உடன்பிறப்பே,
இது எனது 200வது பதிவு. இப்போதுதான் 100போட்டு ஆடிக்கொண்டிருந்தேன் அதற்குள் 200 எகிறிவிட்டதை நினைக்க நினைக்க இருநூறு திருக்குறள்களை மனப்பாடம் செய்துவிட்ட பெருமை தோன்றுகிறது.
வலைப்பதிவராய் வெற்றிபெற்றிருக்கும் சிலரில் இந்த சிறிலும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நீ இன்றி இது சாத்தியமா? எண்ணிப்பார். உனது (பின்)ஊட்டங்களை அள்ளித் தந்து என்னை மேலும் மேலும் எழுதச் செய்து உன்னையே நீ சோதனைக்குள்ளாக்கிகொள்ளும் அந்த துயரத்தை எண்ணிப்பார். இரவுபகலாய் விழித்திருந்து (பகலில் விழித்திருப்பது எனக்கு கஷ்டம்) நான் எழுதிய இந்தப் பதிவுகளை அன்றே நீ படிக்காதிருந்தால் இன்று 200 போட்டிருப்பேனா எண்ணிப்பார்.
தமிழா விழித்தெழு. கீபோர்ட்மேல் நீ தூங்கி விழுந்து www.xxxxxxxxxxxxxxxxx என கணினியில் தெரியுது பார். 'தவறான' தளத்துக்குச் செல்வதற்குமுன் விழித்தெழு.
உடன்பிறப்பே

சில நேரங்களில் நான் தவறிழைத்தபோது எனை தட்டிக்கேட்டாயே உன் நேர்மையை பாராட்டுகிறேன். இடித்துரைப்பதே நட்பு. இடியாய் உரைப்பது இணைய நட்பு என்பதை செவ்வனே உணர்த்தினாய்.
காமெடி செய்தால் :) எனவும் கவலையைச் சொன்னால் :( எனவும் உன் முகபாவங்களைக் காட்டி மகிழ்வித்தாயே மறக்க முடியுமா? சிறிய புன்னகை செய்துவிட்டு LOL எனப் புழுகினாயே (புகழ்ந்தாயே) மறக்க முடியுமா? பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கே பின்னூட்டமிட்டாயே மறக்கமுடியுமா? என் பதிவுகளுக்கு இணைப்பைத் தந்தாயே மறக்கமுடியுமா? அல்ஸ்தைமர் வந்தபோதும் இந்த அன்பை மறவேன் மறவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன்.
இனிவரும் காலம் இனியகாலமாய் அமையட்டும். தொடர்ந்து தேனைப் பருகிவந்தால் உடல் நலம் கூடும் என்பது உனக்குத் தெரியாதா? (கூடவே லெமன் ஜூஸ் சேத்துகிட்டா இன்னும் நல்லது)
நான் 300 பதிவைத் தாண்டும்போதாவது நீ பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியிருப்பாய் என நம்புகிறேன். பதிவுகளைப் படித்து யாரும் திருந்துவதில்லை என்பதையும் நானே பதித்திருக்கிறேனே என எண்ணி வருந்துகிறேன்.
என்னை வாழ்த்திய நீ வாழ்க.
உன் குலம் வாழ்க.
உன் பதிவுகளில் பின்னூட்டம் செழிக்கட்டும்
உன் ஹிட் கவுண்டர் எகிறட்டும்
இணையம் இனியம் ஆகட்டும்
என்னை திட்டினாலும்
பின்னூட்ட எண்ணிக்கையை
உயர்த்தினாயே,
உடன்பிறப்பே!
'வரப்புயர' என்றாளே என் பாட்டி
நான் சொல்கிறேன்
மவுஸ் உயர
கீ போர்ட் உயர
மானிட்டர் உயர
என உயர உயர நீ நீடூழி வாழ்க.
(டிஸ்கி: யார் மனதும் புண்பட்டிருந்தால் மருத்துவரைப் பார்க்கவும்)
சீரியசா...
பதிவுலகில் என்னை அங்கீகரித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. வரும் பதிவுகளில் இந்த இருநூறு தந்த அனுபவங்களைப் பற்றி, நண்பர்களைப் பர்றி பகிர இருக்கிறேன். அவர்களும் தேனைப் பற்றி எழுத இருக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி cvalex at yahoo dot com
சிறப்பு நன்றி




நன்றி! நன்றி! நன்றி!