.

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, February 10, 2007

இதுதாங்க இந்தியா

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி.

அவர் பதிவுல 'மிலே சுர் மேரா துமாரா' பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது.

இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே 'ஸ்டுப்பிட்ஸ்'ன்னு சொல்ல நான் கொஞ்சம் சொல்லாடவேண்டியிருந்துச்சு. நான் இறுதியா சொல்லிட்டு வந்தது 'இதுதாங்க இந்தியா. இதுதான் நாம. இவங்கதான் நம்ம மக்கள். இதுல எந்த மாற்றமும் இல்ல.' அந்தக் கிண்டல் செய்தவர் ஒரு இந்தியர் என்பதால் சற்று கோபம் வந்தது, மத்தவங்களுக்கு நம்மைப் பற்றிய அறிவு இருக்கணும்ற அவசியமில்ல.

நான் மூடப் பழக்கங்களை வளர்க்கவேண்டும் எனச் சொல்ல வரல. நமக்கு மூடமாப் படுறது அத்தவருக்குத் தெய்வீகமாப் படுதே? நீங்க உணர்ந்ததுபோல அவரும் அதை மூடமாக உணரும் காலம் வரும். அதுவரைக்கும் அவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம். கிண்டலாவோ கேலியாவோ கீழ்த்தரமாகவோ இவங்களப் பத்தி பேசவேண்டாமே.

இந்தமாதிரி ஒரு கலவை எந்த நாட்டிலேயும் இல்ல. மெல்டிங் பாட் எனச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா வரும் பிற கலாச்சார மக்கள் தங்கள் கலாச்சாரத்த அமெரிக்கனைஸ் பண்ணிக்கிறாங்க. மெல்ட் பண்ணித்தான் ஆகணும்.

மிக மோசமான மூடப் பழக்கங்களும் உன்னதமான உயர் தத்துவங்களும் ஒருசேர இருக்கிறது இங்கேதான். பலவேளைகளில் இவை மிக நெருக்கத்திலேயே இருக்கக் காணலாம்.

எத்தனை கலாச்சாரங்களை உள்ளடக்கியிருக்குது? எத்தனை மொழிகள்? எத்தனை விழாக்கள், கொண்டாட்டங்கள்? எத்தனை விதமான ஆடைகள் (இப்ப எல்லாமே ஜீன்ஸ் சுடிதார்தான்னு சொல்றீங்களா?)

இதுவே நமக்கு பாதகமாகவும் சில நேரங்களில் அமையுது. அழகாயிருக்கிறப் பூவைத்தான் பறிக்கிறோம். அதனால பூவுக்கு அழகு கூடாதா? நிச்சயமாயில்ல. ஊருக்குள்ள ஆயிரம் சண்டையிருக்கலாம் ஆனா வெளிய வந்துட்டீங்கனா நாமெல்லாம் இந்தியர்கள்தான்.

வேற்றுமையில் ஒற்றுமை வெறும் வார்த்தைகளில்ல. அவனப் பின்பற்றச் சொல்லு இவனப் பின்பற்றச் சொல்லுண்றதுக்குப் பதிலா நாம என்ன செய்யப்போறோண்றதுதான் முக்கியம்னு தோணுது.

கால்கரியார் சொல்றமாதிரி இந்தப் பதிவ, பாடல பார்த்ததற்கப்புறம் இந்தியா, இந்தியர் பற்றிய ஏதாவது ஒரு மனத்தடைய நீக்கினோமானால் அதுவே பெரிய விஷயம்.

இந்தப் பாடல் எத்தனை அழகா பதிவாக்கியிருக்காங்க. நம்ம கமல்கூட அழகா ஆக்ட் குடுத்திருக்காரு.

இந்த பாட்டக் கேட்டாவது காவிரித் தண்ணி தராவிட்டாலும் கர்நாடகாவில் வாழும் தமிழர்களோடு நட்பு பாராட்ட முன்வருவார்களா? முடங்கிக்கிடக்கும் தொழில்களும் போக்குவரத்தும் தொடர முயல்வவர்களா?

இசைந்தால்
நம் இருவரின் சுரமும் நமதாகும்
இசைவேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
முகிலாய் மழையாய் பொழிவதுபோல்
இசை
நம் இசை


இசை எத்தனை அருமையான ஒப்பீடு. இசையின் வடிவங்கள் பல. எதுவானாலும் நம் ரசனைக்கேற்ப ரசிக்க முடிகிறது. ஒரு பொதுவான வரையறைக்குள் இயங்குவதால் இருவேறு வகையான இசைகளை இணைப்பது எளிது.

இன்னும் பேசிகிட்டேயிருக்கலாம்.. சரி கீழ இருக்கிற நாலு வீடியோக்களிலும் ஒரே பாடல்தான்ன் ஆனா வேறு விதங்கள்ளில் படமெடுக்கப் பட்டிருக்குது. பாருங்க. மனசுல வச்சுகுங்க...

"இசைந்தால் (சம்மதித்தால் அல்லது ஒன்றாகினால்)
நம் இருவரின் சுரமும் நமதாகும்."

"மிலே சுர் மேரா துமாரா தோ சூரு பனே ஹமாரா."

பாடல் கேட்கும்போது ஏதாவது மொழியோ ஆளோ வந்ததும் உங்க மனசுல நெருடலாத் தோணுச்சுனா பாஸ் போட்டுட்டு கண்ணமூடிக்கிட்டு ஜெய்ஹிந்த்தோ, ஐ லவ் இந்தியாவோ சொல்லிகிட்டு மீண்டும் பார்க்கவும்.

பதிவின் முதல் வரியப் படிச்சீங்கல்ல.


:)

(சாந்தமான சிரிப்புக்கும் இதே ஸ்மைலிதானா)





Thursday, January 25, 2007

ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

"சார். நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, "என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பி. பாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர். நாவிதர்."

"ஓ. இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

".........."

"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

Wednesday, January 24, 2007

வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)

சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.

சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.

சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.

நன்றி: தமிழோவியம், திருமலைக்கொழுந்து.

Thursday, January 18, 2007

நடையிழந்த கால்கள்தன்னில்...

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். 'காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை' என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.

ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து வெற்றிபெறுபவர்கள் தங்கள் பின்புலங்க்களை வெளிப்படுத்துவதே ஒரு புரட்சிகரமான வெளிப்பாடுதான். இதை எல்லோரும் செய்வதன்மூலமே கீழே இருக்கும் யாரும் என்றைக்கும் கீழே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல என்பது எல்லோருக்கும் உறைக்கும்.

முழுக்கால்சட்டை போடுவது கிறீத்துவக் கலாச்சாரமா? சேலை உடுத்துவது இந்து கலாச்சாரமா? (வாட் ய சில்லி கொஸ்டின்) இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் பொங்கல் தமிழர் திருநாளா இல்லையான்னு கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை எடுத்தாழ்வது அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை. இவற்றை விலக்கிவைக்கக் கூட உரிமை இருக்கிறது. இந்துப் பண்டிகையை கிறீத்துவர்கள் கொண்டாடும்போது அதில் இந்துமதக் கூறுகளை அகற்றிவிட்டே அதை கொண்டாடுகிறார்கள். 'கலாச்சார உள்வாங்கல்' எனவே இதை வகைப் படுத்தலாம்.

சாதி அமைப்பை கிறீத்துவர்கள் பின்பற்றுவதும் ஒரு கலாச்சார தாக்கமே. இதை இந்துப் பழக்கம் என உரிமைகொண்டாட யாரும் முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
லாரன்ஸ் இராகவேந்திரா கிறீத்துவரா இந்துவா? (அவரையே கேழுங்க)

இன்னொரு நிகழ்ச்சியில் மதுரைப்புயல் வடிவேலு தன் மாமியார் ஊரை சுறிக்காண்பித்தார். மண்ணின் மணம் வீசிய நிகழ்ச்சி.

வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகளிர் கூட்டத்தோடு தரையில் அமர்ந்து அவர்கள் வைத்திருந்த மீனை சுவைத்தார். அந்தம்மா பசங்க வெளிநாட்ல படிக்குதாம். இட ஒதுக்கீடுக்காக சண்டைபோட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தெளிவான பாடம்.

வெட்டிமன்றம் 'வாழ்க்கைக்கு மிகவும் உதவுவது....' எனும் தொடரில்(Series) இந்தமுறை 'படிப்பறிவா? பட்டறிவா?' என காமெடி செய்தனர். ரசிக்கும்படியாகவே இருந்தது. வழக்கம்போல ராஜா அணி தோல்வியைத் தழுவியது.

நடிகர், நடிகைகளின் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன. ஓவர் டோஸ் என்றே சொல்லவேண்டும்.

சரி நீ பொங்கல் கொண்டாடினியா?

என் மனைவி வைத்த சர்க்கரைப் பொங்கலை நான் சாப்பிடவில்லை. அவரே அதை சாப்பிடல. ஏன்னா அது சரியா வரல. ஆனா வெண்பொங்கலை வயிறு(பாதி கேஸில்) நிரம்ப கொட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கும் தூங்கிக்கொண்டிருந்த என் மகனுக்கும் கேட்காதபடி மெதுவாக 'பொங்கலோ பொங்கல்' சொல்லிவிட்டு என் மனைவி பொங்கிய பொங்கல். கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான். இதில் கொடுமை என்னண்ணா இந்த இழப்பை பலரும் உணர்வதே இல்லை.

என் பக்கத்து வீட்ல கலை கிரிஷ்னு தம்பதிங்க இருக்காங்க. ரெண்டுபேரும் அமெரிக்காவிலேயே பிறந்துவளந்த மாதிரி நடந்துக்கிறாங்க. அவரு ஐயாராம் கலை கொஞ்சம் தாழ்ந்த சாதியாம். ஆனா பாத்தா எந்த வித்தியாசமும் தெரியல. இவங்க அமெரிக்க வாழ்க்கையோட ஐக்கியமாயிட்டதால இங்க கோவில்ல வேலை செய்ய வாய்ப்பிருந்தும் க்ரிஷோட அப்பாவ கூட்டிட்டுவரலியாம். அவங்க அப்பாவுக்கு ஒரு எழுத்தாளர் பால்ய ஸ்னேகிதராம்.

Friday, January 05, 2007

3000

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது

என்னவிலை அழிவே?

3000?

'மாஸ்டர்' ப்ளான்?

அ'பாரம்'



தோட்டக்காரன்.

நன்றி : http://www.cagle.com/

Wednesday, January 03, 2007

வெயில் - நிழலல்ல நிஜம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.

வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் வாழ்வில் ஒருநாள் சுள்ளென சுட்ட வெயில்தான்.
கண்டிப்பான தந்தை, கட் அடித்துவிட்டு சினிமாபோன மகனை அம்மணமாக வெயிலில் கட்டிப்போடுகிறார். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் அவனும், அவன் சுயமரியாதையும் பொசுக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வாழ்க்கை வெறும் ஏமாற்றங்களையே தருகிறது. அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.

பாத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல படம் எடுக்கவேண்டும் என பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார். அவரேகூட சில பொன் மேனி உருகல்களோடுதான் படம் எடுத்திருக்கிறார். வெயில், கிராமத்து வீதிகளில் விதி ஆடும் பம்பர விளையாட்டுக்களை நேரடியாய் பதித்ததுபோல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் பரிமாணங்களை முகபாவத்திலேயும் குறைந்தபட்ச வசனத்திலேயும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். வெறும் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது கிராமத்தின் பல முகங்களையும் கதையில் இணைத்திருப்பதும் சிறப்பு.

பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். 'போட்டுரலாம்' 'தூக்கிரலாம்; எனும் வில்லன்களின் உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால் படம் நம்ம மாமூல் தமிழ் படங்களை துவைத்துப் போட்டிருக்கிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் பல சிறுவர்கள்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.

கோயமுத்தூரில் இருந்த நாட்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கான சிறைச்சாலை ஒன்றை ஞாயிறுதோறும் பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அங்கிருந்த சிறுவர்களில் அதிகம்பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். அவர்களே தங்களை 'சந்தேகக் கேஸ்' 'கிரிமினல் கேஸ்' என பகுத்துக் கொள்வதுண்டு. இப்படி ஓடி வரும் சிறுவர்கள் வாழ்க்கை பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை. இதில் வெற்றி பெறும் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளை வளர்ப்பதற்கு இதுதான் சிறந்த வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரியாக வளர்வதில்லை என்பதும் இதற்குச் சான்று. குழந்தைகளை தண்டிப்பது மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பதை இந்தப் படத்தின் மூலமோ இன்னும் செய்தித் தாள்களில் படிக்கும் பல செய்திகள் மூலமோ இல்லை ஒரு சிறுவர் சிறைச்சாலையை போய் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். சும்மா எடுத்தேன் அடித்தேன் என இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையில் அதீத தண்டனைகள் அதிகமில்லை எனவே நினைக்கிறேன். நான் பட்ட அடி என் பிள்ளைங்க படவேண்டாம் எனும் எண்ணம் இதற்கு காரணமாயிருக்கலாம்.

படம் முடிந்ததும் ஒரு கேள்வி தோன்றியது. ஒருவேளை அன்று வெயில் குறைவாயிருந்திருந்தால்?


கூகிளிய பிற விமர்சனங்கள்
தம்பி
சாரல்
விழியன்
யாழ்

Saturday, December 30, 2006

Sad'AM' News

சுருக்க(கு)மான முடிவு
நேற்று! இன்று! நாளை?

ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்?

முன்பு! பின்பு!

தூக்கிலிடப்பட்டவர்கள்

அமைதியான உலகம்?


நீயும் நானுமா?

விளையாடு. வேட்டையாடு.

வேட்டைக்கார நண்பா?

நன்றி: http://www.cagle.com/main.asp

Friday, December 29, 2006

சுட்டமீனும் சுறாபுட்டும்

(நட்சத்திரப் பதிவில் மீள் பதிவு தேவை எனும் விதிக்கேற்ப... அலைகள்..பாறைகளிலிருந்து..)

நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.

பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் உபயோகிகின்றோம். இவையாவும் (அவருக்கு) கற்பிக்கபட்டவையே என்பதை நாம் பொதுவாக எண்ணி பார்ப்பதில்லை.

நம்மில் இருக்கும் பல பழக்கங்கள் யாரோ நமக்கு சொல்லித்தந்தது அல்லது யாரை பார்த்தோ நாம் கற்றுக்கொண்டது. மதங்களும, ஜாதி பற்றிய கொள்கைகளும்கூட யாரோ நமக்கு ஊட்டிய பால்தான். ஏதோ அவை நாமே உருவாக்கியது போல சில நேரங்களில் நடந்துகொள்கிறோம்.

ஜப்பானில் பல ஜந்துக்களை ருசித்து உண்கின்றனர். அமெரிக்காவில் மாட்டிறச்சியை சுட்டு சாப்பிடுகின்றனர், இதெல்லாம் நம்மில் பலருக்கு வியப்பளிப்பது போலவே நாம் பட்டை இலவஙத்தைப் போட்டு குழம்பு வைத்து அதை சோறில் ஊற்றி சாப்பிடுவது அமெரிக்கர்களுக்கு வியப்பளிக்கிறது. பட்டை மணம் மெற்கு நாடுகளில் இனிப்புகளில் (மட்டும்?) பயன்படுத்தப் படுகின்றது.

பச்சை மீனை சுட்டு உண்பதை மீன் உண்பவர்கள்கூட புரிந்து கொள்வதில்லை. கடல்புறங்களில் பேர்போன ஒரு பழக்கம் அது.

காலப் பயணமாக பின் சென்று நம் முன்னோர்கள்போல வாழும் ஒர் அரிய அனுபவம். இதன் சுவை பற்றி கவிதைகள் வரையலாம். மாமிசம்/மீன் உண்ணாதவர்கள் சில கிழங்கு வகைகளை சுட்டு உண்டு பார்க்கவும். மற்றவர்கள் இந்த அனுபவத்தை பெறுவார்களாக.சுடுவதற்கு ஐஸ் மீன் உகந்ததல்ல. கடற்கரையில் கிடைக்கும் வாடாத மீன்களைச் சுடுவதே நல்லது. எல்லா வகை மீன்களும் சுட்டால் ருசிப்பதில்லை. அதற்கென்று சில மீன் வகைகள் உள்ளன. சாளை(மத்தி), அயிலை, போன்ற மீன்கள் பெயர்போனவை. முட்டத்தின் கள்ளுக்கடைகளில் சுட்ட பச்சை மீன் மிகப் பிரபலம்.

அவித்த மரச்சீனி(மரவள்ளி) கிழங்கும் சுட்ட பச்சை மீனும் நிகரில்லா இணைகள். இதற்கு மாற்று மரவள்ளிக் கிழங்கும் அவித்த தோடும். தோடு (mussel) என்பது ஒருவகைச் சிப்பி. ஒரு பருவத்தில் முட்டம் மற்றும் கடியப்பட்டிணத்தின் பாறைகளில் அதீதமாக விளையும் இந்தத் தோடுகள். இதைக் கழுவி உப்பு கூட போடாமல் அவிக்கலாம். உப்பு அதிலேயே இருக்கும். மரச்சீனிக் கிழங்குக்கும் இந்த தோடுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கள்ளுண்ன சிறந்த கூட்டு.இந்த அவித்த தோடுகள் அமெரிக்காவின் சீன பஃபேக்களில்(buffet) கிடைக்கின்றன.

எச்சரிக்கை: சென்னை அடுக்கு மாடி வீடுகளில் மீன்சுடுவது உங்கள் பின்புலனை பறைசாற்றுவது போலாகும். மகாபலிபுரம் போன்ற கடற்கரைகளுக்கு சிற்றுலா(picnic) போகும்போது இதை செய்து பார்க்கவும்.

மரவள்ளிக்கிழங்கை, மசாலாவுடன் நெத்திலி போன்ற சிறிய மீன்களைப் போட்டு மசிய அவித்தால் 'கிழங்குக் களி'. சரவணாபவனின் முதல் மாமிச உணவாக இதை சேர்க்கலாம். மிகச் சத்தான உணவு. இந்தக் கிழங்கை துண்டுகளாக வெட்டி காயப்போட்டால் 'வெட்டுக் கிழங்கு'. இதுவும் இடித்துக் களியாக்கப்படும்.

'கூனி' எனப்படும் சிறிய இரால் வகை ஒன்றை காயவைத்து அதை மிளகு, மசாலாவுடன் இடித்து பொடிசெய்வார்கள். நெத்திலி கருவாடும் இவ்வாறு பொடி செய்யப் படும்.

கடற்கரையின் இட்லி பொடி இது. தேனீர் தவிர வேறெந்தெ உணவுக்கும் சுவை சேர்க்கும். நான் இதை அமெரிக்கவிற்கு அனுமதியின்றி இறக்குமதி செய்திருக்கின்றேன், எனக்கு மட்டுமாக.

கடற்புறங்களில் ஊருக்கு ஊர் மீன்குளம்பு வேறுபடும். மணம் நிறம் குணம் மாறும். எனக்கு சிறிது புளிப்பு தூக்கலக பச்சை மிளகாய் போட்டு வைத்த குளம்பு பிடிக்கும். வேலு மிலிட்ரி போல பூண்டு போட்டு மீன் குளம்பு வைப்பதில்லை.(அதையும் ரசித்து ருசித்திருக்கிறேன்).

மூரை எனப்படுவது கடல் பாறைகளில் ஒட்டி வளரும். மெல்லிய, மண்டையோட்டின் மேற்புரம் போன்ற கூட்டின்மேல், முள் போன்ற குச்சிகள் நீண்டு நிற்கும். காய்ந்த இதன் குச்சிகளை சிலேட்களில் எழுதப் பயன்படுத்துவதுண்டு.

மூரையை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒர் இளந்திடப்(semi solid) பொருள் இருக்கும். இதை சமைக்காமல் பச்சையாக உண்ணலாம். பாறையிலிருந்து எடுத்து சில மணி நேரங்களுக்குள் இவற்றை உண்ண வேண்டும். முட்டத்தில் பாறைகள் அதிகமானதால் மூரைகளும் அதிகம். எல்லா நேரங்களிலும் இவை கிடைப்பதில்லை. டிசம்பரில் கட்டாயம் கிடைக்கும். மூரைகள் எனக்குப் பிரியம். வேறெந்த மீனையும் சமைக்காமல் உண்பதில்லை.

குமரிமாவட்டத்தில் அநேகமாக எல்லா பதார்த்தங்களிலும் தேங்காய் சேர்ந்திருக்கும். தலைக்கு தினமும் தேங்கய் எண்ணைதான், சமையலுக்கும். மீன்குழம்புகள் இந்த விதிக்கு விலக்கல்ல.தேங்காய் இல்லாமல் சமைக்கும் 'மஞ்சள் தண்ணி' எங்கள் வீட்டில் பிரசித்தம், தூண்டிலில் பிடித்த மரத்து மீன்களே இதற்கு சிறந்தவை.

சின்ன வெங்காயம் (குமரியில் 'உள்ளி'), மஞ்சள், புளி, சின்ன சீரகம் சேர்த்து அரைத்து கூட்டப்படும் குளம்பு. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நம் வீட்டின் சமையலை வெளிப்படுதும் குளம்புகளில் இதுவொன்று. மற்றது நண்டுக்கறி.

பழைய சோற்றிற்கு மஞசள் தண்ணி அசாத்திய சுவை சேற்கும். சுடு சோற்றை நன்கு ஆறவைத்தால்தான் மஞசள் தண்ணியின் குணம் தெரியும்.

தேங்காய் இல்லாமல், மாங்காய் போட்டு அவியல் என்று ஒன்று. இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும். மீன்போட்ட புளிக்காய்ச்சல் இது.

சுறாபுட்டு அதிகமாகப் புழங்கவில்லை. எப்போதாவது சின்ன சுறா மீன்கள் கிடைத்தால் அதை அவித்து, உதிர்த்து, வறுத்து புட்டு செய்வதுண்டு. இந்தப்புட்டை வடைபோல உருட்டி முட்டையில் தோய்த்து பொரிப்பார்கள் சிலர். சைவம் உண்பவர்கள் ஏமாந்து போகுமளவுக்கு இருக்கும். சுறா மீன்களில் மசாலா எளிதில் பிடிபதில்லை அதனால் குளம்பை விட அவியல் அல்லது புட்டுக்குத்தான் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, திருக்கையும் அதுபோலத்தான்.

சுறா மட்டுமன்றி வாளை மீனிலும் புட்டு நன்றாக வரும். இதில் சதைக்குள் முள் அதிகமிருக்கும் 'துப்பு வாளை' புட்டுக்குச் சிறப்பு. சாப்பிடும்போது, முள்ளை, துப்பிக்கொண்டே சாப்பிடவேண்டும். உதிர்த்து விடுவதால் புட்டில் முள் இருப்பதில்லை.

பாம்புபோல நீளமாக, ஆனால் தட்டையாக வெள்ளி பூசிய பட்டை போலிருக்கும் வாளை மீன். முதுகுப்புறத்தில் பச்சை கலந்த நீல நிறம்.துப்பு வாளை அல்லாத வாளையில் நெய் சுரக்கும். நெய்மீனை விட சுவையாக இருக்கும் அதன் குளம்பு. வாளைக் குளம்பை சுடச்சுட சாப்பிட்டால் மட்டனை மறக்க நேரிடும்.

மீனவர்கள் தட்டு நிறைய சோறு போட்டு சாப்பிடுவது வியப்பாக இருக்கலாம். அத்தனை உடலுழைப்புக்குப் பிறகு அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும்கூட. மீன் இல்லமல் சாப்பாடு இறங்குவதில்லை கடலோர மக்களுக்கு. மீன்பிடிக்கச்செல்லாத நாட்களில் கருவாடு அல்லது இறைச்சிக் குழம்பு கட்டாயம் இருக்கும்.

மீனை பொரித்து உண்பது ஒரு சிறப்பு உணவு. கருவாட்டைப் பற்றி வர்ணிக்கத்தேவயில்லை திரைப்படப் பாடல்களே சான்று.

பெரிய மீன்களை பக்கவாட்டில் இரண்டாய்க் கீறி உப்பு, சில நேரம் மஞ்சள், தடவி காய வைப்பது ஒருவகை, நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை அப்படியே காயப்போட்டு எடுப்பது இன்னொரு வகை. சில பருவங்களில் ஊர் முழுவதும் மீன்கள் காயும். அந்த நேரங்களில் சளி பிடித்திருப்பது நல்லது. கருவாடாகும்வரைதான் இந்த ஊர் மணக்கும் நிலை.

நெத்திலி கருவாடு வீட்டின் அறைகள் முழுக்க, காற்றும் புக முடியாதபடி நிரப்பி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். காயப் போட்ட மீன் மீது பஸ் ஏற்றிச் சென்று அடி/திட்டு வாங்கிய ஓட்டுனர்கள் பலர்.

கருவாட்டுக்கு இடம் விட்டுவிட்டு ரோடு போட்டிருக்கலாமோ?

Wednesday, December 27, 2006

(சிரி) நட்சத்திரம்

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.

ஹலோ ஹவ் ஆர் யூங்க,
என் பேரு A. மாந்தவன், 'ந்' சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க.

நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.

முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,"ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. ஈசியா இருக்குமே?"ன்னு.

ஒரு இணைய வரி விளம்பரத் தளத்துக்குப் போனேங்க. நம்ம ஊரு பொண்ணா இருந்தா நல்லாருக்குமேன்னு."Help! Asian woman wanted" அப்படீன்னு போட்டேங்க. நெறைய நண்பர்கள் இதுக்கு படத்தோட பதிலனுப்புனாங்க.

அம்மாகிட்ட காமிச்சேன். "டேய், ட்ரெஸ் போடாத பொண்ணுங்க வீட்டுவேல எப்டிடா செய்வாங்கன்னு." சொல்லிட்டாங்க. அதனால என் நண்பர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நானே வீட்டு வேலையெல்லாம் செஞ்சுகிட்டிருக்கேனுங்க.

இன்னொரு நண்பன் டெய்லி எனக்கு மெயிலனுப்பிச்சு நான் UK லாட்டரில வெற்றி பெற்றதாகவும் சின்ன தொக ஒண்ண அனுப்புனா பெரிய தொக ஒண்ணு கிடைக்கும்னு மெயில் அனுப்பிட்டிருந்தாரு. எனக்கு லாட்டரி விழுந்திருக்குன்னு எனக்கே தெரியாது ஆனா இவரு எத்தன கவனமா பாத்து இதச் சொல்லியிருக்காரு பாத்தீங்களா? நல்ல நண்பருங்க. இப்பத்தான் இவருக்கு 500 டாலர் அனுப்பி வச்சேன். கூடிய சீக்கிரத்துல பணக்காரனாயிடுவேன். என்ன நல்லெண்ணம் பாத்தீங்களா என் நண்பருக்கு.

இன்னொரு நண்பரும் இதப்போல தினமும் நைஜீரியாவுலேந்து மெயில் அனுப்புவாரு. அவரு பேங்க் மேனேஜராம் ஆப்ரிக்காவுல நியோமியாங்கிற இடத்துல இருந்த அரசர் அவங்க பேங்குல ரெம்ப பணம் போட்டுட்டு செத்துப் போனாராம். அந்தப் பணத்த நம்மகூட பங்குபோடணுமாம். அதுக்கும் கொஞ்சம் காசு கேட்டிருந்தாரு. கொடுத்திருக்கேன். சீக்கிரம் அதுவும் வந்து சேந்த்துடும். எனக்கு என்ன பயம்ணா அந்த அரசப் பதவிய எனக்குத் தந்துட்டா ஆப்ரிக்கா போகணுமே?

இப்படி எனக்கு தினமும் மெயில் வந்துகிட்டே இருக்குதுங்க. ஆனா எல்லா மெயிலும் தனியா SPAM அப்டீங்க்ற Folderல போயி சேந்திரும். என் இணைய நண்பர்கிட்ட மெயில் அனுப்பிச்சு SPAMனா என்னண்ணு கேட்டேன். அவரு Special, Personal, Afeectionate Mails. அப்படீன்னாரு.

LonelyGirl69 அப்டீன்னு ஒரு தோழிய சாட்டிங்ல புடிச்சேன். ரெம்ப அருமையா பேசுவாங்க. கிழுகிழுப்பாயிருக்குமுங்க. ரெம்ப சீரியசா அவங்கள லவ் பண்ண ஆரம்பிச்சேனுங்க. அவங்க போட்டோ அனுப்பச் சொன்னேன், அனுப்பினாங்க. என்ன அழகாயிருந்தாங்க தெரியுமா? என் பிரண்டு ஒருத்தங்கிட்ட காமிச்சேன் அவன் பொறாமையில இது ஆஞலீனா ஜோலிங்கிற நடிகையோட படம்டான்னுட்டான்.

என் இணைய தோழி ஆஞலினா ஜோலி மாதிரி இருக்கலாம்லன்னு சொன்னேன். அவன் சிரிக்கிறான். பொறாமைங்க. சரி நம்ம போட்டொவையும் அனுப்பிவைப்போமேன்னு அனுப்பினேன் அதுக்கப்புறம் lonelyGirl69 என்கூட சாட் பண்றதே இல்லங்க.

ஒருநா ஒரு சோகமான மெயில் வந்துச்சுங்க ஒரு சின்னப் பையனுக்கு மூளையில ஏதோ ப்ராப்ளமாம். இதுவரைக்கும் அந்த வியாதி யாருக்கும் வந்ததேயில்லையாம். பாவம் அந்த சின்னப்பையன். அவனுக்கு மாசா மாசம் காசனுப்புவேன். பலபேரு இதப்பத்தி எனக்கு மெயிலனுப்பியிருக்காங்க. இதுலெ என்னண்ணா ரெண்டு வருசமா இந்தப் பயனுக்கு 10 வயசுதான் ஆகுதுங்க. இன்னைக்கும் அப்டித்தான் மெய்யில் வருது.

இன்னொரு நண்பர் ரெம்ப நாள மெயில் அனுப்பிட்டேயிருப்பாரு. ஒங்க ஆண்மைய பெரிதுபடுத்தணுமான்னு கேட்டு. இது நல்ல விஷயந்தானேன்னு அவருக்கும் காசனுப்பினேன் ஒரு பாட்டில் மாத்திரைய அனுப்பினாரு. அதுல சொல்லியிருந்தமாதிரியே சாப்பிட்டேன். இப்ப ரெம்ப நல்ல பலன் கெடச்சிருக்குது.

அதாவது அந்த மருந்து சாப்பிட்டதுலேர்ந்து எனக்கு 'அந்த' மாதிரி எண்ணங்களே கொறஞ்சுபோச்சுங்க. இப்ப எனக்கு ஆண்மை பெருசா இருந்தா என்ன சின்னதா இருந்தா என்ன? எப்படி ஒரு நிரந்தரத் தீர்வு பாத்தீங்களா. இணைய நண்பர்கள் இணைய நண்பர்கள்தாங்க.

நான் தனியான ஆளுங்க. அதுக்கு இணையத்துல ஒரு சொலூஷன் கெடச்சது. 'Are you single? Call this number'னு ஒரு மெயில ஒரு தோழி அனுப்பினாங்க. போன்போட்டு பேசினா அவ்வளவு இனிமையான குரல். ரெம்ப நேரமா பேசினோம். எதெல்லாமோ பேசினோம். ஆனா ட்ரெஸ் போட்டுட்டு பேசினா அவங்களுக்குப் பிடிக்காதாம். ஒவ்வொண்ணண கழட்ட சொல்லிட்டாங்க ரெம்ப ஜாலியா இருந்துச்சு. அந்த மாசம் ஃபோன் பில் செமையா போயிடுச்சு. ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ் ஃபோன் வேறையா. வேலையிலேர்ந்தே தூக்கிட்டாங்க.

அட தோழிக்காக இதுவுமில்லண்ணா எப்டி?

சாட்ல ஒருநா ஒரு தொழி என் க்ரெடிட் கார்டு நம்பரச் சொன்னா என் அக்கவுண்ட் பாஸ்வோர்ட சொல்றதா சொன்னாங்க. அட இந்த விளையாட்டு நல்லா இருக்குதேன்னு அவங்களுக்கு விபரத்த தந்தேன். ஆனா தப்பா கெஸ் பண்ணிட்டாங்க. நாலு தடவைக்கப்புறம் நானே சரியான விடைய அவங்களுக்குத் தந்தேன்.

இன்னைக்கும் பல தோழர்கள்கிட்டேந்து மெயில் வந்துட்டே இருக்குது. என் படம் அங்க இருக்குது போய் பாருன்னு ஒரு தோழி, AOL மைக்ரொசாஃப்ட் இணைஞ்சி காசு தர்றாங்கன்னு ஒரு தோழர். இந்த சர்வே எடுத்தா ப்ளாஸ்மா டி.வின்னு ஒருத்தர், இந்த மெயில 10 பேருக்கு அனுப்பினா சொர்க்கம் போகலாம் இல்லண்ணா நரகம்னு சிலர்.

தினம் தினம் இணையத்துல என்னையும் ஒரு நண்பனா ஏத்துக்கிட்டு மெயில் அனுப்புற எல்லா நண்பர்களுக்கும் இந்த A. மாந்தவனின் நன்றிகள். 'ந்' சைலன்டுங்கோவ்.

Tuesday, December 26, 2006

(வாள்) நட்சத்திரம்

போர்வாள்
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில் வாழும் சாமான்யர்களை எண்ணிப்பார்க்கவைத்தது மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.

அமுதா, போர் காரணமாய் புலம் பெயர்ந்து, தன் உறவுகளையும், உணர்வுகளையும் பிறந்தமண்ணில் புதைத்துவிட்டு எங்கோ அடைக்கலம்புகும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதியாகத் தெரிகிறாள். அமுதாவுக்கு கிடைத்ததுபோல போகும் இடத்தில் எத்தனை வசதிகள் வந்தபோதும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் உணர்வுகளை எவராலும் தொலைக்க முடிவதில்லை.

புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமயமான துயரம் ஒருபக்கமிருக்க போர்க்களங்களின் நடுவிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் சோகம் அவர்களின் சந்ததிகளின் மனதில் கண்ணீர் வெடிகளாக விதைக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

கொள்கை ரீதியிலான போராட்டங்கள் முதிர்ந்து ஆயுதப் போராட்டங்களாக உருப்பெறுவது நிச்சயம் ஒரு குறுகிய வட்டத்துள் நடக்கும் விஷயமல்ல. Lord of the war எனும் திரைப்படம் ஆயுத வியாபாரி ஒருவனின் வாழ்வைச் சொல்கிறது. ஆயுதங்களை கொத்தவால்சாவடி தக்காளிபோல விலைபேசி விற்கிறான் அவன். "உலகில் 11பேருக்கு ஒரு துப்பாக்கி உள்ளது, என் வேலை மீதியுள்ள 10பேர்கையிலும் எப்படி துப்பாக்கியைத் தருவது என்பதுதான்?" என்கிறான் நாயகன் எடுத்த எடுப்பிலேயே. அமைதி விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நாடுகள் பல ஆயுத வியாபாரத்தில் அபார இலாபமூட்டுகின்றன. இவையே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றன எனும் தகவலோடு முடிகின்றது படம்.

வசதியான தூரத்தில் நின்றுகொண்டு யார்மீதுவேண்டுமானாலும் கல்லெறியத் துணியும் என்னைப் போன்றவர்களால் தன் உடம்பை வெடிகுண்டாக்கித் தன் கொள்கைகளை வாழவைக்கத் துணியும் ஒரு போராளியின் மனதைப் புரிந்துகொள்ள இயல்வதில்லை. பல நேரங்களில் இந்த உயிர்சேதங்கள் சத்தியாகிரக முயற்சியில் நிகழ்ந்திருந்தால் உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்திருக்குமோ என எண்ணத்தோன்றும்.
எனினும் நம் போராட்டமுறைகளை வரையறுப்பது நம் எதிரிகளே!

பதிவர்வாள்
தெலுங்கு எழுத்துருவைப் பார்த்திருப்பீர்கள். நடிகர் விவேக் சொல்வதைப்போல ஜிலேபியாகத்தான் அவை எனக்கு காட்சியளிக்கின்றன. தமிழில் அன்பு என்பதையே ஆங்கிலத்தில் Love என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். தமிழ் தெரியாத ஒருவருக்கு தமிழ் எழுத்து புரிவதில்லை, ஆங்கிலம் தெரியாதவருக்கு ஆங்கிலம் புரிவதில்லை (அட என்னையா சொல்ல வர்ற?). இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை அளிக்கின்றபோதும் நம் மூளையால் நமக்குத் தெரியாத ஒன்றை புரிந்துகொள்ள இயலவில்லை. (ரெம்ப சிம்பிள் லாஜிக்டா நட்சத்திரக் கொழுந்து).

அப்ப வலைப்பதிவுல மட்டும் ஏம்பா இப்டி அடுத்தவன போட்டுத் தாக்குறீங்க? எத்தனை முயன்றாலும் அடுத்தவரின் நிலையில் நின்று நம்மால் ஒருபோதும் சிந்திக்க இயல்வதில்லை. ஒருவரின் கொள்கைகள் நம்பிக்கைகள் குறைந்தபட்சமே அவரால் வகுக்கப் படுகின்றன பலது அவரவர்க்கு ஊட்டப்பட்டவையே. அதை யாராவது உங்களுக்கு ஊட்டியிருந்தால் நீங்களும் அவரைப்போல நிச்சயம் ஆகியிருப்பீர்கள் என்பதை நம்புங்கள்.

கருத்துக்கள், எதிர் கருத்துக்களை முன்வைக்கும்போது கருத்துக்களையே குறிவையுங்கள். உங்கள் கொள்கைகளை எடுத்துரைப்பதே முக்கியம் அடுத்தவரை தாக்குவது சிறந்த பதில் ஆகாது. உங்க கொள்கையின் மகத்துவத்தச் சொல்லணும்னா அதன்படி நடங்க. அதை மற்றவருக்குப் பிடிக்கும்படி செய்யுங்க. அடுத்தவங்களை குறைத்துப் பேசினால் உங்க கொள்கைகள் உயர்ந்து நிற்கும் என்பது உங்கள் கொள்கையின் வலிவின்மையையே காட்டும்.

பைபிளில் பேபலின் கோபுரம்பற்றிய ஒரு கதை உண்டு. உலக மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கோபுரத்தை கட்டி வானத்திலிருக்கும் கடவுளைச் சென்றடைந்துவிடலாம் என முயன்றுகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கடவுள் மனிதர்களிடையே இனம் மொழி என வேற்றுமையை உண்டாக்கி அவர்களை பிரித்துவிட்டாராம். நம்மில் வேற்றுமைகளைக் களையக் களைய நாம் கடவுளர்கள் ஆகிவிடுவோமோ என்னவோ?

நினைவுப் பேரலைகள்
சுனாமி அழிவை வருத்ததுடன் நினைவுகூறும் நாள் இது. இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் மனதில் நினவுப் பேரலைகள் இன்னும் வீசிக்கொண்டிருக்கின்றன. சுனாமியின் விளைவு ஓரிருவருடங்களில் தீர்வதல்ல, இன்னும் சில தலைமுறைகளை அந்த நினைவுகள் வாட்டும் என்பதில் ஐயமே இல்லை.

கடற்கரை ஓரங்களில் உருவெடுத்திருக்கும் ஆயிரமாயிரம் அனாதை இல்லங்களே இதற்குச் சான்று. இன்னும் தேவைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவ முன் வருவோம்.

இயற்கை மனிதர்களை அழிக்கலாம். மனிதத்தை?

Sunday, December 24, 2006

(வால்) நட்சத்திரம்

(மீள்)அறிமுகம்
வலைப்பதிவு துவங்கி ஒரு வருடம் ஆகிறது. நூத்தி சில பதிவுகள், சில பரிசுகள், பல பாராட்டுக்கள், அப்பப்ப ஏச்சுக்கள் என வருடம் ஓடினதே தெரியவில்லை. தமிழ் பதிவுக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதே மறந்துவிட்டது. நண்பர்
ஜோவின் உதவி மடல்களை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

முதலில் துவங்கியது ஒரு
ஆங்கிலப் பதிவு. ரெம்ப கஷ்டப்பட்டு அதில் சில பதிவுகள் அப்பப்ப போட்டுவிடுகிறேன். (அட பத்து பதிவத் தாண்டிடுச்சுங்க). அடுத்ததாக நான் அப்பப்ப நினைத்து வியப்புறும் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் துவங்கினேன். மொத்தம் 23 பதிவுகளே, ஆனாலும் எனக்கென்று ஒரு அறிமுகத்தை, அடையாளத்தை தந்த பதிவுகள். முட்டம் எனும் ஒரு கிராமத்தின் வெளிச்சத்தில் எனக்கு கொஞ்சம் பெயர் தேடிக்கொண்டேன் எனச் சொல்லலாம். தினமலரின் 'டாட் காம்' பக்கத்தில் இடம் கிடைத்தது. திரு செயமோகன் அவர்களின் மடலும், நண்பர்களின் பாராட்டும் மேலும் எழுதத் தூண்டியது.

அடுத்தது
பைபிள் கதைகள். அது துவங்கிய வேகத்தோடேயே முடங்கிக் கிடக்கிறது. அநியத்துக்கு டைம் கெடச்சா அத தொடரலாமுன்னு இருக்கேன்.

பத்தாம் வகுப்புக்குப் பின் நான் மறந்து, விட்ட தமிழ் என்னில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறதென்பது எனக்கு ஆச்சர்யமான விஷயம். இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இன்றைக்கு பல நண்பர்களை இந்த வலைத்தளம் பெற்றுத்தந்துள்ளது. அனைவருக்கும் இந்த நடசத்திர மகிழ்ச்சியில் பங்குண்டு என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்.
வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வை அல்லது சமூகவியல் கூற்றுக்களை விவாதிப்பவர்களை மேல் குறிப்பிட்ட மூன்று குறிச் சொற்களுக்குள் அடக்கிவிடலாம். இவர்கள் நடத்தும் ஒரு கற்பனை(?) உரையாடல்.

"அன்பு நண்பர்களே வணக்கம்."

"டேய் நீ என்ன ஜாதி, என்ன மதம். ஒன்னப்பத்தி தெரியாதா. ஒங்க அப்பா பாட்டங்காலத்துல... "

"அட இருப்பா அவர் வணக்கந்தானே சொன்னாரு."

"சில கலாச்சார விளைவுகளாலத்தான் இப்படி இவர் ஆயிட்டாரு. பல ஆயிரம் காலமாக மனிதம் எத்தனை மாற்றங்களைக் கண்டிருக்கிறது. எத்தனையோ பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறது பல பொய்கள் மெய்யாயிருக்கின்றன மெய்கள் பொய்யாயிருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக மனிதனின் மூளை சலவை செய்துவரப்படுகிறது."

"எங்க மூளை சலவை செய்து வெளுப்பாக வைக்கப்பட்டுள்ளது ஒங்க மூளைதான் வெளுக்காத அழுக்காயிருக்குது."

"இப்ப நீங்க ரெண்டுபேரும் எத வச்சிகிட்டு சண்டபோடுறீங்கன்னே தெரியல. சமாதானமா போங்க. ஹாப்பி கிறிஸ்மஸ்."

"கிறீஸ்மசா? கிறீஸ்துன்னு ஒருவர் பிறக்கவேயில்ல தெரியுமா? எல்லாமே புருடா... எல்விஸ் ப்ரஸ்லி இதப் பத்தி பக்கம் பக்கமா எழுதியிருக்கார். ராபர்ட் கென்னடி இதச் சொன்னதால கொல்லப்பட்டாரு. ஆதாம் ஏவாள் இருந்தாங்கன்னா நம்பலாம் ஆனா இயேசு கிறீஸ்து இருந்தார்னு நம்பும்படியா ஆதாரம் எதுவுமே இல்ல."

"என்ன சொல்றீங்க. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால வாழ்ந்ததாச் சொல்ற இயேசு இல்லைன்னு ஊர்ஜிதமாயிடுச்சா? அப்ப அதுக்கும் முன்னால இருந்த கடவுள்கதியெல்லாம் என்னவாகும்? மதம், கடவுளெல்லாம் நம்பிக்கை சம்பந்தமான விஷயமில்லையா? உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா அந்த விஷயம் பொய்யாத்தான் தெரியும்."

"அதத்தான் நாங்களும் சொல்றோம்ல? எங்க கடவுள் உண்மையில்லன்னு நீங்க சொன்னா உங்க கடவுளும் உண்மையில்லண்ணு நாங்க சொல்வோம்."

"இயேசு இருந்ததும் உறுதியாகல்ல, இல்லைங்கிறதும் உறுதியாகல்லன்னு வச்சுக்கலாமா?"

"அதெப்டி? திருச்சபை உலகத்த ஏமாத்தியிருக்குது. பல கலாச்சாரங்கள் அழிஞ்சிருக்கு."

"யோவ் மனுச வரலாத்துல எத்தனையோ கலாச்சாரங்கள யார்யாரெல்லாமோ அழிச்சிருக்காங்க். திருச்சபை ஒரு மத அமைப்பா மட்டுமில்ல மாபெரும் அரசியல் அமைப்பா இருந்துச்சு. இவுங்க செய்த ஆன்மீகத் தப்பையும் அரசியல் தப்பையும் போட்டு கொழப்பாதீங்க. இந்தியாவுலகூட பல கலாச்சாரங்கள் மதத்தின் பெயரால ஒண்ணாயிருக்கு."

"அப்ப திருச்சபை தப்பே செய்யலியா?"

"எத்தனையோ செஞ்சிருக்கு. பலதையும் திருத்தியிருக்கு. அவனவன் தப்ப அவனவனே திருத்திக்கட்டுமே?"

"அப்பாவி மக்கள ஏமாத்தி மதம் மாத்துறது சரியா?"

"யார யார் எந்த விதத்துல ஏமாத்துனாலும் அது தப்புத்தான்."

"அடுத்த மதமெல்லாம் சாத்தான் மதம்னு சொல்றது சரியா?"

"அது அவங்க நம்பிக்கை."

"அதத்தான் நாங்க எதிர்க்கிறோம். இயேசுவ எங்களுக்குப் பிடிக்கும் ஆனா ஏசு பேரால ஏமாத்துறவன கொளுத்துவோம்."

"டாப்பிக் ரெம்ப தெச மாறிப் போகுதே. ப்ளீஸ் இப்டி வெட்டியா பேசுறது வுட்டுட்டு கல்விக்கு ரூ60000 கேட்கும் பெண்ணுக்கு உதவுங்களேன்."

"கல்விக்கு 60000 ?அந்தப் பெண் படிக்கலியா?"

"எம் எஸ் ஸி படிச்சிருக்காங்க. உதவலைன்னா தற்கொல செஞ்சிருவாங்க."

"அடப் பாவமே. எங்க எப்ப யாருக்கு பணம் அனுப்புறது. தற்கொல செஞ்சாச்சா செய்யப் போறாங்களா? எப்டி எப்டி இது?"

"ஏன் இப்டி அவசரப் படுறீங்க? அவங்க ஏற்கனவே எம்.எஸ்.ஸி படிச்சிருக்காங்க எங்கையாவது வேல பார்த்துக் குடுங்க"

"யோவ் இப்போ அவங்களுக்குத் தேவ மீன் துண்டு. மீன் பிடிக்க அவங்களே கத்துக்குவாங்க."

"60000 வச்சு 60 பேருக்கு மீந்துண்டு தரலாமே?"

"என்னையா இவன். இவனத் திட்டி பதிவு போட்டத்தான் சரியாவான்போல."

"நீங்க சொல்ற லாஜிக்கும் புரியுதுங்க. எனக்கு ஒரு ஐடியா தோணுது. இந்தக் காச அந்தப் பொண்ணு கடனா வாங்கிக்கணும். அந்தக் கடன அது வேலைக்கு சேர்ந்ததும் முடிஞ்சவரை திருப்பித் தர முயற்சி செய்யணும், கொடுத்தவங்களுக்கில்ல, இன்னொரு ஏழைக்கு. இது நல்ல ஐடியா இல்ல?"

"யோசிக்கலாம்."

"போங்கையா உங்க லாஜிக்கும் நீங்களும். உதவி செய்யுங்க இல்லன்னா ஒதுங்கிப்போங்க."
இதுல யார் அறிவு ஜீவி யார் உணர்ச்சி பிழம்பு யார் நடுநிலமை நாயகம்னு நீங்களே முடிவுபண்ணிக்கங்க.

பட்டியல்
இதுவர நான் போட்ட சில பதிவுகள்ள உருப்படியான சிலத என்
100வது பதிவுல தொகுத்திருக்கேன் ஒரு எட்டு போய் முடிஞ்சா படிச்சுட்டு வாங்க. வார்ப்புருவுல ஏதோ தவறாயிடுக்கிறதால என்னுடைய சைட் பார் கீழ போயிடுச்சு (எக்ஸ்ப்ளோரர்ல) அதையும் போய் பாருங்க. 100வதுக்கப்பறம்போட்ட சில உருப்படியான பதிவுகள் கேழே பட்டியல் போட்டுள்ளேன்.

அமைதி அமைதி

புள்ளியியல் ராஜாவுக்கு பின்னூட்டம் வருமா?

உறவுகள்(சிறுகதை)

சுதந்திரம்

திண்ணையில் - தமிழோவியத்தில்

மான்ஸ்டர் - சிறுகதை

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

நிலவில் நாளை..

லிஃப்ட் - சிறுகதை

இளையக் கன்னி

த'சாவு'தாரம்

தீட்டு

ஒருநாள் கழிந்தது.

சுவையான தகவல்

விடுதலை - சிறுகதை

விடுதலை

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

மரணதண்டனைப் பதிவுகள்

தீபாவளி வாழ்த்துக்கள்

தேன்கூடு பெட்டகம்

சொர்க்கம் இலவசம்

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

பகுத்தறிவாளனுக்கான பதிவு

போக்கர் ஆடுவது எப்படி?

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு...

சிரி சிரி கிறீஸ்மஸ்

ஆங்கிலம் பேசலாம் வாங்க!

வருத்தம்
விழாக்கால சலுகையில் தமிழ்மணம் நட்சத்திரமாக மதி முன்பே தேர்ந்தெடுத்திருந்தாலும், தமிழ்மணம் இதை உறுதிப்படுத்துவதில் பலத்த தாமதம் ஏற்பட்டுவிட்டது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம். இன்று ஆறு மணி அளவிலேயே எனக்கு அறிவிப்பு வந்தது. இந்த தாமத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தபோதும் இதை இங்கே தெரிவித்தால் இந்தப் பதிவு ஏன் இப்படி அவசரத்தில் எழுதுனதுபோல இருக்குண்ணு நினைக்கிறவங்களுக்கு பதில் கிடைக்கலாம். தமிழ்மணம் குழு தந்த நட்சத்திர வாய்ப்புக்கு நன்றி.

வாழ்த்துக்கள்
கிறீஸ்துமஸ் பற்றி சிறப்பாய் ஏதாவது எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அவசர பதிவானதால் இப்போதைக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். அதான் ஒரு முழு வாரம் இருக்கே இன்னும் நிறைய பேசுவோம்.

இப்பத்தான் சர்ச்சிலேர்ந்து திரும்பினேன்.

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Friday, October 06, 2006

மரணதண்டனைப் பதிவுகள்

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை 'தேன்' தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.

ஜெயபாலின் கவிதை - மரணம் தண்டனையா?

கொஞ்சம் லைட் ரீடிங் - எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார்.

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

அவர் வைக்கும் கேள்விகள்

அபு மூகையின் ஆதரவு - பொதுவாக இஸ்லாமியப் பதிவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பதிவிடுவதில்லை எனும் எண்ணத்தை மாற்றும் பதிவு. தேச பக்தியும் வெளிப்படுகிறது இவரின் வார்த்தைகளில்.

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த
நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!


ஆணித்தரமாகச் சொல்கிறார்.

நுனிப்புல் உஷாவின் எண்ணம் - மரண தண்டனைக்கு எதிராக சில கருத்துக்களை வைக்கிறார். எதையும் வாதமாக தீர்மானமாகச் சொல்லாமல் சில காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க
யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

சிந்திக்கப்படவேண்டிய கேள்வி.

பிரபு ராஜதுரையின் அலசல் - பிரபு ராஜதுரை எனும் வழக்கறிஞர் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அலசுபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு.

ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில்
முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!
பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி
என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில்
சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?


நீதி வழங்கலை முன்வைத்து அருமையான அலசல். (இவரின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன - கவனிக்கத்தக்க பதிவர்)

நல்லடியாரின் எதிர்வாதம் - அப்சலின் கேசை விவரிக்கும் பதிவு அபு மூகையின் பதிவுக்கு நேரெதிர் எனச் சொல்லலாம். பிரபு ராஜதுரை சொல்லும் சில தகவல்கலை இவரும் சொல்கிறார். அவரைப் போலவே வேறொரு குற்றத்தைக் காட்டி அவர்களுக்கு தண்டனை எப்போது எனக் கேட்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம்
போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு
மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம்
குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தேசத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.


சில நியாயமான கேள்விகள்.

செல்வனின் சாடல் - செல்வன் வழக்கமான உணர்ச்ச்சிவசத்துடன் அப்சலின் தண்டனை நிறைவெற்றப் படவேண்டுமென்கிறார். பிறநாடுகளின் நிலமை இந்தியாவில் இல்லையாதலால் மரணதண்டனை இங்கே செயல்படுத்தப்படவேண்டும் என்பது இவரின் வாதம்.

இந்த மாதிரி சமூகத்தில் மரண தண்டனை தேவையில்லை. அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு புனித பிம்ப வேசம் கட்டி உலகத்துக்கு "மரணதண்டனை தப்பு" என உபதேசம் செய்வான். லிஸ்பனில் தினமும் 10 குண்டு வெடிக்கும் சூழ்நிலை இருந்தால் அவன் மரணதண்டனை மட்டுமல்ல, சித்ரவதையையே கூட கொண்டுவருவான்."ஐரோப்பாவை பார்" என முழக்கமிடும் அறிவுசீவிகள் அங்கிருக்கும் சூழலுக்கும் இங்கிருக்கும் சூழலுக்கும் வித்யாசம் தெரியாதவர்களல்ல . இங்கே மரண தண்டனை ரத்து செய்தால் அடுத்த வினாடி என்ன நடக்கும்? ஒரு நாலு வருஷம் இந்த அப்சல் ஜெயிலில் இருப்பான். அப்புறம் தீவிரவாதிகள் ஒரு விமானத்தை கடத்துவார்கள். உடனே இந்த அறிவுசீவிகள் "தீவிரவாதியை விடுதலை செய்" என ஒப்பாரி வைப்பார்கள்.

அதிகபடியான உணர்ச்சிவசம்.

பிரபு ராஜதுரையின் கருத்துக்கள் மிகவும் நியாயமானதாகப் படுகிறது. மரணதண்டனையே வேண்டாம் என்பது என் வாதமல்ல. சில கேடுகட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவே வேண்டும். அதேசமயம் சட்டம் எல்லோருக்கும் சமமானதாய் செயல்படவும் வேண்டும். சட்டத்தின் கடமை பழிவாங்குவதல்ல.

பின்சேற்கைகள்

பாபா தந்த சில சுட்டிகள்

1. மெய்கீர்த்தி: அப்சலை தூக்கில் போடுவது தான் சரி

2. E-Tamil : Points to ponder against Capital Punishment

3. கண்ணோட்டம்- KANNOTTAM: மரண தண்டனையா, மன்னிப்பா ?

4. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! - ROSAVASANTH :: பொதுப்புத்தி

5. முத்து(தமிழினி) - அப்சலை தூக்கில போடுங்கடா

6. கோவி.கண்ணன்(GK) - மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!

7. அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள் - என்றென்றும் அன்புடன் பாலா

8. அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்! - நா. ஜெயசங்கர்

9. குழலி - நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

10. லக்கிலுக் - 1

11. லக்கிலுக் - 2

12. we the people

13. பெனாத்தல் சுரேஷ்

14. ராஜபாட்டை.

15. சிந்தாநதி

16. வலை

17. யெஸ். பாலபாரதி

Thursday, September 28, 2006

நரகாசுரன் - SP.VR.SUBBIAH

சுப்பையா ஐயாவின் படைப்பு பின்னூட்டமாக இடப்பட்டது பதிவாய் உங்கள் பார்வைக்கு,

இந்த வாரத் தலைப்புக்காக

'நரகாசுரன்'

சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் - இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி

அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!

நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!


- SP.VR.SUBBIAH

Monday, September 11, 2006

தீட்டு

திரு அவகளின் 'மாடு தீண்டலாம் ஆடு தீண்டலாம்' பதிவில் பா(சா)டல் ஒன்றை பதித்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே.

மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் - நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? - இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.

கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் - சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? - இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?

தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக - மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? - அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?

எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் - இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.





Friday, September 01, 2006

லிஃப்ட்

சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது. உருவங்கள் செம்மையாகத் திரிக்கப்பட்டு வண்ணங்கள் வழிந்தோடும் ஒரு நவீன ஓவியமாய் கானல் வரைந்த கோலங்களை வியப்போடு ரசித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.

முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.

"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.

எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.

"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'

"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.

வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.

'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா

'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி

'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா

கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.

வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.

அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.

அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.

அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.

"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.

"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.

'நல்லவந்தான்'.

"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."

"வாங்க."

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.

"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.

"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"

"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."

"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."

"தேவியா?"

"ஆமா."

உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.

'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.

புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.

பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.

"ரெம்ப நன்றிப்பா?"

"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.

வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'

பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.

சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.

Monday, July 24, 2006

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

மரபுகளை உடைத்தெறியத் தூடிக்கிறோம் நம்மில் பலர். புரட்சிகரமான கருத்து, வரவேற்வேண்டிய முயற்சி. ஆனால் யாரின் மரபுகளை நாம் உடைத்தெறியத் துடிக்கிறோம் என்பது பெரிய கேள்வி.

அடுத்தவரின் மரபுகளை உடைத்தெறிந்து நம் மரபுகளைத் திணித்து
நிலைநிறுத்தச் செய்யும் முயற்சிக்குப்பெயர் மரபுடைத்தலா?

மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?
சிதம்பரம் விஷயத்தில் முதல்வர் சொல்லியிருப்பதுபோல சட்டப்படி உரிமை யாருக்கு உள்ளதோ அதை அவருக்குத் தருவதே நியாயமாகும்.

பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.

அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்குகளே நமக்குப் பெரிதாய் படுகிறது நாமே நமக்குச் செய்யும் துரோகங்களை நாம் எண்ணிப்பார்க்கும் நாள் எந்நாளோ? நம் வீட்டுக் குப்பையைப் பெருக்கி தெருவில் போடும் பழக்கம் எப்பத்தான் போகுமோ?

தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.

அடுத்தவர் மரபுகளை மாற்றத் துடிப்பவர்கள் தன் மரபுகளை சுய ஆய்வு செய்து களையவேண்டியவற்றை களைந்துவிட்டு வரவேண்டும்.

பலரும் தமிழ் நாடு தனி நாடென்றே நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் பேசிவிட்டால் எவ்வளவு வசதியாயிருக்கும் எனவும் கனவு காணலாம் சிலர்.

குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.

இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை.

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

Sunday, June 25, 2006

வெறுப்பு

என் சதையைக் கிழிக்கும் சாட்டையடி சத்தத்தில்
என் காதுகள் செவிடாயின...
'கட்டவிழ்' எனும் என் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை.
பலகாலம் பலபேரை அடித்துக்கொண்டிருக்கிறான்
இவன் காதிலா நம் முனகல்கள் விழும்?

என் உடல் துளைக்கும் தோட்டாக்களை விடவும்
அவன் இதயம் கடினமானது

என் இரத்த மை கொண்டு
என் உடலிலேயே எழுதுகிறான்
"நீ ஈனன் என்று".

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து
இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று
கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,

அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

Thursday, March 23, 2006

தடங்களை பதிக்கிறார்

கல்வி நிறுவனங்களில் தலமைப் பதவிக்கு சண்டை போட்டுக்கொண்டும், எப்ப வெளிநாடு போகலாம் என எண்ணிக்கொண்டும், தன் மந்தைகளை மட்டுமே மேய்த்துக்கொண்டும் பல பாதிரியார்கள் தம்மைச் சுர்றி வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்நாளைக் கழித்துவிடுகிறார்கள்.

பாதர் - தமிழில் அருட்தந்தை - அடைக்கல ராசா மேற்சொன்ன விதிகளுக்கு விலக்காகத் தெரிகிறார்.

தான் இலங்கைத் தமிழர்களோடு வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழப் போரின் விளைவுகளைப் பற்றியும், போரின் சமூக (அரசியல்?) கூறுகள் பற்றியும் பதிவு ஒன்றை எழுதுகிறார்.

ஈழப் போர் பற்றி முழுமையான அறிவோ உணர்வோ எனக்குக் கிடையாது. இலங்கைத் தமிழ் நண்பர்களின் பதிவைப் படித்துப் பல தகவல்கள் அறியமுடிகிறது. இதோ இன்னுமொரு 'வெளியாள்' கோணத்தில் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஒரு முகம் காணக் கிடைப்பது பற்றி மகிழ்ச்சி.

தந்தை அடைக்கல ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தடங்கள் படிக்க இங்கே சுட்டவும்.

சிறில் அலெக்ஸ்