.

Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Monday, February 12, 2007

செய்திகள் வாசிப்பது ... - 2

முந்தைய குரற்பதிவு

அலசலில் இன்று...

1. தேன்கூடு கல்யாண் - ஒன்றுபடுவோம், செயல்படுவோம்

2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது

3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது

4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம்

5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி

6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது

7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி

Sunday, February 11, 2007

ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50" ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது.

இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.

இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். "இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது" (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.

இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, "Every run counts from now on", அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?

நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது. உதாரணத்துக்கு ஒரு தடிமனான வெளிப்புற விளிம்பு ஆகுதுன்னு வையுங்க. (திரும்ப படிச்சுப் பாருங்க புரியும்). என்ன அழகா அத அடிச்சார்னு சொல்வாங்க. (Thick outside edge). உண்மையில் பேட்ஸ்மேன் தடுமாறியிருப்பார். பாதி ஓடுனதுக்கப்புறம்தான் பந்து எங்க போனதுன்னு அவருக்கே தெரியும் ஆனா 'என்ன அழகா பந்த திசைதிருப்பி வழிகாட்டினார்'னு வர்ணிப்பாங்க.

அப்பீலுக்கு அவுட் குடுத்தா கட்டம் போட்டு காட்டி அவுட் இல்லன்னு நம்பவைப்பாங்க குடுக்கலேன்னா அவுட்டுன்னு நம்பவைப்பாங்க.

தேவையில்லாம அம்புக்குறியும் வட்டமும் போட்டு ஃபீல்ட் பொசிசன் சொல்லுவாங்க.

இதுகளக் கேட்டு கேட்டு கமெண்ட்ரிக்கு கமெண்ட் அடிச்சிட்டு எப்படியும் கெலிச்சுடலாம்னு இருக்கும்போது...

பேசாம ஒரிஜினல் ப்ளான்படி கேசினோவுக்கே போயிருந்திருக்கலாம். அங்கேயாவது The house always winsனு நமக்குத் தெரியும்.

இதுல புதுசா பவர்ப்ளே(Powerplay)ன்னு ஒண்ணு. நானும் ஏதோ பந்த சும்மா தூக்கிபோட்டு பேட்ஸ்மேன் four, sixனு அடிச்சுத் தள்றதுதான் 'பவர்' ப்ளேன்னு நெனச்சேன். அம்பயர் பெருசா வட்டம் போடும்போதே எனக்குத் தோணியிருக்கணும் அதுல ஒண்ணூமிலேன்னு.

இலங்கை வேகப் பந்து வீச்சாளர் ஒருத்தர் மாங்கா அடிக்கிறமாதிரி போடுறாரு. தலையெல்லாம் டை அடிச்சுகிட்டு வந்தாரே அவர்தான். இவருடைய ஆர்ம் அக்சன் பத்தி யாரும் கமெண்ட் அடிக்கல. ஏன்னா கை வளஞ்சிருக்குன்னு சொல்லி இலங்கைகாரங்க தப்பிச்சுக்குவாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல.

கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட 'அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு' சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)

ஸ்ரீசாந்த் அடிக்காமல்போன அந்த சிக்சரால் ஒரு இரவின் விழிப்பு வீணாப் போச்சு. இலங்கை டீம் தளராமல் விளையாடினர். They deserve it man! (or woman!).

Tuesday, February 06, 2007

செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி)

Thursday, September 28, 2006

நரகாசுரன்

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.

வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.

விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.

இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

விடாது கறுப்பு வரலாற்றைப் பற்றிய மறு பார்வை ஒன்றைத் தருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.

'ஒரு வடக்கன் வீரகாதா' மம்மூட்டி நடித்த மலையாளத் திரைப்படம். பெயர்போன இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவான திரைப்படம். இந்தப்படமும் வரலாற்றை மாற்றிப் பார்க்கும் ஒரு பார்வையைக் கொண்டது.
களரிப் பயிற்று வீரர்களை வைத்து காலாகாலமாக சொல்லிவரப் பட்ட வரலாற்றுக்(?) கதைகளே இவை.


சாந்து என்பவன் அந்த வரலாற்றில் வில்லன். தன் சொந்தக்கார வீரனுக்கு எதிராய் சதிசெய்து கொன்றவன். ஆனால் திரைக்கதை இவனை சூழ்நிலைக் கைதியாயும் குற்றமற்றவனாகவும் காண்பிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

வாசுதேவன் நாயர் சமூகத்தில் விலக்கப்பட்டவர்களைப் பற்றி திரைக்கதைகள் பல எழுதியுள்ளார். இவரின் படங்கள் அதிகம் சமூகத்தில் அடிவாங்கியவர்கள் பற்றியே இருக்கும். பெருந்தச்சன், பஞ்சாக்னி போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

இந்தப் படத்தில் யேசுதாஸ் பாடிய 'இந்துலேக கண்துறந்து' , 'சந்தனலேப சுகந்தம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் சில.

கிறீத்துவ நம்பிக்கையில் யூதாஸ் ஒரு பெரும் துரோகியாகக் காண்பிக்கப் படுவதுண்டு. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களில் இவர் இயேசுவுக்குத் துரோகியாகக் காண்பிக்கப் படுகிறார். சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவந்த யூதாசின் நற்செய்தி (Gospel) யூதாஸ் இயேசுவின் கட்டளைப்படி நடந்ததாகக் கூறுகிறது. இதில் வரலாறாக பைபிளில் தெரிவு செய்யப்பட்டவைகளே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. பைபிளில் தரப் பட்டிருக்கும் யூதாசின் இறப்பு பற்றிய தகவல்களே முரணானதாக உள்ளன.


நரகாசுரனின் கதையில் இன்னொரு சுவாரஸ்யம் தன் இறப்பை மக்கள் சிறப்பிக்கவேண்டும் என அவனே வேண்டியதாகச் சொல்வது. தேவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தைவிட நரகாசுரனின் நினைப்பதே தீபாவளியின் நோக்கமாகிவிட்டது.

அரக்கர்கள் தேவர்கள் என்பதை இனங்களாகப் பார்க்காமல் குணங்களாகப் பார்க்கும்போது எல்லோரிலும் அரக்கனும் தேவனும் ஒன்றாயிருப்பதைக் காணலாம். நம்மில் நொடியும், தினமும் நடக்கும் மனப் போராட்டங்களே காவியங்கள் சொல்லும் போர்கள். இதில் இரண்டுபக்கமும் அரக்ககுணங்களும் தேவகுணங்களும் செயல்பட்டன எனக் கொள்ளலாம்.

நமக்குள் இருக்கும் நல்லகுணங்கள் கெட்டவைகளை வெல்லும்போதெல்லாம் தீபவளியே.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு என்னெல்லாம் டிஸ்கி தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களோ அத்தனையும் நான் இட்டுவிட்டதாகக் கருத வேண்டுகிறேன்.

Wednesday, September 13, 2006

ஒருநாள் கழிந்தது.

மாங்கு மாங்குன்னு ப்ளாக் எழுதியும் பொழுது போகலியா? கீழேயுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்க.

'பண்ணி'யஸ்ட் விளம்பரங்கள். வாங்கும்போது குறைந்தபட்சம் விளம்பரத்த நெனச்சாவது சிரிக்கலாம். "The Product was crappy, but the ad was funny as hell".

தூசி படர்ந்திருந்த காரின்மேல் உங்க பேரை எழுதியிருக்கீங்களா? _____ உன்னை காதலிக்கிறேன் என பொறித்திருக்கிறீர்களா? குறைந்த பட்சம் ஒரு கோடாவது கிழித்திருக்கிறீர்களா? இவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க...

லிட்டில் ஜானின் சொந்தக்காரங்கள மாடலா வச்சு சில படங்கள் எடுத்திருக்கார் இந்த சக பதிவர். புதுசா காமெரா வாங்கியவங்க செய்து பாக்கலாம்.

A4 பேப்பர வச்சு ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம், ராக்கட் செய்யலாம், படகு செய்யலாம், அவசரத்துக்கு துடைக்கலாம் ஆனா இவரு சரியான 'வெட்டி'வேலப்பா.

சுவத்துல கிறுக்கினா அடிகிடைக்கும் ஆனா அழகா வரஞ்சா..?

இன்னும் பொழுது போகலியா? சரி இந்த விளையாட்ட ட்ரை பண்ணுங்க.

நீங்களும் மார்டன் ஆர்ட்டிஸ்ட் ஆகலாம். சும்மா எதையாவது கிறுக்கினாலே மார்டன் ஆர்ட் ஆகிடும். நிஜமாங்க! இங்க போயி எலிய (Mouse) உலாவவிடுங்க ஒரு 'க்ளிக்' செஞ்சா கலர் காட்டலாம். கடைசில ஓவியத்த சின்னக் குழந்தைங்ககிட்ட காட்டாதீங்க அப்புறம் வாரம் ஒருமுறை வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கவேண்டிவரும்.

உங்க பதிவின் தோற்றம்பற்றி கர்வம் உடையவரா? இதப் பாருங்க.

Thursday, August 10, 2006

தேன்கூடு போட்டி டாப் 10 - சீரியசா

பாபா போட்டி படைப்புக்களை அழகாய் விமர்சிக்கிறார். விகடன் விமர்சனக்குழு போல மதிப்பெண்கள் தருகிறார். சில நேரம் அதிகமாக எதிர்பார்க்கிறார் (விமர்சனத்துக்கே விமர்சனமா?) என்றபோதிலும் பொதுவில் ஏமாற்றவில்லை..

இதுவரை அவர் மொத்தம் 4க்கு அளித்துள்ள மதிப்பெண்கள் வரிசைப்படி.

ராசபார்வை... : என்ன உறவு ? - ------------------------'கொங்கு' ராசா-------சொந்தக்கதை---3.25
பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ்-----------------சிறுகதை---------3.25
உறவுகள் - ----------------------------------------------------ராசுக்குட்டி-----------புதுக்கவிதை--- -3.25
அஞ்சல் நெஞ்சுல - ----------------------------------அபுல் கலாம் ஆசாத்--ஒலிக்கவிதை----3
உறவும் பிரிவும் -------------------------------------------ராசுக்குட்டி -----------சிறுகதை--------3
சாயல் --------------------------------------------------------ஜெயந்தி சங்கர்------சிறுகதை---------3
எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா---------------சிறுகதை--------3
பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் --------------சிமுலேஷன்------சிறுகதை--------2.5
எண்ணம்: உறவுகளே! --------------------------- அபுல் கலாம் ஆசாத்------மரபுக்கவிதை---2.5
தேன்: உறவுகள் -------------------------------------------- சிறில் அலெக்ஸ்---சிறுகதை--------2.5
பொன்னியின் செல்லம்மா ...! ---------------------------- கோவி.கண்ணன்---சிறுகதை-----2.5
எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு... ----------அபுல் கலாம் ஆசாத்---புதுக்கவிதை--2
உறவுகள் ஒடிந்த பறவைகள் !!! ------------------------- --demigod ------------சிறுகதை----- 2
உறவுகளும் ஒற்றுமைகளும் -----------------------------சிவமுருகன்-----புதுக்கவிதை----2
அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - ------மானு ---yezhisai-----சொந்தக்கதை----1.5
நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் ---வள்ளி---yezhisai-----சொந்தக்கதை----1.5
என்ன உறவில் நான்... -----------------------------------மதுமிதா------------புதுக்கவிதை------1.5
சிந்திக்கலாமா?: பயணம் ---------------------------- எண்ணம் எனது------அறிபுனை----------1.5
உயிர் ------------இயக்குனர் - சுவாமிநாதன்------------ ராசுக்குட்டி-----விமர்சனம்---------1.5
உறவு..! ------------------------------------------- இரா.ஜெகன் மோகன்--------புதுக்கவிதை-----1.5
ஸ்மைல் பக்கம்: "உறவுகள்" - லிவிங் ஸ்மைல் வித்யா------------புதுக்கவிதை---------1.5
அப்பா.. --------------------------------தொட்டராய ஸ்வாமி-------------------புதுக்கவிதை------ 1.5
உறவில்லாத உறவு ---------------------------------- ஜெஸிலா------------புதுக்கவிதை--------1.5
சுகம் ------------------------------------------------------------- nirmal------------புதுக்கவிதை-------1.5
பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள் - மானு -----yezhisai----சிறுகதை-----------1
மழை: தாய் - உறவுகள் ----------------------------------- பிரதீப்------------புதுக்கவிதை--------1
உறவுகள் - ----------------------------------------SK------------------------வசன கவிதை------------1
------------அல்லது------------ மானங்கெட்ட உறவுகள்!!!! - luckylook-------சிறுகதை---------1
உறவுகள் -----------------------------------------------------------vaik------------சிறுகதை------------1
செம்புலப் பெயல் நீர் ----------------------- குமரன் எண்ணம்------------புதுக்கவிதை------1
இன்றும் --------------------------------------------------------------- கப்பி பய-------சிறுகதை----- 1
பேசலாம்: செக்ஸ் இல்லாத கதை ----------வா மணிகண்டன்------------சிறுகதை------1
பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! --------------- லக்கிலுக்------------சொந்தக்கதை-----1
சென்னைக் கச்சேரி: தீவுகள் ------------------------ தேவ்------------புதுக்கவிதை------------0.5
உறவுகள் ---------------------------------------------------- நிர்மல்------------சிறுகதை------------0.5
நிகழ்வுகள்: உறவு என்பதால் ------------ சிவமுருகன் நீலமேகம்------புதுக்கவிதை----0.5
தாய்மடி வாசம்-------------------------தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை---------0.5
தன்னலதாயின் உறவுகளில்.... ---தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை------------0
எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை------------கட்டுரை--------------0

கீழுள்ளவைக்கு மதிப்பெண்கள் தரவில்லை '?' போட்டுவிட்டார். என். சுரேஷ் உங்கள் பதிவில் சைட் பாரில் 'ஜோக்கர்' எனும் தலைப்புக்குக் கீழ் பாஸ்ட்டன் பாலாவின் பேயரைப் போடலாம் (நன்றி: விடாது கருப்பு). இதுதான் இப்போ ட்ரென்ட். அல்லது பாபா மதிப்பேண் வழங்கும்வரையில் தொடர்ந்து கவிதைகள் எழுதி பட்டியலை நிரப்பலாம்.

ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை
அவரகளும் நம் உறவினர்களே... என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை

Monday, August 07, 2006

'புள்ளி'யியல் ராஜாவுக்குப் பின்னூட்டம் வருமா?

நூறு பதிவுகள் போட்டதும் ஒரு சின்ன கணக்கெடுப்பு. பின்னூட்டங்களை அலசிப்பார்த்ததில் கிடைத்த தகவல்கள்.

மொத்த பதிவுகள் 100
மொத்த பின்னூட்டங்கள் 996 (யாருக்குக் கிடைக்குமோ அந்த 1000வது பின்னூட்ட வாய்ப்பு?)

பின்னூட்டப் புழு




எண்ணிக்கைப் பட்டியல்


பொதுவானவை - 224
சினிமா - 120
இலக்கியம் - 105
ஆன்மீகம் - 120
படப் பதிவுகள் - 54
அரசியல்/சமூகம் - 373
------------------------------------
மொத்தம் 996
------------------------------------





சராசரி பின்னூட்டங்கள்

பொதுவானவை - 14
சினிமா - 14
இலக்கியம் - 13
ஆன்மீகம் - 10
படப் பதிவுகள் - 8
அரசியல்/சமூகம் - 25



உப தகவல் தொகுப்பு
  • பின்னூட்டமில்லாத பதிவுகள் 16
  • குறைந்தபட்ச பின்ன்னூட்டம் 1 (0வை கணக்கெடுக்காமல்)
  • அதிகபட்சம் 55
  • முதல் பத்து 55, 50, 49, 45, 39, 36, 31, 31, 30, 29
  • முதல் பத்தின் கூட்டுத்தொகை 395
  • மீதம் 90ன் கூட்டுத்தொகை 601
  • முதல் பத்தின் வகைகள் சமூகம்/அரசியல் - 5 ; பதிவர் வட்டம் - 3; சினிமா - 1 ; ஆன்மீகம் -1

நன்றி: புள்ளியியல் ஆசிரியர் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் எல்.

Friday, July 28, 2006

யரலவழல

கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.

தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம்.

குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.

இலவச அரசியலில், பண்ணையார்களுக்கு கடன் தள்ளுபடியும், தண்ணீர் விற்பனைக்கு இலவச மின்சாரமும் தந்துதவ யாரிடம் வசூலிக்கப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் நடத்தும் வியாபரங்களிலுருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் பங்குகளை விற்றும் பண உதவி செய்வார்களோ என்னவோ.

தமிழில் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் கெசட்டில் அறிவிக்க கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது (440லிருந்து ரூ. 50 ஆக). தன் சொந்தப் பெயரை தமிழில் ஒருவர் மாற்றிவைத்துக் கொள்வாரானால் அவருக்கு அரசு ரூ. 50 வழங்கவேண்டும். அதுதான் தமிழ் வளர்க்கும் வழியாயிருக்கும். (நான்கூட என் பெயரை கலைஞர் தாசன் என மாற்றிக்கொள்வேன்.... இல்லை ரூ.50க்காக பெயரை மாற்ற முடியாது).

திரைப் படங்களுக்குச் சலுகை வழங்குவதைப் போலவே
வியாபாரக்கூடங்களுக்கும் வழங்கலாமே. 'நாடார் அண்ட் சன்ஸ்' மாற்றி 'நாடாரும் மகன்களும்' என வைக்கவும் 'நாயுடு ஹால்' 'நாயுடு (தமிழா?) அரங்கமாகவும்' மாறும். இதன் மூலம் சன் டி.வி கூட பெரிய பலனை அடையும்.

தமிழில் சினிமா பெயர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன 1652 தாய்மொழிகள் இருக்கின்றன எதை வளர்ப்பது எதை விடுப்பது. 'தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள எல்லா மொழிகளும் அதன் இலக்கியங்களும் பாதுகாக்கப்படும்', என்பதுதான் சனநாயகம்.

தமிழை வைத்து அரசியல் செய்துகொண்டு தமிழைக் காக்கிறோம் எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிரூக்கிறோமோ எனத் தோன்றுகிறது.

அடுத்தது என்ன மம்மி டாடி எனச் சொல்லாமல் அம்மா அப்பா எனக் கூறும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் இலவசமா?

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரீம் ஸ்டார்கள் எனப்படும் நடிகர்களுக்குத் தடை வந்தாலும் வரும்.

தலைப்பு? அடுத்து வரப்போகும் படத்தின் பெயர்தான்.

<<<<<<<<<<<உள்ளலின் பதிவு.>>>>>>>>

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

Friday, June 02, 2006

என்ன'டா' வின்சி கோட்?

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்).

திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி.

பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. பலருக்கும் ஏன் கிறீத்துவர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான மேலோட்டமான காரணங்களே தெரிந்துள்ளன அவற்றில் சில.

1. இயேசு திருமணமானவர் என நாவல் கூறுகிறது.
2. அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறது
3. ஒப்பஸ் டெயி (Work of God) கத்தோலிக்க இயக்கத்தை வில்லத்தனமான இயக்கமாக காண்பிக்கிறது.
4. கிறித்துவ சாமியார் ஒருவர் கொலை செய்வதாய் சொல்கிறது
5. இயேசு கடவுள் இல்லை என்றும் அவரது கடவுள் தன்மையை ரோமன் பேரரசர் காண்ஸ்டாடைன்தான் நிறுவினார் என்கிறது நாவல்.
6. உலக மதங்கள் எல்லாமே மனிதனின் கற்பனையில் உருவானவை என்கிறது நாவல்.

இவையே மேலோட்டமான சில காரணங்கள். சில நேரம் இதைப் படித்தால் பலருக்கும் அதனாலென்ன திருமணம் செய்வது குழந்தை பெறுவதும் பாவமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றும்.

இயேசு திருமணமானவர் என்பதை ஏற்றுக்கொள்வது அவரின் கடவுள் தன்மையை பாதிக்கிறது. யூத வழியில் வந்த இயேசு தானே கடவுளின் மகன், மீட்பர் என்கிறார். யூத கடவுளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. திருமணம் உலக வாழ்வின் முழுமையை வெளிப்படுத்துகிறது. திருமணம் ஆகாத ஆன்மீகவாதிகளுக்கு ஊரில் இருக்கும் மவுசு உங்களுக்குத் தெரிந்ததே. இயேசு திருமண பந்தத்தில் ஈடுபட்டார் என்பது அவரும் நம்மைப்போல் முழுமையாக வெறும் மனிதன் எனக் கூறுவது போலாகிறது.

இது கிறித்துவ நம்பிக்கையின் அடி வேரில் கோடாரி வைக்கிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றையும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது, கேலி செய்கிறது.

இயேசுவுக்கு திருமணமானதாக எந்த நற்செய்தியுமே(Gospel) கூறவில்லை. நற்செய்தி என்பது மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜாண் எழுதிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி அல்லது அண்மைக்கால குறிப்புக்கள், புத்தகங்கள். இவைதான் புதிய ஏற்பாட்டின், பைபிளின், கிறித்துவ நம்பிக்கையின் அடித்தளங்கள். இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள் திருத்தப்பட்டன அல்லது உண்மையில்லாதன எனபது போலாகும். நான்கு வேதங்கலும் பொய் சொல்கின்றன எனச் சொல்வதோ அல்லது கீதை வெறும் கதை என்பதோ குர் ஆன் கடவுள் தந்ததல்ல என்பதோ எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வீரியமானது இந்தக் குற்றச்சாட்டு.

ஓப்பஸ் டெயி ஒரு கான்சர்வேட்டிவ் கத்தோலிக்க குழுமம். நம்மூரில் அலகு குத்துவதையும் தீக்குள் இறங்குவதையும் ஆன்மீக வெளிப்பாடாய் காட்டுவது போல ஒப்பஸ் டெயி சில தொன்மையான உடல் வலி மூலம் இறைவனைக் காணும் வழியை பின்பற்றுகிறது. இது இவர்களில் வெகு சிலரே பழகும் ஒரு முறை. மற்றபடி ஓப்பஸ் டெயி எல்லா நிலையிலும் எப்போதும் இறைவனைக் காணத் தூண்டும் ஒரு நிறுவனம்.

வெளிப்படையாகவே நாவல் இயேசுவின் தெய்வத்தன்மை மனிதனால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு ஓட்டெடுப்பில் உருவாக்கப்பட்டது என்கிறது. இதைவிட பெரிய காரணம் தேவையில்லை என்னைக்கேட்டால். இதைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் http://www.y-zine.com/monalisa2.htm.

பலரும் கவனிக்க மறந்த அல்லது வசதியாக மறைத்துவிட்ட செய்தி என்னவென்றால் நாவலில் ஒரு பகுதியில் உலகின் எல்லா மதங்களுமே மனிதன் நிறுவியவைதான், காலத்தினால் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான் என சொல்லப்படுகிறது. கிறித்துவத்தை மட்டும் டான் பிரவுன் தாக்கவில்லை. அவருக்கு எந்தக் கடவுள் எப்படிப் போனால் என்ன நாவல் விற்று காசு கிடைத்தால் போதும்.

சரி நாவல் எப்படி இருந்தது? உண்மையில் இந்த நாவல் மிக வேகமாக நகரும் அருமையான த்ரில்லர். நம்மூரில் துப்பறியும் சாம்புவையே விழுந்து விழுந்து படிக்கிறோம் இது சாம்புவை டீ சமயத்தில் ஸ்னாக் போல சாப்பிட்டு ஏப்பம் விடும்.

Sidney Sheldon in fast forward. இதுதான் என் கருத்து. ஆனாலும் திரும்பத் திரும்ப குறியீடுகளை அவிழ்ப்பதும் உடைப்பதும் கடைசியில் புளித்துவிடுகிறது. அதுவும் என்னைப்போல பாத்ரூமில் பகுதி பகுதியாய் பதினைந்து நாள் படித்தால் புளிப்பு அதிகமாகிறது.

அதிவேக த்ரில்லருக்கான எல்லா தகுதியும் நாவலுக்கு இருக்கின்றன. அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமாதடை? இல்லை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அமெரிக்க பிரிட்டன் போன்றவற்றை கிறித்துவ நாடு என்று சொல்லமுடியாது. அப்படி அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக 'western thought'ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

இந்திய கிறீத்தவர்கள் ஏன் தடை கோருகிறார்கள? பொதுவாக மேற் கூறிய காரணங்களுக்காக. உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இல்லை என் கடவுளை மறுப்பவனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குது என வெகுசிலராலேயே ஏற்றுக்கொள்ள முடிகிறது.

டா வின்சி கோட் கற்பனை கதை என்பதில் ஐயமில்லை. அதில் வரும் இயேசு பற்றிய பல கருத்துக்களும் Legends எனப்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையிலான (கட்டுக்)கதைகள் மற்றும் சில Conspiracy Theoryகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை பல வரலாற்று ஆதாரங்களுடன் பலர் நிருபிக்கிறார்கள். (பார்க்க பாஸ்டன் பாலவின் பதிவு)

கீதை எனப் படப்பெயர் வைப்பதையே நம்மவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் எனும்போது இது போல ஒரு படத்தை நம்மவர்கள் அனுமதிப்பார்களா? கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று.

நாளைக்கே டான் பிரவுன் இந்து அல்லது முஸ்லிம் மதக் குறியீடுகள் பத்தி நாவல் எழுதலாம். ருஷ்டி போல புகழின் உச்சியை உடனே அடைய எளிய வழி வேறென்ன?

(யாரையும் குத்திக் காட்டவோ தர்க்கம் செய்யவோ இதை எழுதவில்லை - டிஸ்க்ளெய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே)

Tuesday, March 21, 2006

பட்டியல்

மீண்டும் ஒரு ரவுடிக் கதை என்று சொல்ல முடியாத படம். காட்சியமைப்புக்கள் உண்மைக்கருகிலுள்ளன. இசை, படத்தொகுப்பு, கலை என எல்லாமே முழுமையாய் ஒன்றிணைந்திருக்கின்றன.

கதை ரெம்ப புதுசு என்றில்லை. காசுக்கு கொலை செய்யும் இரண்டு அடியாள் நண்பர்கள், அவர்களின் காதலிகள், இவர்களுக்கு 'வேலை' வாங்கித்தரும் 'கொலை'த்தரகர் மற்றும் இவர்களால் கொல்லப்படுகிற சிலர் என சிறிய வட்டத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.

வெறும் திரைக்கதையையும் காட்சியமைப்பையும் நம்பி எடுக்கப்பட்ட படம். கடைசிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி இல்லமல் ஓடுகிறது, இறுதியில் வைக்கப்படும் ஒரு சிறு முடிச்சு தவிர.

எல்லொரின் நடிப்பும் அபாரம். ஆர்யா பத்மப் பிரியா காதல் வல்லினம், பரத் பூஜா காதல் மெல்லினம்.

பரத், ஆர்யாவின் வீடு துவங்கி எக்ஸ்போர்ட் கம்பனிவரை எதார்த்தமான சூழலில் படமாக்கம் நன்றாயிருக்கிறது. தொழில் நுட்ப நேர்த்தி அசரவைக்கிறது.

ஹனிபாவிற்கு தமிழில் மீண்டும் ஒரு அருமையான பாத்திரம், அழகாய் செய்திருக்கிறார். அவரிடம் அடிக்கடி வேலை கேட்கும் பையன் நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்பிரியா கலக்கியிருக்கிறார், 'தவமாய் தவமிருந்து' பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமளிக்கக்கூடும். பரத் ஊமை+செவிடாய். ஆர்யா பரத்திற்கும் சேர்த்து பேசித் தீர்க்கிறார். இருவர் நடிப்பும் அருமை.

இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கு பாராட்டுக்கள். நிச்சயமாய் இது ஒரு இயக்குநரின் படம். படத்தின் முடிவை மிகவும் ரசித்தேன். ராம் கோபால் வர்மாவை ஏனோ நினைவூட்டுகிறது இந்தப் படம்.

Tuesday, March 07, 2006

இலக்கு என்ன?

கல்லூரியில் மாணவர் அமைப்பு ஒன்றுக்கு தலமை தாங்கியிருந்தேன். முதல் நாள் கூட்டத்தில் அமைப்பை வழிநடத்தும் ஆசிரியர் சொன்னது, "எந்த ஒரு (சமூக) அமைப்பும் தன் இலக்கை அடைய ஒரு கால வரையறை வைத்துக்கொள்ளவேண்டும். இன்னும் மூன்று வருடங்களில் இந்த ஊரில் தண்ணீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது, அல்லது 5 வருடங்களில் இந்த ஜாதியினர் செருப்பு போட்டு ஊரில் சைக்கிள் மிதித்துச் செல்ல வழிவகுப்பது எனபது போல. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்தில் அடையவில்லையேல் அந்த அமைப்பு கலைக்கப்படவேண்டும்".

தலீத் இயக்கங்களின் இலக்கு(கள்) என்ன? தலித்துகளை திரட்டி அரசியலமைப்பாக மாற்றுவதா? அவர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதா? தீண்டாமையை ஒழிப்பதா? இல்லை பிராமணர்களை திட்டித் தீர்ப்பதா?

தலித் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் பலரும் வெறும் பிராமணர்களை திட்டித் தீர்ப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர். மலையேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படித் தன் சக்தி முழுவதையும் சேகரித்துக் கொள்ளவேண்டிய கட்டயம் உள்ளதோ அதுப்பொலத்தான் முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயமும், சமூகமும் தன் முழு சக்தியையும் தன் இலக்கு நோக்கி செலுத்தும் கவனம் தேவை.

தன் சக்தியெல்லம் பிறரை திட்டுவதிலேயே செலவிட்டுவிட்டால் எப்படி முன்னே செல்வது?

பிராமணர்களை திட்டித்தீர்க்கும் சிலர் தென் மாவட்டங்களில் தலீத்களின் உரிமையை பறித்து ஒடுக்கப்பட்டவர்களின் உயிருடன் விளையாடிக்கொண்டிருக்கும் சில சாதியினரை கண்டுகொள்லாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்?

பிராமணர்கள் இன்னும் பேதம் பார்க்கிறார்களா? நாமேதான் நமக்குள் ஆயிரம் பிரிவுகளை வைத்துக்கொண்டு செயல்படுகிறோம். சாதி அமைப்புகளை வெறுப்பவர்கள் நாமானால் ஏன் இன்னும் சாதி பெயர்களில் இயங்கும் அமைப்புகளை கொண்டுள்ளோம்?

நம் வீட்டிலேயே ஏழை உறவுக்காரப் பெண்பிள்ளைகளை வேலைக்காக வைத்து அவர்களின் எதிர்காலங்களை நாசம் செய்வதில்லையா? நம்மிடம் உதவி கேட்டுவரும் நம் சாதிக்காரன் ஏழை என்பதால் நம்மிடம் பணிந்து போகவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லையா? பணக்காரனுக்கு ஒன்றும் பாவத்திற்கு ஒன்றுமாய் நாம் நடந்துகொள்வதில்லையா? இப்படிப்பட்ட நேரங்களில் பிராமணர்களை எதற்காக வெறுக்கிறீர்களோ அதாகவே நாம் மாறுகிறோம்.

நம் இலக்கு முன்னேற்றம். வாழ்க்கை தரத்தை உயர்த்திப்பாருங்கள் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். பிராமணர்கள் மட்டும்தான் முன்னேற தடையாக இருக்கிறார்கள் என எண்ணுவது கண்களுக்குத் திரையிட்டுக்கொள்வது. சரி பிராமணர்களை அழித்துவிட்டால் மற்றவர்கள் முன்னேறிவிடுவார்களா?

மனிதர்களை எப்படிவேண்டுமென்றாலும் பிரிக்கலாம். சாதி மட்டுமல்ல பிரச்சனை.

சாதியை முன்னேற்றத் துவங்கிய கட்சித் தலைவர்கலெல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டன நாம்தான் இன்னும் டீ கடைகளிலிருந்தே விலக்கப்பட்டிருக்கிறோம்.

இத்தனை கால தலித் எழுச்சியில் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு போல ஏன் இந்த இயக்கம் கொழுந்துவிடவில்லை? நம் தலைவர்கலுக்கே தெரிகிறது, நாமெல்லாம் முன்னேறிட்டா அவர் வேலை போயிரும்.

ஒடுக்கப்பட்டவர் எல்லோருமே தலித் எனக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவன் என்பதற்கு மேலாய் எந்த ஒரு அடையாளமும் நமக்குத் தேவையில்லை. நம் பெயர்களிலிருந்து சாதியை விரட்டவேண்டும், நம் மனத்திலிருந்து விரட்டவேண்டும்.

முன்னேற்றம் பெற்ற ஒவ்வொருவரும் இன்னொரு கூடும்பம் முன்னேற உழைத்தாலே போதும் இன்னும் 20 வருடங்களில் ஒடுக்கப்பட்டவன் என யாரும் இல்லாமல் போகும்.

கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.

Friday, March 03, 2006

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

இது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

ஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.

தமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.

கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் 'பங்கு' என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு 'பங்கு'(Parish).

பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில், அண்மையில், சில மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டாற்று மறைமாவட்டம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள
பங்குகளின் கூட்டமைப்பாக இருந்து வந்தது . நாடார்கள் அதிகமான பகுதிகளையும் கடற்கரை ஊர்களில் வாழும் பரவர், முக்குவர் எனும் மீனவர்களின் இனங்களையும் பிரித்து இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. இதுபோலவே தூத்துக்குடியிலும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை.

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர்கள் பல விதமான தொல்லைகளுக்கும் மேலிருப்பவர்களின் வெறுப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி ரோமுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன இருப்பினும் வழக்கம்போல ரோம் தன் பாதிரிமார்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.

வேற்றுசாதியில் கிறித்துவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இது நிச்சயம் மதம் சார்ந்த கொள்கை இல்லை, முற்றிலும் சமூக உளவியல் சார்ந்த முடிவு என்றாலும் இத்தகைய மனப்பாங்கை நீக்க கத்தோலிக்க குருமார்களும் மதமும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.

பல சமூகவியல் மாற்றங்களை கிறித்துவ மதம், கிறித்துவர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது என்பதும் அதற்கான பலமும் அமைப்பும் முற்றிலும் அதற்கு உள்ளது என்பதும் உண்மை. இருப்பினும் சாதி அமைப்புகளை எதிர்க்காமல் அவற்றை தத்தம் உபயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் கிறீத்துவர்களும், குருக்களும்.

கோவில்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.

'சாதி கிறித்துவர்கள்' எனும் ஒரு பதம் இருப்பதே எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

'விரியன் பாம்பு குட்டிகளே' என இயேசு அன்று யூத மத தலைவர்களை திட்டினார்,'கடவுளின் கோவிலை வியாபாரக் கூடாரமாக்காதீர்கள்' என்று சாட்டை கொண்டு கோவிலில் கூடியிருந்த வியாபாரிகளை விரட்டினார். இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ.

இயேசுவுக்குத்தான் வெளிச்சம்.

Thursday, February 02, 2006

"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."

சன் டி.வியின் சிறப்புப்பார்வையில் 'கணிணியில் விளையாடுவது குழந்தை, சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு' போன்றதொரு தொகுப்பைப் பார்த்தேன்.

ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.

ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார்.

தொகுப்பாளர், 'இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்' என ஏதோ 'அப்படியே சாப்பிடலாம்' தொனியில் பேசினார்.

மாறனின் மலிவு விலை கணிணி திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கணிணிவிளையாட்டுக்கள் மூளை/அறிவு வளர்ச்சிக்கு சிறந்ததா? பெரிய கேள்வி.

இந்த சுட்டியில் இது பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை ஆங்கிலத்தில் பார்க்கலாம். இதற்குப் பதிலடியும் அதிலேயே இடுக்கிறது

என்ன சொல்கிறது ஆராய்ச்சி - அதீத கணிணி விளையாட்டுப் பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று.

எனக்குத்தெரிந்த சில தகவல்கள் கீழே,

கணிணி விளையாட்டுப் பழக்கமுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை, இரவு தூங்க நேரம் எடுத்துக்கொள்கிரார்கள், இவை உடல் நலனை பாதிக்கிரது.

பெற்றோருக்கும் குழந்தைகளூக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.

பொதுநல எண்ணங்கள் போய் தான் தனது என்ற மனநிலை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு.

உலகைப்பற்றிய அறிவை வெறும் ஒளிப்புள்ளிகளை(Pixel?) பார்த்தே தெரிந்துகொல்கிறார்கள். சிங்கத்தை பார்த்து லயன் கிங் என்கிறான், கொரில்லாவை கிங் காங் என்கிறார்கள். ஒரு மாய உலகத்தையே மென் விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன.

குறைந்த பட்ச நண்பர்களையே கொண்டுள்ளனர்.

வெளியே, ஊருக்கோ, சுர்றிப்பார்க்கவோ போக மறுக்கிறார்கள். இதை சில பெற்றோர்கள் நல்லதுதான், நாம தனியா என்ஜாய் பண்னலாம் என நினைக்கிரார்கள். என் ஜாய் மட்டுமே முக்கியம் ஒன் ஜாய்க்கு கம்புயூட்டர் இருக்குதே என்பது தான் இவர்களின் போக்கு.

கம்பூட்டர் கேம்ஸ் - நம் வாழ்க்கைகளை ஊடுறுவப்போவது உறுதிதான். ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். எல்லா விளையாட்டுக்களும் எல்லாருக்கும் உகந்தல்ல. இதற்கென வார இறுதிகளில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு போன்ற ஈடுபாடாவது தேவை. அவர்கள் விளையாடும்போது அந்த அறையிலிருந்தபடி நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருக்கல்லாம்.

அறிவு வளர்ச்சிக்கான, கணிதம் மற்றும் மொழி பாடங்களின் அடிப்படையில் சில மென் விளையாட்டுக்களுளன இவை அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் உதவலாம். ஆனால் படிப்பறிவு மட்டும் ஒரு முழுமனிதனை உருவாக்க முடியாதே.

சன் டி.வி எதற்கு திடீரென இப்படி ஒரு தொகுப்பைத் தரவேண்டுமென்பதற்கு உள் அர்த்தமிருக்கலாம். இப்பெல்லாம் இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தமிருக்கிறது. இதே தொகுப்பில் கணிணி விளையாட்டுக்களால் வரும் தீங்கையும் அதை சரிசெய்யும் முறைகளையும், கவனமாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருந்தால் தொகுப்பு முழுமையானதாயிருக்கும்.

பிள்ளைகள் விளையாட இடமில்லாதபடி ஊரமைப்பும், பள்ளிகளும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவந்து கம்பூட்டர் கேம்ஸ் ஆடிக்கொண்டிருகின்றனர் பிள்ளைகள். குழந்தைகள் பலர் ஊரிலிருந்துவரும் நம் சொந்தக்காரர்கள்கூடப் பழகவே தயங்குகிறார்கள்.

முன்பெல்லாம்,"அம்மா சுப்ரமணியன் என்ன கிள்ளிட்டான் என அழுது வரும் பிள்ளைகள் இனி,"அம்மா, சூப்பர்மேன் என்ன சுட்டுட்டான்னு" வந்து நிக்குமோ என்னவோ?

More Links on CGs
http://www.timesonline.co.uk/article/0,,2-1976339,00.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3485918.stm
http://news.bbc.co.uk/2/hi/health/4594376.stm

மிச்சத்தத கூகிளில் தெடுங்களேன்...:)

Wednesday, February 01, 2006

ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு

நேற்று இரவு (31/01/06) ஜார்ஜ் புஷின் இந்த ஆண்டுக்கான State of the Union உரை பார்க்க நேர்ந்தது. இதைப் பற்றி யாராவது பதிப்பார்கள் எனப் பார்த்தேன். இன்னுமில்லையாகையால் தமிழில் இவர் பேசியதன் சாரம் பதிக்கிறேன்.

State of the Union ஒவ்வொரு வருடமும், நாட்டின் நிலைப்பாடுகள், கொள்கைகள், மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கும் உரை. நேற்றைய உரையின் சாரம் கீழே.


நேற்று இயற்கை எய்திய மார்டின் லூதர் கிங்கின் மனைவி கொரெற்றா ஸ்காட் கிங்கிற்கு அஞலியுடன் உரை துவங்கியது

* உலகநாடுகளை அரசியலிலும் பொருளாதாரத்திலும் வழிநடத்துவதே அமெரிக்கா தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தியாகும்

* சர்வாதிகாரிகள் தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தயும் ஆதரிக்கிறார்கள், மக்களாட்சி உலகெங்கும் மலருவதே அமெரிக்காவிற்கு பாதுகாப்பு

* அடிப்படைவாத இஸ்லாம் (radical Islam) சுதந்திரத்தை எதிர்க்கும் ஒரு முக்கிய மூலமாக உள்ளது, இந்த உன்னத நம்பிக்கை மரபை (இஸ்லாம்) ஒருசிலர் தீவிரவாத, கொலைபாதக கோட்பாடாக மாற்றிவருகின்றனர்.
(No one can deny the success of freedom, but some men rage and fight against it. And one of the main sources of reaction and opposition is radical Islam -- the perversion by a few of a noble faith into an ideology of terror and death. )

*தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி உலகநாடுகளைத் தாக்க அதைத் புகலிடமாக ஆக்கப் பார்க்கிறார்கள்... அவர்கள் தவறாகக் கணக்கிடுகிரார்கள்; நாம் நம் சுதந்த்திரத்தை நேசிக்கிறோம் அதை தக்கவைத்துக்கொள்ள போரிடுவொம்....பின்வாங்குவதில் அமைதி இல்லை மேன்மையில்லை.

* தீவிரவாதிகள் பயமுறுத்தலை ஆயுதமாகக் கொண்டுள்ளார்கள்....நம் படைவீரர்கள் தியாகங்கள் பல செய்கின்றனர் அவர்களின் கடமை உணர்வு எல்லா பயங்களையும் விட மேலோங்குகிறது

* தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஒரே வழி அரசியல் சுதந்திரம் அளிப்பதுதான்...அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் மலர ஆசைப்படுகிறது.

* பாலஸ்தீன மக்கள் தேர்தலில் வாக்களித்துள்லார்கள், ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரயேலை அங்கீகரித்து ஆயுதங்களை களைந்து, தீவிரத வாதத்தை கைவிட்டு அமைதிக்காக பாடுபடவேண்டும்

* ஈரானில் இப்போது ஒரு சிறிய மதகுருக்களின் குழு மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்குகிறது. பலஸ்தீன் மற்றும் லெபனானில் தீவிரவாதத்தை வளர்க்கின்றது. ஈரான் தனது அணுசக்தி ஆசைகளால் பிற நாடுகளை சோதிக்கிறது... இன்று ஈரான் மக்களிடம் நேரடியாக சொல்லிக்கொள்கிறேன், அமெரிக்க உங்களுக்கு மதிப்பளிக்கிறது உங்கள் சுதந்திரத்தை விரும்புகிறது. ஒருநாள் அமெரிக்கா ஜனநாயக ஈரானின் சிறந்த நண்பனாக மாறும்.

* அமெரிக்க பொருளாதாரம் தலைசிறந்து நிற்கிறது, ஆனால் நாம் இது போதுமென்று இருந்துவிட இயலாது. மாற்றங்கள் நிறைந்த உலக பொருளாதாரத்தில் நாம் சைனா, இந்தியா போன்ற புதிய போட்டிகளை சந்திக்கிறோம்.

இதன் பிறகு பேச்சு அமெரிக்க உள்நாட்டு விவகாரம் பற்றி இருக்கிறது.

* அமெரிக்கா (எரிபொருள்) எண்ணைக்கு அடிமையாகியுள்ளது...புதிய (எரிபொருள்) தொழில்நுட்பங்கள் 2025க்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த்து எண்ணை இறக்குமதியை 75% குறைக்கும்.

* மனித உயிர் கடவுளின் பரிசு...இத்தப் பரிசு ஒருபோதும் தூக்கிஎறியப்படவோ, குறைத்து மதிப்பிடப்படவோ, விலைக்கு விற்கப்படவோ கூடாது.

பேச்சின் முதல் பாதி முழுக்க இவரின் வழக்கமான 'சுதந்திரம்' பற்றிய பேச்சும், அமெரிக்கா உலக போலிஸாக திகழ்வது எப்படி என்பதுபற்றியுமே இருந்தது.

எந்தெந்த அரசு என்னென்ன செய்யலாம் என இவரே சொல்லிவிடுவார். அப்படித்தான் பாலஸ்தீனத்தையும், ஈரானையும் மிரட்டுகிறார். உலகெல்லாம் ஜனநாயகத்தை எற்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமென்கிறார். ஜனநாயகமென்றால் அவரவர் நாட்டுமக்களுக்கான ஆட்சி, ஆனால் அமெரிக்க சொல்படி கேட்கிற ஆட்சி என்று புஷ் நினைக்கிறார்.

உள்நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கு பதில் சொல்லவேயில்லை. கத்ரினாவுக்கு 85பில்லியன் நிவாரணம் கொடுத்ததகச் சொன்னவர் அரசின் நிவாரணப்பணி தோல்விக்கு மன்னிப்புக் கோரவில்லை.

தீவிரவாதிகள் பயத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகக் கூறும் இவர்தான் அடிக்கடி மஞ்சள் சிவப்பு பச்சை என மக்களுக்கு கலர்புல்லா பயம் காட்டிவருகிறார்.

ஒரு இரயில் கவிழ்ந்தால் நம்மூரில் மந்திரி ராஜினாமா செய்கிறார், ஆனால் உலக வர்த்தக மையத் தகற்பின்போது ஜனாதிபதியாக இருந்த இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னடா சனநாயகமிது.

'சின்னச் சின்ன சுதந்திரங்களுக்குப்பதில் வறுமையே இல்லாத வாழ்க்கை கிடடக்குமானால் அந்த்தச் சுதந்திரங்களை தியகம் செய்வது தவறா?' என சுஜாதா ஒர் வளைகுடா நாட்டைப்பற்றி எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது (க. பெ./ஆ. வி).

இந்தியாவை பொருளாதார போட்டியாக அங்கீகரித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது, மற்றபடி எல்லாம் வழக்கமான அமெரிக்க புராணம்தான்.

பி. கு: இந்தப்பதிவுக்கான புகைப்படம் என் முந்திய பதிவிலுள்ளது.

Tuesday, January 17, 2006

ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

இளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. 'ஜனனி ஜனனி' என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது.

பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.

கமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.

ஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.

ஷ்ரேயா , "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.

எஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.

இன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.

இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.

தன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், "எங்க காலத்துல,," எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.
ரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.

கச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா? கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.
ஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.

எஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?

பவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.

மொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.

பழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.

சிறில் அலெக்ஸ்