.

Monday, February 26, 2007

கவி தந்த விதை -4: காதல் மாய உலகம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்


வரம்கொடுக்கும் தேவதைகள்
உலாவரும் காடு,
காதலெனும் மாய உலகம்.
அங்குள்ள குரங்குகளும்
அழகானவை.

சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று
எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும்.

அங்கே,
பெண்மயில்கள் தோகை விரிக்கும்
கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும்
வானங்கள் பூமியில் இயங்கும்
நட்சத்திரங்களைப் பறிக்க இயலும்.
மான்கள் வேட்டையாட
ஆண்கள் மாட்டிக்கொள்வர்.

புத்தகங்களுக்குள் இறகிருக்காது
பறவையே இருக்கும்.
ஓடுமீன் எல்லாமே
உறுமீன்கள் இங்கே.

நிலவுகள் தேய்வதில்லை!
ஆம், காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள்.
வருடங்கள் இல்லை
வயதும் இல்லை.

பால்யவயதுப் படுக்கைநேரக் கதைகளைப்
பாடமென நம்பச் செய்யும் காதல்.
செருப்பில்லாமலே
சிண்ரெல்லாக்களை
கண்டுகொள்ளலாம் அங்கே.

அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்.

கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி.

உதடுகள் ஓய்வெடுக்க
இதயங்கள் பேசிக்கொள்ளும்.

இங்கே மரங்கள் பூக்கின்றன,
காய்ப்பதில்லை
பசிக்குத்தானே பழங்கள் தேவை.
தேனை ஊற்றி வளர்க்கிறார்கள்
சொலைகளை.

அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.

முடிவில்லாப் பாதைகளும்
சப்தமில்லா அருவிகளும்
அன்னியரில்லாப் பூங்காக்களும்
அழகானப் பேய்களும்,
அலையில்லாக் கடல்களும்
பேச்சில்லா பாஷைகளும்
இருளில்லா இரவுகளும்
விடியாத நாட்களும்
வேண்டும்போது மழையும்
வேண்டாமலே வரமும்
எப்போதும் தென்றலும்
எத்திக்கும் இன்பமும் நிறைந்திருக்கும் காதல்
மாய உலகம்.

விதைத்தவர்: நா. முத்துக்குமார்
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


'கவி தந்த விதை' தொடரில் வந்தவை...
...

8 comments:

Unknown said...

/கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி./

ரசித்தேன்...

காதல் மாய உலகத்துக்குள் எங்களைக் கொஞ்சம் இழுத்துப் போனதற்கு நன்றிகள்!!!

ஜி said...

ஆஹா.. ஆஹா.. கற்பனையின் உச்சக்கட்டம்...

//அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.//

என்னோட கவிதையை சிறில் சுட்டுட்டாரு ;)))))

சிறில் அலெக்ஸ் said...

நன்றி அருட்பெருங்கோ.

சிறில் அலெக்ஸ் said...

ஜி,
//ஆஹா.. ஆஹா.. கற்பனையின் உச்சக்கட்டம்...//

பாத்துங்க.. யாராவது நான் உங்களுக்கு காசு குடுத்து பின்னூட்டம் போடச்சொல்றதா நினைக்கப் போறாங்க. :))


//என்னோட கவிதையை சிறில் சுட்டுட்டாரு ;))))) //
சுடச் சுட கவித தந்திருக்கென்னு சொல்லுங்க.

:))

யாழினி அத்தன் said...

"அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்."

ஐயா கொஞ்சம் தமிழ் சினிமா பாருங்க.

மாய உலகம் என்று சொல்லிவிட்டீர்கள் அதனால ok.

அதென்ன விதைத்தவர், வளர்த்தவர்?

சிறில் அலெக்ஸ் said...

//மாய உலகம் என்று சொல்லிவிட்டீர்கள் அதனால ok.//

சரியாகச் சொன்னீங்க.. காதல் என்னும் யதார்தத்தில் இவர்கள் அசுரர்களாகாவே இருக்கிறார்கள்... மாய உலகில்?

//அதென்ன விதைத்தவர், வளர்த்தவர்? //
ஒரு சினிமா பாடல் வரியை முன்வைத்து கவிதை வரைவதால்..
மேல தடித்த எழுத்துக்களில் வருவது அப்படி எடுக்கப்பட்ட வரி.

முந்தைய கவிதைகளையும் படித்துச் சொல்லுங்க.

யாழினி அத்தன் said...

முந்தைய கவிதைகளையும் படித்துச் சொல்லுங்க

நிச்சயமாக!

கவிஞர்கள் சபையில் இருப்பதே ஒரு மகிழ்ச்சிதான். நான் சொல்லவில்லை. இது வள்ளுவன் வாக்கு!

மணிகண்டன் said...

சிறில் வழக்கம் போல கலக்கறீங்க..

அடுத்த விதை என்னங்க??

சிறில் அலெக்ஸ்