ஒரு குட்டிக்கதை.
அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை.
அந்தப் பெண் இளைஞனிடம் "எனக்குப் பயமாயிருக்கிறது." என்றாள்.
இளைஞன் "என்ன பயம்?" என்றான். "நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் பெண்.
"அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த இடுக்குல காய்கறி கூட வச்சுருக்கேன். நான் எப்படி ஒன்ன இப்ப முத்தம் கொடுக்கிறது?". இளைஞன் வெகுளியாய் கேட்டான்.
"அரிசி மூட்டைய இறக்கி வச்சுட்டு, ஆட்டை அந்த மரத்துல கட்டிபோட்டுட்டு, காய்கறிக் கூடைய அரிசிமூட்டை மேல வச்சுட்டு வந்து என்னை கட்டி பிடிச்சு முத்தும் தருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் அந்தப் பெண்.
கருத்து : நாம் பயத்துல சொல்லும் விஷயங்கள் பல
நேரங்களில் நம் எதிரிக்கு சாதகமாய் அமைகின்றன அல்லது நாம்தான்
நம்ம எதிரிகளுக்கு பல நேரங்களில் ஆலோசனைகளை தருகிறோம்.
'கட்டாய மதமாற்றம்' எனும் பதம் இப்போ பழக்கத்தில் வந்துள்ளது. மிஷனரிகள் எனப்படும் மதம் பரப்பும் கிறீத்துவ போதகர்கள் 'கட்டாயமாய்' மதம் மாற்றுவதாக பலர் நம்புகிறார்கள்.
உண்மையில் இது சாத்தியமா?
'கட்டாயம்' என்றால் என்ன? பலவந்தமாகவா? அது நிச்சயம் சாத்தியமில்லை. கிறித்துவர்கள் 2%மைனாரிட்டி என்பது ஒருபக்கமிருக்க, பலவந்தத்தம் செய்வதற்கு சரியான (அடிதடி) அரசியல் பின்னணி வேண்டும் என்பதும் அடிதடியில் இறங்கி கிறித்துவத்தில் மக்களை சேர்ப்பது, அதுவும் இந்தியா போன்ற சர்வதேச அரங்கில் எப்போதும் பேசப்படுகின்ற நாட்டில் செய்வது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. சுதந்திர இந்தியாவில் பலவந்தமாக யாரும் மதம் மாற்றப்பட்டதாக நான் இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.
பணம் தந்து மதம் மாற்றுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு? ஒருவருக்கு ஒரு நாள் 1000 கொடுக்கலாம் ஆனா எல்லா நாளும் கொடுக்க முடியுமா? உண்மையில் மதம் மாறினால் காசு கிடைக்குமென்றால் இந்தியாவில், ஏழ்மை அதிகமிருக்கிறபடியால், கிறித்துவர்கள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவுமில்லை. ஒரு மிதமான வளர்ச்சியையே கிறித்துவம் கொண்டுள்ளது, மற்ற சில மதங்களைவிட குறைவான வளர்ச்சியே இது.
கிறித்துவராகிவிட்டால் பணக்காரனாகிவிடலாம் என்கிறது யாரோ கனவிலிருந்து விழித்துவிட்டுச் சொன்னது. செயராமன் பதிவைப் படிக்கவும். (இவர் சொல்லும் சில விபரங்கள் சரியானதாக இல்லை என்றாலும்...)
இன்னுமொரு குற்றச்சாட்டு நன்மை செய்வதுபோல ஊருக்குள் வந்து மெதுவாக மதம் மாற்றுகிறார்கள் என்பது. இதற்கு எப்படி விளக்கம் சொல்வதென்று புரியவில்லை.
நல்லது செய்வதில் உள் அர்த்தம் கற்பித்துக்கொண்டு பலருக்கு கிடைக்கும் உதவியை தடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எத்தனை கிறித்துவ கல்விக்கூடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, மதம் மாறினால்தான் சேர்த்துக்கொள்வோமென்கிறதாய் எந்த நிறுவனமும் கூறியதாயில்லையே. அப்படியே மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் பின்னால் சென்றால் என்னதான் தவறு? அன்னை தெரசா எத்தனைபேரை 'கட்டாய' மதமாற்றம் செய்தார்? அவர் செய்யாத சேவையா?
மதமாற்றம் நடப்பதேயில்லை எனச் சொல்வதற்கில்லை. நிச்சயம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும். ஏன் கிராமங்களுக்குப்போகவேண்டும்? , சென்னையிலேயே ஒன்றிரண்டுபேர் ஒவ்வொரு கோவிலிலும் (பொதுவாக) ஈஸ்ட்டர் திருநாளன்று மதம் மாறக் கண்டிருக்கிறேன். இவர்கள் எந்தவித கட்டாயத்திர்கு ஆளாக்கப்படுகிறாகள் என்பது அவர்களுக்கும் அவர்கள் கும்பிட்ட, கும்பிடப் போகின்ற கடவுள்களுக்குமே வெளிச்சம்.
என் கல்லூரித் தோழி, இந்து மதம் சார்ந்தவள், கிறித்துவப் பையனை காதலித்தாள், மணமுடித்தாள். அவள் கணவனைவிட இயேசுவை பெரிதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டாள். நான் எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன் தெய்வங்களை விடவும் இயேசுவே பெரிதாய் தோன்றினார்.
உண்மையில் அவளுக்கு என்ன நிகழ்ந்தது? தன் மதம் பற்றிய, அதன் அதிசயிக்கத்தக்க தத்துவ குணாதிசயங்கள் பற்றிய அறிவே இல்லாதிருந்தாள். நம்மில் எத்தனைபேருக்கு இந்துமதம் சொல்லும் தத்துவ இறையியல் பற்றித் தெரியும்? காப்பியங்களையே முழுமையாகத் தெரியாதவர்கள் எத்தனைபேர்.
எதையுமே எடுத்துச் சொல்லும்போது அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது அல்லது அதிக மதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் நல்ல பொருட்களைக்கூட கூவி விக்கவேண்டியுள்ளது. 'கட்டாயம்' என்பதை விட இந்த கூவி விற்கும் தன்மைதான் கிறித்துவ மத மாற்றத்தின் அடிப்படை வழியாக இருக்கிறது. இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு.
கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் எனப் பார்த்தால் அதை செய்பவர்கள் இரண்டுபேர். நம் தாய் தந்தை. தத்துவார்த்தமாக சிந்தித்தால் இது புரியும். பிறந்து ஒன்றுமறியா குழந்தைக்கு இதுதான் கடவுள், இவன் நம்ம மதம், இது நம்ம சாதின்னு பல வழிகள்ள எண்ணங்களை திணிக்கிறோம், அதை பின்பற்றச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். நாம் நல்லதே நினைத்து இதைச் செய்தாலும் இது ஒரு திணிப்புதான் என்பது உண்மை.
மதமாற்றம் எல்லா மதங்களும் செய்திருக்கின்றன. துவக்கத்திலுருந்தே எந்த மதமும் இப்போது இருக்கும் நிலையில் இருந்ததில்லை. கொஞ்சம் வரலாற்றை புரட்டினால் 'கட்டாய' மதமாற்றம் இல்லாமல் எந்தமதமும் இருக்கவில்லை என உணரலாம்.
மதம் மாறாதே என ஒருவரை கட்டாயப்படுத்துவதற்கும், மதம் மாறு என கட்டாயப் படுத்துவதற்கும் யாருக்கும் உரிமையில்லை.
எனக்குத் தெரிந்தவகையில் கத்தோலிக்க குருக்களும் கன்னியர்களும் மதமாற்றம் செய்ய சுய உந்துதல் உடையவர்களாகத் தெரியவில்லை. பலர் சமூக/ கல்வி நிறுவனங்களில் நமக்கு என்ன பதவி கிடைக்குமெனும் ஏக்கத்திலேயே காலம் தள்ளுகின்றனர். போய் மற்ற மதத்தினருக்கு இயேசுவை அறிவி எனச்சொன்னால் து.கா.து.கான்னு ஓட்டம்பிடிப்பவர்கள் பலர். அநேகம் பாதிரியார்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையே கிடையாதென்பதுபோலத் தெரியும். இவர்கள் போய் மதம் மாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.
போப் 'அறுவடை' எனச் சொல்கிறாரே? அறுவடை என்பது இயேசு பயன் படுத்திய பதம். அதைத்தான் இவரும் பயன்படுத்துகிறார். "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" இது இயேசு சொன்னது. இதில் எந்தவித தவறும் உள்ளதாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகம் கூவி வில்லுங்களளெனச் சொல்லுகிறார் அவ்வளவுதான். எல்லோரையும் போட்டுத்தாக்குங்க எனச் சொல்லவில்லை.
இந்தக் கூவி விற்கும் போது பல நேரங்கலில் அடுத்தவர் மனம் புண்படும்படி அவர்கள் விற்பதை (அல்லது வைத்திருப்பதை) தாழ்த்திப் பேசுகீறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டியதே. இதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுள்ளது. அதேபோல கூவி விற்பவர்களை அடுத்தவர் மட்டம் தட்டலாம்.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் நடக்கும்போது, "நீ என் கட்சியில்ல. இங்க வந்து ஓட்டுக்கேட்கக்கூடாது" என யாரையும் உங்களால் தடுக்கமுடியுமா? அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என நினைக்கிறேன்..
கொஞ்சம் தாறுமாறாகத்தான் இந்தப் பதிவு வந்துள்ளது. தோன்றிய எண்ணங்களை அப்படியே பதித்தேன்.
முடிவாக...
- கட்டாய மதமாற்றம் என்பது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
- மதமாற்றம் எல்லா மதங்களிலும் நடைபெற்றுள்ளன; இதில் பல கட்டாய மதமாற்றங்களும்.
- நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
- மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை.
- தன் கடவுள் யார் என்பதை தனி மனிதந்தான் நிர்னயிக்கவேண்டும்.
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு.






