம்

5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி

6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது

7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி

Sunday, February 11, 2007

தேன்கூடு கல்யாண்

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.

தேன் உண்ணத் தந்துவிட்டு
தேனீக்கள் பறந்துவிடும்

மழைநீரைப் பொழிந்துவிட்டு
மேகங்கள் கலையும்

பாதைக்கு வழிகாட்டி
பகலவனும் மறையும்

சுடர் ஏற்றி வைத்தவர்
சுடராகி நிற்கிறார்

இணையம் தந்த இனிய நண்பர்.

இனி எங்கே தேடுவது
இந்த ராஜாத் தேனீயை

தனக்குச் சாவில்லை
எனும்
கர்வத்தில்தான் கடவுள்
மரணத்தை அளிக்கிறான்போலும்.

கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க
கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?
செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க
தங்கக் காசுகள் மறைவதும் ஏன்?

இணைய நட்பை பிரிவதிலேயே
இத்தனை சோகமென்றால்
இனிய தந்தையை
வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?

சொல்ல வார்த்தையில்லை.
என் கண்ணீருக்குத் தடைபோடவே
இந்தக் கவிதை.

மனம் கேட்கலைங்க. இந்த இளம் வயதில் இந்த சாதனையாளரை மரணம் கவ்விக்கொண்டது மாபெரும் சோகம். என்னோடு குறுகிய காலம் மின்னஞ்சல் தொடர்புவைத்திருந்தார். ஒருபோதும் தேன்கூட்டை உருவாக்கியவர், நிர்வகிப்பவர் என்கிற கர்வம் துளியும் தென்பட்டதில்லை அவரது வார்த்தைகளில். அவரின் கருத்துக்களையும் ஒரு suggestionஆக வைப்பாரே தவிர திணிப்பதில்லை. நான், என் கொள்கை என ஈகோவில் ஆடிக்கொண்டிருக்கும் பல இணைய ஆளுமைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர்.

ஐயோ கொடுமைங்க.

கடவுளை நம்புறவங்க வேண்டிக்கங்க, நம்பாதவங்க அடுத்தவங்க நம்புகிற கடவுளிடம் வேண்டிக்குங்க, இறந்தவருக்காகவும் அவரை நம்பி இருந்தவர்களுக்காகவும்.

1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
8. மா. சிவகுமார்
9. யெஸ். பாலபாரதி

ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50" ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது.

இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.

இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். "இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது" (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.

இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, "Every run counts from now on", அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?

நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது. உதாரணத்துக்கு ஒரு தடிமனான வெளிப்புற விளிம்பு ஆகுதுன்னு வையுங்க. (திரும்ப படிச்சுப் பாருங்க புரியும்). என்ன அழகா அத அடிச்சார்னு சொல்வாங்க. (Thick outside edge). உண்மையில் பேட்ஸ்மேன் தடுமாறியிருப்பார். பாதி ஓடுனதுக்கப்புறம்தான் பந்து எங்க போனதுன்னு அவருக்கே தெரியும் ஆனா 'என்ன அழகா பந்த திசைதிருப்பி வழிகாட்டினார்'னு வர்ணிப்பாங்க.

அப்பீலுக்கு அவுட் குடுத்தா கட்டம் போட்டு காட்டி அவுட் இல்லன்னு நம்பவைப்பாங்க குடுக்கலேன்னா அவுட்டுன்னு நம்பவைப்பாங்க.

தேவையில்லாம அம்புக்குறியும் வட்டமும் போட்டு ஃபீல்ட் பொசிசன் சொல்லுவாங்க.

இதுகளக் கேட்டு கேட்டு கமெண்ட்ரிக்கு கமெண்ட் அடிச்சிட்டு எப்படியும் கெலிச்சுடலாம்னு இருக்கும்போது...

பேசாம ஒரிஜினல் ப்ளான்படி கேசினோவுக்கே போயிருந்திருக்கலாம். அங்கேயாவது The house always winsனு நமக்குத் தெரியும்.

இதுல புதுசா பவர்ப்ளே(Powerplay)ன்னு ஒண்ணு. நானும் ஏதோ பந்த சும்மா தூக்கிபோட்டு பேட்ஸ்மேன் four, sixனு அடிச்சுத் தள்றதுதான் 'பவர்' ப்ளேன்னு நெனச்சேன். அம்பயர் பெருசா வட்டம் போடும்போதே எனக்குத் தோணியிருக்கணும் அதுல ஒண்ணூமிலேன்னு.

இலங்கை வேகப் பந்து வீச்சாளர் ஒருத்தர் மாங்கா அடிக்கிறமாதிரி போடுறாரு. தலையெல்லாம் டை அடிச்சுகிட்டு வந்தாரே அவர்தான். இவருடைய ஆர்ம் அக்சன் பத்தி யாரும் கமெண்ட் அடிக்கல. ஏன்னா கை வளஞ்சிருக்குன்னு சொல்லி இலங்கைகாரங்க தப்பிச்சுக்குவாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல.

கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட 'அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு' சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)

ஸ்ரீசாந்த் அடிக்காமல்போன அந்த சிக்சரால் ஒரு இரவின் விழிப்பு வீணாப் போச்சு. இலங்கை டீம் தளராமல் விளையாடினர். They deserve it man! (or woman!).

Saturday, February 10, 2007

இதுதாங்க இந்தியா

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி.

அவர் பதிவுல 'மிலே சுர் மேரா துமாரா' பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது.

இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே 'ஸ்டுப்பிட்ஸ்'ன்னு சொல்ல நான் கொஞ்சம் சொல்லாடவேண்டியிருந்துச்சு. நான் இறுதியா சொல்லிட்டு வந்தது 'இதுதாங்க இந்தியா. இதுதான் நாம. இவங்கதான் நம்ம மக்கள். இதுல எந்த மாற்றமும் இல்ல.' அந்தக் கிண்டல் செய்தவர் ஒரு இந்தியர் என்பதால் சற்று கோபம் வந்தது, மத்தவங்களுக்கு நம்மைப் பற்றிய அறிவு இருக்கணும்ற அவசியமில்ல.

நான் மூடப் பழக்கங்களை வளர்க்கவேண்டும் எனச் சொல்ல வரல. நமக்கு மூடமாப் படுறது அத்தவருக்குத் தெய்வீகமாப் படுதே? நீங்க உணர்ந்ததுபோல அவரும் அதை மூடமாக உணரும் காலம் வரும். அதுவரைக்கும் அவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம். கிண்டலாவோ கேலியாவோ கீழ்த்தரமாகவோ இவங்களப் பத்தி பேசவேண்டாமே.

இந்தமாதிரி ஒரு கலவை எந்த நாட்டிலேயும் இல்ல. மெல்டிங் பாட் எனச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா வரும் பிற கலாச்சார மக்கள் தங்கள் கலாச்சாரத்த அமெரிக்கனைஸ் பண்ணிக்கிறாங்க. மெல்ட் பண்ணித்தான் ஆகணும்.

மிக மோசமான மூடப் பழக்கங்களும் உன்னதமான உயர் தத்துவங்களும் ஒருசேர இருக்கிறது இங்கேதான். பலவேளைகளில் இவை மிக நெருக்கத்திலேயே இருக்கக் காணலாம்.

எத்தனை கலாச்சாரங்களை உள்ளடக்கியிருக்குது? எத்தனை மொழிகள்? எத்தனை விழாக்கள், கொண்டாட்டங்கள்? எத்தனை விதமான ஆடைகள் (இப்ப எல்லாமே ஜீன்ஸ் சுடிதார்தான்னு சொல்றீங்களா?)

இதுவே நமக்கு பாதகமாகவும் சில நேரங்களில் அமையுது. அழகாயிருக்கிறப் பூவைத்தான் பறிக்கிறோம். அதனால பூவுக்கு அழகு கூடாதா? நிச்சயமாயில்ல. ஊருக்குள்ள ஆயிரம் சண்டையிருக்கலாம் ஆனா வெளிய வந்துட்டீங்கனா நாமெல்லாம் இந்தியர்கள்தான்.

வேற்றுமையில் ஒற்றுமை வெறும் வார்த்தைகளில்ல. அவனப் பின்பற்றச் சொல்லு இவனப் பின்பற்றச் சொல்லுண்றதுக்குப் பதிலா நாம என்ன செய்யப்போறோண்றதுதான் முக்கியம்னு தோணுது.

கால்கரியார் சொல்றமாதிரி இந்தப் பதிவ, பாடல பார்த்ததற்கப்புறம் இந்தியா, இந்தியர் பற்றிய ஏதாவது ஒரு மனத்தடைய நீக்கினோமானால் அதுவே பெரிய விஷயம்.

இந்தப் பாடல் எத்தனை அழகா பதிவாக்கியிருக்காங்க. நம்ம கமல்கூட அழகா ஆக்ட் குடுத்திருக்காரு.

இந்த பாட்டக் கேட்டாவது காவிரித் தண்ணி தராவிட்டாலும் கர்நாடகாவில் வாழும் தமிழர்களோடு நட்பு பாராட்ட முன்வருவார்களா? முடங்கிக்கிடக்கும் தொழில்களும் போக்குவரத்தும் தொடர முயல்வவர்களா?

இசைந்தால்
நம் இருவரின் சுரமும் நமதாகும்
இசைவேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
முகிலாய் மழையாய் பொழிவதுபோல்
இசை
நம் இசை


இசை எத்தனை அருமையான ஒப்பீடு. இசையின் வடிவங்கள் பல. எதுவானாலும் நம் ரசனைக்கேற்ப ரசிக்க முடிகிறது. ஒரு பொதுவான வரையறைக்குள் இயங்குவதால் இருவேறு வகையான இசைகளை இணைப்பது எளிது.

இன்னும் பேசிகிட்டேயிருக்கலாம்.. சரி கீழ இருக்கிற நாலு வீடியோக்களிலும் ஒரே பாடல்தான்ன் ஆனா வேறு விதங்கள்ளில் படமெடுக்கப் பட்டிருக்குது. பாருங்க. மனசுல வச்சுகுங்க...

"இசைந்தால் (சம்மதித்தால் அல்லது ஒன்றாகினால்)
நம் இருவரின் சுரமும் நமதாகும்."

"மிலே சுர் மேரா துமாரா தோ சூரு பனே ஹமாரா."

பாடல் கேட்கும்போது ஏதாவது மொழியோ ஆளோ வந்ததும் உங்க மனசுல நெருடலாத் தோணுச்சுனா பாஸ் போட்டுட்டு கண்ணமூடிக்கிட்டு ஜெய்ஹிந்த்தோ, ஐ லவ் இந்தியாவோ சொல்லிகிட்டு மீண்டும் பார்க்கவும்.

பதிவின் முதல் வரியப் படிச்சீங்கல்ல.


:)

(சாந்தமான சிரிப்புக்கும் இதே ஸ்மைலிதானா)





Friday, February 09, 2007

ச்ச்சும்மா டைம் பாஸ் மச்சினிச்சி - வலைமுத்து கவிதை

உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா?
உன் டெம்ப்ளேட்டில் நான் கருவியா காலியிடமா?
உன் கருத்துக்களில் நான் சூப்பரா சூனியமா?
உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?
உன் வாக்குகளில் நான் தம்ஸ் அப்பா தம்ஸ் டவுனா?
உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?
உன் வகைப்படுத்தலில் நான் பொதுவானவையா நகைச்சுவை/நையாண்டியா?
உன் குழுப் பதிவில் நான் அட்மினா(Admin) ஜஸ்ட் அட்மிட்டடா?(Just admitted)
பின்னூட்டுபவர்களில் நான் ஆனானியா அதர் ஆப்சனா?
உன் பெயர்களில் நான் உண்மையா புனைபெயரா?
உன் ப்ரொஃபைலில்(Profile) நான் நீயா போலியா?

உன் சைட் பாரில் பத்து சுட்டி
என் சைட் பாரில் பத்து சுட்டி
தூரத்தில் எவனோ தூன்னு துப்புறான்
இணையத்தின் வழியே எச்சிலையே அனுப்புறான்.



சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தார் பாஸ்டன் பாலா.
தலைப்பு உபயம் லக்கி லுக்கார்.

.

Thursday, February 08, 2007

Anna Nicole Smith collapses, dies at 39 (நிக்கோல் ஸ்மித் திடீர் மரணம்)


முன்னாள் மாடலிங் அழகி ஆனா நிக்கோல் ஸ்மித் ஃப்ளோரிடா காசினோ ஒன்றில் திடீரென இறந்தார். வயது 39.





நீ இல்லாத நான்


கவனித்துக்கொண்டிருக்கும்
கள்வனைப்போல
நீ சென்றதும்
தொற்றிக்கொண்டது தனிமை.

நீயில்லா என்னை, நானே வெறுக்கிறேன்.

வெற்றிடம் நோக்கிப்
பாயும் காற்றாய் மனதை
அழுத்தும் நினைவுகள்.

பசியிருக்கிறது
பதார்த்தமுமிருக்கிறது
பரிவுதான் இல்லை.

தொலைக்காட்சித் தொடர்களில்
அழுதுவடியும் பெண்களைப்
பார்த்து சிரிக்கின்றேன்
உன் பிரிவைவிடப் பெரிய சோகமா?

சுவற்றில் நகச்சுரண்டலின்
தடம் தேடிப் பொழுதைக் கழிக்கிறேன்
கழுவிவைத்துச் சென்ற பாத்திரத்தில்
கை ரேகையை பாதுகாக்கிறேன்

சோலையின் அழகை உணராதப் பூவைப்போல
நீ இருக்கும்போது தெரியவில்லை உனதருமை.

இன்று மட்டும்,
தொட்டி ரோஜாவில் இரட்டைப் பூக்கள் ஏன்?
சிட்டுக்குருவி, துணையோடு வந்தது ஏன்?
மெட்டுருகும் பாடல் மட்டும் வானொலியில் கேட்பது ஏன்?
கிட்டக் கிடக்கும் உன் தலையணைகள் தூரமாய்த் தெரிவது ஏன்?

கன்னத்தில் கைவைத்து
நினைவுகளுக்கு முட்டுக் கொடுக்கிறேன்
அந்தக் கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
மனக்கண்களில் ஓடிக்கொண்டிருக்கிறது,
முடிவில்லா சுழற்சியில்.

தனிமையில் தூக்கம் துக்கம்.

நள்ளிரவில் விழித்துக்கொண்டு
உன்னை அழைத்தேன்
மீண்ட சில அழைப்புக்கெல்லாம் மௌனமே பதில்.
விழித்தபோது
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.

கண்கள் மூடவில்லை.
உன்னைப்பற்றிய கனவுகளைவிட
நினைவுகளே இனியது.
=============================சிறில் அலெக்ஸ்

Tuesday, February 06, 2007

செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி)

'போலி' - செய்வதெப்படி?

தேவையானப் பொருட்கள்

மைதா-இரண்டு கோப்பை
கடலைப்பருப்பு- ஒன்னரை கோப்பை
வெல்லம்-ஒரு கோப்பை
தேங்காப்பூ-அரைக்கோப்பை
ஏலப்பொடி-கால் தேக்கரண்டி
மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
உப்புத்தூள்-கால்தேக்கரண்டி
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
நெய்-கால்க்கோப்பை

செய்முறை
மைதாவில் உப்புத்தூள், மஞ்சத்தூளைப் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை சொட்ட வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காப்பூவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.

பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.

பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் கட்டையால் தேய்க்கவும். இதேப்போல் எல்லா மாவையும் செய்து வைக்கவும்.

பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

தலைப்பை பார்த்துவிட்டு வேறெதாவது எண்ணத்தில் வந்தீர்களானல் மன்னிக்கவும். ப்ளீஸ், தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது என பின்னூட்டம் போடாதீங்க.
:)))))

குறிப்புக்கு நன்றி: அறுசுவை

சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))

பதிவுலகில் இன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம்... சண்டைக் காட்சிகளும் சோகக் காட்சிகளும் நிறைந்த...



Its not a movie on WAR. It is WAR.

இயேசு சொன்ன கதைகள் - 4

கேளுங்கள் தரப்படும்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார்.

மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.
இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். சோதனையில் எம்மை விழ விடாதெயும். தீமையினின்று எங்களை விடுவித்தருளும். ஏனெனில் அரசு வல்லமையும் மாட்சிமையும் என்றென்றும் உமதே.'

மிகவும் எளிமையான அதெவேளை இறைவனைத் தந்தையென உரிமையோடு அழைத்து வேண்டும் செபம் இது.

செபங்கள் கேட்கப்படுகின்றனவா? இதை நிருபித்தால் கடவுளையும் நிருபிக்கலாமே? எனும் கேள்விகள் எழுகின்றன. அதிசயங்கள் பலவும் எல்லா காலகட்டங்களிலும், எல்லா மதங்களிலும், வேண்டுதல்களின் பலனாக விளைவதாகச் சொல்லப்படுகின்றன. கடவுள் எப்படி நம்பிக்கைக்குட்பட்டவரோ அதேபோல அற்புதங்களும் அறியப்படுகின்றன.

கடவுள் உதவுவார் எனும் நம்பிக்கை தன்நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். சோதனைக் காலங்களில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேண்டுதல்களளே துணை. நம்பிக்கையே கைத்தடி.

வேண்டுதலின் உளவியல் கூறுகளை ஆராய்ந்தால் அதன் மனித பலன்கள் பலவாக இருக்கும். சோதனை மிகும் வேளையில் அது எப்படியாவது விலகும் எனும் நம்பிக்கை ஊக்கம்தருமே தவிற வேறென்ன?

மீண்டும் மீண்டும் செபிக்கும்போது ஒரு கவலைகுறித்தான (கவலை தவிர்த்த) மாற்றுச் சிந்தனை நம்மில் பிறக்கிறது.

ஒரு ஊரில் ஒரு நீதிபதி இருந்தான். கடவுளை அஞ்சாதவன்; மனிதரை மதிக்காதவன். அந்த ஊரில் இருந்த ஒரு விதவை நீதி கேட்டு அவளிடம் வருவது வழக்கம். பலமுறை வந்தும் அந்த நீதிபதி மனம் கசியவில்லை. இறுதியாய் அந்த நீதிபதி 'நான் கடவுளுக்கு அஞ்சாதவனாயும் மனிதரைப் பற்றி கவலையற்றவனாயும் இருந்தபோதும் இவள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வதால் இவளுக்கு நீதி வழங்குவேன்.' என்றான்.

'அந்தப் பண்பற்ற நீதிபதியைப் பாருங்கள். இவனைவிட விரைவாக இரவு பகலாய் தன்னை வேண்டும் மக்களின் வேண்டுதலைக் கடவுள் தரமாட்டாரா?' என்றார் இயேசு.

நன்றி: தமிழோவியம்

Monday, February 05, 2007

'த'வுல 'இ' காண முடியுமாங்க?

ஆமாங்க! பொண்டாட்டி புள்ளைய இந்தியாவுக்கு வண்டியேத்தி விட்டுட்டு தனிமையில உக்காந்திருக்கேன்.

வரும் இரு மாதங்கள் கொஞ்சம் (உருப்படியா) எழுதுறதுல செலவிடலாம்னு நினைக்கிறேன்.

தேன்200 பதிவுகளில் மதிப்புக்குரிய நம் சக வலைப்பதிவாளர்கள் சிலர் என்னை நட்பு மழையில் நனைத்தெடுத்ததில் ஜலதோஷமே வந்திடுச்சு(கூடவே கொல்லும் சிகாகோ குளிரும் -25
-30ன்னு டிகிரி மைனஸ்ல எகிறிட்டிருக்கு). அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

இப்ப புரியுதா? 200 பதிவுகள் சீக்கிரம் போடணும்னா ஓசி பதிவுகள் போடத் தெரியணும்.

நண்பர்களே இன்னும் இரண்டு மாதங்கள் தனிமையில்... பதிவுகளை படிப்பதிலும் எழுத்திலும் கவனம் செய்யலாம் என இருக்கிறேன். (பாப்போம்).

தேன்200:உஷா, நிர்மல்

நிர்மல்
வலைபதிவுகளும் தமிழ்மணம் திரட்டியும் அறிமுகமானது சிறிலின் வலைப்பதிவுகள் மூலம்தான். குகிளின் தமிழ் தொடர்பான வார்த்தை தேடுதலின் போது பாறைகள் , அலைகள் மற்றும் மணல்மேடுகளில் முடிந்தது. ஆராவரமற்ற இயல்பான நடை கொண்ட அந்த பதிவுகள் தொடர்ந்து அவற்றை படிக்க வைத்தன.

பின் சிறிலின் தேன் பக்கங்கள் பழக்கமாயின. நகைச்சுவை பூசிய கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களை அங்கே காண முடிந்தது .

முதலில் படித்தது கிடா எனும் சிறுகதையைதான். உரையாடல் வடிவில் நகரும் அந்த கதை விரிசல்கள் இல்லாமல் உடையும் உறவுகளை படம் பிடித்துக் காட்டும் . வட்டார மொழியில் சிறிலின் ஆளுமை யை அக்கதையினில் பார்க்கலாம். பின்னொரு பொழுதில் மரணம் என்ற தலைப்பிலான தேன்கூடு போட்டிக்கு அந்த கதையை அனுப்பாறு சிறிலிடம் கேட்டிருந்தேன் .
கடவுளைபற்றிய சிறிலின் சிந்தனைகள் அவரது பதிவுகளில் நகரும. அண்மையில எழுதிய அகர முதலெல்லாம் எனும் குறளை கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தும் பதிவிலும் அதை பார்க்கலாம் . அந்தணி டி மெலாவின் எழுத்துகளில் அவருடைய ஈர்ப்பையும் அதன் ரீதியிலான தனது கருத்துகளையும் புனிதராவது எப்படி, கடவுள் 100 கி.மீ மற்றும் கடவுள் பற்றிய விசாரணைகள் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார் .
சாதியின்மதம் தாண்டிய தாக்கங்கள, தலித் முன்னேற்றம் பற்றிய அவரது கருத்துகளை பதிவுகளில் பதிவு செய்துள்ளார். மதத்தை மதிப்பவராயினும் அதை விமர்சிக்க அவர் அஞ்சவில்லை. சுய பரிசோதனைக்கும், விமர்சனத்திற்கும் தான் சார்ந்த மதத்தை உட்படுத்தும் நேர்மையும் அவருக்கு உண்டு .

கட்டாய மத மாற்றம் பற்றிய அவரது கருத்துகளையும் பொதுவில் பதிவு செய்து விவாததுக்கு உட்படுத்தியிருக்கிறார். டாவின்சி கோட் பற்றிய சிறிலின் பதிவு அவரது மதம் பற்றிய விமர்சனங்களை நோக்கி அவரது கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாய் வந்துள்ளது .மரபுடைக்க நினைக்கும் குரல்களை நோக்கிய அவரது எதிர்வினையையும் மரபுடைத்தலின் சிதம்பர ரகசியத்தில் பதிந்திருக்கிறார்.

தனக்குதெரிந்த தனக்கு பிடித்த நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறில் காட்டும் ஆர்வமுடையவர். ஆதிக்கு ஆஸ்கர் என்ற பெயரில் ஆஸ்கருக்கும் ,இந்திய படங்களுக்கும் உள்ள உறவை மிக அருமையாய் சித்தரித்துள்ளார். நான் அதிகம் ஆர்வம் காட்டாத குளிர்கால ஒலிம்பிக்ஸ் பற்றிய அவரது பதிவு அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியது. பெட்டகம், யாகூவின் பீட்டா சேவை , டெலிஸியஸ் வலை தொகுப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தும் தனக்கு தெரிந்ததை மற்றவருடன் பகிர்ந்துள்ளார்.

அவரதுபுகைபட ஆர்வத்தின் விளைவாய் வலைகளில் சிகாகோ தாவரவியல் பூங்காவையும் இலையுதிர் காலத்தையும் பார்க்க முடிந்தது .விடாமல் இன்னும் நிறைய முயற்சி செய்தால் சிறில் சிறந்த புகைப்பட கலைஞராய் வரலாம் . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
தன்னைசிறுகதை எழுத்தாளராய் சிறில் அடையாளம் காட்டிக் கொள்வதை சில பதிவுகளில் படித்திருக்கின்றேன்.. கற்கோவில்கள் , நிலவில் நாளை போன்ற கதைகள் எனக்கு அவர் எழுதியதில் விருப்பமானவை. போர்களின் உட்சத்தில் மனித இனத்தின் நிலைமையை விளக்குவதாய் நிலவில் நாம் அமைந்திருந்தது . கோவில்களின் இருப்பையும் அதன் சமூக பயன்பாட்டையும் குறித்த கேள்விகளை தாங்கி கற்கோவில்கள் இருந்தது.

ரவிந்தீரரின்கீதாஞ்சலியில் இருந்து தனக்கு பிடித்த வரிகளை பதிந்திருக்கும் சிறில் தான் எழுதிய கவிதைகளையும் பதிந்திருக்கிறார் . வெறுப்புணர்வின் உச்சம் குறித்த அவரது கவிதையின்

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,
அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

போன்றவரிகள் மிகவும் ஆழமாய் உணர்வுகளில் பரவுகின்றது. கடவுள் குறித்த அவரது இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற கவிதை தமிழ் சங்கத்தின் பரிசு போட்டியில் முதலிடம் பெற்றது.. கண் கட்டி வித்தையாய் கடவுளை காட்டுவதை அதில் கண்டித்து இருப்பார் .

மரணதண்டனைகுறித்து பல பதிவுகள் வந்த போது அவற்றை தொகுத்து தனிப்பதிவாக சிறில் வெளியிட்டார்.பலவகை தரப்புகளின் பதிவுகளை ஒரு இடத்திலிருந்து படிக்க அவரது தொகுப்பு உதவியது . அப்பதிவுகளை விமர்சித்து அவரது கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார் இது எனக்கு தெரிந்து ஒரு புது முயற்சியாய் இருந்தது. மற்ற சமூக விஷயங்கள் குறித்த பதிவுகளை தொகுத்து வழங்கும் ஒரு சேவையை வலைத்தள திரட்டிகள் வழங்க இது ஒரு முன்மாதிரியாய் கூட இருக்கும்.

எழுத்துதுறையில் எதேனும் சாதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் வெளிப்பாடாய் கடவுள் பற்றிய விவாதம் புரிய அழைப்பொன்றையும் விடுத்திருந்தார். பின் பொழுதில் வாரம் ஒரு தலைப்பில் ஏதேனும எழுத கோரி பதிவர்களுக்கு அழைப்பு விடுத்து சில வாரம் நடத்தினார் . அவருடைய ஆர்வத்திற்கு தீனியாய் இப்போது தமிழோவியம் ஆசிரிய குழுவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடருங்கள் உங்கள் எழுத்துகளை. வாழ்த்துகள்!

இராமச்சந்திரன் உஷா

அன்புள்ள சிறில்,
விமர்சனம் என்றாலே கொஞ்சம் உதறல் எனக்கு. சன் டீவி விமர்சனம் பாணியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்காந்துக்கொண்டு அருமை என்றோ அறுவை என்றோ ஒற்றை வார்த்தை சொல்வது சுலபம். ஆனால் பழையவைகளை எடுத்துப்படிக்க எந்த அவசியமும் இல்லாமல், மனதில் பசைப்போடு உட்கார்ந்திருக்கும் சிலவற்றை சொல்வது சுலபம் என்ற தைரியத்தில் இதோ ஆரம்பித்துவிட்டேன். முட்டம் என்ற பெயரைப் பார்த்ததும், (கடல் என்றால் மோகம் அதிகம்) பாரதிராஜா ஈரோயினி போல் ஸ்லோ மோஷனில் வராமல் வேகமாய் ஓடோடி வந்து படிக்கத் தொடங்கியது, கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகளில் இருக்கும் சாதி வேற்றுமைகளை பற்றி போட்ட பதிவே உங்கள் எழுத்துக்களைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. சிவந்த மண் என்ற கிராமத்தின் பெயர், அந்த கடலோர சிற்றூரில் இருந்து பள்ளிக்கூடம் போனக் கதை, மண்டைக்காடு சம்பவம், மீனவர்களின் வாழ்க்கை முறை, டிகிரி படித்த பெண்கள்கூட கருவாடு காயப்போடும் பரிதாபம் என்று அனைத்தையும் ஒரு நாவல் ஆக்கிவிடலாம். ஆனால் அங்கேயே வாழ்ந்த சிறில் உங்களால் மட்டுமே சம்பவங்களுக்கு உயிர் கொடுத்து பாத்திரங்களாய் படைக்க முடியும். அப்படிப்பட்ட எழுத்துக்களே வெல்லும் என்பது நியதி. நாவல் எழுதப் போகிறேன் என்று சொன்னது நினைவிருக்கிறதா :-)

எல்லாரும் வலைப்பதிவின் மூலம் இவ்வளவு சம்பாதிச்சேன், அவ்வளவு சம்பாதிச்சேன் என்று வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும்பொழுது, நீங்களும் உங்க பங்குக்கு ஒரு கணக்கு காட்டியிருந்தீர்கள். இதைவிட நான் அதிகம் "சம்பாதித்திருக்கிறேன்" என்று மட்டும் தன்னடத்துடன்கூறிக்கொள்கிறேன். இப்படிப்பட்ட குசும்பு அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கட்டும், ஆங்... முதல் பரிசு வாங்கி தந்தோமே "சொர்க்கம் இலவசம்" மறக்கமுடியுமா அதை? எனக்குக்கூட சொர்க்கம் கிடைக்க சான்ஸ் இருக்க என்று சொன்னீங்களே, அதுக்கேஓட்டுப் போட்டேன். நல்ல எழுத்து நிற்கும், அதற்கு எந்த சார்பும் தேவையில்லை. சில சமயம் குறும்பும், நையாண்டியும், அதே சமயம் சிந்தனையை தூண்டும், பிறர் மனதை புண்படுத்தாத எழுத்துக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள், முன்னூறு, எண்ணூறு என்று நானும் வாழ்த்துப்பாட வருகிறேன்.
வாழ்த்து வயதில்லை, வணங்குகிறேன் (மூத்த பதிவர் இல்லை)
இப்படிக்கு,
உஷா

Sunday, February 04, 2007

தேன்200:ஜோ, தேவ், வெட்டிப்பயல்

பதிவுகளுக்குள் காலடி வைக்க உதவிய அருமை நண்பர். எங்க (பக்கத்து) ஊர்க்காரர். என்றைக்கும் ஊக்கம் தருபவர்.. கடற்புறத்தான் ஜோ ..

தேன் கூட திகட்டி விடும். ஆனால் சிறிலின் வலைத் தேன் திகட்டியதில்லை. தமிழ்மண முகப்பில் சிறில் அலெக்ஸ் என்று பார்த்தவுடன் தன்னையறியாமலேயே எலிக்குட்டி அதனை நோக்கி நகர வைத்தவர் நீங்கள். உங்கள் வலைத்தேனுண்ணும் வண்டாக இருப்பவர்களில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்ல, இந்த தேன் கூட்டுக்கு முதல் நாளிலிருந்து வரும் மூத்த வண்டுகளில் நானும் ஒருவன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற வலைப்பக்கம் ஜெயமோகனையே இழுத்து வந்தது. அதன் பின் கதை, கவிதை, புனைவு, கட்டுரை, நகைச்சுவை என்று உங்கள் தளங்கள் விரிந்தது. இயல்பாகவே சிறிலுக்கு அமைந்த எழுத்துக் காய் பழமாக கனிந்தது. தனிப்பட்ட முறையில் நானும் உங்கள் போல அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்கு நடுவில் வளர்ந்தவன் என்பதால் எனக்கும் சேர்த்துத் தான் நீங்கள் எழுதியது போல உணர முடிந்தது.

பல்வேறு போட்டிகளில் வென்று வந்து நாஞ்சில் நாட்டின் பெருமை காத்தீர். புதிது புதிதாக நீங்கள் தளங்களில் நுழைந்து முத்திரை பதிக்கும் போது 'அட! சிறில் இப்படியும் எழுதுவாரா?" என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பெருகியது.

சில தளங்களில் உங்களோடு கருத்து மோதியதுண்டு. தமிழ் மேல் நான் கொண்ட அதீதப்பற்றால் அது நிகழ்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு பகிர்வை தொடர்ந்தது உங்கள் முதிர்ச்சியைக் காட்டியது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை நான் மறந்தவனில்லை என்றாலும் ,நம்மூர் காரர் பெருமையடையும் போது மகிழ்வதை மறைக்கத் தெரியவில்லை.

200 பதிவுகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

அன்பன்,
ஜோ

====================================

இணைய பார்ட்னர் தேவ்

தேன் பதிவு பற்றி சுருக்கமாய் சொல்லுவது என்றால்...
சிறிலின் மன ஓட்டங்களைப் பதிவு செய்யுமிடம் அது.. சில நேரங்களில் மனம் வருடும் காற்றாய் அமைந்திருக்கும் அவரது சில பதிவுகள்.. சில நேரங்களில் பெருங்காற்றாய் வீசும் அவர் கருத்துக்கள்.. இன்னும் சில நேரங்களில் புயலாய் கூட வீசும் விவாதங்களைக் கிளப்பும் அவர் பதிவுகள்...
எனக்குப் பிடித்தமானவை சிறிலின் நகைச்சுவைப் பதிவுகளே..

தேன் மழை இன்னும் பொழியட்டும்.. நனையக் காத்திருக்கிறோம்.. பார்ட்னர் 200க்கு என் வாழ்த்துக்கள்

====================================

வெட்டிப்பயல் பாலாஜி

பொதுவாக ஒரு புது பதிவை திரட்டியில் பார்க்கும் பொழுது அதில் என்னஎழுதியிருக்கும் என்று மனதில் ஒரு எண்ணம் எட்டி பார்க்கும். அது பொதுவாகஒரே மாதிரி பதிவாக கொடுக்கும் வலைப்பூவாக இருக்கும் பட்சத்தில் அந்தவலைப்பூ தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விடுகிறது. அல்லது ஒத்திபோடப்படுகிறது.

'தேன்'என்னை கவர்ந்து இழுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அதுதான். உள்ளேவரும் பொழுது எந்த வகையான பதிவு என்று ஒரு எண்ணத்துடன் உள்ளே வரமுடியாது. ஆனால் எந்த வகையிலும் நம்மை ஏமாற்றாத பதிவாக இருக்கும். என்னைபெரும்பாலும் கவருவது நகைச்சுவை பதிவுகளும், கதைகளுமே.அந்த வகையில் தேன் இது வரை என்னை ஏமாற்றவில்லை.பொதுவாக அதிக சர்ச்சையில்லாத பதிவுகளை தருவதும் 'தேனின்' சிறப்பு.

எதிர்பார்ப்பு:எளிதாக ஆங்கிலம் பேச சொல்லி தர உதவிய இந்த பதிவு தொடராமல் போனது ஒரு வருத்தம்.பைபிள் கதைகளும் அதிக இடைவெளி இல்லாமல் கொடுத்தால் நலம்.மேலும் தங்களிடமிருந்து பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!!!

சிறில் அலெக்ஸ்