ஆங்கிலத்தில் பேசுவது இப்போது ஒரு அடிப்படை தகுதியாகிவிட்டது. கிராமங்களிலிருந்து நல்ல மதிப்பெண்களுடனும் திறமையுடனும் வேலைதேடி வரும் நண்பர்கள் பலருக்கும் ஆங்கிலம் பேசும் திறமை குறைவாக இருப்பதால் (மட்டுமே) பல சமயங்களில் வேலைகிடைக்காமல் போகிறது. பொதுவாக கிராமத்து இளைஞர்களை விரும்பி தேர்வு செய்யும் நான்கூட பல சமயங்களில் பல திறமையானவர்களை 'Poor Communication Skill' என்று சொல்லி வருத்தத்துடன் நிராகரிக்க வேண்டியிருந்தது.
நானும் ஒரு கிராமத்தாந்தான். 10வரைக்கும் தமிழ் வழிக் கல்விதான் படித்தேன். 11 மற்றும் 12 ஆங்கிலத்தில் படிக்கவேண்டிய நிர்பந்தம். படித்தேன். 11ல் எப்போதும் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்களே வாங்குவேன். ஆனால் 12 முடிக்கும்போது மாநில பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் மூன்றாவது இடத்தைப் பெற்றேன், அதே ஆங்கில வழிக் கல்வியில்.
ஆரம்ப பள்ளி முதலே ஆங்கிலம் நமக்கு சொல்லித்தரப் படுவதால் நமக்கு போதுமான அளவு அடிப்படை ஞானம் இதில் இருக்கிறது. ஆனால் நம்மிடம் இல்லாத ஒன்று ஆங்கிலம் பேசிப் பழகும் பழக்கம். செந்தமிழ் போல ஆங்கிலமும் "நாப்பழக்கம்தான்".
எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அல்லது ஆங்கில அறிவை மேம்படுத்த நீங்கள் தமிழில் அதிகம் தெரிந்து வைத்திருக்கும் கதைகளை அல்லது கருத்துக்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தால் அதை ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு படிப்பது எளிய முயற்சி.
எனக்கு கைகொடுத்தது ஆங்கில பைபிள். பைபிளை தமிழில் தெரிந்துவைத்திருந்த நான் ஆங்கில பைபிள் படிக்க ஆரம்பித்தபோது ஒப்பீடு செய்து படிக்க முடிந்தது. இதுபோல உங்களுக்குத் தமிழில் தெரிந்த காப்பியங்களை, கதைகளை ஆங்கிலத்தொல் வாசிக்கக் கிடைத்தால் படிக்கலாம். படக்கதைகள் ஆங்கிலப் பேச்சறிவு வளர்ப்பதற்கு உதவும், அவற்றில் உரையாடல்கள் அதிகம் இருப்பதால்.
நம் மக்கள் பலர் ஆங்கிலம் அதிகமாய் பேச ஆரம்பித்தாலும் பல இலக்கணப் பிழைகளோடேயே பேசுகிறோம். பொதுவான சில ஆங்கில இலக்கணப் பிழைகளையும் அவற்றின் சரியான வடிவங்களையும் பார்ப்போம். (டேய்! மொதல்ல தமிழ் இலக்கணத்த படியுங்கடான்னு குரல்கொடுக்கிற மக்களுக்கு; தெரிஞ்சவங்க சொல்லுங்க, நிச்சயம் படிக்க ஆவலாயிருக்கிறேன்)
1. Did உபயோகிப்பது.
பலருக்கும் did என்பது இறந்த காலத்தில் செய்யப்பட்ட செயலை குறிக்கும் என்பது தெரியும்.
He did it. அவன் அதை செய்தான்/செய்துமுடித்துவிட்டான்.
did பயன்படுத்தும்போது அதனை அடுத்து வரும் வினைச் சொற்களில்(Verbs - செயலைக் குறிக்கும் சொற்கள்) Present Tenseஐயே பயன்படுத்த வேண்டும்.
உதாரணத்துக்கு He did killed. என்பது தவறானதாகும் He did kill. என்பதே சரியானதாகும். இந்தத் தவறை பலமுறை பலர் செய்யக் கேட்டிருக்கிறேன். முக்கியமாக கேள்வி கேட்கும்போது.
When did you arrived? என்பது தவறானது. ஏற்கனவே did இறந்த காலத்தை குறித்துவிட்டமையால் arrive எனும் வினைச் சொல் இறந்தகாலத்தை குறிக்கத் தேவையில்லை.
When did you arrive?(எப்போது நீ வந்து சேர்ந்தாய்) என்பதே சரியான உபயோகமாகும்.
சில சரியான did பிரயோகங்கள்
When did you do it?
When did you come?
Did you find it?
Did she finish it?
2. Does உபயோகம்.
Does என்பது did என்பதற்கான நிகழ்காலச் சொல். (Does, did இரண்டுமே Do என்பதின் மாற்றுருக்கள்.) பொதுவாக He, She, it எனும் Pronoun(சுட்டு பெயர்)களை நிகழ்காலத்தில் பயன்படுத்தும்போது வினைச் சொல்லை 's' சேர்த்து சொல்லவேண்டும்.
உதாரணமாய். He come(அவன் வருகிறான்). என்பது தவறானது. He comes என்பதே சரியான உபயோகம்.
She dance well. தவறு She dances well சரியானது.
Does உபயோகிக்கும்போது இந்த 's' சேர்க்கை அதிலேயே இருப்பதால் அடுத்துவரும் வினைச்சொல்லில் 's' சேர்க்கத் தேவையில்லை.
Does என்பது do என்பதின் மறுவடிவம். He, she, it எனும் சுட்டுப் பெயர்களை பயன்படுத்தும்போது doவிற்குப் பதில் does பயன்படுத்துகிறோம்.
She does dances well. தவறானது She does dance well. சரியானது.
3. பலரில் ஒருவர்.
One of my friend என்பதுபோல பலசமயம் நாம் பேசுவதுண்டு. "என் சொந்தக்காரங்கள்ள ஒருத்தன் வலைப்பதிவுன்னு அலஞ்சுகிட்டிருக்கான்." என உங்களைப்பற்றி யாராவது சொல்லியிருக்கக்கூடும்.
one of my friend என்பது தவறான உபயோகம். One of my friends என்பதே சரியான உபயோகம். என் நண்பர்களில்(friends) ஒருவர் என்பதே சரி அல்லவா? எனவே பன்மை அவசியம்.
One my friends இன்னும் சில தவறுகளுக்கு வழி வகுக்கலாம். friends என வந்ததால் பன்மை என நினைக்கிறோம். அதனால் சிலர் one of my friends have a horse named Cyril. என்பதுபோல சொல்கிறோம்.
ஆனால் நாம் பேசுவது 'One' of my freinds பற்றி. நம் நண்பர்களில் 'ஒருவரைப்' பற்றி பேசுவதால், அவரைப் பற்றியே பின்வரும் செய்திகளும் சொல்லப்படுவதால் haveற்குப் பதில் has தரப்படவேண்டும்.
One of my friends has a horse named Cyril. என்பதே சரியான வாக்கியம்.
4.அது, அதனது.
இதுல நான் பலமுறை தள்ளாடியிருக்கேன். It'sக்கும் Itsக்கும் என்ன வித்தியாசம்?
It's என்பது 'it is' என்பதன் சுருக்கம். It is a beautiful day என்பதை it's a beautiful day எனவும் சொல்லலாம்.
Its என்பது அதனது அல்லது அதனுடையது எனப் பொருள்படும். I can't remember it's name. என்பது தவறு. I can't remember its name. -அதனது பெயர் நினைவில்லை- என்பதே சரியானது.
It's its. - அது அதனுடையது ( how is it ?- இது எப்டி இருக்கு! ha ha ha :)
5. Can't able
தமிழில் 'செய்ய இயலவில்லை' என்பதை சிலர் அப்படியே I can't able to do this என மொழி பெயர்ப்பதுண்டு.
Can't என்பதே முடியாமையை குறிப்பதால் able தேவையில்லை. ஆனால் I can't do it. என்பது உங்கள் இயலாமையை முற்றுமாகச் சொல்வதில்லை. இது ஒரு மறுப்பாகவும் எடுத்துக்கொள்ளப் படலாம். எனவே உங்கள் இயலாமையை சொல்ல ableஐ பயன்படுத்துங்கள்.
I am not able to do it. - என்னல் அதை செய்ய இயலவில்லை.
I can't do it - என்னால் இதை செய்ய முடியாது.
இதுபொலவே I can able என்பதும் சரியானதில்லை.
I can - என்னால் முடியும்
I am able/ I will be able to do something - என்னால் செய்ய இயலும்.
able - ability - இயலும் அல்லது இயலாமையை குறிப்பது.
6. Is he is there?
மேலுள்ள கேள்வியில் அவர் அங்கே இருக்கிறாரா என கேட்க நினைத்திருக்கிறார். இரண்டு is இதில் தவறாக வந்துள்ளன. இதுவும் ஒரு பொதுவான தவறே.
Is he there? Is he in yet? - என்பவைகளே சரியான உபயோகங்கள்.
7. more and morer
Comparitive speech. ஒப்புமைப்படுத்தி பேசும்போது மூன்று நிலைகளை ஆங்கில இலக்கணம் அனுமதிக்கிறது. சமதளம்(Positive), ஒப்புமைப்படுத்தும் நிலை(Comparative), ஒப்புமையில்லாத நிலை(Superlative).
இரு பதிவாளர்கள் சம அளவு பின்னூட்டம் பெறுவது சமதளம். Both the bloggers get same number of comments.
ஒருவருக்கு அதிகம் கிடைக்கையில் இருவரில் எவர் அதிகம் பெறுகிறார் என ஒப்புமைப் படுத்தலாம்.
Blogger Earthworm gets more comments than blogger Lukeworm.
இவை பொதுவாக -er எனும் எழுத்துக்களில் முடியும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. taller, smaller என்பதுபோலெ.
ஆனால் நம்ம இலவசக்கொத்தனாரை குறிப்பிடும்போது He gets the most comments. அவருக்கு ஒப்பேயில்லை. இவை -est எனும் எழுத்துக்களில் முடியும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. tallest, smallest என்பதுபோல.
இதெல்லாம் பலருக்கும் தெரியும் என்றாலும் more உபயோகப் படுத்தும்போது இன்னுமொரு -er வார்த்தையை உபயோகப் படுத்துவோர் பலர்.
He is more taller than her. என்பது தவறானது.
He is taller than her. என்பதே சரியான வாக்கியம். இந்த இடத்தில் moreஐ தவிர்ப்பதே நல்லது ஏனெனில் Taller எனும் வார்த்தை சரியாக அமைந்துள்ளது.
பேச்சு வழக்கில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.
8. ஒப்புமைகள் பலவிதம்.
மேலே கூறிய ஒப்புமைகளுக்கு சிலசமயங்களில் பிரத்யோக வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன.
Good - Better - Best
bad - worse - worst (Worser என்பது தவறான உபயோகம்)
little - less- least
much - more - most
many - more - most
some - more - most
far - further - furthest
absolute, impossible, principal, adequate, inevitable, stationary, chief, irrevocable, sufficient, complete, main, unanimous, devoid, manifest, unavoidable, entire, minor, unbroken, fatal, paramount, unique, final, perpetual, universal, ideal, preferable and whole போன்றவற்றை more உடன் பயன்படுத்தலாம். (மோர்கூட ஊறுகாய் நல்லாயிருக்கும்னு சொல்றீங்களா - Could I have more pickle please?)
9. எடுத்துட்டு வந்ததும் வாங்கிட்டு வந்ததும்
Brought என்பது எடுத்துவருவது bought என்பது வாங்கி வருவது.
My brother brought me books from the exhibition. என் சகோதரர் புத்தகம் எடுத்து வந்தார் (அவர் வாங்கியிருக்கலாம், சுட்டிருக்கலாம், கடைவைத்திருப்பவராயிருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு எடுத்து வந்தார்).
My brother bought me books from exhibition. எனது சகோதரர் எனக்கு புத்தகங்களை வாங்கித்தந்தார் (அவர் வாங்கியது எனக்காகத்தான்.)
Brought என்பது Bringன் இறந்தகாலச் சொல். Bought என்பது buyன் இறந்தகாலச் சொல்.
10. a university;an hour
ஆங்கிலத்தில் a மற்றும் an உபயோகத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக a, e, i, o மற்றும் u வில் துவங்கும் வார்த்தைகளுக்கு an உபயோகிப்பது வழக்கம். ஆனால் இந்த (உயிர்) எழுத்துகளில் துவங்கும் வார்த்தைகள் என்பதை விட இந்த உயிரெழுத்துக்களின் உச்சரிப்பில் துவங்கும் வார்த்தைகள் என்பதே பொருத்தமாகும்.
இதன் அடிப்படையிலேயே Hour Hல் துவங்கினாலும் அது an Hour (அவர்) எனப்படுகிறது. University Uவில் துவங்கினாலும் யூ எனும் உச்சரிப்பில் துவங்குவதால் a பயன்படுத்தப்படுகிறது.
எளிதில் இதை நினைவுகூற என் 10ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை சொல்லித்தந்த வழி என்னவென்றால், தமிழின் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எனும் ஒலிகளில் ஒரு வார்த்தை துவங்குமானால் அவற்றிற்கு an பயன்படுத்தவேண்டும். மற்றவைக்குத் தேவையில்லை. இதுபோல பேசும்போது theவை 'தி' எனச் சொல்வதும் இந்த உயிரெழுத்து ஒலிகளுக்கே பொருந்தும். It works all the time.
hour - சொல்லும்போது 'அவர்' என்கிறோம் எனவே an சேர்க்கப்படுகிறது.
University - 'யூ' எனும் உச்சரிப்பில் துவங்குகிறது எனவே a.
உங்களுக்கு மேலும் கேள்விகளிருந்தால் கேட்கலாம் பதில் தர முயற்சிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொன்னேனே தவிர என் பெயர பீட்டர் அலெக்ஸுன்னெல்லாம் மாத்திவைக்க மாட்டேன். ஓரளவுக்கேனும் ஆங்கில அறிவு எல்லாருக்கும் தேவை (பின்ன எப்படி இலக்கியம் படைக்கிறது?) வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவை.