.

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, June 14, 2007

புதிய முயற்சி

சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில, நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதை/பாடல் ஒன்று கீழே.

இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க..

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?

நீ (நீரில்) 'மூழ்குகிறேன்' எனக் கூறினாலும்

நான் என் கரங்களைத் தரப்போவதில்லை.

உன் முகத்தை முன்பே பார்த்திருக்கிறேன் நண்பனே!

ஆனால் உனக்கு நான் யார் எனத் தெரியுமா தெரியவில்லை.

நான் அங்கிருந்தேன்,

நீ என்ன செய்தாய் என்பதை கண்டேன்,

என்னிரு கண்களால் கண்டேன்.

ஆதலால், உன் புன்னகையை துடைத்துவிடு.

நீ எங்கே சென்றிருந்தாய் என நான் அறிவேன்.

எல்லாமே பொய்யின் மூட்டைகள்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

எனக்கு நினைவுள்ளது!

எனக்கு நினைவுள்ளது, கவலைப் படாதே.

எப்படி என்னால் மறக்க இயலும்?

முதன்முதலாய், கடைசியாய் நாம் சந்தித்த கணம்.

ஆனால் உன் புன்னகையின் காரணம் எனக்குத் தெரியும்.

இல்லை.. நீ என்னை ஏமாற்ற இயலாது!

அந்தக் காயம் வெளியில் தெரிவதில்லை ஆனால்

வலி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது

அது உனக்கும் எனக்கும் அன்னியமாயில்லை.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

நன்றி: தமிழோவியம்

Thursday, March 22, 2007

கவி தந்த விதை -5: உன்னைப் பார்த்த பின்பு

உன்னைப் பார்த்தபின்பு...

உன்னைப் பார்த்தபின்பு,
அத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.

முத்தச் சத்தம் மந்திரமானது
அப்பா திட்ட சிரிப்பு வந்தது
அம்மாவின் கோலம் கிறுக்கலானது
அண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.
நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனது
நண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.
அறத்துப்பாலும் 'இன்பம்' தந்தது
திறந்த விழிகளில் கனவுகள் தோன்றின
காக்கைச் சத்தம் பாடலானது
காகித மலர்களும் தேனைச் சொறிந்தன
கட்டில், மெத்தை கல்லறையானது
கனவும் நினைவும் ஒன்றாய்ப் போயின
கவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்தது
ஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தன
குளியலறையில் சீட்டியடிக்கிறேன்
விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன்

அலையும் விழிகள் உனையேத் தேடும்
கலையும், பாட்டும் அற்பமாய்த் தோன்றும்
நிலவும் சிறுக்கும், இரவை வெறுக்கும்
உயிரை உனது உருவம் உறுத்தும்.

விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

ஒலிFM ல் ஷைலஜா அவர்கள் கடந்த காதலர் தினமன்று வாசித்து வழங்கிய கவிதை.

Monday, February 26, 2007

கவி தந்த விதை -4: காதல் மாய உலகம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்


வரம்கொடுக்கும் தேவதைகள்
உலாவரும் காடு,
காதலெனும் மாய உலகம்.
அங்குள்ள குரங்குகளும்
அழகானவை.

சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று
எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும்.

அங்கே,
பெண்மயில்கள் தோகை விரிக்கும்
கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும்
வானங்கள் பூமியில் இயங்கும்
நட்சத்திரங்களைப் பறிக்க இயலும்.
மான்கள் வேட்டையாட
ஆண்கள் மாட்டிக்கொள்வர்.

புத்தகங்களுக்குள் இறகிருக்காது
பறவையே இருக்கும்.
ஓடுமீன் எல்லாமே
உறுமீன்கள் இங்கே.

நிலவுகள் தேய்வதில்லை!
ஆம், காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள்.
வருடங்கள் இல்லை
வயதும் இல்லை.

பால்யவயதுப் படுக்கைநேரக் கதைகளைப்
பாடமென நம்பச் செய்யும் காதல்.
செருப்பில்லாமலே
சிண்ரெல்லாக்களை
கண்டுகொள்ளலாம் அங்கே.

அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்.

கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி.

உதடுகள் ஓய்வெடுக்க
இதயங்கள் பேசிக்கொள்ளும்.

இங்கே மரங்கள் பூக்கின்றன,
காய்ப்பதில்லை
பசிக்குத்தானே பழங்கள் தேவை.
தேனை ஊற்றி வளர்க்கிறார்கள்
சொலைகளை.

அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.

முடிவில்லாப் பாதைகளும்
சப்தமில்லா அருவிகளும்
அன்னியரில்லாப் பூங்காக்களும்
அழகானப் பேய்களும்,
அலையில்லாக் கடல்களும்
பேச்சில்லா பாஷைகளும்
இருளில்லா இரவுகளும்
விடியாத நாட்களும்
வேண்டும்போது மழையும்
வேண்டாமலே வரமும்
எப்போதும் தென்றலும்
எத்திக்கும் இன்பமும் நிறைந்திருக்கும் காதல்
மாய உலகம்.

விதைத்தவர்: நா. முத்துக்குமார்
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


'கவி தந்த விதை' தொடரில் வந்தவை...
...

Monday, February 19, 2007

கவி தந்த விதை -3: வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்.

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்.

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்.

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்.

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்.

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்.

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்.

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்.

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்.

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்.

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்.

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்.

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி.

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி.


விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


இந்தப் பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்றிருந்தது. சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையிழந்த நண்பர் ஒருவரிடம் பேசும்போது உங்களுக்குப் பிடித்த பாடல் வரிகள் என்ன எனக் கேட்டேன். அவர் சொன்ன வரிகள் இவை. வைரமுத்துவின் வைர வரிகள். பாடலில் தொடர்ந்து வரும் எனக்குப் பிடித்த வரிகள்.

நீ
மல்லிப்பூவை
சூடிக்கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.

நீ
பட்டுப்புடவை
கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள்
மோட்சம் பெறும்

Hats off தல.

Thursday, February 15, 2007

கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.

உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.

எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.

பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.

தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.

தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.

உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.

கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே காதல்.

வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்

தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.

காதல்,
நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.

நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.

எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.

நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறுவது
கொடுக்கல் வாங்கலா?

பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.

இது நீ தந்ததா?
நான் ஆனது.

நாம் ஆனது.

தந்தாலே காதல் காதலில்லை.

விதைத்தவர்: வாலி
விதை எடுத்துக் கொடுத்தவர்: கடற்புறத்தான் ஜோ
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

முந்தைய கவி தந்த விதை.

Wednesday, February 14, 2007

கொசுபுடுங்கி கவிதை

கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).

காதல் பரிசாய்
உறிஞ்சிக் கொடுத்தேன்
ஒரு துளி இரத்தம்

தியேட்டர் போகலாம் என்றாள்.

மூட்டை பூச்சிகளோடு
மோத வேண்டாம்என்றேன்.

பீச்சுக்கு? என்றாள்
ஈக்கள் இருப்பது போதாதா அங்கே

பார்க்?

காதலர்கள் அங்கே கூடினால்
காவல்துறை நசுக்கிவிடும்

அவள் சொன்னாள்
come on darling B+.


+ = (Positive)
============

Tuesday, February 13, 2007

கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)

'கவி தந்த விதை' என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு


கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

அவள்.
சங்கத் தமிழ்முன் ஓர்
அங்கமானோமே
எதற்கு?

அவன்.
கன்னித்தமிழாயிருக்கும் உன்னை
அன்னைத்தமிழாக்கத்தான்.

அவள்.
இனிய தமிழில்
என்ன பிடிக்கும் உனக்கு?

அவன்.
'முத்த'மிழ்.
தரவா?

அவள்.
தீந்தமிழ்போல்
தீண்டலில் இன்பமுண்டா?

அவன்.
செந்தமிழாய்ச் சிவக்கும் உன்
கன்னத்தைக் கேளேன்?

அவள்.
பால்?

அவன்.
இன்பத்துப் பாலே
இந்த
இரவுக்குப் போதும்.

அவள்.
'இதில்' நீர்
மூத்த தமிழோ?

அவன்.
இல்லை நான்
பிள்ளைத் தமிழ்
சொல்லித்தா உன்
கிள்ளைத்தமிழ்.

அவள்.
மரபுக்கவிதை ஒன்றை
புதுக்கவிதையாக்கப் பார்க்கிறாய்.

அவன்.
இலக்கணம் கற்கும் இரவா இது?
இலக்கியம் படைப்போம் வா.
இன்பத்தமிழ் பருகவே இந்த இரவு
தாய்த் தமிழ் சொன்னதில்லையா உனக்கு?

அவள்.
பேச்சுத் தமிழ் குறைத்துவிட்டு
நாடகத் தமிழ் பழகச் சொல்கிறாய்.

இசைத் தமிழாய்
அவள் இசைந்தாள்
வன் தமிழாய்

அவன் இசைத்தான்.

வீரத் தமிழ் வீழ்ந்து கிடந்தது
விழிப் பார்வையிலே

மறத்தமிழ் மறந்துபோனது
காதல் மயக்கத்திலே.

சந்தத்தமிழாய் இதயங்கள் துடித்தன
முந்தைத் தமிழ் கவிதைகள் புரிந்தன.

இனித் தமிழ்
இனிதமிழ்.



==============
விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

Sunday, February 11, 2007

தேன்கூடு கல்யாண்

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.

தேன் உண்ணத் தந்துவிட்டு
தேனீக்கள் பறந்துவிடும்

மழைநீரைப் பொழிந்துவிட்டு
மேகங்கள் கலையும்

பாதைக்கு வழிகாட்டி
பகலவனும் மறையும்

சுடர் ஏற்றி வைத்தவர்
சுடராகி நிற்கிறார்

இணையம் தந்த இனிய நண்பர்.

இனி எங்கே தேடுவது
இந்த ராஜாத் தேனீயை

தனக்குச் சாவில்லை
எனும்
கர்வத்தில்தான் கடவுள்
மரணத்தை அளிக்கிறான்போலும்.

கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க
கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?
செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க
தங்கக் காசுகள் மறைவதும் ஏன்?

இணைய நட்பை பிரிவதிலேயே
இத்தனை சோகமென்றால்
இனிய தந்தையை
வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?

சொல்ல வார்த்தையில்லை.
என் கண்ணீருக்குத் தடைபோடவே
இந்தக் கவிதை.

மனம் கேட்கலைங்க. இந்த இளம் வயதில் இந்த சாதனையாளரை மரணம் கவ்விக்கொண்டது மாபெரும் சோகம். என்னோடு குறுகிய காலம் மின்னஞ்சல் தொடர்புவைத்திருந்தார். ஒருபோதும் தேன்கூட்டை உருவாக்கியவர், நிர்வகிப்பவர் என்கிற கர்வம் துளியும் தென்பட்டதில்லை அவரது வார்த்தைகளில். அவரின் கருத்துக்களையும் ஒரு suggestionஆக வைப்பாரே தவிர திணிப்பதில்லை. நான், என் கொள்கை என ஈகோவில் ஆடிக்கொண்டிருக்கும் பல இணைய ஆளுமைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர்.

ஐயோ கொடுமைங்க.

கடவுளை நம்புறவங்க வேண்டிக்கங்க, நம்பாதவங்க அடுத்தவங்க நம்புகிற கடவுளிடம் வேண்டிக்குங்க, இறந்தவருக்காகவும் அவரை நம்பி இருந்தவர்களுக்காகவும்.

1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
8. மா. சிவகுமார்
9. யெஸ். பாலபாரதி

Thursday, February 08, 2007

நீ இல்லாத நான்


கவனித்துக்கொண்டிருக்கும்
கள்வனைப்போல
நீ சென்றதும்
தொற்றிக்கொண்டது தனிமை.

நீயில்லா என்னை, நானே வெறுக்கிறேன்.

வெற்றிடம் நோக்கிப்
பாயும் காற்றாய் மனதை
அழுத்தும் நினைவுகள்.

பசியிருக்கிறது
பதார்த்தமுமிருக்கிறது
பரிவுதான் இல்லை.

தொலைக்காட்சித் தொடர்களில்
அழுதுவடியும் பெண்களைப்
பார்த்து சிரிக்கின்றேன்
உன் பிரிவைவிடப் பெரிய சோகமா?

சுவற்றில் நகச்சுரண்டலின்
தடம் தேடிப் பொழுதைக் கழிக்கிறேன்
கழுவிவைத்துச் சென்ற பாத்திரத்தில்
கை ரேகையை பாதுகாக்கிறேன்

சோலையின் அழகை உணராதப் பூவைப்போல
நீ இருக்கும்போது தெரியவில்லை உனதருமை.

இன்று மட்டும்,
தொட்டி ரோஜாவில் இரட்டைப் பூக்கள் ஏன்?
சிட்டுக்குருவி, துணையோடு வந்தது ஏன்?
மெட்டுருகும் பாடல் மட்டும் வானொலியில் கேட்பது ஏன்?
கிட்டக் கிடக்கும் உன் தலையணைகள் தூரமாய்த் தெரிவது ஏன்?

கன்னத்தில் கைவைத்து
நினைவுகளுக்கு முட்டுக் கொடுக்கிறேன்
அந்தக் கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
மனக்கண்களில் ஓடிக்கொண்டிருக்கிறது,
முடிவில்லா சுழற்சியில்.

தனிமையில் தூக்கம் துக்கம்.

நள்ளிரவில் விழித்துக்கொண்டு
உன்னை அழைத்தேன்
மீண்ட சில அழைப்புக்கெல்லாம் மௌனமே பதில்.
விழித்தபோது
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.

கண்கள் மூடவில்லை.
உன்னைப்பற்றிய கனவுகளைவிட
நினைவுகளே இனியது.
=============================சிறில் அலெக்ஸ்

Tuesday, December 26, 2006

(விண்) நட்சத்திரம்

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்
மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் - மன்னன்
உறங்க இடமில்லா சத்திரம்
உலகில் இதுவன்றோ விசித்திரம்?
மாட்டுதொழுவம் மாளிகையானது
ஆடும் கோழியும் தோழர்களாயினர்
கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்தது
கொசுவின் பாடலே தேவகானமாம்.

செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது
'விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுக
மண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக'
இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.
இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்தி
இறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி - இருள்
விலகிடும் என்பதே அந்நற்செய்தி.

ஏரோது அரசன் கொல்லத் தேடினான்
ஏழைமக்கள் காணத்தேடினர்
கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்
கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.

மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது - எங்கள்
மனங்கள் கூட வெறுமையாய் கிடக்குது
மாட்டுத் தொழுவமே போதுமென்றாலும்
அதைவிடக் கீழாய் பலர் வீடும் இருக்குது
இன்னும் ஒருமுறை இங்கே வந்திடு
குடிலோ, குடிசையோ எங்களில் தங்கிடு
அன்பே! அன்பு, அன்புதான் என்றிடு - எம்மில்
ஆலயம் வேண்டாம் அன்பே வேண்டிடு.


மீண்டும் ஒரு முறை இனிய கிறீஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

Friday, November 10, 2006

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

நம்ம தமிழ் சங்கத்துல நடந்த கவிதைப்போட்டியில நம்ம கவிதைக்கு முதல் (சர்)ப்ரைஸ் குடுத்துருக்காங்க.

நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில உண்மைகள் சிலருக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என விட்டுவிட்டேன். Ignorance is bliss. அறியாமை ஆனந்தமானது. உண்மை, உண்மை.


அந்த உரையாடலின் ஆதாரத்தில் பிறந்த இந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

நம்ம வ. வா தமிழ் சங்கத்தாருக்கும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.


'இன்னும் இருக்கிறது ஆகாயம்'

'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

Sunday, October 29, 2006

பசி-சுப்பையா சார் கவிதை

பசி---------------SP.VR. சுப்பையா
பணம்
உள்ளவனுக்குத்
தெரிந்த 'பசி'
நிதியமைச்சர்
ப.சி!

கன்னிமாராவிற்குள்
காலடி வைப்பவனுக்கு
அங்கிருக்கும் நூல்களால்
ஏற்படுவது
அறிவுப் பசி!

கலங்கவைக்கும் நிகழ்வுகளை
எழுதியவுடன்அடங்குவது
கவிஞனின்
உள்ளத்துப் பசி!

கட்சிவிட்டு
கட்சிதாவச் செய்வது
அரசியல்வாதியின்
அகோரப்பசி
பதவிப் பசி!

நான்கு லார்ஜிற்குப் பின்
வரும் பசி
பாருக்குப்
போகிறவனுக்குப்
பழகிவிட்ட பசி!

உறவு பேதமின்றி
எந்தப் பெண்ணுமே
அழகாகத் தெரிவது
நெறிகெட்ட மனிதனின்
நிலையில்லாதகாமப் பசி

பதிவைப்
போட்டுவிட்டுக்
காத்திருப்பவனுக்கு
ஏற்படுவது
பின்னூட்டப் பசி!

என்னய்யா
பெரிய பின்னூட்டம்
என்றிருப்பவனுக்கு
என்றுமே வராது
ஏக்கப் பசி!

பாதி உணவோடு
இலையை மடக்குபவனுக்கு
ஏற்படுவது
என்றும் அவனோடுள்ள
அஜீரணப் பசி!

ஒரு வேளை
உணவிற்குத்
தவமிருப்பவனுக்கு
ஏற்படுவது
உண்மையான பசி!

Friday, October 20, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் - இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Monday, October 16, 2006

கோமாளி-கவிதை-SK

கோமாளி தலைப்பில் எஸ்.கே பின்னூட்டமாய் எழுதிய கவிதை..


கோமாளிக்கும் ஏமாளிக்கும்
மயிரிழைதான் வேறுபாடு

கோமாளி தான் செய்வது
இன்னதெனச் செய்கிறான்

மற்றவரை ஏமாற்றி
அவன் அடிபடுவதில்லை

ஏமாளியோ தன்னையும் வருத்தி
மற்றவரையும் வருத்துவான்

ஏமாளிக்கு
கோமாளியே மேல்
என்னமோ போங்க!

ஆடுகள் மோதுவது
கொம்பெனும் திமிரால்

அவரவர்க்கு ஓர் கொம்புண்டு
அதுவும் புரியும் அவர்க்கே

கொம்பைச்
சீவிவிட்டு
மோதவிடும் கூட்டம்

இருபக்கமும் உண்டு
இதுதானே உண்மை
இங்கு

தனக்கா வலிக்கிறது
அடிபடுவது ஆடுதானே

இதில் இதென்ன
உசத்தி
அதென்ன தாழ்த்தி

அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே

உன்னையும் தாண்டி
என்னையும் தாண்டி

புரிதல் எனும் அந்தப்
பெருமையை உணர்ந்தால்

யாரும் இங்கு கோமாளியல்ல
யாரும் இங்கு
ஏமாளியல்ல

புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!

அவரவர்
உறவே
அவரவர்க்கு சத்தியம்

எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு

உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு!

Saturday, October 07, 2006

இலையுதிர் காலம் ஆரம்பம்

அமெரிக்காவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள். அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. நம்ம ஊரில் கவிஞர்கள்மட்டும்தான் இலையுதிர் காலம் பார்க்கிறார்கள்.

பச்சையிலிருந்து...
கிளிப்பச்சையாகி
மஞ்சளாகி
பழுப்பாகி
குப்பையாகி
அழுகி உரமாகி
தன் தாய்மரத்துக்கே
உணவாகும்
தியாகச் செம்மல்கள் இந்த இலைகள்.

தன் உயிரைக் காக்க
உடையைக் களையும்
மானங்கெட்ட மரங்கள்.
இதனால்தான்
தமிழ் நாட்டு மரங்கள்
இலை உதிர்ப்பதில்லையோ?

(ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல?)

வெளியே வாக்கிங் சென்றபோது செல்போனில் சுட்ட படங்கள்.
ஜன்னலுக்கு வெளியே

தனிமரம்
காலம் மாறிப் போச்சு
இன்னும் இருக்குது பச்சை

இன்னும் இருக்குது ஆகாயம்

நீல நயனங்களில் ..நீண்ட கனவு


நிறம் மாறும் இலைகள்



















Thursday, September 28, 2006

நரகாசுரன் - SP.VR.SUBBIAH

சுப்பையா ஐயாவின் படைப்பு பின்னூட்டமாக இடப்பட்டது பதிவாய் உங்கள் பார்வைக்கு,

இந்த வாரத் தலைப்புக்காக

'நரகாசுரன்'

சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் - இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி

அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!

நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!


- SP.VR.SUBBIAH

Tuesday, September 19, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்














'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.

மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

Monday, September 11, 2006

தீட்டு

திரு அவகளின் 'மாடு தீண்டலாம் ஆடு தீண்டலாம்' பதிவில் பா(சா)டல் ஒன்றை பதித்திருக்கிறார். பாடல் வரிகள் கீழே.

மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் - நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? - இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.

கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் - சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? - இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?

தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக - மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? - அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?

எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் - இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.





Friday, September 08, 2006

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


மகனை இழந்த வியாகுல மாதாவாய் - ஜென்மப்
பாவமற்ற அமல உற்பவியாய் - என்றும்

குணம்தரும் ஆரோக்ய அன்னையாய்

விண்ணாளும் அரசியாய்

உலகெலாம் போற்றும் வேளங்கண்ணியாய்

தேவனுக்கும் தெவையுள்ளோருக்கும் தாயாய்

முடிவில்லாத் துணை தரும் சதா
சகாயமாதாவாய்

முப்பொழுதும் கன்னியாய்

எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜோவின் பதிவு.


திரையில் வந்த மாதா பாடல்கள்

மாதாவின் கோவிலில்

எனையாளும் மேரி மாதா

ஆதியே இன்ப ஜோதியே

வானமெனும் வீதியிலே

Thursday, September 07, 2006

எதிரி என்றொரு தோழன்

என் கொள்கைகளை வரையறுத்தவன் நீ
என் இருப்பின் இலக்கணம் நீ.
என் செய்கைகளை
பொம்மலாட்டமாய் வெறும்
விரலசைவுகளில்
மாற்றியமைக்கிறாய்.

உன் கட்டளைகளுக்கு எதிர்வினைப்பதே
என் வாழ்க்கையாகிவிட்டது.

உன்னைச் சுற்றியே
என் வாழ்வைப் பின்னியுள்ளேன்.

நீயே என் குறிக்கோள்.
உன்னை வீழ்த்தாமல் விட்டுவைத்திருப்பது
நான் வீழாமலிருக்கத்தான்.

என் நண்பர்களின் புகழாரங்கள்
என் உணர்வுகளை
மழுங்கச் செய்கின்றன,
நீயோ இன்னும் வாழவேண்டி
என்னைத் தூண்டுகிறாய்.

உன்னை வென்றுவிட்டால்?
நீ உமிழும் நெருப்பை
உள்ளிழுக்கப் பழகிவிட்டேன்,
வெறும் காற்று எனக்கு
விஷமாகிப் போகும்.

உன்னை வென்ற மறுகணமே சுயமிழப்பேன்.

என் எதிரியே நீ
இன்னும் வாழவேண்டும் நூறாண்டு.

சிறில் அலெக்ஸ்