.

Thursday, August 31, 2006

வரி குறைப்பு



வேறு தலைப்புக்கள் சொல்லுங்களேன்.

நிலவில் நாளை..

"மிமி எழுந்திரு இன்னிக்கு நாம விலங்கியல் பூங்காவுக்குப் போகப்போறொம்." அண்ணன் மித்தி தங்கை மிமியை உற்சாகத்துடன் எழுப்பிக்கொண்டிருந்தான்.

முந்தின நாள் சாயுங்காலம் அப்பா அனுமதிச் சீட்டு வாங்கிவந்ததுமே உற்சாகம் துவங்கிவிட்டது.

"நாளைக்கு குரங்கு பாக்கலாமே.."

"சிங்கம்?"

"ம்ம்ம் சிங்கம், புலி, மான், யான.."

"எலி?"

"மிமி.. எலி பாக்குறதுக்கு ஏன் அங்க போகணும்?"

விலங்குகள் பற்றிய புத்தக வாசிப்போடு உறங்கிப்போனார்கள் குழந்தைகள்.
காலையில் பூங்கா நோக்கிப் பயணம் துவங்கியது.

"பூமியிலிருந்து அழிந்துபோன விலங்கினங்களை மையமா வச்சு ஒரு கண்காட்சி இருக்குது" அப்பா சொல்ல மித்தி கேட்டான்.

"பூமியிலிருந்து விலங்கினங்கள் அழிஞ்சு போனதாப்பா?"

"ஆமா. பல இனங்கள் அழிஞ்சும் புதிதாய் சில புதிதாய் உருவாகியும்... பரிணாம தத்துவப்படி.."

"எப்படி ஒரு விலங்கினம் அழியும்ப்பா?"

"பல காரணங்கள் இருக்கு.."

"எப்படி.."

"தட்ப வெட்பநிலை சரியில்லைன்னா, அதிகமா வேட்டையாடப்பட்டா, உணவு ஆதாரங்கள் அழிக்கப்படும்போது.இப்படி இன்னும் பல காரணங்கள். சில நேரங்கள்ள ஒரே நேரத்துல, ஒண்ண ஒண்ணு சார்ந்திருந்த இரு இனங்கள் அழியிறதும் உண்டு."

"இண்டரெஸ்ட்டிங்." அம்மா சொன்னாள்.

விலங்கியல் பூங்கா வந்ததும் மிமி குஷியானாள். கூட்டம் அதிகமாயில்லாதது வசதியாய்ப் போனது. விலங்கின் பெயர்களை எழுத்துக்கூட்டி படித்துக்கிண்டிருந்தாள்.

"த..வ..ளை..அம்மா தவளை."

"ஆமா சிமி. ஆப்ரிக்கத் தவளை. ஆண் தவளைகளே இல்லைன்னா இந்த இனத்துல பெண்ணே ஆணா மாறிடுமாம்."

"அப்ப இந்த இனம் எளிதில அழியாதுலா." மித்தி கேட்டான்.

"ஆமா."

"'வல்லவன் வாழ்வான்' இதுதான் இயற்கையின் விதி. வெறும் உடல் வலிமையச் சொல்றதில்ல."

"ஒ..ட்..ட.."

"ஏய் சிமி இங்கப் பாரேன்."

"இருடா.. க..ம். ஒட்டகம்."

விலங்குகளைப் பார்த்து முடித்ததும் அழிந்துபோன விலங்கினங்களைப் பற்றிய கண்காட்சிக்கு வந்தனர்.

"வாவ் டைனசோர்." மித்தி

"ஸ்..டெ..கோ..சா..ர..ஸ்"

"டைனோசர்ஸ் இனம் அழிந்ததுபற்றி நிறைய கருத்துக்கள் இருக்கு. அதிகம் நம்பப்படுவது பூமிமீது மோதிய விண்கல்லால அழிஞ்சிருக்கலாண்றது."

"ஔ..ரோ..க். ஔரோக் அம்மா மாடு மாதிரி இருக்குதுமா." மிமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

"இதோ இந்த இனம் அழிஞ்சதுபோல வேறெந்த இனமும் அழிஞ்சதில்ல." அப்பா ஒரு கண்ணாடிக் கூண்டைக் காட்டிச் சொன்னார், "தன்னைத்தானே அழிச்சுகிச்சு இந்த இனம். அணுஆயுதம்."

"ம..னி..த......"

Wednesday, August 23, 2006

கற்கோவில்கள்

"மக்கா எழும்பு. மடிக்குப் போணும் எழும்பு." எலிசபெத்தா மகன் சேவியரை எழுப்பினாள்.

"ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல."

முனகிக்கொண்டே சேவியர் விழித்தான்.

"அப்பாக்கு காச்சலடிக்கு, நீ மச்சான்கூடப் போ."

சன்னலில் இருந்த பல்பொடியிலிருந்து கையில் கொஞ்சம் தட்டிக்கொண்டு கஞ்சியும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தான் சேவியர்.

தெருவிளக்குகள் இல்லாத இடுக்குகளில் கலங்கரை விளக்கின் சுழற்சியில் அவ்வப்போது ஒளிபரவி அதிகாலை இருளை விலக்கிப் பாதை காட்டியது.

கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. "அன்னா வாரான் சேவியரு." சேவியரின் அக்காவின் கணவர் சைமன் கை அசைத்தார்.

"நேத்துமா படத்துக்குப் போன? ரெண்டுவாரத்துல வெளிநாட்டுக்குப் போறவனமாரியா இருக்க. இவ்ளோ நேரமா இங்க காத்துக் கெடக்காவு." அக்கா திட்டுவதையும் பொருட்படுத்தாமல். வலையை படகில் ஏற்றிக்கொண்டிருந்த மச்சானுக்கு உதவிசெய்தான் சேவியர்.

"அப்பாவுக்கு காச்சலாம்?" அக்கா கேட்டாள்

"ஓமு."

சேவியர் மச்சானுடன் கடலுக்குப் போகத் தயங்குவான். அவர் இவனைப் போலவே முன்கோபி. மச்சான் திட்டினால் எதிர்த்துப் பேசமுடியாது. அப்பா அப்படியல்ல. மொட்டையன் சாதுவானவர், கோயில் கமிட்டியில் அவர் இல்லாத சமயங்களிலும் அவரிடம் ஊர் பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டன. மீனவர் என்றாலும் படித்தவர்களே மதிப்புக் கொள்ளுமளவுக்கு ஞானி. பங்கு சாமியார்கள் ஊரில் முதலில் சந்திக்கும் பெரியவர் மொட்டையன் என அழைக்கப்படும் குருசு.

சேவியர் படகின் இயந்திரத்தை இயக்கினான். மிதமாக எழுந்த அலைகளின்மேல் பயணித்தது படகு.

"யாரெல்லாம் படத்துக்குப் போனியல?"

"நானு எதிர்வீட்டுக் குமாரு பெறவு நொண்டி."
மச்சான் தம்பிகூடப் போனதைச் சொன்னா அவனுக்கு வீட்டில அடிவிழும்.

"நேத்து நொண்டி எங்கூடப் பெரையில சிட்டு வெளையாடிட்டிருந்தான்? பொய், என்னா? ஏண்டே படிக்க பயலுவள கெடுக்குதிய?"

சேவியர் மெளமானான். 'இவர்கூடப் பேசுனா சண்டதான் வரும்'.

படகு உள்ளே செல்லச் செல்ல நிலம் மறைந்தது. கடல், நீரால் நிரம்பிய ஒரு பாலைவனம் போலக் காட்சிதந்தது. கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் நீலம். வழக்கமாய் மீன்பிடிக்கும் இடத்தை நெருங்கும்போது சைமன் பதட்டமானார்.

"எல சேவியரு அங்கபாரு அந்த போட்டுங்க நம்ம ஊர் போட்டுகமாரி தெரில?"

"நம்ம ஊர் போட்டிகயில்ல. இதோட நாலாது நாளு. இங்க வராதியன்னு அப்பா அன்னைக்குத்தான் சொன்னாவு, பெறவும் இங்கதா வாரானுவ."

வெளியூர் ஆட்களுக்கு அந்த இடத்தில் மீன் பிடிக்கத்தடை இருந்தது.

"லேய்.. யாருல அது? இங்க வரக்கூடாதுன்னு தெரியாதாக்கும்?" சைமன் சத்தம் போடத்துவங்கினார். இரண்டு வெளியூர் படகுகள் நின்றுகொண்டிருந்தன.

சேவியருக்கு எரிச்சல் வந்தது. மொட்டையன் மகன், அவருக்கு நேர் எதிர். நண்பர்களுக்காகப் பலமுறை சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறான். போலீஸ், கேசென்று ஒரு முறை நிலமை கைமீறிப்போனது. மொட்டையன் பங்குத் தந்தையிடம் சொல்லி பிஷப் கடிதத்துடன் போய் சேவியரை அழைத்துவந்தார்.

"ஐயா உங்களப் பத்தி கேள்விப் பட்ருக்கேன். இவன் உங்க பிள்ளையா? கோவம் ஜாஸ்த்தி இவனுக்கு. சொல்லி வைங்க. போலீசையே கை நீட்டுறான்." இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

"எல எங்க மாமன் சொல்லியும் கேக்காண்டியளால. நாங்க ஒங்க ஊர்ப் பக்கம் வந்தா உடுவியளா?"

சைமன் வெளியூர் படகுகளிலிருந்தவர்களிடம் சப்தமாய் விவாதித்துக்கொண்டிருந்தார்.
வெளியூர் படகிலிருந்த பெரியவர் பேசினார்.

"மொட்டையன் மருமவனா நீயீ? இரப்பா, வல எறக்கியாச்சு இன்னக்கி ஒருநா இங்கன போட்டும்."

"நாலு நாள இங்கனதான் மடி எறக்குறீயளாம்? எங்க மாமன் சொல்லியும் கேக்கலேன்னா ..?"

"எல ஒங்க மாமன் என்ன கலெக்டரா?" வெளியூர் படகிலிருந்து இளைஞர் கோவத்துடன் கேட்டார்.

"மைக்கிளு, பெரியவங்க பேசிட்டிருக்கும்போது நீ ஏண்டே குறுக்க. சும்மா இரு."

"நீரு பெரியவரு. அவன் பெரியவனா?" சைமனைக் காட்டி மைக்கிள் பேசினான்.

"கலெக்டர் சொன்னாத்தான் கேப்பியளா? இங்க வரக்குடாதுன்னு சொல்லியும் திரியத் திரிய வந்துட்டு... மரியாதையா வலைய இழுத்துட்டு போங்க."

"மக்கா கொஞ்சம் பொறுங்கடே. இன்னைக்கு வலை எறக்கியாச்சு..." பெரியவர் கெஞ்சாத குறை.

"மச்சான் அந்த மைக்கிள்தான் கபடி ஆட்டத்துக்குப் போன நம்ம பயவள அடிச்சது. இன்னைக்கு நாயம் பேசுதான்." சேவியர் மச்சானுக்குத் தகவல் சொன்னான்.

"ஒங்கூருக்கும் எங்கூருக்கும் சும்மாவே சரிவராது, இதுல மடி போடுற எடத்துல வந்து சண்டைக்கு வராதிய." சைமன் கடைசியாய் எச்சரித்தார்.

"வலை எறக்கியாச்சுன்னு சொல்லுதேன்..ஒக்காளி." பெரியவர் முகத்தில் எரிச்சல்.
சேவியர் கடலில் குதித்தான். கடலுக்குள் மூழ்கி சில நிமிடங்களுக்குப் பின் மேல் வந்தான்.

"ஓ பெரியாளு. வலைய அறுத்துட்டாச்சு..இப்பவாவது போங்க."

பெரியவர் வலையைஇழுத்தார். வலை வெட்டப்பட்டிருந்தது.

"எல சின்னப்பயலுவளா.. புத்திய காட்டிட்டீலுவள்ள? " பெரியவர் சத்தம்போட்டார்.

வாய்த்தகறாரு துவங்கியது. கெட்டவார்த்தைகள் மிகுந்த ஒரு சப்தமான சண்டைக்கு நடுவில் மைக்கிளின் அலறல் கேட்டது. கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்தம் வழிந்தோட படகில் கீழே விழுந்தான் மைக்கிள்.

சேவியர் கத்தியை கடலில் வீசினான்.

மைக்கிள் படகிலிருந்தவர்கள் பெரியவர் படகுக்கு மைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாவினர். பெரியவர் படகை வேகமாகச் செலுத்த அந்த இடத்திலிருந்து மறைந்தது வெளியூர்ப் படகு. சைமன் இன்னும் கோபம் தீராமல் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். படகிலிருந்த பெட்ரோலை ஊற்றி ஆளில்லாம நின்றுகொண்டிருந்த வெளியூர்ப் படகை கொழுத்தினான்.

சேவியர் எதுவும் நடக்காததுபோல, உடலில் தெறித்திருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், வலையை கடலுக்குள் இறக்கினான்.
....

ஞாயிற்றுக்கிழமை பூசையில் பங்குச் சாமியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்."பகைவனையும் அன்பு செய்யச் சொல்லி இயேசு சொன்னதைப் போல மனித வரலாற்றில் வேறு எவருமே சொல்லியிருக்கமுடியாது. லூக்காஸ், அதிகாரம் ஆறு, வசனங்கள் இருபத்தேழு துவங்கி முப்பத்தாறு முடிய. 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களை வெறுப்போருக்கு ...."

கோவிலின் வெளியே படிக்கட்டுகளில், சேவியர் தன் கழுத்தில் கிடந்த சிலுவையில் காய்ந்திருந்த இரத்தக் கறையை ஈர்க்குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்தான்.

நன்றி: திண்ணை

அன்னியர்கள்

இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன்.

"ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?"

"மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா?
எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்."

"ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?"

"எங்க ஊர்ப் பக்கமெல்லாம்... வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க... இவன் க்ரௌவுண்டுக்குப் போகணும்னு சொன்னான், கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்."

"நல்லது செய்யக்கூட நாலுபேர் என்ன சொல்வான்னு பார்த்துச் செய்யவேண்டி இருக்கு. நீங்க செய்யலைன்னாலும் சரி எங்கிட்ட காசிருக்கு. மொய்யா எழுதினா சம்பந்தி வேண்டாம்னு சொல்லமுடியாதே. டேய் வாடாப் போலாம்."

பேரனோடு விளையாட்டு மைதானத்துக்குக் கிளம்பினார். பணிஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் மாரியப்பன். நண்பர் கூட்டம் அமரும் இடத்தில் யாருமில்லை. அரட்டைக் கச்சேரி இன்றைக்கு கொஞ்சம் தாமதம்.

'ஃபிசிக்ஸ் போலவே வாழ்க்கையிலும் விதிகள் இருந்துட்டா? இந்த மாதிரி விதிகள வச்சுக்கிட்டு எல்லாத்தையும் எளிதாய் மதிப்பிடலாம், செஞ்சிடலாம். கீழே விழும்னா விழணுமே, அதுதானே இயற்பியல். சமுதாய விதிகள எப்படின்னாலும் வளைக்கலாம். இத இவர் இப்படித்தான் செய்யணும்னு எதுவுமே..'

"என்ன வாத்தியாரே. பயங்கர யோசன போலிருக்கு?"

"வாங்க ஏட்டு சார். பங்சனெல்லாம் எப்டி போச்சு?"

"ம்.. ட்ராவல் ஜாஸ்தி. மூட்டு வலி திரும்பவும் வந்துடுச்சு. ஃபங்சன் பரவால்லாம போச்சு."

"ரெண்டுவாரமாச்சா?...இன்னிக்குத் தேதி என்ன?"

"மார்ச் 12. ஏன் கேக்குறீங்க?"

"ஃபிபொனாசி எண்தொடர் தெரியுமா?"

"ஒங்க ஃபிசிக்செல்லாம் போலீஸ்காரங்களுக்குத் தெரியுமா? இ.பி.கோ மாதிரி எதாவது கேட்டீங்கன்னா சொல்லலாம்.."

"இயற்பியல் இல்ல மாத்ஸ்தான். ஃபிபொனாசி எண் தொடர்ல உள்ள எண்கள் அதுக்கு முன்னால வர்ற இரண்டு எண்களோட கூட்டுத்தொகையா இருக்கும்."

"ஓகோ. இண்டரெஸ்ட்டிங்"

"இப்ப 0, 1, 1, 2, 3, 5, 8 ன்னு போட்டீங்கன்ன ஃபிபொனாசி தொடர் வரும்.."

"ஆமா..."

"இன்னைக்குத் தேதி 12-03-05 அட் ஒன் ஓ க்ளாக் சரியா ஃபிபனாசித் தொடரின் துவக்க எண்கள் வரும்."

"ம்ம்ம்... ஆமால்ல.. 01:00 12-03-05 வெறும் நம்பர் மட்டும் கணெக்கெடுத்தா.."

"ஆமா. இதுல இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கு. முந்தின நம்பர அடுத்த நம்பரால வகுக்கும்போது 1.6 பக்கத்துல விகிதம் வரும். இந்த ஃபிபனாசித் தொடர இந்தியாவுலத்தான் முதல்ல கண்டுபிடிச்சாங்கன்றதுதான் சுவையான தகவல்."

"இதையும் நம்மாளுங்கத்தான் கண்டு பிடிச்சாங்களா?", சிரிப்புடன் கேட்டார் ஏட்டு.

"'மாத்ராமெரு'. சமஸ்கிருத இலக்கண வித்தகர் பிங்கலா 'சந்த சாஸ்த்திரத்துல' சொல்லியிருக்கார்."

"மாதிரைன்னா ஏதோ பாட்டுல வர்ற ரிதம் மாதிரியா?"

"அதுமாதிரிதான் ஆனா பேச்சுல வர்ற மாத்திரைகள கணக்குப் போடுறது. தமிழ்ல அசைகள்னு சொல்லுறோம்னு நெனைக்கறேன். இந்த ஃபிபனாசி இத்தாலியர். நம்ம கோட்பாட்ட இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சி ப்ரபலமாக்கிட்டார்."

"நம்ம பயக கம்ப்யூட்டர்ல வெளுத்துக் கட்றானுங்கன்னா இது மாதிரி விஷயமெல்லாம் நம்ம மூளையில பதிஞ்சிருக்கு வாத்தியாரே."

"இருக்கலாம். இந்த 'மாத்ராமெரு' எண்கள் இயற்கையில நெறைஞ்ச்சிருக்குன்னா நம்பமுடியுமா?"

"எப்டி அது."

"ஒரு அன்னாசிப் பழத்துல ரெண்டு வளயமா செதில்கள் இருக்கு. ஒண்ணுல 8ம் இன்னொண்ணுல 13ம். ரெண்டுமே ஃபிபொனாசி எண்கள். இதுபோல பூக்களோட இதழ்களிலான ரேஷியோ, சில பழங்களோட விதைகள் எண்ணிக்கை எல்லாம் இந்த எண்கள்படி வருது.."

"சரிதான். இன்னைக்கு ரெம்ப விசேசமான நாள்தான். அதான் சாப்பிட்டிட்டு ஒடனே இங்க வந்துட்டீங்களா?"

"ஒரு மணி ஆறதுக்கு எட்டு நிமிசந்தான் இருக்கு."

"இந்த வெயில்ல பசங்களுக்கு க்ரிக்கட் ஆடணுமா?"

"நம்ம மட்டும் கொஞ்ச நிழல் கெடச்சா ஒக்காந்து பேச ஆரம்பிச்சிடறோமே?". நண்பர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே எழுந்தார் மாரியப்பன்.

"கொஞ்சம் இருங்க, வீட்ல செல்ல வச்சுட்டு வந்துட்டேன். இப்ப வந்திர்றேன்."

திடீரென மின்னல்போல ஒளிக்கீற்று அவரைத் தாக்கியது. நிலைதடுமாற்றத்திலிருந்து மீண்டபோது அதீத ஒளியில் சுற்றியுள்ள எல்லாமே மறைந்து போயிருந்தன.
எரியும் விளக்குக்குள் நின்றுகொண்டிப்பதுபோல, வெள்ளை வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார் மாரியப்பன்.

"சார்... ஏட்டு சார். இருக்கீங்களா?".

பதில் வரவில்லை.

'மிதந்து கொண்டிருக்கிறோமோ?' என நினைத்தார்.

கை கால் அசைக்க முடியாமல், இறகுகளை அசைக்காமல் பறவைகள் காற்றில் மிதப்பதுபோல மிதப்பதை உணர்ந்தார்.

ஒளி நீங்கியது.

அன்னியக் கிரகவாசி ஒருவன் அவரை விண்கலத்துள் வரவேற்றான். ஓடிப்போய்விடத் தோன்றியது மாரியப்பனுக்கு.

வேற்றுக்கிரக வாசிகள், அன்னியர்கள். இவர்கள் இருக்கிறார்களா? ஏதோ கனவுதானா? எங்கே ஓடிப்போவது? விண்வெளியில் பறந்து கோண்டிருக்கிறோமா? ஏலியன்களால் கடத்தப் பட்டவர்களைப் பற்றி படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

மந்திரம் ஓதுவதைப்போல அன்னியர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

'சமஸ்க்கிருதமா? அதை ஒத்த ஒரு மொழியாக இருக்கலாம்'.

தலை வலித்துக்கொண்டிருந்தது. 'திடீரென வந்த அதிக வெளிச்சத்தால் இருக்கலாம்'.

அங்கே சில மனிதர்களும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்தது.

"என்ன நடக்குது இங்க? எங்க இருக்கேன் நான்?" பயந்தபடியே அந்த அன்னியனிடம் பேசினார்.
அவன் அன்னிய மொழியில் ஏதோ சொன்னான். புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.

அன்னியன் தன் பெரிய கண்களை மூடினான்.

'தியானிக்கிறானா?' தலை இன்னும் வலித்தது. வசியம் செய்யப்படுவது போல உணர்ந்தார்.

"நாங்கள் சியமாவாசிகள். இன்னொரு கோள் தொகுப்பிலுள்ளது. ரவி என்னும் நட்சத்திரத்தைச் சுற்றும் கோள் சியமா."

அந்த அன்னியன் சொன்னதெல்லாம் மாரியப்பனுக்குப் புரிந்தது.

'இவனால் நம் மூளையை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. நொடிப்பொழுதில் அவன் மொழியை மூளைக்குள் பதித்துவிட்டான்.' மிரட்சி ஆட்கொண்டது மாரியப்பனை.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் பூமிக்கும் இன்னும் உயிரினங்கள் வசிக்கும் கோள்களுக்கும் சென்று விபரங்கள் சேகரிப்பதுண்டு. எங்கள் வருகையின் தடையங்கள் உலகில் பல இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன."

"க்ராப் சர்க்கிள். விளை நிலங்களில் நீங்க விட்டுப்போகும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள்."

"அது மட்டுமல்ல கற்களினாலான வடிவமைப்புக்கள் கூட."

"ஸ்டோன் ஸர்க்கிள்ஸ், ப்ரிட்டனைச் சுற்றியுள்ளத் தீவுகளில் பிரபலம்." மாரியப்பன் தான் படித்தவற்றையெல்லம் திரும்பக் கற்றுக்கொண்டிருந்தார்.

"ஆமா. ஆமெஸ்பரி ஸ்டோன்ஹெஞ்ச் வழியா எங்க கோள்தொகுப்ப பார்க்க முடியும்."

"நம்பவே முடியல. ஆதி மனுசன் செஞ்சு வச்சதுன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கோம்."
மாரியப்பன் திடீரெனெத் தானும் அந்த அன்னியனின் மொழியில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.

"ஏன் நீங்க மனிதர்களத் நேரடியா தொடர்புகொள்றதில்ல?" மாரியப்பன் அன்னியனைக் கேட்டார்.

"தொடர்பு இருக்குது. தேவையான அளவுக்கே வச்சிருக்கொம். எல்லாமே ரகசியமாய் இருக்குது. சில தனி ஆட்களோடும் தொடர்பிருக்குது. இனிமே உங்களோடும் இருக்கும்."
வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்தார் மாரியப்பன்.

"நீங்க மின்னணுயியல்ல முன்னேறியிருப்பீங்கன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கிறோம் ஆனா இங்க எந்திரங்களெல்லாம் அதிகமாயில்லையே?"

"நாங்க உயிரியல் மற்றும் நுண்ணியிரியலில் வளர்ந்திருக்கோம். மூளையின் முழு சக்திய யாருமே பயன் படுத்துறதில்ல. நாங்க இந்தத் துறையில் வெற்றி அடஞ்சிருக்கோம். எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் - மேம்படுத்தப்பட்ட உணரும் தன்மை- எங்களுக்கு கைவந்த கலை."

"கை வந்த அறிவியல்.", கொஞ்சம் இலகுவாகப் பேச ஆரம்பித்தார்.

"எங்க கலம் வெளியைத் தாண்டி வர பாக்டீரியா போன்ற ஒரு உயிரியே காரணம். எங்க கலத்தின் வெளிப்பூச்சில் இந்த நுண்ணியிரிகள் கணிசமா வளரும். எந்த சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் தன்மை இருக்கிறதால எங்கள் கலங்களுக்கு எதுவுமே ஆகிறதில்ல. சில ஒட்டுண்ணிகள் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருதே அதுபோல. 'வெளி'யில் பயணிக்கும்போது இந்த உயிரிகள் சூட்டினால மடியிறதில்ல மாறாக அதன் வீரியம் அதிகமாகுது."

"கடலுக்குள்ள சுடு நீர் ஊற்றுக்கள் பக்கத்தில வாழமுடியாத சூழலிலேயும் வாழும் உயிரிகளைப்போல."

மாரியப்பன் சோர்வடைந்து உட்கார்ந்தார். இன்னும் தலை வலித்துக்கொண்டேயிருந்தது.

"நீங்க இப்பப் போகலாம். உங்களிடமிருந்து தேவையான தகவல்கள் ஏற்கனவே எடுத்தாச்சு. உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்."

"கொஞ்சம்..." மாரியப்பன் பேச நினைக்கும்போதே அவன் மறைந்துபோனான். மீண்டும் ஒளி சூழ்ந்தது.

"வாத்தியாரே... சார், மாரியப்பன் சார்." ஏட்டுவின் குரல் கேட்டது. "சார் எந்திரிங்க."
மெதுவாகக் கண் திறந்தார்.

"ஒங்க தலையில க்ரிக்கெட்பால் பட்டு விழுந்திட்டீங்க. கார் கூப்பிடப் போயிருக்காங்க."

'இவங்க யாருக்குமே அன்னியர்கள் வந்து போனது தெரியல. அவங்க நினைவுகளை அழிச்சிருப்பாங்க.'

"ஏட்டு சார் எனக்கொண்ணுமில்ல லேசா தலைவலிதான். கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்க."

ஏட்டு புரியாதது போல விழித்தார்.

"என்ன சொன்னீங்க?"

"கொஞ்சம் தண்ணி கொடுங்க போதும்."

ஏட்டு மாரியப்பனின் பேரனைப்பார்த்துக் கேட்டார்.

"டேய்.. ஒங்க தாத்தாவுக்கு சமஸ்க்கிரதம் தெரியுமாடா?"


நன்றி: தமிழோவியம்

Tuesday, August 22, 2006

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

'க்ளினிக் ஆல் க்ளீயர்'

'கிருமிகளைத் தேடி..'

'வி'மானம்' போகுதே...'


'அந்த நாள் ஞாபகம்...'

'நிர்வாணா - முற்றும் துறந்தவர்'

'ஆன் லைன் - On Line'


'ப்ளேன்ல பாம்பு வச்சிருக்காங்களாம்'


'நடுவர் அவர்களே...'

மான்ஸ்டர் - சிறுகதை

"இராவணனுக்கு பத்து தலையாம். பாக்கவே பயங்கரமா இருப்பானாம்." துளசி பாட்டி பேத்திக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.

தூங்கும்போது மட்டுமே கதை கேட்பாள் பேத்தி அனு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை. 'பெட் டைம்' கதைகள் கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம். துளசி பாட்டி ஊரிலிருந்து வரும்போதெல்லாம் அவர்தான் கதை சொல்லவேண்டும்.

"மம்மி, நீ எப்பவும் ஸ்னோ ஒயிட் கதையே சொல்லுற, பாட்டிதான் வேற வேற கதையா சொல்வாங்க." என அன்னையை ஒதுக்கிவிடுவாள்.

துளசி முடிந்தவரை தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லித் தருவார்.
'குழந்தைங்களுக்கு நம்ம தெய்வங்களப் பத்தி நாம சொல்லிக்கொடுக்கணும். வெறுமனே கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப்போயி வந்தா மட்டும் போதுமா? குழந்தைங்களும் எளிதா தெரிஞ்சுக்கணுங்றதாலத்தான் கதையா சொல்றாங்க.' துளசி மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுவார்,

'முன்னால நாங்க திருநாள் பெருநாள்னா கோவிலுக்குப்போயி கதாகாலாட்சேபமோ, கூத்தோ, டிராமாவோ பாத்து தெரிஞ்சுகிட்டோம். இப்ப டி.வி முன்னாலேயே காலம் போயிடுது. இந்தியாவிலயே இப்படீன்னா இங்க எப்படி குழந்தைங்களுக்கு நம்ம மதம் பத்தி தெரியும்?'

'அம்மா, இங்க குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தராங்களோ அதத்தான் நாங்களும் சொல்லித் தர்றோம். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. முதல்ல எங்க தலைமுறைங்களுக்கே இந்தக் கதைங்க நெறையா தெரியாது.' ஏதவது சொல்லி மழுப்புவான் மகன்.

"பத்து தலையா பாட்டி? டென் ஹெட்ஸ். அதெப்படி ஒரு ஆளுக்கு டென் ஹெட்ஸ் இருக்கும்?"

"அவர் வில்லன்மா அதுனால அப்டி சொல்லியிருக்காங்க. பத்து தலண்ண எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?"

"பாட்டி ஒனக்கு சிண்டரெல்லா கத தெரியுமா?"

"தெரியாதும்மா..."

"அந்த பொம்ம பொய்சொன்னா மூக்கு நீளுமே அந்தக் கத?"

"தெரியாதே. சரி இப்ப நான் சொல்ற கதையக் கேளு."

"ம்."

"இராவணன் லங்கையில அரசனாயிருக்கும் போது."

"லன்கையின்னா?"

"ஸ்ரீலங்காம்மா..அது ஒரு. நாடு இந்தியாவுக்குக் கீழ குட்டியா இருக்குமே."

"ஸ்ரீலங்காவா? என் ஃப்ரெண்ட் சிமிக்கும் அந்த ஊர்தான்."

"அப்போ அனுமான் சீதையத் தேடி லங்கைக்குப் போனாரு."

"மங்கி மாதிரி இருப்பாரே அந்த அனுமாரா?"

"ஆமா."

"ம்."

"இராவணன் அவையில அனுமாருக்கு ஒக்கார எடமே குடுக்கல."

"ம்."

"ஒடனே அனுமார் என்ன செய்தார் தெரியுமா? அவரோட வால நீஈஈஈஈளமாக்கி வட்டமா சுத்தி இராவணன விடவும் ஒசரமான இடத்துல ஒக்காந்தாரு."

"ம். எதுக்கு?"

"இராவணன் சீதைய அடச்சு வச்சிருந்தான்ல.. அவள விடுவிக்கணும்னு அட்வைஸ் சொல்றதுக்கு."

"எப்படி பாட்டி? மங்கி பேசுமா?"

"அனுமார அப்படிச் சொல்லக்கூடாதும்மா. அவர் சாமி."

"ம்."

"அனுமார் பேசுவார். அவரப் போல இருக்குற வானரங்கள் எல்லாமே அந்தக் காலத்துல பேசும்."

"வானரம்னா?"

"ம்ம்ம்ம்....மங்கீஸ்."

"ம்."

"அனுமார் ஒயரமான எடத்துல இருந்ததால இராவணனுக்கு கோவம் வந்து வால்ல நெருப்பு வச்சுட்டாங்க."

"ம்."

"அனுமார் வால்ல எரியுற தீய வச்சி லங்கையில பெரிய அழிவயே உண்டாக்கிட்டாரு."

"ம்..அப்போ வால்ல தீ எரிஞ்சா அனுமாருக்கு பெயின் இருக்காதா?"

"ம்.. அவர் தெய்வம்மா ரெம்ப ஸ்ட்ராங்கானவர் அனுமார். ஒரு மலையத் தூக்கிட்டே பறக்க முடியும் அவரால."

"பாட்டி நீ எப்பவுமே இப்டிக் கததான் சொல்லுற. நம்பவே முடியல. நான் தூங்கப் போறேன்."
கண்களை மூடித் தூங்க ஆரம்பித்த அனுவை கொஞ்சம் கோபத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார் துளசி.

'எப்படி இவங்க நம்ம நாட்டப் பத்தியும் நம் பாரம்பரியம், மதம், தெய்வங்களப் பத்தியும்
தெரிஞ்சுக்கப் போறாங்க?' யோசனையுடன் ஹாலிலிருந்த ஃப்யூட்டானில் படுத்து தூங்கிப்போனார்.

நள்ளிரவில் தன் அருகே யாரோ நின்று தன்னை தட்டுவதை உணர்ந்தார்.

"அனு... என்னம்மா தூக்கம் வரலையா?"

"பாட்டி என் கூட வந்து படுத்துக்கிறியா?"

"ஏம்மா?"

"என் ரூம் க்ளாசட்ல மான்ஸ்டர் இருக்குது."

Thursday, August 17, 2006

திண்ணையில் - தமிழோவியத்தில்

திண்ணையிலும் தமிழோவியத்திலும் நான் எழுதிய கதைகள் வெளிவந்திருக்கின்றன. இரண்டிலும் ஒரே நேரத்தில். இரட்டைப் பிள்ளை பெற்றவன்போல மகிழ்ச்சி. படிச்சு எப்டி இருக்குன்னு சொல்லுங்களேன்.

1. அன்னியர்கள் - தமிழோவியம்
2. கற்கோவில்கள் - திண்ணை

Tuesday, August 15, 2006

சுதந்திரம்

"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ,
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*,
எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,
எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்"
---தாகூர்

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake

சுதந்திர தின மலர்


சுதந்திர தின
நல் வாழ்த்துக்கள்
சகோதர சகோதரிகளே!


Friday, August 11, 2006

பாக்'கிஸ்'தானுக்கு நன்றி

என்நன்றி கொன்றார்க்கும் ....

தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் ....


மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK.

Thursday, August 10, 2006

தேன்கூடு போட்டி டாப் 10 - சீரியசா

பாபா போட்டி படைப்புக்களை அழகாய் விமர்சிக்கிறார். விகடன் விமர்சனக்குழு போல மதிப்பெண்கள் தருகிறார். சில நேரம் அதிகமாக எதிர்பார்க்கிறார் (விமர்சனத்துக்கே விமர்சனமா?) என்றபோதிலும் பொதுவில் ஏமாற்றவில்லை..

இதுவரை அவர் மொத்தம் 4க்கு அளித்துள்ள மதிப்பெண்கள் வரிசைப்படி.

ராசபார்வை... : என்ன உறவு ? - ------------------------'கொங்கு' ராசா-------சொந்தக்கதை---3.25
பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ்-----------------சிறுகதை---------3.25
உறவுகள் - ----------------------------------------------------ராசுக்குட்டி-----------புதுக்கவிதை--- -3.25
அஞ்சல் நெஞ்சுல - ----------------------------------அபுல் கலாம் ஆசாத்--ஒலிக்கவிதை----3
உறவும் பிரிவும் -------------------------------------------ராசுக்குட்டி -----------சிறுகதை--------3
சாயல் --------------------------------------------------------ஜெயந்தி சங்கர்------சிறுகதை---------3
எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா---------------சிறுகதை--------3
பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் --------------சிமுலேஷன்------சிறுகதை--------2.5
எண்ணம்: உறவுகளே! --------------------------- அபுல் கலாம் ஆசாத்------மரபுக்கவிதை---2.5
தேன்: உறவுகள் -------------------------------------------- சிறில் அலெக்ஸ்---சிறுகதை--------2.5
பொன்னியின் செல்லம்மா ...! ---------------------------- கோவி.கண்ணன்---சிறுகதை-----2.5
எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு... ----------அபுல் கலாம் ஆசாத்---புதுக்கவிதை--2
உறவுகள் ஒடிந்த பறவைகள் !!! ------------------------- --demigod ------------சிறுகதை----- 2
உறவுகளும் ஒற்றுமைகளும் -----------------------------சிவமுருகன்-----புதுக்கவிதை----2
அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - ------மானு ---yezhisai-----சொந்தக்கதை----1.5
நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் ---வள்ளி---yezhisai-----சொந்தக்கதை----1.5
என்ன உறவில் நான்... -----------------------------------மதுமிதா------------புதுக்கவிதை------1.5
சிந்திக்கலாமா?: பயணம் ---------------------------- எண்ணம் எனது------அறிபுனை----------1.5
உயிர் ------------இயக்குனர் - சுவாமிநாதன்------------ ராசுக்குட்டி-----விமர்சனம்---------1.5
உறவு..! ------------------------------------------- இரா.ஜெகன் மோகன்--------புதுக்கவிதை-----1.5
ஸ்மைல் பக்கம்: "உறவுகள்" - லிவிங் ஸ்மைல் வித்யா------------புதுக்கவிதை---------1.5
அப்பா.. --------------------------------தொட்டராய ஸ்வாமி-------------------புதுக்கவிதை------ 1.5
உறவில்லாத உறவு ---------------------------------- ஜெஸிலா------------புதுக்கவிதை--------1.5
சுகம் ------------------------------------------------------------- nirmal------------புதுக்கவிதை-------1.5
பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள் - மானு -----yezhisai----சிறுகதை-----------1
மழை: தாய் - உறவுகள் ----------------------------------- பிரதீப்------------புதுக்கவிதை--------1
உறவுகள் - ----------------------------------------SK------------------------வசன கவிதை------------1
------------அல்லது------------ மானங்கெட்ட உறவுகள்!!!! - luckylook-------சிறுகதை---------1
உறவுகள் -----------------------------------------------------------vaik------------சிறுகதை------------1
செம்புலப் பெயல் நீர் ----------------------- குமரன் எண்ணம்------------புதுக்கவிதை------1
இன்றும் --------------------------------------------------------------- கப்பி பய-------சிறுகதை----- 1
பேசலாம்: செக்ஸ் இல்லாத கதை ----------வா மணிகண்டன்------------சிறுகதை------1
பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! --------------- லக்கிலுக்------------சொந்தக்கதை-----1
சென்னைக் கச்சேரி: தீவுகள் ------------------------ தேவ்------------புதுக்கவிதை------------0.5
உறவுகள் ---------------------------------------------------- நிர்மல்------------சிறுகதை------------0.5
நிகழ்வுகள்: உறவு என்பதால் ------------ சிவமுருகன் நீலமேகம்------புதுக்கவிதை----0.5
தாய்மடி வாசம்-------------------------தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை---------0.5
தன்னலதாயின் உறவுகளில்.... ---தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை------------0
எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை------------கட்டுரை--------------0

கீழுள்ளவைக்கு மதிப்பெண்கள் தரவில்லை '?' போட்டுவிட்டார். என். சுரேஷ் உங்கள் பதிவில் சைட் பாரில் 'ஜோக்கர்' எனும் தலைப்புக்குக் கீழ் பாஸ்ட்டன் பாலாவின் பேயரைப் போடலாம் (நன்றி: விடாது கருப்பு). இதுதான் இப்போ ட்ரென்ட். அல்லது பாபா மதிப்பேண் வழங்கும்வரையில் தொடர்ந்து கவிதைகள் எழுதி பட்டியலை நிரப்பலாம்.

ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை
அவரகளும் நம் உறவினர்களே... என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை

Wednesday, August 09, 2006

தேன்கூடு போட்டி டாப் 10

தேன்கூடு உறவுகள் போட்டியில் தற்போது 39 படைப்புக்கள் வந்துள்ளன. பாஸ்ட்டன் பாலா, வட்டக்குறிச்சி வாத்தியாராக மாறி எல்லோருக்கும் மதிப்பெண்கள் வழங்குகிறார். என் பங்குக்கு..டாப் 10 படைப்புக்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.


1. உறவுகள் SK

2. உறவுகள் நிர்மல்

3. பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) கோவி.கண்ணன்

4.
நவீன விக்ரமாதித்தனும், வைரஸ் வேதாளமும்! luckylook

5.
உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத்

6.
உறவுகளின் வேர்! K. Selvaperumal

7.
URAVUGAL N Suresh, Chennai

8.
நிலைத்து இருக்கும் உறவுகள் yezhisai

9.
உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக சிவமுருகன்

10 அவரகளும் நம் உறவினர்களே... N Suresh, Chennai

தங்கள் படைப்புக்கள் இடம் பெறவில்லையே என வருந்தும் தோழ/தோழிகளுக்கு வருத்தம் வேண்டாம். இது ஆய்வுப்படி வரிசைப்படுத்தப் பட்டதல்ல. முதல் பத்து சேர்க்கைகளைத் தந்துள்ளேன். அவ்ளோதான். :)


Tuesday, August 08, 2006

பொற்கிளி + இ. கொத்ஸ்

தேனில் 1000மாவது பின்னூட்டமிட்டு பொற்கிளியை இலவசக் கொத்தனார் தட்டிச்சென்றுவிட்டார்.

இது தொடர்பான செய்தியில்..

காணவில்லை

பொற்கிளி எனும் 85 வயது மூதாட்டியை 2 நாளாய்க் காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பொற்கிளி பரிசாகத் தரப்படும்.

Monday, August 07, 2006

உறவுகள்

"என் பேரு லீனா. எங்க வீட்டுல இன்னைக்கு கல்யாணம். எங்கக்கா இளவரசிக்கும் மாமா பீட்டருக்கும். ஐயோ, கல்யாணத்துக்கு முன்னாலயே மாமான்னு கூப்பிடவேண்டாமுன்னு அம்மா சொல்லியிருக்கு. பட்டுப் பாவாட சட்டையெல்லாம் போட்டுட்டு அழகாயிருக்கேன்ல? எல்லா கல்யாண வீட்டுக்கும் போகும்போதும் நம்ம வீட்டுல எப்ப இப்டி வரும்னு நெனைப்பேன். இப்ப எங்க வீட்லயே கல்யாணம் எவ்வளவு ஜாலி தெரியுமா. நாந்தான் வாசல்ல நின்னு பன்னீர் தெளிக்கணும்னு சண்ட போட்டு கேட்டு வாங்கிகிட்டேன். கற்கண்டு, எடுத்துக்குங்க."

"அங்க என்னடி வேடிக்க? ஓ நீங்களா.. தமிழ், நீ போயி அக்காவப் பாரு. ஒன்னக் காணோமேன்னு தேடுனா. நீ இதெல்லாம் பாக்கவேண்டாமின்னு சொன்னேனே கேட்டியா?

ஹலோ.. நீங்க இருக்குறத மறந்துட்டேன். என் பேரு சங்கீதா. கல்யாணப் பொண்ணோட அம்மா. இன்னைக்கு அவள் மனசுக்குப் பிடிச்சபடி, காதலிச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கப் போறா. எவ்வளவு சந்தோஷம். என் பொண்ணு ஒருத்திக்கு கல்யாணம்.

இந்தக் குடும்ப விவகாரதுல அவர் தலையிடுறதில்ல. அவர் வியாபாரத்தப் பாக்கவே நேரமில்லன்னு நொந்துக்குவார். இவ கல்யாணத்தப் பத்திக் கூட எல்லாம் முடிவு பண்ணப்புறந்தான் அவருக்குச் சொன்னேன். முடிவு பண்ண என்ன இருக்குது? ரெண்டுபேரும் ஒண்ணா வேல பாக்குறாங்க. ஒரே ப்ராஜெக்ட்ல. இவ லீடர். இந்தக் காதல் விவகாரத்தையெல்லாம் அவகிட்டையே கேளுங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. கல்யாணவீட்டுல வேலைக்காப் பஞ்சம். ஏய் இளவரசி, இவங்களுக்கு ஒன்னோட காதல் கதைய கொஞ்சம் சொல்லேன்."

"அதுவா? நான் லீட் பண்ணுற ப்ராஜெக்ட்ல இவர அசைன் பண்ணாங்க. ஐ.டிக்கு இவர் புதுசு. அதனால அடிக்கடி சந்தேகம் கேட்பாரு. பல நேரம் திட்டு வாங்குவாரு. கிராமத்துலேர்ந்து வந்தவர்னால இங்லீஷ் அவ்வளவா வராது. இத வச்சி எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவருக்குத் தனி அட்டென்ஷன் தர ஆரம்பிச்சேன். அப்புறம் ப்ராஜெக்ட்ல புரளி கிளம்பிடிச்சு. எங்க ரெண்டுபேரையும் சேத்துவச்சு ஈ மெயிலெல்லாம் ஓடுச்சு. நான் எதையுமே கண்டுக்கல ஆனா இவர் என்கிட்ட பேச ஹெசிட்டேட் பண்ணினாரு. அவரோட வெகுளித்தனமும், கத்துக்கணும் முன்னேறணுங்க்ற ஆர்வமும் என்ன அட்ராக்ட் பண்ணிடுச்சு. அப்புறம் என்ன, புரளியெல்லாம் உண்மையாயிடுச்சு. வீட்டுல, கிராமமாச்சேன்னு யோசிச்சாங்க. நாங்க ஐ.டி ல வேலபாக்குறோம் கிராமத்துக்கு எங்கே போய் செட்டிலாகப்போறோம்னு அம்மாகிட்ட சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிட்டேன். அதோ வர்றாறே கிச்சு மாமா அவர்தான் எனக்கு பர்ஸ்ட்லேர்ந்தே சப்போர்ட்."

"என்னடி கல்யாணப் பொண்ணு இவாகிட்ட நம்மளப்பத்தி என்ன கத விடறே?"

"இந்த கல்யாணம் உங்களாலத்தான் நடக்குதுன்னு சொன்னேன்."

"நமஸ்க்காரம். நான் கிச்சு. கிச்சுன்னா கிருஷ்ணமூர்த்தி. பொண்ணுக்கு மாமா மொற வேணும். செத்த ஒக்காந்து பேசலாமா? இவ பீட்டர் அம்பிய விரும்புறாங்கிறத யார்கிட்டயுமே சொல்லல்லை. நாங்களும் பொண்ணுக்கு வயசாயிடுத்தேன்னு வரன் தேட ஆரம்பிச்சுட்டோம். ஒரு வரன் ரெம்ப பக்கத்துல வந்துட்டா. இத முடிச்சுரலாம்னு நானும் சங்கீதாவும் முடிவு பண்னிட்டு திரும்பும்போது இவா ரெண்டுபேரும் பைக்குல போயிட்டுருந்ததப் பாத்துட்டோம். யார் அந்த அம்பின்னு காசுவலாத்தான் விசாரிச்சா . அப்புறம்தான் இவ உண்மையச் சொன்னா. சங்கீதாவுக்கு கோபம் வந்துடுத்து.' ஏண்டி, இவ்வளவு நாளா நாங்க வரன் பார்த்துக்கிட்டிருக்கச்சே நந்திமாதிரி இருந்துண்டு இப்போ இப்படி சொல்றயேன்னு சத்தம் போட்டா'. நாந்தான் அவள சமாதானப் படுத்துனேன், மட்டுமில்ல பையன் ஆத்துக்குப் போயி நானும் பொண்ணோட இன்னொரு மாமாவும் சம்மந்தப் பேசிட்டு வந்தோம். பொண்ணுக்கு மாமாமட்டுமில்லாம புரோகிதராவும் இந்தக் கல்யாணத்த நடத்திண்டிருக்கேன். அந்தா இருக்கார் பாருங்கோ காதர் பாய் அவர்தான் நான் சொன்ன இன்னொரு மாமா. அவர்கிட்ட கேளுங்க மீதி கதைய."

"வாங்க... காதர், பொதுவா பாய்னுதான் எல்லாரும் கூப்புடுவாங்க. பொண்ணுக்கு மாமா. எல்லா கதையுமே சொல்லியிருப்பங்களே. நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்துப் பெண்ண ஒரு கிறித்தவனுக்கு கட்டிவைக்கிறோமேன்னு யோசிச்சாங்க. அட நம்ம குடும்பத்தில எதுக்கு சாதி மதமெல்லாம் பாத்துகிட்டுன்னு நானும் ஐயரும் எல்லார் வாயையும் மூடிட்டோம். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.

நாங்க பாத்து வளந்த பொண்ணு. அவ சந்தோஷந்தான் எங்க சந்தோசமும். அல்லா அவளுக்கு ஒரு கொறையும் வைக்கமாட்டார். இங்க பொண்ணுக்கு தாத்தா, பாட்டி அத்த மாம, சித்தி சித்தப்பான்னு எல்லா மதத்துலேந்தும் இருக்காங்க எங்க குடும்பம் அப்படி. காலம் மாறிகிட்டே வருது பிறக்கும்போது ஒரு குழந்தையா, ஆடைகூட இல்லாத மனுசனாத்தானே பெறக்குறோம். மதமெல்லாம் நம்மள கட்டுப்படுத்த வந்த ஒரு வேலி. யாருக்கு எப்படி வேணுமோ அப்படி போட்டுக்கலாம் அந்த வேலிய. ரெம்ப பேசிட்டேனோ. வாங்க தாலி கட்டு நடக்கப் போகுது மிஸ் பண்ணிடப் போறோம்."

"ஹெலோ அகெய்ன். நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு இதோ எங்க வீட்ட விட்டு கிளம்பப்போறேன். சின்ன வயசுலேர்ந்தே இங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பல உறவுகளோட வாழ்ந்துட்டு அவங்களப் பிரிஞ்சு போறது எவ்வளவு கஷ்ட்டம். இந்த அத்தனை உறவுகளுக்கும் சேர்த்து அன்பு செய்ய என் கணவரால முடியுமா. தெரியல?

கல்யாணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவிதான். எப்படி ஒரு வீட்டுல திடீர்னு ஒரு நாள் போயி அந்த வீட்டு மனுஷியா வாழமுடியும்? பல சந்தேகங்கள மனசுல சுமந்துட்டுத்தான் இதோ கார்ல கிளம்பிட்டேன்.

அங்க பாருங்க என் சொந்தக்காரங்க எல்லார் கண்ணுலையும் கண்ணீர். காதர் மாமா கூட கலங்குவார்னு நான் எதிர்பாக்கல.

கார் கிளம்பிடிச்சு. சோகமான கையசைவுகளோட என் புதுப் பயணம் துவங்குது. 'ஜீவன் ஆதரவற்றோர் இல்லம்' போர்டு தொங்குது பாருங்க, ஊருக்குப் பொனதும் அம்மாவுக்குப் போன் பண்ணி அந்த ஆதரவற்றோர்ங்கிற வார்த்தைய அழிச்சுட்டு வெறும் 'ஜீவன் இல்லம்னு' வைக்கச்சொல்லணும். என்ன சொல்றீங்க?"

'புள்ளி'யியல் ராஜாவுக்குப் பின்னூட்டம் வருமா?

நூறு பதிவுகள் போட்டதும் ஒரு சின்ன கணக்கெடுப்பு. பின்னூட்டங்களை அலசிப்பார்த்ததில் கிடைத்த தகவல்கள்.

மொத்த பதிவுகள் 100
மொத்த பின்னூட்டங்கள் 996 (யாருக்குக் கிடைக்குமோ அந்த 1000வது பின்னூட்ட வாய்ப்பு?)

பின்னூட்டப் புழு




எண்ணிக்கைப் பட்டியல்


பொதுவானவை - 224
சினிமா - 120
இலக்கியம் - 105
ஆன்மீகம் - 120
படப் பதிவுகள் - 54
அரசியல்/சமூகம் - 373
------------------------------------
மொத்தம் 996
------------------------------------





சராசரி பின்னூட்டங்கள்

பொதுவானவை - 14
சினிமா - 14
இலக்கியம் - 13
ஆன்மீகம் - 10
படப் பதிவுகள் - 8
அரசியல்/சமூகம் - 25



உப தகவல் தொகுப்பு
  • பின்னூட்டமில்லாத பதிவுகள் 16
  • குறைந்தபட்ச பின்ன்னூட்டம் 1 (0வை கணக்கெடுக்காமல்)
  • அதிகபட்சம் 55
  • முதல் பத்து 55, 50, 49, 45, 39, 36, 31, 31, 30, 29
  • முதல் பத்தின் கூட்டுத்தொகை 395
  • மீதம் 90ன் கூட்டுத்தொகை 601
  • முதல் பத்தின் வகைகள் சமூகம்/அரசியல் - 5 ; பதிவர் வட்டம் - 3; சினிமா - 1 ; ஆன்மீகம் -1

நன்றி: புள்ளியியல் ஆசிரியர் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் எல்.

Friday, August 04, 2006

அமைதி... அமைதி...

எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர்.

தமிழாக்கம்

"இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று;
எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்;
எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்;
எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்;
எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்;
எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்;
எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்
என்னை விதைக்கச்செய்யும்.
தெய்வீகத் தலைவனே,
ஆறுதல் அடைவதைவிட ஆறுதல் அளிப்பதையும்;
சகிக்கப்படுதலைவிடப் சகிப்பதையும்;
அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
நான் தேடுவேனாக;
ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம்,
மன்னிக்கும்போதே மன்னிப்பு பெறுகிறோம்,
இறக்கும்போதே என்றென்றைக்குமாய் பிறக்கிறோம்.

ஆங்கிலத்தில்

Lord, make me an instrument of Thy peace;
where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
O Divine Master,
grant that I may not so much seek to be consoled as to console;
to be understood, as to understand;
to be loved, as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying that we are born to Eternal Life.

Thursday, August 03, 2006

முக்கிய அறிவிப்பு

நட்பு பற்றிய இந்தப் பதிவை சரியான தலைப்பு இல்லாததால் தவறவிட்டுவிட்டதாக இ. கொத்தனார் சொன்னதால் இன்னுமொரு முயற்சி, வேறு தலைப்பில்.

சொடுக்குங்கள் மேலே.

100வது பதிவு

பொன்ஸ் 50 போட்டுக்கொண்டு ஆடுகிறார். நான் 100 போட்டுக்கொண்டு ஆடப்போகிறேன்.

:)

அப்டி இப்டீன்னு இது தேனில் என் நூறாவது பதிவு. மற்ற பதிவு தொகுப்புகள் கிடப்பில் கிடப்பதால் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நூறில் உருப்படியான சில பதிவுகள் என நான் நினைப்பவை.

சினிமா

ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

'ஆதி'க்கு ஆஸ்க்கர்

வெட்டுடா...தூக்குடா

இனிமை, எளிமை நா. முத்துக்குமார்

பட்டியல்

கொக்கி

என்ன'டா' வின்சி கோட்?

புதுப்பேட்டை


இலக்கியம் ..பிற

ஐயா நீர் கவிஞர்

கெடா - சிறுகதை

கிருஷ்ணரின் காதல் கவிதை

விடுதலை

கீதாஞ்சலி - பூ

... கூத்தாட்டுவானாகி...

ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ...

காலையில் கேட்டது

2060 தேர்தல்

பூ பூக்கும் மாதம்

நட்பு வாரம் - இளக்கியப் பதிவு

சிக்காகோ தாவரவியல் பூங்கா - IV

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்

6...6...6

கவிதைகள்

காதல் தெய்வம்

காதலர் தினம்

டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்



ஆன்மீகம்

புனிதராவது எப்படி?

ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்

கடவுள் நம்பிக்கை

கடவுள் 100 கி.மீ




அரசியல்/சமூகம்

ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு

"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."

ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்

ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

குளிர்கால ஒலிம்பிக்ஸ் - கண்ணோட்டம்

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

இலக்கு என்ன?

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II

யரலவழல

நிர்வாணா

மதமாற்றமா? மனமாற்றமா?

நட்சத்திரங்கள்

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லலாம்.

நட்பு வாரம் - இளக்கியப் பதிவு

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி.

ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் 'இணைய நட்பு' பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம்.

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


(தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல
வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி?

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

அறிவுசீவி பதிவர்களின் நட்பு வளர் பிறை; மற்றவர்களின் நட்பு தேய்பிறை.

783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பதிவுகளைப் படிக்கப் படிக்க வெறுப்பு வளர்வது போல பின்னூட்டம் இட இட நட்பு சுகம்
தரும்.

784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

எப்பவுமே 'சூப்பர் சார்', 'கலக்கல் பதிவு', 'பின்னிட்டீங்க' மற்றும் :) போடாம
அப்பப்ப 'என்னடா பதிக்கிற', 'சோம்பேறி', 'கஸ்மாலம்' :( போன்ற பின்னூட்டங்களும்
இடுவதே நல்ல நட்பு.

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

வலைப்பதிவர் சந்திப்பு, ஜிகர்தண்டட பகிர்வு, எல்லாம் தேவையில்ல சும்மா இணையத்திலே
பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டாலே பொதும் நட்பு தானா வளரும்.

786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

சும்மா :) - ஸ்மைலி- போட்டுக்கிட்டு அலையிறது நட்பில்ல உள்ளத்துல இருக்குறத
வார்த்தையில எழுதுவதே நட்பு. (கவனிக்கவும் - பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி
செய்துள்ளார்)

787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

சகிக்க முடியாம பதிவு போட்டுக்கொண்டு பின்னூட்டமே பெறாத ஒரு பதிவரை நல்ல பதிவு
போடுவதற்கு 784ல் சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டு வழிநடத்துவதே நட்பு

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பின்னூடமெனும் ஆடையிழந்த பதிவருக்கு கைகொடுத்து பின்னூட்டமிடுவதே நல்ல நட்பாகும்.

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்சத்திரமாய் மின்னும்போது மட்டுமில்லாமல் தேன்கூடு போட்டியில் தோற்று
வருந்தும்போதும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் போடுவதே நட்பு.

790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர் என் குழு, அவர் என் ஊர் எனப் பேசினனலும், பல பட்டங்கள் கட்டினாலும்,
எப்போதும் தங்கள் நட்பப பற்றியே பேருமமயாகப் பேசிக்கொண்டாலும், அந்த நட்பு இழிவாகவே
கருதப்படும். (இனையர் = இணையர்; இணையம் + அவர்)

இந்தப் பாவம் போக்க ஐயன் சிலையை ஐம்பது முறை வலம்
வருவதுதான் பரிகாரம் என தீட்சிதர்கள் எனக்குத் தனிமடல் (தமிழில்தான்)
அனுப்பியுள்ளனர்ர்

Wednesday, August 02, 2006

திரவங்கள் மாறலாம்


படத்துக்கு வேறு சுவையான தலைப்புக்கள் சொல்லுங்களேன்.

பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?

கோவி கண்ணன் தன்னைப் பற்றிய 'சில்மிஷ' புகார்களுக்கு என்ன பதிலளிக்கப் போகிறார்? இவ்வளவு மோசமான ஒருவர் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பது எத்தனை வேதனையை அளிக்கிறது.

:)

கொஞ்சம் சீரியசாய் செய்தியைப் பார்க்கும்போது இந்த அற்ப சீவிகளை ஏன் விஷம் கொடுத்துக் கொல்லக்கூடாது எனத் தோன்றுகிறது.

Disclaimer: இந்த கோ.வி கண்ணனுக்கும் (சில்மிஷி) நம்ம வலைப்பதிவர் கொவி. கண்ணனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பெயரில் வரும் 'புள்ளி''யை வைத்து புள்ளிராஜாவை கண்டுபிடிக்கலாம்.

சிறில் அலெக்ஸ்