.

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, July 30, 2007

மைதாஸ் - திண்ணையில் வந்த சிறுகதை

மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். 'இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்' யோசித்தார்.

"தம்பி ரிக்சா வருமா?"

"எங்க சார்?"

"எக்மோர்."

"ஸ்டேசனுக்கா?"

"ம்."

"வாங்க."

அதுவரை சைக்கிள் ரிக்சாவிலேயே ஏறியதில்லை ஜேசுராஜன். துருபிடித்த பாகங்களில் எண்ணை வைத்து தேய்த்ததில் தீபாவளி காலையில் ஜட்டியுடன் சுற்றும் சிறுவர்களைப் போல ரிக்சா முழுவதும் எண்ணை வழிந்துகொண்டிருந்தது. ரிக்சாவின் இருக்கையில் போடப்பட்டிருந்த 'மெத்தை'யின் ஓட்டைவழியே தேங்காய் நார்த்தும்புகள் குத்திவிட்டதில் எரிச்சல் அதிகமானது. சில அரசு பேருந்துகளின் இருக்கைகளை நியாபகப் படுத்தியது. பார்க்க மெத்தைபோலத் தெரியும் ஒரு பொருள் இத்தனைத் திடமாக இருப்பது ஏமாற்றமளித்தது.

'விழாக் கமிட்டிக்காரனுவளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. ஆட்டோ செலவுக்கு காசு தந்தா என்னா? டொனேசனக் கொண்டு குடுத்தா மட்டும் வாயப் பொழப்பானுவ' நொந்துகொண்டார்.

"இன்னா வெயிலு சார்?" ரிக்சாக்காரர் உரையாடலை ஆரம்பித்தார்.

"ஆமாப்பா."

'இவனோடு என்ன பேசுவது?' சலிப்புடன் நினைத்தார் ஜேசுராஜன்.

"எங்க ஊர்ல நல்ல மழ." ஏதாவது பேசலாமெனத் தொடர்ந்தார்.

"இன்னா ஊரு சார்?"

"தூத்துக்குடி பக்கத்துல..."

"மைக்கேல்தாஸ் ஊரா நீங்கோ?"

"ஆமா. மைக்கேல்தாசத் தெரியுமா?"

"ஆமா சார். அவர் வீட்டாண்டதான் நம்ம குடிச கீது. எம்பொஞ்சாதி மைக்கில்தாஸ் வூட்லதான் வேலைக்குப் போவ்து. ஒரு பத்து வர்சமாத் தெரியும் சார். அல்லாரும் ஒரே கோயில்தானே."

"நீ க்ரிஸ்டீனா?"

"ஆமா சார்." கழுத்திலிருந்த செபமாலையை இழுத்துக் காண்பித்தான். அதில் நூல் முழுவதும் அழுக்காயிருந்தது. சில மணிகள் உடைந்திருந்தன. சிலுவையில் பாதியில்லாமல் இருந்தது. "பேரு சிலுவப்பிச்ச. மாதாக் கோயில்ல வெள்ளக்கார சாமியாரிருந்தப்பவே எங்க தாத்தாவெல்லாம் க்ரிஸ்ட்டீனாயிட்டாங்க."

ஜேசுராஜனுக்கு கொஞ்சம் சலிப்பாயிருந்தது. வெயிலா, சாக்கடை நாற்றமா, வாகனப் புகையா, விழாக்கமிட்டியா அல்லது சிலுவைப்பிச்சையா எனத் தெரியவில்லை, ஏனோ அவருக்கு எரிச்சலாயிருந்தது.

"இன்னும் எவ்ளோ நேரமாவும்பா?"

"ஒரு பாஞ்சு நிமிஷமாகும் சார்."

'பதினஞ்சு நிமிஷம்ணா ஆட்டோவுலேயே போயிருக்கலாமே?' யோசித்தார்.

"மைக்கில் தாச இன்னா விஷ்யமா பாக்காந்த சார்?"

"எங்க ஊர் மாதாவுக்கு தங்கக் கிரீடம் செய்யுறோம். நன்கொடை வாங்கலாம்ணு வந்தேன். மகராசம்பா மைக்கில,் அள்ளிக் குடுக்கிறாரே"

மைக்கில் தாசைப் பற்றிய பேச்சு அவருக்கு திடீர் உற்சாகத்தை தந்தது.

"மாதாவுக்கு தங்க கிரீடமா?" பீடியை பற்றவைத்துக்கொண்டு சிறிது இருமினான் சிலுவைப்பிச்சை.

"ஆமா. எங்க ஊர் கோயிலக் கட்டி 30 வருசமாவப்போது. அதுக்குத்தான். ஊருக்குண்ணா அள்ளிக் குடுப்பாரு மைக்கிள்தாஸ். எங்க ஊர்ல அவர மைதாஸ்னுதான் சொல்வோம்."

"மைதாஸ்னா?"

"மைதாஸ் தெரியாதா?"

"இதெல்லாந் தெரிஞ்சா எதுக்குசார் நானு ரிச்சாவ்ல கெடந்து சாவ்றேன்?"

"மைதாஸ் கதை தெரிஞ்சுட்டா கலெக்டர் வேலையா கெடைக்கும்?"

"சர்தான். கலாஞ்சுட்ட போ". சப்தமாய் சிரித்தான் சிலுவைப் பிச்சை. பேச்சின் சுவாரஸ்யத்தில் மூலத்தைக் குத்தும் எரிச்சல்கள் மறக்க ஆரம்பித்திருந்தன ஜேசுராஜனுக்கு.

"மைதாஸ்ண்றது ஒரு கதையில வர்ற ஆளு."

"ஓகோ."

"அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்."

"எப்டி அது?"

"ஒரு தேவத மைதாசுக்கு என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம்.. அவன் தான் தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு கேட்டானாம். அதுபோல சாதாரண ஒரு ஏழக் குடும்பத்துல பொறந்த மைக்கேல் தாஸ் இண்ணைக்கு இத்தன பிசினஸ், காரு பங்களான்னு கொடிகட்டி பறக்குறாண்ணா அவன் தொட்டதெல்லாம் பொன்னாகுதுண்ணுதானே அர்த்தம். இங்க்லீஸ்ல இத மைதாஸ் டச்னு சொல்வாங்க."

"நீ வாத்தியாரா சார்."

"ஹெட்மாஸ்டர்."

"அதான் சோக்கா கத சொல்ற. அப்பால என்னாச்சு?"

"ம். அப்புறம் என்னாச்சு மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாச்சு."

"என்ன கத பாத்தியா சார்? கஷ்டப்பட்டு ஒழச்சு சம்பாதிக்கிறமாதிரி எவ்னாவது கத எய்தி வெச்ருக்கானா சார். அல்லாம் ஏதோ மேஜிக்ல ஒசந்துரலாம்ணுதான் கத வெச்ருக்கான் சார்."

இப்படி ஒரு கோணத்தில் மைதாஸ் கதையை ஜேசுராஜன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

"நான் முழுசா ஒனக்கு கத சொல்லலியே? வரம் வாங்குன மைதாஸ் தோட்டம், வீடுன்னு எல்லாத்தையும் தொட்டான். எல்லாம் தங்கமாயிடுச்சு. இன்னும் இன்னும்ணு என்னவெல்லாம் அவங் கண்ல பட்டுச்சோ எல்லாத்தையுந் தொட்டான் எல்லாமே தங்கமாய்ச்சு. சந்தோசத்துல சாப்ட உக்காந்தான்."

"புரியுது சார்? சாப்பாட்ட தொடங்காட்டியும் சாப்பாடும் அப்டியே தங்கமாயிருக்கும்."

"ஆமா. சாப்பாடு தங்கமானா எப்டி சாப்டுறது? பட்டினியாயிருந்தான். அவன் பொண்டாட்டியத் தொட்டான் அவ தங்கச் செலையானா, அவன் மகளத் தொட்டான் அவளும் தங்கமாயிட்டா. அப்புறந்தான் மைதாசுக்கு வாழ்க்கையில எது முக்கியம்ணு தெரிஞ்சுது."

சென்னையின் சேரியிலிருக்கும் ரிக்சாக்காரனுக்கும் நல்லொழுக்கப் பாடம் சொல்லித் தந்ததில் பெருமிதம் கொண்டார் ஜேசுராஜன்.

கொஞ்ச நேரம் மௌனமானான் சிலுவைப் பிச்சை.

'ஹ்க்கும் ஹா' கிண்டலாய் சிரித்தான்.

"என்னப்பா சிரிக்க?"

"நீ சொன்னது சர்தான் சார்."

"என்னது?"

"மைக்கில்ராஜ் மைதாசேதான்."

"ஆமா சொன்னேன்ல. அவர் தொட்ட.."

"அதச் சொல்லலா சார். மைக்கில்தாஸ் ஒயிஃப் தெரியுமா?"

"ப்ரின்ஸ் டீச்சர். நல்லாவேத் தெரியும். அத்தப் பொண்ணத்தான் கட்டிப்பேன்னு கட்டிகிட்டாரு."

"ம். அந்தம்மா எப்டி செத்துச்சு?"

"தூக்கு போட்டுகிச்சு."

"எப்டின்னு தெரியுமா?"

அத்தனை விபரமாகத் தெரிந்திருக்கவில்லை ஜேசுராஜனுக்கு.

"பணம் இருந்த சூட்கேஸ் ஒண்ண எடுத்துப் போட்டு அதுக்குமேல ஸ்டூல வெச்சி தூக்கு மாட்டிகிச்சு."

"அப்டியா?"

"நாந்தான்சார் போலீஸ் வரக்குள்ள அந்தப் போட்டிய தூக்கிவச்சேன்."

ஊரில் கேள்விப்பட்டிருந்தாலும் சிலுவைப் பிச்சை சொல்வதை முழுவதாக நம்ப இயலவில்லை.

"அப்புறம் அவர் பொண்ண?" சிலுவை கேட்டான்.

"அவளுக்கு என்னாச்சு ."

"அவர் பொண்ண யாருக்கு கட்டிக் குடுத்தாரு தெரியுமா?"

"அற்புதம் டிராவல்ஸ் பையனுக்கு."

"அந்த நேரத்துல மைக்கில்தாஸ் பிசினஸ் படுத்துட்டதால அந்தப் பையனுக்கு கெட்டி வச்சாரு. காசு சார். காசு. அற்புதத்தோட பையன் ஊதாரி சார். மைக்கில்தாசுக்குந்த் தெரியும் ஆனா அற்புதம் பிசினஸ்ல பைசா போடுறேன்னு சொன்னாங்காட்டியும் கல்லாணம் நடந்துச்சு."

"ஓகோ."

"மாதா செல மாறி இருக்கும் சார் அந்தப் பொண்ணு. கல்யாணத்துக்கப்பால ஒரு நாகூட சந்தோசமாயில்ல சார். எம் பொஞ்சாதி எங்கிட்ட வந்து அழும்.

நீ சொன்னது சர்தான் சார். மைக்கில்தாஸ் மைதாஸ்தான். பணம் சேக்குறதுலேயே குறியா இருந்தான்.. குடும்பத்த முள்சா மறந்துட்டான்."

அதற்குப்பின் அவனோடு பேச இயலவில்லை ஜேசுராஜனால். சிலுவைப் பிச்சையும் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தான். வாகன இரைச்சலுக்கிடையே அவர்களுக்குள்ளிருந்த மௌனம் தெளிவாகக் கேட்டது.

"சார். ஸ்டேசன் வந்தாச்சு."

ரிக்சாவிலிருந்து இறங்கினார் ஜேசுராஜன்.

"எவ்வளவுப்பா?"

"வழக்கமா இர்வது ரூபா வாங்குறது. பாஞ்சு ரூபா தாங்க சார். ஒங்க ஊர் மாதாவுக்கு எம் பேர்ல 5 ரூபாய் டொனேசன்." சிரித்தான்

மைக்கிள்தாசின் ஐம்பதாயிரம் ரூபாய் செக் இருந்த கவர் கைப்பையில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டார் ஜேசுராஜன். அந்த வெள்ளைக் கவரில் இருந்த அழுக்கு அப்போதுதான் அவர் கண்ணில் பட்டது.

============================================


நன்றி: திண்ணை

Thursday, June 28, 2007

மூத்திரக் குழி - சிறுகதை

மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல நாங் கேட்டது. வெத்தில போட்ட எச்சி தெறிக்க பாம்படக் கெழவி சொல்வா பாருங்க கத... சாய்ங்காலம் ஆத்தா தேடி வார வரைக்கும் அங்கனையே கெடப்போம்.

"அப்ப, கட்டபொம்மனுக்கு சமுத்திரம்னு ஒரு எதிரி இருந்தாம்." கெழவி சொல்லும். "சமுத்ரம் ஒரு கள்ளன். ராவெல்லாம் போய் களவாண்டுட்டு காலையில காணாமப் போவாங். கட்டபொம்மனுக்கு சேதி போச்சு. சமுத்திரத்த புடிக்க மாறுவேசத்துல அலஞ்சான் கட்டபொம்மன்.

ஒருநா சமுத்ரம் களவாணப் போவையில அங்கன ஒரு அழகானப் பொம்பளயப் பாத்தான். அழகுன்னா அவ்ளோ அழகு. கன்னமெல்லாம் பூப்போல இருந்துச்சு. கண்ணெல்லாம் வண்டுபோல ஓடுச்சு, அவ நடையும், ஒடையும்.. சமுத்ரம் மயங்கிட்டான். அவள எப்டியாவது புடிச்சிரணும்னு பின்னாலேயே போனாங். கொஞ்ச தூரம் கடந்த பொறவுதான் சமுத்திரம் கட்டபொம்மங் கோட்ட வாசல்ல வந்திருக்கோம்னு தெரிஞ்சுகிட்டான். அந்த அழகான பொம்புள கட்டபொம்மந்தான். அப்புறம் தப்பிக்க ஏலுமா?

பிடிபட்ட சமுத்ரத்துக்கு மரணம்னு விதியாச்சு. நம்ம மூழி மல இருக்குல்லா அந்த மல உச்சிலதான் அப்ப தலைய வெட்டுத மேட இருந்துச்சு. சமுத்ரத்துக்க கடசி ஆச என்னான்னு கட்டபொம்மங் கேட்டான். எந்தலய வெட்டும்போ அது எங்கன வுழுதொ அங்கன என்ன பொதைக்கணும்னான் சமுத்ரம். அட இவ்ளோதானான்னு சரிண்ணாங் கட்டபொம்மன். நெறஞ்ச பௌர்ணமி ராவுல ஊரே கூடி நின்னு பாக்கையில சமுத்ரந்தலய வெட்னான் ஏவலாளு. தல உருண்டு கீழ உளுந்துச்சு... அது கீழ அங்கன உளுந்து கெடக்கும்னு பாத்தா...தல மலையில உருண்டு கீழ வந்துட்டே இருந்துச்சு.. எல்லாரும் பின்னால ஓடியாராவ. தல உருளுது உருளுது உருண்டுட்டே இருக்கு. எல்லாருக்கும் ஆச்சரியம்ணா ஆச்சரியம். கடேசியா தல உருண்டு இங்க மூத்ரக்குழில இருக்க கெணத்துல வுழுந்துச்சு. கட்டபொம்மனும் அவங் கடேசி ஆசைய நெறவேத்தணுமேன்னு கெணத்துல பொணத்தபோட்டு மூடிட்டாங். அண்ணையிலேந்து அந்த எடத்துக்கு பேரு சமுத்ரக் குழின்னு ஆச்சு. நல்லா தண்ணி வந்துட்டிருந்த கெணத்துல தண்ணியே இல்லாம போச்சு. சமுத்ரக்குழிதான் பொறவு மாறி மாறி மூத்ரக் குழின்னு ஆச்சு."

பாம்படக் கெழவி சொல்லுத கதயில அந்தக் கெணறு இருக்கது மட்டுந்தான் உண்ம. கெழவிக்கு எப்டி இந்த கத தெரியும்னு யாருக்குந்தெரியாது. அவளா உண்டுபண்ணதா இல்ல அவளுக்கும் யாரோ சொன்னாவளான்னு யோசிச்சிருக்கேன். பாம்படக் கெழவி செத்தண்ணைக்கு இநதக் கதையுஞ் செத்துபோச்சி.

எங்க ஊர்ல வெளிக்குப் போற எடந்தாங்க மூத்திரக் குழி. சமுத்ரக் குழிங்கறதெல்லாம் கட்டுக்கத. கிராமத்துல கக்கூசா இருந்துச்சு? பக்கத்து ஊர்லயெல்லாம் அவனவன் வெளையில போயிருவானுவ. எங்க ஊர்ல வெளையெல்லாங்கெடையாது. ரெண்டே ரெண்டு பெரிய தெருதான். ரெண்டு தெருவுக்கும் நடுவுல மூத்ரக்குழி. சின்னக் குழியில்ல அது பெரிய எடம். காடு வளந்து கெடக்கும். பொதருக்கு நடுவுல பாழடஞ்ச கெணறு. கெணத்த தூரத்திலேந்து பாக்கத்தான் முடியும். பக்கத்துல போவமுடியாத அளவுக்கு முள்பொதரு. பாம்பும் ஓணானும் ஓடும். ராத்ரில ஒருத்தனும் போமுடியாது. அதுக்கு இருட்டு மட்டும் காரணமில்ல. மாடங்கோயில் பூசாரி சொல்த கததான் முக்கியமான காரணம்.

"திருவாங்கூர் மகாராசங்கிட்ட கரியாளுண்ணு ஒரு மந்த்ரவாதி இருந்தாங். மகா கெட்டிக்காரெய்ன். அவனுக்குத் தெரியாத மாந்த்ரீகமே கெடையாது. மழ வேணும்னா கொண்டு வருவான், போர்ல செயிக்கவெப்பாங், நோயக் கொணமாக்குவான், கரியாள் இருந்தவரைக்கும் மகராசாவுக்கு எதிரிண்ணு ஒருத்தனுமில்ல. நான் சொல்லுதது ஒரு அஞ்நூறு அறநூறு வருசத்துக்கு முன்னால. மனுசனுக்கு எந்த ஆச வந்தாலும் தப்பிச்சரலாம் பெண்ணாச வந்துச்சுண்ணா?" கண்ண உருட்டிட்டு எச்சரிக்கமாறி கேப்பாரு. "கரியாளு மகாராசாவுக்க மக மேல ஆச வச்சாங். அவள யாருக்குந்த் தெரியாம, அவளுக்கே தெரியாம மந்திர சக்தியால அடஞ்சான். அவளுக்கும் கொளந்த உண்டாச்சு.

மகாராசா யாரையெல்லாமோ சந்தேகப்பட்டாரு ஆனா கரியாள மட்டும் சந்தேகிக்கவேயில்ல. அவ்ளோ நம்பிக்க, பாசம். கரியாளு நேராக் கேட்ருந்தா மகளக் குடுத்ருப்பான் ராசா. கோவத்துல ராசா கரியாளக் கூப்டான். எம் மவளுக்கு இதச் செஞ்சவன் அணுவணுவா சாவணும்னாம். கரியாளுக்கு அரசனுக்குத் துரோகம் பண்ணிட்டோமேன்னு வருத்தமாப் போச்சு. நேரா போனான் அரசன்ட. 'ராசா ஒம்ம மவளக் கெடுத்தவன அழிக்கப்போறேன். ஆனா நம்ம நாட்டு எல்லைய உட்டு வெளியப் போனாத்தான் இதச் செய்யமுடியும். எனக்கு ஒரு குதிர தா'ண்ணான். ராசா குதிரயக் குடுத்தான். அன்னைக்கு ராத்ரி கரியாளு குதிரயில ஏறி நம்மூரு மூத்ரக் குழிக்கு வந்தான். அங்க வச்சி அவனோட பூசைய ஆரம்பிச்சாங். மந்திரஞ் சொல்லச் சொல்ல அவன் ஒடம்பு கொஞ்சம் கொஞ்சமா அழிய ஆரம்பிச்சுச்சு. இதுக்கெடையில ராசாவுக்கு சந்தேகம் வந்துச்சு. கரியாளு ஏன் எல்லைய விட்டுப் போறாண்ணு அவன் போன தெசைக்கு அவனத் தேடி வந்தாரு.

ராசா வரச்ச பூச உச்ச கட்டத்துக்கு போயிட்டிருக்கு. வேண்டாம் வேண்டாம்னு கெஞ்சுறாரு ராசா. ஆனா... கரியாளு ஒடம்பு அழிஞ்சுபோச்சு. கரியாளு மந்த்ரவாதி செத்த பெறவு அவனோட மொத்த ஆயுதமெல்லாம் அங்கனையே சுத்திட்டிருக்கு. ராத்ரியில அங்கன சத்தங் கேக்கதும், கூத்தும் கும்மாளமும் நடக்கதும் அதுக செய்யதுதாம்ப்டே."

பூசாரிக் கத சொல்லையில அவரு மொகத்தப் பாத்துக் கேட்டியண்ணா இன்னும் பயந்துருவிய. கெடா மீச ஆடும், அவரு புருவமே மெரட்டுத மீசதான், பெரீய கிர்தா, நீண்ட தலமுடி தேகமெல்லாம் முடி, கம்பீரமான ஆளு. ஒரு கட்டத்துல கண்ண ஒரு உருட்டு உருட்டுவாரு, அப்பவே கரியாளு இவர்தானோண்ணு தோணும்.

மந்த்ரவாதியோட ஆயுதம்ணா கத்தி கபடாயெல்லமில்ல. அதெல்லாம் குட்டி பிசாசுவ. அவன் ஏவலுக்கு காத்துருந்து சொல்றதச் செய்யுற குட்டி பிசாசையெல்லாம் ஆயுதம்ணு சொல்வாவ.

நான் சின்னதாயிருக்கும்போ ஊர் தெருவுல வெளக்கெல்லம் கெடையாது. ஏழுமணிவாக்குல செமையா இருட்டிரும். அங்கன பண்ணையார் வீட்டு முத்தத்ல லாந்தருக்கு கீழ ஒக்காந்து ஊர் பிள்ளவ எல்லாம் படிக்கும். அந்த இருட்ல மூத்ரக்குழி பக்கம் யார் போவா? அதனால கரியாளு கதைய ஊர்ல நம்பவேண்டியதாத்தான் போச்சு.

இதுல அவனவன் கற்பனையும் சேந்துரும். நேத்து ராத்ரி பனமரம்போல ஒரு ஆளு நட்ந்து போச்சுண்ணு ஒருத்தஞ் சொல்வான், இன்னொருத்தன் முதுவுல யாரோ அடிச்ச மாறி இருந்துச்சு, திரும்புனா யாருமேயில்லம்பான், அந்தப் பக்கம் போனா எருக்கம் வாசன வருதும்பான், ஒருத்தஞ் சூடம்ணு சொல்வாங். ஆனா எனக்கு நம்பிக்கயில்லாமயிருந்துச்சு, எந்தாத்தா சாவுற வரைக்கும்.

அப்போ எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். 1965ன்னு நெனைக்கேன். விடியக்காலம். எங்க ஆத்தா ஒப்பாரி சத்தம் கேக்க முழிச்சேன். "எல ராசா. ஒங்க தாத்தா மூத்ரக் குழியில செத்து கெடக்காம்."ணா. எப்டி ஓடுணேன்னே தெரியாது புதரத்தாண்டி கல்லு முள்ளு பாக்காம ஒட்டிப் போனேங். கெணத்தடி பொதருக்குள்ள தாத்தா செத்து கெடந்துச்சு. வாயில கொஞ்சம் ரத்தம் ஒறஞ்சுபோயிருந்துச்சு. கண்ணு பெருசா யாரையோ பயத்துல வெறிச்சு பாத்தமாறி, கழுத்துல கருஞ்செவப்பா தோலு சுருங்கியிருந்துச்சி. எங்கப்பா கல்லுல உக்காந்து அழுதிட்டிருந்தாவ. என்னக் கூப்ட்டு பக்கத்துல நிக்கவச்சி கட்டி புடிச்சாவ. "தாத்தாவப் பாத்தியால?"ண்ணு அழுதுட்டே கேட்டாவ. பெறவு விசும்பிட்டே இருந்தாவ.

ஊரெல்லாம் இதாம் பேச்சு. மாவெளையான் பேய் நெரிச்சு செத்துட்டாண்ணு சொன்னாவ. அண்ணையிலேந்து இருட்டுனதுக்கப்புறமா மூத்ரக்குழி பக்கமே போமாட்டேன். தாத்தாவ பேயடிச்சுச்சுன்னு ஊர்ல எல்லாரும் இண்ணை வரைக்கும் பேசுவாவ.

ஒரு நாலு வருசத்துக்கு முன்னால ஒரு தற்கொல கேஸ் விசயமா பெரியாஸ்பத்ரி பொண அறைக்குப் போவேண்டியிருந்துச்சு. அங்க டாக்டர் நமக்கு தெரிஞ்ச ஆளு. ரெண்டு மூணு கேசக் காமிச்சாரு. அப்ப ஒரு பொணத்த பாத்தேன். அப்டியே எந்தாத்தா செத்த கணக்குலேயே கெடந்துச்சு. அதே முழி, வாயில ரத்தம் எந்தாத்தனுக்கு கழுத்துல இருந்தாப்ல செவப்பா தடம். டாக்டர்ட கேட்டேன் 'என்ன கேஸ் இதுண்ணு'. 'கழுத்த நெரிச்சு கொன்னுசுக்காங்கப்பா'ண்ணாரு. மூத்ரக்குழி பேயடிச்சு எந்தாத்தா செத்ருக்க வாய்ப்பில்லண்ணு தெரிஞ்சது. எந்தாத்தா செத்து கொஞ்ச நாள்லயே அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் தகறாறாயிருந்துச்சு. கூட்டி கழிச்சா தாத்தாவக் கொலதான் செஞ்சிருப்பானுவ. ஊர்ல இருந்த பேய் பயத்துல இதையெல்லாம் யாரு பாக்கா. அப்ப போலிஸ் ஸ்டேசனெல்லாம் டவுன்லதான் இருந்துச்சு. ஊர்ல வெட்டு குத்துன்னாலே போலிசுக்கு தெரியாது. கெழவன் செத்ததையா பாக்கப்போறானுவ? யாரு கொன்னதுண்ணு இப்பவா தேட முடியும்? எங்கப்பனாகூட இருக்கலாம்.

அந்த நாத்தம் புடிச்ச மூத்ரக் குழிக்கு இத்தன கதையாண்ணு யோச்சிச்சிருகேன். மாதாக் கோயில் சாமியார் ஒருத்தருண்டு. பேரு எரோணிமூஸ். பக்தியான ஆளு. எங்ககிட்ட நல்லா பழகுவாரு. அவர் காலத்துலதான் மாடன் கோயில் திருநாளைக்கு கீழ தெருவுல மாதா கோயில் வரைக்கும் லைட் போடுத பழக்கம் ஆரம்பிச்சுது. அவரு ஒரு மூத்ரக் குழி கத சொல்வாரு.

1600வாக்குல இங்கனோடி ஒரு வெள்ளக்கார சாமியாரு வேதம் பரப்பிட்டே போனாராம். அவரு இங்கோடி வரையில பயங்கர தாகம் எடுத்துச்சாம். அப்ப மூத்ரக்குழி இருக்க எடத்துலயெல்லாம் வயக்காடாம். வயலுக்கெல்லாம் அங்க இருந்த ஒத்தக் கெணத்துலேந்துதான் தண்ணியடிப்பாவளாம். அப்ப அந்த சாமியாரு இந்த கெணத்துபக்கமா வந்து தண்ணி கேட்ருக்காரு. ஆனா ஊர்க்காரனுவெல்லாஞ்சேந்து தண்ணி குடுக்கமாட்டேன்னுட்டாவ. அந்த சாமியாரும் கண்ண மூடிட்டு மந்திரம் சொல்லிட்டு சிலுவையத் தூக்கி காட்னாராம். எல்லார் கண்ணுமுன்னாலயும் கெணத்து தண்ணி வத்திப்போச்சாம். அண்ணையிலேந்து அந்தக் கெணத்துல தண்ணியிலாமப் போவ, வயக்காடெல்லாம் கருவேலங்காடாச்சுன்னு சொல்வாரு எரோணிமூஸ்.

இந்தக் கத நல்லாயிருக்கேண்ணு நம்ம இஞ்சினியர் பயகிட்ட கேட்டேன். ஒரு சிரி சிரிச்சான். "மாமா. இந்த எடத்துல வயக்காடு இருந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்ல. அந்தக் கெணறு இருக்கே அது தோண்டி, இங்க தண்ணி வராதுண்ணு பாதில மூடிட்டானுவ. இப்பவும் அங்கோடி தேடுனா தண்ணியே கெடைக்காது"ம்பான்.

இப்டியாபட்ட மூத்ரக்குழி, என் தாத்தனுக்கு நெனவு தெரிஞ்ச நாள்லேந்தே ரெண்டு தெரு மக்களும் காலையில வெளிக்கு ஒதுங்குற எடமாத்தான் இருந்துச்சு.

அவனப் புடிச்சி இவனப் புடிச்சி 11 வருசத்துக்கு முன்னால, எங்க ஊர்வழியா பஸ் வுட்டானுவ. பஸ்ல வர்ற போற வெளியாட்கள் எல்லாரும் இந்த எடம் வந்துச்சுண்ணா மூக்கப் போத்திக்கிருவானுவ. எங்களுக்கு சங்கடமாயிருந்தாலும், ஊர் பயவ ஒதுங்க ஒரு எடம் வேணுமே?

அப்ப ஒருநா, நம்ம மஸ்கத் பண்ணையார் அங்க ரோட்டோரமா சைக்கிள உருட்டிட்டு வந்தாங். பண்ணையார்னா யாரோ எவரோன்னு நெனைக்காதிய. எங்கூட படிச்ச பய. கஞ்சப்பய. அப்பந்த் தாத்தன் சேத்துவச்ச சொத்த வச்சு பொழப்பு நடத்துதான். ஆனா எங்கூட நல்லா பழகுவான். வேல வெட்டி இல்லாததால சைக்கிள்ள போயி தோப்பு தொறவ பாத்துட்டு எங் கடைக்கு வந்து கத பேசுததுதான் அவன் பழக்கம். எதுல உட்டென்.. ஆங் பண்ணையாரு சைக்கிள உருட்டிட்டு வரும்போது 19ஆம் நம்பர் பஸ்லேந்து எவனோ மூத்ரக்குழியப் பாத்து காறித் துப்பிட்டான். அது நேரா மஸ்கத் பண்ணையார் மூஞ்சில போய் பட்டுச்சு. அண்ணைக்கு கடைக்கு வரும்போதே கெட்டவார்த்தயால அறுத்துட்டே வந்தான். எல என்னாச்சுண்ணேன். சொன்னாங். 'இந்த மூத்ரக் குழிய தூக்கணும்ல'ண்ணான்.

நானும் அவனும் போயி எம் எல் ஏவப் பாத்து பேசுனோம். அவன் பண்ணையாருக்கு தூரத்து சொந்தம். ரெண்டுவாரங் களிச்சு வாங்கண்ணான். போனோம். அண்ணாச்சி அந்த எடம் பூரா பொறம்போக்கு நெலந்தாண்ணான். இப்ப ஆட்கள் ஒதுங்குற எடத்த திடீர்னு தூக்க ஏலாது. அங்கன மொதல்ல ரெண்டு கக்கூஸ் கட்டுவோம். பெறவு பாக்கலாம்ணான். ரெண்டு மாசத்துல கீழ தெருவுல ரெண்டு செட்டு மால தெரிவுல ரெண்டு செட்டுன்னு அரசாங்க கக்கூஸ் கட்டி உட்டானுவ. ஊர்ல திருவிழா கணக்கா கொண்டாடுனாவ.

எம் எல் ஏ வந்திருந்தான். அப்ப ஒரு விசயஞ் சொன்னான். 'அண்ணாச்சி. இந்தப் பக்கத்துல நல்ல ஸ்கூல் எதுவும் இல்ல. ஊர்ல மூத்ரக் குழிய ஒதுக்கித் தந்தா ஒரு ஸ்கூலக் கட்டிரலாம்ணான்'. ரெண்டு தெருவுஞ் சேந்து முடிவெடுத்து இனி மூத்ரக்குழில ஒதுங்கக்கூடாதுன்னு முடிவெடுத்தோம். ஊர் கெணத்துலேந்து டாய்லெட்டுக்கு தண்ணி வசதியெல்லாஞ் செஞ்சோம். சுகாதார ஆபீஸ்லேந்து டாய்லெட்ல எப்டி போவணும்னு படமெல்லம் போட்டு காமிச்சானுவ.

அடுத்த ரெண்டு வருசத்துலேயே மூத்ரக்குழி இருந்த எடத்துல ஒரு உயர் நிலைப்பள்ளி வந்துச்சு.

அரசு உயர்நிலைப்பள்ளின்ன யாரும் அதக் கூப்பிடுறதில்ல. மூத்ரக்குழி பள்ளிக்கூடம்னுதான் கூப்டுதானுவ.


நன்றி: தமிழோவியம்

Thursday, June 21, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் - 9

9 எனக்கு ராசி நம்பர். அதான் 9வது பாகம் எங்கிட்ட வந்திருக்கு. சிந்தாநதி சிம்பிளா ஒரு ஆரம்பத்தப் போட்டு நடையக் கட்டிட்டாரு அதன் பிறகு கதையின் கேரக்டர்கள போட்டு பதிவர்கள் பொம்மலாட்டம் நடத்திட்டு வர்றாங்க. எங்க போய் முடியப் போகுதோ. கதையின் முந்தைய பாகங்கள் இதோ..

சிந்தாநதி'யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2
CVR'ன் ஞாபகம் 3
ஜி'யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8

முன்கதை சுருக்கம்
ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

பார்த்த நியாபகம் இல்லையோ பாகம் - 9

கார் வயல்வெளிச் சாலையத் தாண்டி பிரதான சாலைக்கு வந்தது. குளிரூட்டியை இயக்கினான் வினோத். காருக்குள் மின் விசிறியின் மெல்லிய சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எண்ணற்ற கேள்விகள் நிறைந்த மௌன இடைவெளியில் வினோத்தும் பொன்னுசாமியும் வெகுதொலைவில் பிரிந்திருந்தனர்.

"மாமா." மௌன இடைவெளியின்் மோனக் கூக்குரலாய் அவன் விளிப்பு ஒலித்தது. சின்னசாமி அதற்குள் உறங்கிவிட்டிருந்தார். 'இரவு தூங்கியிருக்க் மாட்டார்' வினோத் நினைத்தான். நினைவுகள், தன் வாழ்வை மாற்றிப்போட்ட அந்த நாளை நோக்கித் திரும்பின.

"வினோத் என் ஃப்ரெண்ட் காவேரிகிட்ட வசந்த் ப்ரொப்போஸ் பண்ணப் போறான்."

"நிஜமாவா? வாவ்."

"என்ன நல்ல பொருத்தம் தெரியுமா. நம்ம விட அவங்கதான் ஐடியல்."

"அது எனக்கு அப்பவே தெரியுமே." சிரித்தான்.

"டேய். இப்ப நல்ல மூட்ல இருக்கேன் சண்டைய கெளப்பாத. நாளைக்கு ஒரு காதல் உருவாகப் போகுது. வசந்தப் பாத்தாவது ரொமாண்டிக்கா இருக்கிறது எப்டீன்னு கத்துக்க."

"ரொமான்ஸ் ஃபார் இடியட்ஸ் புக் எழுதியிருக்காரா அவரு?"

"இடியட்டுன்னு ஒத்துகிட்டியே."

"இல்லண்ணா ஒன்ன கா.... ஏ கிள்ளாத? நாம நாலு வரி பேசுனா அஞ்சாவது வரி சண்டதான்."

"நாளைக்கு ஈவினிங் ஷோ. சத்யம் காம்ப்ளெக்ஸ். காதலன். மறக்காம வா."

"ரெண்டுபேர் அசடு வழியுறதப் பாக்க கட்டாயம் வருவேன்."

அடுத்த நாள்.

"டேய் மச்சான் நான் லெட்டுடா ஏற்கனவே. உமாவப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. ப்ளீஸ் மச்சான் வண்டி வேணும்டா."

"டேய் பக்கத்துலதான் இருக்கேன் வந்துருவேண்டா?"

'என் பைக்க கேக்குறதுக்கே கெஞ்ச வேண்டியிருக்குது!'. இரவல் வாங்கிப்போன பைக் வந்து கிளம்புவதற்குள் லேட் ஆகியிருந்தது. உமா சொன்ன இடத்திற்கு வரும்போது அங்கே...அது... 'இவளா! இந்தக் காவேரியா உமா சொன்ன காவேரி?'

உமா காவேரி புராணம் பாடும்போதெல்லாம்... அவள் கவிதைகளை வாசித்தபோதெல்லாம் எப்படி புரியாமல் போனது என நொந்துகொண்டான் வினோத். தன் தோழியை மீண்டும் கண்டுகோண்டதில் மகிழ்ந்தான். 'உமாவுக்கு செம சர்ப்ரைஸ் இண்ணைக்கு.'

வசந்த் தந்த பூவைக் கையில் ஏந்தியபடி வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் காவேரி. வினோத்தா வசந்தா யாரிடம் முதலில் பேசுவது?
"வினோத்... ஏ வினோத்...எப்டி இருக்க ஆளே மாறிட்ட."

எதிரே வரும் வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கையிலிருந்த பூ ரோட்டில் விழுந்தது. எடுக்க கீழே குனிந்தவள் செருப்பு தடுக்கி ரோட்டில் விழுந்தாள். "காவேரீ..." வசந்த, உமா, வினோத்தின் கூக்குரலின் மத்தியில் தண்ணி லாறி காவேரியை இடித்து தூக்கிப் போட்டது.

ஐ.சி.யுவில் ஒரு வாரம் கழிந்தது. காவேரி சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

டாக்டர் வசந்த், உமா, வினோத்தை அழைத்திருந்தார். அறையில் இரு டாக்டர்களும் நண்பர்கள் மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
"உங்கள்ல யாராவது காவேரியோட ரிலேட்டிவா?" டாக்டர் கேட்டார்.

"இல்ல. நான் ரூம் மேட். க்ளோஸ் ப்ரண்ட். வினோத் அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட். வசந்த் அவளோட பாய் ஃப்ரண்ட்." உமா சொன்னாள்.

"ம். பைத வே. இவர் டாக்டர் மாயன். சைக்கியாட்ரிஸ்ட். பொதுவா தலையில அடி பட்டவங்களுக்கு சைகியாட்ரிக டெஸ்ட் செய்வோம்."

"எனிதிங் ராங்்்? அவ நார்மலாத் தெரியுறாளே?" வசந்த் சொன்னான்.

"ஆமா. உடல் ரீதியா ஷீ லுக்ஸ் நார்மல்."

"அப்டீன்னா?"

"ஷீ ஹாஸ் பார்ஷியல்் அம்னீஷியா."

மூவரும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

"பழசு பலதும் அவங்களுக்கு நியாபகமில்ல. அவங்க அப்பா பேரக் கூட ஒரு சில நேரந்தான் நியாபகம் வச்சிருக்காங்க. கொஞ்சம் டிபிக்கல்ட் கேஸ்தான்."

"கடவுளே." உமா கண்கள் நிறைந்திருந்தன.

"அவ நினைவுல இருக்கிற ஒரே ஆள் வினோத்தான்."

"வினோத்தா?" வசந்த் அதிர்ந்துபோனான்.

"யெஸ். பள்ளித் தோழன் வினோத். சின்ன வயசுல அவளோட அப்பாவுக்கடுத்ததா நெருங்கிப் பழகிய முதல் ஆண் வினோத். அது அவளுக்குள்ளால ஆழமான பாதிப்ப ஏற்படுத்தியிருக்கு. வினோத்தோட காதல ஏத்துக்காமப் போனதப் பத்தி ரெம்ப பீல் பண்ணியிருக்கா. அவளோட கவிதகள்ல அவ ஏங்கி அழக்கூடிய நட்பு வினோத்துடையதுதான்." டாக்டர். மாயன் தொடர்ந்தார்்.

"ஆனா பிரச்சன வினோத்த பிரிஞ்சதோ அவனோட நினைவுகளோ இல்ல? இப்ப அவ வினோத்தான் தன் காதனண்ணு நம்பிகிட்டிருக்கா. சொல்லப்போனா வினோத்த பிரிஞ்சதுலேர்ந்தே அவனோட ஒரு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப அந்த கற்கனைகள் நிஜமாயிடுச்சு. வினோத் இஸ் ஹெர் பாய் ஃப்ரெண்ட். இத அழமா நம்புறா."

"வசந்தோட நல்லா பழகினாளே டாக்டர்." உமா குழப்பத்துடன் கேட்டாள்.

"ம். அது வினோத்துடைய குணங்கள் வசந்த்கிட்ட இருந்ததால இருக்கலாம். அல்லது வசந்த வினோத்தா அவ கற்பனை செய்திருக்கலாம். ஷி இஸ் எ க்ரியேட்டிவ் பெர்சன். சிலருக்கு கற்பனைசக்தி தங்களோட தினசரி பிரச்சனைகளை சமாளிக்கவும், மனத ஸ்திரமா வச்சிருக்கவும் உதவுது."

"உங்க மூணுபேரப் பத்தியும் ஓரளவு எனக்கு தெரிஞ்சதால டாக்டர் மாயன வச்சி பேசலாம்ணு முடிவு செஞ்சேன்."

"இதுக்கு ட்ரீட்மெண்ட்."

"லாங் டெர்ம். ரெம்ப நாள் ஆகலாம். ஆனா அதுவரைக்கும் காவேரியோட கற்பனை உலகத்த கலைக்கக் கூடாது. உண்மைகள அவளால ஜீரணிக்க முடியாமப் போயிடுச்சுண்ணா. இட் மைட் பி ஃபேட்டல். உயிரே கூடப் போகலாம்".

"அப்ப..?"

"அவள வினோத்தால.. வினோத்துடைய காதலால மட்டுந்தான் காப்பாற்ற முடியும். காவேரிக்கு இப்ப இருக்கிற முழுமையான நினைவு அல்லது கனவுண்ணும் சொல்லலாம், வினோத்த பத்தினதுதான்."

உமா வினோத்தின் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். வினோத் அவளை மெலிதாய் அணைத்திருந்தான். வசந்த் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்திருந்தது.

==================================================>>>>>>>>

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக பத்தாவது பகுதியை எழுத சேவியரை அழைக்கிறேன்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

Wednesday, June 20, 2007

செல்வம் - சிறுகதை

ரெம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன். இந்த வார தமிழோவியத்தில் வந்துள்ளது

செல்வம்.
-------------------------------

'மதுரை 20 கி.மீ'. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. 'மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா' யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது.

விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே காணாமல் கரைந்து போய்விடலாம் எனும் நம்பிக்கை வந்தது. 'நீ எனக்குப் பொறந்தவன்னா இப்டி செஞ்சிருப்பியால?' அப்பாவின் கோபக் குரல் வாகன சத்தத்தில் கரைந்து போனது.

"தம்பி கோயம்பேடு வந்துடுச்சு. தனியாவா வந்த?" பக்கத்து சீட்காரர் தலைவாரிக் கொண்டே கேட்டார்.

"இல்ல. அண்ணாச்சி பின்னால இருக்காவ." பொய் சொல்வதே இனி பாதுகாப்பானது.

"இதுக்கு முன்னால சென்னை வந்திருக்கியா?"

"இல்லண்ணாச்சி இதான் மொதோ தடவ."

சாயங்காலம்வரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றினான். 'மனம் மாற்னா ஊருக்கு பஸ் ஏறிரலாம்'.

மனம் மாறுவதாயில்லை. அப்பாவை நினைக்க நினைக்க இன்னும் தூரமாய் ஓடிப்போகத் தோன்றியது.

"தம்பி. என்னடா காலைலேந்தே இங்க சுத்துற." விழித்துப் பார்த்தான். லத்தியால் தட்டியபடி போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.

"சார். இங்கன ஓட்டல்ல வேல பாக்கேன். இன்னைக்க்கு லீவு அதான்."

"திருநெல்வேலியா?"

"நார்கோயில்."

"பஸ்ஸ்டாண்ட்ல சுத்தாத. ரூமுக்கு போய் சேரு."

பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தான். முதலில் வந்த பஸ்ஸில் ஏறினான்.
"பஸ் எங்க போது?"

கண்டக்டர் முறைத்தார். "ஒனக்கு எங்கப் போகணும்?"
"பஸ் ஸ்டாண்ட்"

"எஸ்டேட்டா?"

"ஆமா." அவர் என்ன சொல்லியிருந்தாலும் 'ஆமா' சொல்லியிருப்பான்.

அம்பத்தூர் எஸ்டேட்டை அடையும்போது இருட்டியிருந்தது.

காலையில் பெரிய ஓட்டலில் சாப்பிட்டதில் ஐம்பது ரூபாய் காலியாகியிருந்தது. சின்ன ஹோட்டலில் இரவு சாப்பாடு. 'மதுரை முனியாண்டி விலாஸ்'.

இரவு பயமுறுத்த ஆரம்பித்தது. 'வீடு எத்தனை பாதுகாப்பானது?'

கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஹோட்டல் பக்கம் திரும்பி வந்தான். 'வீட்டுக்குப் போனா இன்னும் பயங்கர அடி கிடைக்கும்.' பீரோல இருந்த காசு 3000த்தை எடுத்து வந்திருந்தான். 'இப்ப போனா 2000த்த திரும்பத் தந்துரலாமோ?'

சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. 'மணி ரெம்ப இருக்குமோ?'

முனியாண்டி விலாஸ் மூடப்பட்டது.
"அண்ணே மணி எத்தன?"

"11:30"

ஹோட்டல் வெளியே இருவர் பாய் விரித்துக்கொண்டிருந்தனர்.
"அண்ணாச்சி. இங்க வேல கெடைக்குமா?"

"எந்த ஊருடா தம்பி?"

"நார்கோயில்."

"இங்க என்ன பண்ற?"

"ம்... எனக்கு அப்பா அம்மா இல்லண்ணாச்சி." தான் தனிமனிதன் என்பதில் ஒரு சுகம் தென்பட்டது. "ஊர்ல ஒரு கடையில வேல பாத்தேன். இங்க வந்துர்லாம்னு வந்துட்டேன்."

பொய் சொல்வதுதான் இனி பாதுகாப்பானது.

"என்ன வேல பாத்த?"

"சிப்ஸ் கட இருக்குல்லா? அங்க பார்சல் கட்றது?" சரளமாக தனக்கு பொய் சொல்லவருகிறது என்பதில் தைரியமடைந்தான்.

"பேரென்ன?"

"செல்வம்."

"ஆங்?"

"செல்வமண்ணாச்சி."

"இங்க எடுபிடி வேலதான் கெடைக்கும்."

"போதும் அண்ணாச்சி."

"காலைல மொதலாளிட்ட சொல்லிட்டு சேந்துக்க."

"சரி. இப்ப இங்கன ஒறங்கவா?"

"இப்டி படுத்துக்க." தலைக்கு சுருட்டி வைத்திருந்த லுங்கியை தரையில் விரித்தார்.

அதற்குப் பிறகான உரையாடல்களில் பொய்களால் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டான். அந்தப் புது பொய்யான செல்வத்தின் அப்பா சிறு வயதிலேயே இறந்திருந்தார். அப்பாவும் நடராஜன் மாமாவப் போல பனை ஏறும் தொழில் செய்தவர். அம்மா செல்வி அத்தையப் போல தீக்குளித்தாள். பள்ளித்தோழன் மகேசப் போல இவனும் தாத்தா வீட்ல கஷ்டப் பட்டு வளர்ந்திருந்தான். வளனைப் போல நாகர்கோவில் கடையில் வேலைபார்த்திருந்தான். இன்னும் ஊரில் உள்ளவர்களின் கதையெல்லாம் தன் கதையாக்கிக்கொண்டான்.

மறுநாள் முதல் ஹோட்டலில் வேலை. வேலை வாங்கித்தந்த சக்தி அண்ணனிடம் மீதமிருந்த பணத்தை கொடுத்து வைத்தான்.
"டேய் அண்ணாச்சின்னாத அண்ணேன்னு சொல்லு. நான் அண்ணாச்சியில்ல."

"எங்கூர்ல பெரியாள அப்டித்தான் அண்ணாச்... அண்ணே கூப்டுவோம்."

"ஒனக்கு மொதல்ல பேசச் சொல்லித்தரணும்போலியே."

காலை ஐந்துமணிக்கு எழுந்து காய்கறி வெட்டிவிட்டு. ஒரு குளியல். 7 மணி முதல் சமையல்கட்டில் உதவி.

"சக்தி, சின்னப் பசங்கள வேலைக்கு சேக்கக்கூடாது. நீ சொல்றேன்னுதான் சேத்தேன். கிச்சன உட்டு வெளிய அவன் தல காட்டாமப் பாத்துக்க." முதலாளி தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மாலை 4 முதல் 5 வரை ஓய்வு. மீண்டும் 5 துவங்கி இரவு 11 வரை சமையல் கட்டில். வாரம் ஒருநாள் விடுமுறை. தினம் 11 மணிக்கு காலைஉணவு 4 மணிக்கு மதிய உணவு 11 மணிக்கு இரவு உணவு. உணவு விடுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை என்பதை புரிந்துகொண்டான்.

வேலை கடினமாக இருந்தாலும் வீட்டுப்பாடம் எழுதுவதைவிட எளிதாய் தோன்றியது செல்வத்துக்கு.

ஒரு வாரத்திலேயே வீட்டை முற்றிலும் மறந்திருந்தான். அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் மறக்கவில்லை. "நீ எனக்குப் பொறந்திருந்தேன்னா.."

இருவாரங்களில் சக்தியிடம் பலமுறை அடி வாங்கியிருந்தான். வாச்மேன் சிவா சொன்னார்,"சக்திட்ட அடிவாங்கிட்டியா? இனி வளந்துடுவ. அவனுக்கு புடிச்சாத்தான் அடிப்பான். புடிகலேன்னா பேசக்கூட மாட்டான்."

மூன்று வாரங்களில் புது வாழ்க்கை இயல்பாகியிருந்தது. பக்கத்து 'அண்ணாச்சி' கடை பழக்கமாகிவிட்டது.
"அவருக்கு ஊரு நாமக்கல்லாம். ஏண்ணே அவ்வாள அண்ணாச்சீங்கிய?"

"இங்க மசாலா சாமான் விக்கிறவங்களையெல்லாம் அண்ணாச்சின்னுதான் சொல்றாங்கடா."

தியேட்டருக்கு தனியே போகப் பழகிக்கொண்டான். இரவுக் காட்சிகளில் முன்வரிசைகள் முழுவதும் இவனைப்போன்றவர்களால் நிரம்பியிருந்தது.
"எங்க கடைக்கு வேலைக்கு வாரியால?" திருநெல்வேலிக்கார அண்ணன் கேட்டான்.

"சக்தி அண்ணன் உடாது." பெருமிதமாய் பதிலளித்தான்.

புதுப்புது நண்பர்களும், அவர்களின் கதைகளும் சுவாரஸ்யம் தந்தன. நாட்கள் கடப்பதையே உணரவில்லை செல்வம்.

அன்று வழக்கம்போல சமையல்கட்டில் நின்றுகொண்டிருந்தான். மதிய சாப்பாடு முடிந்துவிட்டிருந்தது.
"டேய்..." சக்தி அழைப்பது கேட்டது. சமையல் கட்டிலிருந்து தலை வெளியே வரக்கூடாது எனும் சட்டத்துக்குட்பட்டு உள்ளிருந்தே குரல் தந்தான்.
"அண்ணே..."

"கல்லாவுக்கு வாடா." சமையல் கட்டிலிருந்து எட்டிப்பார்த்தான். ஹோட்டலில் ஒரே ஒரு கஸ்டமர் உட்கார்ந்திருந்தார். கல்லாவுக்கு வந்தான்.

ஹோட்டல் கதவருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கசங்கி அழுக்கான சட்டை, உட்காரும் இடத்தில் வட்டமாய் அழுக்கு படிந்த வேட்டி. கையிடுக்கில் வியர்வைபட்டு தோலுரிந்த தோல்பை. கலைந்து, பல நாளாய் வெட்டப்படாத தலைமுடி. பின்னாலிருந்து செல்வத்தால் அவரை முழுதாய் பார்க்க இயலவில்லை.

"அண்ணாச்சி. இவனா பாருங்க?" சக்தி அவரைப் பார்த்துக் கேட்டான். வந்தவர் திரும்பி செல்வத்தை பார்த்தார்.

செல்வம் அவரை பயத்துடன் பார்த்தான்.

தடுமாறி அடியெடுத்து நெருங்கி வந்து செல்வத்தின் தோளில் கையை வைத்தார். இப்போது அவர் கண்களில் நீர் நிரம்பியிருந்தது செல்வத்துக்கு தெளிவாகத் தெரிந்தது. வேகமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். கண்ணீர் வழிந்தோடியது.

"ஆ..ஆ...ஐயோ ஆ"

கையிலிருந்த தோல்பை கீழே விழுந்தது. அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

"ஆ... அம்மா.. ஆ." சத்தமாய் அழுதுகொண்டே மண்தரையென்றும் பாராமல் கீழே அமர்ந்தார், வீழ்ந்தார் என்றே சொல்லலாம்.

செல்வம் அவரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"அண்ணே ..." சக்தி அவரை அழைத்தான்.

"ஐயோ...ஆண்டவா." தொடர்ந்து தலையில் அடித்துக்கொண்டார்.

"டேய் சக்தி என்ன நடக்குது இங்க? ஆள் யாரு?" வெளியே போயிருந்த கடை முதலாளி திரும்பிவந்தார்.

"சார் இவரு.." சக்தி தயங்கினான். "பையன் ஊர்லேந்து ஓடி வந்துட்டானாம். நம்ம செல்வத்தோட பேரச் சொன்னாரு அதான்.. இங்க..."

"சார் எந்திரிங்க. இங்க பெஞ்சல் உக்காருங்க." முதலாளி அவரை எழுப்பி பெஞ்சில் உட்கார வைத்தார்.

செல்வத்தை காட்டி,"நம்ம பையனா சார்?" என்றார்.

வந்தவர் அழுகையை நிறுத்தவில்லை. கைகளில் இயலாமையால் ஏதேதோ செய்கைகள் செய்தார்.
"டேய் இது யாருடா?" செல்வத்தை பார்த்து கேட்டார் முதலாளி.

செல்வம் வந்தவரையே முறைத்துக்கொண்டிருந்தான்.

"டேய் சார் கேக்குறார்ல? சொல்லு." செல்வம் கையை ஓங்கினான்.

"தம்பி அவன அடிக்காதப்பா". புதியவர் அழுகைக்கு மத்தியில் பேசினார்.

செல்வத்தின் கண்கள் பனித்திருந்தன.

"சார் எனக்கு அப்பவே சந்தேகம். இவன் ஓடிதான் வந்திருப்பாண்ணு. சரி எங்கயாவது போய் என்னதும் ஆயிரக்கூடாதேண்ணுதான் இங்க சேத்தேன். சக்தி சொன்னேனேப்பா மாத்து துணியில்லாம வந்திருக்கான் இவன் ஓடிதான் வந்துருக்கான்னு." முதலாளி சக்தியை முறைத்தார்.

"சார். இவன் என் பையன் இல்ல சார்." விசும்பலோடு சொன்னார் புதியவர். எல்லோரும் அமைதியாயினர். "இவனில்ல. எம் பையன் ஒரு மூணு மாசத்துக்கு முன்னால நான் அடிச்சிட்டேன்னு ஓடி வந்துட்டான். ஐயா. எம் புள்ளையத் தேடி நான் போகாத எடமேயில்ல. மெட்ராஸ்ல இருக்க கடையிலெயெல்லாந் தேடிட்டேன்யா. சுத்தி சுத்தி என் உயிரெல்லாம் போச்சு. ஐயோ எம் புள்ள எங்க கடந்து கஷ்டப்படுதோ? எம்புள்ள உசுரோட இருக்கா இல்லியாண்ணே தெரியலியே. ஐயோ." மீண்டும் குரலெடுத்து அழுதார்.

"ஒரு கொறையும் வச்சதில்ல எம் புள்ளைக்கு. ஒருநா பட்னி கெடந்ததில்லையே. அவன் எப்டி சார் தனியா...? ஐயோ அவன் ஆத்தா புள்ளைய பறிகுடுத்துட்டு சாவக் கெடக்கா. அவன் தங்கச்சி ரெண்டும் அழுதுட்டே இருக்குங்க. ஊரே துக்கத்துல கெடக்குது. ஒருநாளும் இல்லாம அண்ணைக்கு அடிச்சுட்டேனே. பாவி.. பாவி." தலையில் அழுந்த அடித்துக்கொண்டார்.

பெரியவர்கள் யாரும் இப்படி அழுது பார்த்ததில்லை செல்வம். ஹோட்டலின் முன்பாய் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. இவர் எதற்காக அழுகிறார் என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. பெருந்துக்கங்கள் சந்தோஷங்களைப் போலவே விரைவில் தொற்றிக்கொள்கின்றன.

"எம் பையம்பேரு செல்வன் தம்பி. இந்தப் புள்ள யார் பெத்த புள்ளையோ?" சக்தியை பார்த்து,"தம்பி நீங்க செல்வம்னு சொன்னதும் எம் பையன் பேரத்தான் தப்பா சொல்றீங்கன்னு நெனச்சேன். சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்குடாதுன்னு சொல்லுவாங்க. ஐயோ என் புள்ளைய எங்க போயி தேடுவேன்"

"சார் அழாதிங்க. ஒண்ணும் ஆகாது. பையன் வந்துருவான்." முதலாளி ஆறுதலாய் சொன்னார். "சக்தி தண்ணி குடுப்பா. சார் இங்க சாப்பிடுங்க. போலீஸ்ட சொல்லியாச்சா?"

அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பியபின்தான் செல்வத்தை தேடினான் சக்தி.

செல்வம் கோயம்பேட்டிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.


நன்றி: தமிழோவியம

Thursday, March 08, 2007

ஜீன்ஸ் - சிறுகதை

"இன்னைக்கும் காலெஜ்லேந்து வர லேட்டு. என்னான்னு கேளுங்க."

"என்னடா? என்ன லேட்டு?"

"ரெம்பெல்லாம் லேட்டில்லப்பா. அம்மா இருக்காங்களே..."

"எத்தன மணிக்கு வந்த?"

"7 மணிக்கு."

"ம்"

"பைக் வாங்கி மூணுமாசத்துல இது எத்தனாவது முறை?"

"அம்மா! கார்த்தி பர்த்டேமா. அப்பவே சொன்னேன்ல?"

"எங்க போனீங்க?"

"ஸ்பென்சர் ப்ளாசா. சப்வே."

"ஓ. வெளிய சாப்பிட்டாச்சா?"

"பார்டின்னா சாப்பிடாமலாம்மா?"

"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."

"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."

"அம்மா இப்ப என்ன ஆச்சு. என் ஃப்ரெண்ட்செல்லாம் நைட் ஷோ முடிச்சுட்டுதான் வீட்டுக்குப் போறாங்க. நாந்தான் வீட்டுக்கு வந்துட்டேன் தெரியுமா?"

"ஓ அதுவேறயா? ஏன் போயிருக்கவேண்டியதுதானே."

"விஜி. நம்ம ஃபீலிங்க புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறாங்க குழந்தைங்க. பெருமைதானே."

"என்னங்க சொல்றீங்க? இந்த விஷயத்துல ரெம்ப செல்லம் குடுக்குறீங்க. அவங்கள கெடுக்கிறதே நீங்கதான். சனி ஞாயிறானா பைக் எடுத்துட்டு காலையில போனா சாயங்காலந்தான் வர்றாங்க. பெருச பாத்து சின்னதும் கெட்டுப்போகுது."

"எங்க போறாங்க? கோயிலுக்குப் போயிட்டு. ஹோம்ல போய் பாட்டிய பாத்துட்டு வர்றாங்க."

"இல்லண்ணு சொல்லல கொஞ்சம் வீட்ல இருந்தா என்னங்க? நாளைக்கே ஒரு.."

"நாளைக்குள்ளத அப்புறம் பாத்துக்கலம் விஜிம்மா"

"இப்ப தெரியாதுங்க காதல் கீதல்னு வந்து யாரையாவது கூட்டிட்டு வரும்போது தெரியும்."

"என்னடா? லவ் பண்றியா?"

"இன்னும் இல்ல."

"என்னடா இப்டி சொல்லிட்ட.. ஹ ஹா"

"சிரிங்க நல்லா சிரிங்க. என்ன கிண்டல் செய்றதா நினச்சுகிட்டு அவங்கள ஸ்பாயில் பண்றீங்க."

"விஜி.. பல தடவ சொல்லிட்டேன். அவங்களுக்குன்னு சில உரிமைகள் இருக்குதும்மா. அவங்க கடமையெல்லாம் ஒழுங்கா செஞ்சுட்டு உரிமைய பக்குவமா பயன்படுத்துற வரையிலும் அதுல நாம தலையிடுறது நல்லால்ல."

"நீங்க ஏதோ அமெரிகாவுல இருக்குறீங்கன்னு நினைக்காதீங்க. நம்ம ஊர்ல குழந்தைங்கள சரியா வளக்கலைன்னா நாலு பேர் நாலு விதமா சொல்வாங்க"

"அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னே வாழ்க்கையில எல்லா முடிவையும் எடுத்துகிட்டிருந்தா அது வாழ்க்கையில்ல விஜி. சீரியசா யோசிச்சா அது அடிமைத்தனம்."

"தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டீங்களா? அவங்கள முன்னால வச்சுகிட்டு இதையெல்லாம் சொல்லித்தாங்க. நம்ம காலத்துல இப்டியா வெளிய சுத்திகிட்டும், ப்ரெண்ட்ஸ் வச்சுகிட்டும் இருந்தோம்."

"நம்ம காலத்துலன்னு நீ சொல்லுறத வச்சே அது கொஞ்சம் பழசாயிடுச்சுன்னு சொல்லலாம்ல. அப்ப இந்த வசதியெல்லாம் இல்ல அதனால நாம பயன்படுத்தல. இருந்த வசதிகள வச்சுத்தான் வாழ்க்கையும் இருந்துச்சு. தூர்தர்ஷன் போயி கேபிள் வந்துச்சில்லையா? எவ்வளவு பெரிய மாத்தம்."

"கேபிள் வந்ததுக்கும் இப்ப நான் சொல்றதுக்கும் என்ன சம்பந்தங்க?"

"எனக்கு இன்னொரு தோச போதும். இருக்கு விஜி. காலம் மாறுது. பல ஆப்ஷன்ஸ் கிடைக்குது. ஊடகம் சொல்லிக் குடுக்குது. பார்ட்டிக்குப் போறது சரின்னுது, ஃபேஷன் ஷோ நல்லதுங்குது, டேட்டிங்க்னா என்னன்னு உனக்கு முன்னால தெரியுமா? இன்னும் என்னென்னெல்லாமோ. நல்லதப் பார்த்து அனுபவிக்கிற வசதிய நம்ம குழந்தைகளுக்கு செய்துதரணும். காலம் மாறுது நாம மாறிக்கிறோமோ இல்லையோ. நம்ம காலம் போயிடுச்சு விஜி. மனுசனுக்கு வயசாகிறது நாம செல்லுபடியாகமப் போறோங்கிறதத்தான் குறிக்குதில்லையா? நான் ஜீன்ஸ் போட்டதயே ஒன்னால ஏத்துக்க முடியல. எவ்வளவு கம்ஃபர்டபிள் தெரியுமா?. நீ சுடிதாருக்கு மாறினப்ப கல்யாணமான பொண்ணுக்கு ஏன் சுடிதார்னு யோசிச்ச. இப்ப? இதப்போலத்தான் புது கலாச்சாரமெல்லாம். பழகிடுச்சுன்னா நாம விரும்ப ஆரம்பிச்சுடுவோம். நம்ம காலத்துல இப்டி இல்லையேங்கிறது கவலையாயிரும்."

"இந்தக் காலம் ஒங்களுக்குத்தான் ஒத்துப்போகும். ரெண்டு பொம்பளப் புள்ளைங்கள வளர்த்து ஆளாக்குறது எவ்வளவு கவனமா செய்ய வேண்டியது? உங்களுக்கேது இந்தக் கவலையெல்லாம். அவள்கள வாடா போடான்னு கொஞ்சிகிட்டு எடுத்ததுக்கெல்லாம் வளஞ்சு குடுக்குறீங்க."

"பொண்ணுங்களுக்கும் தங்களப் பத்தி முடிவெடுக்க உரிமையிருக்குதும்மா. உன்னோட பாயிண்ட்படி பாத்தாலுமே இவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாமே பொண்ணுங்கதானே. கார்த்திகா மட்டும் பாக்க ஆம்புள மாதிரி இருக்கா ஆனா எவ்வளவு நல்ல பொண்ணுங்க."

"எனக்கு என்னன்னா.."

"...கவலப்படாத விஜி. நான் இருக்கேன்ல."

"எங்க இருக்கீங்க?"

"இனிமேல் இருப்பேன். சென்னையில ரீஜனல் மேனேஜர் ப்ரமோஷன். பாஸ் ஊர்லேந்து வந்ததும் லெட்டர் தருவார். நோ மோர் டூரிங்."

"ஐயோ! நிஜமாப்பா?"

"ஆமாண்டா செல்லம்."

.
==~~~~~~~~~~~==
நன்றி: தமிழோவியம்
==~~~~~~~~~~~==

Thursday, January 25, 2007

ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

"சார். நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, "என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பி. பாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர். நாவிதர்."

"ஓ. இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

".........."

"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

Monday, January 22, 2007

குமுதம் வேண்டாம் குழந்தை சாமியாவது வெளியிடுவாரா?

என்சைக்ளோப்பீடியாவை புரட்டிக்கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜா. சுதா. தன் மனைவி சுதாவின் பெயரில் எழுதுபவர். அறிவியல் இலக்கியம் ஆன்மீகம் அரசியல் என இவர் கால்பதிக்காத இடமேயில்லை.

டெலிஃபோன் மணி சிரித்தது.

"ஹலோ".

"அப்பா நாந்தான்." அமெரிக்காவிலிருந்து அவர் மகன் பேசினான்.

"சொல்லுடா எப்படியிருக்க?"

"நல்லாருக்கேன்பா."

"நேத்துதானே பேசின?"

"இல்லப்பா அவ உங்கள பாக்கணுங்கிறாப்பா?"

"அவன்னா?"

"தெரியாததுபோல கேக்குறீங்களே?"

"ஓ அவளா?"

"சரி வரச்சொல்லு."

"இந்த வீக் எண்ட் சென்னை வர்றோம்."

"பர்மிஷன் வாங்காமலே ப்ளான் போட்டாச்சா?"

"ம்ம்"

அந்த வீக் எண்ட். தன் மகன் ஒரு ஜப்பானியப் பெண்ணோடு வருவதைக் கண்டு வியந்து நிற்கிறார். ஜா. சுதா.

"டேய் இவளா அவ?"

"ஆமா. பேரு டோக்கியோனா"

"ஷங்கர் படத்துல வர்ற விளையாட்டோட பேர்போல இருக்குது?"

"அது டிக்கிலோனாப்பா"

"இவங்க எந்த ஊர்?"

"ஜப்பான்ல ஒரு குக்கிராமம். என் கூட படிக்கிறா"

"டேய் ஏண்டா போயும் போயும் ஒரு ஜப்பான்காரிய.. நம்ம ஊர்க்காரி யாரையாவது..."

"அப்பா.. நான் சின்ன வயசுல வாட்ச் கேட்டேன் ஜப்பான் வாட்ச் வாங்கித் தந்தீங்க... வெளையாட பொம்ம கேட்டேன் ஜப்பான் எலக்ட்ரானிக்ஸ் பொம்ம வாங்கித்தந்தீங்க... நம்ம வீட்ல டிவி வீடியோ கார் எல்லாம் ஜப்பான் மேக்கா இருக்கும்போது பொண்ணு ஜப்பான் பொண்ணா இருக்கக்கூடாதா?"

"அதில்லடா நாம என்ன.."

"சாதீன்னு கேக்கறீங்களா? வெளிநாட்டுக்காறங்க என்ன சாதின்னு நமக்குத் தெரியாதேப்பா. சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?"

"ம்ம்ம் நீ சொல்றதும் பாயிண்ட்தான்?"

"நம்ம ஊர்ல டாய்லட் கழுவுறவரோட பொண்ண எனக்கு கட்டி வப்பீங்களா?"

"என்னடா சொல்ற?"

"ஆமா டோக்கியோனாவோட அப்பா ஜப்பான்ல..."

ஜா. சுதா மூர்ச்சையாகிறார்.

மருத்துவமனையில் விழித்தெழும்போது டோக்கியோனாவின் கண்ணீர் அவரது கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.

"டேய் நாம அமெரிக்கவுக்கே போயிடலாம். அங்க நைட் ஷியாமளன், ஸ்பீல்பர்க் போல யாருக்காவது ஸ்க்ரீன்ப்ளே எழுதி பொழச்சுக்கலாமா பாரு."

"நெனப்பப் பாரு" மகன் கோபமாய் பார்க்க மீண்டும் ஒரு குறுகிய மூர்ச்சை நிலைக்குப் போனார் ஜா. சுதா.

(டிஸ்கி: யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஜாலியா! கதா பாத்திரங்கள் அனைத்தும் ஷங்கர் படத்தில் வருவது போன்ற கற்பனைகளே)

Thursday, November 02, 2006

சொர்க்கம் இலவசம்

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். 'சித்ரகுப்தன் காலிங்' கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். 'காலையிலேயா?' பீட்டர் முணுமுணுத்தார்.

நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.

பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.

கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.

பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.

இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.

அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.

"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.

"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"

"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"

"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."

"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"

"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."

"எம்.டியா?"

"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."

"சரி என்ன மீட்டிங்?"

"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."

"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."

"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."

"ஐயையோ அப்படி இல்லீங்க.."

"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"

"ஏழுமைலையான்கூடவா?"

"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."

"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"

"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."

"இங்க மட்டும் என்ன வாழுது?"

"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "

"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"

"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "

"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"

"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."

"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."

"என்ன ஜோக்கா?"

"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"

"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."

"இந்த ஐடியா நல்லாயிருக்கே."

"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."

"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."

"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."

"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."

"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"

"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."


"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."

பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.

"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."

"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."

"சரி யோசிச்சு சொல்லுங்க."

"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."

"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"

"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."

"சொல்லுங்க பீட்டர்..."

........

சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.

"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."

Friday, September 01, 2006

லிஃப்ட்

சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது. உருவங்கள் செம்மையாகத் திரிக்கப்பட்டு வண்ணங்கள் வழிந்தோடும் ஒரு நவீன ஓவியமாய் கானல் வரைந்த கோலங்களை வியப்போடு ரசித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.

முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.

"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.

எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.

"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'

"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.

வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.

'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா

'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி

'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா

கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.

வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.

அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.

அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.

அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.

"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.

"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.

'நல்லவந்தான்'.

"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."

"வாங்க."

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.

"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.

"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"

"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."

"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."

"தேவியா?"

"ஆமா."

உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.

'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.

புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.

பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.

"ரெம்ப நன்றிப்பா?"

"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.

வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'

பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.

சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.

Thursday, August 31, 2006

நிலவில் நாளை..

"மிமி எழுந்திரு இன்னிக்கு நாம விலங்கியல் பூங்காவுக்குப் போகப்போறொம்." அண்ணன் மித்தி தங்கை மிமியை உற்சாகத்துடன் எழுப்பிக்கொண்டிருந்தான்.

முந்தின நாள் சாயுங்காலம் அப்பா அனுமதிச் சீட்டு வாங்கிவந்ததுமே உற்சாகம் துவங்கிவிட்டது.

"நாளைக்கு குரங்கு பாக்கலாமே.."

"சிங்கம்?"

"ம்ம்ம் சிங்கம், புலி, மான், யான.."

"எலி?"

"மிமி.. எலி பாக்குறதுக்கு ஏன் அங்க போகணும்?"

விலங்குகள் பற்றிய புத்தக வாசிப்போடு உறங்கிப்போனார்கள் குழந்தைகள்.
காலையில் பூங்கா நோக்கிப் பயணம் துவங்கியது.

"பூமியிலிருந்து அழிந்துபோன விலங்கினங்களை மையமா வச்சு ஒரு கண்காட்சி இருக்குது" அப்பா சொல்ல மித்தி கேட்டான்.

"பூமியிலிருந்து விலங்கினங்கள் அழிஞ்சு போனதாப்பா?"

"ஆமா. பல இனங்கள் அழிஞ்சும் புதிதாய் சில புதிதாய் உருவாகியும்... பரிணாம தத்துவப்படி.."

"எப்படி ஒரு விலங்கினம் அழியும்ப்பா?"

"பல காரணங்கள் இருக்கு.."

"எப்படி.."

"தட்ப வெட்பநிலை சரியில்லைன்னா, அதிகமா வேட்டையாடப்பட்டா, உணவு ஆதாரங்கள் அழிக்கப்படும்போது.இப்படி இன்னும் பல காரணங்கள். சில நேரங்கள்ள ஒரே நேரத்துல, ஒண்ண ஒண்ணு சார்ந்திருந்த இரு இனங்கள் அழியிறதும் உண்டு."

"இண்டரெஸ்ட்டிங்." அம்மா சொன்னாள்.

விலங்கியல் பூங்கா வந்ததும் மிமி குஷியானாள். கூட்டம் அதிகமாயில்லாதது வசதியாய்ப் போனது. விலங்கின் பெயர்களை எழுத்துக்கூட்டி படித்துக்கிண்டிருந்தாள்.

"த..வ..ளை..அம்மா தவளை."

"ஆமா சிமி. ஆப்ரிக்கத் தவளை. ஆண் தவளைகளே இல்லைன்னா இந்த இனத்துல பெண்ணே ஆணா மாறிடுமாம்."

"அப்ப இந்த இனம் எளிதில அழியாதுலா." மித்தி கேட்டான்.

"ஆமா."

"'வல்லவன் வாழ்வான்' இதுதான் இயற்கையின் விதி. வெறும் உடல் வலிமையச் சொல்றதில்ல."

"ஒ..ட்..ட.."

"ஏய் சிமி இங்கப் பாரேன்."

"இருடா.. க..ம். ஒட்டகம்."

விலங்குகளைப் பார்த்து முடித்ததும் அழிந்துபோன விலங்கினங்களைப் பற்றிய கண்காட்சிக்கு வந்தனர்.

"வாவ் டைனசோர்." மித்தி

"ஸ்..டெ..கோ..சா..ர..ஸ்"

"டைனோசர்ஸ் இனம் அழிந்ததுபற்றி நிறைய கருத்துக்கள் இருக்கு. அதிகம் நம்பப்படுவது பூமிமீது மோதிய விண்கல்லால அழிஞ்சிருக்கலாண்றது."

"ஔ..ரோ..க். ஔரோக் அம்மா மாடு மாதிரி இருக்குதுமா." மிமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

"இதோ இந்த இனம் அழிஞ்சதுபோல வேறெந்த இனமும் அழிஞ்சதில்ல." அப்பா ஒரு கண்ணாடிக் கூண்டைக் காட்டிச் சொன்னார், "தன்னைத்தானே அழிச்சுகிச்சு இந்த இனம். அணுஆயுதம்."

"ம..னி..த......"

Wednesday, August 23, 2006

கற்கோவில்கள்

"மக்கா எழும்பு. மடிக்குப் போணும் எழும்பு." எலிசபெத்தா மகன் சேவியரை எழுப்பினாள்.

"ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல."

முனகிக்கொண்டே சேவியர் விழித்தான்.

"அப்பாக்கு காச்சலடிக்கு, நீ மச்சான்கூடப் போ."

சன்னலில் இருந்த பல்பொடியிலிருந்து கையில் கொஞ்சம் தட்டிக்கொண்டு கஞ்சியும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தான் சேவியர்.

தெருவிளக்குகள் இல்லாத இடுக்குகளில் கலங்கரை விளக்கின் சுழற்சியில் அவ்வப்போது ஒளிபரவி அதிகாலை இருளை விலக்கிப் பாதை காட்டியது.

கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. "அன்னா வாரான் சேவியரு." சேவியரின் அக்காவின் கணவர் சைமன் கை அசைத்தார்.

"நேத்துமா படத்துக்குப் போன? ரெண்டுவாரத்துல வெளிநாட்டுக்குப் போறவனமாரியா இருக்க. இவ்ளோ நேரமா இங்க காத்துக் கெடக்காவு." அக்கா திட்டுவதையும் பொருட்படுத்தாமல். வலையை படகில் ஏற்றிக்கொண்டிருந்த மச்சானுக்கு உதவிசெய்தான் சேவியர்.

"அப்பாவுக்கு காச்சலாம்?" அக்கா கேட்டாள்

"ஓமு."

சேவியர் மச்சானுடன் கடலுக்குப் போகத் தயங்குவான். அவர் இவனைப் போலவே முன்கோபி. மச்சான் திட்டினால் எதிர்த்துப் பேசமுடியாது. அப்பா அப்படியல்ல. மொட்டையன் சாதுவானவர், கோயில் கமிட்டியில் அவர் இல்லாத சமயங்களிலும் அவரிடம் ஊர் பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டன. மீனவர் என்றாலும் படித்தவர்களே மதிப்புக் கொள்ளுமளவுக்கு ஞானி. பங்கு சாமியார்கள் ஊரில் முதலில் சந்திக்கும் பெரியவர் மொட்டையன் என அழைக்கப்படும் குருசு.

சேவியர் படகின் இயந்திரத்தை இயக்கினான். மிதமாக எழுந்த அலைகளின்மேல் பயணித்தது படகு.

"யாரெல்லாம் படத்துக்குப் போனியல?"

"நானு எதிர்வீட்டுக் குமாரு பெறவு நொண்டி."
மச்சான் தம்பிகூடப் போனதைச் சொன்னா அவனுக்கு வீட்டில அடிவிழும்.

"நேத்து நொண்டி எங்கூடப் பெரையில சிட்டு வெளையாடிட்டிருந்தான்? பொய், என்னா? ஏண்டே படிக்க பயலுவள கெடுக்குதிய?"

சேவியர் மெளமானான். 'இவர்கூடப் பேசுனா சண்டதான் வரும்'.

படகு உள்ளே செல்லச் செல்ல நிலம் மறைந்தது. கடல், நீரால் நிரம்பிய ஒரு பாலைவனம் போலக் காட்சிதந்தது. கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் நீலம். வழக்கமாய் மீன்பிடிக்கும் இடத்தை நெருங்கும்போது சைமன் பதட்டமானார்.

"எல சேவியரு அங்கபாரு அந்த போட்டுங்க நம்ம ஊர் போட்டுகமாரி தெரில?"

"நம்ம ஊர் போட்டிகயில்ல. இதோட நாலாது நாளு. இங்க வராதியன்னு அப்பா அன்னைக்குத்தான் சொன்னாவு, பெறவும் இங்கதா வாரானுவ."

வெளியூர் ஆட்களுக்கு அந்த இடத்தில் மீன் பிடிக்கத்தடை இருந்தது.

"லேய்.. யாருல அது? இங்க வரக்கூடாதுன்னு தெரியாதாக்கும்?" சைமன் சத்தம் போடத்துவங்கினார். இரண்டு வெளியூர் படகுகள் நின்றுகொண்டிருந்தன.

சேவியருக்கு எரிச்சல் வந்தது. மொட்டையன் மகன், அவருக்கு நேர் எதிர். நண்பர்களுக்காகப் பலமுறை சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறான். போலீஸ், கேசென்று ஒரு முறை நிலமை கைமீறிப்போனது. மொட்டையன் பங்குத் தந்தையிடம் சொல்லி பிஷப் கடிதத்துடன் போய் சேவியரை அழைத்துவந்தார்.

"ஐயா உங்களப் பத்தி கேள்விப் பட்ருக்கேன். இவன் உங்க பிள்ளையா? கோவம் ஜாஸ்த்தி இவனுக்கு. சொல்லி வைங்க. போலீசையே கை நீட்டுறான்." இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

"எல எங்க மாமன் சொல்லியும் கேக்காண்டியளால. நாங்க ஒங்க ஊர்ப் பக்கம் வந்தா உடுவியளா?"

சைமன் வெளியூர் படகுகளிலிருந்தவர்களிடம் சப்தமாய் விவாதித்துக்கொண்டிருந்தார்.
வெளியூர் படகிலிருந்த பெரியவர் பேசினார்.

"மொட்டையன் மருமவனா நீயீ? இரப்பா, வல எறக்கியாச்சு இன்னக்கி ஒருநா இங்கன போட்டும்."

"நாலு நாள இங்கனதான் மடி எறக்குறீயளாம்? எங்க மாமன் சொல்லியும் கேக்கலேன்னா ..?"

"எல ஒங்க மாமன் என்ன கலெக்டரா?" வெளியூர் படகிலிருந்து இளைஞர் கோவத்துடன் கேட்டார்.

"மைக்கிளு, பெரியவங்க பேசிட்டிருக்கும்போது நீ ஏண்டே குறுக்க. சும்மா இரு."

"நீரு பெரியவரு. அவன் பெரியவனா?" சைமனைக் காட்டி மைக்கிள் பேசினான்.

"கலெக்டர் சொன்னாத்தான் கேப்பியளா? இங்க வரக்குடாதுன்னு சொல்லியும் திரியத் திரிய வந்துட்டு... மரியாதையா வலைய இழுத்துட்டு போங்க."

"மக்கா கொஞ்சம் பொறுங்கடே. இன்னைக்கு வலை எறக்கியாச்சு..." பெரியவர் கெஞ்சாத குறை.

"மச்சான் அந்த மைக்கிள்தான் கபடி ஆட்டத்துக்குப் போன நம்ம பயவள அடிச்சது. இன்னைக்கு நாயம் பேசுதான்." சேவியர் மச்சானுக்குத் தகவல் சொன்னான்.

"ஒங்கூருக்கும் எங்கூருக்கும் சும்மாவே சரிவராது, இதுல மடி போடுற எடத்துல வந்து சண்டைக்கு வராதிய." சைமன் கடைசியாய் எச்சரித்தார்.

"வலை எறக்கியாச்சுன்னு சொல்லுதேன்..ஒக்காளி." பெரியவர் முகத்தில் எரிச்சல்.
சேவியர் கடலில் குதித்தான். கடலுக்குள் மூழ்கி சில நிமிடங்களுக்குப் பின் மேல் வந்தான்.

"ஓ பெரியாளு. வலைய அறுத்துட்டாச்சு..இப்பவாவது போங்க."

பெரியவர் வலையைஇழுத்தார். வலை வெட்டப்பட்டிருந்தது.

"எல சின்னப்பயலுவளா.. புத்திய காட்டிட்டீலுவள்ள? " பெரியவர் சத்தம்போட்டார்.

வாய்த்தகறாரு துவங்கியது. கெட்டவார்த்தைகள் மிகுந்த ஒரு சப்தமான சண்டைக்கு நடுவில் மைக்கிளின் அலறல் கேட்டது. கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்தம் வழிந்தோட படகில் கீழே விழுந்தான் மைக்கிள்.

சேவியர் கத்தியை கடலில் வீசினான்.

மைக்கிள் படகிலிருந்தவர்கள் பெரியவர் படகுக்கு மைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாவினர். பெரியவர் படகை வேகமாகச் செலுத்த அந்த இடத்திலிருந்து மறைந்தது வெளியூர்ப் படகு. சைமன் இன்னும் கோபம் தீராமல் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். படகிலிருந்த பெட்ரோலை ஊற்றி ஆளில்லாம நின்றுகொண்டிருந்த வெளியூர்ப் படகை கொழுத்தினான்.

சேவியர் எதுவும் நடக்காததுபோல, உடலில் தெறித்திருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், வலையை கடலுக்குள் இறக்கினான்.
....

ஞாயிற்றுக்கிழமை பூசையில் பங்குச் சாமியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்."பகைவனையும் அன்பு செய்யச் சொல்லி இயேசு சொன்னதைப் போல மனித வரலாற்றில் வேறு எவருமே சொல்லியிருக்கமுடியாது. லூக்காஸ், அதிகாரம் ஆறு, வசனங்கள் இருபத்தேழு துவங்கி முப்பத்தாறு முடிய. 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களை வெறுப்போருக்கு ...."

கோவிலின் வெளியே படிக்கட்டுகளில், சேவியர் தன் கழுத்தில் கிடந்த சிலுவையில் காய்ந்திருந்த இரத்தக் கறையை ஈர்க்குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்தான்.

நன்றி: திண்ணை

அன்னியர்கள்

இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன்.

"ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?"

"மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா?
எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்."

"ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?"

"எங்க ஊர்ப் பக்கமெல்லாம்... வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க... இவன் க்ரௌவுண்டுக்குப் போகணும்னு சொன்னான், கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்."

"நல்லது செய்யக்கூட நாலுபேர் என்ன சொல்வான்னு பார்த்துச் செய்யவேண்டி இருக்கு. நீங்க செய்யலைன்னாலும் சரி எங்கிட்ட காசிருக்கு. மொய்யா எழுதினா சம்பந்தி வேண்டாம்னு சொல்லமுடியாதே. டேய் வாடாப் போலாம்."

பேரனோடு விளையாட்டு மைதானத்துக்குக் கிளம்பினார். பணிஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் மாரியப்பன். நண்பர் கூட்டம் அமரும் இடத்தில் யாருமில்லை. அரட்டைக் கச்சேரி இன்றைக்கு கொஞ்சம் தாமதம்.

'ஃபிசிக்ஸ் போலவே வாழ்க்கையிலும் விதிகள் இருந்துட்டா? இந்த மாதிரி விதிகள வச்சுக்கிட்டு எல்லாத்தையும் எளிதாய் மதிப்பிடலாம், செஞ்சிடலாம். கீழே விழும்னா விழணுமே, அதுதானே இயற்பியல். சமுதாய விதிகள எப்படின்னாலும் வளைக்கலாம். இத இவர் இப்படித்தான் செய்யணும்னு எதுவுமே..'

"என்ன வாத்தியாரே. பயங்கர யோசன போலிருக்கு?"

"வாங்க ஏட்டு சார். பங்சனெல்லாம் எப்டி போச்சு?"

"ம்.. ட்ராவல் ஜாஸ்தி. மூட்டு வலி திரும்பவும் வந்துடுச்சு. ஃபங்சன் பரவால்லாம போச்சு."

"ரெண்டுவாரமாச்சா?...இன்னிக்குத் தேதி என்ன?"

"மார்ச் 12. ஏன் கேக்குறீங்க?"

"ஃபிபொனாசி எண்தொடர் தெரியுமா?"

"ஒங்க ஃபிசிக்செல்லாம் போலீஸ்காரங்களுக்குத் தெரியுமா? இ.பி.கோ மாதிரி எதாவது கேட்டீங்கன்னா சொல்லலாம்.."

"இயற்பியல் இல்ல மாத்ஸ்தான். ஃபிபொனாசி எண் தொடர்ல உள்ள எண்கள் அதுக்கு முன்னால வர்ற இரண்டு எண்களோட கூட்டுத்தொகையா இருக்கும்."

"ஓகோ. இண்டரெஸ்ட்டிங்"

"இப்ப 0, 1, 1, 2, 3, 5, 8 ன்னு போட்டீங்கன்ன ஃபிபொனாசி தொடர் வரும்.."

"ஆமா..."

"இன்னைக்குத் தேதி 12-03-05 அட் ஒன் ஓ க்ளாக் சரியா ஃபிபனாசித் தொடரின் துவக்க எண்கள் வரும்."

"ம்ம்ம்... ஆமால்ல.. 01:00 12-03-05 வெறும் நம்பர் மட்டும் கணெக்கெடுத்தா.."

"ஆமா. இதுல இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கு. முந்தின நம்பர அடுத்த நம்பரால வகுக்கும்போது 1.6 பக்கத்துல விகிதம் வரும். இந்த ஃபிபனாசித் தொடர இந்தியாவுலத்தான் முதல்ல கண்டுபிடிச்சாங்கன்றதுதான் சுவையான தகவல்."

"இதையும் நம்மாளுங்கத்தான் கண்டு பிடிச்சாங்களா?", சிரிப்புடன் கேட்டார் ஏட்டு.

"'மாத்ராமெரு'. சமஸ்கிருத இலக்கண வித்தகர் பிங்கலா 'சந்த சாஸ்த்திரத்துல' சொல்லியிருக்கார்."

"மாதிரைன்னா ஏதோ பாட்டுல வர்ற ரிதம் மாதிரியா?"

"அதுமாதிரிதான் ஆனா பேச்சுல வர்ற மாத்திரைகள கணக்குப் போடுறது. தமிழ்ல அசைகள்னு சொல்லுறோம்னு நெனைக்கறேன். இந்த ஃபிபனாசி இத்தாலியர். நம்ம கோட்பாட்ட இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சி ப்ரபலமாக்கிட்டார்."

"நம்ம பயக கம்ப்யூட்டர்ல வெளுத்துக் கட்றானுங்கன்னா இது மாதிரி விஷயமெல்லாம் நம்ம மூளையில பதிஞ்சிருக்கு வாத்தியாரே."

"இருக்கலாம். இந்த 'மாத்ராமெரு' எண்கள் இயற்கையில நெறைஞ்ச்சிருக்குன்னா நம்பமுடியுமா?"

"எப்டி அது."

"ஒரு அன்னாசிப் பழத்துல ரெண்டு வளயமா செதில்கள் இருக்கு. ஒண்ணுல 8ம் இன்னொண்ணுல 13ம். ரெண்டுமே ஃபிபொனாசி எண்கள். இதுபோல பூக்களோட இதழ்களிலான ரேஷியோ, சில பழங்களோட விதைகள் எண்ணிக்கை எல்லாம் இந்த எண்கள்படி வருது.."

"சரிதான். இன்னைக்கு ரெம்ப விசேசமான நாள்தான். அதான் சாப்பிட்டிட்டு ஒடனே இங்க வந்துட்டீங்களா?"

"ஒரு மணி ஆறதுக்கு எட்டு நிமிசந்தான் இருக்கு."

"இந்த வெயில்ல பசங்களுக்கு க்ரிக்கட் ஆடணுமா?"

"நம்ம மட்டும் கொஞ்ச நிழல் கெடச்சா ஒக்காந்து பேச ஆரம்பிச்சிடறோமே?". நண்பர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே எழுந்தார் மாரியப்பன்.

"கொஞ்சம் இருங்க, வீட்ல செல்ல வச்சுட்டு வந்துட்டேன். இப்ப வந்திர்றேன்."

திடீரென மின்னல்போல ஒளிக்கீற்று அவரைத் தாக்கியது. நிலைதடுமாற்றத்திலிருந்து மீண்டபோது அதீத ஒளியில் சுற்றியுள்ள எல்லாமே மறைந்து போயிருந்தன.
எரியும் விளக்குக்குள் நின்றுகொண்டிப்பதுபோல, வெள்ளை வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார் மாரியப்பன்.

"சார்... ஏட்டு சார். இருக்கீங்களா?".

பதில் வரவில்லை.

'மிதந்து கொண்டிருக்கிறோமோ?' என நினைத்தார்.

கை கால் அசைக்க முடியாமல், இறகுகளை அசைக்காமல் பறவைகள் காற்றில் மிதப்பதுபோல மிதப்பதை உணர்ந்தார்.

ஒளி நீங்கியது.

அன்னியக் கிரகவாசி ஒருவன் அவரை விண்கலத்துள் வரவேற்றான். ஓடிப்போய்விடத் தோன்றியது மாரியப்பனுக்கு.

வேற்றுக்கிரக வாசிகள், அன்னியர்கள். இவர்கள் இருக்கிறார்களா? ஏதோ கனவுதானா? எங்கே ஓடிப்போவது? விண்வெளியில் பறந்து கோண்டிருக்கிறோமா? ஏலியன்களால் கடத்தப் பட்டவர்களைப் பற்றி படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

மந்திரம் ஓதுவதைப்போல அன்னியர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

'சமஸ்க்கிருதமா? அதை ஒத்த ஒரு மொழியாக இருக்கலாம்'.

தலை வலித்துக்கொண்டிருந்தது. 'திடீரென வந்த அதிக வெளிச்சத்தால் இருக்கலாம்'.

அங்கே சில மனிதர்களும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்தது.

"என்ன நடக்குது இங்க? எங்க இருக்கேன் நான்?" பயந்தபடியே அந்த அன்னியனிடம் பேசினார்.
அவன் அன்னிய மொழியில் ஏதோ சொன்னான். புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.

அன்னியன் தன் பெரிய கண்களை மூடினான்.

'தியானிக்கிறானா?' தலை இன்னும் வலித்தது. வசியம் செய்யப்படுவது போல உணர்ந்தார்.

"நாங்கள் சியமாவாசிகள். இன்னொரு கோள் தொகுப்பிலுள்ளது. ரவி என்னும் நட்சத்திரத்தைச் சுற்றும் கோள் சியமா."

அந்த அன்னியன் சொன்னதெல்லாம் மாரியப்பனுக்குப் புரிந்தது.

'இவனால் நம் மூளையை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. நொடிப்பொழுதில் அவன் மொழியை மூளைக்குள் பதித்துவிட்டான்.' மிரட்சி ஆட்கொண்டது மாரியப்பனை.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் பூமிக்கும் இன்னும் உயிரினங்கள் வசிக்கும் கோள்களுக்கும் சென்று விபரங்கள் சேகரிப்பதுண்டு. எங்கள் வருகையின் தடையங்கள் உலகில் பல இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன."

"க்ராப் சர்க்கிள். விளை நிலங்களில் நீங்க விட்டுப்போகும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள்."

"அது மட்டுமல்ல கற்களினாலான வடிவமைப்புக்கள் கூட."

"ஸ்டோன் ஸர்க்கிள்ஸ், ப்ரிட்டனைச் சுற்றியுள்ளத் தீவுகளில் பிரபலம்." மாரியப்பன் தான் படித்தவற்றையெல்லம் திரும்பக் கற்றுக்கொண்டிருந்தார்.

"ஆமா. ஆமெஸ்பரி ஸ்டோன்ஹெஞ்ச் வழியா எங்க கோள்தொகுப்ப பார்க்க முடியும்."

"நம்பவே முடியல. ஆதி மனுசன் செஞ்சு வச்சதுன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கோம்."
மாரியப்பன் திடீரெனெத் தானும் அந்த அன்னியனின் மொழியில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.

"ஏன் நீங்க மனிதர்களத் நேரடியா தொடர்புகொள்றதில்ல?" மாரியப்பன் அன்னியனைக் கேட்டார்.

"தொடர்பு இருக்குது. தேவையான அளவுக்கே வச்சிருக்கொம். எல்லாமே ரகசியமாய் இருக்குது. சில தனி ஆட்களோடும் தொடர்பிருக்குது. இனிமே உங்களோடும் இருக்கும்."
வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்தார் மாரியப்பன்.

"நீங்க மின்னணுயியல்ல முன்னேறியிருப்பீங்கன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கிறோம் ஆனா இங்க எந்திரங்களெல்லாம் அதிகமாயில்லையே?"

"நாங்க உயிரியல் மற்றும் நுண்ணியிரியலில் வளர்ந்திருக்கோம். மூளையின் முழு சக்திய யாருமே பயன் படுத்துறதில்ல. நாங்க இந்தத் துறையில் வெற்றி அடஞ்சிருக்கோம். எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் - மேம்படுத்தப்பட்ட உணரும் தன்மை- எங்களுக்கு கைவந்த கலை."

"கை வந்த அறிவியல்.", கொஞ்சம் இலகுவாகப் பேச ஆரம்பித்தார்.

"எங்க கலம் வெளியைத் தாண்டி வர பாக்டீரியா போன்ற ஒரு உயிரியே காரணம். எங்க கலத்தின் வெளிப்பூச்சில் இந்த நுண்ணியிரிகள் கணிசமா வளரும். எந்த சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் தன்மை இருக்கிறதால எங்கள் கலங்களுக்கு எதுவுமே ஆகிறதில்ல. சில ஒட்டுண்ணிகள் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருதே அதுபோல. 'வெளி'யில் பயணிக்கும்போது இந்த உயிரிகள் சூட்டினால மடியிறதில்ல மாறாக அதன் வீரியம் அதிகமாகுது."

"கடலுக்குள்ள சுடு நீர் ஊற்றுக்கள் பக்கத்தில வாழமுடியாத சூழலிலேயும் வாழும் உயிரிகளைப்போல."

மாரியப்பன் சோர்வடைந்து உட்கார்ந்தார். இன்னும் தலை வலித்துக்கொண்டேயிருந்தது.

"நீங்க இப்பப் போகலாம். உங்களிடமிருந்து தேவையான தகவல்கள் ஏற்கனவே எடுத்தாச்சு. உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்."

"கொஞ்சம்..." மாரியப்பன் பேச நினைக்கும்போதே அவன் மறைந்துபோனான். மீண்டும் ஒளி சூழ்ந்தது.

"வாத்தியாரே... சார், மாரியப்பன் சார்." ஏட்டுவின் குரல் கேட்டது. "சார் எந்திரிங்க."
மெதுவாகக் கண் திறந்தார்.

"ஒங்க தலையில க்ரிக்கெட்பால் பட்டு விழுந்திட்டீங்க. கார் கூப்பிடப் போயிருக்காங்க."

'இவங்க யாருக்குமே அன்னியர்கள் வந்து போனது தெரியல. அவங்க நினைவுகளை அழிச்சிருப்பாங்க.'

"ஏட்டு சார் எனக்கொண்ணுமில்ல லேசா தலைவலிதான். கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்க."

ஏட்டு புரியாதது போல விழித்தார்.

"என்ன சொன்னீங்க?"

"கொஞ்சம் தண்ணி கொடுங்க போதும்."

ஏட்டு மாரியப்பனின் பேரனைப்பார்த்துக் கேட்டார்.

"டேய்.. ஒங்க தாத்தாவுக்கு சமஸ்க்கிரதம் தெரியுமாடா?"


நன்றி: தமிழோவியம்

Tuesday, August 22, 2006

மான்ஸ்டர் - சிறுகதை

"இராவணனுக்கு பத்து தலையாம். பாக்கவே பயங்கரமா இருப்பானாம்." துளசி பாட்டி பேத்திக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.

தூங்கும்போது மட்டுமே கதை கேட்பாள் பேத்தி அனு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை. 'பெட் டைம்' கதைகள் கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம். துளசி பாட்டி ஊரிலிருந்து வரும்போதெல்லாம் அவர்தான் கதை சொல்லவேண்டும்.

"மம்மி, நீ எப்பவும் ஸ்னோ ஒயிட் கதையே சொல்லுற, பாட்டிதான் வேற வேற கதையா சொல்வாங்க." என அன்னையை ஒதுக்கிவிடுவாள்.

துளசி முடிந்தவரை தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லித் தருவார்.
'குழந்தைங்களுக்கு நம்ம தெய்வங்களப் பத்தி நாம சொல்லிக்கொடுக்கணும். வெறுமனே கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப்போயி வந்தா மட்டும் போதுமா? குழந்தைங்களும் எளிதா தெரிஞ்சுக்கணுங்றதாலத்தான் கதையா சொல்றாங்க.' துளசி மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுவார்,

'முன்னால நாங்க திருநாள் பெருநாள்னா கோவிலுக்குப்போயி கதாகாலாட்சேபமோ, கூத்தோ, டிராமாவோ பாத்து தெரிஞ்சுகிட்டோம். இப்ப டி.வி முன்னாலேயே காலம் போயிடுது. இந்தியாவிலயே இப்படீன்னா இங்க எப்படி குழந்தைங்களுக்கு நம்ம மதம் பத்தி தெரியும்?'

'அம்மா, இங்க குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தராங்களோ அதத்தான் நாங்களும் சொல்லித் தர்றோம். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. முதல்ல எங்க தலைமுறைங்களுக்கே இந்தக் கதைங்க நெறையா தெரியாது.' ஏதவது சொல்லி மழுப்புவான் மகன்.

"பத்து தலையா பாட்டி? டென் ஹெட்ஸ். அதெப்படி ஒரு ஆளுக்கு டென் ஹெட்ஸ் இருக்கும்?"

"அவர் வில்லன்மா அதுனால அப்டி சொல்லியிருக்காங்க. பத்து தலண்ண எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?"

"பாட்டி ஒனக்கு சிண்டரெல்லா கத தெரியுமா?"

"தெரியாதும்மா..."

"அந்த பொம்ம பொய்சொன்னா மூக்கு நீளுமே அந்தக் கத?"

"தெரியாதே. சரி இப்ப நான் சொல்ற கதையக் கேளு."

"ம்."

"இராவணன் லங்கையில அரசனாயிருக்கும் போது."

"லன்கையின்னா?"

"ஸ்ரீலங்காம்மா..அது ஒரு. நாடு இந்தியாவுக்குக் கீழ குட்டியா இருக்குமே."

"ஸ்ரீலங்காவா? என் ஃப்ரெண்ட் சிமிக்கும் அந்த ஊர்தான்."

"அப்போ அனுமான் சீதையத் தேடி லங்கைக்குப் போனாரு."

"மங்கி மாதிரி இருப்பாரே அந்த அனுமாரா?"

"ஆமா."

"ம்."

"இராவணன் அவையில அனுமாருக்கு ஒக்கார எடமே குடுக்கல."

"ம்."

"ஒடனே அனுமார் என்ன செய்தார் தெரியுமா? அவரோட வால நீஈஈஈஈளமாக்கி வட்டமா சுத்தி இராவணன விடவும் ஒசரமான இடத்துல ஒக்காந்தாரு."

"ம். எதுக்கு?"

"இராவணன் சீதைய அடச்சு வச்சிருந்தான்ல.. அவள விடுவிக்கணும்னு அட்வைஸ் சொல்றதுக்கு."

"எப்படி பாட்டி? மங்கி பேசுமா?"

"அனுமார அப்படிச் சொல்லக்கூடாதும்மா. அவர் சாமி."

"ம்."

"அனுமார் பேசுவார். அவரப் போல இருக்குற வானரங்கள் எல்லாமே அந்தக் காலத்துல பேசும்."

"வானரம்னா?"

"ம்ம்ம்ம்....மங்கீஸ்."

"ம்."

"அனுமார் ஒயரமான எடத்துல இருந்ததால இராவணனுக்கு கோவம் வந்து வால்ல நெருப்பு வச்சுட்டாங்க."

"ம்."

"அனுமார் வால்ல எரியுற தீய வச்சி லங்கையில பெரிய அழிவயே உண்டாக்கிட்டாரு."

"ம்..அப்போ வால்ல தீ எரிஞ்சா அனுமாருக்கு பெயின் இருக்காதா?"

"ம்.. அவர் தெய்வம்மா ரெம்ப ஸ்ட்ராங்கானவர் அனுமார். ஒரு மலையத் தூக்கிட்டே பறக்க முடியும் அவரால."

"பாட்டி நீ எப்பவுமே இப்டிக் கததான் சொல்லுற. நம்பவே முடியல. நான் தூங்கப் போறேன்."
கண்களை மூடித் தூங்க ஆரம்பித்த அனுவை கொஞ்சம் கோபத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார் துளசி.

'எப்படி இவங்க நம்ம நாட்டப் பத்தியும் நம் பாரம்பரியம், மதம், தெய்வங்களப் பத்தியும்
தெரிஞ்சுக்கப் போறாங்க?' யோசனையுடன் ஹாலிலிருந்த ஃப்யூட்டானில் படுத்து தூங்கிப்போனார்.

நள்ளிரவில் தன் அருகே யாரோ நின்று தன்னை தட்டுவதை உணர்ந்தார்.

"அனு... என்னம்மா தூக்கம் வரலையா?"

"பாட்டி என் கூட வந்து படுத்துக்கிறியா?"

"ஏம்மா?"

"என் ரூம் க்ளாசட்ல மான்ஸ்டர் இருக்குது."

Monday, August 07, 2006

உறவுகள்

"என் பேரு லீனா. எங்க வீட்டுல இன்னைக்கு கல்யாணம். எங்கக்கா இளவரசிக்கும் மாமா பீட்டருக்கும். ஐயோ, கல்யாணத்துக்கு முன்னாலயே மாமான்னு கூப்பிடவேண்டாமுன்னு அம்மா சொல்லியிருக்கு. பட்டுப் பாவாட சட்டையெல்லாம் போட்டுட்டு அழகாயிருக்கேன்ல? எல்லா கல்யாண வீட்டுக்கும் போகும்போதும் நம்ம வீட்டுல எப்ப இப்டி வரும்னு நெனைப்பேன். இப்ப எங்க வீட்லயே கல்யாணம் எவ்வளவு ஜாலி தெரியுமா. நாந்தான் வாசல்ல நின்னு பன்னீர் தெளிக்கணும்னு சண்ட போட்டு கேட்டு வாங்கிகிட்டேன். கற்கண்டு, எடுத்துக்குங்க."

"அங்க என்னடி வேடிக்க? ஓ நீங்களா.. தமிழ், நீ போயி அக்காவப் பாரு. ஒன்னக் காணோமேன்னு தேடுனா. நீ இதெல்லாம் பாக்கவேண்டாமின்னு சொன்னேனே கேட்டியா?

ஹலோ.. நீங்க இருக்குறத மறந்துட்டேன். என் பேரு சங்கீதா. கல்யாணப் பொண்ணோட அம்மா. இன்னைக்கு அவள் மனசுக்குப் பிடிச்சபடி, காதலிச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கப் போறா. எவ்வளவு சந்தோஷம். என் பொண்ணு ஒருத்திக்கு கல்யாணம்.

இந்தக் குடும்ப விவகாரதுல அவர் தலையிடுறதில்ல. அவர் வியாபாரத்தப் பாக்கவே நேரமில்லன்னு நொந்துக்குவார். இவ கல்யாணத்தப் பத்திக் கூட எல்லாம் முடிவு பண்ணப்புறந்தான் அவருக்குச் சொன்னேன். முடிவு பண்ண என்ன இருக்குது? ரெண்டுபேரும் ஒண்ணா வேல பாக்குறாங்க. ஒரே ப்ராஜெக்ட்ல. இவ லீடர். இந்தக் காதல் விவகாரத்தையெல்லாம் அவகிட்டையே கேளுங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. கல்யாணவீட்டுல வேலைக்காப் பஞ்சம். ஏய் இளவரசி, இவங்களுக்கு ஒன்னோட காதல் கதைய கொஞ்சம் சொல்லேன்."

"அதுவா? நான் லீட் பண்ணுற ப்ராஜெக்ட்ல இவர அசைன் பண்ணாங்க. ஐ.டிக்கு இவர் புதுசு. அதனால அடிக்கடி சந்தேகம் கேட்பாரு. பல நேரம் திட்டு வாங்குவாரு. கிராமத்துலேர்ந்து வந்தவர்னால இங்லீஷ் அவ்வளவா வராது. இத வச்சி எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவருக்குத் தனி அட்டென்ஷன் தர ஆரம்பிச்சேன். அப்புறம் ப்ராஜெக்ட்ல புரளி கிளம்பிடிச்சு. எங்க ரெண்டுபேரையும் சேத்துவச்சு ஈ மெயிலெல்லாம் ஓடுச்சு. நான் எதையுமே கண்டுக்கல ஆனா இவர் என்கிட்ட பேச ஹெசிட்டேட் பண்ணினாரு. அவரோட வெகுளித்தனமும், கத்துக்கணும் முன்னேறணுங்க்ற ஆர்வமும் என்ன அட்ராக்ட் பண்ணிடுச்சு. அப்புறம் என்ன, புரளியெல்லாம் உண்மையாயிடுச்சு. வீட்டுல, கிராமமாச்சேன்னு யோசிச்சாங்க. நாங்க ஐ.டி ல வேலபாக்குறோம் கிராமத்துக்கு எங்கே போய் செட்டிலாகப்போறோம்னு அம்மாகிட்ட சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிட்டேன். அதோ வர்றாறே கிச்சு மாமா அவர்தான் எனக்கு பர்ஸ்ட்லேர்ந்தே சப்போர்ட்."

"என்னடி கல்யாணப் பொண்ணு இவாகிட்ட நம்மளப்பத்தி என்ன கத விடறே?"

"இந்த கல்யாணம் உங்களாலத்தான் நடக்குதுன்னு சொன்னேன்."

"நமஸ்க்காரம். நான் கிச்சு. கிச்சுன்னா கிருஷ்ணமூர்த்தி. பொண்ணுக்கு மாமா மொற வேணும். செத்த ஒக்காந்து பேசலாமா? இவ பீட்டர் அம்பிய விரும்புறாங்கிறத யார்கிட்டயுமே சொல்லல்லை. நாங்களும் பொண்ணுக்கு வயசாயிடுத்தேன்னு வரன் தேட ஆரம்பிச்சுட்டோம். ஒரு வரன் ரெம்ப பக்கத்துல வந்துட்டா. இத முடிச்சுரலாம்னு நானும் சங்கீதாவும் முடிவு பண்னிட்டு திரும்பும்போது இவா ரெண்டுபேரும் பைக்குல போயிட்டுருந்ததப் பாத்துட்டோம். யார் அந்த அம்பின்னு காசுவலாத்தான் விசாரிச்சா . அப்புறம்தான் இவ உண்மையச் சொன்னா. சங்கீதாவுக்கு கோபம் வந்துடுத்து.' ஏண்டி, இவ்வளவு நாளா நாங்க வரன் பார்த்துக்கிட்டிருக்கச்சே நந்திமாதிரி இருந்துண்டு இப்போ இப்படி சொல்றயேன்னு சத்தம் போட்டா'. நாந்தான் அவள சமாதானப் படுத்துனேன், மட்டுமில்ல பையன் ஆத்துக்குப் போயி நானும் பொண்ணோட இன்னொரு மாமாவும் சம்மந்தப் பேசிட்டு வந்தோம். பொண்ணுக்கு மாமாமட்டுமில்லாம புரோகிதராவும் இந்தக் கல்யாணத்த நடத்திண்டிருக்கேன். அந்தா இருக்கார் பாருங்கோ காதர் பாய் அவர்தான் நான் சொன்ன இன்னொரு மாமா. அவர்கிட்ட கேளுங்க மீதி கதைய."

"வாங்க... காதர், பொதுவா பாய்னுதான் எல்லாரும் கூப்புடுவாங்க. பொண்ணுக்கு மாமா. எல்லா கதையுமே சொல்லியிருப்பங்களே. நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்துப் பெண்ண ஒரு கிறித்தவனுக்கு கட்டிவைக்கிறோமேன்னு யோசிச்சாங்க. அட நம்ம குடும்பத்தில எதுக்கு சாதி மதமெல்லாம் பாத்துகிட்டுன்னு நானும் ஐயரும் எல்லார் வாயையும் மூடிட்டோம். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.

நாங்க பாத்து வளந்த பொண்ணு. அவ சந்தோஷந்தான் எங்க சந்தோசமும். அல்லா அவளுக்கு ஒரு கொறையும் வைக்கமாட்டார். இங்க பொண்ணுக்கு தாத்தா, பாட்டி அத்த மாம, சித்தி சித்தப்பான்னு எல்லா மதத்துலேந்தும் இருக்காங்க எங்க குடும்பம் அப்படி. காலம் மாறிகிட்டே வருது பிறக்கும்போது ஒரு குழந்தையா, ஆடைகூட இல்லாத மனுசனாத்தானே பெறக்குறோம். மதமெல்லாம் நம்மள கட்டுப்படுத்த வந்த ஒரு வேலி. யாருக்கு எப்படி வேணுமோ அப்படி போட்டுக்கலாம் அந்த வேலிய. ரெம்ப பேசிட்டேனோ. வாங்க தாலி கட்டு நடக்கப் போகுது மிஸ் பண்ணிடப் போறோம்."

"ஹெலோ அகெய்ன். நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு இதோ எங்க வீட்ட விட்டு கிளம்பப்போறேன். சின்ன வயசுலேர்ந்தே இங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பல உறவுகளோட வாழ்ந்துட்டு அவங்களப் பிரிஞ்சு போறது எவ்வளவு கஷ்ட்டம். இந்த அத்தனை உறவுகளுக்கும் சேர்த்து அன்பு செய்ய என் கணவரால முடியுமா. தெரியல?

கல்யாணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவிதான். எப்படி ஒரு வீட்டுல திடீர்னு ஒரு நாள் போயி அந்த வீட்டு மனுஷியா வாழமுடியும்? பல சந்தேகங்கள மனசுல சுமந்துட்டுத்தான் இதோ கார்ல கிளம்பிட்டேன்.

அங்க பாருங்க என் சொந்தக்காரங்க எல்லார் கண்ணுலையும் கண்ணீர். காதர் மாமா கூட கலங்குவார்னு நான் எதிர்பாக்கல.

கார் கிளம்பிடிச்சு. சோகமான கையசைவுகளோட என் புதுப் பயணம் துவங்குது. 'ஜீவன் ஆதரவற்றோர் இல்லம்' போர்டு தொங்குது பாருங்க, ஊருக்குப் பொனதும் அம்மாவுக்குப் போன் பண்ணி அந்த ஆதரவற்றோர்ங்கிற வார்த்தைய அழிச்சுட்டு வெறும் 'ஜீவன் இல்லம்னு' வைக்கச்சொல்லணும். என்ன சொல்றீங்க?"

Wednesday, June 28, 2006

ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ...

எய்ட்ஸுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துள்ளார்கள் இன்னும் இந்த சாதாரண சளிக்கு இன்னும் மருந்து இல்லை. அதென்ன 'சாதாரண சளி'? அதாங்க Common cold.

கொஞ்ச நாளாய் பாடாய் படுத்தி எடுத்துவிட்ட சளியில் ஒரு கையில் நாப்கின் வைத்துக்கொண்டு இன்னொரு கையில் தட்டச்சியதில் வலதுகை நடுவிரலில் இரண்டு ரேகைகள் அழிந்துள்ளன. இதனால் என் தலையெழுத்து மாறியிருக்குமா என ஜோசியருக்கு ஈ மெயில் அனுப்புமுன் அவர் 'உங்களுக்கு இந்த சமயத்தில் 'சளி' முத்திப்போக வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னது நியாபகம் வந்தது.

இதெல்லாம் weather.com பாத்து சரியா சொல்கிற ஆள் ஜோசியத்தில் 'கோட்டை' விட்டுறார். அந்தக் கட்டம் கட்டமா போடுவாங்களே அந்தக் 'கோட்டைத்' தான் விட்டுட்டார்.

போன் போட்டு விஷயத்தச் சொல்லி, "சளிக்கு என்ன பரிகாரம்?", கேட்டதும் அவங்க அப்பாகிட்ட குடுத்துட்டார்.

'ஜோ' திலகம். முன்னால சோதிடத்திலகம்னு பேரு இப்ப சந்திரமுகி பாத்ததுலேந்து 'ஜோதிடம்' சுருங்கி 'ஜோ' ஆயிடுச்சு. "அது வந்து தம்பி என் பேரு கணே'சன்'." வேண்டுமென்றே 'சன்'னை அழுத்திச் சொல்வார்,"சன்... சூரியன். சூரியன்...சூர்யா. பேர் கூடப் பொருந்திடிருக்கு பாத்தியா?" இளமைத் துடிப்போட சொல்வார். இவரரிடம் நல்ல நேரம் பார்த்து என்னெல்லாமோ செஞ்சிருக்கேன். தெருமுனையில் திரும்பினதும் தலையில் அடித்துக்கொள்வேன்.

"ஜோ மாமா சவுக்கியமா?"

"சவுக்கியம்டா."

"இப்ப எழரை நாளா.."

"தெரியும்டா. ஏழரைன்னு எனக்கே சொல்றியா. அன்னைக்கே உங்கப்பங்கிட்ட அடிச்சு சொன்னேன் நீ எங்கயோ போயிருவன்னு. இன்னைக்கு அமெரிக்காவுல குப்ப கொட்டுற. சனிக்கு என்ன பெரிய பரிகாரம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் போய் சனிபகவானுக்கு நல்லெண்ணண தீபம் ஏத்த வேண்டியதுதான்".

"ஐயோ ஜோ மாமா சனி இல்ல சளி." எப்போதும் வரும் தும்மல் இப்ப வந்தா இவரு ஈசியா புரிஞ்சுக்கூவாரோ? கஷ்ட்டப்பட்டு தும்மிப் பார்த்தேன், பலனில்லை. "அச்சு", செயற்கையா ஒன்னு எதுக்கும் இருக்கட்டுமேன்னு போட்டு வைத்தேன்.

"சளியா அது நம்ம உள்துறை விவகாரம். ஏண்டீ...",ஐயையோ ஒரு சாதாரண சளிக்கு இத்தனை பாடா. "எப்ப பாத்தாலும் சீரியல். இங்கவாயேன் இந்த..இவனுக்கு சளியாம். அந்தக் கஷாயத்துக்கு பக்குவம் சொல்லு ஓடிவா."

மாமி டி விய போன் பக்கமா திருப்பி வச்சிருப்பாங்கபோல,"காய்ச்சலா?தலைவலியா? மூக்கடைப்பா?" டிவில கேட்டதுக்கு இயல்பாகவே,"ஆமாய்யா ஆமா." சொல்லிவைத்தேன்.

"என்ன பிராப்ளம்பா உனக்கு..", ஜோசியர் அம்மா.

"பயங்கர சளி. ", கஷாயத்துக்கு பக்குவம் சொல்லித் தந்தாங்க, குறிச்சு வச்சுகிட்டேன்.

"டேய். உன் வீட்டுல சன் டி வி இருக்குதே, செல்வி பாக்குறியா?"

"ஆமா பாப்பேன்"

"நேத்து எப்பிசோட்ல..."

"வேண்டாம்...", சினிமாவுல ஸ்லோ மோஷன்ல 'நோ...............'ன்னு கத்துறமாதிரி சொன்னேன்.
"உங்களுக்கு நேத்து வந்தது எனக்கு இன்னைக்குத்தான் வரும். கதைய சொல்லிராதிங்க."

"ம்ம் சரிடா பொழச்சுப் போ. உடம்ப பாத்துக்க. இந்தா உன் கிளாஸ் மேட்கிட்ட குடுக்கிறேன்." சந்திரன், ஜோ மாமாவின் மூன்றாவது பையன். என்கூட எல் கே ஜி லேர்ந்து படிச்சான். 'என் பையன் சாதகப் படி எங்கயோ போயிருவான்னாரு ஜோ மாமா. சொன்னதுபோல எட்டு படிக்கும்போது வீட்டவிட்டு ஓடிப் போய் ஒரு வருஷம் தேடி 'எங்கேயோ போயி' கண்டுபிடிச்சாங்க. இப்ப மெடிக்கல் காலேஜ்ல மாமா க்ளையண்ட் ரெக்கமண்டேசன்ல படிக்கிறான்.

"சொல்லுடா. என்ன ஏதாவது விஷேஷமா?"

"இல்லடா கொஞ்ச நாளா சளி. ஆபீஸ் போகாம வீட்டுல இருந்தது போர் அடிச்சுது. சரி உங்க வீட்டுக்கு சும்மா ஒரு கால் போட்டேன்".

"சளியா?" அட இவனுக்கும் ஏதாவது தோணிடுச்சா? மெதுவாகச் சொன்னான்,"ஒரு சின்ன பெக் பிராண்டிய லேசா சூடான தண்ணியில ஊத்தி அடிச்சுட்டு தூங்கினா போதும்." டாஸ்மார்க் கடைக்கு ப்ரிஸ்க்க்ரிப்சன் எழுதித் தரும் ஒரே டாக்டர் இவனாத்தான் இருக்கணும். இப்பத் தெரியுது ஏன் டாக்டர் கையெழுத்து ஏன் மோசமா இருக்குன்னு.

"ரெம்ப தாங்ஸ்டா. ட்ரை பண்ணுறேன்." கொஞ்சம் பேசிவிட்டு போனை வைத்ததும்,'இனி சனியே வந்தாலும் இந்த நம்பருக்கு போன்போடக்கூடாதுன்னு நினை...ச்ச்ச்சு... அப்படா இன்னுமொரு வானவில் தும்மல்.

பி.கு. நாலு நாளா வீட்டுல நிஜமாவே சளியோட படுத்துட்டேன். நாளைக்கு கட்டாயம் அபீஸ் போகணும். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்...ஒரு கையில இவ்வளவுதான் அடிக்க முடிஞ்சுது. இராகவனை கிண்டல் செஞ்சது எனக்கே வந்து முடிஞ்சுடுச்சு.

சிறில் அலெக்ஸ்