.

Thursday, January 26, 2006

கெடா - சிறுகதை

"தம்பி, கெடா பீச்சுட்டு கெடக்குல. எங்க உள்ள கெடா".

"டவுண் கெடாண்ணே, பேப்பர் கீப்பர் தின்னுருக்கும்".

"ஏண்டா பத்து ரூவாக்கேண்டி ஏன் டவுனுக்குப்போன. இங்கன சந்தையில வாங்கிருக்கலாமெடா."

"கெடா மட்டுமா, பூச சாமான் எல்லாமே அங்கதான் வாங்கிருக்கு".

"சாமி இன்னும் வரலியே"

"சொல்லி வுட்டுருக்கு. நேத்தே இங்கோடி தள்ளாடித்தான் போனாரு. ஆத்து தோப்புல தேங்காவெட்டாம். இவருக்கு கெடச்சத வித்து குடிச்சுட்டுபொனாரு. நாளைக்கு வருவீரான்னேன், 'எல நான்வராம கெடா தலையாட்டிருமான்னாரு'. அந்தா நம்ம ஒரல்ல தட்டி கீழ உளுந்தாரு. ஆத்தாவே சிரிச்சிச்சு. இவரெல்லாம் என்ன பூச வைக்கப்போராரோ"

"எல..அவன் வெறும் பூசாரியாடா? ஒங்க மாமன்டா."

"கிழவி, ஊருல எல்லாரும் சொந்தக்காரனுவதான். ஒன் சொந்தங்கள சொன்னா பொத்துகிட்டுவருமே."

"எல என்னா? சாமி வந்தாச்சா?"

"இல்ல மாமா. இன்னும் இல்ல"

"ஓன் தங்கச்சிக்கு சொன்னீயளாடே?"

"ஆமா சொல்லியிருக்கு. வருவாளான்னு சந்தேகந்தான்".

"இன்னும் ஒருவருஷம் கழியலயோ? நம்ம சாமிக்கு படையலுக்கெல்லாம் வரலாமே. என்னக்கா நீ ஒண்ணுஞ்சொல்லலியா?"

"....."

"எல்லாஞ்சொல்லியாச்சு அனேகமா வருவான்னுதான் நெனைக்கேன். இத்தன சனம் காத்துட்டுருக்கு இன்னும் இந்த சாமியக் காணோம் பாரு."

"நான் வெண்ணா பெரியவன சைக்கிளெடுத்துட்டு போச்சொல்லவா?"

"செரி சொல்லு. நேரா அங்கப்போச்சொல்லு சைக்கிள் கெடச்சா ஊரச்சுத்தும் அந்தக் கழுத."

"ஏல குமாரூ...."

"குப்பி வாங்கிட்டீயேளா?"

"பூசைக்கி முன்னாலயேவா குடிக்கிறது. கொஞ்சம் பொறும்"

"எல அதுக்கில்லல சாமிக்கு சாரயமில்லாமலா பூச? மறந்து கிறந்து போனியளோன்னுதான்..."

"சிரியப்பாரும்... மாமா நம்ம தோலன்மவன் குடுத்த பிராந்தியிருக்கு. இங்க வச்சி வேணாம். வாரும் வீட்டுக்குள்ள போலாங்."

"குடிகாரப்பயலுவ. கொஞ்சம் பொறுத்தாத்தான் என்னல?"

"ஆத்தா, நீ சும்மா இரு. இப்பகுடிச்சாதான் பூச முடிஞ்சு சாப்புட சரியாயிருக்கும்."

"மாமா நீ வா. கெழவி இப்புடிதான். காதுல பாம்படம் கெடக்குல. அதாம் ஆடுது. இது செத்து கெடக்கும்போதுதான் தெரியும் அந்த பாம்படத்து மகிம. ஏ ஒங்க சித்தப்பாவுக்கு குடிக்கணுமாம். தட்டுல கொஞ்ச ஊறுகா எடுத்துவை... வா மாமா... பெரியவன் சாமியப் பாக்க போனானா?"


"ஆமா. சைக்கிள் பிரேக் அத்து கெடக்குன்னு நடந்துதான் போயிருக்காம்".
.....

"மாமா கடகடன்னு ஊத்தாத. எங்கப்பனமாரிப் போயிரப்போற"

"போடாங்... ஒங்கப்பனுக்கு யார்டா குடிக்க சொல்லித்தந்தது? எத்துன நாள் மச்சான் முக்குவெளைக்குப் போவொமுன்னு வந்து நின்னுருக்காம் தெரியுமா. மொதல்லெல்லாம் பயந்து பயந்துதான் குடிப்பான். அதுக்கப்புரம் என்னையும் மிஞ்சிட்டாம்ல... அவன் ஓவர்டா."

"நீர்தாம் அவர குடிக்கவச்சு கெடுத்ததே... இத வேர பெருமையா சொல்லாதீரும். அவமானம். ..ஒழுங்கா இருந்த மனுசன...."

"எல குடிக்ககூட இல்லண்ணா என்ன இருக்கு. ஒன் தங்கச்சி புருசன்...குடிக்கவேயில்ல... பீடிகூட கெடையாது.. அப்புறம் எதுக்குடா வெட்டுனீங்க"

"மாமா என்ன சொல்லுறீரு. நாங்களா வெட்டுனோம். வாங்குன காச திருப்பித்தரலன்னா நல்லூரான் விட்ருவானா. வெட்டிட்டான், நீரு ஏன் எங்கள இழுக்கீரு?"

"போல..பேப்பயல. ஊருக்கே தெரியும் நீங்க அவன வெட்டுனத. நல்லூரனுக்கு பதினஞ்சிதான் ஒங்களுக்கு எழுபதாம்ல? இப்டி தங்கச்சிபுருஷன்னு பாராம வெட்டிட்டீயளேல்ல"

"அப்பா செத்தப்றம் நாங்க பாட்டுக்கு ஒதுங்கியிருக்கோம். ஊருல ஆயிரம் சொல்வானுவ. எம் மச்சான வெட்டுனா, பைசா ஒடன கெடைக்குமா? என்ன சொல்றீரு? நீருந்தான் காசி மவள கெடுத்து தூக்குல போட்டாதா சொன்னானுவ அப்ப அது உண்மையா?"

"எல.. பாத்து பேசு. எப்பவோ நடந்த கத. ஒங்கப்பனுக்கு நான் செஞ்ச.... வேண்டாங்..நீ சின்னப்பயடா."

"அப்ப என்னத்துக்கு எங்கூட குடிக்கீரு"

"என் தப்புதாண்டே. ஒங்கப்பனப்போல ஈனப்பயதான நீயும். ஊர எம்மாத்தி தின்னுத பயலுவ. எங்கெருந்துடா இத்தன பணம் வந்துச்சு ஒனக்கு?"

"மமா. நாங்களா ஊர ஏமாத்துனோம். கோயில் கணக்குல கைவச்சீர்னு நடந்த பஞ்சாயத்து என்னாச்சு. "

"நீ கள்ளவட்டி வாங்கலியா? இந்த பொழப்புக்கு கூட்டி குடுக்கலாம்டா"

"மாமா..."

"ஏம் சத்தம் போடுத? என்ன அரிவாளத்தூக்குற. எனக்கு முன்னையா நீ அரிவாளெடுத்த. எல.. வால பாப்போம்"

"ஏய் வுடுடீ என்ன. இவன் என்ன சொன்னாங் கேட்டியா. மாமாவால நீயி. எங்கம்மா பொறந்த வயிதிலயா பொறந்த? யாருவீட்டுப் புள்ளகள கூட்டிக் கொடுத்தாங்கன்னு ஊருல போயி கேளும்? இனி ஒரு வார்த்த பேசுனா வெட்டுத்தான்."

"என் தங்கச்சி மவன்னு உடுதேன்... ஒன்ன வெட்ட எவ்வளவு நேரம்டா ஆவும்."

"நீரு என்ன வெட்டவா... நாங்க சும்மா பாத்துட்டயிருப்போம்..."

"வா வந்து வெட்டுடா...வெட்டுடா பாப்...."

"ஐயோ பேசிட்டிருக்கும்போதே வெட்டிடீங்களே.... ஐயா சித்தப்பா... தல தொங்கிடுச்சே..."

"அம்மா..., சாமிய கூட்டிட்டு வந்துட்டேன்..."

"மருமவனே என்ன அருவா. அதுக்குள்ள வெட்டியாச்சா? சம்மதங்கேட்டுத்தானே வெட்டுனிய?........அடப்பாவி கெடாவ வெட்டலியா?"

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

நன்றி.

'குறுகிய' என்னும் அர்த்தத்திலில்லை என நினைக்கிறேன்.

ராசுக்குட்டி said...

சிறில் அருமையான கதை சொல்லி நீர்! நன்றாக இருந்தது.

என்னமெனது சொன்னது 'சிறு'கதை என்று நினைக்கிறேன்!

VSK said...

"கெடா" வெட்டிய சோகம் இன்னும் தீராமலிருக்கிறேன்!

:((

சிறில் அலெக்ஸ் said...

ராசுக்குட்டி நன்றி. ரெம்ப நாள் முன்னால எழுதுனது. அப்ப யாரும் அங்கீகரிக்காத கதை இது..

//அருமையான கதை சொல்லி நீர்!//

நன்றி நன்றி. இணையத்தில் நான் எழுதிய முதல் கதை இது.

சிறில் அலெக்ஸ் said...

//"கெடா" வெட்டிய சோகம் இன்னும் தீராமலிருக்கிறேன்!//

நன்றி ஐயா..

ஜாலியா தமிழோவியத்துல என் கதை ஒன்னு வந்திருக்கு அதப் படியுங்க...

enRenRum-anbudan.BALA said...

அலெக்ஸ்,
entry-யே இவ்வளவு அமர்க்களமா இருக்குதே ! நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள், நண்பரே !

என்றென்றும் அன்புடன்
பாலா

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பாலா..
:)

சிறில் அலெக்ஸ்