Saturday, September 30, 2006
விடுதலை
ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். 'இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.' னு சொன்னான். 'நீ சொன்ன மாதிரி போட்டி நடத்துறதுல ஒரு சின்ன ஓட்டை இருக்குது அத யூஸ் பண்ணலாம். போட்டி விதிப்படி பாத்தா நாம செய்றது தப்பேயில்ல.' அவன் சொல்லச் சொல்ல எனக்கும் அது தப்பேயில்லன்னு தோணுச்சு.
சின்னவயசிலேர்ந்தே எதுலயாவது ஜெயிக்கணும்னு ரெம்ப ஆசை. நோஞ்சானாயிருந்தேன். ஸ்போர்ட்ஸ்லயெல்லாம் ஈடுபாடே கிடையாது. படிப்புல எப்பவுமே 3, 4 அல்லது ஐந்து ராங்குகளுக்குள்ளால வந்தேன். வீட்டுல திட்டு கிடைக்காட்டியும் பெரிய பாராட்டெல்லாம் கிடச்சதில்ல.
அம்மாதான் சும்மா சொல்லுவா நான் குழந்தையா இருக்கும்போது அழகிய குழந்தைன்ன்னு பரிசு வாங்கியிருக்கிறதா. அது என்ன சமாதானப் படுத்தத்தான் சொல்லுறான்னு எனக்கும் என் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் ஆமோதிப்போம்.
இந்த ஜேம்ஸ்கூட சாப்பாட்டு போட்டி வெற்றிக் கோப்பை வீட்டுல வச்சுருக்கான். ஸ்கூல்ல மூணுதடவை அவந்தான் சாம்பியன். ஒருதடவை மிளகாய கடிச்சு கண்ணீரோட அவன் பரிசு வாங்கினது நியாபகம் இருக்கு.
இப்ப ஒரு வழியா வெற்றி கெடச்சாலும் சந்தோசமே இல்ல. என்னதான் விதிகள் படி நடந்துகிட்டாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதானே. மத்தவங்களும் இதச் செஞ்சிருந்தா அது சமமான போட்டியா இருந்திருக்கும். ஒருவேள அப்டி செஞ்சிருப்பாங்கன்னு சமாதானப் படவும் முடியல.
"ஜேம்ஸ் மனச ஒண்ணு உறுத்திகிட்டே இருந்துச்சுன்னா என்ன செய்வ?"
"நண்பர்கள் அல்லது வீட்ல சொல்லுவேன்."
"தெரிஞ்சவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியலண்ணா?"
"எங்க சர்ச்சுல பாவசங்கீர்த்தனம்ணு ஒண்ணு இருக்கு. சினிமாலகூட கொல செய்றதுக்கு முன்னால ஹீரோ போயி ஃபாதர்ட்ட சொல்றமாதிரியெல்லாம் காண்பிச்சிருக்காங்க. நாம பாவசங்கீர்தனத்துல சொல்றத சாமியார் யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சட்டம் இருக்கு."
'கோவில் போகும் பழக்கமில்லையே. இல்லண்ணா சாமிகிட்ட சொல்லலாம்.' மனதில் சஞ்சலம் அதிகரித்து பாரமானது.
டெலிஃபோன் டைரக்டரியைத் திறந்து எண்ணை சுழற்றினேன்.
"ஹலோ. யார் வேணுங்க?"
"நான் அலுவலகத்துல நடந்த போட்டில குறுக்கு வழியில பரிசு வாங்கிட்டேன்."
"ஹலோ யாருங்க. என்னது?"
"இதச் சொல்லத்தான் ஃபோண் பண்னினேன்"
"ஹலோ யாருங்க இது டிம்ப்பர் டிப்போ. ராங் நம்பருங்க"
'ராங் நம்பர்னு தெரியுங்க.' மனதில் நினைத்தபடியே தொடர்பை துண்டித்தேன்.
மனம் கொஞ்சம் இலகுவானது.
Friday, September 29, 2006
மீள் அறிவிப்பு
இந்த வாரத் தலைப்பு 'நரகாசுரன்'. இந்தத் தலைப்பில் வந்த பதிவுகளை இங்கே வலதுபக்க பட்டையில் (ராவா அடிப்பீங்களே அந்த பட்டையில்ல) போய் பார்க்கலாம்.
உங்களுக்குத் தோன்றிய தலைப்புக்களையும் பின்னூட்டமக இட்டால் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யப்படும்.
படைப்பை இங்கே சேர்த்துக்கொள்ளவிரும்புபவர்கள் சுட்டியை பின்னூட்டமாகவோ தனிமடலிலோ அனுப்பலாம்.
ஆதரவிற்கு நன்றி.
Thursday, September 28, 2006
நரகாசுரன்
வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.
விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.
இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
விடாது கறுப்பு வரலாற்றைப் பற்றிய மறு பார்வை ஒன்றைத் தருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.
'ஒரு வடக்கன் வீரகாதா' மம்மூட்டி நடித்த மலையாளத் திரைப்படம். பெயர்போன இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவான திரைப்படம். இந்தப்படமும் வரலாற்றை மாற்றிப் பார்க்கும் ஒரு பார்வையைக் கொண்டது.
களரிப் பயிற்று வீரர்களை வைத்து காலாகாலமாக சொல்லிவரப் பட்ட வரலாற்றுக்(?) கதைகளே இவை.
சாந்து என்பவன் அந்த வரலாற்றில் வில்லன். தன் சொந்தக்கார வீரனுக்கு எதிராய் சதிசெய்து கொன்றவன். ஆனால் திரைக்கதை இவனை சூழ்நிலைக் கைதியாயும் குற்றமற்றவனாகவும் காண்பிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
வாசுதேவன் நாயர் சமூகத்தில் விலக்கப்பட்டவர்களைப் பற்றி திரைக்கதைகள் பல எழுதியுள்ளார். இவரின் படங்கள் அதிகம் சமூகத்தில் அடிவாங்கியவர்கள் பற்றியே இருக்கும். பெருந்தச்சன், பஞ்சாக்னி போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
இந்தப் படத்தில் யேசுதாஸ் பாடிய 'இந்துலேக கண்துறந்து' , 'சந்தனலேப சுகந்தம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் சில.
கிறீத்துவ நம்பிக்கையில் யூதாஸ் ஒரு பெரும் துரோகியாகக் காண்பிக்கப் படுவதுண்டு. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களில் இவர் இயேசுவுக்குத் துரோகியாகக் காண்பிக்கப் படுகிறார். சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவந்த யூதாசின் நற்செய்தி (Gospel) யூதாஸ் இயேசுவின் கட்டளைப்படி நடந்ததாகக் கூறுகிறது. இதில் வரலாறாக பைபிளில் தெரிவு செய்யப்பட்டவைகளே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. பைபிளில் தரப் பட்டிருக்கும் யூதாசின் இறப்பு பற்றிய தகவல்களே முரணானதாக உள்ளன.
நரகாசுரனின் கதையில் இன்னொரு சுவாரஸ்யம் தன் இறப்பை மக்கள் சிறப்பிக்கவேண்டும் என அவனே வேண்டியதாகச் சொல்வது. தேவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தைவிட நரகாசுரனின் நினைப்பதே தீபாவளியின் நோக்கமாகிவிட்டது.
அரக்கர்கள் தேவர்கள் என்பதை இனங்களாகப் பார்க்காமல் குணங்களாகப் பார்க்கும்போது எல்லோரிலும் அரக்கனும் தேவனும் ஒன்றாயிருப்பதைக் காணலாம். நம்மில் நொடியும், தினமும் நடக்கும் மனப் போராட்டங்களே காவியங்கள் சொல்லும் போர்கள். இதில் இரண்டுபக்கமும் அரக்ககுணங்களும் தேவகுணங்களும் செயல்பட்டன எனக் கொள்ளலாம்.
நமக்குள் இருக்கும் நல்லகுணங்கள் கெட்டவைகளை வெல்லும்போதெல்லாம் தீபவளியே.
டிஸ்கி: இந்தப் பதிவுக்கு என்னெல்லாம் டிஸ்கி தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களோ அத்தனையும் நான் இட்டுவிட்டதாகக் கருத வேண்டுகிறேன்.
நரகாசுரன் - SP.VR.SUBBIAH
இந்த வாரத் தலைப்புக்காக
'நரகாசுரன்'
சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் - இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி
அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!
நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!
- SP.VR.SUBBIAH
இந்தவாரத் தலைப்பு
பொதுவாக 'ஓட்டைகளை' பயன்படுத்துவதில் 'நாம்' கெட்டிக்காரர்கள். அந்த வகையில் தேன்கூடு தமிழ்மண ஓட்டெடுப்பில் உள்ள ஓட்டைகளை தவறாக பயன்படுத்தி எளிதில் வெற்றி பெற முடிகிறது.
யோசிப்பவர் முன்வந்து தைரியமாய் இதை ஒப்புக்கொள்கிறார். பல நண்பர்கள் பல யோசனைகளை சொல்லியிருக்கிறார்கள் இதன் பேரில் போட்டியை நடத்துபவர்கள் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் போட்டியில் கலந்து கொள்பவர்களையும் அவருக்கு உண்மையில் ஓட்டுப் போட்டவர்களையும் ஏமாற்றுவதாய் அமைந்துவிடும்.
எல்லோரும் பதிவுகளில் அவர் சரியில்லை அது சரியில்லை இது முறையில்லை எனப் பலபேரைக் குறை சொல்கிறோம் ஆனால் நமது ஒழுக்கம் சந்தி சிரிக்கும்படி உள்ளது. நம்மீதுள்ள நம்பிக்கையின் பேரில்தான் தேன்கூடு/தமிழோவிய நிர்வாகிகளிந்த ஓட்டெடுப்பு முறையை வைத்துள்ளார்கள் என்பதை உணாராமல் தவறாகப் பயன்படுத்துகிறோம்.
வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இப்படித்தான் எனச் சொல்வதற்கில்லை அதே சமயம் யோசிப்பவர் நம்மையெல்லாம் யோசிக்கவைத்துவிட்டார் என்பதையும் மறுக்க இயலவில்லை. "மன்றத்திலே தரமான பாடலுக்கு பரிசுகிடைக்கிரதென்றால் அதைக் கண்டு மகிழ்பவனும் நாந்தான் அதே சமயம் தவறான பாடலுக்கு மன்னன் பரிசளிப்பானென்றால் அதை தட்டிக்கேட்கும் தமிழ் பதிவனும் நாந்தான்." என என் முன்னோன் நக்கீரனின் மொழியில் சொல்கிறேன் (அடுத்து தருமி டையலாக். அவர் வருவாரா?).
ஒரு தலைப்புக்கு கதையெழுதுவதென்பது சுவையான அனுபவம் வெற்றி பெருவது இன்னொரு அனுபவம். எனவே வாரம் ஒரு தலைப்பு என்பதிவில் தரவிர்ருக்கிறேன். யார் வேண்டுமானாலும் சும்மாங்காட்டியும் பதிவுகள் இடலாம். வெறும் பாராட்டுக்களுக்காக. போட்டியெல்லாம் கிடையாது.
இந்த வாரத் தலைப்பு 'நரகாசுரன்'. பதிவின் தலைப்பை நரகாசுரன் என வைத்துக் கொண்டு எழுதுங்கள். உங்களுக்குத் தோன்றும் தலைப்புக்களை பின்னூட்டமாய் இடுங்கள்.
இதுவரை எனக்கு வாக்களித்த என 'ரசிகப் பெருமக்களுக்கு' (பில்ட் அப், கண்டுக்கதீங்க) நான் நன்றி சொல்லவில்லை எனவே இந்தப் பதிவு. நன்றி! நன்றி! நன்றி!நன்றி சொல்லிட்டு ஏன் இந்தப் புலம்பல்னு கேட்டா ஒழுங்கா 20பேர் ஓட்டுப்போட்டும் தோல்வியத் தழுவிட்டோமேங்க்ற வருத்தந்தான் வேறென்ன சொல்ல.
மீண்டும் ஓட்டளித்த நண்பர்களுக்கு நன்றி! வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இன்றைய காண்டு பாடல்:
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை.
Wednesday, September 27, 2006
பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்
பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார்.
ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி.
பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட்.
முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான்.
அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய சரிதையான 'In the line of Fire' பற்றிய விவாதம்.
9/11 முடிந்ததும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானை, தங்களோடு செராவிட்டால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்கப்படும் என மிரட்டியிருந்ததைப் பற்றி பேச்சு தொடர்ந்தது.
கடைசியில் ஜான் ஸ்டிவர்ட் ஒரு கேள்வி கேட்டார்.
"பாக்கிஸ்த்தானில் ஒரு தேர்தலில் புஷ்ஷும் பின் லேடனும் எதிரெதிர் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள்?"
முஷ்ரப் சிரித்தபடியே,"இருவருமே படுதோல்வியடைவார்கள்." ("They will both lose miserabily").
Sunday, September 24, 2006
Wednesday, September 20, 2006
போப் Vs. இஸ்லாம்
Tuesday, September 19, 2006
தாய்லாந்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?
-- Tanks are rolling through the streets of Bangkok, Thailand, amid rumors of a coup attempt, CNN confirms.
update
--Wire services report Thailand's Prime Minister Thaksin Shinawatra has declared a state of emergency after tanks were spotted rolling through Bangkok and coup rumors swept the city.
விரிவான செய்திகள்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
Saturday, September 16, 2006
இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கட்
மணி 2:16 அதிகாலை. (அதி அதி காலை)
11 ஓவர்களுக்குப்பின் ஆஸ்த்ரேலியா 67 ரன்கள் எடுத்துள்ளது 1 விக்கட் இழப்பு.
ஜாக்ஸ் அவுட் ஆக பாண்டிங் களத்தில் இறங்கியுள்ளார்.
Friday, September 15, 2006
ஸ்பினாச் கீரை பற்றிய எச்சரிக்கை
சுவையான தகவல்
எளிதில் பயனீட்டாளராய் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள். சிறிய செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். அது இரண்டு ஐக்கான்களை(Icons) உலவியில் நிறுவுகிறது. இதில் TAG எனும் ஐக்கான் மூலம் நமக்குப் பிடித்த சுட்டிகளை குறிச்சொற்களோடு சேகரிக்க முடிகிறது.
உங்கள் குறிச் சொற்களை மேலும் குழுக்களாய் சேர்க்கமுடிகிறது. படித்ததில் பிடித்த பதிவுகளை உங்கள் வார்ப்புருவின் பகுதியாக சேர்க்க Settings->Link Roll எனும் சுட்டிகளில் சென்று ஸ்க்ரிப்ட்டை உருவாக்கி வார்ப்புருவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தற்போது ஆங்கிலமல்லாத எழுத்துக்கலிலான குறிச் சொற்களை லின்க் ரோல் ஆக்க இயலவில்லை. நான் ஏற்படுத்திய ஸ்க்ரிப்ட் நன்றாக இயங்கி வந்தது இப்போது இயங்கவில்லை. இதை del.icio.us க்கு தெரிவித்திருக்கிறேன் அவர்கள் பதில் நம்பிக்கை தருவதாயுள்ளது.
இன்னும் விரிவாய் தகவல்கள் வேண்டுவோர் பின்னூட்டம் வாயிலாக அல்லது தனி மடலில் கேட்டால் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
என் முந்தைய பதிவு நான் சேகரித்துள்ள சுட்டிகளின் குறிச் சொற்களின் தொகுப்பு.
இன்னுமொரு சுவையான தகவல். டெலிஷியசில் பயனீட்டாளர்கள் நெட்வொர்க் செய்துகொள்ள வசதி உள்ளது இதன்மூலம் ஒருவரின் சேகரிப்பை மற்றவர்களும் பார்த்து பயன்படுத்த முடிகிறது.
del.icio.us ஐ எனக்கு அறிமுகப் படித்திய நண்பருக்கு நன்றி.
Thursday, September 14, 2006
Wednesday, September 13, 2006
ஒருநாள் கழிந்தது.
மாங்கு மாங்குன்னு ப்ளாக் எழுதியும் பொழுது போகலியா? கீழேயுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்க.
'பண்ணி'யஸ்ட் விளம்பரங்கள். வாங்கும்போது குறைந்தபட்சம் விளம்பரத்த நெனச்சாவது சிரிக்கலாம். "The Product was crappy, but the ad was funny as hell".
தூசி படர்ந்திருந்த காரின்மேல் உங்க பேரை எழுதியிருக்கீங்களா? _____ உன்னை காதலிக்கிறேன் என பொறித்திருக்கிறீர்களா? குறைந்த பட்சம் ஒரு கோடாவது கிழித்திருக்கிறீர்களா? இவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க...
லிட்டில் ஜானின் சொந்தக்காரங்கள மாடலா வச்சு சில படங்கள் எடுத்திருக்கார் இந்த சக பதிவர். புதுசா காமெரா வாங்கியவங்க செய்து பாக்கலாம்.
A4 பேப்பர வச்சு ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம், ராக்கட் செய்யலாம், படகு செய்யலாம், அவசரத்துக்கு துடைக்கலாம் ஆனா இவரு சரியான 'வெட்டி'வேலப்பா.
சுவத்துல கிறுக்கினா அடிகிடைக்கும் ஆனா அழகா வரஞ்சா..?
இன்னும் பொழுது போகலியா? சரி இந்த விளையாட்ட ட்ரை பண்ணுங்க.
நீங்களும் மார்டன் ஆர்ட்டிஸ்ட் ஆகலாம். சும்மா எதையாவது கிறுக்கினாலே மார்டன் ஆர்ட் ஆகிடும். நிஜமாங்க! இங்க போயி எலிய (Mouse) உலாவவிடுங்க ஒரு 'க்ளிக்' செஞ்சா கலர் காட்டலாம். கடைசில ஓவியத்த சின்னக் குழந்தைங்ககிட்ட காட்டாதீங்க அப்புறம் வாரம் ஒருமுறை வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கவேண்டிவரும்.
உங்க பதிவின் தோற்றம்பற்றி கர்வம் உடையவரா? இதப் பாருங்க.
Monday, September 11, 2006
தீட்டு
மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் - நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? - இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.
கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் - சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? - இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?
தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக - மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? - அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?
எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் - இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.
Friday, September 08, 2006
மீண்டும் அலைகள்
அலைகள்...பாறைகள்...மணல்மேடுகள்
முதல் அத்தியாயத்திலிருந்து துவங்கவும்.
முட்டத்தை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என நினைக்கிறேன். கதத விவாதத்தில் பங்குபெற யாருக்கேனும் விருப்பமுண்டா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மகனை இழந்த வியாகுல மாதாவாய் - ஜென்மப்
பாவமற்ற அமல உற்பவியாய் - என்றும்
குணம்தரும் ஆரோக்ய அன்னையாய்
விண்ணாளும் அரசியாய்
உலகெலாம் போற்றும் வேளங்கண்ணியாய்
தேவனுக்கும் தெவையுள்ளோருக்கும் தாயாய்
முடிவில்லாத் துணை தரும் சதா
சகாயமாதாவாய்
முப்பொழுதும் கன்னியாய்
எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜோவின் பதிவு.
திரையில் வந்த மாதா பாடல்கள்
Thursday, September 07, 2006
எதிரி என்றொரு தோழன்
என் இருப்பின் இலக்கணம் நீ.
என் செய்கைகளை
பொம்மலாட்டமாய் வெறும்
விரலசைவுகளில்
மாற்றியமைக்கிறாய்.
உன் கட்டளைகளுக்கு எதிர்வினைப்பதே
என் வாழ்க்கையாகிவிட்டது.
உன்னைச் சுற்றியே
என் வாழ்வைப் பின்னியுள்ளேன்.
நீயே என் குறிக்கோள்.
உன்னை வீழ்த்தாமல் விட்டுவைத்திருப்பது
நான் வீழாமலிருக்கத்தான்.
என் நண்பர்களின் புகழாரங்கள்
என் உணர்வுகளை
மழுங்கச் செய்கின்றன,
நீயோ இன்னும் வாழவேண்டி
என்னைத் தூண்டுகிறாய்.
உன்னை வென்றுவிட்டால்?
நீ உமிழும் நெருப்பை
உள்ளிழுக்கப் பழகிவிட்டேன்,
வெறும் காற்று எனக்கு
விஷமாகிப் போகும்.
உன்னை வென்ற மறுகணமே சுயமிழப்பேன்.
என் எதிரியே நீ
இன்னும் வாழவேண்டும் நூறாண்டு.
த'சாவு'தாரம்
'பட்டை' பிரம்மச்சாரி கமல். வயதாகிவிட்டது, (இந்தியன் தாத்தா வேஷம்). தன் வாரிசு இந்த உலகத்தில் பிறக்கவேண்டும் என நினைக்கிறார். ஒரு விந்து வங்கியில் சென்று தன் விந்துவை தானம் செய்கிறார் இதற்கு நடக்கும் போராட்டத்தில் தாத்தா இறந்து போகிறார்.
இந்த விந்துவை வைத்து ஆராய்ச்சி செய்யும் சைண்டிஸ்ட் இன்னும் வயதானவர். அவருக்கு அல்ஸ்தைமர் இருப்பதால் கை ஆடும். இந்தக் கை ஆட்டத்தில் கமல் தாத்தாவின் வித்தை தவறாக விதைத்துவிட பல கமல்கள் உருவாகிறார்கள்.
படத்தில் மொத்தம் 9பது கமல்கள்தான். அப்போ தசவதாரம்? ஒன்பதில் ஒருவருக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. 'கடவுள் பாதி மிருகம் பாதி' மாதிரி. இதை நுட்பமாக காண்பிக்க அவரின் வலைப் பதிவில் அவரே வாசகராய் பின்னூட்டம் போடுவதுபோல காட்சியமைப்பு. நிலமை முத்திப்போய் ஒரு கட்டத்தில் அவரே தனக்குப் போலியாய் ஒரு வலைப்பதிவாளரர உருவாக்குகிறார். போலிக்கும் நிஜ கமலுக்கும் நடக்கும் போராட்டம் க்ரைம் த்ரில்லராய், ஆளவந்தான்போல.
இன்னொரு கமல் ஹிட்லரின் நாஜி தத்துவங்களால் ஈர்க்கப்படுகிறார். மீசை வளராத நோய் இவருக்கு இருப்பதால் கஷ்ட்டப்பட்டு ஹிட்லர் மீசையை மூக்குக்கு கீழ் பச்சை குத்துகிறார். க்ளைமாக்சில் இவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு தாடியை பச்சைக் குத்திக்கொண்டு வரும் காட்சி நெஞ்சை உருக்கும்.
எல்லா கமலும் ஒன்றாய் வரும் காட்சி கம்ப்யூட்டர் க்ராபிக்சில் 'கட் அண்ட் பேஸ்ட்' எனும் புதிய யுக்தி கொண்டு செய்யப்பட்டுள்ளது.
எல்லா பாத்திரங்களும் தங்களின் தந்தை யார் எனத் தேடுவதே கதை. கடைசியில் அந்த டெஸ்ட் ட்யூபை கண்டுபிடித்தார்களா என்பதே கதையின் முடிச்சு.
ஹே ராம் கெட் அப்பில் வரும் கமல், காந்தி தேசப் 'பிதா' என்பதைக் கேள்விப்பட்டு தனக்கும் அவர்தான் தந்தை என வாதாடப் போகிறார். காந்தி கோபத்தில் இவரை ஆள்வைத்து சுடச் சொல்கிறார். அப்படிச் சுடும்போது குறிதவறி குண்டு காந்திமேல் பாய்ந்து...(மீதியை வரலாறு புத்தகத்தில் படிக்கவும்) இதன் மூலம் பல வரலாற்று குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை நிலைநாட்டச் செய்வது கமலின் ஐடியாவாம்.
'பத்து பத்தா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ' எனும் பாடல் ரஜினியின் 'எட்டு எட்டா' என்பது தப்புக்கணக்கு என நிரூபிக்குமாம்.
தஸவதாரத்தில் புஷ் அவதாரமும் உண்டாம். இவர் தன் வீட்டு தண்னித் தொட்டி உடடந்து வீட்டு மக்கள் அவதிப் படுவதைப் பார்க்காமல் பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டிலிருந்து எண்ணை எப்படி திருடலாம் என யோசித்துக்கொண்டிருப்பாராம்.
எல்லா தகவல்களையும் தந்துவிட்டால் படம் பார்க்கும்போது போர் அடிக்குமே...அதனால வுடு ஜூட்டு.
pinகுறிப்பு: ஆபீசில் ரெம்ப போர் அடிக்குதுங்கோ.
Monday, September 04, 2006
இளையக் கன்னி
"...பிறகு ஊர்வலம் குகையை நோக்கித் தொடர்ந்தது."
"முதுகுக்குப் பின்னாடி பேசறதுதான் எனக்குப் பிடிக்கும்"
"யாருப்பா பெயிண்டிங்க பாதியில வுட்டது?"
"கடைசியில நீமோவக் கண்டுபிடிச்சிட்டாங்களா இல்லியா?"
"வாத்துக்கால் சூப்புக்கு டிமாண்ட் அதிகமாயிடுச்சாம்"
"என்னடா இன்னைக்கு ஒரு கலரையுமே காணோம்?"
"யாருப்பா அங்க லைட்ட அணைச்சா கொஞ்சம் தூங்குவோம்ல"
Friday, September 01, 2006
லிஃப்ட்
'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.
முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.
"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.
எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.
"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'
"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.
வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.
'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா
'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி
'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா
கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.
வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.
அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.
அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.
அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.
"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.
"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.
'நல்லவந்தான்'.
"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."
"வாங்க."
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.
"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.
"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"
"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."
"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."
"தேவியா?"
"ஆமா."
உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.
'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.
புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.
பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.
"ரெம்ப நன்றிப்பா?"
"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.
வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'
பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.
சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.
சிறில் அலெக்ஸ்