.

Monday, May 21, 2007

தமிழ்மணம் வாசிப்பில்

கட்டுரைகள் வாக்கியத் தொகுப்பு. கவிதைகள் வார்த்தைத் தொகுப்பு. வாக்கியங்கள் சிறப்பாய் அமைந்தால் கட்டுரை சிறக்கும். ஒவ்வொரு வார்த்தையும் கவிதைக்குப் பொருள்தரும். அப்படி வார்த்தைகளும் வாக்கியங்களும் சிறந்த சில படைப்புக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

லிவிங் ஸ்மைல் வித்யா(லிஸ்) பல கட்டுரைகள் எழுதியிருந்தபோதும் இந்தக்கவிதை கன்னத்தில் அறைகிறது. திரும்பிப் பார்க்கையில், நம் தடங்களில் மிதியுண்ட மனிதர்கள் எத்தனைபேர்? கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக லிஸ் நம் முன்வைக்கும் திருநங்கைகளைப் பற்றி நம் சிந்தனைகள் என்ன? சமூக அங்கீகாரம் ஒருபக்கம் இருக்கட்டும் நான் எப்போது இவர்களை சகாக்களாக ஏற்றுக்கொள்ளப்போகிறேன்? மயிலிறகால் பெருக்கிக்கொண்டே போகும் சில சாதுக்களைப்போல மனதுக்கும் ஒன்றிருந்தால், எள்ளல் பேச்சாலும், விலகியோடும் பார்வைகளாலும் இவர்களை மிதித்திருக்கமாட்டேனோ?


புலம்பெயர்ந்த தமிழரிடையே வற்றிப்போகும் உணர்வுகளைப்பற்றிய
கவிதை ஒன்றை அய்யனார்வரைந்துள்ளார். இந்திய, தமிழகச் செய்திகள் என்னிடத்தில் என்ன பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன? மீண்டும் ஒரூ சுயசோதனை. இப்போதெல்லாம் இதைப்பற்றிப் பதிவில் என்ன எழுதுவது என்கிற எண்ணம் மேலோங்குகிறது. செய்தியின் தாக்கத்தைவிட இதில் என் கருத்தென்ன என்பது முதலாகிறது. அறிவார்ந்த அலசல் எழுகிறபோது உணர்வுகள் வற்றிப்போகின்றன. உணர்விலிருந்து எழும் சிந்தனைகள் உயிருள்ளவை.

'இசைக்குறிப்புகளின் அடிக்குறிப்பிலேயே
மிருகங்களை பழக்கும் வித்தையறிந்தவள்'.
எதிர்மறைகள் கவிதையை அலங்கரிக்க சிறந்த யுக்தி. ஆனால் அலங்காரத்திற்காக மட்டுமே
மிதக்கும்வெளி சுகுணா திவாகர் இந்த வரிகளை வைத்திருக்கவில்லை. 'சொற்களின் தாய்' தலைப்பிலேயே இலக்கிய நயம். கவிதை முழுக்க நிஜங்களை மாயமாக்கும் சொல்விளையாட்டு. சொற்களின் தாய் மொழிதானே?

குறைகுடம் பிரசன்னாவின் கற்பனை மழைக்கம்பிகளில் கவிதை கோர்க்கிறது, தீக்குளத்தில் பற்றுதலைத் தேடுகிறது, புத்தனைப் பரிதாபத்துக்குரியவனாக்குகிறது. காதலெனும் போதை மரத்தினடியிலேயே ஞானம் கிடைக்கையில் போதிமரங்கள் எதற்கு?

வறியவன் ஒருவன் கோவிலுக்குப் போனான். அவனை உள்ளே விட மறுத்தனர் கோவில் நிர்வாகிகள். வெளியில் நின்று கடவுளைக் கேட்டான்,"பார் என்னை வெளியேத் தள்ளிவிட்டனர்." கடவுள் சொன்னார் "என்னையும்தான்!". ஷைலஜாவின் இந்தக்
கவிதை சொல்வது இதைத்தானோ?

காதலர் விளையாட்டொன்றை கண்முன்னே காண்பிக்கிறார் தேவ். காட்சிகளின் விவரிப்பில் கட்டில் களத்தில் முத்தப் பேச்சுக்கள் சப்தமாகவே கேட்கின்றன. காதலன், காதலியோடு காற்றும் சேர்ந்துகொள்கிறது. அந்த முத்தச் சத்தம் நிலவொளியில் கரையும் முன் காதல் கலைகிறது. போரின் பிணக்குவியலில் இறந்துகிடப்பது மனிதர்கள் மட்டுமா?

'வெயில் எழுதியது' இது கவிதையா கட்டுரையா? அசரவைக்கும் நடை. வார்த்தைகள், பாலைகளுக்கு நடுவே பூத்த மலர்களைப்போல மின்னுகின்றன. வெயிலின் நிஜங்கள் சுடுகின்றன, குளிர்ருட்டப்பட்ட அறையினுள்ளும்.

சிலந்தி வலைபின்னிய கதை எத்தனைமுறை கேட்டிருப்போம் அதையே இனிக்கும் வார்த்தைகளில் உரக்கச் சொல்லியிருக்கிறார் கவிஞர். சிலந்தியைப் போலவே இன்னுமொருமுறை படிக்கலாம்.

"எதிலும் இருக்க வேண்டும்

இன்னொரு முயற்சியின் வித்து

முயற்சிகளின் மூட்டையில்

கட்டப்பட்ட வெற்றியின் அஸ்திவாரமே,

என்றைக்கும் உறுதியானது!"

திருவிழாக்கள் நம் கலாசார வெளிப்பாடுகளின் உச்சகட்டம் எனலாம். இன்றைக்கும் பல குமுகங்களில் எஞ்சிநிற்கும் கலாசாரக்கூறு கோவில் திருவிழாக்களே. மண்மணம் வீசும் திருவிழாக்கள் கோவில் திருவிழாக்கள். அதுவும் கும்பிடும் சாமி மீதே மண்மணம் வீசுமென்றால்? மது வடியும் ஊர்த் திருவிழா சுந்தரவடிவேலின் கட்டுரை முழுவதும் நினைவுகளின் கொண்டாட்டம். மண்மணம் வீசும் கட்டுரை. கொஞ்சம், மயக்கும் மதுமணமும்.

சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளின் விளைவுகளை அலசும்
பத்ரியின் கட்டுரை தோன்றுதல்களைத் தவிர்த்து நேரடி ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முன்னோடியாய் சேவியரின் இந்தக் கட்டுரையும் சிறப்பாயிருந்தது.

கடவுள் நம்பிக்கை - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு
ஒரு குட்டிப்பிசாசு பதிலளித்துள்ளது. இங்கே சிரிப்பான் போட்டுக்கொள்ளலாம். கடவுளின் இருப்பை, தேவையை குறித்த வாதங்களின் துவக்க உரையாக எடுத்துக்கொள்ளலாம் இதை.

இந்தவாரம் முழுக்க டி.வி பாணியில் அரசியல் திங்கள் துவங்கி காவியபுதன் வரை விக்கி
வலைச்சரத்தில் தொகுத்திருந்த பதிவுகளும் அவர் தொகுத்திருந்த விதமும் அருமை. பழைய பதிவுகளை அலசுவதாகட்டும் புதியவர்க்ளை அறிமுகம் செய்வதிலாகட்டும் வலைச்சரத்தின் நோக்கத்தை உணர்த்திய பதிவுகள்.

பெரியாரை அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல பின்பற்றுபவர்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என அவ்வப்போது எனக்கு சந்தேகங்கள் எழும். பெரியாரின் காலத்துக்கேற்ற அவரின் நடவடிக்கைகள் இன்றும் தேவையானதா என்பது உப கேள்வி.
இவரும் அதைத்தான் கேட்கிறாரோ?

இளவஞ்சியின்
இளவயது கிரிக்கெட் போட்டிகள் பற்றிய சுவையானபதிவு, வெர்டிகோ பற்றி ஜெசிலா கிறுக்கிய தகவல்கள், ஆழியூரானின் 'ரவுடி பிரேமா' சிறுகதை, மதியின் வேர்ட்பிரஸ்பற்றிய தகவல்கள், ஷைலஜாவின் அன்னையர்தினப் பதிவு, நிவேதாவின் இந்தக் கவிதை, ஜோவின் பெரியார் விமர்சனம் என இந்தவார தமிழ்மண வாசம் நிறைவாக இருந்தது.

முக்கியமான ஒரு பதிவ விட்டுட்டேனோ? ஆமா! அதை விட்டுவிட்டோம் :)


அன்புடன்
சிறில் அலெக்ஸ்

இந்த வாரப் பூங்காவில் வந்த கட்டுரை. வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கு நன்றி.

3 comments:

ஷைலஜா said...

அடேயப்பா! அசாத்திய அலெக்ஸா இருக்கீங்க !எல்லாத்தியும்படிச்சி குறிப்பிட்டுப் பாராட்டி இங்க அளித்து..! நன்றி நன்றி என் பதிவுகளையும் இணைத்ததற்கு!

ப்ரசன்னா (குறைகுடம்) said...

நன்றி சிறில்.

சேதுக்கரசி said...

இதில் குறைந்தபட்சம் 2 கவிதைகள் அன்புடன் கவிதைப் போட்டியில் பங்குபெற்றவை! தேவ் மற்றும் அய்யனார் ஆகியோரின் கவிதைகள்!

சிறில் அலெக்ஸ்