.

Friday, March 31, 2006

வக்கேட்டிங் ஸ்ப்ரிங்டேல் கோயிங் சிக்காகோ அவே

இன்னும் இரு வாரங்களுக்குள் சிக்காகோ பகுதிக்கு இடம் பெயர இருக்கிறேன். யாராவது அந்தப்பக்கம் இருந்தால், தொடர்புகொள்ள விரும்பினால் மெயிலுங்கள்.

கடவுள் 100 கி.மீ

மதங்கள் கடவுளைக் காட்டும் ஒரு பெயர்ப் பலகையே. இதை ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். பதிவில் இடவேண்டும் எனத் தோன்றியது.

ஒரு ஊருக்குப் போகிறோம், சென்னை என வைத்துக்கொள்வோம். வழியில் சென்னை 100 கி.மீ என ஒரு பெயர்ப்பலகை வருகிறது அதுவே சென்னை என்றால் எப்படி?

மதங்களும் கடவுள் எனும் இலக்கை அடைய வழிகாட்டும் பெயர்ப் பலகைகளே. அதையே பிடித்துக்கொண்டு நிற்பது கடவுள் நோக்கிய நம் பயணம் முடிவு பெறாமல் போவதற்க்கு வழிவகுக்கும்.

மதங்களைத் தாண்டிய, தனிமனித கடவுள் அனுபவம்தான் முழுமையான கடவுள் அனுபவமாகமுடியும். இதைத்தான் சித்தர்கள் சொல்லியிருக்கவேண்டும்.

நட்டகல்லை தெய்வமென்று
நாலுபுஷ்பம் சாத்தியே

சுற்றிவந்து முணுமுணென்று
சொல்லும் மந்திரம் ஏனடா(ஏதடா?)
நட்டகல்லும் பேசுமோ

நாதன் 'உள்'ளிருக்கையில்
சுட்ட சட்டி தத்துவம்
கறிச்சுவை அறியுமோ.

பராசக்தி வசனத்தில் கேட்ட பாடல். கல்லை வணங்குவதை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளவேன்டும். அதை ஒரு மதம் சார்ந்த வழக்கமாக எடுத்துக்கொள்வது குறுகிய மனப்பாங்கையே காட்டும்.

நட்டகல் என்பது வெறும் போதனைகளும் மந்திரங்களும், சடங்குகளும், பூசைகளும், தொழுகையுமே ஆன்மீகம் என நினக்கும் மனப்பாங்கை குறிக்கிறது.

மதங்கள் தரும் வெறும் வெளி அடையாளங்களை கடைபிடித்துவிட்டு எனக்கும் கடவுளைத் தெரியும் நானும் அவரும் அப்பா பிள்ளை என்பது பெயர்ப்பலகையை பிடித்துக்கொண்டு நான் சென்னை வந்துவிட்டேன் என்பதற்குச் சமம்.

கடவுளைத் தேடுங்கள். மனித உறவுகளில், இயற்கையின் அளவற்ற வனப்பில், பகிர்வில், மன்னிப்பில், இம்மையில், உண்மையில், உங்களில் தேடுங்கள்.

மதங்கள் வழி காட்டட்டும், பயணம் உங்களதாய் இருக்கட்டும்.


Wednesday, March 29, 2006

கடவுள் நம்பிக்கை

நல்லடியாரின் பதிவு ஒன்றை வாசித்தேன் ஒரு கதை நியாபகம் வந்தது.
http://athusari.blogspot.com/2006/03/blog-post_22.html

வெள்ளம் வந்து ஒரு ஊரே அழிந்துபோனது. ஊரில் பலரும் இறந்துபோனார்கள். தப்பி ஓடிய சிலர் ஒரு குருவிடம் போய் சேர்ந்தார்கள்.

ஒருவர் குருவிடம் கேட்டார்,"ஐயா, ஏன் கடவுள் என்க ஊரை அழிச்சார்?" .
குரு சொன்னார்,"ஊரில் உள்ள கெட்டவங்களை அழிக்க".
"எங்க ஊரிலிருந்த நல்லவங்களையும் ஏன் கொன்னார்?."
குரு யோசித்துவிட்டு,"கெட்டவங்களுக்கெதிரா சாட்சி சொல்வதற்கு".

'நம்பிக்கையுள்ளவன் எல்லாத்துக்கும் விடை சொல்வான்'.

'Gods Must be Crazy' - அருமையான காமெடி படம். பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் கதை இதுதான்.

மேலே பறந்துகொண்டிருக்கும் விமானாம் ஒன்றிலிருந்து ஒருவன் காலியான ஒரு 'கோக்' பாட்டிலை வீசி எறிய, அது போய் ஆப்ரிக்க காட்டுக்குள் விழுகிறது.

காட்டுவாசி ஒருவன் அதை பயத்துடன் எடுக்கிறான். இதுவரையில் கண்ணாடி பொருட்களையே பாத்திராத காட்டுவாசிகள் இது கடவுளிடமிருந்து வந்த பொருள் என அதை பயத்துடன் பார்க்கின்றனர்.

கடைசியில் இதை பூமியின் எல்லையில் கொண்டு எறிந்துவிட்டு வருகிறேன் என அந்த காட்டுவாசி புரப்படுகின்றான்.

இதை வெறும் காமெடியாகப் ப்ஆர்க்காமல் மதங்களும் கடவுள் நம்பிக்கையும் எப்படி துவங்கியிருக்கும் என்கிற கோணத்தில் பார்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

விடை தெரியாத பல கேள்விகளுக்கு இன்று அறிவுபூர்வமான விடைகள் கிடைக்கின்றன. 'கண்னுக்குத் தெரியாததால் இறைவன் இல்லை என்பதா?' என சிலர் கேட்கலாம்.
இதையே 'இயற்கையை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அதை கடவுள் என்பதா? 'எனவும் கேட்கலாமே?

கடவுளை நமக்கு புலப்படாத ஒரு சக்தி என ஏற்றுக்கொள்ளலாம், எனினும் அந்த சக்தி நம்மோடு தனிப்பட்ட முறையில் உறவாடுகிறதா, மதங்கள் கடவுள் பற்றி சொல்லும் கருத்துக்கள் உண்மையா என்பதெல்லாம் வாதத்திற்குட்பட்டவை.

'கண்ணுக்குப் புலப்படாத, ஆய்வுசெய்து ஒப்புக்கொள்ளாத அறிவியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறீர்களே?' என்பது இன்னொரு வாதம். அறிவியல் கோட்பாடுகள் எதுவும் ஒரு வரியில் சொல்லப்படவில்லை. எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஒரு தீவிர ஆய்வும் அல்லது நிரூபிக்கப்பட்ட இன்னொரு ஆய்விலிருந்து பெறப்பட்ட உண்மையும் அதானால் ஏற்படும் ஒப்பீடும்(Projection?), தர்க்கரீதியான தெரிதலும் (Logical conclusion) இருப்பதை உணரமுடிகிறது.

பரிணாம வளர்ச்சி எனும் கோட்பாட்டை பல ஒப்பீடுகள் மூலம் நிருபிக்க முடிகிறது குறைந்தபட்சம் அதிலிருக்கும் தர்க்கத்தின் நேர்மையை மதிப்பிடவாவது முடிகிறது.

அறிவியல் சொல்வதெல்லாம் உண்மையில்லை என்பதையும் அறிவியலே நிருபிக்கிறது,ஆனால் மதங்களோ தங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. நாங்கள் சொல்வதுதான் உண்மை எனச் சொல்கின்றன.

இன்னுமொரு கோணம். இப்போதுள்ள, இயற்கை, மற்றும் சூழல் பற்றிய அறிவு, மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தால் மதங்கள் தோன்றியிருக்குமா? சந்தேகம்தான். அப்படியே தோன்றியிருப்பினும் இப்போதுள்ள கருத்தமைப்பில் இருக்க வாய்ப்பில்லை.

பேயடித்து இறந்து போனவர்கள் மாரடைப்பால் இறந்துபோனவர்களாக கருதப்பட்டிருப்பார்கள், நெருப்பை கட்டுப்படுத்தமுடியும் என அறிந்திருப்பர்கள், சுனாமி வரும் எனத் தெரிந்திருக்கும், எது எரிமலை எனத் தெரிந்திருக்கும், குழந்தை பிறப்பு பற்றிய அறிவு இருந்திருக்கும், ஹார்மோன்களின் விளைவுகளும் பயனும் தெரிந்திருக்கும், மிருகங்களுக்கும் அறிவு உள்ளது எனப் புரிந்திருக்கும்.

இப்படி ஒரு அறிவியல் சூழல் இருந்திருந்தால் மதங்கள் எப்படித் தோன்றியிருக்கும்?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களெல்லாம் அறிவாளிகளா? ஓரளவுக்கு இந்தக் கூற்று உண்மை எனத் தோன்றுகிறது. கடவுளை 'அறிவு'பூர்வமாக தெரிந்துகொள்ளமுடியாது என்பது உண்மையானால், 'அறிவு'பூர்வமானவற்றை மட்டுமே நம்புபவர்களை 'அறிவாளிகள்' எனக் கூறவது முறையாகாதா?

Tuesday, March 28, 2006

ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

இந்தப் பதிவை கொஞ்ச நாள் முன்னால் எழுதியிருந்தேன். மீண்டும் பதிக்கவேண்டும் எனத் தோன்றியது. மதம் மதம் மதம் என மதம் 'பிடித்த' மக்கள் சிலர் நம்மிடையே இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிவு என்றும் கொள்ளலாம்.

http://theyn.blogspot.com/2006/01/blog-post_25.html

இறை நேசனுக்கான பின்னூட்டம்

கால்கரி சிவா எழுதிவரும் தொடரை எதிர்த்து வந்த விவாதங்கள் யோசிக்கவைக்கின்றன. அவர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, சிலருக்கு நெஞ்சம் குறுகுறுக்கிறது. இறை நேசனின் கீழ்கண்ட பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம்.

http://copymannan.blogspot.com/2006/03/blog-post_27.html

இறை நேசன் உங்கள் பதிவில் அடிப்படை 'வாதம்' தெரிகிறது. கால்கரி சிவ தன் அனுபவங்களை பதிக்கக்கூடாதென்பது எந்த ஊர் நியாயம்?

அவர் அல்லாவையா குறைசொன்னார் அநியாயம் செய்பவரைத்தான் சொன்னார்? எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள். உங்களுக்குத் தெரிந்த அயோக்கியர்களைப்ப்ற்றி நீங்கள் எழுதுங்கள் அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.
சாதி மட்டுமா மனிதனை பிரிக்கிறது, பணக்காரன் ஏழை என பாகுபாடு காடுவதில்லையா நாம்? நம் வீட்டுக்கு வேலை செய்யவரும் ஆட்களை கட்டித்தழுவி கொண்டாடவா செய்கிறோம்? உங்கள் மதம் சார்ந்த எதுவும் விமர்சிக்கப்படக்கூடாதென்பதே அடிப்படைவாதம் இல்லையா? இதைத்தான் இப்போது உலகம் முழுவதும் பார்க்கமுடிகிறது.


நீங்கள் மதம் மாறியதை பெருமையாய் சொல்கிறீர்கள் நல்லது, இந்த மதம் மாறுவதற்க்கான சுதந்திரம் நீங்கள் வக்காலத்து வாங்கும் அரேபிய நாடுகளில் இல்லையே. இந்தியாதானே உங்களுக்கு அந்தச் சுதந்திரம் கொடுத்துள்ளது? இதை மறந்துவிட்டு காதலித்து திருமணம் செய்பவர்களை வெட்டிப்போடப்போகிறீர்கள் இதுதான் உங்கள் மார்க்கமா(வழியா என படிக்கவும்)?

உங்களைப்போலத்தான் எல்லாருக்கும் தங்கள் மதம், மற்றும் நம்பிக்கை மீது உணர்வுகள் இருக்கும். அழகாய் தமிழ் எழுதுகிறீர்கள் அதை வெறுப்பை வளர்க்க ஏன் பயன் படுத்தவேண்டும்?

சிவா தன் அனுபவத்தை சொன்னார், அதைவைத்து அவரை இந்து வெறியன் போலப் பேசுவது எந்தவகையிலும் நியாயமில்லை.

இந்துக்கள் பல கடவுள்களை வணங்கினால் உங்களுக்கென்ன? இப்படி உங்கள் வழிபாட்டு முறையை யாராவது குறைசொன்னால் எப்படி துடிப்பீர்கள்.

மதங்கள் மனிதர்களின் ஓப்பியம் என்பதை நிச்சயமாக உங்கள் போன்றோரை வைத்து கணக்கிட முடிகிறது.

கருத்து ரீதியாக எந்த எதிர்ப்பையும் வைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் ஒருவரை திட்டித்தீர்க்கவும் பட்டம் கட்டவும் உங்களுக்கு உரிமையில்லை.
இன்னொரு முறை செய்யுமுன் யோசியுங்கள் நண்பர் சொன்னது போல, உங்கள் நம்பிக்கையில் இறந்தபிந்தான் தண்டனை ஆனால் இந்து நம்பிக்கையிலே வாழும்போதே தண்டனை.

ஆடி அடங்கும் வாழ்க்கையில் மனிதனை நேசியுங்கள் அதன் வழியாக இறைவனை நேசிக்கலாம்.

காந்தி சொன்னது போல சாதாரண இந்து கோழையாகத்தானிருக்கிறான் போல. இந்த பதிவுக்கு ஏன் அதிகம் எதிர்ப்புவரவில்லை? இவர் போல பலர் தேவையில்லாமல் இந்து மதத்தையும் இந்தியாவையும், பிராமணர்களையும் கண்டபடி இழித்து எழுதுகிறார்கள். இவர்களை பலரும் புகழத்தான் செய்கிறார்கள். அதே சமயம் சிவாவின் மதம் சாராத சமூக அனுபவப் பதிவையும் அவர் தொடர்ந்து எழுத முடியாதபடிக்கு இவர்கள் எதிர்க்கிறார்கள்.

வலைப்பதிவர்களே படித்த நமக்குள்ளே இவ்வளவு வெறுப்பு இருக்குமென்றால் ...? வெறும் மாயப் பெயருக்குள் நின்றுகொண்டு அடுத்தவர்களை என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம் என நினப்பவர்களை எல்லோரும் சேர்ந்து எதிர்ப்போம்.

ஒரு மனித உயிருக்குமுன் எந்தக் கொள்கையும் பெரியதல்ல. மனித உறவே முதன்மையானது இறைவன் எல்லாம் அப்புறம்தான். கொஞ்சம் யோசிப்போம்.

'என்னடா சிறில் இவ்வளவு அப்பாவியா இருக்கறியே' எனக் கேட்பவர்களுக்கு என்ன சொல்ல?

Monday, March 27, 2006

சந்திர பாபு - 2 - தந்தனா பாட்டு

அருமையான துள்ளல்/எள்ளல் பாட்டு. பாட்டின் துவக்கத்தில் பாகவதர் சந்திர பாபு கலக்கலாய் வெளிவருகிறார்... 'ஸ்வாமீ... எம்மா'... அருமை.

கேட்டுப்பாருங்கள்..

Thursday, March 23, 2006

சந்திர பாபு - 1 - தாங்காதம்மா தாங்காது

சந்திர பாபு எனும் ஒரு கலைஞனை ரசிக்காதவர்கள் இல்லை. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் ஒளிர்ந்தவர். நான் மிகவும் ரசித்த இவரது பாடல்கள் சில ஒரு மினி தொடராக.

'தாங்காதம்மா தாங்காது' சந்திரபாபு பாடல்களில் பெரிய ஹிட் எனச் சொல்லமுடியாது. சிலருக்கு இந்தப் பாடலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரபாபு பாடல் என்றாலே நமக்கு 'பம்பரக்கண்ணாலே' அல்லது 'குங்குமப் பூவே' தான் நியாபகம் வரும்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் (வி-ரா) இசையில் தாங்காதம்மா தாங்காது அரிய மெட்டு. இடையிடையே ஹம்மிங் செய்யும் பெண்ணும் கலக்கலாக பாடியிருப்பார். உச்சக் குரலில் கர்நாடக இசயில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சந்திரபாபுவின் குரல் இனிய மாற்று. இவர் பாடிய எள்ளல் பாடல்களில் இதுவும் ஒன்று.

வி-ரா இசையில் மேற்கத்திய இசைக்கருவிகளின் தாக்கமிருக்கும் இந்தப் பாடலும் 'செலோ'வில் ஆரம்பிக்கிறது.வழக்கமான 'க்ளாரினட்' இசை பல இடங்களில். கித்தாரில் ஒரு கார்ட் (Chord) தாளத்தோடு சேர்கிறது.

பாடல் வரிகளோ 'சம்சாரம்' எப்படி கடினமானது என்பதைச் சொல்கிறது.

தாங்காதம்மா தாங்காது (சுட்டி)
சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமல் மாலையிட்டாலும்
அடியேன் மனசு தாங்காது..

கையில் காசுமில்லே
கடனும் கிடைக்கவில்லை
வீடும் சொந்தமில்லே
ஆண்டி மடத்தில் இடமுமில்லை
ஈயும் ஊயும் ஈயும் ஊயும் வே - (அழகாய் பாடுகிறார் பெண்)
அவசரமாக தாலி கட்டினா அடுத்தநாள்வரை தாங்காது
சபலத்தினாலே ஜோடியச் சேர்த்தா சம்சாரம்போல் ஆகாது
தாங்காது தாங்காது தாங்காது.

இருந்தால் ஒருவீடு
இல்லே பலவீடு
கிடைத்தால் சாப்பாடு அம்மா
இதுதான் என்பாடு
காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் காவியமாக முடியாது
பாத்து சிரிச்ச பாவத்துக்காக பத்தினியாக்க முடியாது
தாங்காது தாங்காது தாங்காது.

தடங்களை பதிக்கிறார்

கல்வி நிறுவனங்களில் தலமைப் பதவிக்கு சண்டை போட்டுக்கொண்டும், எப்ப வெளிநாடு போகலாம் என எண்ணிக்கொண்டும், தன் மந்தைகளை மட்டுமே மேய்த்துக்கொண்டும் பல பாதிரியார்கள் தம்மைச் சுர்றி வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்நாளைக் கழித்துவிடுகிறார்கள்.

பாதர் - தமிழில் அருட்தந்தை - அடைக்கல ராசா மேற்சொன்ன விதிகளுக்கு விலக்காகத் தெரிகிறார்.

தான் இலங்கைத் தமிழர்களோடு வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழப் போரின் விளைவுகளைப் பற்றியும், போரின் சமூக (அரசியல்?) கூறுகள் பற்றியும் பதிவு ஒன்றை எழுதுகிறார்.

ஈழப் போர் பற்றி முழுமையான அறிவோ உணர்வோ எனக்குக் கிடையாது. இலங்கைத் தமிழ் நண்பர்களின் பதிவைப் படித்துப் பல தகவல்கள் அறியமுடிகிறது. இதோ இன்னுமொரு 'வெளியாள்' கோணத்தில் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஒரு முகம் காணக் கிடைப்பது பற்றி மகிழ்ச்சி.

தந்தை அடைக்கல ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தடங்கள் படிக்க இங்கே சுட்டவும்.

Tuesday, March 21, 2006

பட்டியல்

மீண்டும் ஒரு ரவுடிக் கதை என்று சொல்ல முடியாத படம். காட்சியமைப்புக்கள் உண்மைக்கருகிலுள்ளன. இசை, படத்தொகுப்பு, கலை என எல்லாமே முழுமையாய் ஒன்றிணைந்திருக்கின்றன.

கதை ரெம்ப புதுசு என்றில்லை. காசுக்கு கொலை செய்யும் இரண்டு அடியாள் நண்பர்கள், அவர்களின் காதலிகள், இவர்களுக்கு 'வேலை' வாங்கித்தரும் 'கொலை'த்தரகர் மற்றும் இவர்களால் கொல்லப்படுகிற சிலர் என சிறிய வட்டத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.

வெறும் திரைக்கதையையும் காட்சியமைப்பையும் நம்பி எடுக்கப்பட்ட படம். கடைசிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி இல்லமல் ஓடுகிறது, இறுதியில் வைக்கப்படும் ஒரு சிறு முடிச்சு தவிர.

எல்லொரின் நடிப்பும் அபாரம். ஆர்யா பத்மப் பிரியா காதல் வல்லினம், பரத் பூஜா காதல் மெல்லினம்.

பரத், ஆர்யாவின் வீடு துவங்கி எக்ஸ்போர்ட் கம்பனிவரை எதார்த்தமான சூழலில் படமாக்கம் நன்றாயிருக்கிறது. தொழில் நுட்ப நேர்த்தி அசரவைக்கிறது.

ஹனிபாவிற்கு தமிழில் மீண்டும் ஒரு அருமையான பாத்திரம், அழகாய் செய்திருக்கிறார். அவரிடம் அடிக்கடி வேலை கேட்கும் பையன் நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்பிரியா கலக்கியிருக்கிறார், 'தவமாய் தவமிருந்து' பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமளிக்கக்கூடும். பரத் ஊமை+செவிடாய். ஆர்யா பரத்திற்கும் சேர்த்து பேசித் தீர்க்கிறார். இருவர் நடிப்பும் அருமை.

இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கு பாராட்டுக்கள். நிச்சயமாய் இது ஒரு இயக்குநரின் படம். படத்தின் முடிவை மிகவும் ரசித்தேன். ராம் கோபால் வர்மாவை ஏனோ நினைவூட்டுகிறது இந்தப் படம்.

Monday, March 20, 2006

டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்

'Twinkle twinkle little star' தமிழில் பாடிப்பாருங்கள்

மின்மினி மின்மினி நட்சத்திரம்
வானில் தெரிகிற ஆச்சர்யம்
உலகத்தின் மேலே வானத்திலே
வைரம் போல ஜொலிக்கிறதே (அல்லது - சிரிக்கிறதே)

சிம்பு பற்றிய பதிவோ என நினைத்தவர்கள் மன்னிக்கவும்.

பதிவாளர் பட்டிமன்றம்

தலைப்பு : மதங்கள் தேவையா தேவையில்லையா?

பதிவுகள் வழியே உங்கள் வாதங்களை வைக்கலாம். உங்கள் அணியில் இரண்டுபேராவது வேண்டும். எந்த பதிவில் வாதங்கள் வைக்கப்படும் என்கிர தகவலோடு அஞ்சல் செய்யுங்கள்.

ஏற்கனவே அணிகளை பதிவு செய்தவர்கள் தாமத்த்திற்கு மன்னிக்கவும். விரைவில் ஆரம்பிக்கிலாம் பட்டிமன்றத்தை.

மின்னஞ்சல் முகவரி cvalex AT yahoo.com

தேர்தல் நேரப் பாடல்

அட கேட்டு ரெம்ப நாள் ஆச்சுப்பா..

மனுசன மனுசன்

Tuesday, March 14, 2006

அள்ளித் தந்த பூமி

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பாடலை கேட்டது. அதற்கப்புறம் இப்போ musicindiaonline.com தளத்தில் கேட்டேன். மலேசியா வாசுதேவனின் குரல் இவ்வளவு மென்மையாய் சில பாடல்களில்தான் கேட்கமுடிகிறது.

அற்புதமான எளிய வரிகள், அமைதியான, நினைவுகளை மலரச்செய்யும் மெட்டு. 'அதெல்லாம் ஒரு காலம்' என நம்மை பெருமூச்சுவிடச் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று.


அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் - இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் இலாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

காவல் செய்த கோட்டை(யே) கானாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிரியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியுமில்லை.

கேட்டுப்பாருங்கள்...

Saturday, March 11, 2006

போட்டி போட்டி போட்டி

மதங்கள் தேவையா தேவையில்லையா? என்கிற தலைப்பில் பட்டிமன்றமொன்று நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அணிக்கு இருவர் என்று எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் மற்றும் தன் அணியின் விவரங்களுடனும் எந்த தலைப்பில் எழுதப் போகிறீர்கள் என்றும் விவரங்களை
cvalex@yahoo.com மிற்கு அனுப்பவும்.

வெற்றிபெறும் இரு அணிகளுக்கு பரிசு உண்டு.

என்னோடு மதிப்பிட இன்னுமொரு நடுவரும் தேவை யாராவது நடுவராயிருக்க விரும்பினால் அவர்களும் மின்னஞ்சலனுப்பவும்.

முதலில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு அணிகள் பதிவிட அடுத்து வருபவர்கள் அதற்கு எதிர் கருத்தையும் புது கருத்தையும் எழுதலாம்.

Friday, March 10, 2006

வலைப் பதிவர் பட்டி மன்றம்

மதங்கள் தேவையா தேவையில்லையா? என்கிற தலைப்பில் பட்டிமன்றமொன்று நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அணிக்கு இருவர் என்று எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் மற்றும் தன் அணியின் விவரங்களுடனும் எந்த தலைப்பில் எழுதப் போகிறீர்கள் என்றும் விவரங்களை cvalex at yahoo விற்கு அனுப்பவும்.

வெற்றிபெறும் இரு அணிகளுக்கு பரிசு உண்டு.

என்னோடு மதிப்பிட இன்னுமொரு நடுவரும் தேவை யாராவது நடுவராயிருக்க விரும்பினால் அவர்களும் மின்னஞ்சலனுப்பவும்.

முதலில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு அணிகள் பதிவிட அடுத்து வருபவர்கள் அதற்கு எதிர் கருத்தையும் புது கருத்துக்களையும் வைக்கலாம்.

தலைப்பு பற்றிய அபிப்பிராயங்களும் வரவேற்க்கப்படுகின்றன.

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II

நான் எழுதியிருந்த தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் பதிவுக்கு அடைக்கல ராசா என்பவர் எழுதியீருக்கும் பின்னூட்டங்கள். தனிப் பதிவுக்குத் தகுதியானது என்பதால் இதோ...

சாதி

சாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் இங்கும் காணக்கூடியதாக உள்ளது.

சில ஊர்களின் பெயர்களில் சாதி அடையாளம் காணப்படுவது சாதியத்தின் தொன்மையைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். உடையார்கட்டு, முதலியார்குளம், பறையனாலங்குளம் போன்ற ஊர்கள் தமிழீழத்தில் உண்டு. பெரும்பாலும் இரண்டு சாதிகள் இங்குள்ளன. ஒன்று பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளாளர் சாதி. இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இவ்வகை சாதியினர் பெரும்பான்மையில் உள்ளனர். மற்றொன்று பரதவர். இந்தியாவிலிருந்து மீன் பிடி தொழிலுக்காக இலங்கையில் குடியேறியவர்களாக கருதப்படுபவர்கள். மன்னார் மாவட்டத்தில் பேசாலை, தாழ்வுபாடு, வங்காலை, அரிப்பு, முள்ளிக்குளம் போன்ற கடலோர கிராமங்களில் பரதவர்கள் அதிகமாக வாழ்வதைக் காணலாம்.

இவர்களுடைய வாழ்க்கைமுறை, உணவு, சமய வாழ்வு அனைத்துமே தமிழ்நாட்டில் பரதவர்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயத்தின் மேல் கூரையை தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. குருஸ் மோத்தா என்னும் பரதவருடைய குழந்தைகள் நிதியுதவி செய்து அமைத்துக் கொடுத்துள்ளனர். தொழில் சார்ந்த வாணிபம், வர்த்தகம் மட்டுமல்லாமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்ப உறவும் இந்திய தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இருந்திருக்கிறது.

இங்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பலரும் பொருளாதார முன்னேற்றம் கண்டு கல்வியில் மேன்மையடைந்து சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறிவிட்டனர். சிலர் இன்னும் தங்களது குலத் தொழிலை செய்து சாதியின் பிடிக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

“பிறப்பினால் ஒரு மனிதரை ஒரு சாதிக்குள் தள்ளிவிடும் சமூதாய அமைப்பானது காட்டுமிராண்டி தனமானது, ஒடுக்குமுறை நிறைந்தது. யாழ்ப்பாண சமூகத்தின் பொருளாதார சமூகவாழ்வில் இது பின்னிப் பிணைத்ததாயினும், சாதி அமைப்பானது மனித உழைப்புக்குக் கண்ணியமும், மரியாதையும் வழங்கும் நவீன சிந்தனைக்கு முரணானது....கடுமையாக உழைத்து, தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளத்தக்கதும், வளம் மிக்கதும், சமூக உற்பத்தி திறன் கொண்டதுமான ஒரு சமூகத்தை தாழ்ந்தது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று வெள்ளைக்காரத் தமிழ்ப்பெண் அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை நூலில் வினவுகிறார்.

தமிழ்நாட்டைப் போன்று சாதியமைப்பு ஈழத்தில் இறுக்கமாக இல்லாது போனதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றில் பிரதானமாக நான் கருதும் விடயம் போர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் எல்லா மக்களும்; எல்லா இடங்களிலும் கூடிவாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மடுமாதா தேவாலயத்தைச் சுற்றியிருந்த அகதிகள் முகாமில் பல இடங்களிலுமிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்துள்ளார்கள். கற்றவன், கல்லாதவன், உயர்சாதி, தாழ்ந்த சாதி, பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல், ஊர், நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லோரும் ஓரிடத்தில் தங்க நேரிட்டுள்ளது. அதுபோலவே புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் பெரிதாக இந்த வித்தியாசங்களை காணமுடியாமல் போயிற்று. போரினால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நன்மை இதுவென நான் நம்புகிறேன். தமிழர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி வந்தமையினால் தங்களிடையே சாதிய உணர்வை மறந்துவிட்டனர்.

இரண்டாவது விடயம், இங்கு காதல் திருமணங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவரையொருவர் அறிந்து, திருமணம் செய்து கொள்வதால் ஓரளவு சாதியின் இறுக்கம் இங்கு தகர்ந்துள்ளதாக எண்ணுகிறேன். 1994ம் ஆண்டு மே மாதம் தமிழ் நாட்டில் திருப்பத்தூரில் நாங்கள் நடத்திய இளையோர் மாநாட்டில் உரையாற்றிய திரு.தியாகு அவர்கள் இதே கருத்தை முன்வைத்தார்கள் என்பதை இப்போது நினைவுகூருகிறேன்.

மூன்றாவதாக கல்வியும் சாதியின் இறுக்கத்தை பெருமளவில் தகர்த்துள்ளது. கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மையடைந்த மக்கள், சாதியின் கொடுமையை உணர்ந்து அதை விலக்கியுள்ளனர். பிறப்பால் உயர்வு தாழ்வு என்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்ற கொள்கையே அனைவருக்கும் பொதுவானது.

இருப்பினும் சாதிரீதியாக ஈழத்தமிழர்களிடையேயும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி. மேரி பஸ்ரியன் அவர்களின் வாழ்க்கையை தீபங்கள் எரிகின்றன என்ற நூலாக கொணர்ந்த திரு. நாவண்ணன் அவர்கள், அப்புத்தகத்தில் சாதி பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளார்.

“(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971 – 1977) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் ஆலயக் கதவுகளைப் ப+ட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்”. இந்நிகழ்வு அருட்பணி. பஸ்ரியன் அவர்களை வெகுவாக பாதித்த ஒரு விடயம் என்பதனையும் திரு. நாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிகழ்வைப் பற்றி அறிந்தபோது நான் தமிழ்நாட்டில் பணிசெய்த திண்டுக்கல் பெரிய கோயிலும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் (1995ம் ஆண்டு) சாதி பிரச்சனையால் மூடப்பட்டு கிடந்ததை நினைவு கூருகிறேன். தமிழ்நாட்டில் வேறு பல மாவட்டங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வேதனைக்குரியது.

மேலும் நான் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பருத்தித்துறையில் அருகருகே இரண்டு கோயில்கள் இருவேறு சமூகத்தால் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன். அதே போன்றதொரு நிலை மன்னார் மறைமாவட்டத்திலும் இருப்பதாக உணர்கிறேன். இந்நிகழ்வை நான் தூத்துக்குடி மறைமாவட்டம், மணப்பாடு என்ற பங்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எனதருமை தந்தை கலாநிதி தே. ஜாண் அவர்கள் தென்தமிழகத்தில் கிறிஸ்தவம் என்ற தனது ஆராய்ச்சி நூலில் விரிவாக இதை ஆராய்ந்துள்ளார். இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவெனில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களிடையே பட்டம் என்ற ஒரு பிரிவினை ஏற்படுத்தி அதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும், இங்கும் காணப்படுகின்ற பரதவர் சாதியில் மட்டும் 63 உட்சாதி பிரிவுகள் உள்ளதாக அறிகிறோம். (கலாநிதி தே. ஜாண், தென்தமிழகத்தில் கிறிஸ்தவம், பக். 275) முள்ளிக்குளம் கிராமம் முழுவதும் ஒரே சாதி மக்கள் என்றாலும் அவர்களிடையே பட்டம் என்ற எட்டு பிரிவினையுண்டு. ஆகவேதான் காலம் காலமாக அச்சிறு கிராம மக்களிடையே உட்பகை இருந்து வந்துள்ளது. இடம்பெயர்ந்து 13 ஆண்டுகள் பல இடங்களிலும் வாழ்ந்து இன்று திரும்பி வந்துள்ள அவர்களிடையே இப்பிரிவினை, உட்பகை மாறாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

ஒரு நாள் நான் இங்கு ஆற்றிய ஞாயிறு திருப்பலியில் மறையுரையில் இதைப்பற்றி நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்து என்னவெனில், முள்ளிக்குளத்தில் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி அமைப்பில் வாழும் 140 குடும்பங்கள் மத்தியில் பிரிவினையும், பகையும் இருந்தால், இரண்டு மொழி, மூன்று இனங்கள், நான்கு மதங்கள், பல சாதி அமைப்பில் வாழும் கோடிக்கணக்கான இலங்கை மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு, சமாதானம் ஏற்படுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு நாள் நிச்சயம் தமிழீழம் மலரும். அந்த தமிழீழத்திலும் தமிழர்கள் பிரிந்து தமக்குள்ளே பகைமையோடுதான் வாழ்வார்களா?

“இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை” (கலா 3:28) என்று முழங்கப்பட்ட திருச்சபையில் பிறப்பால், சமூக அந்தஸ்து ஏற்படுத்தி, பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி, கிறிஸ்தவராக சான்று வாழ்க்கை வாழ்வது எப்படி? மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல, மாறாக போராடி நாம் பெறும் சுதந்திர வாழ்வில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடும், சமாதானத்துடனும் வாழ வழிவகுக்கப்பட வேண்டும் என்பதே என் நல்ல எண்ணம். சாதியம் ஒழிய வேண்டும். மனித மாண்பும், சமத்துவமும் மலர வேண்டும்.



Has Catholicism failed?

An Italian court is tackling Jesus - and whether the Roman Catholic Church may be breaking the law by teaching that he existed 2,000 years ago. An ex-seminarian turned atheist has sued his batch mate – a priest in Italy. This was in news last week. Has Catholicism failed is a question often asked in the history and is still relevent today rejuvenate the failing spirits of the catholics.

The church built on a good structured hierarchy is alien in a world of democracy. The Church built by the great emperor Constantine is still in place with a mass wealth and power among the majority of people in the world. The democratic voices within the church were choked with age-old doctrines and policies which are often irrelevent to the common people.

It is taught that the leaders of the church are the works of the Holy Spirit. But in truth, is it not money power and caste politics which are the deciding factors for the election of the Church leaders. This is often a scandal for the non-christians who live among us. The back door entry into the powers of the Church can not be the works of the Holy Spirit. At least in Tamilnadu, the appointments within the church starting from the major superiors to the appointment of the non-teaching staff in our educational institutions are done along the caste factor and then we call it as the work of the Holy Spirit. I believe that that is the greatest sin – sin against the Holy Spirit.

Though the church officially recognised the caste system in India in 17th centuary - "When India's founding Constituent Assembly debated making concessions for Outcaste-Christians, Jerome D’Souza S.J., representing the Christians, rejected them, claiming there is no caste in Christianity. No caste in Christianity? "Not only has the Church failed to eradicate caste; it has accommodated itself to caste, charges Fr Antoniraj S.J. Caste-consciousness has been part of Catholicism as long as the Church has been in India." "When priest-sympathesiers tried to help [the Dalits], they were disciplined. Fear dominated. Priests were afraid of caste-parishoners and bishops; bishops were afraid of caste reprisals." (“Dalit Means Broken: Caste and Church in Southern India” By John Francis Izzo S.J. In America, [the journal], February 14, pp 11-14, 2005. )

The early Christian community grew in numbers because they had everything in common and that there was no one in need. “Now the whole group of those who believed were of one heart and soul, and no one claimed private ownership of any possessions, but everything they owned was held in common. With great power the apostles gave their testimony to the resurrection of the Lord Jesus, and great grace was upon them all. There was not a needy person among them, for as many as owned lands or houses sold them and brought the proceeds of what was sold. They laid it at the apostles' feet, and it was distributed to each as any had need”. (NRSV Acts 4:32-35)

Can the low growth rate of Christianity be attributted to the individual material possession of the few in the church? When the vast majority of the Christians in India are poor and the low caste, can the church as a collective institution be rich? Though they have eyes, yet the leaders of the Church fail to see a real life contradiction in this. Although the church as an institution has done a lot to allieviete material poverty in India through its dolloing out policies, social service commissions, yet the church grew rich than its members. Did all the money collected in the name of the poor reach the real poor of the society or to those who preach about divine poverty? There are few ‘Priests of God’ in India who are richer than the diocese in which they work.

Inhuman attitude of the American government against the victims of devastating storm Katerina, the beastly treatment against the Iraq prisoners of war, the failed war against terrorism in Iraq and Afganistan are all signs of diminishing faith in God by a government which was sworn in the name of God and by the people who were traditionaly faithful to God. Does God exist is the cry of the people in the third world developing countries in Africa, South Asia and south America and in the rest of the world where there is man made hunger, poverty, sickness? Will the Lord come to hear the cry of the people as He did with the Isrealites of the Old Testament, as announced by the prophets?

Will the Church of God come to the rescue of its fellowmen from the bondages of war, state atrocities, casteism, power mongers within the church and world wide man made poverty? Only then the Church can truly say that God exists and it can be true witness to God in truth and in spirit.

Tuesday, March 07, 2006

இலக்கு என்ன?

கல்லூரியில் மாணவர் அமைப்பு ஒன்றுக்கு தலமை தாங்கியிருந்தேன். முதல் நாள் கூட்டத்தில் அமைப்பை வழிநடத்தும் ஆசிரியர் சொன்னது, "எந்த ஒரு (சமூக) அமைப்பும் தன் இலக்கை அடைய ஒரு கால வரையறை வைத்துக்கொள்ளவேண்டும். இன்னும் மூன்று வருடங்களில் இந்த ஊரில் தண்ணீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது, அல்லது 5 வருடங்களில் இந்த ஜாதியினர் செருப்பு போட்டு ஊரில் சைக்கிள் மிதித்துச் செல்ல வழிவகுப்பது எனபது போல. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்தில் அடையவில்லையேல் அந்த அமைப்பு கலைக்கப்படவேண்டும்".

தலீத் இயக்கங்களின் இலக்கு(கள்) என்ன? தலித்துகளை திரட்டி அரசியலமைப்பாக மாற்றுவதா? அவர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதா? தீண்டாமையை ஒழிப்பதா? இல்லை பிராமணர்களை திட்டித் தீர்ப்பதா?

தலித் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் பலரும் வெறும் பிராமணர்களை திட்டித் தீர்ப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர். மலையேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படித் தன் சக்தி முழுவதையும் சேகரித்துக் கொள்ளவேண்டிய கட்டயம் உள்ளதோ அதுப்பொலத்தான் முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயமும், சமூகமும் தன் முழு சக்தியையும் தன் இலக்கு நோக்கி செலுத்தும் கவனம் தேவை.

தன் சக்தியெல்லம் பிறரை திட்டுவதிலேயே செலவிட்டுவிட்டால் எப்படி முன்னே செல்வது?

பிராமணர்களை திட்டித்தீர்க்கும் சிலர் தென் மாவட்டங்களில் தலீத்களின் உரிமையை பறித்து ஒடுக்கப்பட்டவர்களின் உயிருடன் விளையாடிக்கொண்டிருக்கும் சில சாதியினரை கண்டுகொள்லாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்?

பிராமணர்கள் இன்னும் பேதம் பார்க்கிறார்களா? நாமேதான் நமக்குள் ஆயிரம் பிரிவுகளை வைத்துக்கொண்டு செயல்படுகிறோம். சாதி அமைப்புகளை வெறுப்பவர்கள் நாமானால் ஏன் இன்னும் சாதி பெயர்களில் இயங்கும் அமைப்புகளை கொண்டுள்ளோம்?

நம் வீட்டிலேயே ஏழை உறவுக்காரப் பெண்பிள்ளைகளை வேலைக்காக வைத்து அவர்களின் எதிர்காலங்களை நாசம் செய்வதில்லையா? நம்மிடம் உதவி கேட்டுவரும் நம் சாதிக்காரன் ஏழை என்பதால் நம்மிடம் பணிந்து போகவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லையா? பணக்காரனுக்கு ஒன்றும் பாவத்திற்கு ஒன்றுமாய் நாம் நடந்துகொள்வதில்லையா? இப்படிப்பட்ட நேரங்களில் பிராமணர்களை எதற்காக வெறுக்கிறீர்களோ அதாகவே நாம் மாறுகிறோம்.

நம் இலக்கு முன்னேற்றம். வாழ்க்கை தரத்தை உயர்த்திப்பாருங்கள் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். பிராமணர்கள் மட்டும்தான் முன்னேற தடையாக இருக்கிறார்கள் என எண்ணுவது கண்களுக்குத் திரையிட்டுக்கொள்வது. சரி பிராமணர்களை அழித்துவிட்டால் மற்றவர்கள் முன்னேறிவிடுவார்களா?

மனிதர்களை எப்படிவேண்டுமென்றாலும் பிரிக்கலாம். சாதி மட்டுமல்ல பிரச்சனை.

சாதியை முன்னேற்றத் துவங்கிய கட்சித் தலைவர்கலெல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டன நாம்தான் இன்னும் டீ கடைகளிலிருந்தே விலக்கப்பட்டிருக்கிறோம்.

இத்தனை கால தலித் எழுச்சியில் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு போல ஏன் இந்த இயக்கம் கொழுந்துவிடவில்லை? நம் தலைவர்கலுக்கே தெரிகிறது, நாமெல்லாம் முன்னேறிட்டா அவர் வேலை போயிரும்.

ஒடுக்கப்பட்டவர் எல்லோருமே தலித் எனக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவன் என்பதற்கு மேலாய் எந்த ஒரு அடையாளமும் நமக்குத் தேவையில்லை. நம் பெயர்களிலிருந்து சாதியை விரட்டவேண்டும், நம் மனத்திலிருந்து விரட்டவேண்டும்.

முன்னேற்றம் பெற்ற ஒவ்வொருவரும் இன்னொரு கூடும்பம் முன்னேற உழைத்தாலே போதும் இன்னும் 20 வருடங்களில் ஒடுக்கப்பட்டவன் என யாரும் இல்லாமல் போகும்.

கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.

Friday, March 03, 2006

கீதாஞ்சலி - பூ

கீதாஞ்சலியிலிருந்து இன்னொரு பாடல்..


பூ.

இந்தப் பூவை பறித்து எடுத்துக்கொள்ளும்,
தாமதம் வேண்டாம்!
துவண்டு மண்ணில் விழுந்துவிடும்
என பயப்படுகின்றேன்.
நான் உன் பூமாலையில் இடம்பெறாமல் போகலாம்
ஆனால்,
உம் கரங்களால் நான் வலியேர்க்கும்
பெருமை பெறும் பொருட்டு என்னை ப் பறியும்

நான் உணரும் முன் இந்த நாள் முடிந்துவிடுமோ,
காணிக்கை தரும் நேரங்கள் ஓடிவிடுமோ
என பயப்படுகிறேன்
அதன் வண்ணங்கள் ஆழமானதாயில்லாதபோதும்,
குறைவாகவே மணம்வீசியபோதும்
இந்த மலரை
உம் பணிபுரியும்படி,
நேரம் இருக்கும்போதே, பறித்துவிடும்.

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

இது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

ஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.

தமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.

கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் 'பங்கு' என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு 'பங்கு'(Parish).

பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில், அண்மையில், சில மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டாற்று மறைமாவட்டம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள
பங்குகளின் கூட்டமைப்பாக இருந்து வந்தது . நாடார்கள் அதிகமான பகுதிகளையும் கடற்கரை ஊர்களில் வாழும் பரவர், முக்குவர் எனும் மீனவர்களின் இனங்களையும் பிரித்து இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. இதுபோலவே தூத்துக்குடியிலும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை.

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர்கள் பல விதமான தொல்லைகளுக்கும் மேலிருப்பவர்களின் வெறுப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி ரோமுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன இருப்பினும் வழக்கம்போல ரோம் தன் பாதிரிமார்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.

வேற்றுசாதியில் கிறித்துவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இது நிச்சயம் மதம் சார்ந்த கொள்கை இல்லை, முற்றிலும் சமூக உளவியல் சார்ந்த முடிவு என்றாலும் இத்தகைய மனப்பாங்கை நீக்க கத்தோலிக்க குருமார்களும் மதமும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.

பல சமூகவியல் மாற்றங்களை கிறித்துவ மதம், கிறித்துவர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது என்பதும் அதற்கான பலமும் அமைப்பும் முற்றிலும் அதற்கு உள்ளது என்பதும் உண்மை. இருப்பினும் சாதி அமைப்புகளை எதிர்க்காமல் அவற்றை தத்தம் உபயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் கிறீத்துவர்களும், குருக்களும்.

கோவில்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.

'சாதி கிறித்துவர்கள்' எனும் ஒரு பதம் இருப்பதே எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

'விரியன் பாம்பு குட்டிகளே' என இயேசு அன்று யூத மத தலைவர்களை திட்டினார்,'கடவுளின் கோவிலை வியாபாரக் கூடாரமாக்காதீர்கள்' என்று சாட்டை கொண்டு கோவிலில் கூடியிருந்த வியாபாரிகளை விரட்டினார். இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ.

இயேசுவுக்குத்தான் வெளிச்சம்.

Wednesday, March 01, 2006

விபூதி புதன்

இந்த வருடம் மார்ச் 1 விபூதி புதன்(Ash Wednesday).

உலகெங்கும் கத்தோலிக்க கிறித்தவர்கள் இந்தநாளை சிறப்பாக அனுசரிக்கின்றனர். விபூதி புதன் துவங்கி ஈஸ்டர் வரையிலான 40 நாட்களும் (ஈஸ்டர் தவிர்த்து) 'தவக் காலம்' என அழைக்கப்படுகிறது.

தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் தவமுயர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

விபூதி புதன் பூசையின்போது நெற்றியில் சாம்பல்கொண்டு சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

பக்தி முயற்சிகளை தீவிரப்படுத்தும் இந்த 40 நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

சிறில் அலெக்ஸ்