.

Wednesday, January 03, 2007

வெயில் - நிழலல்ல நிஜம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.

வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் வாழ்வில் ஒருநாள் சுள்ளென சுட்ட வெயில்தான்.
கண்டிப்பான தந்தை, கட் அடித்துவிட்டு சினிமாபோன மகனை அம்மணமாக வெயிலில் கட்டிப்போடுகிறார். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் அவனும், அவன் சுயமரியாதையும் பொசுக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வாழ்க்கை வெறும் ஏமாற்றங்களையே தருகிறது. அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.

பாத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல படம் எடுக்கவேண்டும் என பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார். அவரேகூட சில பொன் மேனி உருகல்களோடுதான் படம் எடுத்திருக்கிறார். வெயில், கிராமத்து வீதிகளில் விதி ஆடும் பம்பர விளையாட்டுக்களை நேரடியாய் பதித்ததுபோல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் பரிமாணங்களை முகபாவத்திலேயும் குறைந்தபட்ச வசனத்திலேயும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். வெறும் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது கிராமத்தின் பல முகங்களையும் கதையில் இணைத்திருப்பதும் சிறப்பு.

பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். 'போட்டுரலாம்' 'தூக்கிரலாம்; எனும் வில்லன்களின் உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால் படம் நம்ம மாமூல் தமிழ் படங்களை துவைத்துப் போட்டிருக்கிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் பல சிறுவர்கள்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.

கோயமுத்தூரில் இருந்த நாட்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கான சிறைச்சாலை ஒன்றை ஞாயிறுதோறும் பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அங்கிருந்த சிறுவர்களில் அதிகம்பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். அவர்களே தங்களை 'சந்தேகக் கேஸ்' 'கிரிமினல் கேஸ்' என பகுத்துக் கொள்வதுண்டு. இப்படி ஓடி வரும் சிறுவர்கள் வாழ்க்கை பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை. இதில் வெற்றி பெறும் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளை வளர்ப்பதற்கு இதுதான் சிறந்த வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரியாக வளர்வதில்லை என்பதும் இதற்குச் சான்று. குழந்தைகளை தண்டிப்பது மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பதை இந்தப் படத்தின் மூலமோ இன்னும் செய்தித் தாள்களில் படிக்கும் பல செய்திகள் மூலமோ இல்லை ஒரு சிறுவர் சிறைச்சாலையை போய் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். சும்மா எடுத்தேன் அடித்தேன் என இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையில் அதீத தண்டனைகள் அதிகமில்லை எனவே நினைக்கிறேன். நான் பட்ட அடி என் பிள்ளைங்க படவேண்டாம் எனும் எண்ணம் இதற்கு காரணமாயிருக்கலாம்.

படம் முடிந்ததும் ஒரு கேள்வி தோன்றியது. ஒருவேளை அன்று வெயில் குறைவாயிருந்திருந்தால்?


கூகிளிய பிற விமர்சனங்கள்
தம்பி
சாரல்
விழியன்
யாழ்

18 comments:

நாமக்கல் சிபி said...

அருமையா எழுதியிருக்கீங்க சிறில்...

எதுக்கு வெயில்னு வெச்சாங்கனு எனக்கு புரியாமலிருந்தது.. உங்க பதிவ பார்த்தவுடனே புரிந்துவிட்டது... மிக்க நன்றி!!!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி வெட்டிப்பயல்.

//எதுக்கு வெயில்னு வெச்சாங்கனு எனக்கு புரியாமலிருந்தது.. உங்க பதிவ பார்த்தவுடனே புரிந்துவிட்டது... மிக்க நன்றி!!!
//

ரெம்ப யோசிக்க வைத்த படம் இது. முடிந்ததும் கொஞ்ச நேரம் கிராமத்து நினவுகளில் ஆழ்ந்துபோனேன்.

நமக்கு இப்படி ஒரு நிலமை வந்திருந்தால்? வெயில் எல்லாருக்கும் பொதுவானதுதானே?

JTP said...

வேரொரு கோணத்திலிருந்து விமர்சனம், அருமை!

//நமக்கு இப்படி ஒரு நிலமை வந்திருந்தால்?

இங்குதான் நமக்கு கடவுள் நினைப்பு வருமோ?

Anonymous said...

படம் பார்க்க சொல்லும் விமர்சனம்

சிறில் அலெக்ஸ் said...

JTP,
கடவுளையும் நினைக்கலாம் நம்ம பெற்றோரையும் நினைச்சுப் பாக்கலாம்.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நிர்மல். நிச்சயம் பாருங்க.

Sridhar V said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல அருமையான படம்தான்.

//அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.//

இங்கேதான் கொஞ்சம் இடிக்கின்றது. படத்தை நான் பார்த்த பொழுது பசுபதியின் டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் நல்ல ஜாலியாகவே காண்பித்ததாக பட்டது. அவர் ஒரு தொழிலைக் கற்று கொள்கிறார். ஒரு திறமையான தொழிலாளியாகவும் வளருகிறார். ஒரு அழகான காதலி கிடைக்கின்றாள். நன்றாக சல்லாபிக்கிறார். அந்த 15 நிமிடங்கள் கதைப் போக்கை சோதித்து விட்டார்கள். 'முருகேசன் பொண்டாட்டி ரூமுக்கு வரவும்' அப்படினு சிலைடு போடறதெல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனால் 'சபிக்கப் பட்ட ஒருவனாக' அவரை காமிக்கவில்லையோ என்று தோன்றியது.

அப்புறம் அந்த கிளைமேக்ஸ் வன்முறை மற்றும் கொலைகள், காதலிக்கு முன்பாக அவரை தியேட்டர் வாசலில் தூக்கில் தொங்க விடுவது, போன்றவைகள் கொஞ்சம் அதீதமாகத்தான் பட்டது.

உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் என்று வேறு சொல்கிறீர்கள். யார் சார் தனி ஒருவனாக அத்தனை பேரை போட்டு சதக் சதக்-னு குத்தி கொல்றாங்க? சூப்பர் மேன் / பேட் மேன் போன்ற அதீத சக்தி வாய்ந்த்வர் மாதிரி காமிக்க என்ன வர்த்தக நிர்ப்பந்தமோ...

ஏனோ அவ்வளவு 'சுள்'ளுனு வெயில் அடிக்கலையோனு ஒரு நினைப்பு.

கதிர் said...

உண்மைக்கு மிக அருகினில் சென்றாலே ஏனோ துருப்பிடித்தது போன்ற ஒரு உணர்வு.

உண்மைக்கு அருகினில் என்று சொல்லும்போதே அது உண்மை இல்லை என்பது உண்மைதானே!

ஆனால் இந்த படத்தில் வீட்டை விட்டு ஓடிப்போவதாக இருப்பது நான் பலமுறை நேரில் கண்ட நிகழ்ச்சி! பக்கத்து வீடுகளில், கூட படித்தவன் என்று பலபேர் ஓடிப்போன சிலநாள் நினைவில் இருந்து பின் நிரந்தரமாக அழிவார்கள்.

என் பக்கத்து வீட்டுல பாலான்னு ஒருத்தன் வீட்டை விட்டு ஓடினான். மூணு வருஷம் கழிச்சி திரும்ப வந்தான் வீட்டுல சேர்க்கல கோவத்துல பாட்டியை கொன்னுட்டு திரும்பவும் ஓடிட்டான். :))

இதுல ஓடிப்போனவனை பத்தி யாருமே நினைக்கறதில்ல. இந்த படத்தில அவனை பின் தொடர்ந்து போய் என்ன நிகழ்வுகள் நடக்குதுன்னு சொல்றாங்க!

ஒருவேளை இந்த படத்தை பார்த்தபிறகு. ஓடணும்னு ஒருத்தனுக்கு தோணாமல் இருந்தாலே வெற்றிதான்.

நல்ல அலசல்!

சிறில் அலெக்ஸ் said...

ஸ்ரீதர்,
நான் விட்ட சிலதை அழகா சொல்லியிருக்கீங்க. என்னது ஒரு முழுமையான அலசல் அல்ல. ஒப்புக்கொள்கிறேன்.

//படத்தை நான் பார்த்த பொழுது பசுபதியின் டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் நல்ல ஜாலியாகவே காண்பித்ததாக பட்டது.//
ஆமா. ஆனா ஒரு சின்ன இளைப்பாறல்தான் இது. தோல்வியான காதல் தந்த சுகங்களின் நினைவுகளே ஒரு மாபெரும் சுமையில்லையா?

வில்லத்தனமும் ஹீரோயிசமும் செயற்கைதான். அத கொஞ்சம் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஏனோ பல நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டதால் பெருசா சொல்லல.

//யார் சார் தனி ஒருவனாக அத்தனை பேரை போட்டு சதக் சதக்-னு குத்தி கொல்றாங்க?//

குறைந்தபட்சம் பேப்பரில் வரும் செய்திகளை வைத்தாவது இதை உறுதி செய்யலாம். கோர்டிலேயே சிலர் சேந்து ஒருத்தரை வெட்டிப்போட்ட செய்திகள் படித்திருப்பீர்களே. இது ஒரு பெரிய குறையாகத் தெரியல.

ஆனா நிச்சயமா வில்லன்கள் கொஞ்சம் செயற்கைத் தனத்தை சேர்க்கிறார்கள் என்றே சொல்லலாம். இதே பின்னணிய இன்னும் நிதர்சனமா (பின்னாலேர்ந்து வெட்டிபோட்டுட்டு ஓடுறதாகூட) காட்டியிருக்கலாம்.

சிறில் அலெக்ஸ் said...

//ஒருவேளை இந்த படத்தை பார்த்தபிறகு. ஓடணும்னு ஒருத்தனுக்கு தோணாமல் இருந்தாலே வெற்றிதான்.//

தம்பி.. நான் சொல்லணும்னு இருந்த பாயிண்ட். சொல்லிட்டீங்க.

நன்றி.
:)

oosi said...

/*ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.
*/

Cyril,

Just curious to know where this happened? Coimbatore?

சிறில் அலெக்ஸ் said...

ஊசி,
முட்டத்தில்.

நாமக்கல் சிபி said...

//இங்கேதான் கொஞ்சம் இடிக்கின்றது. படத்தை நான் பார்த்த பொழுது பசுபதியின் டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் நல்ல ஜாலியாகவே காண்பித்ததாக பட்டது. அவர் ஒரு தொழிலைக் கற்று கொள்கிறார். ஒரு திறமையான தொழிலாளியாகவும் வளருகிறார். ஒரு அழகான காதலி கிடைக்கின்றாள். நன்றாக சல்லாபிக்கிறார். அந்த 15 நிமிடங்கள் கதைப் போக்கை சோதித்து விட்டார்கள். 'முருகேசன் பொண்டாட்டி ரூமுக்கு வரவும்' அப்படினு சிலைடு போடறதெல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனால் 'சபிக்கப் பட்ட ஒருவனாக' அவரை காமிக்கவில்லையோ என்று தோன்றியது.//

ஸ்ரீதர்,
அந்த பெண் அவனை விரும்பவில்லை என்றால் வலி குறைவாகத்தான் இருந்திருக்கும். இவனுக்காக உயிரையே விடுமளவு பாசமுள்ள பெண்ணுடம் வாழ முடியாததே பெரும் சாபம்...

வாழ்க்கையில முன்னேறி அப்பா முன்னாடி நிக்கனும்னு கஷ்டப்பட்டு இருக்குற நேரத்துல அதுவும் முடியாம கூனி குறுகி போய் நிக்கறது சாபம் தான்.

எந்த ஒரு முயற்சியும் எடுக்கமாலிருந்தால் அது தனிக்கதை ஆனால் வெண்ணை திருளும் நேரத்தில் தாழி உடைந்தால் வலி அதிகமாகத்தானே இருக்கும்!

கடைசியா எல்லாரையும் அவர் கொல்றது சினிமா பாணி!!! நல்ல வேளை எல்லாத்தையும் கொன்னுட்டு அவருக்கு எதுவும் ஆகலைனு முடிக்காம இருந்தானுங்களேனு சந்தோஷப்பட வேண்டியது தான் :-)

Sridhar V said...

சிறில் மற்றும் பாலாஜி,

நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. நீங்கள் அருமையாக நல்ல கருத்துக்களை பட்டியலிட்டு விட்டீர்கள்.

ஆனால் யதார்த்தமான படம் என்பதில் எனக்கு கொஞ்சம் மாற்று குறைவாகத் தோன்றியது. மற்றபடி உங்களின் அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

அப்படியே நிஜத்தை முகத்தில் அறைந்த மாதிரி காண்பிக்கும் சில படங்கள் - அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள் போன்றவை. யதார்த்த்தை சினிமா முலாம் பூசி(காட்சியமைப்புகள், பாடல்கள் போன்றவை) கான்பிக்கும் படங்கள் கிழக்குச் சீமையிலே, மகா நதி, காதலுக்கு மரியாதை போன்றவைகள்.

இந்த மாதிரி சில படங்களை எப்பொழுது பார்த்தாலும் கண்களை கனக்கச் செய்யும்.

வசந்த பாலன், ஷங்கர், பசுபதி போன்ற தேர்ந்த கூட்டனியிடம் நான் மிகவும் எதிர்பார்த்தினால் கூட கொஞ்சம் அதிகமாக ஏமாந்து இருக்கலாம்.

மற்றபடி பார்த்து ரசிக்க வேண்டிய படம்தான்.

சிறில் அலெக்ஸ் said...

//மற்றபடி பார்த்து ரசிக்க வேண்டிய படம்தான். //
ஆமா ஸ்ரீதர்.

சிறில் அலெக்ஸ் said...

//கடைசியா எல்லாரையும் அவர் கொல்றது சினிமா பாணி!!! நல்ல வேளை எல்லாத்தையும் கொன்னுட்டு அவருக்கு எதுவும் ஆகலைனு முடிக்காம இருந்தானுங்களேனு சந்தோஷப்பட வேண்டியது தான் :-) //

:)

சிறில் அலெக்ஸ் said...

Test

Anonymous said...

Well said syril.
The movie is good I heard. will watch it.

Raghav

சிறில் அலெக்ஸ்