.

Thursday, September 07, 2006

எதிரி என்றொரு தோழன்

என் கொள்கைகளை வரையறுத்தவன் நீ
என் இருப்பின் இலக்கணம் நீ.
என் செய்கைகளை
பொம்மலாட்டமாய் வெறும்
விரலசைவுகளில்
மாற்றியமைக்கிறாய்.

உன் கட்டளைகளுக்கு எதிர்வினைப்பதே
என் வாழ்க்கையாகிவிட்டது.

உன்னைச் சுற்றியே
என் வாழ்வைப் பின்னியுள்ளேன்.

நீயே என் குறிக்கோள்.
உன்னை வீழ்த்தாமல் விட்டுவைத்திருப்பது
நான் வீழாமலிருக்கத்தான்.

என் நண்பர்களின் புகழாரங்கள்
என் உணர்வுகளை
மழுங்கச் செய்கின்றன,
நீயோ இன்னும் வாழவேண்டி
என்னைத் தூண்டுகிறாய்.

உன்னை வென்றுவிட்டால்?
நீ உமிழும் நெருப்பை
உள்ளிழுக்கப் பழகிவிட்டேன்,
வெறும் காற்று எனக்கு
விஷமாகிப் போகும்.

உன்னை வென்ற மறுகணமே சுயமிழப்பேன்.

என் எதிரியே நீ
இன்னும் வாழவேண்டும் நூறாண்டு.

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//பொம்மலாட்டமாய் வெறும்
விரலசைவுகளில்
மாற்றியமைக்கிறாய்.

உன்னை வென்றுவிட்டால்?
நீ உமிழும் நெருப்பை
உள்ளிழுக்கப் பழகிவிட்டேன்,
வெறும் காற்று எனக்கு
விஷமாகிப் போகும்.
//

சிறில்...!

தம் கவிதையா ?

முழுக்கவிதையும் சிகெரெட்டுக்கு அழகாக பொருந்துகிறது !
:)

சிறில் அலெக்ஸ் said...

சிகரட் கவிதையில்லை...

தன் எதிரியை எதிர்ப்பதையே பழக்கமாகக் கொண்ட சில 'கொள்கை' மனிதர்களைப் பற்றி.

அரசியல்வாதிகளுக்கும், பண்டைய அரசர்களுக்கும்கூடப் பொருந்தலாம்.

சிறில் அலெக்ஸ்