.

Thursday, September 28, 2006

நரகாசுரன்

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.

வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.

விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.

இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

விடாது கறுப்பு வரலாற்றைப் பற்றிய மறு பார்வை ஒன்றைத் தருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.

'ஒரு வடக்கன் வீரகாதா' மம்மூட்டி நடித்த மலையாளத் திரைப்படம். பெயர்போன இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவான திரைப்படம். இந்தப்படமும் வரலாற்றை மாற்றிப் பார்க்கும் ஒரு பார்வையைக் கொண்டது.
களரிப் பயிற்று வீரர்களை வைத்து காலாகாலமாக சொல்லிவரப் பட்ட வரலாற்றுக்(?) கதைகளே இவை.


சாந்து என்பவன் அந்த வரலாற்றில் வில்லன். தன் சொந்தக்கார வீரனுக்கு எதிராய் சதிசெய்து கொன்றவன். ஆனால் திரைக்கதை இவனை சூழ்நிலைக் கைதியாயும் குற்றமற்றவனாகவும் காண்பிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

வாசுதேவன் நாயர் சமூகத்தில் விலக்கப்பட்டவர்களைப் பற்றி திரைக்கதைகள் பல எழுதியுள்ளார். இவரின் படங்கள் அதிகம் சமூகத்தில் அடிவாங்கியவர்கள் பற்றியே இருக்கும். பெருந்தச்சன், பஞ்சாக்னி போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

இந்தப் படத்தில் யேசுதாஸ் பாடிய 'இந்துலேக கண்துறந்து' , 'சந்தனலேப சுகந்தம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் சில.

கிறீத்துவ நம்பிக்கையில் யூதாஸ் ஒரு பெரும் துரோகியாகக் காண்பிக்கப் படுவதுண்டு. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களில் இவர் இயேசுவுக்குத் துரோகியாகக் காண்பிக்கப் படுகிறார். சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவந்த யூதாசின் நற்செய்தி (Gospel) யூதாஸ் இயேசுவின் கட்டளைப்படி நடந்ததாகக் கூறுகிறது. இதில் வரலாறாக பைபிளில் தெரிவு செய்யப்பட்டவைகளே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. பைபிளில் தரப் பட்டிருக்கும் யூதாசின் இறப்பு பற்றிய தகவல்களே முரணானதாக உள்ளன.


நரகாசுரனின் கதையில் இன்னொரு சுவாரஸ்யம் தன் இறப்பை மக்கள் சிறப்பிக்கவேண்டும் என அவனே வேண்டியதாகச் சொல்வது. தேவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தைவிட நரகாசுரனின் நினைப்பதே தீபாவளியின் நோக்கமாகிவிட்டது.

அரக்கர்கள் தேவர்கள் என்பதை இனங்களாகப் பார்க்காமல் குணங்களாகப் பார்க்கும்போது எல்லோரிலும் அரக்கனும் தேவனும் ஒன்றாயிருப்பதைக் காணலாம். நம்மில் நொடியும், தினமும் நடக்கும் மனப் போராட்டங்களே காவியங்கள் சொல்லும் போர்கள். இதில் இரண்டுபக்கமும் அரக்ககுணங்களும் தேவகுணங்களும் செயல்பட்டன எனக் கொள்ளலாம்.

நமக்குள் இருக்கும் நல்லகுணங்கள் கெட்டவைகளை வெல்லும்போதெல்லாம் தீபவளியே.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு என்னெல்லாம் டிஸ்கி தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களோ அத்தனையும் நான் இட்டுவிட்டதாகக் கருத வேண்டுகிறேன்.

3 comments:

குமரன் (Kumaran) said...

அதுக்குள்ள தீபாவளி வந்தாச்சா இந்த வருடம்?

சிறில் அலெக்ஸ் said...

வாங்க குமரன்...நாந்தான் சொல்லியிருக்கேனே

"தினந்தினம் தினம் தீபாவளி"

:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அரக்கர்கள் தேவர்கள் என்பதை இனங்களாகப் பார்க்காமல் குணங்களாகப் பார்க்கும்போது//

சரியாகச் சொன்னீர்கள், சிறில்.
"உளன் இரு தகைமையொடும் ஒழிவு இலன் பரந்தே" என்று ஆழ்வார் இதையே தான் குறிக்கிறார். பிரகலாதனுடைய இனத்தைப் பார்க்கவில்லை இறைவன். குணத்தைப் பாத்தே வந்தான்.

//Gospel of Judas-wiki//
பொறுமையாகப் படிக்கிறேன்!

//நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் கெட்டவைகளை வெல்லும் போதெல்லாம் தீபவளியே//
Fantastic! தீபாவளி போது இதை மீள் பதிவு இடுங்கள்!!

சிறில் அலெக்ஸ்