அவனே என்னை அழைத்தான்,"வணக்கம் செந்தமிழ், நலமா?".
அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் 'இன்டர்ப்ரெட்டர்-VII'.
"நலம் லாங்டன், நீ எப்படி?".
"பெரிதாய் ஒன்றுமில்லை." சலித்துக்கொண்டான்.
"2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?"
"நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்."
"ஓ... ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?"
"ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா 'ஜஸ்டிஸ்' குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்."
"மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?".
"சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்."
"ஆமாம்."
"எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?"
"அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.", சிரித்தான்,"எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்."
"அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்."
இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.
"லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு."
"போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?"
காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல 'செந்தமிழாய்' ஒலித்தது.
"இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.
ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.
அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்."
"செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்."
"ஓ...தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்."
"நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை."
"லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே."
"ம்..."
"தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்."
"என்ன...ஏய் என்ன சொல்ற."
"கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்"
லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.
"பீப்...பீப்"
சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.
"வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்"
கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.
11 comments:
நன்றாக வந்திருக்கு கதை..முதலில் நான் 2060 என்பதை கவனிக்க வில்லை ஏதோ தேர்தல் 2006 ன் அலசல் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் போகப் போக இல்லை இது கதை விஞ்ஞானக் கதை எனப் புரிபடல் ஆயிற்று நன்றாக வந்திருக்கிறது கதை வாழ்த்துக்கள்..கடைசி பத்தி மிக அருமை
நன்றி ப்ரியன்.
Yay, சிறில் திரும்ப வந்தாச்சு...
கத நெசமாவே நல்லா இருக்குது.
சமுத்ரா,
அதுக்குள்ள ஆளே மாறிட்டீங்க. போட்டொவைச் சொன்னேன்.
நன்றி. என்னை எதிர்பார்த்திருந்ததற்கு.
கதை நன்றாக செல்கிறது; ஆனால், ஐம்பது வருடத்தில் இவ்வளவு மாறி விடுமா ;-) (எனக்கு நம்பிக்கையில்லை :P)
பாலா,
உங்களைப்போலத்தான் யோசித்தேன். அதனால்தான் மின்னணு புரட்சி வந்ததாக எழுதினேன். ஒரு பெரும் புரட்சிக்கப்புறம் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே. இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன் மாதிரி என வைத்துக்கொள்ளலாம்...
இல்லை 'கதைக்கும் பொய் அழகு' என வைத்துக்கொள்வோமே... :)
நல்ல கற்பனை,
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
நன்றி ராஜீ.
// தேன்கூடு/தமிழோவியம் நடத்திய போட்டியில் என் கதைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.//
வாழ்த்துகள் Cyril அலெக்ஸ்
வாழ்த்துகள் நண்பரே....
ஐயா வணக்கம், உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் எ கலப்பை பயன்படுத்துவரா?
எ கலப்பையை பயன்படுத்தும் போது எனக்கு கட்டம் கட்டமாக மட்டும் தான் வருகிறது. அது ஏன்? எனவே ஒவ்வொரு முறையும் தமிழ் டைப் செய்ய ஒரு வலைதளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஃபான்ட் பிரச்சனை என்று மட்டும் தெரிகிறது. என்ன ஃபன்ட் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன். ப்ளீஸ்.
Post a Comment